உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

உக்ரைன் – ரஷ்யயுத்தம்: வில்லன் யார், கதாநாயகன் யார்? – (பகுதி-1) 

     — ஜஸ்ரின் — 

தற்போதைய நிலையின் ஆரம்பம் எது? 

2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில் ஆரவாரமின்றி நடந்தாலும், மேற்கு நாடுகளின் செய்மதிப் படங்களின் வழியாக இந்தப் படைக் குவிப்பு வெளிவர ஆரம்பித்தபோது ரஷ்யாவின் பதில் இரண்டு வகையானதாக இருந்தது: ஒன்று, நம் நாட்டினுள்தான் படைகள் இருக்கின்றன, உக்ரைன் நாட்டினுள் படைகள் நுழையாது; இரண்டு, ஒரு பாரிய  இராணுவ ஒத்திகைக்காக படைதிரட்டுகிறோம் – முடிந்ததும் கிளம்பி விடுவோம் (இதோ பார் நாம் கிளம்பிவிட்டோம், என்று காட்டும் வீடியோ கூட ரஷ்யாவால் வெளியிடப்பட்டது!). ஆனால், பெப்ரவரி இறுதியில் திடீரென உக்ரைன் அரசு சில உறுதிமொழிகளைத் தரவேண்டும், இல்லையேல் உள்ளே வருவோம் என்பதுபோல எச்சரிக்கை மொஸ்கோவிடமிருந்து வெளிவந்து, இரு நாட்களில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்தது. உக்ரைன் அரசும் மக்களும் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், கமெராக்களின் கண்காணிப்பில் இணையவழியில் பகிரப்படும் செய்திகளாலும் மக்கள் இழப்பு செச்னியாவில் நிகழ்ந்த அளவுக்கு இல்லையாயினும், மக்கள் இறக்கிறார்கள், காயமடைகிறார்கள், வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். இவை அசாதாரண நிலைமைகள், துன்பியல் நிகழ்வுகள் என்பதையாரும் மறுக்க முடியாது.  

இனி எங்கள் கேள்விக்குவரலாம்இந்தப் போரில் யார்வில்லன்?  

நோக்கர்கள் இது பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்க உதவும் சில வரலாற்றுத் தகவல்களைப் பார்க்கலாம். 

சோவியத்தை அமெரிக்கா உடைத்ததா? 

1991ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்மஸ் தினத்தன்று சோவியத்ரஷ்யாவின் முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதி மிகைல் கொர்பச்சேவ் இராஜினாமாச் செய்தமையோடு சோவியத்ரஷ்யா முடிவுக்கு வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1989 இல்பெர்லின் சுவரின் வீழ்ச்சியோடு அமெரிக்க சார்பு அணிக்கும், சோவியத் நாட்டிற்குமிடையேயான பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டது. சோவியத் நாட்டினுள் மறுசீரமைப்பு, வெளிப்படைத்தன்மை என இருகருப்பொருட்களில் கொர்பச்சேவ் சோவியத்தின் செல் திசையை மாற்ற முயல்கிறார். பொருளாதார வீழ்ச்சியினால் சோவியத்ரஷ்யா வங்குரோத்து நிலைமையை அடைகிறது -மேற்கு நாடுகளின் பொருளாதார உதவிகளைப்பெற்று மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைமை.     

இந்தக் காலப் பகுதியில் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த சீனியர் புஷ்ஷின் கவனம், சோவியத்தை துண்டுதுண்டாக உடைப்பதில்இருந்ததாகத்தான் நோக்கர்கள் பலர் இருதசாப்தங்களாக நம்பிக்கொண்டிருந்தனர். இதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனமும் பல சதி வேலைகளைச் செய்ததாக நம்பப்பட்டது. ஆனால், 2000களில் இல் இரகசிய நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஆவணங்கள் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. சோவியத்தின் அணுவாயுதங்களின் பாதுகாப்புப் பற்றிய பயத்தினால், புஷ் நிர்வாகம் தனி தேசங்களாக சோவியத்திடமிருந்து பிரியமுயன்ற உக்ரைன் உட்பட்ட, கிழக்கு ஐரோப்பிய, பால்ரிக் சோவியத் குடியரசுகளுக்கு ஆதரவை 1991 இறுதிவரை வழங்க முன்வரவில்லை. இறுதியில், கொர்பச்சேவின் கட்டுப்பாடு தளர்கிற நிலையில்தான், பிரிகிற நாடுகளையாவது நட்பாக்கிக்கொள்வோமென்ற நிலையில் ஆதரவை அமெரிக்க அணி வழங்க வந்ததாக ஷேர்கிப்லோஹி என்ற வரலாற்றாசிரியர் எழுதுகிறார். அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து டசின் கணக்கான சுதந்திர நாடுகளை உருவாக்க எண்ணவில்லையாயினும், அப்படி உருவான போது அந்த தேசங்களை மேற்கின் அரவணைப்பிற்குள் கொண்டுவரப் பின்னிற்கவில்லை. இது உலக அரசியலில் அசாதாரணமான ஒருபோக்கல்ல. ஆப்கானிஸ்தான்உட்பட்ட தேசங்களை சோவியத்ஒன்றியமும், கொரியதீபகற்பத்தை சீனாவும் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ள மேற்கை விட வன்முறை மிகுந்த வழிகளைக் கையாண்டன என்பது வரலாற்று உண்மை.  இந்த நிலையில், அமெரிக்க சார்பு அணி நிதியுதவி, அபிவிருத்தி, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற வன்முறை சாரா வழிகளில் முன்னாள் சோவியத்குடியரசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதை பாரிய சதிக் குற்றமாகக் கருதமுடியுமா? விடையை நோக்கர்களிடமே விட்டுவிடலாம்!   

நேட்டோவின் நோக்கம் என்ன?  

நேட்டோ அமைப்பு எனப்படும் இராணுவக் கூட்டு சோவியத் ஒன்றியத்தின் மீதான பயத்தின் விளைவாக உருவானது. இந்த அச்சம் மிக நீண்ட வரலாறுடையது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே ஸ்ராலின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் மீது முடியாட்சி நிலவிய சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டிருந்தன. இந்த அச்சத்தை உறுதி செய்யும் வகையில் இரு சம்பவங்கள் நடந்தன: றிப்பன்ட்றொப் -மொலரோவ் ஒப்பந்தம் மூலம் நாசி ஜேர்மனியோடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து சரியாக ஒரு மாதத்தினுள் (1939), யுத்தப் பிரகடனம் எதுவுமில்லாமல் போலந்தின் கிழக்குப் பாதியை சோவியத் செம்படைகளும், மேற்குப்பாதியை நாசி ஜேர்மனியும் ஆக்கிரமித்தன. இன்னும் சிலமாதங்கள் கழித்து அதே ஆண்டில், பின்லாந்தையும் சோவியத் படைகள் தாக்கி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன (இன்று உக்ரைனுக்குக் கிடைக்கும் உதவிகளில் ஒருதுளி கூட பின்லாந்துக்குக் கிடைக்காமலே, கடும் இழப்புகளுடன் சோவியத் ஒன்றியம் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையை பின்னிஷ் போராளிகள் ஏற்படுத்தினார்கள்). படைபலம் கொண்ட ஒரு பெரிய நாடு இவ்வாறு நினைத்த மாத்திரத்தில் சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க ஒரு உருப்படியான அமைப்பும் உலகில் இருக்கவில்லை.  

இரண்டாம் உலகப் போர்காலத்தில், இந்தப் பின்னணியிலும் சோவியத்ஒன்றியம் நேசப் படைகளுடன் இணைக்கப்பட்டது – இதில் மேற்கு நாடுகளின் சுயநலம் இருந்தது உண்மை. அமெரிக்க, பிரிட்டன் படைகள் மரணப் பொறியென நம்பிய பேர்லின் நோக்கி மெதுவாக முன்னேறிய படி, சோவியத் செம்படையினர் பேர்லினை முதலில் கைப்பற்ற அனுமதித்தனர். போர் முடிந்ததும், மீண்டும் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஐரோப்பாவின் அச்சம் மீளூயிர்ப்புப் பெற்றது, ஸ்ராலினுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வும் சோவியத் ஒன்றிய ஆதரவாளர்களிடம் ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசத்தைப் பரப்பும் வகையில் ஆரம்பத்தில் தேர்தல் மூலம், ஜனநாயக வழியில் முயன்றாலும், விரைவாக வெற்றிபெற வேண்டுமென்ற ஆவலில் சில பகுதிகளில் ஜனநாயகம் சாராவழிகளில் கம்யூனிசத்தைப் பரப்ப ஸ்ராலின் முயன்றார். சோவியத் ஆதிக்கத்தின் கீழ் வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், ஸ்ராலின் கால NKVD உளவுப்பிரிவையொத்த அமைப்புகள் உருவாகி, மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியமை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மக்கள் தப்பி மேற்கு நோக்கிக் குடிபெயரக் காரணமாக இருந்தது (எண்பதுகளில், கிழக்கு ஐரோப்பா வழியாகப் பயணித்து மேற்கு ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளுள், கணிசமான ஈழத்தமிழர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது). 1948இல் மேற்கு பேர்லின் மீது விநியோகத் தடையை விதித்து, 1945 முதல் அமலில் இருந்த அமைதி ஏற்பாட்டை மீறியதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தைக் கூட்டியது. இந்த வரலாற்றின் துலங்கலாக 1949இல் அமெரிக்கத் தலைமையில் உருவான அமைப்புத்தான் நேட்டோ.  

நேட்டோ நம்பிக்கைத் துரோகமிழைத்ததா? 

நேட்டோவிற்கு எதிர்முனை அமைப்பாக சோவியத் உருவாக்கிய அமைப்பு “வார்சா ஒப்பந்த நாடுகள்” என்ற கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளின் கூட்டு. இந்த இடத்தில் இன்று ரஷ்யா அடிக்கடி குறிப்பிடும் “நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம்” பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 1991இல் வார்சோ ஒப்பந்த நாடுகள்அமைப்பு, சோவியத் ஒன்றிய மறைவோடு கலைக்கப்பட்டது. அந்த வேளையில் “நேட்டோ கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்யப்படாது” என கொர்பச்சேவுக்கு உறுதி வழங்கப்பட்டதாக ரஷ்யா கூறி வருகிறது. விளாடிமிர் புட்டினின் கருத்துப் படி, இந்த உறுதிப்பாட்டு மீறல் நேட்டோவின் நம்பிக்கைத் துரோகம். இதில் உள்ள பிரச்சினை என்னவெனில், அப்படியொரு உறுதிப்பாடு எழுத்தில் இல்லை. உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும் கொர்பச்சேவ், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் பற்றிய பேச்சே 1991இல் எழவில்லை என ஒரு பேட்டியில் 2014இல் குறிப்பிட்டிருக்கிறார். கொர்பச்சேவ், மற்றும் மேற்கின் இராஜதந்திரிகளின் கூற்றுப் படி, நேட்டோ, சரத்து 5 இன் படி, “கிழக்கு ஜேர்மனியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறும் வரை, அங்கே ஜேர்மன் நாட்டுப் படைகள் மட்டுமே இருக்கும், ஏனைய நேட்டோ நாடுகளின் படைகள் கிழக்கு ஜேர்மனியினுள் நிறுத்தப்படமாட்டார்கள்” என்பது பற்றி மட்டுமே உறுதிமொழி வழங்கப்பட்டது. இல்லாத ஒருஉறுதிமொழியை ரஷ்யா மீள மீள ஒப்புவித்து கேட்போரின் மண்டையைக் கழுவுகிறதா அல்லது புட்டின் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது சுவாரசியமான ஒரு கேள்வி.  

பதில் இரண்டிற்குமிடையில் இருப்பதாக 2017இல் வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் தொடர்பாடல் பரிமாற்றங்கள் காட்டுகின்றன. இப்பரிமாற்றங்களின் படி, 1990 பேச்சு வார்த்தைகளின் போதே நேட்டோவின் கிழக்கு நோக்கிய எதிர்கால விரிவாக்கம் பற்றி கொர்பச்சேவ் தரப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது – அந்தவேளையில் சோவியத் ஒன்றியம், அதன் பால்ரிக், மற்றும் கிழக்கு ஐரோப்பிய குடியசுகளை உள்ளடக்கியிருந்ததால் அவை உடைந்து எதிர்காலத்தில் நேட்டோவில் இணையக்கோருவது பற்றிய பேச்சு எழவில்லை. நேட்டோ, கிழக்கு ஜேர்மனி உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் அடங்காத நாடுகளுக்குப் பரவுவது பற்றி மட்டுமே அச்சம் இருந்திருக்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ்பேக்கரின் வாய்மொழிஉறுதிப்பாட்டில் “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் தானும் நகராது நேட்டோ” என்ற வார்த்தைகள் சோவியத் ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி. ஆனால், எழுத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு ஜேர்மனி பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும், 1991 டிசம்பரில், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போகிறது. அதன் பெரும்பகுதி நிலப்பரப்பை உள்ளடக்கி ரஷ்ய சமஷ்டி உருவானாலும், அது சோவியத் ஒன்றியம் அல்ல என்று நேட்டோ சொல்வது சட்ட ரீதியில் வலுவான வாதம்.      

இந்தப் பின்னணியில், நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றை, அந்த நாடுகளின் அரசுகள் மக்கள் ஆணையோடு விண்ணப்பிக்கும்போது, உள்வாங்கிக் கொள்கிறது -இதனைத் தடுக்கும் எந்த ஒப்பந்தங்களோ, சர்வதேச விதிகளோ இல்லை என நோட்டோ சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இணையாத பின்லாந்து போன்ற நாடுகள் கூட, நேட்டோவுடன் ஒரு இணக்கப்பாட்டில் பணி செய்ய ரஷ்யா மீதான சந்தேகமும் அச்சமுமே காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. ரஷ்யாவும் இந்த அச்சத்தை மீளமீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளாக 2008இல் ஜோர்ஜியாவினுள் ஊடுருவல் செய்தும், 2014 இல் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்தும் தன் பாதையை மாற்றாமலே முன் செல்கிறது. இந்த 2014 கிரிமியா ஆக்கிரமிப்பு இடம்பெறும் வரை, நேட்டோவிற்கென ஒரு விசேடமான நடவடிக்கைப் படையணி இருந்திருக்கவில்லையென்பதைக் கவனிக்க வேண்டும். அங்கத்துவ நாடுகளின் படையினரை இணைத்து நேட்டோ சில ஆயிரம் துருப்புகளை சுமாரான தயார் நிலையில் வைத்திருந்த நிலைமாறி, 2014இன் பின்னர் “ஈட்டிமுனைப் பிரிவொன்றை” உருவாக்கி எண்ணிக்கையையும் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் நிலை உருவானது. எனவே, ரஷ்யாவின் நடவடிக்கைகளால் நேட்டோவின் செல்திசையும், நேட்டோவின் செல்திசையால் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தொடரும் நச்சுவட்டம் ஒன்று நிகழ்கிறது. 

இந்த நச்சு வட்டம் தொடர்ந்து சுற்ற ஏதுவான உந்தலைக் கொடுக்கும் இரு காரணிகள் ரஷ்யாவின் பக்கம் இருக்கின்றன. இதன் அர்த்தம், இந்த இரு காரணிகளும் மட்டுமே நச்சு வட்டத்தின் இயக்கிகள் என்பதல்ல – ஆனால், பிரதான இயக்கிகள் என்பது பொருத்தமாக இருக்கும்.   

(தொடரும்)              

1. Serhii Plokhy. The Last Empire: The Final Days of Soviet Union. 2014. 

2. “I am against all walls” – Grobachev interview by RBTH, 2014 Russia Beyond.https://www.rbth.com/international/2014/10/16/mikhail_gorbachev_i_am_against_all_walls_40673.html  

3. NSA Archives – GWU. Nato Expansion: What Gorbachev Heard. 2017. 

https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early