— எம் எல் எம் மன்சூர் —
அதிகமும் பயன்படுத்தப்படாத தமிழ் சொற்களில் ஒன்று ‘எதிர்முரண்’ என்பது. ஆங்கிலத்தில் அதனை ‘Irony’ என்று சொல்வார்கள். அதாவது, நாங்கள் பொதுவாக சிந்திக்கப் பழகியிருக்கும் தர்க்க ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் ஒரு காரியம் அல்லது சொற்றொடர் என்று அதற்கு விளக்கமளிக்கலாம்.
இதனை ஒரு சில உதாரணங்களுக்கு ஊடாகப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
தனது நெருங்கிய உறவினரான தயாநிதி மாறனுக்கு 2004 இல் புதுடில்லி மத்திய அரசாங்கத்தில் ஒரு நல்ல அமைச்சுப் பதவியை வாங்கிக் கொடுக்கிறார் கலைஞர். அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு “தயாநிதி மாறன் ஹிந்தி மொழியை தெரிந்து வைத்திருப்பது ஒரு கூடுதல் தகுதி” என்று பதிலளிக்கிறார் கலைஞர். மேலோட்டமாகப் பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருப்பதாக தென்படமாட்டாது.
ஆனால், அந்தப் பதில் திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் கேலிக்கூத்தாக்குகிறது என்பது தான் வேடிக்கை. ஏனென்றால், 1965 தொடக்கம் தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும், ஹிந்தி படிப்பதை முற்றாக பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கோஷத்துக்கும் தலைமை தாங்கியவர்கள் கலைஞரும், அவருடைய சக திமுக தலைவர்களும் தான். இது ஒரு எதிர்முரண்.
பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு திராவிடக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யப்படுகிறார் அதே பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா. பின்னர் தேர்தலில் போட்டியிட்டு, அவர் முதலமைச்சராக வந்தது ஒரு முக்கியமான வரலாற்று எதிர்முரண்.
விஞ்ஞான ரீதியான கருத்தடை முறையை முதலில் கண்டுபிடித்த விஞ்ஞானி அவருடைய பெற்றோருக்கு 13ஆவது பிள்ளை என்று சொல்கிறார்கள். இங்குள்ள எதிர்முரண் அவருக்கு முன்னர் வேறு ஒருவர் அந்தக் காரியத்தை செய்திருந்தால், அந்த விஞ்ஞானி பிறப்பதற்கே வாய்பில்லை என்பது.
“நான் நாத்திகனாக இருக்க வேண்டுமென்பது இறைவனின் நாட்டம் போலும்” என்று கண்ணதாசன் சொன்னது ஓர் எதிர்முரண் சொற்றொடருக்கு நல்ல உதாரணம்.
இலங்கை அரசியலை பொறுத்தவரையில் எதிர்முரண்களுக்கு பஞ்சமே இல்லை.
– இலங்கை மார்க்சிசத்தின் பிதாமகன் என வர்ணிக்கப்பட்டவர் பிலிப் குணவர்தன. அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அப்பா. லங்கா சமசமாஜ கட்சியை 1935 இல் ஸ்தாபித்ததில் முன்னணியில் இருந்தவர். அடுத்து வந்த 30 ஆண்டுகளில் இலங்கை அரசியலில் ஒரு புரட்சிகர அரசியல்வாதி என்ற முறையில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவர்.
– 1950 களில் “பிரபுக்கள் மற்றும் நிலச்சுவாந்தார்களின் கட்சி” என வர்ணிக்கப்பட்டு வந்த UNP ஐ கடுமையாக எதிர்த்து நின்றவர். “UNP ஐ ஒழிப்பதற்கு பேய் பிசாசுகளுடன் கூட கூட்டணி சேரத் தயங்கமாட்டேன்” என்று மேடைகளில் முழங்கியவர். ஆனால், கடைசியில் அதே யுஎன்பியில் சேர்ந்து, 1965 – 1970 டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்து, தனது அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டார் பிலிப் குணவர்தன.
– பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென இப்பொழுது சில சிறுபான்மைக் கட்சிகள் தீவிரமான விதத்தில் முன்னெடுத்து வரும் போராட்டம் மற்றொரு ‘Irony’ கான உதாரணம்.
– அவ்வளவு கொடூரமான ஒரு சட்டமாக அவர்கள் சித்தரித்துக் காட்டும் பயங்கரவாத தடைச்சட்டம் 1979 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பொழுது தமிழர் விடுதலைக்கூட்டணியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை என்பது பலரும் அறியாத ஒரு செய்தி.
– வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத ஒரு காரணமும் அதற்கு இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது, அந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு சில இளைஞர்கள் கடத்திச் சென்றிருந்தார்கள். அந்தச் சம்பவத்திற்கும், தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டதற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்க முடியும் எனக் கருதப்பட்டது (இந்தத் தகவல் பிழையாக இருந்தால் அந்தக் கால கட்டத்தின் தமிழ் அரசியல் குறித்து நன்கு அறிந்திருப்பவர்கள் தெளிவுபடுத்தலாம்).
– 1983 யூலை கலவரங்களை திட்டமிட்டு நடத்தியவர்கள் யார் என்பது அநேகமாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இடதுசாரி தலைவர்களான வாசுதேவ நாணாயக்கார, விக்கிரமபாகு கருணாரத்ன, டியூ குணசேகர மற்றும் கே பி சில்வா போன்றவர்களை தமிழர்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டினார்கள் எனக் கூறி ஜே ஆர் ஜயவர்தன சிறையில் அடைத்தார்.
– அடுத்த முக்கியமான ‘எதிர்முரண்’ 2010 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய அமோக ஆதரவு.
– 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவடைகின்றது. அதனையடுத்து தமிழ் அரசியல் தலைவர்களும், உலகின் பல்வேறு நாடுகளில் செயற்பட்டு வந்த புலம்பெயர் அமைப்புக்களின் பரப்புரைக் குழுக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு – குறிப்பாக இலங்கை இராணுவத்திற்கு – எதிராக உலக அளவிலான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்கள். இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது என்பது அவர்களுடைய முதன்மையான குற்றச்சாட்டு. அதற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒரு போர்க் குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற முக்கியமான ஒரு வேண்டுகோள் ஐ நா மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்கள் என்பவற்றிடம் முன்வைக்கப்படுகின்றது.
– போர் முடிவடைந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களின் பின்னர் 2010 ஜனவரி மாதம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் போரை தலைமை தாங்கி நடத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
– அப்பொழுது வடக்கு கிழக்கு தமிழர்களை பெருவாரியாக பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக இருந்த வந்த TNA ஒரு முக்கியமான முடிவை எடுக்கின்றது. தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பது அந்த முடிவு. இதைவிட ‘Irony வேறு என்ன இருக்க முடியும்?
– அதன் காரணமாகத்தான் ‘நான் போர்க் குற்றங்கள் எவற்றிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதை தமிழர்களே 2010 ஜனாதிபதித் தேர்தலில் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள்’ என்று தொடர்ந்து சரத் பொன்சேகா கூறி வருகிறார்.
– அந்த நீண்ட வரிசையில் இப்பொழுது அரங்கேறியிருக்கிறது வீரவன்ச – கம்மன்பில நாடகம்.
– வீரசவன்ச தனது அபாரமான பேச்சுத் திறமையை பயன்படுத்தி, கோத்தாபய ராஜபக்சவை சிங்கள பௌத்த பெருமித உணர்வின் ஒரு மாபெரும் ‘Icon’ ஆக கட்டியெழுப்பியவர். லீகுவான் யூவுக்கு நிகரான ஒப்பற்ற தலைவர் என அவருக்கு புகழாரம் சூட்டியவர். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமேடையின் நட்சத்திர பேச்சாளர் (இன்றைய இலங்கையின் மிகச் சிறந்த சிங்கள மேடைப் பேச்சாளர்கள் 10 பேரின் ஒரு பட்டியலை தயாரித்தால் நிச்சயமாக வீரவன்சவுக்கு அதில் ஓர் இடமிருக்கும்).
– யஹபாலன ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியை குறிப்பிடுவதற்கு ‘சிறிசேன’ என்ற சொல்லை பிரபல்யப்படுத்தினார் வீரவன்ச. பூடகமாக அவருடைய வர்க்கம் மற்றும் சமூகப் பின்னணி என்பவற்றை வைத்து மைத்திரிபால சிறிசேனவை சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் அது. அதே வர்க்க மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்டிருந்த வீரவன்ச அப்படிச் செய்ததுதான் பெரும் அவலம்.
– 2019 இல் ‘தேசத் துரோகியாக ‘வர்ணிக்கப்பட்ட சிறிசேனவை துரத்தி அடிப்பதற்கு ராஜபக்சகளை முன்நிலைப்படுத்தியது வீரவன்ச – கம்மன்பில சோடி. இப்பொழுது காலமும், காட்சிகளும் மாறியிருக்கும் நிலையில் ராஜபக்சகளை தொலைத்துக் கட்டுவதற்கு அதே சிறினேவுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
– இந்தத் திடீர் திருப்பங்களுடன் இணைந்த விதத்தில் முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிலான ஒரு பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருக்கும் பின்னணியில், மீண்டும் ஒருமுறை சூடுபிடித்து வருகிறது இலங்கையின் அரசியல் களம். இந்த நிலையில், அடுத்து வரும் நாட்களில் மேலும் பல சுவாரசியங்களும், நம்பவே முடியாத எதிர்முரண்களும் அரங்கேற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.