— அழகு குணசீலன் —
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்றான் பாரதி. இது வெறும் கல்லும் மண்ணும் கலந்த பௌதீக ரீதியான பாலம் அல்ல. மனிதத்தை -மனிதாபிமானத்தை, மொழியை, கலையை, பண்பாட்டை, பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை இணைக்கின்ற பாலம். ஏன் ! இருநாட்டு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியல் உறவுப்பாலம்.
சமகால மீனவர் விவகாரம் இந்த உறவுப்பாலம் குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. இந்த பாலத்தை சுய இலாப அரசியல் பல சந்தர்ப்பங்களில் தகர்த்து வந்திருக்கிறது. ஆனால் மக்களோ அது அரசியலால் உடைக்கப்பட்டபோதெல்லாம் அதை மீளக்கட்டி எழுப்பத் தவறவில்லை. ஆனால் அண்மைக்கால அரசியல் வீசிய வலையில் மீனவர்கள் சிக்கி தங்களை கழட்டிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். தவித்த முயல் அடிக்கும் அரசியல் மீனவர் பிரச்சினைக்கு தீர்வைத் தேடாது தங்கள் இருப்பைத் தக்க வைக்க வலை வீசுகிறது.
பாக்கு நீரிணை மீனவர் பிரச்சினை இந்தியா, இலங்கைக்கு புதிய விடயமல்ல. இது நீண்ட காலமாகவே இருந்து வருகின்ற ஒன்றுதான்.
பிரதமர் மோடி ஆட்சி ஏற்ற முதல் மூன்று மாதங்களில் ஜெயலலிதா 25 கடிதங்களை மோடிக்கு எழுதியிருந்தார். இதில் 12 கடிதங்கள் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தது என்று ‘த இன்டியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதமர் மோடி ஒரு அடிகூட முன்னெடுத்து வைக்கவில்லை.
யுத்தத்திற்கு பின்னரான கடந்த பத்து ஆண்டுகளாக இந்த விவகாரம் இரு நாட்டு அரசியலில் இடம்பிடிக்கின்ற போதும் நிரந்தர தீர்வை நோக்கி எதுவும் நடக்கவில்லை. தீர்வைக் காண வேண்டிய அரசியல், தீர்வை இழுத்தடிப்பதன் மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்க்கிறது. மீனவர்கள் கைதும், காணாமல் போவதும், சடலங்கள் கரையொதுங்குவதுமாக கடல் கொந்தளிப்புடன் இரைகிறது. ஆனால் இது கடலில் தாழ்அமுக்கம் ஏற்படுத்தியதல்ல. மாறாக அரசியல் தோற்றுவித்தது.
இது ஒரு பக்கத்தில் தேசியவிவகாரம், மறுபக்கத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான வெளிநாட்டு விவகாரம், இரு தேசங்களுக்கு இடையிலான எல்லை தாண்டிய அத்துமீறல், சட்டத்திற்கு மாறான குற்றவியல் பொருளாதார விவகாரம். பிரச்சினைக்கு இலங்கையின் வடபகுதி மீனவர்களோ, தமிழக மீனவர்களோ பொறுப்பல்ல. இந்த நிலைக்கு அவர்களைத் தள்ளிய டெல்லியும், கொழும்பும் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் இரு தரப்பும் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. காரணம் அரசியல் அன்றி வேறில்லை.
போர்க்கால மீனவர் வாழ்வியல் சூழல்..!
யுத்தம் கொதிநிலையில் இருந்த காலத்தில் இலங்கையின் வடபகுதி மீனவர்கள் மீன்பிடிக்குச் செல்வது தடைசெய்யப்பட்டிருந்தது. இது பொருளாதாரத்தடையின் ஒரு அங்கம். சிறிலங்கா கடற்படைக்கும், கடற்புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இருந்து விலகி இருப்பதே மீனவர்களுக்கான ஒரேயொரு பாதுகாப்பாகவும் இருந்தது.
தமிழக மீனவர்களும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே இயலுமானவரை எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபட்டனர்.
ஆனால் இலங்கை மீனவர்களுக்கு இருந்த தடையை இந்திய -தமிழக மீனவர்கள் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அதேவேளை இந்த மீனவர்களை கடற்படையினரும், புலிகளும் கூட பயன்படுத்த தவறவில்லை. தமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும் /கடத்துவதற்கும், இருதரப்பும் ஒரு தரப்பு மறுதரப்பபின் நடமாட்டம், பிரசன்னம் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தினர். இந்த சூழலில் ஆங்காங்கே சில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் பொதுவாக இரு தரப்பும் தமது வேறுபட்ட நோக்கங்களின் அடிப்படையில் ஒரு நட்பு நிலையை தமிழக மீனவர்களுடன் கடைப்பிடித்தனர்.
வடபகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல இருந்த தடை, வட இலங்கைக் கடலில் மீன்வளம் பெருகுவதற்கு காரணமாய் அமைந்தது.
தமிழக மீனவர்களைப் பொறுத்தமட்டில் கடந்த மூன்று தசாப்தங்களில் தமிழகக் கடலை அவர்கள் துடைத்து எடுத்து விட்டார்கள். அவ்வப்போது அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்த போதும். இலங்கை கடற்படையோ, புலிகளோ இது விடயமாக பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. மீனைப் பெற்றுக்கொண்டு, கண்டும் காணாமல் இருந்தனர். யுத்தத்தின் பின்னர் இந்த எல்லை தாண்டிய மீன்பிடிக்கு பழகிப்போன தமிழக மீனவர்களை – ஒருவகையில் இலங்கை கடல்வள மீன்களில் ருசிகண்ட இவர்களை தலைக்குமேல் வெள்ளம் வந்துள்ள இன்றைய நிலையில் கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகுவாக இல்லை என்பதே இன்றைய உண்மை நிலையாகும்.
இதை ஸ்டாலின் கட்டுப்படுத்துவார் அல்லது டக்ளஸ் தேவானந்தா கட்டுப்படுத்துவார் அல்லது கட்டுப்படுத்தவேண்டும் அல்லது தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் எழுப்புகின்ற குரல் எந்தளவுக்கு நடைமுறைச்சாத்தியமானது?.
இந்திய மாநில அரசோ அல்லது இலங்கையின் அத்துறை சார் அமைச்சரோ அதை எடுத்த எடுப்பில் சாதிக்கமுடியாது. இருநாட்டு தேசிய எல்லைகளைக் கடந்த இந்த விவகாரம் இரு நாட்டு மத்திய அரசாங்கத்துடனும், வெளிநாட்டு அமைச்சுக்களுடனும், கடல்வள அமைச்சுக்களுடனும் சம்பந்தமானது.
இங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே செயற்பட முடியும் ஏனெனில் இது அமைச்சரவை முடிவுடன் இணைந்த ஜனாதிபதியின் தீர்மானம். அமைச்சர்கள் இது விடயத்தில் முடிவுகளை எடுக்க முடியாது. அதேவேளை இலங்கை ஜனாதிபதியும், அமைச்சரவையும் முடிவு செய்தால் மட்டும் போதுமானதா? இல்லை. மறுதரப்பில் பிரச்சினையின் பங்காளியான இந்திய மத்திய அரசின் ஆதரவுடனும், இணக்கத்துடனும், ஒத்துழைப்புடனுமே இதைச் செய்ய முடியும். இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசின் இணக்கமும் தேவை. இது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கு தெரியாததல்ல. ஆனால் அவர்கள் அமைச்சர் டக்ளஸ் நினைத்தால் சரி, என்ற ஒரு பொய்மையை மீனவர்கள் மத்தியில் காட்சிப்படுத்தி கடற்காற்றின் கூதலுக்கு அரசியல் குளிர்காய முற்படுகின்றனர்.
நல்லாட்சியில் அமைச்சர் அதிகாரம் சுமந்தவர்……!
சிறிசேன -ரணில் கூட்டாட்சியில் வெளிப்படையாக நிபந்தனைகள் எதையும் விதிக்காது அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது அனைவரும் அறிந்ததே. இந்த அரசாங்கத்தில் “உத்தியோகப்பற்றற்ற அமைச்சர்” அந்தஸ்துடன் அரசியல் செய்தவர் சுமந்திரன். இதை அவருக்கு வழங்கப்பட்ட அதிவிசேட அதிரடிப்படை பாதுகாப்புக்காக மட்டும் குறிப்பிடவில்லை “அதிகாரம்” கொண்டவராக இருந்தார் என்பதை தமிழ்த்தரப்பு பல தடவைகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறது. “நல்லாட்சி எம்மை ஏமாற்றி விட்டது” என்று சம்பந்தன் ஐயா சொல்லும் வரையும் இதுதான் நிலை. புலிகளால் அச்சுறுத்தல் என்று கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலரை உள்ளே தள்ளவும், எதிர்தரப்பு அரசியல்வாதிகளைக்கூட உள்ளே தள்ளவும் அவர்களால் முடிந்தது இந்த அதிகாரத்தால்தான். பயங்கரவாத தடைச்சட்டத்தினை உள்ளடக்கிய நல் ஆட்சிக்கு கை உயர்தியவர்கள் இப்போது கையெழுத்து வேட்டை நடாத்துகிறார்கள்.
இந்த அதிகாரத்தையும், நல்லாட்சியின் அனுசரணையையும் பயன்படுத்தித்தான் தான் தம்பட்டமடிக்கும் தனிநபர் சட்டமூலத்தை சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரக் கூடியதாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த சட்ட மூலத்திற்கு மீனவர்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் வாக்கு கணக்குப் பார்த்து அதை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று சுமந்திரன் அன்றைய மீன்வளத்துறை அமைச்சரைக் கேட்டிருந்தார். இதை மீனவர் சங்கங்களின் சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்ததாக மீனவர் சங்கப் பிரதிநிதி கூறுகிறார்.
இந்தச் சட்டம் குறித்து சுமந்திரன் எம்.பி. பல தடவைகளில் குறிப்பிட்ட கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. ரோலர் இழுவைப்படகை பயன்படுத்தி மீன்பிடிக்கப்பட்டால், மீன் வளம் அருகிவிடும் அதனால் இழுவைப்படகு மீன்பிடி முறையை தடைசெய்யச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறுகிறார். சுற்றாடல் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் சுமந்திரன். மீனவர்கள் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பணம் கட்டித்தான் இழுவைப்படகை பயன்படுத்துகிறார்கள் என்று வடபகுதி மீனவர்களுக்கு பூச்சுத்தப்போய், இறுதியில் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பில் அது போய் முடிந்தது.
மொத்தத்தில் சுமந்திரனின் தனிநபர் சட்டமூலம் இழுவைப்படகு ஆழ்கடல் மீன்பிடியைத் இலங்கை மீனவர்களுக்கு தடை செய்கிறதே அன்றி தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடை செய்யவில்லை. ஒருவகையில் இச்சட்டம் இலங்கை தமிழ் மீனவர்கள் மீதே வலை வீசுவதாக உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் எல்லை தாண்டும், அதிசக்தி வாய்ந்த ரோலர்களையும், நவீன உபகரணங்களையும், வசதிகளையும் கொண்டுள்ள தமிழக மீனவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அது வடபகுதி மீனவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தினாலும், இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் அதன் வினைத்திறன் எவ்வளவு? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இறுதியில் இதன் மூலமும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்றவர்கள் வடபகுதி தமிழ்மீனவர்களே. பாக்கு நீரிணையில் சிறிலங்கா கடற்படை வேலியை IMBL (INTERNATIONAL MARITIME BOUNDARY LINE) எல்லைக் கோட்டில் அமைத்து இதைத்தடுப்பது சாத்தியமா …?
இதற்கிடையில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. அதை மீளப் பெற்றதன் மூலம் வடபகுதி மீனவர்களை ஏமாற்றிவிட்டார். இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டதால் மீளப்பெற்றதாகக் கூறுகிறார் அவர். இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளை இந்தியக் கைக்கூலிகள் என்று கூறும் இவர், இதுவிடயத்தில் இந்திய தூதரகம் சொல்வதைச் செய்கிறார். இதற்கான கூலி என்ன கூலி?
இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள் என்று கேட்டால் அவரின் பதில் எப்படி இருக்கும் என்பதை காலக்கண்ணாடி கற்பனையில் இப்படிக் காட்டுகிறது.
#“ஐயையோ…! நாங்கள் இந்தியத்தூதரகம் சொல்வதைச் செய்யவில்லை என்றால், வேறுயாராவது அவர்கள் சொல்வதைச் செய்துவிடுவார்கள். அதைத்தடுப்பதற்காக இதைச் செய்கிறோம்”. #
கொள்கையற்ற அரசியல் வங்குரோத்து! இங்கு யாரின் நலன்பேணப்பட்டது. மீனவர் நலனா.? இந்திய நலனா..? தமிழ்க் காங்கிரஸ் நலனா.? இலங்கை அரசாங்கத்தின் நலனா…?
மீனவர் போராட்டத்தில் உள்ள தெளிவற்ற அரசியல் இந்திய எதிர்ப்பு வாதம் நோக்கி நகர்கிறது. இதுதான் ஜே.வி.பி.க்கு வடக்கில் கதவைத்திறந்து விட்டுள்ளது. வடபகுதி மீனவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவது போன்று பாசாங்கு செய்து கொண்டு இந்திய எதிர்ப்பு வாதத்தை ஜே.வி.பி. வடக்கில் விதைக்கிறது. இவர்கள் உண்மையான இடதுசாரிகள் என்றால் பொருளாதாரத் தடையை, மீனவர்கள் தொழில் செய்வதற்கான தடைக்கு எதிராக ஏன்? குரல் எழுப்பவில்லை. கலங்கிய கடலில் கரைவலை கட்டுகிறது ஜே.வி.பி. பம்பாய் வெங்காயத்திற்கும், மைசூர் பருப்புக்கும் புதுப் பதிவு வைத்தவர்கள், பாக்கு நீரிணை மீனுக்கும் வைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கேட்பவர்கள், சுமந்திரனின் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருபவர்கள் அனைவரும ஒன்றிணைந்து இலங்கை, இந்திய அரசாங்கங்களுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கத் தயங்குகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பும் மற்றைய தமிழ்த்தேசியக்கட்சிகளும் ஜே.வி.பி. மற்றும் நல்லாட்சியின் கூட்டாளிகளையும் இணைத்துக்கொண்டு மீனவர் பிரச்சனையில் ஓரணியில் செயற்படுவதற்கு ஏன் தயங்குகின்றனர்? இலகுவான பதில் பிரச்சினை தீர்க்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடந்தால் இந்த அரசாங்கம் தீர்த்துவிட்டது என்றாகிவிடும், தீர்வில் டக்ளஸ் தேவானந்தாவின் வகிபாகம் முக்கியம் பெற்றுவிடும்.
கஜேந்திரகுமார் ஒத்திவைப்புப் பிரேரணையை மீளப்பெற்றதற்கும் இதுதான் காரணம். போராடுங்கள் என்று மீனவர்களை ஊக்கப்படுத்தி, போராட்டகளத்தில் நேரடியாக மீனவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கும் டக்ளஸின் கையோங்கிவிடும் என்று அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள் இவர்கள். மீனவர்களின் போராட்டத்தை நியாயமானது என்றும், போராடுபவர்களை நேரடியாகச் சென்றும் சந்திக்கின்ற ஒரு அமைச்சராக டக்ளஸ் இருக்கிறார்.
தொப்புள் கொடி அரசியல்………!
தமிழக மீனவர்களின் ஆதரவு மோடியின் பாரதீய ஜனதாவுக்கும், தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் தேவையாகவுள்ளது. தமிழ்த்தேசிய அரசியலுக்கு இந்திய ஆதரவு தேவை என்பதால், இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருநாட்டு அரசாங்கங்களையும் கோர தமிழ்த்தரப்பு அரசியல் தவறுகிறது. தமிழ் நாட்டில் மீனவர் சமூகத்தின் வாக்குப்பலம் அதிகம் என்பதால் தமிழக அரசும், கட்சிகளும் சட்டவிரோத மீன்பிடியைக் கண்டும் காணாமல் உள்ளன. வெறுமனே இலங்கைத் தரப்பால் பாதிப்புக்கள் ஏற்படும் போது மட்டுமே கண்டனங்கள் எழுகின்றன. மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து மௌனம் சாதிக்கப்படுகிறது.
இந்திய, இலங்கை அரசுகளின் அனுசரணை இன்றி இருதரப்பு அமைச்சர்கள் மட்டத்தில் இதற்கு தீர்வை எட்டுவது கஷ்டம். இதனால் தமிழக அரசும், தமிழ்த்தேசியக் கட்சிகளும், அவர்களின் நட்புக்கட்சிகளும் இணைந்து அமைச்சர் டக்ளஸின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும். ஆனால் நிலைமை இதற்குமாறாக உள்ளது. டக்ளஸின் முயற்சிகளை எதிர்த்தரப்பு தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சந்தர்ப்பத்தை மீனவர்களின் நலனுக்காக பயன்படுத்தாமல், டக்ளஸின் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
உண்மையில் இருதரப்பு மீனவர்களுக்கும் காலமாற்றங்களுக்கு ஏற்றதான மாற்றுத் திட்டங்கள் எதுவும் இல்லை. இந்திய, இலங்கை அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு மாற்று வழிகள் காட்டப்படாவிட்டால் இவ்வாறான நிகழ்வுகளை வெறுமனே சட்டங்களாலும், ஒப்பந்தங்களாலும் கட்டுப்படுத்துவது இலகுவானதாக இருக்கப்போவதில்லை.
இராட்சத ரோலர்களைக் கொண்டுள்ள தமிழக மீனவர்களுடன் போட்டிபோட்டு தொழில் செய்வது பாரம்பரிய வடபகுதி மீனவர்களுக்கு மிகவும் கஷ்டமானது. பல பத்து இலட்சங்கள் பெறுமதியான, நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ரோலர்களை அவர் கொண்டுள்ளனர்.
இந்த நிலையை மாற்ற டக்ளஸ் தேவானந்தா முயற்சிக்க வேண்டும். அவரின் சூசகமான வார்த்தைகளில் கூறுவதானால் “இடிப்பதற்கும், பிடிப்பதற்குமான” ரோலர்களை மீனவர்களுக்கு வழங்க அவரது அமைச்சு செயலாற்ற வேண்டும்.
இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 2500 ரோலர் படகுகள் கடலில் இறங்குகின்றன. ஒவ்வொரு படகிலும் சுமார் இரண்டு டசின் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்கியிருக்கின்றார்கள். ஒரு ரோலரில் குறைந்தது ஆறுபேர் வேலை செய்கின்றனர். ரோலர்கள் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் தலைமன்னார், கச்சதீவு நோக்கிப் பயணித்து வளமான கடலைத்தேடுகின்றன. ஒரு படகுக்கு ஒரு தடவைக்கு 40,000 ரூபா வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. எல்லாப் பயணங்களின் போதும் போதுமான வருமானம் கிடைப்பதில்லை.
இந்த நிலையில் பாரிய ரோலர்கள், நவீன மீன்பிடி வலைகள், மற்றும் வசதிகளையும் கொண்டுள்ள இந்திய மீனவர்களுடன் வடபகுதி மீனவர்கள் போட்டிபோட முடியாத நிலையிலேயே உள்ளனர். இதனால் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வசதிகளும், வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படவேண்டும். மீனவர் சமூகங்களுக்கு இடையே கடலில் ஓரளவுக்காவது சம பலம் இல்லாத நிலையில் அது வடபகுதி மீனவர்களையே பெரிதும் பாதிப்பதாக அமையும்.
1974இல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு வழங்கினார். இது தமிழ்நாட்டின் இணக்கமின்றி மத்திய அரசினால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவு. எனினும் இந்திய- தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கவும் வலைகாயவிடவும் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு வருகைதரவும் ஒப்பந்தம் இடமளிக்கிறது.
கச்சத்தீவில் இடம்பெறும் என எதிர்பார்கப்படும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏட்டிக்குப் போட்டியாக கச்சை கட்டுவதைத்தவிர்த்து விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வுடனும் அணுகப்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த முயற்சியில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு நிலைப்பாட்டை மீனவர் நலன் சார்ந்து எடுக்கவேண்டிய தேவை உள்ளது. மோடியின் வருகையின் போதும் இந்த விவகாரம் பேசு பொருளாக்கப்படுவதில் தமிழ் அரசியல் தன் வகிபாகத்தை வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
“தொப்புள் கொடியை” அரசியல் அறுக்காமல் இருந்தால் சரி.