—தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழ் ஊடகங்களால் தமிழ்த்தேசியக் கட்சிகள் எனக் குறிசுடப்பட்டுள்ள சில கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தை -ஆவணத்தை அவரிடம் சேர்ப்பிக்கவென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் 18.01.2022 அன்று கையளித்த விடயத்தை, அவ்வாறு குறிசுடப்பட்டுள்ள இன்னொரு தமிழ்த் தேசியக் கட்சி(?) யான-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்) எதிர்த்து அந்தமுயற்சி இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதித்திட்டம் என வர்ணித்துக் குரலெழுப்பியுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தையான குமார் பொன்னம்பலம் அவர்களின் தந்தையான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களால் 1944இல் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். அதிலிருந்து பிரிந்துவந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949இல் உருவாக்கி இனப்பிரச்சினைக்கான தீர்வாக ‘சமஷ்டி’க் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை எதிர்த்தகட்சிதான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். அத்தகையதொரு கட்சிக்கு ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ என்று மறு பெயர்சூட்டிக் கொண்டுதான் இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘இரண்டு தேசம்; ஒரு நாடு’ என முழங்கித்திரிகிறார்.
தமிழீழத் தனி நாட்டையோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அலகையோ விரும்பாத எந்தத் தமிழனும் இருக்கமாட்டான். ஆனால் இன்றைய களநிலையில் உடனடியாக இவை சாத்தியமா?
இலக்கை அடைவதற்கான மூலோபாயங்களை வகுத்து கட்டங்கட்டமாக முன்னேறிச் சாத்தியமாக்க வேண்டியதொரு விடயத்தை வெறுமனே கோஷங்களை எழுப்பியும் கொடிகளைப் பிடித்தும் ஊர்வலங்கள் போயும்- பேரணி நடாத்தியும்-துண்டுப்பிரசுரங்களை விநியோகிததும் அடையமுடியுமா?
‘பண்டா- செல்வா’ ஒப்பந்தமும்(1957), ‘டட்லி-செல்வா’ ஒப்பந்தமும் (1965) தமிழரசுக் கட்சி ‘சமஸ்டி’ கேட்டகாலத்தில் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் தீர்வைத்தேடிய அந்தக் காலகட்டத்துமுயற்சிகள்தான் அவை. முளையிலேயே அவை கிள்ளியெறியப்பட்டவை என்பது வரலாறு.
அதுபோலவே 1987 இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தீர்வைத்தேடிய அக்காலகட்டத்தின் முயற்சிதான். ஆனால் ஒரு வித்தியாசம் பண்டா – செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் போலல்லாது பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் ஒரு அங்கமாகச் சட்டமாக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவரும் ஒரு விடயம்தான் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம். அது கடந்த முப்பத்தினான்கு வருடங்களாக முறையாகவும் முழுமையாகவும் அமுல் செய்யப்படவில்லையென்பது வேறுவிடயம். ஆனால் அது இலங்கை அரசியலமைப்பின் ஓர் அங்கமாக இப்போதும் நடைமுறையிலுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூற்றுப்படி அதனை நிராகரிப்பதன் மூலம்- தூக்கியெறிவதன் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவை ஓரம்கட்டிவிட்டுத் தனித்து நின்று எதனைச் சாதிக்கப்போகிறோம்.
‘இரண்டு தேசம்; ஒரு நாடு’ கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதனை அவர் எவ்வாறு அடையப் போகிறார்- சாத்தியமாக்கப் போகிறார்?பாராளுமன்ற அரசியலால்- தேர்தல் அரசியலால் -கடைந்தெடுத்த கட்சி அரசியலால் அதனைச் சாதிக்க முடியுமென அவர் எண்ணுகிறாரா? துண்டுப் பிரசுரம் அடித்து விநியோகிப்பதன் மூலம் அவர் சாதிக்க நினைப்பது என்ன?
‘இரண்டு தேசம்; ஒரு நாடு’ விடயத்திலும் பார்க்கத் தீவிரம் குறைந்த ‘சமஸ்டி’யையே கடந்த எழுபத்தியிரண்டு வருட காலப் பாராளுமன்ற அரசியலால் -தேர்தல் அரசியலால் – கட்சி அரசியலால் எய்தமுடியவில்லையெனும் போது ‘இரண்டு தேசம்; ஒரு நாட்டை’ அதனால் அடைய முடியுமா?
இலங்கைத் தமிழர்கள் தங்கள் இலக்கையடையக்கூடிய அடித்தளத்தை 1987இல் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தமும் அதன் வாயிலாக இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பெற்ற பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தமும் அதன் கீழ் 1988இல் உருவான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பெற்ற அதிகாரப்பகிர்வு அலகும் இட்டன.
ஆனால், அதனைப் பயன்படுத்தத் தெரியாமல்’ அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி’ என்ற வீம்பான நிலைப்பாட்டைத் தமிழர் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள்) எடுத்து அதனால் முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது. இந்த வரலாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குத் தெரியாதா? அல்லது தெரிந்துகொண்டும் ‘வாக்குப் பெட்டி’க் கனவு அவரது கண்ணையும் கருத்தையும் மூடவைத்துள்ளதா?
எனவே, நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை மக்களுக்குக் கூறுவதும் -அவ்வாறு கூறி மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதும் -கட்சி அரசியல் அனுகூலங்களைப் பெறுவதற்காக ‘வீர வசனங்கள் ‘பேசுவதும்- விருதுக்கு வேட்டையாடுவதும் – எடுத்ததற்கெல்லாம் சர்வதேசத்தையும் – ஐ.நா.வையும் காட்டுவதும் தமிழ் மக்களுக்கு மென்மேலும் அழிவுகளையே அறுவடையாக்கும்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அண்மையில் (26.01.2022-30.01.2022) நடத்தப் பெற்றவாகனப் பவனி மற்றும் பேரணியில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நிராகரித்தும் ‘சமஸ்டி’த் தீர்வை வலியுறுத்தியுமே பதாதைகள் கட்டப்பட்டன. கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஒரு கேள்வி.
‘இரண்டு தேசம் ; ஒரு நாடு’ கொள்கையும் ‘சமஸ்டி’யும் ஒன்றல்லவே. ‘தமிழீழ’த் தனிநாட்டையே (தேசத்தையே) குறிக்கும். உங்களிடமே அது பற்றிய தெளிவில்லையென்பதையே இது காட்டுகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? ‘இரண்டு தேசம் ; ஒரு நாடு’ என்று உச்சரிப்பதைவிட்டு ‘சமஸ்டி’ என்று மட்டுமே வெளிக்கூறலாமே. அப்படியானால் ‘சமஸ்டி’யைக் கோரி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் (தமிழரசுக் கட்சி) சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடனும் சேர்ந்து இயங்குவதற்கு என்ன தடையுண்டு? கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நடவடிக்கைகள் யாவும் கட்சி அரசியல் சார்ந்தவை மட்டுமேயொழிய தமிழ்ச் சமூகத்தின் நலன் சார்ந்து எதுவுமேயில்லையென்பதை தமிழ் மக்கள் நன்குணரவேண்டும். ஆதலால் தமிழ் மக்கள் இவரிடம் ஏமாந்துவிடாது தற்காத்துக் கொள்ளுங்கள்.
பிரிட்டனின் எழுதப்படாத அரசியலமைப்பு ஒற்றையாட்சிதான். ஆனால் அதன் கீழ் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டுள்ள ஸ்கொட்லன்ட் (Scotland) மற்றும் ‘வேல்ஸ்’ (Wales) போன்றவை தங்களைப் பாராளுமன்றம் என்றே அழைத்துக்கொள்கின்றன. அந்த அளவிற்கு அவற்றிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் ‘பின்லான்ட்’ (Finland) நாட்டில் ‘ஆலன்’ என்னும் மாகாணத்திற்கு (Alan province) அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு கடவுச் சீட்டு வழங்கும் அதிகாரம்கூட அம்மாகாணத்திற்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் ‘அச்சே’ எனும் (Aceh) மாகாணத்திற்குத் திருப்தியான அதிகாரங்கள் ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக அல்லாமல் சாதாரண சட்டம் ஒன்றின் மூலமே வழங்கப்பட்டுள்ளன.
எனவே அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தில் முழுமையான அதிகாரப் பகிர்வும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் விருப்பும்தான் முக்கியமானவையே தவிர அது ஒற்றையாட்சியின் கீழா? ‘சமஸ்டி’ ஆட்சியின் கீழா நடைபெறவேண்டுமென்பது இரண்டாம் பட்சமே.
முன்பு இவ் அரசியல் பத்தித் தொடரில் குறிப்பிட்டதுபோல் பாத்திரத்துக்குள்ளேயுள்ள உள்ளீடுதான் முக்கியமே தவிர பாத்திரத்தின் வடிவம் முக்கியமானதல்ல.
எனவே, இன்றுள்ள தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய – பூகோள அரசியல் நீரொட்டங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழர் விவகாரங்களைக் கொண்டுசெல்ல வேண்டுமெனில்பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அமுல் செய்யும் புள்ளியிலிருந்தே தமிழ்த்தேசியப் பயணத்தை மீண்டும் ஆரம்பிப்பதுதான் அறிவார்ந்த அரசியல் அணுகுமுறையாகும். அதனையே இவ்அரசியல் பத்தித் தொடர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. அதனையே இப்பொழுதும் இன்னுமொரு முறை வலியுறுத்துகிறது. அடிமேல் அடி அடித்தால்தானே அம்மியும் நகரும்.