கணக்கில்லை- வாழ்வு இல்லை

கணக்கில்லை- வாழ்வு இல்லை

    — படுவான் பாலகன் —  

உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதியின் ஓரங்களில் கிறவல் கும்பங்கள் குவிக்கப்பட்டு காணப்படுகின்றன. வீதியால் நடந்து சென்றவர்கள் மரநிழல்களில் களைப்பாறி நிற்கின்றனர். வெப்பத்தின் அளவும் வழமைக்கு மாறாக இருக்கின்றது. ஆடையுடன் ஆற்றில் இறங்கி நனைந்துவிட்டு கரையேறியவர்கள் போன்று மண்வெட்டியுடன் இளைஞர்கள் சிலர் நிற்கின்றனர். கைகட்டி மரநிழலில் நின்றுகொண்டு ஒருவர் அப்படி செய், இப்படி செய் என்று கட்டளையிட்டுக்கொண்டிருக்கின்றார்.  

மரநிழலில் இருந்தவர்கள் வாகனங்கள் வீதியால் வருகின்றனவா? என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வரும் வாகனங்களுக்கு கை அசைத்து நிறுத்தி அதில் சிலர் ஏறிச்செல்கின்றனர். இவ்வீதியால் பலர் பயணம் செய்தாலும், பொது போக்குவரத்துச்சேவை இல்லை. இதனால் பிரதான வீதியில் இறங்கி தங்கள் கிராமங்களுக்கு நடந்தும், வீதியால் வரும் வாகனங்களில் ஏறியும் செல்வர். இது இங்குள்ள மக்களுக்கு பழகிபோனதொன்று. 

இவ்வீதியால்தான் சோமு சேரும் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது இளைஞர்கள் சிலர் வேலை செய்வதைக் காண்கின்றார். எப்போதும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி தொடர்ந்து கற்க வைப்பது, தொழில்வழிகாட்டல் பயிற்சிகளில் இணைத்துவிடுவதில் ஈடுபாடு கொண்டவர்தான் சோமுசேர். இவ்விளைஞர்களைக் கண்ணுற்றதும் சோமு சேருக்கு அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. 

மோட்டார் சைக்கிளில் இறங்கி இளைஞர்களுக்கு அருகில் செல்கின்றார். எல்லோரும் சோமு சேர் வருவதை அவதானிக்காமலேயே தங்களது வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். வேலைகளை செய்யாது பேசிக்கொண்டிருந்தாலும் இவர்களை பார்த்து வேலை சொல்லிக்கொண்டிருக்கும் மேற்பார்வையாளர் சத்தமிட்டுவிடுவார் என்ற அச்சத்தினாலும், மதிய உணவு உண்ணவேண்டும் என்பதற்காகவும் வேகவேகமாக கிறவலை வீதியின் ஓரத்தில் பரவிக்கொண்டிருக்கின்றனர்.  

முகத்தில் தாடியும் வளர்த்து, தொப்பியும் அணிந்து கொண்டு, சாம்பல் நிற முழுநீள சேட்டும், றவுசரும் அணிந்து வேலைசெய்து கொண்டிருந்தான் விமல். சோமு சேரைக் கண்டதும் மறுபக்கமாக முகத்தினை திருப்பிக்கொண்டு, தலையை அதிகமாக குனிந்து  வேலை செய்து கொண்டிருக்கின்றான். சோமு சேரும் இளைஞர்களுக்கு அருகில் வந்து கதைகொடுக்க மேற்பார்வையாளனும்  

‘வேலையைப் பாருங்க’ என்று சத்தமிட,  

‘நாம் கதைகொடுக்கத்தான் இவன் இப்படி பாயிறான்’  

என மனதிற்குள் நினைத்துக்கொண்டு சோமு சேரும் தனது மோட்டார் சைக்கிளை நோக்கி செல்கின்றார்.  

‘மதிய சாப்பாடு சாப்பிடும் போது இவர்களுடன் பேசலாம் தானே’, ‘பேசித்தான் போக வேண்டும்’  

என தனக்குள்ளே பேசிக்கொண்டு செல்கின்றார். 

வேலை செய்த விமலும் மெதுவாக திரும்பி பார்க்கின்றான் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் சோமு சேர் செல்வது தெரிகின்றது.  

‘அப்பாடா, இப்பதான் உயிர் வந்தது போல் இருக்கின்றது’.  

‘பயந்தே போயிட்டேன், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, என்ன செய்வதென்றே தெரியாம இருந்தது’.  

என பக்கத்தில் இருந்த ராமுவை பார்த்து விமல் கூறினான்.  

‘ஏன் அப்படி சொல்கிறாய் உனக்கு என்ன நடந்தது’ என விமல் கேட்டான். 

‘இப்போ இவ்விடத்திற்கு வந்து போனவர் என்னைப்படிப்பித்த ஆசிரியர். எப்போதும் என்னோடு அன்பாக இருப்பார். நண்பராக பழகுவார். படிக்கும் போது எனக்கு நிறைய உதவி செய்வார். எல்லோரையும் சமமாக பார்ப்பார். பாடசாலைக்கு விடுமுறையே எடுக்கமாட்டார். நிறைய வேலைகளை பாடசாலைக்காக செய்திருக்கின்றார். பாடசாலையில் என்ன நிகழ்வு நடந்தாலும் முன்னிற்கு நிற்பார். எப்போதும் பிள்ளைகளின் பக்கம் நின்றுதான் பேசுவார்.’  

‘வகுப்பில் எப்போதும் முதலாம் பிள்ளையாகவே நான் வருவேன். பாடசாலையில் அதிகபெறுபேற்று உயர்தரம் கற்று பல்கலைகழகம் சென்று இந்த ஊரிலே முதல் அரச உத்தியோகம் எடுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது நினைப்பு. அதற்காக எப்போதும் எங்கள் வகுப்பு பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து படிப்போம். எங்களுக்குள் போட்டி போடுவமே தவிர,பொறாமைகள் வந்ததில்லை.’  

‘நாங்கள் 10ம் தரம் கற்கும் போது எமது பாடசாலையை விட்டு இடமாற்றம் பெற்று சோமு சேர் போய்விட்டார். அவரை போகவேண்டாம் என பலமுறை கூறினோம். ஆனாலும், அவருக்கு ஏற்பட்ட உடல் வருத்தம் காரணமாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றிற்கே இடமாற்றம் பெற்றுச்சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவரை நான் கண்டதில்லை. அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அவரின் விருப்பத்தினை நிறைவேற்றவில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி அவரின் முகத்தினை பார்ப்பது என்ற உணர்வினால், அவரை பார்க்கவே கூடாதென இருந்துவிட்டேன்.’ 

 என்று கூறிய அவனின் கண்களில் இருந்து அவனை அறியாமலே கண்ணீர் வடியதொடங்கியது.  

கண்களை கசக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கின்றான். மோட்டார் சைக்கிளில் சோமு சேர் அமர்ந்துகொண்டிருக்கின்றார். சுறுசுறுப்பாக இயங்கிய விமலின் உடல் சோர்விழந்ததைப் போல் மாறுகின்றது.  

மேற்பார்வையாளனும்  

‘சாப்பிட்டுத்து 30 நிமிடத்தில் வேலைக்கு வரவேண்டும்’ என சத்தமிடுகின்றான். 

 இச்சத்தம் சோமு சேரின் காதுகளிலும் விழுகின்றது. வேகவேகமாக மண்வெட்டிகளை மரநிழலில் வைத்துவிட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு, சைக்கிளின் கூடைகளில் இருந்த உணவுபொதிகளை எடுத்துக்கொண்டு வட்டமாக அமர்ந்து, உணவுப்பொதிகளை அவிழ்கின்றனர்.  

வேகமாக சாப்பிட்டுவிட்டு எழவேண்டும்.  

‘சோமு சேர் இவ்விடத்திற்கு வரக்கூடாது’ என  மனதிற்குள் நினைத்துக்கொண்டு வழமையை விட பதட்டமாகவே சாப்பிட ஆரம்பிக்கின்றான் விமல். 

வழமையாக சாப்பிடும் போது பாதணியையும், தொப்பியையும் கழற்றி உணவுக்கு மரியாதை கொடுத்தே உணவு உண்ணும் விமல். இன்றைக்கு மட்டும் தொப்பியும் கழற்றாமல், மற்றவர்களின் உணவுப்பொதிகளையும் கவனியாமல் உணவு உட்கொள்கின்றான். அப்போது சோமுசேரும் அவ்விடத்திற்கு வந்துவிட்டார். 

அவ்விடத்தில் அந்த இளைஞர்களுக்கு அருகில் அமர்ந்து,  

‘எனக்கும் சாப்பாடு தரமாட்டீங்களா’?  

என கேட்டுக்கொண்டு ஒவ்வொருவர் பற்றியும் அறிய முனைகின்றார். அப்போது விமலைப் பார்த்து, 

‘எல்லோரும் கலகலப்பாகவும், தொப்பியை கழற்றிவிட்டும் உணவு உண்ணுகின்றீர்கள். இந்த பையன் மட்டும் ஏன் தொப்பியுடன் உணவு உண்ணுகின்றான்?.  

‘தொப்பியை கழற்றிவிட்டு உணவு உண்ணு மகன்’  

எனக்கூற மெதுவாக தொப்பியை கழற்றுகின்றான் விமல். விமலைப்பார்த்ததும் எங்கையோ பார்த்த முகம் என்று யோசிக்கின்றார் சோமு சேர்.  

தலையை குனிந்தவனாகவே இருக்கும் விமலைப்பார்த்து தலையை நிமிருமாறு கூறுகின்றார் சோமு சேர்.  

‘இண்டைக்கு மாட்டித்தம்’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு விமலும் நிமிர்கின்றான்.  

சோமுசேரும், ‘நீ, விமல்தானே’என்கின்றார். ஆம் என தலையை மட்டுமே அசைக்கின்றான்.  

‘நீ பல்கலைக்கழகம் போகவில்லையா’? என்கின்றார். இல்லை என்று மட்டுமே பதில் வருகின்றது.  

‘ஏ.எல் படித்த நீதானே’? என கேட்க, அதற்கும் இல்லையென்ற பதிலே கிடைக்கின்றது.  

‘ஓ.எல் சித்தியடைந்தா தானே’? என்று கேட்க, கணிதம் சித்தியடையவில்லை என்கின்றான்.  

ஏன்..? என்று கேட்க வந்த சோமு சேர் வாயை மூடி மௌனமாகிவிட்டார்.  

‘என்ன பெறுபேறு’ என்று கேட்க 5ஏ, 2வீ, 1எஸ் என்கின்றான்.  

‘இப்படி பெறுபேறு எடுத்தும் படிக்கல்லையா? என்று கேட்க அதற்கும் இல்லை என்கிறான். 

அப்போதுதான் அப்பாடசாலையின் ஆளணி தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் சண்டையிட்ட ஞாபகங்கள் சோமு சேருக்கு வருகின்றது.  

விமல் கற்ற பாடசாலையில் கணிததத்திற்கு ஆசிரியரே இல்லை. ஆரம்ப கணித அறிவும் இல்லாதததினால் தெரிந்த ஆசிரியர்கள், தெரிந்ததை சொல்லிக்கொடுத்தாலும் முறையாக பிள்ளைகளுக்கு விளங்குவதில்லை. கலைப்பிரிவு படித்த ஆசிரியர்களே இங்கு கற்பித்தனர். வேறுபாடங்கள் போன்று வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய பாடமும் இல்லை. இப்பாடசாலை அமைந்துள்ள பகுதியில் இருந்து இதுவரை யாரும் பல்கலைக்கழகம் சென்றதுமில்லை. அதற்கு கணிதம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமை முதற்காரணம். கணித ஆசிரியர் ஒருவரை கேட்டுக்கேட்டு பலமுறை நடந்ததுதான் மிச்சம். இப்பாடசாலைப்போன்று இன்னும் சில பாடசாலைகளில் கணித ஆசிரியர் இல்லாமலே இருக்கின்றனர். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் இப்படித்தானே போகும் என சோமுசேரின் மனதிற்குள் பல கேள்விகளும், சந்தேகங்களும், வெறுப்புணர்வும் எழுந்துகொண்டிருந்தன. 

அரச உத்தியோகத்தில் இருக்க வேண்டிய விமல். இன்று கிறவல் பரவும் இளைஞனாக இருக்கின்றானே! என நினைத்து நினைத்து வெதும்பிக்கொண்டிருக்கின்றார் சோமுசேர். இலவசக்கல்வி முறையென்றாலும் ஒழுங்கு முறையாக கிடைக்காமையால், கிராமப்புற பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படைந்துதானே செல்கின்றது. என மனதிற்குள் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்.  

விமலை தனியார் வகுப்புக்களிலாவது இணைத்து படிப்பித்திருக்கலாம் என நினைத்து, தனது தொழில்சேவைக்கு அர்த்தமில்லையே என நொந்தவராக, விமலுக்கு என்ன கூறுவதென்று தெரியாமலே சோமுசேரும் மௌனம் சாதிக்கின்றார். அப்போது இன்னும் எழும்பவில்லையா?நேரக்கணக்கில்லையா? என்ற சத்தமும் உரத்துக்கேட்டது.