— வி. சிவலிங்கம் —
ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. போர் ஆரம்பித்துள்ள இவ் வேளையில் நாம் சில கேள்விகளோடு இக் கட்டுரையை ஆரம்பிக்கலாம்.
– இப் போரின் தாற்பரியங்கள் என்ன?
– நேட்டோ நாடுகளின் சதி வலைக்குள் உக்ரெய்ன் வீழ்ந்துள்ளதா?
– உக்ரெயின் வலதுசாரி தேசியவாதிகளினதும், நாக்ஸிஸ தரப்பினரதும் இலக்கு என்ன?
– இப் போரின் விளைவாக உக்ரெய்ன் அடையும் பலன் என்ன?
– ஐரோப்பிய, அமெரிக்க ஆயுதச் சந்தையாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மாறுகின்றனவா?
– சரிந்து வரும் உக்ரெய்ன் பொருளாதாரத்திற்கு மேற்கு உலகம் உதவுமா?
– இப் போரின் விளைவாக பல லட்சம் அகதிகள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் யார் அவர்களைப் பராமரிப்பது?
இவ்வாறான பல கேள்விகளுடன் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது ஊடகங்களின் கவனம் உக்ரெய்ன் நாட்டின் சுதந்திரம், சுயாதீனம், நேட்டோ ராணுவக் கூட்டில் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உரிமையை ரஷ்யா தீர்மானிக்க முடியுமா? என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. அது மட்டுமல்ல, இப் போர் ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தில் ஆரம்பித்திருப்பது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும், இதர மேற்குலக நாடுகளும் ஈராக்,சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போரினை ஆரம்பித்த வேளையில் ஐரோப்பிய மக்கள் மௌனமாக இருந்தார்கள். இப்போ தமது கொல்லைப்புறம் என்றவுடன் மனித உரிமை முதல், சர்வதேச ஒற்றமை வரை அதிகளவு பேசப்படுகிறது. இப் போர் தொடர்பான பல முக்கிய அம்சங்களை நாம் ஆராய்வது அவசியமாகிறது. அதாவது நாடுகள் தத்தமது எதிர்காலத்தினைச் சுயமாகத் தீர்மானிக்க முடியாதா? உக்ரெய்ன் நாடு ஐரோப்பிய நேட்டோ ராணுவ இணைப்பில் சேருவதை ரஷ்யாவிடம் கேட்டு முடிவு செய்ய வேண்டுமா?என்பதிலிருந்தே இன்றைய விளக்கங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால் உண்மையில் இதற்கான அடிப்படைத் தாற்பரியங்கள் வேறாகும்.
உதாரணமாக, இலங்கைத் தேசம் சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்ய எண்ணினால் ஒரு சாரார் அதனைச் சரியென வாதிக்கவும் உள்ளனர். ஏனெனில் இலங்கை ஒரு பூரண இறைமையுள்ள நாடு என்பது அவர்களின் வாதமாகும். ஆனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையின் முடிவுகள் பாதகமாக அமையுமானால் இலங்கை தனது முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இன்று உலக நாடுகள் பலவும் ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வதோடு பாதுகாப்பும் அவ்வாறே மாற்றமடைந்துள்ளது. எனவே இவற்றை நாம் பூச்சிய நிலையிலிருந்து பார்க்க முடியாது. உலகின் இன்றைய நிகழ்வின் போக்கிலிருந்தே அதனை நோக்க வேண்டியுள்ளது.
முதலாம், இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் இடம்பெற்ற போது ரஷ்ய மக்களே அதிக விலை கொடுத்தனர். போரினது கொடுமையை அந்த மக்கள் நன்கு உணர்வார்கள். எனவே போர் ஏற்படாமல் தடுப்பதும், போர் ஏற்பட்டால் தடுப்பதும் என இரண்டு பிரச்சனைக்குள் ரஷ்ய மக்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் நில அளவிலும்,மூலவள அளவிலும் மிக அதிகளவு பரப்பைக் கொண்டுள்ள ரஷ்யா இன்றைய முதலாளித்துவ மூலவள அபகரிப்புப் போட்டியில் தன்னைப் பாதுகாப்பதும் பிரதான தேவையாகிறது. 1917ம் ஆண்டில் ரஷ்யப் புரட்சி ஏற்பட்ட பின்னர் அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவ சக்திகள் பல நாடுகளைக் கூறுபோட்டு தமது உற்பத்தியின் சந்தைகளாக அவற்றை மாற்றிக் கொண்டன. சோவியத் ரஷ்யாவின் அபரிமிதமான குறுகியகால தொழிற்துறை வளர்ச்சியும், அதன் கோட்பாடுகளும் பல நாடுகளை விடுதலையை நோக்கி உந்தித் தள்ளின.
சோவியத் ரஷ்யாவின் குறுகிய கால வளர்ச்சியும், சுதந்திரத்தை நோக்கிய விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவை வழங்கிய நிலையில் பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் காலப் போக்கில் சுதந்திரமடைந்தன. இதற்குப் பிரதான காரணம் 1917ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியாகும். இப் புரட்சியின் பின்னர் பல நூற்றாண்டுகளாக உலக வளங்களைச் சுரண்டி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் சோவியத் ரஷ்யாவில் நிர்மாணிக்கப்படும் கம்யூ. அரச கட்டுமானம் மனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலானது எனக் கூறி அங்கு நிர்மாணிக்கப்படும் தொழிலாள வர்க்க சார்பு ஆட்சியைக் குலைக்க முதலாளித்துவ நாடுகள் மிகவும் திட்டமிட்டே செயற்பட்டன.
சோவியத் ரஷ்யா மிகவும் விவசாய நாடாக இருந்த நிலையில் அந்த நாட்டை தொழிற்துறை நாடாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மிகவும் குறுகிய காலத்தில் தொழில் வளர்ச்சி மட்டுமல்ல,அணுக் குண்டு தயாரிப்பதிலும் சிறந்து முன்னேறியது. இந் நிலையில் சோவியத் நாட்டின் அபரிமிதமான தொழில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதான தந்திரம் மேற்கு நாடுகளால் வகுக்கப்பட்டது. அதாவது ஐரோப்பாவில் இன்னொரு போர் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் ஐரோப்பிய நாடுகள் பலவும் இணைந்து தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நியாயங்களுடன் ‘நேட்டோ’ ராணுவக் கட்டமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இன்னொரு போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கட்டமைப்பு அமெரிக்க நாட்டுடன் இணைந்து பல நாடுகளில் போரை நடத்தியது. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போரை ஏற்படுத்தி இந் நாடுகளில் செயற்பட்ட அரசுகளைச் சிதைத்து இன்று அந்த நாட்டு மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் அலைகிறார்கள்.
ஐரோப்பாவிற்கு வெளியில் போரை நடத்தும்போது மனித உரிமைகளுக்கு எவ்வித மதிப்பும் இந்த நாடுகள் அளித்ததில்லை. உதாரணமாக,மன்னராட்சி நடைபெறும் சவூதி அரேபியாவுடன் இந்த நாடுகள் சிறந்த உறவைப் பராமரித்து வருகின்றன. இந்த நாடு இன்று வரை யேமன் நாட்டில் சவூதி அரேபியா குண்டுகளை வீசி படுகொலைகளை நடத்துகிறது. இம் மனித உரிமை மீறல்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. ஏனெனில் இந்த நாடுகளில் இருக்கும் எண்ணெய் வள வருமானம் இந்த நாடுகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இந்த நாடுகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பெரிதாகப் படுவதில்லை.
தற்போது நடைபெறும் இந்த யுத்தம் ஐரோப்பாவிற்குள் உள்ள வலுவான நாட்டினால் மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பாவில் இன்னொரு போர் இடம்பெறாமல் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நேட்டோ அமைப்பு இப் போருக்கான ஆரம்ப விதைகளைப் போட்டிருக்கிறது. 1917ம் உருவாகிய சோவியத் அரசு குலைந்து 90களில் ரஷ்யக் குடியரசாக மாற்றமடைந்த பின்னரும் ஏன் ரஷ்ய எதிர்ப்புத் தொடர்கிறது? ரஷ்ய நாடு கம்யூ. கட்டுமானத்திலிருந்து விலகி முதலாளித்துவப் பாதையைத் தெரிந்தெடுத்த பின்னரும் ரஷ்யாவை நோக்கிய எதிர்ப்புகள் ஏன் தொடர்கின்றன? ரஷ்யா ஒரு கம்யூ. நாடு அல்ல. அங்கு செயற்படுவது முதலாளித்துவ கட்டுமானமாகும். அது மட்டுமல்ல, ரஷ்யா தாமும் நேட்டோ ராணுவக் கட்டமைப்பில் இணையத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இருப்பினும் ரஷ்ய எதிர்ப்புகள் ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
ரஷ்யாவின் பூகோள நிலப் பரப்பும், அதிலுள்ள இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதாயின் அந்த நாட்டினைத் துண்டுகளாக்க வேண்டும். அதனைப் பலமிழக்கச் செய்ய வேண்டும். சோவியத் குடியரசில் இணைந்திருந்த பல நாடுகள் தற்போது தனி நாடுகளாகப் பிரிந்துள்ளன. இந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகளில் செல்வம் கொழிப்பதாக கனவு காண்கின்றன. முதலாளித்துவ பிரச்சாரங்களும், கற்பனைகளும் மேற்கு நாடுகளில் சுதந்திரம் மலர்ந்திருப்பதாக கருதுகின்றனர். சோவியத் அரசு காலத்திலிருந்த இந்த நாடுகளில் செல்வந்தர்களுக்கும், வறுமையானவர்களுக்கும் இடைவெளி இருந்ததில்லை. சக்திக்கேற்ற உழைப்பும், தேவைக்கேற்ற ஊதியமும் கிடைத்தது. ஆனால் மேற்கு நாடுகளில் பாரிய வருமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை அச் சமூகம் வெளியில் காண்பிப்பதில்லை. அச் சமூகத்திற்குள் வாழும்போதுதான் அவை தென்படுகின்றன.
உதாரணமாக, ஜேர்மனி நாடு சோவியத் ஆட்சிக் காலத்தில் கிழக்கு, மேற்காகப் பிரிக்கப்பட்டு மேற்கு ஜேர்மனியில் முதலாளித்துவ அரசும், கிழக்கு ஜேர்மனியில் சோசலிச அரசும் செயற்பட்டன. கிழக்கு ஜேர்மனியில் காணப்பட்ட வருமானப் பற்றாக்குறையும், மேற்கு ஜேர்மனியில் கட்டப்பட்ட பெரும் தொழில்துறை வளர்ச்சியும் கிழக்கு மக்களை மேற்கு நோக்கி ஈர்த்தது. இதனால் பாதுகாப்பு அரண்களை உடைத்து பலர் மேற்கை நோக்கி வர முற்பட்டு மரணத்தைத் தழுவியவர்களும் உண்டு. ஆனால் தற்போது இரண்டு ஜேர்மனிகளும் இணைக்கப்பட்ட பின்னர்தான் கிழக்கு மக்களுக்கு மேற்கு ஜேர்மனியின் போலித் தோற்றம் புலப்பட்டது. வருமான ஏற்றத்தாழ்வு துலங்கியது. அவர்களில் பலர் இன்னமும் தமது சோசலிச ஆட்சியின் இனிய வாழ்வுகளை எழுதி மகிழ்ந்து வருகின்றனர்.
அதே போலவே உக்ரெயின் நாட்டு மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி ரஷ்ய வளர்ச்சியை விட பிரமாதமாகத் தெரிந்தது. எவ்வாறு கிழக்கு ஜேர்மனி மக்கள் மேற்கு நோக்கிச் செல்ல விரும்பினார்களோ அதேபோன்ற நிலை உக்ரெயின் நாட்டிலும் ஏற்பட்டது. இதற்குப் பிரதான காரணம் சோவியத் அரசிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகிய உக்ரெயின் அங்கு வளர்ச்சியடைந்து வரும் ரஷ்ய ஆதிக்கம் காரணமாக தமது உக்ரெயின் ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் படிப்படியாக வளர்ந்தது. மிகவும் சிறுபான்மையினராகிய தென் பிராந்தியத்திலிருந்த ரஷ்யர்கள் தமது சுயாதீனத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கருதினார்கள். இதனால் படிப்படியாக அந்த மக்களின் அடையாளங்களை அழிக்க உக்ரெயின் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் தலைப்பட்டார்கள்.
உதாரணமாக, இலங்கையிலுள்ள பெரும்பான்மையினராகிய சிங்கள மக்கள், வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் தமது சிங்கள பௌத்த ஆட்சிக் கட்டுமானத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கருதி பல கொடுமைகளை இன்றுவரை எவ்வாறு நடத்துகிறார்களோ, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முற்படுகிறார்களோ அதே நிலமைகளே உக்ரெய்ன் தென் பிராந்தியத்திலுள்ள பெரும்பான்மையினராகிய ரஷ்யர்கள் உக்ரெய்ன் பெரும்பான்மை வாதிகளால் ஒடுக்கப்படுகிறார்கள். எவ்வாறு இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் தொன்றுதொட்டு அங்கு வாழ்கிறார்களோ அதேபோன்றுதான் உக்ரெயினின் தென்பகுதி ரஷ்யர்களும் வாழ்கிறார்கள். அதாவது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவு உள்ளதோ அதேபோன்ற உறவுதான் ரஷ்ய நாட்டு மக்களுக்கும் உக்ரெயின் தென் பிராந்திய ரஷ்யர்களுக்கும் இடையேயான உறவாகும். இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்திய மக்கள் கவலைப்படுவது போலவே உக்ரெயின் ரஷ்யர்கள் பாதிக்கப்படும் போது ரஷ்ய மக்கள் கவலை கொள்கிறார்கள். எவ்வாறு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்கள் என சிங்கள பெரும்பான்மைவாதிகள் கருதுகிறார்களோ அதே போன்றே தென் பிராந்திய ரஷ்யர்கள் ரஷ்யாவுக்கு விசுவாசமாக இருப்பதாக உக்ரேனிய பெரும்பான்மைவாதிகள் எண்ணுகின்றனர்.
இலங்கையில் எவ்வளவு சிங்கள -தமிழ் உறவு மோசமாக உள்ளதோ அதே போலவே உக்ரெயின் நாட்டிலும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கும், உக்ரெயின் மொழி பேசும் மக்களுக்குமிடையே பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டன. அதே போலவே இலங்கையில் சிங்கள – தமிழ் உறவுகள் மோசமடைந்து மோதலாக மாற்றமடைந்த வேளையில் சர்வதேச தலையீடுகள் அதிகரித்ததோ, எவ்வாறு இலங்கையில் சிங்கள பெருந்தேசியவாதம் பெரும்பான்மை வாதத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியதோ அதே போலவே உக்ரேனிய தேசியவாதம் உக்ரெனிலும் உக்கிரப்படுத்தி உள்நாட்டு மோதல்களை அதிகரிக்க உதவியது.
சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்க தேசிய அளவில் அம் மக்களின் அடையாளங்களை ஒழிக்க தனிச் சிங்கள சட்டம், ஒரு நாடு, ஒரு சட்டம், தொல்பொருள் பாதுகாப்பு என பல வழிகளில் முயற்சிக்கிறதோ அவ்வாறான செயல்கள் அங்கும் நிகழ்ந்தன. இந்த வரலாற்றினை அறிவதன் மூலம் பல பாடங்களை நாம் கற்க முடியும். உதாரணமாக, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சில முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளையில் ரஷ்யா, உக்ரெயின் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டன. இன்று இப் போரில் இலங்கை நடுவுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையை இலங்கையால் தொடர்ந்து வைத்திருக்க முடியுமா?
(தொடரும்)