வாக்குமூலம் – 06

வாக்குமூலம் – 06

…….. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவை, 20.01.2022 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் அவரைக் கொழும்பில் சந்தித்தவேளையில், இரா.சம்பந்தன் அவர்கள், 

இந்த இலங்கைத்தீவில் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் தனித்துவ உரிமையுடைய இனமாக வாழ்ந்தார்கள். அந்தத் தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள்தான். ஆகவே அந்த இணைப்பால் ஏற்பட்ட தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நின்று, நிலைத்து, நீடிக்கக்கூடிய, நியாயமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருவது பிரிட்டனின் கடமையும் பொறுப்புமாகும்” 

என நேரில் தெரிவித்ததாக ஊடகச் செய்தியொன்று (காலைக்கதிர் 21.01.2022) தனது காலைப் பதிப்பில் பிரமாதமாகக் குறிப்பிட்டிருந்தது. 

இது ஒரு சம்பிரதாய பூர்வமான -வழமையான இராஜதந்திர மரபுசார்ந்த சந்திப்புத்தான். இப்படியான சந்திப்புக்கள் இதற்கு முன்னரும் பலவித காலகட்டங்களில் பல தடவைகளில் இரா.சம்பந்தனுக்கு முற்பட்டகாலங்களிலும் நடந்துள்ளன. இவ்வாறான கூற்றுக்கள் பல தமிழ் அரசியல் தலைவர்களால் கடந்தகாலங்களிலும் கூறப்பட்டு வந்துள்ளன. இவ்வாறான சம்பிரதாயபூர்வமான சந்திப்புக்களால்- கூற்றுக்களால் மட்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எய்துவிடப்போவதில்லை. 

இலங்கைத் தமிழர் தரப்பில் ஐக்கியப்பட்ட- தெளிவான- திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான வெகுஜன ரீதியான செயற்பாட்டு அரசியலால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு இப்படியான ‘ஏட்டுச்சுரக்காய்’ அரசியலால் எட்டப்படப்போவதில்லை. மாறாக, தமிழர் தலைவர்கள் இனப்பிரச்சனை தொடர்பாக ‘உஷார்’ ஆக உள்ளார்கள் என்பதை உள்ளூர்த் தமிழர்களுக்குக் காட்டிக்கொள்வதற்குப் பயன்படுமேயன்றி வேறில்லை. 

அன்றியும், ‘நின்று, நிலைத்து, நீடிக்கக்கூடிய, நிலையான தீர்வு ஒன்றைப் பெற்றுத்தருவது பிரிட்டனின்கடமையும் பொறுப்புமாகும்’ என்று சம்பந்தன் கூறியிருப்பதைப் பார்த்தால் அத்தகைய தீர்வு என்னவென்று தீர்மானிப்பது பிரிட்டனா? அல்லது இலங்கைத் தமிழர் தரப்பா? என்றகேள்வியும் கூடவே எழுகிறது. 

தமிழர்களுக்கு என்ன வேண்டுமென்பதைத் தமிழர்தரப்பல்லவா தெளிவாகவும்- திட்டவட்டமாகவும் முன்வைக்கவேண்டும். 

தமிழர்களுக்கு என்ன வகையான தீர்வு வேண்டுமென்பதில் தமிழர்களிடமே (தமிழ்த் தேசியக் கட்சிகளிடமே) தெளிவில்லையெனும்போது அதனை பிரிட்டன் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? 

இலங்கைத் தமிழர்களுடைய இன்றைய அரசியல் பொதுவெளியில் தேர்தல்களில் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பெற்ற- அதாவது குறைந்த பட்சம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பார்ப்போம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி)- இரா.சம்பந்தன். 

பிரிக்க முடியாத- பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழக் கூடிய ஓர் அரசியல் தீர்வு (அவ்வப்போது ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அத்தீர்வு ‘சமஸ்டி’தான் என்றும் சொல்லிக் கொள்கிறது) 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – சி.வி.விக்னேஸ்வரன் 

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான ஒற்றை அதிகாரப்பகிர்வு அலகு (ஒற்றைமொழிவாரி மாகாணம்)  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்)- கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

இரண்டு தேசம்; ஒரு நாடு (ஒற்றையாட்சி அரசியலமைப்பை முற்றாக நிராகரிக்கிறது) வேறுமாதிரிக்கூறப்போனால் புலிகளின் ‘தமிழீழத் தாயகம்’தான் தமது கட்சியின் கொள்கை என மறைமுகமாகக் கூறுகிறது. 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி)- டக்ளஸ் தேவானந்தா. 

மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி. தற்போதைய கள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிபதின் மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டம் கட்டமாக முன்னேறுவது. 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (ரி எம் வி பி) – சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 

பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலையும் மாகாண சபை முறைமையையும் ஆதரிக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிரானது. 

இவற்றில் பெரும்பான்மைத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அதன் சரி பிழைகளுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே விளங்குகிறது. அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியமக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் தம்மைப் புலிகளின் முகவர்களாகவே அடையாளப்படுத்தியுள்ளன. 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அன்றிலிருந்து இன்றுவரை சித்தாந்த ரீதியாகவும்-அரசியல் கோட்பாட்டு ரீதியாகவும் புலிகளுக்கெதிரான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் பகிரங்கமாக அரசியல் பொது வெளியில் முன்வைத்து இயங்கும் கட்சி. தற்போதைய ‘கோட்டபாய’ அரசாங்கத்தை ஆதரிப்பது மட்டுமல்ல இக்கட்சியின் தலைவர் (செயலாளர் நாயகம்) டக்ளஸ் தேவானந்தா இவ் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருக்கிறார். 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி எம் வி பி) யைப் பொறுத்தவரை அது புலிகளிடமிருந்து பிறந்ததொன்றென்றாலும் தற்போது புலிகளை நிராகரிக்கும் கட்சி. 

இவற்றிற்கு மத்தியில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில் 09.04.2021 அன்று கொழும்பில் அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர்விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளும் கூடிப் (எதிர்காலத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இவற்றுடன் ஆறாவது கட்சியாக இணைந்து கொள்ளக்கூடும்) பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமுல்செய்வதற்கான அரசியல் களவேலைகளை முன்னெடுப்பதற்காக ‘அதிகாரப் பகிர்விற்கான இயக்கம்’ (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) என்னும் பெயரில் ஓர் அமைப்பை அங்குரார்ப்பணம் செய்து பூர்வாங்க வேலைகளைத் தொடங்கியுள்ளன.மேற்குறிப்பிட்ட ஆறு கட்சிகளும் தம்மை அரசியல் கோட்பாட்டு ரீதியாகப் புலிகளுக்கு எதிரானவையென்றும் இலங்கை -இந்திய சமாதான ஒப்பந்தத்தையும் (1987) அதன்வாயிலாகக் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தையும் முழுமையாக ஆதரிப்பவையென்றுமே அடையாளப்படுத்தியுள்ளன. 

இவையொருபுறமிருக்க, கடந்த 18ஆம் திகதி (18.01.2022) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முகவரியிடப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி வி விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ்பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித்தலைவர் என் ஸ்ரீகாந்தா, ‘ரெலோ’ செல்வம் அடைக்கலநாதன், ‘புளொட்’ தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் கையொப்பத்துடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்ட ‘பதின்மூன்றுக்கு அப்பால்’ ஆவணமும் இப்போது சந்தைக்கு வந்துள்ளது. 

இவ்வாறானதோர் அரசியல் களயதார்த்தப் பின்னணியில், இப்போது இரா சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவிடம் கூறியுள்ள -எதிர்பார்க்கும் ‘நின்று, நிலைத்து, நீடிக்கக்கூடிய நியாயமான தீர்வு’ இவற்றில் எது? 

தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்களெல்லாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களை ஒரு குழப்பமான நிலையிலேயை வைத்துள்ளனர்.  

இந்த நிலையில் இந்தப் பாராளுமன்ற அரசியல் தலைவர்களை மட்டுமே நம்பியிராமல் தமிழர் தரப்பு அரசியலின் பலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் கட்சி அரசியலுக்கு அப்பால் – பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் அவற்றிற்கு வெளியே தற்போது(09.04.2021 அன்று) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை ஒரு பலம் வாய்ந்த மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பத் தமிழ் மக்கடையே உள்ள சிவில் அமைப்புகள் -சமூகச் செயற்பாட்டாளர்கள்- அரசியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள்- கல்விமான்கள்-துறைசார் நிபுணர்கள்- ஊடகவியலாளர்களெனப் பலதரப்பட்டவர்களும் அர்ப்பணிப்புடன் முன்வரவேண்டுமென இப் பத்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.