இன்றைய உக்ரைன் …! அமெரிக்க இராஜதந்திரத் தோல்வி! காலக்கண்ணாடி- 75

இன்றைய உக்ரைன் …! அமெரிக்க இராஜதந்திரத் தோல்வி! காலக்கண்ணாடி- 75

 ஜோபைடனின் இராஜதந்திர தோல்வியும்…! 

 புட்டினின் தற்காப்பு  இராணுவ நகர்வுகளும்…..!!

    — அழகு குணசீலன் — 

அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஜோபைடன் போன்ற மிகப்பலவீனமான தலைமைத்துவம் ஒன்றை அமெரிக்க மக்கள் இது வரை கண்டதில்லை . அவரின் அரசியல், உடல் முதுமைக்கும் அப்பால் அவர் மிகவும் பலவீனமான அரசியல் தலைமையாகவே தன்னை அறிமுகம் செய்துவருகிறார். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க – நேட்டோ கூட்டணிப்படைகளை வெளியேற்றிய போது இந்த பலவீனம் மேலும் வெளிப்பட்டது. சி.ஐ.ஏ. அனைத்து ஆரூடங்களையும், கணிப்புக்களையும் தலிபான்கள் தப்புக்கணக்கு என்று நிரூபித்தார்கள். இறுதியில் மிகப்பெரிய மனித அவலத்தை ஏற்படுத்தி அமெரிக்கப் படையினர் இரவோடிரவாக தப்பிக்கொண்டனர். ஒட்டு மொத்தத்தில் இரட்டைக்கோபுர தகர்ப்புக்கு முந்திய ஆப்கானிஸ்தானே இன்றைய ஆப்கானிஸ்தான். அமெரிக்கா ஆப்கானை  இருந்த இடத்திலேயே கைவிட்டு வெளியேறி இருக்கிறது. 

உக்ரைன் – ரஷ்யா விடயத்திலும் தொடரும் நிகழ்வுகளை அவதானித்தால் அமெரிக்காவின் பலவீனம் தெரியும். புட்டின் படைகளை உக்ரைன் எல்லைக்கு நகர்த்திய போது பைடன் மிகத்தாமதமாகவே செயற்பட்டார். வெறுமனே வாய்ச் சவால்களையே மேற்குலக ஊடகங்கள் வழமைபோல் ஊதித்தள்ளின. ஜெனிவா பேச்சு வார்த்தைகளில் கூட புட்டின் தரப்பே பலமானதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் புட்டினை ஆத்திர மூட்டியதைத்தவிர எதையும் செய்ய வில்லை. உக்ரைனில் ரஷ்ய இராணுவம் முன்னேறினால் நேட்டோ எதுவும் செய்ய முடியாது என்றால் ஏன் இந்த வாயச்சவால்?  

உக்ரைன் நேட்டோவில் சேருவதா?இல்லையா? என்பது அதனுடைய இறைமை சார்ந்த முடிவு என்பதை மறுப்பதற்கில்லை.  மறுபக்கத்தில் புட்டினின் இந்த  இராணுவ நடவடிக்கை அத்துமீறிய ஆக்கிரமிப்பு என்பதிலும் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. யுத்தம் ஒன்றில் பாதிக்கப்படுபவர்களும், இழப்புக்களைச் சந்திப்பவர்களும் மக்களே. 

உத்தரவிடும் அரசியல் தலைமைகள் அல்ல.  

 ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும்  உக்ரைனை தமது தாளத்திற்கு ஆட்டுவிப்பதே இன்றைய இச் சூழலுக்கு காரணம். ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக உக்ரைனின் நேட்டோ பிரவேசம் அமையும் என்று ரஷ்யா நம்புகிறது. உக்ரைனிடம் நேட்டோவில் இணையமாட்டேன் என்ற எழுத்து மூலமான உத்தரவாதத்தை பல்வேறு பேச்சுவார்த்தைகளின் போதும், மத்தியஸ்தத்தின் போதும் ரஷ்யா கோரியது. ஆனால் இந்த கோரிக்கை உக்ரைன் தரப்பால் மேற்குலக ஆலோசனையின்படி நிராகரிக்கப்பட்டது. 

உக்ரைன் எல்லையில் உள்ள – அண்மையில் நகர்த்தப்பட்டு யுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படைகளை மீளப்பெற வேண்டும் என ரஷ்யாவிடம் கோரப்பட்டது. ரஷ்யா அதற்கு பதிலாக உக்ரைன் நேட்டோ அங்கத்துவ விவகாரத்தை முன்வைத்து வந்தது. இந்த நிலையில் பிரித்தானிய, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ரஷ்யா மீதான பொருளாதாரத்தடையை விதித்தன.  

புட்டின் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!

சமகால உலகில் அரசியலை அரசியலாக கையாளாமல், மேற்குலகம் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கு பொருளாதாரத்தடை, மனித உரிமைகள், விளையாட்டு, ஆயுதவழங்கல், உதவி வழங்குதல், இராணுவ தளங்களை அமைத்தல், இராணுவ கூட்டமைப்பு போன்ற விடயங்களை கருவிகளாகப் பயன்படுத்தி வருகின்ற போக்கு அதிகரித்துள்ளது. அதுவும் தமது விருப்புக்கு ஏற்ப தேர்வு செய்து தம்மைச் சார்ந்த நாடுகளுக்கு ஒரு போக்கையும் சாராத நாடுகளுக்கு ஒரு போக்கையும் அவை கைக்கொள்கின்றன. 

இதுவரையான அனுபவங்களின் படி பொருளாதாரத்தடையினால் ஆட்சியாளர்கள் பாதிக்கப்படவில்லை. சில நாடுகளில் அது தற்காலிக ஆட்சி மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது. கியூபா, ஈரான் போன்ற நாடுகளில் அதையும் சாதிக்க முடியவில்லை. இது மக்களை இம்சைப்படுத்தி அரசியல் இலக்கை அடையும் அதர்ம அரசியல். அதுவும் பலவீனமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்ட வறிய நாடுகளுக்கே இது பெரும் அழுத்தமாக அமையமுடியும். ரஷ்யா போன்ற வல்லரசு நாடொன்றிற்கு அல்லது பல போர்களைச் சந்தித்த, புரட்சிகளை சாதித்த ரஷ்யமக்களை இது ஆட்டம் காணச்செய்யப் போவதில்லை. அவர்களின் ரஷ்ய தேசிய உணர்வை மேற்குடன் சிறிதளவும் ஒப்பிடமுடியாது. 

நிதிஉதவி, இராணுவ தளவாட உற்பத்திக்கான உள்ளீடுகள், தொழில்நுட்பம் போன்றவற்றை ரஷ்யா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதை தடுப்பது கடினம். மறுபக்கத்தில் இந்த நடவடிக்கயானது ரஷ்யமக்களை வெறுப்புக்குள்ளாக்குவதாகவும், சீனாவின் பக்கம் சாயவைப்பதாகவுமே இருக்கப்போகிறது. 

இந்த பொருளாதாரத்தடைக்கு புட்டின் கொடுத்திருக்கின்ற பதிலடிதான் உக்ரைனில் ரஷ்யர்கள் வாழ்கின்ற இருமாகாணங்களான டொனெற்ஸ்க்  (DONEZK ), லுஹான்ஸ்க் (LUHANSK)   இரண்டையும் மக்கள் குடியரசுகளாக பிரகடனம் செய்திருப்பது. ரஷ்யா பாராளுமன்றமான டுமா (DUMA) தனிநாட்டுப் பிரகடனத்தை அங்கீகரித்துள்ளது. இதை அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அவர்களின் புலனாய்வுத்துறையோ கணிப்பிட்டிருக்கவில்லை. இதன் பின்னணியில் உள்ள காட்சிகள் எவை? 

 1.இதன்மூலம் ரஷ்யா தனது உக்ரைன் உடனான எல்லையை இந்த மாகாணங்களின் மூலம் பாதுகாத்திருக்கிறது. ஏற்கனவே களத்தில் இருந்த ரஷ்யப் படைகள் புதிய நாடுகளை பாதுகாக்க சமாதானப்படைகளாக நகர்த்தப்படுகின்றன.   

 2. இந்த இரு மாகாணங்களிலும் கணிசமான பரப்பளவையே புட்டினின் வார்த்தைகளில் கூறுவதானால் “மக்கள் படை” கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் ஜேர்மனி, பிரான்ஸ் மத்தியஸ்த்தத்தில் உருவான மின்ஸ்க் ((MINSK) ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவருவது புட்டினின் திட்டமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. 

3. உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றி அங்கு தமக்கு சாதகமான ரஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தி விட்டு படைகளை மீளப்பெறலும் இத் தாக்குதல்களின் ஒரு தந்திரோபாயமாகவும் அமையலாம்.  

இந்த மூன்று காய்நகர்வுகள் ஊடாக ரஷ்யாவின் பாதுகாப்பே புட்டினின் முன்னுரிமையாக இருப்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். ஆகவே ரஷ்யா தொடுத்திருப்பது ஒரு தற்காப்பு யுத்தம். கருங்கடலையும், சூழ உள்ள நாடுகளையும் நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என இணைத்து ரஷ்யாவை மேற்குலகம் சுற்றிவளைத்து தனிமைப்படுத்துவதற்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை. 

உக்ரைன் மக்கள் மேற்கின் வார்த்தையாடல்களில் நம்பிக்கை இழந்து தமது பாதுகாப்பைத்தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். உக்ரைன் தலைவர் அழாக்குறையாக எல்லாம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக மக்களை நம்பிக்கையூட்ட முயற்சிக்கிறார். முக்கிய இராணுவ மையங்களை ரஷ்யா தொடர்ந்து தகர்த்து வருகிறது. சில தாக்குதல்கள் குடியிருப்புக்களையும் பாதித்துள்ளது. 

உக்ரைன் மூன்று திசைகளில் தரை மார்க்மாக ரஷ்யாவினால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் உள்ளது. மறுபக்கத்தில் இருப்பது கருங்கடல்  மட்டுமே. இங்கும் ரஷ்ய கடற்படையும், நீர்மூழ்கிகளும், விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் இல்லாமல் இல்லை. ஆக, உக்ரைன் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பியத் தலைவர்களினதும், நேட்டோ தலைவரதும் கருத்துக்கள் முன்னர் போன்று வலுவாகவும், சத்தமாகவும் இல்லை. வழுவழுத்த, தழுதழுத்த குரலில் வருகிறது. உக்ரைன் நேட்டோ அங்கத்துவ நாடு அல்ல என்பதால் நேட்டோ படைகளை உக்ரைனில் இறக்முடியாது. இந்த வாய்ப்பை பபயன்படுத்துவதில் புட்டின் முந்திக் கொண்டுள்ளார். நாங்கள் உக்ரைன் பக்கம் இருக்கிறோம் என்று கூறிய மேற்குலகம் இன்று அனுதாபத்தை மட்டும் தெரிவித்துக்கொண்டு பார்வையாளராக உள்ளது. ரஷ்யப் படை நேட்டோ நாடு ஒன்றைத் தாக்கும் வரை இந்த பார்வையாளர் நிலை தொடரும். 

வடக்கே பெலாருஸில் இருந்தும்மற்றும் கிழக்கு, தெற்கு திசைகளில் அங்கீகரிக்கப்பட்ட  புதிய நாடுகளில் இருந்தும் ரஷ்யப் படைகள் உக்ரைன் நோக்கி நகர்கின்றன. இந்த நாடுகளை ரஷ்யா சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்திருப்பதால் அதை உக்ரைன் மீதான இராணுவ ஆக்கிரமிப்பாக கொள்ள முடியாது என்கிறது ரஷ்யா. அவை உக்ரைன் அல்ல இருவேறு மக்கள் குடியரசுகள். ரஷ்ய எல்லையில் உள்ள இரு வேறு புதிய நாடுகள் என்றாகிறது கதை 

 இதே பாணியில் சீன வெயுறவுத் துறை பேச்சாளர்  இதை உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு என்பது “தவறான மொழிபெயர்ப்பு” என்று ரஷ்யாவுடன் உடன்படுகிறார். இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ தயார் என்பதை சீனா சொல்லாமல் சொல்லி இருக்கிறது. 

அதேவேளை இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு சீனா கோரியுள்ளது. சீனாவைப் பொறுத்தமட்டில் நாடுகளின் உள்நாட்டு அரசியவில் நேரடியாக அது தலையிடுவதில்லை. அது அந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரம் என்பது அதன் நிலைப்பாடு. எனவே, உக்ரைனை ரஷ்யா ஆக்கிரத்து வைத்திருப்பதை சீனா நீண்ட காலத்திற்கு அங்கரிக்குமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

2008இல் புடாபெஸ்ற் இல் இடம்பெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன், ஜோர்ஜியா என்பன நேட்டோவில் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று தனக்கு அடிக்க ஆரம்பித்த காய்ச்சலுக்கு இன்று சிகிச்சை அளிக்கிறது ரஷ்யா. சிதைந்த சோவியத் யூனியனை ஒன்றிணைக்கும் வகையில் புட்டின் ரஷ்ய யூனியன் விரிவாக்க முயற்சியில் இறங்கியுள்ளார். ரஷ்ய மொழி பேசுபவர்கள்  எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் ரஷ்ய இனத்தவர் என்பது புட்டினின் கோட்பாடு.  

உக்ரைனை நேட்டோவில் இணைப்பது மேற்குலகின் முதற்கட்ட நகர்வாக இருக்கும். இதன் இரண்டாம் கட்டம் உக்ரைனை உள்ளிழுத்து ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கமாக அமையும். ஆக, அன்றைய சோவியத்யூனியனின் எல்லை ரஷ்யாவுக்குள் சுருங்கி இருக்கின்ற நிலையில், மேற்கு ஐரோப்பா தனது எல்லையை ரஷ்யாவை நோக்கி விரிவாக்குகிறது. 

உலகெங்கும் போர்முரசு கொட்டி அகதிகளை உற்பத்தி செய்கின்ற ஒரு வல்லரசாக அமெரிக்கா உள்ளது. ஆனால் இந்த தாக்கத்தை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக அனுபவிக்கின்ற நாடுகளாக மேற்கு ஐரோப்பிய நாடுகளே அதிகம் உள்ளன. 

ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா நடாத்திய யுத்தங்களால் பெரும்பாலான அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் அடைய வேண்டி ஏற்பட்டது. இதே நிலைதான் யூகோசிலாவிய யுத்தத்தின் போதும் கற்றுக்கொண்ட பாடம். உக்ரைன் நிலையிலும் இதுவே நடக்கப்போகிறது. அமெரிக்காவோ யுத்தத்திற்கு காரணமாக இருக்க ஐரோப்பா அகதிகளை சுமக்கவேண்டி உள்ளது. 

விளாடிமிர் புட்டினின் கடும்போக்கும், வார்த்தைகளும்…!

ரஷ்யத் தலைவர் புட்டின் திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை தனது இலக்கை அடையும்வரை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. புட்டினை தடுத்து நிறுத்துவதென்றால் ஏதாவதொரு எதிர்பாராத அதிசயம் நடந்தாக வேண்டும். இல்லையேல் சண்டை தொடரும். ஆரம்பத்தில் இந்த இராணுவ நடவடிக்கையை படையெடுப்பு, அத்துமீறல் ஆக்கிரமிப்பு என்று வர்ணித்த மேற்கு ஊடகங்கள் தற்போது அங்கு நடப்பது  யுத்தம் என்று பேசுகின்றன. 

உக்ரைன் ஆட்சியாளர்களை பாஷிஸ்ட்டுக்கள் என்றும் நாஷிகள் என்றும் கடுமையான வார்த்தைகளால் புட்டின் குறிப்பிட்டிருப்பது சர்வதேசத்தின் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. “ஒருபோதும் கண்டிராத மிகப்பெரும் அழிவைச்சந்திக்க வேண்டி வரும் என்றும், அனைத்து முடிவகளும் எடுக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன” என்று குறிப்பிட்டதையும் மேற்குலக ஊடகங்களும், ஆய்வாளர்களும் அணுவாயுத அச்சுறுத்தல் என்று மொழிபெயர்க்கின்றனர். ஆனால் சில சுதந்திர ஊடகவியலாளர்கள் களத்தில் இருந்து தரும் செய்திகள் வேறுபட்டதாக உள்ளது. உக்ரைன் இராணுவ இலக்குகளே தேர்ந்தெடுத்து தாக்கப்படுவதாகவும், தலைநகர் கிவ்வைத் தவிர்த்த பாரிய நகரங்களில் கூட  அமைதி நிலவுவதாகவும், ஆனால் மக்கள் அமைதியற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர். 

கீவ் ரஷ்யப் படைகளின் கீழ் வீழும் பட்சத்தில் உக்ரைன் ஆட்சியாளர்கள் எல்லை நாடுகளில் தஞ்சம் அடையலாம் என்றும் அல்லது ரஷ்யப்படைகளால் சிறைப்பிடிக்கபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சோவியத்யூனியன் சிதறியபோது கோர்பச்சேவ், ஜெல்சிங்  காலத்தில் புதிய நாடுகள் நேட்டோவில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்ற வாய்மூல வாக்குறுதி நேட்டோவினால் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனை நேட்டோ தொடர்ச்சியாகவும், படிப்படியாகவும் மீற முயற்சிக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தான் எழுத்துமூலமான உறுதிமொழியை உக்ரைனிடம் ரஷ்யா கோருகிறது. 

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகள் பலவும் பாரிய சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடியில் உள்ளன. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் மேற்குலகம் உதவி என்ற போர்வையில் ரஷ்யவுக்கு எதிராக இந்த நாடுகளை நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம் ஊடாக தம்பக்கம் இழுக்க வலைவிரிக்கிறது. மறுபக்கத்தில் இந்த நாடுகள் பொருளாதார உதவிக்காகவும், இராணுவ உதவிக்காகவும், ரஷ்யாவில் இருந்து நம்மை பாதுகாக்கவும் மேற்கில் தங்கியிருக்க வேண்டி உள்ளது. 2017இல் இருந்து உக்ரைன் பிரஷைகளுக்கான விசா பெறும் நடைமுறையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.  

எல்லை நாடுகளின் நடுநிலைமை….!

மேற்கு, கிழக்கு ஜேர்மனிகள் பேர்ளின் சுவரைத் தகர்த்து ஒன்றிணைந்தபோது ஜேர்மனி நேட்டோவில் சேராது இராணுவ நடுநிலையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கொர்பச்சேவ் விரும்பினார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. 

2008இல் உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று கூறிய முன்னாள் ஜேர்மன் தலைவி ஆஞ்சலா மேர்கள், உக்ரைன் நேட்டோவில் சேருவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இல்லையேல் உக்ரைனின் நிலை இன்று வேறாக இருக்கும். 

பின்லாந்து நேட்டோவில் இணையாது ஒரு இராணுவ நடுநிலையைப்பேணிவருகிறது. இது ஒரு வகையில் அணிசேரா இராணுவ சமநிலைப்படுத்தல். இது போன்று ரஷ்ய -ஐரோப்பிய எல்லை நாடுகள் இருக்குமானால் இப் பிராந்தியத்தில் இலகுவில் அமைதியை ஏற்படுத்த முடியும். இல்லையேல் கொதி நிலைக்கு ரஷ்யா மட்டுமல்ல மேற்குலகமும் நேட்டோவும் பொறுப்பு. 

ஜோர்ஜியாவும் நேட்டோவில் சேரவிரும்புகிறது. அதற்கும் ஒரு பாடமாகவே புட்டின் இன்று உக்ரைனில் நடாத்தும் “வகுப்பு” அமைகிறது. 

ரஷ்ய மக்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் புட்டினின் வெளிநாட்டுக்கொள்கையிலும், விட்டுக்கொடுக்காத, ரஷ்யாவின் பாதுகாவலன் என்ற போக்கையும் ஆதரிக்கின்றனர். இவர்கள் மனித உரிமைகள், ஜனநாயகம் என்ற விடயங்களில் புட்டினுடன் முரண்பட்டாலும் ரஷ்யாவின் பாதுகாப்பு என்று வரும்போது அதுவே முதன்மை பெறுகிறது. 

ரஷ்யப்படைகளால் உக்ரைன் கைப்பற்றப்பட்டால், ரஷ்யா குறைந்தது 4000 இராணுவத்தை இழக்க வேண்டியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

நேட்டோவும், அமெரிக்காவும் உக்ரைன் எல்லை நாடுகளில் குவிந்திருப்பதால் அங்கிருந்து உக்ரைன் படைகளுக்கு கட்டளையிட்டு வழிநடத்துகின்றனர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சிலவேளைகளில் தலைநகர் கீவ் இல் நேட்டோ, அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் மாறுவேடத்தில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

புட்டின் நேட்டோ நாடொன்றில் தப்பித்தவறியேனும் தாக்குதல் நடாத்தவரை, அவர் நினைத்ததை சாதிக்காது தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது.