திறன் நோக்கு (நூல் மதிப்பீடு)

திறன் நோக்கு (நூல் மதிப்பீடு)

‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ – நோக்கு 04

​​— செங்கதிரோன் —

கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பெற்ற ‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ எனும் பெருந்தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் இப்பத்தித்தொடரை நான் எழுதத் தொடங்கி மூன்று பத்திகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவற்றைப் படித்த எழுத்தாள நண்பர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இத்தொகுப்பு நூலின் வரவு பாராட்டக்கூடியதெனினும் இத்தொகுப்பு நூலின் தொகுப்பு நடைமுறையிலுள்ள குறைபாடுகளையும் முறைகேடுகளையும் குறிப்பிட்டு அவற்றையும் இப்பத்தித் தொடரில் பதிவு செய்ய வேண்டுமென்று என்னிடம் கோரியுள்ளார்கள். இது குறித்து வெளிவந்த பல முகநூல் பதிவுகளின் இணைப்புகளையும் (link) எனக்கு அனுப்பி வைத்தனர். 

இம்முகநூல் பதிவுகளில் இந்நூல் குறித்த விமர்சனங்களும் அதற்கு எதிர்வினையாற்றியுள்ள இத்தொகுப்பு நூலின் தொகுப்பாளர் எழுத்தாளர் உமாவரதராஜன், கிழக்கு மாகாணப்பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்குமாகாணம் திரு. நவநீதன் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்த நூறு சிறுகதைத் தொகுப்பிற்கு இணைப்பாளராகவும் தெரிவுக்குழுவில் ஒருவராகவும் இருந்ததாகத் தன்னை முகநூலில் பிரகடனம் செய்துள்ள த.மலர்ச்செல்வன் (இத்தொகுப்பு நூலிலுள்ள கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளரின் வெளியீட்டுரையிலோ (பக்கம் I–II) ‘கிளைகளும் பூக்களும்’ எனும் தலைப்பில் இந்நூலின் தொகுப்பாளர் உமா வரதராஜன் எழுதியுள்ள குறிப்புகளிலோ (பக்கம் III –VII) மலர்ச்செல்வன் பெயர் குறித்து எந்த இடத்திலும் சொல்லப்படவுமில்லை.) மற்றும் பணிப்பாளர் நவநீதன் ஆகியோரது எதிர்வினைக் குறிப்புகளும் உள்ளன. இவர்களது எதிர்வினைக்குறிப்புகள் மிகவும் அநாகரிகமாகவும் ஆரோக்கியமான விமர்சனம் செய்தவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாகவும் சேறடிப்புகளாகவுமே உள்ளன. அவற்றை இங்கே பதிவிடுதலும் அவற்றிற்கு அவர்களின் பாணியிலேயே பதிலிடுதலும் இப்பத்தித் தொடரை அசிங்கப்படுத்திவிடும் என்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொண்டு, வாசக அன்பர்களின் வேண்டுகோளைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இப்பத்தித் தொடரின் ஆசிரியரால் பணிப்பாளர் நவநீதன் அவர்களுக்கு அனுப்பப்பெற்ற கடிதம் இங்கு பதிவிடப்படுகிறது.

செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்,

607, பார் வீதி, மட்டக்களப்பு.

தொலைபேசி. 0771900614

05.12.2021

திரு.ச. நவநீதன் அவர்கள்,

மாகாணப் பணிப்பாளர்,

பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,

கிழக்கு மாகாணம்.

‘கிழக்கின் 100 சிறுகதைகள்’

‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ நூலின் அறிமுக விழா 2021.11.27 அன்று மட்டக்களப்பில் (டேபா மண்டபம், மண்முனை வடக்குப் பிரதேச செயலகம்) நடைபெற்றபோது நானும் அழைக்கப்பட்டவர்களில் ஒருவனாகக் கலந்து கொண்டேன்.

நிகழ்ச்சி நன்றாக இருந்தது. கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆற்றப்பட்ட உரைகள்- நேர முகாமைத்துவம் எல்லாமே சிறப்பு.பாராட்டுக்கள்.

காத்திரமான – அவசியமான முயற்சி. ‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ நூல் வெளியீடு தங்கள் பதவிக்காலத்தில் என்றும் பேசப்படும் ஒரு சாதனைதான். அதற்கும் பாராட்டுக்கள்.

இப்படியான விடயங்களை அதுவும் அரச செலவில் முன்னெடுக்கும்போது, ‘ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையெழுவதும் – விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் வழமைதான். அது இயல்பானதும் கூட. உலகில் விமர்சனத்துக்குட்படாத விடயங்களுமில்லை. மனிதர்களுமில்லை. எவ்வளவுதான் கவனமெடுத்துச் செய்தாலும்கூட எல்லா எழுத்தாளர்களும் திருப்திப்படுத்த முடியாதென்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

எனினும், எந்தக் காரியத்தையும் செய்யும் போதும் ‘ செய்வன திருந்தச் செய்’ என்ற பழமொழியுண்டு. மேலும், அன்றைய கூட்டத்தில் தங்கள் தலைமையுரையில் விமர்சனங்கள் இருப்பின் தங்களிடம் தெரிவிக்கும்படி கூறியிருந்ததால் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். உண்மையில் இது விமர்சனம் அல்ல. இந்த நல்ல விடயத்தை –முயற்சியை விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. அது முறையுமல்ல. எனது அவதானங்கள் சிலவற்றைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதே எனது நோக்கம். யார் மீதும் குற்றம்சாட்டும் அல்லது குறைகூறும் எண்ணம் எள்ளளவுமில்லை. எதிர்காலத்தில் இப்படியான விடயங்களை முன்னெடுக்கும்போது இதனைவிடவும் இன்னும் நேர்த்தியாகச் செய்யாலாமென்ற நல்லெண்ணத்தில் என் மனதில்பட்ட அவதானங்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கின்றேன்.

முதலில் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றும் வாழ்வியல் தொடர்புடைய (பாயோடு ஒட்டி வேரோடியவர்கள்) எழுத்தாளர்களின் சிறுகதைகளா?

அல்லது 

கிழக்கு மாகாணத்தைக் கதைக்களமாகக் கொண்டு கிழக்குமாகாண மக்கள் சமூகத்தின் சமூக- பொருளாதார –அரசியல் மற்றும் வாழ்வாதார –வாழ்வியல் பிரச்சினைகளைக் கலைப் பெறுமானத்துடன் வெளிப்படுத்துகின்ற சிறுகதைகளா?

உண்மையில் என்பார்வையில் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்று அடையாளப்படுத்தும்போது கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் மட்டுமல்லாமல் அச்சிறுகதைகள் ஏதோவொருவகையில் கிழக்கைக் களமாகக்கொண்டவையாகவும் கிழக்குமக்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டவைகளாகவும் இருக்கவேண்டுமென்ற அளவுகோலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் ‘கிழக்கின்’ அடையாளம் ஐதாக்கப்படாமல் அர்த்தமுள்ளதாகப் பேணப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூலின் சமூகவியல் பரிமாணமும் பெறுமானமும் உச்சமாக இருந்திருக்கும். 

இத்தொகுப்பிலுள்ள சில சிறுகதைகளின் களங்கள் வடமாகாணமாகவும் கொழும்பாகவும் புலம்பெயர் தேசமாகவும் இருக்கின்றன. இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். 

கதைக்களம் தெளிவில்லாமல் பொதுவாகக் கூறப்படும் சிறுகதைகளைப் பெரும்பாலும் தவிர்த்து கிழக்கு மாகாணத்தைக் கதைக்களமாகக் கொண்ட மண்வாசனை வீசும் சிறுகதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்ற மகுடத்திற்குப் பொருத்தமானதாக இருந்திருக்கும். கிழக்கின் சிறுகதைகள் என்ற வார்த்தைப் பிரயோகம் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுடன் இணைத்து அந்த மண்ணையும்தானே குறிக்கும். 

இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூல் விடயத்தை எழுத்தாளர்களிடையே பகிரங்கப்படுத்தியதிலும் மற்றும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் உள்ள வெளிப்படைத் தன்மையிலும் ஒரு ‘போதாமை’ நிலவியதாக அல்லது இச்செயற்பாடு வினைத்திறனுடன் கையாளப்படவில்லையென இந்நூல் வெளிவந்தபின்னர் பலராலும் உணரப்படுகிறது. 

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவந்த/வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாளர்களுடனோ, சிறுகதையாளர்களுடனோ திருப்தியான  தொடர்பாடல்கள்- கலந்துரையாடல்கள் நிகழ்ந்ததாக இல்லை. குறைந்தபட்சம்,  ‘கொரோனா’ காலம் என்பதால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிப் பிரதேச செயலக மட்டத்தில் கலாசார உத்தியோகத்தர்கள் மூலமாக சிறுகதையாளர்கள் – சஞ்சிகையாளர்கள்- இலக்கியச் செயற்பாட்டாளர்களை (இவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்) ஓரிடத்தில் கூட்டிக் கலந்துரையாடிச் சிறுகதைகளைச் சேகரித்திருக்கலாம். பின் அவற்றை முறையாகச்  சலித்தெடுத்து அவற்றுள் சிறந்தவைகள் என நூறு கதைகளைத் தேர்வு செய்திருக்கலாம். 

கிழக்கின் 100 (சிறந்த) சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு ‘சீரியஸ்’ ஆன பணிக்கு எத்துணைத்தேடலும் -தொடர்பாடலும் – கலந்துரையாடலும் தேவையென்பது தாங்கள் அறியாததொன்றல்ல. பத்திரிகைகளில் விளம்பரம் செய்தோம். கலாசார உத்தியோகத்தர்கள் மூலம் தொடர்பு கொண்டோம் என்று அதிகாரிகள் கூறுவது ஒப்புக்காகக் கூறப்படும் வழமையான (ROUTINE) ‘சிவப்பு நாடா’ (RED TAPE)ப் பதில்களாகும். 

சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் மட்டுமே வெளிவந்து எந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலிலும் இடம்பெறாத அல்லது சிறுகதையாளர்களினால் புதிதாக எழுதப்பட்ட (எதிலும் பிரசுரமாகாத) சிறுகதைகளை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏற்கெனவே வெளிவந்த சிறுகதைத்தொகுப்பு நூல்களில் இடம்பெற்ற சிறுகதைகளைத் தவிர்த்திருக்கலாம். அமரத்துவம் அடைந்த எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது அத்தகையோரின் சிறுகதைகள் வெளிவந்த சஞ்சிகை மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட அன்னாரது எழுத்தாள நண்பர்களிடமிருந்தோ இத்தகைய சிறுகதைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டிருந்தால் அத்தகைய அமரத்துவம் அடைந்த எழுத்தாளர்கள் விடயத்தில் மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கலாம்.

சில முக்கிய எழுத்தாளர்களிடமிருந்து அவர்களது சிறுகதையொன்றினைக் (ஏற்கெனவே வெளிவந்த எந்தச் சிறுகதைத் தொகுப்பு நூல்களிலும் இடம் பெறாத) கேட்டுப் பெற்றுக் கூடத் தொகுப்பில் (அது தரமானதாயின்) உள்ளடக்கியிருக்க முடியும். பல முக்கியமான எழுத்தாளர்கள்கூட இது விடயத்தில் முறையாகத் தொடர்புகொள்ளப்படவில்லையென்றே பரவலாகப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களுடனான தொடர்பாடல் அல்லது கலந்துரையாடல் வினைத்திறனுடன் கையாளப்படவில்லையென்பது புலனாகிறது.

‘ இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்’ 

என்று திருக்குறள் கூறும் வழிமுறை இங்கு பின்பற்றப்படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முடிவுரை

ϖ​ ஒட்டுமொத்தமாகக் பார்க்கும்போது ‘ கிழக்கில் 100 சிறுகதைகள்” என்ற பெரும் தொகுப்பு நூலின் வரவும் வெளியீடும் ஒரு நன்முயற்சி மட்டுமல்ல ஒரு சாதனையும் கூட. அதில் இரு கருக்துக்களுக்கு இடமில்லை.

ϖ​ வெளிவந்துள்ள இத்தொகுப்பு நூலைப் பொறுத்தவரை கிழக்கின் 100 (சிறந்த) சிறுகதைகள் என்பதைவிடக் கிழக்கின் 100 எழுத்தாளர்களின் சிறுகதைகள் என்ற தலைப்பே பொருத்தமானதாகப் படுகிறது. ஏனெனில் இத்தொகுப்பில் வெளியாகியுள்ள சிறுகதைகளை விடவும் சிறந்த சிறுகதைகள் பல வெளியில் விடப்பட்டுள்ளன. முதற்கட்ட முயற்சி என்பதால் இக்குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.

சிறுகதைகளைச் சேகரித்தலும், தேர்வு செய்தலும், பகிரங்கப்படுத்தல்- தொடர்பாடல்- கலந்துரையாடல் என்பனவும் வினைத்திறனுடன் மேற்கொள்ளப்படவில்லையென்பது மட்டுமல்ல, இச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களிடம் ‘வித்துவச் செருக்கும்’ அதிகாரத் தோரணையும் தன்முனையும் வெளிப்பட்ட அளவுக்கு உண்மையும் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும், பக்கச் சார்பின்னையும், துறைசார் வினைத்திறனும் வெளிப்படவில்லையென்பதையும் கூறித்தான் ஆக வேண்டியுள்ளது. இவையெல்லாவற்றையும் மேவி இப் பெருந்தொகுப்பு நூல் அதுவும் அரசசெலவில் வெளிவந்திருப்பது ஒரு ‘பிளஸ்(10) பொயின்ற்’ தான்.

இக்கடிதத்திற்கான பதிலைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதில் கண்ட பின்பு,மேலும் தங்கள் கவனத்திற்காகவும் எதிர்கால நடவடிக்கைகளுக்காவும் ‘கிழக்கின் 100 கதைகள்’ நூலில் விடுபட்டதும் எனது மனதில் பட்டதுமான எழுத்தாளர்கள் சிலரின் பெயர்ப் பட்டியலையும், முடிந்தால் சிறந்த சிறுகதைகள் எனக் கருதப்படும் சில சிறுகதைகளின் பிரதிகளையும் தங்களுக்கு அனுப்பிவைப்பேன்.

நன்றி வணக்கம்.

தங்கள் உண்மையுள்ள

(செங்கதிரோன்)

த.கோபாலகிருஸ்ணன்

senkathirgopalShgmail.com

0771900614

(குறிப்பு)

கூடுமானவரை கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் (அமரத்துவம் அடைந்தவர்கள் உட்பட) சிறுகதைகளைச் சேகரித்து அவற்றில் நல்ல சிறுகதைகளைச் சலித்தெடுத்து அவ்வாறு சலித்தெடுத்த நல்ல சிறுகதைகளுள் சிறந்தவை நூறைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தொகுப்பில் சேர்த்த பின்னர் மிகுதிச் சிறுகதைகளையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் பெயர்களையும் பட்டியலாகப் பின்னிணைப்பாகக் கொடுத்திருந்தால் இத்தொகுப்பு நூல் இன்னும் நேர்த்தியாக அமைந்திருக்கும். இது எதிர்காலத்தில் உதவக் கூடிய ஓர் ஆவணமாகவும் பயன்பட்டிருக்கும்.

இனி இத்தொகுப்பு நூலிலுள்ள நான்காவது சிறுகதைக்குச் செல்லலாம்

====================

04. நவம் (03.10.1928 – 12.04.2017) எழுதிய ‘நந்தாவதி’ (கல்கி – 1960) பக்கம் 41-50

மட்டக்களப்பு ஆரையம்பதியில் பிறந்த – சீனித்தம்பி ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் அமரர் நவம் எழுதிய சிறுகதை

‘இரவு சரியாக எட்டுமணி

கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது ‘பிளாட்பார’த்தை அநாசயமாக உதறி எறிந்துவிட்டு ‘ஜம்’ மென்று புகையைக் கக்கிக் கொண்டு புறப்பட்டது, மட்டக்களப்பு மெயில் வண்டி’ என்று கதை ஆரம்பிக்கிறது.

இக்கதையில் வரும் கதைசொல்லி இந்தவண்டியில் இரண்டாம்வகுப்பு ‘ஸ்லிப்பிங்காரி’ல் படுக்கை எண் பதினான்கில் பயணம் செய்கிறார். இப் படுக்கைக்குச் சரி நேராக மேலேயிருந்த பதின்மூன்றாம் எண் படுக்கைக்குரிய பயணி – ஒரு பிக்கு பொலநறுவைக்குப் போவதற்காக றாகமையில் வைத்து வண்டியில் ஏறுகிறார்.

கதையில் குறிப்பிடப்படாவிட்டாலும் கூட, இக்கதை 1958ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழ் – சிங்கள இனக்கலவரத்தின் பின்னணியில் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகன் புரிந்து கொள்ள முடியும்.

புகைவண்டிக்குள்ளே பிக்குவிற்கும் கதைசொல்லிக்கும் இடையே நடைபெறும் சம்பாஷணையால் கதை நகர்த்தப்படுகிறது. சம்பாஷணையின் முக்கிய கட்டம் இது.

‘தம்பீ இப்படி ஏகமாக நீங்கள் சிங்களவர்கள் மீது பழிசுமத்துவது ஒரு தலைப்பட்சமானது. உதாரணமாகக் கலவரகால நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள்’.

‘இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் சிங்களவர்களுக்கு என்று நீங்காத, நீக்கவொண்ணாத கறை………… வடு’

‘அப்படிச் சொல்லிவிட்டுத் தமிழர்கள் ஒதுங்கிக் கொள்வதால் உண்மை மறைக்கப்பட்டுவிடுமா?’

‘உண்மையைச் சொல்லுகிறேன், கசப்பாக இருக்கிறது என்பதற்காக உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து விட முடியுமா?’

‘அப்படியென்றால்’

‘சிங்களவர்கள் மிருகங்கள்தான், ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால் தமிழர்களும்’

கதைசொல்லி வாய்மூடி மௌனியாகும் அளவுக்குப் பிக்கு பேசிக்கொண்டு போனார். வண்டியும் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

கதை சட்டென்று திசைதிரும்புகிறது.

மட்டக்களப்பிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களைத்தாண்டி மலைநாட்டுப்பக்கம் ஆசிரியத்தொழில் புரியவரும் தமிழ் இளைஞன் அருணாசலம் (இக்கதையின் நாயகன்). சிவனொளிபாத மலைச்சாரலில் கொட்டிய கோர மழையின் காரணமாக அம்மலையில் பிறந்து பொங்கிப்பிரவாகிக்கின்ற ‘களு கங்கை’ நதியை ஏனைய பயணிகளுடன் தோணியில் கடக்கும் பயணத்தில் தோணி கவிழ்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறான். அவனை நந்தாவதி என்னும் சிங்களக் குமரி காப்பாற்றுகிறாள்.

நந்தாவதி மலைநாட்டில் ‘எலிபுளுவ’ ரப்பர் தோட்டத்தில் வேலைசெய்யுமொரு கூலித் தொழிலாளி.

அருணாசலம் ‘திமியாவை’யிலுள்ள அரசினர் சிங்களப் பாடசாலையின் தமிழ் ‘செக்க்ஷ’னுக்கு ஆசிரியனாக வந்து ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன.

அருணாசலத்திற்கும் நந்தாவிற்குமிடையில் காதல் மலர்கிறது. இதனைக் கதாசிரியர் காட்டுவதற்குக் கையாளும் மொழிநடை அலாதியானது. அங்கதமானதும்கூட.

‘இத்தனை மாற்றங்களுக்கு மத்தியில், அவன் (அருணாசலம்) உள்ளத்திலும் ஒரு பெரிய மாற்றம். தன் ஒரே தங்கையும் மற்றும் அவனது தாய் தந்தையரும் இடம்பெற்றிருந்த அவனது உள்ளத்தில் நான்காவது பேர்வழியாக நந்தாவதியும் வந்து நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்’.

அருணாசலத்தின் தங்கையின் மாப்பிள்ளையும் அவனைப்போல் ஓர் ஆசிரியன்தான். அருணாசலம் மலைநாட்டிற்குப் படிப்பிக்கவந்த இந்த ஐந்தாண்டு காலநிறைவில்தான் தங்கையின் திருமணம் மட்டக்களப்பில் நடக்கிறது. மாப்பிள்ளை ‘வெலிமடை’யில் வேலை பார்க்கிறான். திருமணம் முடிந்த அடுத்தமாதமே மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு போய்விட்டான்.

இனி எந்த நிமிஷத்திலும் தன் நெஞ்சைக் கவர்ந்த நந்தாவதியை அருணாசலம் முறைப்படி தனக்குகுரியவளாக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

இக்கட்டத்தில்தான் இலங்கையில் இனக்கலவரத்தீ (1958 கலவரம்) பற்றிக் கொண்டது. இத்தருணத்தில் அருணாசலத்திற்கு ஊரிலிருந்து அவசரத்தந்தி வருகிறது தாய்க்குச்சுகமில்லையென.

நந்தாவதி சொல்லிக்கொடுத்த ஆலோசனைப்படி கலவரகாலத்தில் கொலைவெறியர்களிடம் தப்பி ஓர் ஆபத்துமின்றி ஊர் போய்ச்சேருகிறான் அருணாசலம்.

ஊர் போய்ச்சேர்ந்த அருணாசலம் ரத்தவெறி பிடித்த ராட்ஸசனாக மாறிவிட்டான். மட்டக்களப்பு – பதுளைச்சாலையில் கரடியனாற்றுக்காட்டின் மத்தியில் பல குண்டர்களைத் துணை சேர்த்துக்கொண்டு மனித வேட்டைக்காகப் பதுங்கியிருந்தபோது, பதுளைப் பக்கமிருந்து இருளைக் கிழித்தபடி மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த காரைச், சாலையில் குறுக்கே கட்டையைப் போட்டுக் குண்டர்கள் மறித்து நிறுத்திக் காருக்குள்ளேயிருப்பவர்கள் சிங்களவர்கள் எனச் சீழ்க்கையடித்துச் செய்தி சொன்னதும் அடுத்த கணம் ‘டுமீல் டுமீல்’ என்று அருணாசலத்தின் கையிலிருந்த துப்பாக்கி முழங்கி ஓய்ந்தது. காரினுள்ளே ஒரு கிழவர், ஒரு பெண், டிரைவர் – மூவரும் இரத்த வெள்ளத்தில் நீச்சலடித்தார்கள்.

‘துவே! மகே ரத்ரம் துவே! நந்தா! நந்தாவத்தீ’ பழக்கப்பட்ட ஒரு கிழக்குரல் முனகியது. காதைக் கூராக்கினான் அருணாசலம்.

‘தாத்தே! மகே தாத்தே! தமிஸ தமிஸ’ என்று குரல் கொடுத்தது ஓர் இனிய குரல்.  

அந்தக் குரலைக்கேட்ட அருணாசலத்தின் உரோமங்கள் குத்திட்டு நின்றன. சருமத்தைக் கிழித்துக்கொண்டு வெளியே பாய்வதற்கு ஆயத்தமானது அவன் குருதி.

‘நந்தாவதி! என் அன்பே’ என்று அலறிவிட்டான் அருணாசலம். காருக்குள் அலங்கோலமாய்க் கிடந்த அவள் ரத்த மேனியை வாரிஎடுத்துத் தன் மார்பில் அணைத்துக்கொண்டான்.

இக்கதையின்படி நடந்தது இதுதான்.

இரத்தினபுரியிலிருந்து லாரிகள் மூலம் புறப்பட்டுள்ள நாசகாரக் கோஷ்டியொன்று கொழும்பு மார்க்கமாகப் பொலநறுவைக்கு வந்து அங்கு கோஷ்டியை ஜோடி சேர்த்துக்கொண்டு மட்டக்களப்புக்குள் புகுந்து அழிவுகளை மேற்கொள்ளவிருந்த சதித்திட்டத்தை ரகசியமாக அறிந்து அதனை அருணாசலத்திற்குத் தெரிவிக்க நந்தாவதியும் அவளது தந்தையும் காரில் விரைந்து மட்டக்களப்பை நோக்கி வந்துகொண்டிருக்கும்போதுதான் மட்டக்களப்பு – பதுளைச் சாலையில் கரடியனாற்றுக் காட்டின் மத்தியில் இச்சம்பவம் நிகழ்கிறது.

இச் செய்தியை மளமளவென்று அருணாசலத்திடம் கூறிமுடித்த நந்தாவதி மரணித்துவிடுகிறாள். நந்தாவதியின் தந்தை – டிரைவர் – நந்தாவதி  மூவருமே இறந்துவிடுகின்றனர்.

அருணாசலம் – நந்தாவதி கதையைப் பிக்கு சொல்லிமுடிக்கும்போது புகையிரதம் பொலநறுவையை அண்மிக்கிறது. கதைசொல்லி பிக்குவிடம், 

அன்னையைப் பார்க்க ஊருக்குச் சென்ற அருணாசலம் திடீரென்று அத்தனை கொடிய வெறியனாக எப்படி மாறினான்? 

கலவரம் உச்சநிலையை அடைந்து இருந்த அந்தப் பயங்கரவேளையில் அவன் எப்படி ஊருக்குச் சென்றான்?

என்ற கேள்விகளைக் கேட்கிறார். பிக்கு பதில் சொல்லாமல் பொலநறுவை புகையிரத நிலையத்தில் இறங்கி விருட்டென்று நடந்துவிட்டார். 

கதையோட்டத்தின்போது ஆங்காங்கே இடப்பட்ட முடிச்சுகள் அத்தனையையும் பிக்கு தவறுதலாக வண்டியில் விட்டுச் சென்ற ‘டயரி’ தான் அவிழ்க்கிறது. முத்துமுத்தான தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த ‘டயரி’ யைக் கதைசொல்லி படித்து முடிப்பதுடன் கதை முற்றுப்பெறுகிறது.

‘டயரி’யில் எழுதப்பட்டிருந்தது இதுதான்.

‘புத்தர் பிரானே! போதிமர நிழலில் மோனத் தவமியற்றும் புனிதத் தலைவனே! கருணைப் பெருங்கடலே! என்னை மன்னித்து விடு ஐயனே! அன்று நான் அத்தனை வெறியாட்டமாடி மனித ரத்தம் குடிப்பதற்கு என் ஒரே தங்கையை இழந்து தவித்ததே காரணம், அன்னையைப் பார்க்க ஓடோடிச் சென்ற என்னை வரவேற்றது, வெலிமடையிலிருந்து வந்த அந்த பயங்கரச் செய்தி, கருவுற்றிருந்த என் தங்கையைக் கண்ட துண்டமாக வெட்டி எறிந்து விட்டார்கள் சிங்களவர்கள். அதனால் ஏற்பட்ட பழி உணர்ச்சி, என் உயிரை நீரிலிருந்து மீட்டு – என் நாட்டைப் பயங்கர ஆபத்திலிருந்து காத்த என் உயிரினும் இனியவளையே பலிகொண்டு விட்டது! இதை விடத் தண்டனை எனக்கு வேண்டியதில்லை. தேவா! அன்று என் அன்னையைக் காண, அந்த உத்தமி இரகசியமாக என் காதோடு சொன்ன ஆலோசனைப்படி புனித மஞ்சளங்கி தரித்துத் தற்காலிக பிக்குவாகி ஓர் ஆபத்துமின்றி ஊர் போய்ச் சேர்ந்தேன். இன்று அதே புனித அங்கி தரித்து நிரந்தரமாகவே உன் பக்தனாகி விட்டேன். உன் நிழலில் ஒதுங்கியுள்ள என்னை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும், ஞானதேவா!  

   -அருணாசலம்.

பிக்குதான் அருணாசலம் என்று அறியநேர்கின்றபோது ‘நந்தாவதி’ எனுமிச் சிறுகதையின் உள்ளடக்கம் ‘விஸ்வரூபம்’ எடுக்கிறது. சிறந்த சிறுகதையொன்றிற்கு இதனைவிட வேறு என்ன பண்பு வேண்டும்?

இச் சிறுகதையின் சிறப்புகள் என்னவெனில்,

ϖ​ ஒரு துப்பறியும் கதைபோல ‘சன்பென்ஸ்’ உடனான திருப்புமுனைகள்.

ϖ​ கதை ஒரு நேர்கோட்டிலேயே செல்லாமல் கதையில் வரும் ‘களுகங்கை’ நதி போல வளைந்தும் நெளிந்தும் செல்கிறது. கவனமாகக் கருத்தூன்றிப் பயணிக்கவைக்கும் கதை. கதையோட்டமும் உத்தியும் கவனிப்புப் பெறுகின்றன.

ϖ​ பௌத்த சிங்களப் பேரினவாத வெறிக்கும் அதற்குப்பழிவாங்கும் குறுந்தமிழ்த்தேசியவாத மனப்போக்குக்கும் அப்பாற்பட்டது மனிதம் – மனிதாபிமானம் என்பதை உணர்த்தும் உன்னதமான உள்ளடக்கம்.

ϖ ​புனைவு மொழியும் எழுத்தாளர் நவத்திற்குக் கைகட்டிச் சேவகம் செய்திருக்கின்றது.

(உ+ம்) 

கதையில் ‘களுகங்கை’ ஆற்றில் அடிபட்டுச்சென்று மூச்சுத்திணறிக் குற்றுயிரான நிலையில் கண்விழித்த அருணாசலம் கண்ட காட்சியை கதாசிரியர் நவம் பின்வருமாறு வாசகனின் கட்புலனுக்குள் கொண்டுவருகிறார்.

கண்விழித்த  அருணாசலத்துக்கு இன்னுமொரு ‘மூச்சுத்திணறல்’ காத்திருந்தது. நீரில் மூழ்கியபோது ஏற்பட்ட மூச்சுதிணறலைவிட, இந்த மூச்சுத்திணறல் அவனை மிகவும் திக்குமுக்காட வைத்துவிட்டது.

‘சற்றுமுன், தான் கங்கையின் மடியில் கிடந்துபட்ட அவஸ்தையைப் பார்க்கச் சகிக்காமல், கங்காதேவியே நேரில் தோன்றி என்னை மீட்டுவிட்டு இதோ நிற்கிறாளா? என்ற பிரமை தோன்றியது அருணாசலத்துக்கு.

உலகத்து அழகெல்லாம் ஒன்று திரண்ட ரூபலாவண்யத்தோடு, ஒரு மோகனாங்கி அவனெதிரே சொட்டச் சொட்ட நனைந்தபடி நின்று கொண்டிருந்தாள்!

ஆற்றின் முத்துநீர் அவளின் தங்க மேனியிலிருந்து இன்னமும் உலரவில்லை. பல பளிங்கு நீர்த்திவலைகள் அவளின் சுருட் குழலில் எண்ணெய் தடவி, அவள் வனப்புக்குப் பட்டை தீட்டின. முகம் எனும் செங்கமலத்தில் சிந்திய நீர் மணிகள், அவள் கதுப்புக் கன்னங்களில் ‘கிரீம்’ தடவி ஒப்பனை செய்தன. அவள் தேகத்தில் உறவாடிய நீரோ, அவளுக்குப் பட்டு ‘வாயி’லாக அணி செய்தது.

‘கல்கி’யின் அல்லது ‘சாண்டில்யனி’ன் சரித்திர நாவலொன்றில் வரும் காட்சி வர்ணனையை ஒப்ப இது அமைந்திருக்கிறது. இந்த வர்ணனை சிறுகதையொன்றிற்கு அவசியமா? என்ற கேள்வி எழலாம். இக் கதையெழுதப்பட்ட காலத்தில் (1960) இந்நடை தவிர்க்க முடியாதது. 

மேலும், இக்கதை ‘கல்கி’ இதழுக்கு எழுதப்பட்டதால்தானோ என்னவோ புகையிரதமேடையைக் குறிக்கப் ‘பிளாட்பாரம்’ எனப்படுகிறது. இது ஈழத்துச்சிறுகதை என்பதால்; ‘பிளாட்பாரம்’ எனும் சொற்பிரயோகத்தைத் தவிர்த்து ஈழத்து மண்வாசனையைத்தரும் ‘மேடை’ எனும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் கிழக்கின் சிறுகதைகளில் மட்டுமல்ல ஈழத்துச்சிறுகதைகளில் சிறந்தவற்றுள் ஒன்றாகவும் இதனை முன்வரிசையில் வைக்கலாம்.

அடிக்குறிப்பு:

ϖ​ 1960இல் ஈழத்து எழுத்தாளர்களுக்கென்று ‘கல்கி’ இதழ் நடாத்திய சிறுகதைப்போட்டியில் ‘நந்தாவதி’ க்கே முதற்பரிசு கிடைத்தது.

ϖ ‘நந்தாவதி’ (சிறுகதைத்தொகுப்பு), பூபாளம் வெளியீடாக 01, டிசம்பர் 1994இல் வெளிவந்தது.