‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’ 

‘அமைச்சர் டக்ளஸ் மீது குற்றஞ்சாட்ட முனையும் அரசியல் நடிப்புச் சுதேசிகள்’ 

— கருணாகரன் — 

“கடலில மீனைக் கூடப் பிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை வந்திட்டு” என்று சொல்லிக் கவலைப்படுகிறார் யாழ்ப்பாணம் –மாதகலைச் சேர்ந்த மீனவர். இது தனியே மாதகல் பகுதியிலுள்ள மீனவர்களின் பிரச்சினையோ அவர்களுக்கு மாத்திரம் நேர்ந்துள்ள கதியோ அல்லது அவர்களுடைய இக்கட்டான நிலையோ மட்டுமில்லை. இப்பொழுது வடமாகாணக் கடற்பிராந்தியம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினை –நெருக்கடி நிலையாகும். 

அதாவது வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற கூட்டுப் பிரச்சினையாகும். 

இதற்குக் காரணம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் –எல்லைமீறலுடன் அவர்கள் பயன்படுத்துகின்ற மடிவலை – இழுவைப் படகுத் தொழிலாகும். ஆகவே, இதைத் தனியே எல்லை மீறல்– அத்துமீறல் என்று மட்டும் நோக்க முடியாது.  

மடிவலையைப் பயன்படுத்தி, இழுவைப்படகுகளின் மூலம் மீன்பிடியைச் செய்யும்போது மீன் வளம் மட்டுமல்ல, கடலடியிலுள்ள கண்ட மேடு உட்பட அனைத்து வளங்களும் சூறையாடப்படுகின்றன. 

இப்படித் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் குறித்த கடற்பிராந்தியம் வெறும் பாலையாகி –கட்டாந்தரையாகி விடும். 

பாலை என்பதும் கட்டாந்தரை என்பதும் நிலத்தில் மட்டும் உருவாகுவதில்லை. அது நீரிலும் உருவாகக் கூடியதே. அந்தந்தச் சூழலில் உள்ள இயல்புகளும் அடிப்படையாக உள்ளவையும் சிதைக்கப்படும்போது இந்த நிலை ஏற்படும். 

எனவேதான் முதலில் மடிவலைத் தொழிலை தடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அத்துடன், எல்லை மீறலையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை –மீனவர்கள் கேட்கின்றனர். 

இங்கே ஒரு சுவாரசியமான –துயரமான – உண்மை உள்ளது. 

இந்த அத்துமீறலை அல்லது எல்லை மீறலைச்செய்வதும் மடிவலையைப் பயன்படுத்துவதும் இந்திய மீனவர்கள் என்ற தமிழக மீனவர்களே. அதாவது ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள். 

(இந்த எல்லை மீறல் –அத்து மீறலையே கட்டுப்படுத்தாத தமிழக – இந்திய அரசுகள்தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும். நீதி வழங்கும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள்). 

அதைப்போல இலங்கை மீனவர்கள் என்பது தற்போது வடபகுதி மீனவர்கள். அதாவது தமிழர்கள். இவர்கள் தமது பாதிப்புத் தொடர்பாகக் கோரிக்கை விடுவது இலங்கை இந்திய (தமிழக) அரசுகளிடம். 

இதற்கான நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றால், இந்தக் கோரிக்கையை எதிர்காலத்தில் இலங்கையின் பிற பிராந்திய மீனவர்களும் விடுக்கக் கூடிய நிலை ஏற்படும். 

இதனால்தான் “விஞ்ஞானத்துக்கு புறம்பான, சுற்றாடலுக்கு பெரும் சேதம் விளைவிக்கும் மடி வலை தடை செய்யப்பட வேண்டும்” என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

சமத்துவக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி போன்றவற்றின் நிலைப்பாடும் இதுதான். 

ஆனால், இந்த எல்லை மீறலை, அத்துமீறலை, அடாத்தைப் பற்றித் தமிழ்ப்பரப்பில் ஏனைய கட்சிகளோ தலைவர்களோ எதுவும் பேசவில்லை. அவர்கள் பேசப்போவதுமில்லை. காரணம், இந்தியாவுடனும் தமிழக அரசோடும் அங்குள்ள தரப்புகளோடும் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதே. அதாவது இங்கே சொந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அங்கே தங்கள் நண்பர்கள் முகம் சுழித்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கிறார்கள். 

இதனால் இவ்வளவு காலமும் கள்ள மௌனம் காத்து விட்டு இப்பொழுது இந்தப் பிரச்சினையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் மீதும் திசை திருப்பி விட முயற்சிக்கின்றனர். 

இதற்குக் காரணம், தற்போது கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருப்பதேயாகும். 

இதன் மூலம் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு தாம் ஆதரவாகப் போராடுவதாகவும் இருக்கும். டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்குவதாகவும் இருக்கும். 

ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் மீதும் அவருடைய கட்சியின் மீதும் பழியைச் சுமத்தி அந்தத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது. அத்துடன் டக்களஸ் தேவானந்தாவையும் தமிழக அரசையையும் தமிழக மக்களையும் முரண்பட வைப்பதாகவும் இருக்கும். 

ஏற்கனவே தமிழ் மக்களுக்கு மாறாகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் ஈ.பி.டி.பியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் செயற்படுவதாக ஒரு மாயத்தோற்றத்தை தமிழக மக்களிடத்திலும் தமிழக அரசிடத்திலும் இந்தத் தரப்புகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்தப் பழியையும் சுமத்தி விடலாம் என்று இவை முயற்சிக்கின்றன. 

இதன்மூலம் மீனவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாகவும் இருக்கும். அதேவேளை தமது அரசியல் எதிரிக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவும் இருக்கும் என்ற இரட்டை உபாயத்தில் இவை செயற்படுகின்றன. 

இது எவ்வளவு மோசமான –கேவலமான – செயல்?இதற்குச் சில தமிழ் ஊடகங்கள் சார்பாக நடப்பது மிகத் தவறானது. 

இதைத் தமிழ்ப் பரப்பில் செயற்படும் புத்திஜீவிகள், மத அமைப்புகள், அரசியல் மற்றம் களநிலவர ஆய்வாளர்கள், பத்தியாளர்கள் எவருமே கேள்விக்குட்படுத்தவுமில்லை. எதிர்க்கவுமில்லை. 

இதை மட்டுமல்ல, தமிழக மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கும் மனச் சாட்சிக்கும் புறம்பான அத்துமீறலையும் மீன்பிடி முறைமையையும் கூட இவர்கள் கேள்வி கேட்கவில்லை. ஒரு போதும் இவர்கள் அதைக் கேட்கவும் மாட்டார்கள். 

அப்படிக் கேள்வி எழுப்பினால் அது தமிழகத்துடன் பகையைச் சம்பாதிப்பதாகி விடும் என்று சிலர் சப்பை நியாயம் கூறுகிறார்கள். சிலருக்கு இது இந்தியாவுடன் பகைப்பதாகி விடும் என்ற அச்சம். 

சிலர் எதுவுமே கூறாமல் கள்ள மௌனம் காக்கிறார்கள். 

சிலர் இது அரசாங்கங்கள் பேசித்தீர்க்க வேண்டிய விடயம் என்று சொல்லி நழுவி விடுகிறார்கள். 

ஆனால், இவர்கள்தான் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக உரத்துக் கூவுகின்றவர்கள். இவர்களைப் பார்த்து நவீன நடிப்புச் சுதேசிகள் என்கிறார் நண்பர் ஒருவர். 

இவ்வளவுக்கும் வடக்கின் மீனவர்கள் போருக்குப் பிறகு இப்பொழுதுதான் ஓரளவுக் கடலில் இறங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

போர்க்காலத்திலும் அதற்கு முன்னான அரசியல் நெருக்கடிக் காலத்திலும் அவர்களால் கடலில் இறங்கவோ மீன்பிடியில் ஈடுபடவோ முடியாதிருந்தது. கடல் வலயச் சட்டம் தொடக்கம் போர்த்தாக்கங்கள் வரையில் இதற்குக் காரணமாக இருந்தன. 

ஏறக்குறைய முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் அவர்கள் கடலோரக் கிராமங்களை விட்டே பெயர்ந்திருந்தனர். 

இப்படி முப்பது முப்பந்தைந்து ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தையே இழந்திருந்த மக்கள் மீள வந்து தங்களுடைய கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும்போது அதற்கு இடைஞ்சலாக இருப்பதென்பது எவ்வளவு தவறானதாகும்? 

முன்பு அரசாங்கத்தினது கடல் வலயத் தடைச்சட்டமும் கடற் கண்காணிப்பும் இருந்தது என்றால், இப்பொழுது இந்திய இழுவைப்படகுகளின் அட்டகாசம். 

கடல் வலயச்சட்டமும் கடலோர இடப்பெயர்வுகளும் போருக்குப் பின்னர் நீங்கி விட்டன. 

பதிலாக இன்று உருவாகியிருப்பது –புதிய நெருக்கடி. அதுவும் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவு என்று சொல்லப்படும் தமிழகத்தரப்பினால். 

ஆனால் இதைப் பற்றித் தமிழக ஊடகங்கள் கூடச் சரியான முறையில் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்துவதில்லை. தமிழக அரசும் ஈழத்தமிழ் அரசியற் தலைமைகளும் கூடிப் பேசலாம். வேண்டுமானால் இந்தியக் கடலோரத்திலும் இலங்கைக் கடலோரத்திலும் கூட இந்தச் சந்திப்புகளை– பேச்சுகளை வைத்துக் கொள்ளலாம். 

ஒரு பொருத்தமான கூட்டுப் பொறிமுறையை உருவாக்கலாம். உருவாக்க வேண்டும். 

ஏனெனில் இந்தப் பிரச்சினை ஏதோ இப்பொழுதுதான் உருவாகியதல்ல. ஏற்கனவே விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே இருந்த ஒன்று. 

அப்பொழுது எல்லை மீறிய ஒரு தொகுதி தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவர்கள் மீள விடுவிக்கப்பட்டனர். இது நடந்தது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் –இறுதிப் போருக்குச் சற்று முன்பாக. 

ஆகவே இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு எரியும் விவகாரம். 

இந்திய மத்திய அரசுடன் கூட இதைப் பற்றிப் பேசலாம். 

இதைச் செய்யாமல் விடுமிடத்து ஒரு அரசியல் அபாயம் ஏற்படுவதற்கு இடமுண்டு. அது ஈழத்தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் பிரித்து விடக்கூடிய வரலாற்றுச் சூழலை உருவாக்குவதாக அமையும். 

இது மைய அரசுகளுக்கு வாய்ப்பானதாக அமையும். 

இதைப் பற்றிச் சிந்திப்போர் யார்?