ரஷ்யா, உக்ரெய்ன் போர்!   உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)

ரஷ்யா, உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? (பகுதி 2)

— வி. சிவலிங்கம் — 

பகுதி 

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போர் தோற்றுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி   தனது அணு ஆயுதப்படைகளை உசார்நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார. ஏனெனில் அமெரிக்கா மற்றும் சில நாடுகள் உக்ரெயினிடம் அவ்வாறான ஆயுதங்களைக் கையளித்துள்ளதாகத் தெரியவருகிறது. உக்ரெயினில் நான்கு அணு உலைகள் செயற்படுவதாகத் தெரிய வருகிறது. எனவே போர் விஸ்தரித்துச் செல்வதற்கான நிலமைகள் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, ரஷ்ய தாக்குதல்கள் போலந்து, ருமேனியா போன்ற எல்லை நாடுகளுக்குள் சென்றால் அதனைச் சாக்காக வைத்து ரஷ்யாவைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஏற்கெனவே பல லட்சம் உக்ரேனியர்கள் போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளுக்குள் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். எனவே அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியாமல் ஏற்படலாம் என்ற சந்தேகங்கள் பலமாகவே உள்ளன. 

தற்போது நடைபெற்று வரும் ரஷ்ய – உக்ரைன் போர் தற்செயலானது அல்ல. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டில் இடம்பெற்று வரும் நாக்ஸிச நோக்கிலான தேசியவாதம் மிகவும் உக்கிரமாக செயற்பட்டு வந்தது. உக்ரைன் நாடு சோவியத் குடியரசிலிருந்து பிரிந்து தனியான நாடாக செயற்பட்டு வருகிறது. அதே போலவே போலந்து, கங்கேரி, ருமேனியா போன்ற முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகச் செயற்படுவதோடு,ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து வருகின்றன. உதாரணமாக, கடந்த காலங்களில் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றை தமது குடியேற்ற நாடுகளாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1917ம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சியும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இரண்டாவது உலகப் போரும் ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திர நாடுகளாக அவை மாற்றமடைய உதவின. இந்த நாடுகள் தம்மை ஒடுக்கி வைத்திருந்த குடியேற்ற ஆதிக்க நாடுகளின் கொடுமைகளை, பொருளாதாரச் சுரண்டல்களை இன்னமும் மறக்கத் தயாரில்லை. அது போலவே சோவியத் குடியரசில் இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை தமது குடியேற்ற ஆதிக்க நாடாகவே வர்ணிக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் சோவியத் குடியரசின் வீழ்ச்சியும், அதன் சோசலிச நிர்மாணத் தோல்விகளும் புதிதாக விடுதலையடைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை முதலாளித்துவத்தை நோக்கித் தள்ளின.  

கடந்த காலங்களில் உலக விவகாரங்கள் அமெரிக்க –சோவியத் என்ற இரண்டு வல்லரசுகளின் போட்டிக் களங்களாக மாறியிருந்தன. 90களில் ஏற்பட்ட சோவியத் ரஷ்யாவின் கம்யூ. கட்டுமானத் தோல்விகள் காலப் போக்கில் அமெரிக்கா மட்டுமே உலகின் போக்கைத் தீர்மானிக்கும் ‘தனிக் காட்டு ராஜா’ என்ற நிலைக்குத் தள்ளியிருந்தன. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா போரை நடத்த உதவியது மட்டுமல்லாமல், அப் போரின் பின்னர் ஐரோப்பாவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப அமெரிக்க முதலீடுகள் உதவின. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் வளர்ந்தது. அது மட்டுமல்லாமல் பலமான ராணுவத்தைக் கட்டியிருந்த அமெரிக்கா ஐரோப்பாவில் மீண்டும் ஒரு போர் வராமல் தடுத்தல் என்ற யோசனையின் அடிப்படையில் தனது ராணுவத்தின் தலைமையில் ‘நேட்டோ’ என்ற ராணுவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உருவாக்கியது.  

சோவியத் சோசலிசக் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் குறிப்பாக பிளவுபட்ட ஜேர்மனி இரண்டும் ஒன்றாக்கப்பட்ட வேளையில் நேட்டோ தரப்பினர் சோவியத் குடியரசிலிருந்து விலகிய நாடுகளை நேட்டோ ராணுவக் கூட்டில் இணைப்பதில்லை என வாக்குறுதி அளித்திருந்தனர். காலப் போக்கில் அமெரிக்க வல்லரசு ஆதிக்கம் ஒற்றை ஆதிக்கமாக உலகம் முழுவதிலும் வியாபித்த வேளையில் ஐரோப்பிய நாடுகளில் சில நேட்டோ ராணுவக் கூட்டில் இணைந்தன. கொடுத்த வாக்குறுதிகளை மீறி நேட்டோ ராணுவம் ரஷ்யக் குடியரசின் அண்மித்த நாடுகளை நோக்கியும் தனது வலையை விரித்தது. இதன் விழைவுதான் இப் போராகும். ஆனாலும் உக்ரெயின் நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது, நேட்டோ ராணுவக் கூட்டில் இணைவது என்பது மிகுந்த விவாதப் பொருளாக அமைந்தது. அரசியல் கட்சிகள் மிகவும் பிளவுபட்டிருந்தன. இப் பிளவுகள் புதிய வடிவத்தைக் கொண்டிருந்தன. 

போலித் தேசியவாதமும், நாக்ஸிசமும் 

இலங்கை அரசியலை இந்த நிகழ்வோடு ஒப்பிடுகையில் 1970 களின் பின்னர் இலங்கை அரசியலைத் தனிக் கட்சி தீர்மானிக்க முடியாத அளவிற்கு அரசியல் போக்குகள் மாறியிருந்தன. கூட்டு அரசாங்கங்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இதனால் சிறிய அரசியல் கட்சிகளும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வலுவைப் பெற்றிருந்தன. இதனால் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமது நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. இலங்கையைப் பௌத்த சிங்கள நாடாக மாற்றும் முயற்சிகளுக்கும், நாட்டின் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் முதலாளித்துவ சிங்கள அரசியல் தலைமைகள் திறந்த பொருளாதாரக் கோட்பாடுகளை முன்வைத்து நாட்டைச் சிங்கப்பூராக மாற்றுவதாக புதிய நியாயங்களைக் கற்பித்தன.  

ஏற்கெனவே வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் ராணுவ ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட நிலையில் அதற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் படிப்படியாக வலுப்பெற்று வந்தன. அதே போலவே சுதந்திரத்திற்குப் பின்னதான அரசுகள் காத்திரமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தத் தவறியதால் தெற்கில் ஆட்சிக்கு எதிரான இளைஞர் போராட்டங்கள் ஆயுத வன்முறையாக மாறியிருந்தன. இவை அரசுக்கு எதிரான போராட்டங்களாகக் காணப்பட்ட போதிலும் உள்ளடக்கத்தில் ஒரு புறத்தில் சிங்கள பௌத்த தேசியவாதமாகவும், மறு புறத்தில் தமிழ்க் குறும் தேசியவாதமாகவும் மாற்றமடைந்து சென்றன. இத் தேசியவாதங்கள் ஒன்றிற்கு ஒன்று எதிர்நிலையை நோக்கிச் சென்றன. சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகள் நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் குறிப்பாக தமிழ் மக்களை எதிரி நிலைக்குத் தள்ளின. அதே போலவே தமிழ்க் குறும் தேசியவாதம் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் தனது எதிரியாக சித்தரிக்கும் அரசியலை நோக்கிச் சென்றது. சிங்கள பெருந்தேசியவாதம் நாட்டின் இதர சிறுபான்மைத் தேசிய இனங்களது ஜனநாயக உரிமைகளை நிராகரித்து இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு எனவும், தனிச் சிங்கள வாக்குகளால் நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்ற நாக்ஸிசவாதம் முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னால் சிங்கள பௌத்த ராணுவம் பக்கபலமாகச் செயற்பட்டது.  

இதுவே உக்ரெயினிலும் நடைபெற்றது. எவ்வாறு சிங்களப் பெருந்தேசியவாதம் தனது இலக்குகளை அடைய சிங்கள பௌத்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தியதோ அதே போலவே உக்ரேனியர்கள் நாட்டில் வாழும் 30 சதவீத ரஷ்ய மொழி பேசும் மக்கள் தமது அடையாளத்திற்குத் தடையாக இருப்பதாகப் போலித் தேசியவாதத்தை முன்னெடுத்தார்கள். தமது இப் போலித் தேசியவாத நடவடிக்கைகளுக்கு ரஷ்யா தடையாக இருப்பதாக பிரச்சாரம் செய்தார்கள். எவ்வாறு இலங்கைத் தமிழ் மக்களின் பின்னணியில் இந்தியா செயற்படுவதாகக் கூறி சிங்களப் பகுதிகளில் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றனவோ அவ்வாறே ரஷ்ய எதிர்ப்புப் பிரச்சாரங்களும் இடம்பெற்றன.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ நா சபையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஷ்யா உடனடியாகத் தனது படைகளை உக்ரெயினிலிருந்து விலக்கவெண்டுமெனக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், 5 நாடுகள் எதிராகவும், 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்துக் கொண்டன. ஐ நா சபைத் தீர்மானங்கள் பல இஸ்ரேல் நாடு பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளுக்கு எதிராக இவ்வாறான பல நாடுகள் இணைந்து வாக்களித்த போதிலும் இன்றுவரை பிரச்சனைகள் தீரவில்லை. அது போலவே உலக நாடுகள் பல அமெரிக்காவோடு இணைந்து வாக்களித்த போதிலும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது சந்தேகமே. இங்கு இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ரஷ்யா படைகளை உக்ரெயினிலிருந்து விலக்க வேண்டுமெனக் கோரும் தீர்மானத்தை சிறிய நாடுகளான பூட்டான், நேபாளம்,மாலைதீவு போன்ற நாடுகள் ஆதரித்து வாக்களித்த நிலையில் இலங்கை வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டது அதன் குழப்ப நிலையை எடுத்துக் காட்டுகிறது.  

தற்போது மிகவும் அச்சமூட்டும் வகையில் போர் நிலமைகள் மாறிவரும் நிலையில் உக்ரெய்ன் நாடு சோவியத் குடியரசிலிருந்து விலகிய சகோதர நாடு தமது மூத்த சகோதரரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்திருப்பது பல குழப்ப நிலமைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரெயின் நாட்டிலுள்ள தேசியவாதிகளல்லாத அமைதியை விரும்பும் மக்கள் இந்த நிலமைகள் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளனர். உதாரணமாக, சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இணைந்து வாழ்வதை விரும்பும் பல சிங்கள தேசபக்த சக்திகள் 30 ஆண்டுகாலப் போரின்போது எதுவுமே பேச முடியாத நிலையிலிருந்தனர். ஏனெனில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அவ்வாறான கருத்துக்களுக்கு இடமளிக்காதது மட்டுமல்ல, அவர்கள் தமக்கு மத்தியில் வாழும் எதிரிகளாகவும் பட்டம் சூட்டினர். இவ்வாறான நிலையே உக்ரெயினிலுள்ள அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் மக்கள் நிலையுமுள்ளது.  

மக்கள் புரட்சியாகூட்டுச் சதியா

இலங்கையில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்கள் எவ்வாறு பயங்கரவாதம் என வர்ணிக்கப்பட்டதோ அதே போன்றே உக்ரெயின் தென் பிராந்தியங்களில் வாழும் ரஷ்ய மக்களின் போராட்டங்களும் வர்ணிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்டன. தற்போது உக்ரெயின் நாடு ரஷ்யாவுக்கு எதிராக போராடும் நிலையை ஒரு சாரார் மக்கள் புரட்சி என வர்ணிக்கிறார்கள். குறிப்பாக மேற்கு நாடுகள் உக்ரெய்ன் மக்கள் தமது சுதந்திரத்திற்காகப் போராடுவதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்னொரு சாரார் மேற்குலக நாடுகளின் சதி வலைக்குள் குறிப்பாக நேட்டோ ராணுவ விஸ்தரிப்புப் பொறிக்குள் உக்ரெய்ன் அகப்பட்டுள்ளதாகவும், இது மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுச் சதியெனவும் குறிப்பிடப்படுகிறது.  

எனவே இவ் விவாதம் குறித்து நாம் ஆராய்வது அவசியமாகிறது. உக்ரெய்ன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் ஜனகோவிச் (Victor Yanakovich) என்பவர் 2014ம் ஆண்டு செயற்பட்டார். அவர்  உக்ரெயினிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையே உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திடுவதில் தாமதித்தார். ஏனெனில் பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் குறித்துப் பல கருத்து வேற்றுமைகள் இருந்தன. இருப்பினும் பாராளுமன்றத்திலிருந்த தேசியவாதிகளின் பயமுறுத்தல்களின் பின்னணியில் அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் ஜனாதிபதியின் கையொப்பம் பெற்றால் மட்டுமே அது சட்டமாகும். இச் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் உக்ரெயின் சந்தைகளில் நிறைந்து விடும். இதனால் உள்நாட்டின் உற்பத்தி சுமார் 150 முதல் 160 பில்லியன் ஐரோ நாட்டிற்கு நட்டமேற்படும். எனவே ஐரோப்பிய சந்தையில் இணைவது குறித்து மேலும் சிந்திப்பது அவசியம் என்ற கருத்தை ஜனாதிபதி கொண்டிருந்தார்.  

ஆனால் உக்ரெயின் தேசியவாதிகளும், ஐரோப்பிய சந்தை நாடுகளின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி பாராளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பல ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் செயற்பட்டனர். மேற்குலக பத்திரிகை நிறுவனங்கள் ஜனாதிபதி ரஷ்ய ஆதரவாளர் எனவும், அவர் பாராளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படுவதாகவும் செய்திகளைப் பரப்பி ஆர்ப்பாட்டங்களை மேலும் விஸ்தரித்தனர். ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்றதால் பொலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே வன்முறை தொடர்ந்தது. இதன் விளைவாக ஆர்ப்பாட்டக்காரர்களும், பொலிசாரும் பலர் இறந்தனர். சாத்வீக ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறிய வேளை இச் சம்பவங்களைப் பயன்படுத்தி உக்ரெயினிய தேசியவாதிகள் மேலும் உக்கிரப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பலர் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டங்களின்போது அமெரிக்க ராஜாங்க அமைச்சின் உத்தியோக பிரதிநிதியாகிய விக்டோரியா நூலன்ட் (Victoria Nuland) அங்கு பிரசன்னமாகியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. 

இவ்வாறு நிலமைகள் படிப்படியாக மாற்றமடைந்து சென்றிருந்த நிலையில் 2014ம் ஆண்டு பெப்ரவரி 20 ம் திகதி நிலமைகள் திடீரென மாறின. 

( தொடரும்)