பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? 

பொதுஜன பெரமுன தோல்வியை நோக்கி…? 

 — தொகுப்பு: வி.சிவலிங்கம்— 

கடந்த 09-2-2022ம் திகதி ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியினர் அநுராதபுரத்தில் பெரும் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். பெருஞ் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட அக் கூட்டம் மக்களை நோக்கிய தமது புதிய பயணத்தின் ஆரம்பம் என பல பேச்சாளர்களும் தெரிவித்த போதிலும், விவசாயிகளை அதிகளவில் கொண்டிருக்கும் அப் பிராந்திய மக்கள் பிரதமர், ஜனாதிபதி போன்றோரின் பேச்சுகளுக்கு பெரும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இவர்களின் உரைகளின்போது அவ்வப்போது மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தத் தயங்கவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரை, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசு, தினேஷ் குணவர்த்தன போன்ற பலரைக் காணவில்லை.   

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் உரைகள் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்தின. எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். கொரொனா நோயின் தாக்கத்திலிருந்த மக்களைக் காப்பாற்றி பாதுகாப்பான நிலையை ஏற்படுத்திய வாய்ப்புகளை எதிர்க்கட்சிகள் போலிப் பிரச்சாரங்களினால் மக்களை ஏமாற்றுவதாகக் கூறினர். நாடு முழுவதிலும் உள்ள பொருளாதார நெருக்கடிகளால் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம் மக்கள் தற்போது வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். தமது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விபரங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு மக்களை நோக்கிச் செல்லப் போவதாகவும் அந்த நோக்கத்தின் ஆரம்பமே அதுவெனக் கூறினர். தமது தேர்தல் பிரச்சாரம் முதல் பதவி ஏற்பு மற்றும் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் இடமாக அநுராதபுர புனித நகரையே தாம் தேர்ந்தெடுத்ததாக அம் மக்களை உற்சாகப்படுத்திய போதிலும் மக்கள் மிக அமைதியாகவும், ஆரவாரிப்பு இல்லாமலும் செவிமடுத்தார்கள்.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா நோய் நாட்டினை முடக்கியதாகவும், அதனால் தமது முயற்சிகள் பலவும் தடைப்பட்டதாகவும், தற்போது மீதமுள்ள மூன்று ஆண்டுகளிலும் தமது அபிவிருத்தித் திட்டங்களை,தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாகவும் மக்கள் தம்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும் உரைகள் அமைந்தன.  

சமீப காலமாக அரசின் செயற்பாடுகள் திட்டமிட்டதாக இல்லாமையால் வர்த்தமானி அறிவித்தல்களை மேற்கொள்வதும், பின்னர் மீளப் பெறுவதுமாக இருந்தமையால் மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்குள் சிக்கியிருப்பதால் இந்த நிலை தொடராமல் தடுக்க வேண்டுமெனில் அரசு பதவி விலக வேண்டுமெனவும், தாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்ற நிலையில் தாம் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரைகள் அமைந்திருந்தன.  

விவசாய மக்களைப் பெருமளவு கொண்டுள்ள அப் பிரதேசத்தில் அரசின் விவசாயக் கொள்கை தோல்வியடைந்துள்ளதை நன்குணர்ந்த அரச தரப்பினர் உரப் பசளைகள் பயன்படுத்தினாலும், அல்லது பயன்படுத்தாவிடினும் விவசாயிகளின் வருமானத்தை 100 சதவீதம் உயர்த்தப் போவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். விவசாயிகளின் நல்வாழ்விற்காக தாம் எதனையும் செய்யத் தயார் என மிகவும் உரத்த குரலில் தெரிவித்தார். இருப்பினும் மக்கள் மிக அமைதியாகவே கேட்டனர். குறிப்பாக, தற்போது செயற்கை உரப் பாவனை குறைந்துள்ள நிலையில் நெல் உற்பத்தி முன்னரை விட பலமடங்கு குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானமும் குறைந்துள்ளதால் அவர்கள் பாரிய கடன் பளுவுக்குள் சிக்கியுள்ளனர். நெல்லின் கொள்வனவு விலையை அதிகரிப்பதாகவும், இழப்பீடு வழங்கப் போவதாகவும் கொடுக்கும் வாக்குறுதிகள் விவசாயிகளைத் திருப்திப்படுத்துவதாக இல்லை. ஏனெனில் தற்போது பணவீக்கம் அதிகரித்து, விவசாய உற்பத்திக்கான மூலப் பொருட்களினதும், வாழ்வாதாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்த நிலையில் அரச உதவிகள் போதுமானதா? என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.    

அரச தரப்பின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர்களின் உரைகள் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது என்பதை வற்புறுத்துவதாகவே இருந்தது. அதனை அவதானிக்கும்போது நாடு முழுவதும் மக்கள் அரசிற்கு எதிராக திரும்பியிருப்பதை அரச தரப்பினர் ஏற்றுள்ளதாகவே தெரிகிறது.  

ஜனாதிபதி தனது உரையின்போது 2015இல் உருவான மைத்திரி – ரணில் தலைமையிலான அரசு தாம் போரின் பின்னர் உருவாக்கிய பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலவீனப்படுத்தியதால்தான் ஈஸ்ரர் ஞாயிறு சம்பவம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.  

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக கடந்த அரசு செயற்பட்ட சம்பவங்களை நினைவூட்டிய அவர் நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை அழித்தார்கள் எனவும் குற்றம் சாட்டினார். குறிப்பாக பௌத்த பிக்குகள் சிறையிலடைக்கப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை சார்ந்த பல அதிகாரிகள் நீதியின் முன் தள்ளப்பட்டதாகவும் அதனால் நாட்டின் பொருளாதாரமும் பலவீனமடைந்ததாகவும் தெரிவித்தார். அதனால் தாம் பதவியேற்றதும் தேசிய பாதுகாப்பையும், நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களையும் காப்பாற்றிய வேளையில் கொரொனா நோய்க்கு எதிராகவும் செயற்பட வேண்டியிருந்ததாகவும் கூறினார்.  

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் உரைகள் தேர்தலுக்கான குறிப்பாக மாகாணசபைக்கான தேர்தலை நோக்கிய வியூகங்களாகவே காணப்பட்டன. 2005ம் ஆண்டு முதல்2015ம் ஆண்டுவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் தொடரப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் 2015ம் ஆண்டு தடுக்கப்பட்டதாகவும் அவ்வாறான ஒரு நிலை மீளவும் ஏற்பட இடமளிக்க வேண்டாமென மக்களை எச்சரித்தார். அரசாங்கத்தின் இன்றைய கொள்கைகள் எதிர்கால சமூகத்தின் நல்வாழ்விற்காக எடுக்கப்படுவதால் அவை மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லாவிடினும் மக்களுக்காக அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ள தயங்க மாட்டோம் எனவும், தமது தீர்மானங்கள் தேர்தல் வெற்றியை நோக்கியதாக இல்லாமல் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை நோக்கியது என்றார். எனவே எத்தகைய தடைகள் வரினும் அவை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், அதனடிப்படையிலேயே அத் தாற்பரியங்களை மக்களுக்கு விளக்கவே அக் கூட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

இக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களை முக்கியமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் உரைகளை அவதானிக்கும்போது மக்களின் அலை தமக்கு எதிராகத் திரும்பியுள்ளதையும், எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்து வருவதையும் அவர்கள் உணர்ந்துள்ளதாகவே உள்ளது. இந்த உரைகளின்போது அரச அதிகாரிகள் குறித்து வெளியிடப்பட்ட கருத்துகள் மிகவும் கவனத்திற்குரியதாக உள்ளன. ஏனெனில் தற்போது வைத்திய அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மின்உற்பத்தி பொறியியலாளர்கள் மற்றும் பல அரசதுறை அதிகாரிகள் எனப் பல பிரிவினர் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.  

இப் பிரிவினர் ஒரு புறத்தில் தமது வருமானப் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள சம்பளப் பற்றாக்குறை தொடர்பாக போராட்டங்கள் நடத்திய போதிலும், இவர்கள் அரச தரப்பினரால் நடத்தப்படும் ஊழல்கள் குறித்தும் அம்பலப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் அரச ஆதரவு அதிகாரிகளின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படுவதால் அவர்களில் பலருக்கு உயிராபத்து எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இவை குறித்து பொலிசாரின் செயற்பாடுகள் மக்களுக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனப் பிரகடனப்படுத்திய போதிலும் அரச ஆதரவாளர்களுக்கும், இதர பிரஜைகளுக்கும் வெவ்வேறு சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாக மக்கள் அடையாளம் காண்கின்றனர். 

அரச தரப்பினரின் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில் தேசப் பற்றுள்ள அரச அதிகாரிகளே அவற்றை வெளியில் தெரிவிக்கின்றனர். இதனால் அதாவது அரசின் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து மக்கள் வருமானங்களைத் திருடும் ஊழல்வாதிகளை அடையாளமிடும் அரச அதிகாரிகளைத் தேசத் துரோகிகளாக ஆட்சியாளர் கருதுகின்றனர். அரசுக்கு எதிராக செயற்படுவதாக அரசியல்வாதிகள் முறையிடுகின்றனர். இப் பின்னணியில்தான் அரச அதிகாரிகள் மக்களுக்காகச் செயற்பட வேண்டுமெனவும், அரசின் செயற்திட்டங்களைப் புரிந்து செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இன்றைய ஆட்சியாளர்கள் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்திய வேளையில் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பல அதிகாரிகள் அரச தரப்பினருக்குத் தெரிவித்த போதிலும் கவனமெடுக்கவில்லை. இரசாயன உர வகைகளை நிறுத்தியும், சேதனப் பசளைகளைப் போதியளவு உற்பத்தி செய்யாத நிலையிலும் நாட்டில் பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என அரச அதிகாரிகள் எச்சரித்த போதிலும் ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே நாட்டு மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் விதத்தில் அரச அதிகாரிகள் எச்சரித்தனர். இவர்களையே அரசு சந்தேகத்துடன் நோக்குகிறது. நாட்டின் எதிரிகளாகக் கருதுகிறது.  

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால்தான் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டார்களே தவிர கொரொனா நோயினால் அல்ல என்பது பல்வேறு நாடுகளின் முன்னேற்றங்களை அவதானிக்கும்போது தெரிய வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் எடுத்த முயற்சிகளை எதிர்க்கட்சிகள் தடுத்தன எனவும், குறிப்பாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் போன்றன வீதிக்கு வந்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியதாகவும் அவ்வாறான சூழலை அரசாங்கம் இனி அனுமதிக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மக்களின் சுகாதாரத்திலும், பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி மக்களின் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.  

இதனை அவதானிக்கும்போது அரசாங்கம் விரைவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை குறிப்பாக ஆர்ப்பாட்டங்களை இரும்புக் கரங்களால் நசுக்குவதற்குத் தயாராவதை உணர்த்துகிறது. தாம் வழங்கிய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களைத் திசை திருப்புவதாகவே குற்றச் சாட்டுகள் உள்ளன. இவை குறித்து பிரதமரின் கருத்துகள் புதிய அணுகுமுறைகளை அறிவிப்பதாகக் காணப்படுகின்றன. எதிர்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், அதன் காரணமாக மக்களை வீதிக்கு அழைத்து வருவதாகவும், தாம் அதனை அனுமதிக்கப் போவதில்லை எனவும், தாமும் வீதியில் இறங்கத் தயார் எனவும், அவை தமக்குப் புதிதல்ல எனவும், தொழிலாளர்களின் நலனுக்காக தாம் வீதியில் இறங்கிப் போராடியதாகவும் கூறி இனிமேல் தாமும் மக்களை நோக்கி வரப் போவதாகவும் தெரிவித்தார்.  

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளின் சக்திகளின் துணையுடன் செயற்படுவதாக பிரதமர் ராஜபக்ஸ குற்றம் சாட்டினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் எடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களைத் தடை செய்யும் வாய்ப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப் போவதில்லை என்றார்.  

அநுராதபுரத்தில் இடம்பெற்ற இக் கூட்டம் மிகவும் களையிழந்ததாகவே காணப்பட்டது. ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ மிக உச்சக் குரலில் அங்கு பேசிய போதிலும் திரண்டிருந்த மக்களுக்கு உற்சாகமூட்டவில்லை. அவ்வப்போது இடையிடையே ஆதரவாளர்கள் சிலர் தேசியக் கொடி மற்றும் கட்சிக் கொடியினை அசைத்த போதிலும் உற்சாகம் இழந்த முதலாவது கூட்டமாகவே காணப்பட்டது. விவசாய மக்கள் செறிந்திருந்த அக் கூட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை 100 சதவீதம் உயர்த்தித் தருவதாக ஜனாதிபதி தனது உரத்த குரலில் கூறிய போதிலும் மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கவில்லை. இக் கூட்டத்தில் கட்சியின் இளம் பிரச்சார பீரங்கிகள் பேசிய போதிலும் உற்சாகம் இருக்கவில்லை.  

நாட்டின் வெளிநாட்டமைச்சரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தனது உரையில் இம் மாத இறுதியில் ஜெனீவாவில் மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், புலிகளின் ஆதரவாளரான சுமந்திரன் போன்றோர் எமது ராணுவத்தினரைச் சிறையில் தள்ள முயற்சிப்பதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றார். அமைச்சரின் மிகவும் நலிந்த உரை மக்களை எட்டியதா? என்பது சந்தேகமே.  

கூட்டத்தின் பெறுபேறுகளை ஒட்டுமொத்தமாக கவனிக்கையில் தோல்வியின் ஆரம்பம் தொடங்கியுள்ளதாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் மேல் மிகவும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் எனத் தோன்றுகிறது. கடந்தகால வெள்ளை வான் வரலாறுகள் மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.