பிரதமர் உருத்திரகுமாரனின் கனவுகளுக்குள் ஜதார்த்தத்தைத்தேடி….!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)…..!
இது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 115 உறுப்பினர்களும், 20 நியமன உறுப்பினர்களுமாக, மொத்தம் 135 உறுப்பினர்களைக் கொண்டது. அமெரிக்க நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் யாழ்.மேயர் இராசா விஸ்வநாதனின் புதல்வர். விடுதலைப்புலிகளின் சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர். 2010 மே மாதம்17 ம் திகதிதியில் இருந்து உருத்திரகுமாரனின் அரசாங்கம் தமிழீழத்தில் “எக்ஸ்ஸில்ஆட்சி” நடாத்துகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பின்படி, பாராளுமன்ற மன்றத்தின் ஆயுட்காலம் மூன்று வருடங்கள். ஆனால் 2010க்குப் பின்னர் தேர்தல்கள் எதுவும் நடாத்தாமல், ஜனநாயக விழுமியங்களுக்கு முரணாக, புலம்பெயர்ந்த மக்களின் அங்கீகாரம் இன்றி இன்றுவரை ஆட்சி அதிகாரம் தொடர்கிறது. இதுதான் முதல் தேர்தல். இறுதியானதாகவும் இருக்கலாம்.
சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆகியோரும் ஆட்சியை நீடித்தார்கள்தான், ஆனால் ஜனநாயக ரீதியில் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் சிறிமாவோவும், மக்கள் கருத்துக் கணிப்பின்படி ஜே.ஆரும். காலநீடிப்பைச் செய்தார்கள். அந்த காலநீடிப்புக்கும் ஒரு காலவரையறை இருந்தது. ஆனால் நாடுகடந்த ஆட்சியாளர்களோ மக்கள் உரிமைகள், ஜனநாயகம் பற்றிப் பேசிக்கொண்டு எவற்றுக்காக போராடுகிறோம் (?) என்று கூறுகிறார்களோ, அவற்றையே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு மறுத்து நிற்கிறார்கள்.
தமிழ்த்தேசிய கட்சிகளின் இந்தியப்பிரதமருக்கான கடிதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தையும் தட்டி எழுப்பியிருக்கிறது. நீண்டகாலமாக தேக்க நிலையில் இருந்த இந்த அரசாங்கமும் அதன் பிரதமரும் மாரிகால உறங்குநிலையில் இருந்து விழித்துக் கொண்டவர்கள் போல் வெளியே வந்து கருத்துச் சொல்லப் புறப்பட்டுள்ளனர். வருகின்ற, வருடாந்த ஜெனிவா உற்சவமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அண்மையில் ஊடக மொன்றுக்கு பிரதமர் உருத்திரகுமாரன், இந்தியப்பிரதமர் மோடிக்கு தாயக தமிழ்த்தேசிய கட்சிகள் எழுதிய கடிதம் தொடர்பாக கருத்துக் கூறியிருந்தார்.
அந்த கருத்துக்களின் சமகால பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் ஜதார்த்தம், மேற்குலக புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் நகர்வுகள் என்பன குறித்து காட்சிப்படுத்த முனைகிறது காலக்கண்ணாடி.
இது விடயமாக பிரதமர் உருத்திரகுமாரன் அப்படி என்னத்தைத்தான் சொன்னார்…?
(*) “13. இருந்தால்தான் இந்தியா வரும் என்று இல்லை”.
(*) “டெல்லிக்கு தமிழ்நாட்டில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.”
(*) ” நாங்கள் -தமிழர்கள் பலமான ஒரு சக்தியாக உள்ளோம். உலகத்தமிழர்களும், தமிழீழத்தின் கேந்திர முக்கியத்துவமும் இந்தப்பலம்.”
(*) “எங்களது அரசியல் நிலைமையானது அன்றைய வங்காளதேசம், கிழக்குத் திமோர், நேபாளம் நிலையில் உள்ளது”.
(*) “இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் “இணக்க அரசியல்” மூலம் இந்த நாடுகளின் தேர்தலின் ஊடாக எமது பலத்தைக் காட்டவேண்டும்.”
இவை எல்லாம் இருந்தால் தமிழீழம் கிடைத்த மாதிரித்தான் என்ற தொனியில் “ஆலம்பழ அரசியல்” பேசுகிறார் பிரதமர். வெளியே ஆலம்பழ அழகியல், உள்ளே புட்டுப் பார்த்தால் “புழு”. சமகால உள்ளார்ந்த அரசியல் சிக்கல்களையும், பூகோள அரசியல் சூழலையும், ஜதார்தங்களையும் பார்க்கத்தவறும், மூடி மறைக்கும் அரசியல் அணுகுமுறையாக இது உள்ளது. கேட்பதற்கு மட்டும் அற்புதமான வார்த்தையாடல்.
ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரையும்…!
1983 கறுப்பு யூலையைத் தொடர்ந்து இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்ட வரலாற்றுத்திருப்பம் ஒரு “சிக்கனல்” அரசியல் இராஜதந்திரமாகவே இருந்தது. ஒரு பக்கத்தில் “இந்தியாவில் இலங்கைத்தமிழ் அகதிகள்தான் இருக்கிறார்கள், பயங்கரவாதிகள் இல்லை” என்று ஜே.ஆர்.அரசாங்கத்திற்கு பதில் சொல்லிக்கொண்டு மறுபக்கத்தில் பயிற்சியும், ஆயுதங்களும் மற்றைய வசதிகளையும் இயக்கங்களுக்கு வழங்கியது இந்திராகாந்தி அரசாங்கம். ஒருபுறம் பேச்சுவார்த்தை அரசியல் இராஜதந்திர நகர்வு மறுபக்கம் வன்முறை அரசியல் சார்ந்த ஆயுதப்பயிற்சி.
சின்னச், சின்ன மீன்களை எல்லாம் ஓடவிட்டு இருந்த கொக்குக்கு “ஒப்பரேசன் லிபரேசன்” என்ற பெருவாய்ப்பு வந்தது. சிறுமீன்கள் எல்லாம் மாவட்டசபைகளாக, மாவட்ட அமைச்சர்களாக, கொழும்பு, பெங்களூர் பேச்சுக்களாக ஓடிக்கொண்டிருக்க இது வரையில் வந்த ஒரே பெருமீனான இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை, மாகாணசபையை கொத்திக் கொண்டது கொக்கு.
இனி என்ன…? இங்கை, இந்திய தமிழ்த்தரப்புக்கள் “வெற்றிலைவைத்து” அழைப்பு வழங்கி வரவேற்பளிக்க ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் இந்தியா வந்தது. இந்திய- இலங்கை ஒப்பந்தம் வந்தது. 13 வந்தது. மாகாணசபை வந்தது, எல்லாம் வந்த மாதிரியே வந்த வழியில் மெல்ல மெல்ல நடைகட்டத் தொடங்கிவிட்டன.
பிரதமர் உருத்திரகுமாரன் சொல்கிறார் “13 இருந்தால்தான் இந்தியா வரும் என்று இல்லையாம்.” 13 இல்லாமலே இந்தியா வருமாம். ஆக, துரத்தியவர்களே மீண்டும் “வெற்றிலை” வைக்கிறார்கள். உள்ளதுக்குள் வந்த உறுமீனை கையில் இருந்து தவற விட்ட தமிழர் அரசியல் சிறுமீனுக்காக சிங்கள பாராளுமன்றத்தில் முழங்குகிறது,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறது.
சிங்கள கடற்படைச்சிப்பாய் ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் தாக்கினான். ஒரு சாதாரண சராசரிச் சிங்களவராக, கட்டுப்பாடற்ற சிப்பாயாக நாம் அவனைப் பார்க்க முடியும். ஆனால் ஒருவிடுதலை இயக்கத்தின் இராஜதந்திரமற்ற செயற்பாடுகளோடு இதனை நாம் ஒப்பிடமுடியாது. இப்போதும் இந்தியா வருமாம் என்கிறார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர். காலம் கடந்த அரசியல் ஞானம்.
மகாத்மா காந்தி வன்முறைக்கு வன்முறை என்ற அரசியலை வெறுத்து ஒரு சந்தர்ப்பத்தில் கூறியது இது. “கண்ணுக்கு கண்தான் என்றால் ஒரு கட்டத்திற்கப்பால் சமுதாயத்தில் குருடர்கள் மட்டுமே இருப்பார்கள்” அன்னாரின் இந்த வார்த்தைகளை அரசியல் விழிப்புணர்வு அற்ற அரசியல் குருட்டுத்தனம் என்றும் நாம் விளங்கிக்கொள்ள முடியும். இந்த நிலைப்பாடு அரசியல் அறமற்றது, பழிக்கு பழி அரசியல் என்பதையே காந்தி இதன்மூலம் தெளிவுபடுத்தினார்.
இன்னும் ஒரு கோரிக்கை. டெல்லிக்கு தமிழ்நாடு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவரது விருப்பம். தமிழ்நாட்டில் ராஜீவ் கொல்லப்பட்டார். தமிழர்களால் கொல்லப்பட்டார். தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், வி.பி .சிங்கும் கண்ட இணக்கத்தில் இந்தியப்படை வெளியேறியது. ஒரு வகையில் வெறுங்கையோடு வெளியேறவில்லை. இந்தியா தந்த தீர்வை பிரேமதாசாவின் வார்த்தைகளில் சொன்னால் “அண்ணன் -தம்பி” உறவு பேசி “பொடி மல்லியும்” “லொக்கு ஐயாவும்” இந்தியாவை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டது இந்தியப்படை மட்டுமல்ல, இந்திய -இலங்கை ஒப்பந்தமும் தான். அதனால் தானே அதை மீண்டும் தாருங்கள் என்று நம்மவர்கள் கடிதம் எழுதிகிறார்கள்.
இதை யாரும் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதாக கருதிக்கொள்ளக்கூடாது. இந்த சண்டையில் இரு தரப்புக்கும் சமபங்கு உண்டு. இந்த நிலையில்கிடைத்ததையும் திருப்பிக் கொடுத்து விட்டு இன்று அதே இந்தியாவிடம்கையேந்தி நிற்கிறது தமிழ்த்தேசியம். இந்தியா மீண்டும் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது உருத்திரகுமாரனின் அரசாங்கம். “கோடிகளுக்காக” கருணாநிதியை அவமதித்து தமிழ்நாட்டையே கூறுபோட்டவர்கள், இப்போது தமிழ்நாடு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள். இவை அனைத்தையும் அன்று விடுதலைப்புலிகளின் இராணுவ, அரசியல் இராஜதந்திரம் என்றவர்கள் இன்று அவை இராஜதந்திரமற்றவை என்பதை படிப்படியாக நிலத்திலும், புலத்திலும் ஏற்றுக் கொள்கிறார்கள்.(?)
புலத்தில் பலமும் பலவீனமும் ………!
ஈழப்போராட்டத்திற்கு உலகத்தமிழர்கள் ஒரு பெரும் பலம் என்று பிரதமர் உருத்திரகுமாரன் கூறுவது இன்றைய ஜதார்த்தம் அல்ல. விமர்சனங்களுக்கு அப்பால் விடுதலைப்புலிகளின் காலத்தில் அப்படி ஒருநிலை வரையறுக்கப்பட்ட சூழலில் நிலவியது என்று கொள்ள முடியும். அதற்கு நிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர் காரணமாக அமைந்தது. போர் ஓய்வுக்குப் பின்னர் உலகத் தமிழர் அமைப்புகள் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்திற்காகவும் துண்டு துண்டாக சிதறிப்போனதே உண்மை. இந்த நிலையானது கடந்த பத்து ஆண்டுகளாக மேலும் பிரிவினைகளை வளர்த்து பெரும் பலவீனமான நிலையில் உலகத்தமிழர்கள் உள்ளனர் என்பதே உண்மையாகும்.
தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் சொந்த அரசியல் நலனுக்காக கட்சிகளால் பயன்படுத்தப்படுகிறார்கள். வாக்குச் சேகரிப்புக்கு ஈழத்தமிழர் விவகாரத்தை தமிழகக் கட்சிகள் உச்சரிக்கின்றன. புலத்தில் சில அமைப்புகள் சிறிலங்காவுடன் இணங்கிப்போகத்தயாராகவுள்ளன. சில அமைப்புகள் மிகக் கடுமையான போக்கைகைக் கடைப்பிடிக்கின்றன. இந்த முரண்பாடு ஜனநாயக ரீதியான கருத்துப் பரிமாற்றத்திற்கான கதவுகளை மூடி எதிர் எதிரான போட்டி அரசியலுக்கு வழிவகுத்திருக்கையில் இது பலமா? பலவீனமா?
அண்மையில் புலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு புத்துயிர் பெற்றிருப்பதன் விளைவாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளது. சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், 13 க்கு எதிரான செயற்பாடுகள், சுதந்திரதின கரிநாள் அழைப்பு இவை எல்லாம் இந்தப் பின்னணியில் இடம்பெறுபவையே. ஆனால், நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று கூறிய உருத்திரகுமாரனுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இந்தப் போராட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு மாறாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பல பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமையற்று வெறும் கடிதத்தலைப்பு அரசாங்கமாகவே உள்ளது. ஐரோப்பாவில் நாடுகடந்த அரசாங்கப்பிரதிநிதிகள் நியூயோர்க்கில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் பலம் குறித்து அவர் வெளியிட்ட மற்றொரு கருத்து இன்னும் வேடிக்கையானது. இங்கிலாந்து, கனடா பாராளுமன்றங்களில் தமிழர்களின் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் பலத்தைக் காட்டமுடியும் என்று நம்புகிறார் அவர். இது நிலத்தில் பேசப்படுகின்ற பாராளுமன்ற தமிழ்த்தேசிய அரசியல் வடிவத்தை புலத்திலும் பிரதியீடு செய்வதற்கான அறைகூவல். இங்கிலாந்து, கனடா அல்லது வேறு மேற்குலக நாடுகளின் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் ஈழத்தமிழர் வம்சாவளி உறுப்பினர்கள் எந்த மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள்? இங்கிலாந்து, கனடா நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்களே அன்றி தமிழ் ஈழப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படவில்லை. இவர்கள் இந்த நாடுகளின் அரசியல் அமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்கள். அந்த நாடுகளின் பிரஜைகள் .
மேற்குலக அரசியல் இனம், மதம், மொழி அடையாளங்களை முதன்மைப்படுத்திய “அடையாள அரசியல்” (IDENTITY POLITICS ) அல்ல.
இது ஜனநாயகம், பழமை வாதம், குடியரசு, லிபரல், பசுமை, இடதுசாரி, வலதுசாரி, முதலாளித்துவம், சோஷலிசம், சமூகஜனநாயகம், தொழில்கட்சி போன்ற பல கொள்கைகள் சார்ந்தது. புலத்தில் உள்ள இந்த நாடுகளின் பிரஜைகளான தமிழர்கள் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு இனம், மதம், சாதி, ஊர், சொந்தபந்தம் பார்த்து வாக்களிக்கலாம். ஆனால் இது எமது அரசியல் மயப்படுத்தப்படாத, கொள்கையற்ற தேர்வு. மேற்குலகம் அளிக்கும் வாக்கு கட்சிச்கொள்கையின் அடிப்படையிலானது என்பதையும் தமிழர்கள் என்ற அடையாளத்திற்கு அப்பால் இந்த நாடுகளின் மக்கள் கொள்கைக்கே வாக்களிக்கிறார்கள் என்ற பாரிய வேறுபாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கவனிக்கத்தவறியதாகவே இக்கருத்தை கொள்ள வேண்டியுள்ளது.
இந்த சூழலில் மேற்குலக பாராளுமன்றத்தில் தமிழ்ப்பிரதிநிதிகள் அதிகரிப்பதால் அது தனிநாட்டுக்கோரிக்கைக்கு வலுசேர்க்கும் என்பது இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசியம் பேசும் அரசியலாகவே உள்ளது. இந்த தமிழ் உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த கட்சிக்கொள்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் பற்றிப் பேசமுடியுமேயன்றி இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பாராளுமன்றப் பதவியை பயன்படுத்த முடியாது. அந்த நிலையில் அவர்களும் கவனமாகவே இருக்கிறார்கள் என்பதை அவதானிகள் மட்டிடமுடிகிறது.
இவர்களின் செயற்பாடுகள் அந்த நாட்டு மக்கள் கொள்கைக்காக அளித்த வாக்குகளை துஷ்பிரயோகம் செய்வதாக அமைந்தால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இலங்கையில் தனிநாடொன்றை அமைப்பதற்கு நாங்கள் உங்களை தெரிவு செய்யவில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படும்போது இவர்களின் அடுத்த தெரிவு கேள்விக்குறியாகும். இது நடந்தும் இருக்கிறது. மேற்குலக கட்சிகள் தமிழர் வாக்குகளுக்காக எம்மைப் பயன்படுத்தலாம், ஆனால் அவர்களை தமிழர்கள் அந்தளவுக்கு பயன்படுத்த முடியாது.
பிரதமர் உருத்திரகுமாரனின் கருத்தானது இலங்கைத் தமிழர் அரசியலின் மரபு ரீதியான போக்கில் இருந்து மாறுபட்டதாக இல்லை. பாராளுமன்றத்தை பிரச்சாரமேடையாகப் பயன்படுத்துவோம் என்ற புள்ளியைக்கூட இவர்களால் எட்ட முடியாது. மனித உரிமைகள் தொடர்பாக உள்ள பிரச்சினை என்னவெனில் ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக குறுக்கப்படுவதாகும். இதைத்தான் 2009இல் இருந்து தமிழ்த்தேசிய அரசியல் நிலத்திலும் புலத்திலும் முன்னெடுக்கின்றது. இதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்து இது ஒரு தேசிய இனப்பிரச்சினை என்பது மழுங்கடிக்கப்படுவதாகும். இதைத்தான் ஐ.நா.வும், மேற்குலகமும் திரும்பத் திரும்பப் பேசுகின்றன.
கனடா ராதிகா சிற்சபேசன் (லிபரல், புதிய ஜனநாயகம்) ஹரி ஆனந்தசங்கரி (லிபரல்) நோர்வே ஹம்ஸாஜினி குணரெட்ணம் (லேபர்) நியுசிலாந்து வானுஷி இராசரெட்ணம் வால்டர் (லேபர்) போன்ற இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் மனித உரிமைகளைப்பற்றி பேசமுடியுமே அன்றி ஈழத்தமிழர்களுக்கென தனிநாடொன்றை அமைப்பதற்கு அவர்களின் நாடுகளின் தலையீட்டை கோரமுடியாது. பூகோள அரசியல் சார்ந்த அந்த நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளில் இவர்கள் செல்வாக்கு செவுத்தமுடியாது. தமிழ்த்தேசிய சட்டவாதிகளுக்கு இது தெரியாததல்ல. இதைத்தவிர்த்தால் அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதால் அதைக்காட்டியே காலத்தைக் கடத்திக் கொண்டு கதிரையை காப்பாற்றிக்கொள்கிறார்கள்.
கனடாவில் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஹர்ஜித் சிங் சஜான் லிபரல் கட்சி ஆட்சியில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக கடந்த வருடம் வரை இருந்தார். கனடா இராணுவத்தில் லெப்டினன்ட் -கேணல் தரத்தில் பதவிவகித்தவர். இவர் பஞ்சாப்பில் காலிஸ்தான் தனிநாட்டை அமைப்பதற்கு வகிக்கக் கூடிய வகிபாகம் என்ன? கனடிய மக்களும், லிபரல் அரசாங்கமும் அதற்காகவா அந்தப்பதவியை இவருக்கு வழங்கினார்கள்.? இவை எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக காட்டப்படும் போலிக் காட்சிகள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பலவீனத்தை மறைப்பதற்காக புலத்தில் பாராளுமன்ற அரசியலின் பக்கம் தமிழர் கவனத்தை திருப்பிவிடுகிறாரா உருத்திரகுமாரன்?
பூகோள அரசியல் : வங்கம் – நேபாளம் -கிழக்குதிமோர்….!
” நாங்கள் வங்காளதேசம், நேபாளம், கிழக்குத் திமோர் நிலையில் இருக்கிறோம்” என்று ஒரு ஆய்வாளர் தனக்குக் கூறியதாக உருத்திரகுமாரன் கூறுகிறார். இந்த நாடுகளின் பிறப்பு முற்றிலும் மாறுபட்ட சர்வதேச, பிராந்திய பூகோள அரசியல் சூழலின் விளைவு. ஈழத்தமிழர்கள் எதிர் கொள்ளும் இன்றைய பூகோள அரசியலுக்கும் அன்றைய சூழலுக்கும் வெகுதூரம். அன்று சோவியத்யூனியனும், யூகோசிலாவியாவும் சிதறவில்லை. இந்திராகாந்தி அணிசேரா இயக்கத்தில் மிகப்பலம் வாய்ந்தவராக இருந்தார். அமெரிக்கா வியட்னாம் யுத்தத்தில் பாடம் கற்றிருந்தது.
மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் விவகாரம் இந்தியாவின் பாதுகாப்பு வாயிற்கதவை தட்டுவதாக இருந்தது. நிலத்தொடர்பற்றிருந்த கிழக்கு பாகிஸ்தானை மேற்குப் பாகிஸ்தானால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. மறுபக்கத்தில் ஒரே பாகிஸ்தானாக தனது தலையின் இருபக்க செவிகள் போன்று அமைந்திருந்து “வலி” கொடுப்பதை இந்தியா விரும்பவில்லை. மேற்குபாகிஸ்தான் கிழக்கில் மேற்கொண்ட அத்துமீறல்கள், ஜனநாயக ரீதியான தேர்தல்முடிவை அங்கீகரிக்காமை, இந்தியாவில் குவிந்த அகதிகள் போன்ற நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா மனிதாபிமான நடவடிக்கையில் ஆரம்பித்து யுத்தம் வரை சென்று வங்காளதேசம் பிறக்க காரணமாயிற்று. வங்காளிகள் வங்கத்தை ஆளுகிறார்கள். வங்கம் “விடுதலை” பெற்றதா? பிரிந்தபோது உலகின் முன்னணி வறியநாடுகளுள் அதுவும் ஒன்று. உருத்திரகுமாரன் வங்கம் தந்த பாடத்தை படிக்கவேண்டும்.
கிழக்கு திமோர் போர்த்துக்கல் கொலனியாக இருந்தது. அவர்கள் விட்டு வெளியேறியபோது இந்தோனேசியா அதை ஆக்கிரமித்தது. இந்த சூழலை இலங்கையின் இன்றைய நிலையோடு ஒப்பிடமுடியாது. ஒருவகையில் இதை சுதந்திரத்திற்குப் பின்னரான நிலையாகப் பார்க்கமுடியும். ஐரோப்பிய ஒன்றிய நாடான போர்த்துக்கலுடன் இது தொடர்புபட்ட விவகாரம் என்பதால் ஐரோப்பாவும், ஐ.நா.வும் இணைந்து ஒரு தீர்வுக்கு வரமுடிந்தது. இந்தோனேசியா தான் ஆக்கிரமித்த கிழக்குத் திமோரில் இருந்து வெளியேறியது. அப்போது தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இன்றைய பூகோள அரசியல் போட்டி இன்றைய அளவுக்கு வலுப்பெற்றிருக்கவில்லை.
நேபாள மார்க்சிஸ்ட்டுக்கள் சர்வதேச, பிராந்திய பூகோள அரசியலை சரியாக புரிந்து கொண்டதன் விளைவே இன்றைய நேபாளம். அமெரிக்கா பிரகடனம் செய்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், உலகநாடுகள் பலவும் அதற்கு பின்னால் அணிதிரண்ட நிலையில் நேபாளப்போராளிகள் நகர்த்திய அரசியல் காய்களின் வெற்றி இது. ஒரு மன்னர் ஆட்சியை மிகவும் சாதுரியமாக அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அப்போது போராளிகளிடம் ஆயுத பலம் இருந்தது. அது மௌனிக்கவில்லை. அவர்கள் தங்கள் பலத்தை மிகைமதிப்பீடோ அல்லது எதிரியின் பலத்தை குறைமதிப்பீடோ செய்யவில்லை.
பூகோள அரசியல், இராணுவ ஜதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்களாக இதனைச்சாதித்தனர். இந்து இராஜ்ஜியமாக இந்து மன்னர் ஆட்சியை இதுவரை காப்பாற்றி வந்த இந்தியாவையே தம்பக்கம் இழுத்து முள்ளை முள்ளால் எடுத்தனர். நேபாள மார்க்ஸ்சிஸ்ட்டுக்களின் போராட்ட வியூகங்களும், வர்க்கப்பார்வையும், சமூகநீதியை மறுக்கின்ற கட்டமைப்பை தகர்ப்பதில் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறையும் வரலாற்றுப் பதிவுகள். இவை இல்லாததினால்தான் முப்படைகளையும், ஆயுதங்களையும் பூஜித்த விடுதலைப்புலிகள் எதையும் சாதிக்காது தோற்றுப் போனார்கள்.
இதனால்தான் உருத்திரகுமாரன் குறிப்பிட்ட நாடுகளின் விடுதலை வரலாற்றை ஈழத்தமிழர் போராட்டத்துடன் இன்றைய சமகாலத்தில் ஒப்பிட்டு அந்த நாடுகளின் விடுதலைக்கு அண்மித்த காலப்பகுதியில் நாங்களும் இருக்கிறோம் என்று யாரோ ஆய்வாளர் குறிப்பிட்டதை நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் மேற்கோள்காட்டி அரசியல் செய்ய முனைவது ஏற்புடையதல்ல. இந்த நாடுகளின் விடுதலையை மட்டுமல்ல கியூபா, வியட்னாம், கோசவோ போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களையும் அல்லது பாலஸ்தீனம், குர்திஸ்தான் போராட்டங்களையும் கூட இன்றைய பூகோள அரசியலில் ஈழப்போராட்டத்துடன் தொடுத்துப்பார்க்க முடியாது.
இலங்கையின் வடக்கு, கிழக்கின் பூகோள அமைவிடம் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலம் என்பதும் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமரின் கருத்து. இதுதான் ஈழத்தமிழர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பலவீனமாகவும், ஆபத்தாகவும் இருக்கிறது. இந்த அமைவிடம் தான் வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கவைத்து ஈழப் போராட்டத்தை சிதறடித்தது. அந்த நாடுகள் தங்கள் நலன்களை முதன்மைப் படுத்திய தீர்வை திணிக்க காரணமாகியது. அல்லது தீர்வொன்றை காண்பதில் தடையாக உள்ளது.
வங்காளத்திலும், நேபாளத்திலும், கிழக்குத்திமோரிலும் இன்னும் அந்த நிலை இல்லை. அதனால் அந்தநாடுகள் தற்காலிகமாவேனும் தப்பிக்கொண்டுள்ளன. ஈழத்தின் கேந்திரம் எப்போதும் ஒரு கொதிநிலையிலேயே இருக்கப் போகிறது இது யாருக்குப் பலம்? யாருக்குப் பலவீனம்? எவனாவது வந்து திருகோணமலையில் குந்தட்டும், எங்களை ஆளவிட்டால் போதும் என்று நினைக்கும் ஆண்டபரம்பரைக்கு இது பலம் மட்டும் அல்ல பாதுகாப்பும் தான். ஆனால் ஈழமக்களுக்கு…? முள்ளைப்பிடுங்கி கட்டையை அடித்த கதை !
கோட்பாடுகளுக்கு அப்பால் நடைமுறை ஜதார்த்த அணுகுமுறை வேண்டப்படுகின்ற காலம் இது. இதுவே நேபாள மார்க்ஸ்ஸிட்டுக்களின் காலத்திற்கேற்ற அணுகுமுறையாக இருந்தது. ஒரு தேசத்தின் விடுதலையின் பெயரில் எக்ஸைல் அரசாங்கம் ஒன்றை அமைத்து விட்டு, எந்த ஆயுத, அரசியல் பலமும் இன்றி பிராந்தியத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வளரும் முரண்பாட்டை பயன்படுத்தியும், சர்வதேசத்திடமும், இந்தியாவிடமும் தலையீட்டை வேண்டியும் ஒரு நாட்டை அமைக்க முடியும் என்று நினைத்தால், இன்றைய பூகோள அரசியலில் அது வெறும் கனவுதான்.! ஜதார்த்தம் அல்ல !!.