கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)  

கிறுகு, கிறுக்கு, கிறுக்கி, கிறுகிறுப்பு, பூவல், வக்கடை, நட்டுமை (மண்வாசனைச் சொற்கள் – 03)  

   — செங்கதிரோன் — 

கிறுகுகிறுக்குகிறுக்கிகிறுகிறுப்பு, பூவல்வக்கடை,  நட்டுமை  

மட்டக்களப்பு மாநிலத்தில் ‘மறுகுதல்’ போன்று ‘கிறுகுதல்’ என்ற கிளவியும் உண்டு. கிறுகு என்றால் திரும்பு என்று அர்த்தம். ‘இந்தப்பக்கம் கிறுகு’ என்றால் ‘இந்தப்பக்கம் திரும்பு’ என்பதாகும். ‘கிறுகி வா’ என்றால் ‘திரும்பி வா’ என்றாகும். ஆங்கிலத்தில் ‘Turn’ என்பதற்குச் சமம். 

பாரம்பரிய விளையாட்டான ‘கிட்டிப்புள்’ விளையாட்டின் போது, 

கிட்டிப்புள்ளும் பம்பரமும் 

கிறுக்கியடிக்கப் பாலாறு…. பாலாறு‘ 

என மூச்சுவிடாமல் பாடிக்கொண்டு ஓடுவர். இங்கே கிறுக்கியடித்தல் என்பது  

சுழல- சுற்றி அடித்தல் எனப் பொருள்படும். 

‘கிறுகுதல்’ என்பது சில இடங்களில் சுழல்தல்-சுற்றுதல் எனவும் பொருள் தருகிறது. கிறுக்கு என்றால் சுற்று- திருப்பு எனப்பொருள் தரும். 

போத்தலின் மூடியைக் ‘கிறுக்கி’ என்பர். அதனைக் கிறுக்கி – சுற்றி – திருப்பி இயக்குவதால் இப்பெயர் வந்தது. ‘கிறுக்கியை இறுக்கி மூடு’ என்பார்கள். வீட்டில் கதவு, யன்னல்களை மரத்தோடு அல்லது சுவரோடு இணைத்துப் பூட்டுவதற்கு மரத்தால் அல்லது இரும்பால் செய்த ‘கிறுக்கி’ இருக்கும். இங்கும் இது கிறுக்கி – சுற்றி – திருப்பி இயக்கப்படும் ஒருபொறி. அலுமாரிக்கதவுகளைப் பூட்டுவதற்கும் கதவில் இக் ‘கிறுக்கி’ பொருத்தப்பட்டிருக்கும். 

தலை சுற்றுவதை – மயக்கம் வருவதை மட்டக்களப்பு மாநிலத்தில் கிறுகிறுக்கிறது (கிறுகிறுக்கிது எனப்பேச்சு மொழியில் வரும்) என்பர். ‘கிறுகிறுப்பு’ என்றால் மயக்கம். 

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா- அவன் 

பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! 

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா!……..‘ 

எனக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பாரதிபற்றிப் பாடிய பாடல் வரியிலே (‘மலரும் மாலையும்’ கவிதை நூல்)வரும் ‘கிறுகிறுத்து’ என்பது மயங்கி எனப் பொருளில் வருவது கவனிக்கற்பாலது. ‘கிறுகிறுப்பு’ என்பது தமிழ் நாட்டிலும் ‘மயக்கம்’ என்ற பொருளில் வழங்கிவருவதை இப்பாடல்வரி வழிமொழிகிறது. 

‘கிறுக்கு’ப் பிடித்தவன். ‘கிறுக்கு’ப் பேர்வழி எனும் போது ‘கிறுக்கு’என்பது’திமிர்’ ‘தலைக்கனம்’ என்ற அர்த்தத்தில்வரும் இடங்களும் உண்டு. கிறுக்கன்- திமிர்பிடித்தவன் என்பதற்குப் பெண்பால் பெயர் கிறுக்கி ஆகும்.  

‘பூவல்’ என்பது கிணறு ஆகும். பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக நிலத்தில் ‘பூவல்’ தோண்டுவர். இது கட்டிடங்கள் ஏதுமில்லாமல் வெறுமனே நிலத்திலே நிலத்தடிநீர் வரைக்கும் தோண்டப்பட்டிருக்கும். குளிப்பதற்கும், குடிப்பதற்கும்கூட இப்பூவல் ‘தண்ணி’பயன்படும். சில சந்தர்ப்பங்களில் மரக்குற்றிகளைக் குடைந்து அது குழாயைப்போன்று நிலத்திலே நிலைக்குத்தாக பதிக்கப்பட்டிருக்கும். இந்த மரக்குற்றிக் குழாய்கள் அதன் வாய்கள் ஒன்றன் மேல் ஒன்று பொருந்துமாறு பூவல்- கிணறு நிர்மாணம் செய்யப்பட்டும் இருக்கும். இதனைக் ‘கொட்டுக்கிணறு’ என அழைப்பர். மரத்தைக் குடைந்து குழாய்போல் செய்து வருவதைக் ‘கொட்டு’என்பர். 

இதைத்தான் கவிஞர் அமரர் வீ.ஆனந்தன் தனது கவிதையொன்றிலே ‘மட்டக்களப்பான்- மரங்குடைந்து நீரெடுப்பான்’ என்று பதிவு செய்துள்ளார். 

நாட்டுப் பாடலொன்றிலே காதலி தன் காதலனை – மச்சானைச் சந்திக்கவருமாறு அழைக்கிறாள். 

சந்தன மரத்த மச்சான் சந்திக்க வேணுமெண்டா 

பூவலடிக்கு மச்சான் பொழுதுபட வந்திடுகா‘  

இங்கே பூவலடி என்பது கிணற்றடி. 

இன்னுமொரு நாட்டுப்பாடலும் உண்டு. 

பூவலக் கிண்டி புதுக்குடத்தக் கிட்டவச்சி 

 ஆரம் விழுந்தகிளி அள்ளிதுகா நல்லதண்ணி‘ 

அழகான குமர்ப்பெண்ணொருத்தி பூவலிலே தண்ணீர் மொள்ளுகிற காட்சியிது. 

‘வக்கடை'(வக்கட) என்பதும் மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்களிலொன்று. பரந்த வயல்வெளியை நீர்ப்பாசன மற்றும் விவசாய வசதிகளுக்காகச் சிறு வரவைகளாகப் (PLOTS) பிரித்திருப்பார்கள். இந்த வரவைகளின் எல்லைகளே வரம்பு ஆகும். இந்த வரம்பின் எல்லைகளுக்குள்ளே பயிருக்கான நீர் பிடித்து- தேக்கி வைக்கப்படும். இந்த வரம்பு ‘வரப்பு’ எனவும் அழைக்கப்பெறும். இதைத்தான் ஒளவையார்,  

‘ வரப்புயர நீர் உயரும் 

  நீருயர நெல்லுயரும்’ என்றார். 

போட்டா வரம்பால புறா நடந்து போறது போல்‘ 

என்ற நாட்டுப் பாடலிலே இந்த வரம்பு (வரப்பு) வருகிறது. ஒரு வரவையிலிருந்து 

இன்னுமொரு வரவைக்கு நீர்ப்பாய்ச்சுதற்கு அவ் வரவைகளின் பொது எல்லையாக இருக்கும வரம்பை ஒரு மண்வெட்டி அகலத்திற்கு வெட்டி வழியெடுத்துவிடுவர். தேவையேற்படாதபோது அந்த வழியை மண் மற்றும் புல்லுகளால், வைக்கோலால், மரக்கட்டைகளால் அடைத்தும் விடுவர். இந்த வழியை ‘வக்கடை’ என்பர். இந்த வழி (வக்கடை) வரம்பின் குறுக்காக இருக்கும். 

சிலவேளைகளில் இந்த ‘வக்கடை’க்குக் கீழால் நீர் கசிவதுண்டு. இப்படி நீர் கசிவதை – வெளித்தெரியாமல் கீழாலே (கள்ளமாகக்) நீர் போவதை ‘நட்டுமை’போவதென்பர். ‘நட்டுமை’ (நட்டும) என்பதும் மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொல்லே. நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளான அணைக்கட்டு, துருசி(மதகு), வான்(கலிங்கு), குளக்கட்டு போன்ற நிர்மாணங்களின் அத்திபாரங்களின் கீழால் நீர் கசிந்து ஒடுவதைக்கூட ‘நட்டுமை’ என்றுதான் கூறுவர். ஆங்கிலத்தில் ‘Undermining’ என அழைக்கலாம். வெளித்தெரியாது நிலத்திற்குக் கீழாலே ஏற்படுகின்ற நீர்க்கசிவு (Seepage) இதுவாகும். 

‘நட்டுமை’ என்பது நீர்கசியும் ஒரு ‘கள்ளவழி’தான். அதனைக் கண்டு பிடிப்பதற்கும் கவனமான மேற்பார்வை – அனுபவம் அவசியம். ‘நட்டுமை’யைக் கண்டுபிடித்தால் தான் அதனை அடைக்கலாம் (மூடலாம்). பயிருக்குத் தேவையான நீரை முறையாகத் தேக்கிவைக்க முடியும். ‘நட்டுமை’யினால் நீர்ப்பாசனம் பாதிக்கப்படும். 

எழுத்தாளர் தீரன் ஆர்.எம்.நெஸாத் அவர்கள் எழுதிய நாவலொன்றிற்கு ‘நட்டுமை’ எனப் தலைப்பிட்டிருக்கிறார். இந் நாவலின் கதை களவொழுக்கச் சம்பவமொன்றை மையப்படுத்தியது. நாவலின் தலைப்பு இங்கு குறியீடாக வருகிறது. கள்ள வழியால் நீர்கசிவது ‘நட்டுமை’ எனின் களவொழுக்கமும் ஒருவகையில் சமூகத்தில் நடைபெறும் ஒரு வகை ‘நட்டுமை’யே. இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் நாவலாசிரியர் தீரன் ஆர்.எம்.நெஸாத் அவர்கள் ‘நட்டுமை என்பது வரப்பினுள் பாதுகாப்பாகக் கட்டிவைத்திருக்கும் தண்ணீர், வரம்புகளின் அடியால் அல்லது பிளவுகளால் வேறு பக்கமாகக் களவாக ஓடிவிடல் ஆகும். இது விவசாயக் கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்கு உவமேயமாகப் பாவிக்கப்படுகிறது’ என அடிக்குறிப்புத் தந்துள்ளார்.