நாட்டைவிட்டு ஓட எத்தனிக்கும் இளைய தலைமுறை

நாட்டைவிட்டு ஓட எத்தனிக்கும் இளைய தலைமுறை

— சிக்மலிங்கம் றெஜினோல்ட்— 

“இலங்கையில் இளைய தலைமுறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? அதாவது உங்கள் பிள்ளைகளுடைய, இளைய சகோதர சகோதரிகளின், உங்கள் மாணவர்களின் எதிர்காலம் எப்படியாக இருக்கும்?” 

இந்தக் கேள்வி உங்களுடைய தூக்கத்தை இல்லாமல் செய்யக் கூடியது. ஏற்கனவே பலரிடம் இத்தகைய கேள்விகள் உள்ளதால் தங்கள் பிள்ளைகளை இந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பலர் அதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கி விட்டனர். 

அதுவும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி, ஜனநாயக நெருக்கடி போன்றவையும் இந்த உளநிலையை -எச்சரிக்கையை –பாதுகாப்பு உணர்வை -உருவாக்கியுள்ளன. 

கூடவே யுத்தம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் நிலைமை இன்னும் சீரடையாமல் மேலும் மேலும் சிக்கலடைந்து வருவதால் இந்த உணர்வு இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 

இதற்குப் பதிலாக ஒரு நண்பர் சொல்கிறார் “இப்போதுள்ள நிலைமையை ஐந்து மடங்கினால் பெருக்கிப் பாருங்கள். புரியும்” என்று. 

இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது என்ற அடிப்படையில் இதைச் சொல்கிறார். இதைச் சீராக்கக் கூடிய ஏது நிலைகள் எதுவும் புலப்படவில்லை. அரசிடமும் இதற்கான தெளிவான திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சமூகத்திலும் அவ்வாறான அடையாளங்கள் துலங்கவில்லை. மொத்தத்தில் எதிர்காலம் இருளாகவே உள்ளது என உணர முடிகிறது. 

அப்படியென்றால் சந்தேகமேயில்லை. இது பேரபாயமானதே. 

இன்னொரு நண்பர் (இவர் எழுத்தாளரும் கூட) சொல்கிறார் “முதலில் நிகழ்காலத்தைச் சீராக்குவோம். அதுதான் முக்கியமாகும்” என. 

இதனுடைய அர்த்தம், நிகழ்காலத்தைச் சரியாகக் கட்டமைத்துக் கொண்டால் அதிலிருந்து எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டியெழுப்ப முடியும் என்பதாகும். 

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான கூற்றே. 

உண்மையில் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில்தான் துளிர்க்கிறது. அது வடிமாவது அன்றைய (எதிர்காலத்தில் உள்ளோரின்) மனிதர்களின்  சிந்தனையினாலும் செயற்பாட்டினாலும்தான். 

ஆனால் அவர்களுக்கான அடித்தளம் வேண்டுமே. அதை உருவாக்குவதும் நிகழ்காலத்துக்குரியது, நிகழ்காலத்துக்குரியோருக்குரியது. 

அது நடக்கவில்லை என்பதே எல்லோருடைய கவலையுமாகும். 

இன்னொரு நண்பர், இவர் ஒரு ஆசிரியர் என்பதோடு சமூக அரசியல் இலக்கிய விமர்சகருமாவார். இவர் சொல்கிறார் It’s time to think about it… (இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரமிது) என்று. 

“இளைய தலைமுறையின் வாழ்க்கைக்காகவும் அவர்களுடைய பாதுகாப்புக்காகவும்தான் ஏராளமான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. 

அவர்களுக்கான நவீன (அறிவியற்) கல்வி, தொழில்நுட்ப அறிமுகம், புதிய பயிற்சிகள், பயிற்சி மையங்கள், இளைஞர் அமைப்புகள் எனப் பல திட்டங்களும் கட்டமைப்புகளும் உள்ளனவே. அப்படியிருக்கும்போது எதற்காக இப்படியொரு தேவையில்லாத கேள்வியும் வியாக்கியானங்களும்?”என்று அரசாங்கத்தரப்பிலிருந்து ஒரு ரெடிமெற் பதில் வரக்கூடும். 

இதை ஒத்ததாக வேறு சிலரும் சில பதில்களைச் சொல்லலாம். 

இந்த ஏற்பாடுகளும் கட்டமைப்புகளும் உண்டுதான். ஆனால் இவை பற்றிய கேள்விகளும் உண்டு. 

ஏனென்றால், இந்த நிறுவனங்கள் இன்று தோல்வியான பங்களிப்புகளையே வழங்கியுள்ளன. அதாவது நவீன கல்வியை –எதிர்காலத்துக்குரிய அறிவை –இவை வழங்கிக் கொண்டிருக்கலாம். இளைஞர்களுக்கான கட்டமைப்புகள் கூட இருக்கலாம். ஆனால், அவற்றினால் உருவாக்கப்படும் இளைய தலைமுறையினர் தாம் படித்த துறையில் வேலைகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. 

இதற்கு கடந்த 15 ஆண்டுகாலத்தை ஒரு மாதிரிக்கு எடுத்துக் கொள்ளலாம். 

இந்தப் 15 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டு வெளியேறியோரில் 70 வீதமானோருக்கு அவர்கள் படித்த கல்விக்கு மாறான வேலைகளே கிடைத்துள்ளன. 

மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளைத் தவிர்ந்த ஏனையோருக்கு அவர்கள் படித்த அடிப்படையில் தொழில் கிடைப்பதில்லை. வெளியே வேலைகளை உருவாக்கக் கூடிய சூழலும் இல்லை. இதனால் தமக்கு அரசாங்கமே வேலையை வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள் இந்தப் பட்டதாரிகள். வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டங்கள் இந்த வகையானவையே. 

அரசாங்கமும் அரசியற் கட்சிகளும் இந்த நிலையைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, “அரச உத்தியோகம் பெற்றுத் தரப்படும்” என தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்கின்றன. இதனால் படித்தது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஏதாவது ஒரு உத்தியோகம் கிடைத்தால் போதும் என்று அந்த வேலை வாய்ப்பில் சேர்ந்து விடுகிறார்கள். 

இதனால் பல அரச திணைக்களங்களில் அந்தத் திணைக்களங்களுக்குப் பொருத்தமற்ற பலர் நிரப்பப்பட்டுள்ளனர். இது அவர்களுடைய ஆற்றலைப் பயன்படுத்த முடியாமல் போவதுடன் அந்தத் திணைக்களங்களையும் பலவீனப்படுத்துவதாக உள்ளது. 

இது தவிர, மேற்கல்வியைத் தொடர முடியாத பல்லாயிரக்கணக்கானோருக்கு எதிர்காலத் திட்டங்கள் எதுவும் தெளிவாக இல்லை. இளைஞர் விவகார அமைச்சு ஒன்று தனியாக இருந்தாலும் அதனால் சரியான முறையில் வழிகாட்டல்களைச் செய்யவும் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியவில்லை. 

இதன் காரணமாக இளைய தலைமுறையில் பலரும் வெளியேறும் மனநிலையிலேயே இருக்கின்றனர். இந்த வெளியேறும் மனநிலையும் இந்த வெளியேற்றமும் சாதாரணமானதல்ல. 

நாட்டுக்குப் பேரிழப்பைத் தருவதாகும். அதேவேளை தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருக்கும் துயரை ஏற்படுத்துவதாகும். 

வெளியேறிச் செல்வோர் அனைவரும் நாட்டைப் பிரிந்து, பிறந்து வளர்ந்த ஊர், உற்றம் என்ற சூழலைப் பிரிய முடியாமல் பிரிந்தே செல்கிறார்கள். 

யாருக்குத்தான் பெற்றோரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறி பிற நாடொன்றில் வேலைக்கோ வாழவோ செல்ல விருப்பமாக இருக்கும்? 

“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?” என்பது எல்லோருடைய உள்ளத்திலும் கொதித்துக் கொண்டிருக்கும் உண்மை. 

ஆகவே யாரும் ஊரையும் உறவுகளையும் தாய் நாட்டையும் விட்டு வெளியேற விரும்பவே மாட்டார்கள். 

அப்படியிருந்தும் எதற்காக இந்தப் பிரிவை ஏற்றுக் கொண்டு துயரத்துடன் வெளியேறுகிறார்கள்?என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

காரணம், நாட்டில் தங்களுடைய எதிர்காலத்தை நிர்மாணிக்க முடியாது. அதற்கு உத்தரவாதமில்லை. ஒன்று, தொடரும் இனவாதம். இரண்டாவது தொடரும் ஜனநாயக நெருக்கடி. மூன்றாவது, சீரில்லாத பொருளாதாரக் கொள்கை. நான்கு, திட்டமில்லாத, ஸ்திரமற்ற அரசியல் முன்னெடுப்புகள். திறமைக்குரிய இடமும் அங்கீகாரமும் இல்லை என்ற நிலை. 

இப்படியான நியாயமான காரணங்களினால் இளைய தலைமுறை சலித்துப் போயிருக்கிறது. சோர்ந்திருக்கிறது. கோபத்துடனிருக்கிறது. 

இதனால்தான் அது இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிந்திக்கிறது. 

இந்த வெளியேற்றம் கூட இரண்டு வகையானது. ஒன்று தொழிலுக்கான தற்காலிக வெளியேற்றம். இரண்டாவது, புலம்பெயர்ந்து செல்லும் நிரந்தர வெளியேற்றம். 

இரண்டு வெளியேற்றங்களிலும் இளையோரோ பெரும்பாலானவர்களாக இருக்கின்றனர். இளையோர் என்பது ஒரு நாட்டின் அருமையான வளமாகும். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளமாகும். அதிலும் இளைய தலைமுறையின் ஆற்றலும் அறிவும் முக்கியமானது. அதை இந்த நாடு இழந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எந்த வகையில் வெளியேறினாலும் அது நாட்டுக்குப் பேரிழப்பே. 

முன்பு யுத்தத்தினால் பல லட்சம் இளையோரின் ஆற்றல் வீணடிக்கப்பட்டது –நாசமாக்கப்பட்டது. 

அதற்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் (ஜே.வி.பி கிளர்ச்சிகள், தமிழ் இயக்கங்களின் போராட்டங்கள்) பல லட்சம் இளையோரின் ஆற்றல் இழக்கப்பட்டது. அவர்களே இல்லாதொழிக்கப்பட்டனர். 

இந்த நெருக்கடிகளாலும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும் பல லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர். 

அவர்களே இன்று புலம்பெயர்ந்தவர்களாக உள்ளனர். 

ஆகவே கடந்த ஐம்பது ஆண்டுகளாக (1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சி ஏற்படத் தொடங்க முன்பிருந்து) இலங்கையின் இளையோரில் கணிசமான தொகையினரின் ஆற்றலும் அறிவுத்திறனும் உற்பத்திக்கும் வளர்ச்சிக்குமாகப் பயன்படுத்தப்படவில்லை. அவை சிதறிக்கப்பட்டன. இழக்கப்பட்டன. 

பின்னர் அது வெளியுலகத்தில் இழக்கப்பட்டன. இப்பொழுதும் இதுவே நிகழ்கிறது. இனியும் இதுதான் நிகழக்கூடிய சாத்தியமுண்டு. 

விமான நிலையத்தில் நீங்கள் ஒரு சில மணி நேரம் நின்றாலே தெரியும் பணியாளர்களாகவும் பணிப்பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எத்தனை ஆயிரம் பேர் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று. 

அதைப்போல தினமும் ஏதேதோ வழிகளால் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளுக்கெல்லாம் எவ்வளவு பேர் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும். 

இங்கே – இலங்கையில் தொழில் வாய்ப்பும் வாழ்வுக்கான உத்தரவாதமும் அமைதியான அரசியல் சூழலும் இருக்குமாக இருந்தால் இவர்கள் வெளியேறுவார்களா? அதற்கான அவசியம் இருக்குமா? 

இதைப் புரிந்த கொள்ள முடியாதிருப்பது ஏன்? புரிந்தால் இதைச் செய்யாதிருப்பது ஏன்? 

இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் உள்ளன. இதில் நாம் தனியே அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ முடியாது. ஆனால் அரசாங்கம்தான் பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அரசாங்கத்துக்கு அப்பால் சமூகவியல், பொருளாதாரத்துறை, தொழில்துறை, வாழ்வுத்துறை போன்றவற்றில் ஈடுபடும் புத்திஜீவிகள் அனைவருக்கும் இதில் பெரும் பொறுப்புண்டு. 

முக்கியமாகப் பல்கலைக்கழகங்களுக்கும் அதற்கு நிகரான நிறுவனங்களுக்கும். 

அதைப்போல சமூக மட்டத்திலான அமைப்புகளுக்கும் இதில் பொறுப்புண்டு. 

இவையெல்லாம் இதைச் செய்யாத காரணத்தினால்தான் ஒரு தொகுதியினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அதற்கு வாய்ப்பில்லாதோரில் ஒரு தொகுதியினர் கசிப்பு கஞ்சா போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஏனையோர் மிகச் சிரமப்பட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். 

இலங்கை மணித்திருநாட்டின் இளைய தலைமுறையின் எதிர்காலம் இப்படித்தான் உள்ளது.