யாரைத்தான் நம்புவதோ?

யாரைத்தான் நம்புவதோ?

—- கருணாகரன் —-

“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…” என்றொரு பாடலை நெஞ்சை உருக்கும் விதமாக சுசீலா பாடுவார். பறக்கும் பாவை என்ற திரைப்படத்தில் உள்ள பாடல் இது. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆற்றமையின் வெளிப்பாடாக ஒலிப்பது. 

ஆனால், இந்தப் பாடலின் முதல் வரி இன்று தருகின்ற – ஏற்படுத்துகின்ற உணர்வலைகள் வேறு. அதன் பொருளும் வேறு.

பெரும்பாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் வயிற்றில் எரியும் வேதனையின் வரிகள் இவை எனலாம். இன்று பெண் பிள்ளைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. வீட்டிலும் அவர்களுடைய பாதுகாப்புக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் இன்னும்  எச்சரிக்கை அடைய வேண்டும். அந்தளவுக்கு நிலைமை – சூழல் – கவலைக்குரியதாகியுள்ளது.

வீட்டில் குடும்பத்தின் உறவு வட்டத்தினரால் பல பெண் பிள்ளைகள் 05,06 வயதிலிருந்தே சிதைக்கப்படுகிறார்கள். குறிப்பாகப் பாலியல் ரீதியாக. மாமா, மச்சான், பெரியப்பா, சித்தப்பா, அயலில் நெருங்கிப் பழகக் கூடிய ஆண்களால். 

எல்லா உறவினர்களும் அப்படி இல்லை என்றாலும் எல்லாரையும் நம்ப முடியாது என்பதும் உண்மை.

இதைக்குறித்த முறைப்பாடுகளும் மருத்துவ ஆய்வுகளும் தினமும் வருகின்ற செய்திகளும் தரும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பன. – கவலைப்பட வைப்பன. – சமூகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றவை.

இதிலும் 50, 60 வயதுக்கு மேற்பட்ட முதுநிலை ஆண்கள் இழைக்கின்ற இந்த வன்கொடுமைக் குற்றங்கள் சாதாரணமானவையல்ல. வெட்கக் கேடானவையும் கூட.

இதனால் பிள்ளைகளை யாருடன் நம்பிப் பழக விடுவது? எப்படியான சூழலில் பிள்ளைகளை சுதந்திரமாக வாழ அனுமதிப்பது என்ற குழப்பமும் தவிப்பும் வேதனையும் பெண்பிள்ளைகளைப் பெற்றோருக்கு உள்ளது. மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது என்பார்களே அதையும் விடக் கடினமான, கவலையான நிலை இது.

“எங்கே நின்றாலும் மனம் (பெண்) பிள்ளைகளின் பாதுகாப்புக் குறித்தே எச்சரிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டிலேயே ஒரு பத்து நிமிசம் பிள்ளை தனியாக நிற்க முடியாத காலம் இது. என்ன கொடுமை இது? சீ” என்று கவலைப்படுகிறார் அலுவலகத்தில் பணிபுரிகின்ற தாய் ஒருவர்.

இதே கவலைகள் பலருக்கும் உண்டு.

இன்னொரு வீட்டில் நானே கண்களால் கண்ட உண்மையையும் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் இருவரும் உத்தியோகம் பார்ப்பவர்கள். இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள். இருவருக்கும் 15க்கும் 20க்கும் இடைப்பட்ட வயது. பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டையும் வெளிக்கேற்றை வெளியே பூட்டி விட்டு வீட்டிற்குள்ளே இருக்கின்றனர். முற்றத்தில் இறங்குவதே இல்லை.

பெற்றோர் வரும்போது கேற்றைத் திறந்து கொண்டு, வீட்டில் நுழையும்போதே பிள்ளைகள் இயல்புக்கு வருகின்றனர்.

இது நம்முடைய சமூகத்தில் தமக்குப் பாதுகாப்பில்லை என்பதைத்தானே காட்டுகிறது. இதற்கு என்ன பதில் நம்மிடமுண்டு?

இதில் சிலர் அந்தப் பெற்றோரைக் குற்றம் சாட்டலாம். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை இதைத் தவிர வேறு தெரிவைச் செய்ய முடியாதிருக்கின்றனர். தமக்குரிய பாதுகாப்பை தாம்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னதான் அவர்களால் செய்து விட முடியும்?

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு “பாபநாசம்” என்ற திரைப்படம் நினைவுக்கு வரலாம்.

அதிலும் இரண்டு பெண் பிள்ளைகளோடு தந்தையும் தாயும் படுகின்ற பாடுகளை நாம் பார்க்க முடியும். இதையெல்லாம் யோசித்தால் பெண்களைப் பெறுவதே எவ்வளவு பிரச்சினை என்ற எண்ணம்தான் வரும்.

அந்தளவுக்கு பெண் பிள்ளைகளின் பாதிப்புக் குறித்து தினமும் வருகின்ற செய்திகள் கலவரமூட்டுகின்றன.

பல குடும்பங்களில் – வீடுகளில் பல பெண் பிள்ளைகள் இத்தகைய துஷ்பிரயோகத்துக்கும் வன்முறைக்கும் உள்ளாகின்றனர். ஆனால் அவையெல்லாம் வெளியே வருவதில்லை. சில சம்பவங்கள் மட்டுமே பதிவாகின்றன; வெளிப்படுத்தப்படுகின்றன. 

எப்படி தங்கள் பிள்ளையின் கதையை – நிலையை – பிள்ளைக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொல்வது? அது அந்தப் பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதிக்குமே என்று பல பெற்றோர் அதை மறைக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் அது தவிர்க்க முடியாதது. இதை நாமும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதோடு இந்தச்ம்  சம்பவங்கள் மேலும் கூடுகின்றன என்பது உண்மையே.

ஆனாலும் யதார்த்தத்தில் சமூகக் கண்ணோட்டத்திலிருந்து தப்ப வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் சிந்திப்பார்கள்.

ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளே அடைகின்ற துக்கமும் மன அழுத்தமும் சாதாரணமானதல்ல. மிக மிகக் கடுமையான மன நெருக்கடியைக் காலம் முழுவதும் அடைந்து கொண்டேயிருக்கிறார்கள். கையாலாகாதவர்கள் போலாகி விடுகிறார்கள். தாம் எந்த வகையிலும் செய்யாத ஒரு குற்றத்துக்கும் தவறுக்கும் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்களாகி விடுகின்றனர்.

இதைப்போலவே வீட்டுக்கு வெளியே பாடசாலைகள் தொடக்கம் சகல இடங்களிலும் சிறுமிப் பராயத்தில் உள்ளோர் சந்திக்கின்ற அபாய நிலைகள் மிக அதிகமாகி விட்டன.

பாடசாலைகளில் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நிலை. ஏனென்றால் பல பாடசாலைகளில் இந்த மாதிரிச் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதைக்குறித்து ஆசிரியர் சங்கங்கள் கூட வாயைத் திறப்பதில்லை.

மொத்தத்தில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பெண் பிள்ளைகளுக்கு – அதுவும் சிறுமிப் பிராயத்தில் உள்ளோருக்கு மிகப் பாதகமான சூழல் இன்று உருவாகியுள்ளது.

இதனால் பெண் பிள்ளைகளைப் பெற்றோர் தாமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை. என்பதால்தான் பிள்ளைகளோடு வீட்டில் நிற்க வேண்டியுள்ளது. வெளியே செல்வதாக இருந்தால் பிள்ளைகளை கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. 

பாடசாலைகளுக்கோ தனியார் வகுப்புகளுக்கோ ஏற்றி இறக்க வேண்டியுள்ளது. தனியாக வாகனங்களில் கூட யாரையும் நம்பி ஏற்றி விடவோ அனுப்பி விடவோ முடியாது என்ற கட்டம். எந்த நேரமும் தவித்துக் கொண்டு, தகிக்கும் மனதோடு அலைய வேண்டும் என்ற நிலையில் வாழும் அவலமிது. 

என்பதால்தான் ஏற்கனவே சொன்ன “யாரைத்தான் நம்புவதே பேதை நெஞ்சம்…?” என்று சொல்ல வேண்டியுள்ளது.

இது அவர்களை மனரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

தங்கள் நாளாந்த வேலைச் சுமைகளோடு இந்தச் சுமையையும் ஏற்க வேண்டிய நிலை.

பிள்ளைகளைப் பெற்றால் அவர்களைப் பாதுகாக்கத்தானே வேணும். அது பெற்றோருக்குரிய பொறுப்புத்தானே என்று யாரும் சொல்லலாம்.

பெற்றோருக்குப் பொறுப்புண்டுதான். ஆனால் அதற்கொரு எல்லை உண்டு. எந்தச் சூழலிலும் எல்லா நிலையிலும் பெற்றோரால் முழுப்பொறுப்பையும் ஏற்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

உண்மையில் இது சமூகத்தின் பொறுப்புச் சார்ந்த ஒன்றே.

ஒவ்வொரு தனி மனிதரையும் சமூகமே முதலில் பாதுகாக்க வேண்டும். அது ஆணாக இருந்தாலென்ன பெண்ணின் பாதுகாப்பாக இருந்தாலென்ன வளர்ந்தோர் சிறியோராக இருப்போர் யாராக இருந்தாலும் சமூகமே அனைவருக்குமான பாதுகாப்பை வழங்க வேண்டும். அதுதான் சமூக விதியாகும். அதுதான் பண்புள்ள, அறிவுள்ள, நியாயமான, வளர்ச்சியடைந்த சமூகத்தின் அடிப்படையாகும்.

நம்முடைய சமூகம் இன்று இதற்கான சாத்தியங்களை இழந்திருக்கிறது என்றால் கோளாறுகள் அதிகரித்திருக்கிறது என்றுதானே பொருள்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் மனிதர்கள் உச்சமான பாதுகாப்பையும் அனைத்து வகையான சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பெறுகிறார்கள் என்றால் அது அவர்கள் தமக்குள் உருவாக்கிக் கொண்ட அடிப்படைகளால்தான் சாத்தியமானது. 

அதற்காக அவர்கள் பல பாடுகளைச் சந்தித்திருக்கிறார்கள். போராடியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் செய்தே இன்றைய இந்த நிலையை எட்டியிருக்கிறார்கள்.

ஆனால், நம்முடைய சமூகத்தில் முன்னர் எவ்வளவோ பாதுகாப்பு இருந்தது என்பதை நீங்கள் ஒவ்வொருவருமே உணர்வீர்கள்.

அன்று இன்றைய அளவுக்கு வசதிகளே இருக்கவில்லை. மின்சாரமே பல வீடுகளுக்கு, கிராமங்களுக்கு இருக்கவில்லை. சரியான போக்குவரத்தில்லை. கிராமப்புறங்களில் தனியனாகவே நடந்து அல்லது சைக்கிளில் சென்று படித்தார்கள். தோட்டத்துக்கோ வயலுக்கோ பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்றார்கள். ஏன் ஆடு, மாடுகளை மேய்க்கக் கொண்டு சென்ற பெண் பிள்ளைகளும் உண்டு.

ஏன் உங்களில் பலருக்கு உங்கள் இளமைப் பிராயத்தில் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கடந்த அனுபவம் இருக்கும்.

ஆனால் அன்றையையும் விட இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் (?) ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து, தொடர்பாடல், மின்சாரம், சட்டம். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளுக்கான அமைப்புகள், கல்வி எனப் பல வகையான ஏற்பாடுகள் உண்டு. 

இருந்தாலும் நிலைமையே தலைகீழாகிக் கவலைப்படும் அளவிலேயே உண்டு.

இதற்கு என்ன செய்யலாம்? யார் இதற்கான பொறுப்பை ஏற்பது?

நாமே பொறுப்பாளிகள். நாமே இதைச் சீர்ப்படுத்த வேண்டும். ஏனென்றால் நம்மிடமிருந்தே – நம்முடைய சமூகத்திடமிருந்தே இந்தக் குற்றங்கள் பெருகுகின்றன. நம்முடைய சமூகத்திடமிருந்தே பாதுகாப்பற்ற – அபாய நிலை தோன்றியுள்ளது. நம்முடைய சமூகத்தையே நம்ப முடியாதிருக்கிறது. 

என்றால் நாம்தானே இதற்குப் பொறுப்பு?

இந்த நிலையில் நாம் எப்படி நம்முடைய அறிவைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் சமூகப்பெருமைகளைப் பற்றியும் (பெருமையாக) பேச முடியும்?