சொல்லத் துணிந்தேன் – 100 (இறுதிப் பகுதி)

சொல்லத் துணிந்தேன் – 100 (இறுதிப் பகுதி)

(‘அரங்கம்’ அச்சு ஊடகமாக வெளிவந்த காலத்தில் அதன் 57ஆவது இதழில் (29.03.2019) ஆரம்பித்து, பின் ‘அரங்கம்’மின் ஊடகமாக மாற்றமடைந்த போதும் அதனிலும் தொடர்ந்து, இன்றுவரை (18.12.2021) ‘சொல்லத் துணிந்தேன்’ என்னும் தலைப்பிலான அரசியல் பத்தித் தொடரில் நூறு பத்திகளை எழுதியுள்ளேன். தமிழர் தரப்பு அரசியலின் பலவீனங்களை இப்பத்திகளில் கூறி வந்திருக்கிறேன். அவற்றை எத்தனை பேர் உள்வாங்கிக் கொண்டார்களென்பது ஒருபுறமிருக்க, என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சன ரீதியான விடயங்களைத் தமிழ்த்தேசியம்(?) பேசுகின்ற கட்சிகளால் எளிதில் கடந்து செல்ல முடியாது என்ற உண்மையை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் இக்கட்சிகள் யாவும் தேர்தல் மைய அரசியலையே நடத்திக் கொண்டிருக்கின்றன. இக்கட்சிகளுக்குப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலும் பார்க்கப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அரசியல் செய்வதே நோக்கமாகும். இது இலங்கை அரசாங்கங்களின் பௌத்த சிங்களப் பேரினவாதப்போக்கிற்கு எப்போதுமே சாதகமானதாகும். இதனால் இத்தேர்தல்மைய அரசியல் போக்கிலிருந்து விலகி தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பது ஒரு ‘மாற்று அரசியலால்’தான் சாத்தியம். அதற்கான முன்மொழிவுகளையே செய்துள்ளேன். 

இத் தொடரின் நூறாவது பத்தியான இறுதிப்பத்தியின் மூலம் ‘சொல்லத் துணிந்தேன்’ பத்தித்தொடரை நிறைவு செய்து, அடுத்த வருடத்திலிருந்து (2022) புதிய அரசியல் பத்தித் தொடரொன்றை எழுத உத்தேசித்துள்ளேனென்பதை வாசக அன்பர்களுக்கு முற்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அறியத் தருகின்றேன். அப்புதிய தொடருக்கும் உங்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி. 

அன்புடன்   

—    தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.) 

சொல்லத் துணிந்தேன்-100 

மாற்று அரசியல் அணியை எவ்வாறு உருவாக்குவது 

— தம்பியப்பாகோபாலகிருஷ்ணன் —  

இன்று இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பரப்பில் செயற்படுகின்ற கட்சிகள்-கூட்டணிகள் (ALLIANCES) மற்றும் அவற்றின் கொள்கைகள் செயற்பாடுகளை எடுத்து நோக்கினால், வடக்குக் கிழக்குத் தமிழர்களால் தேர்தல்களில் ஒப்பீட்டு ரீதியாகப் பெருவாரியாக ஆதரிக்கப்படுகின்ற அணியான தமிழரசுக் கட்சியைத் தலைமைக் கட்சியாகக் கொண்டு இரா.சம்பந்தன் தலைமையில் செயற்படும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ ஒரு அணியாகவும், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் செயற்படும் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அவரோடிணைந்தவர்களும் மற்றொரு அணியாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) ஒரு தனிக்காட்டு ராஜாவாக எவருடனும் சேராமல் இன்னொரு அணியாகவும் வலம் வருகின்றன. இந்த மூன்று அணிகளையும்தான் ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எனத் தமிழ் ஊடகங்கள் குறி சுட்டு அடையாளப்படுத்தியுள்ளன. இம்மூன்று அணிகளும் புலிகளின் முகவர்களாகவே தம்மை அரசியல் அரங்கில் அடையாளப்படுத்தியுமுள்ளன. 

செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள். தற்போது இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அதேவேளை ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் தமிழரசுக் கட்சியிலிருந்தும் விலகிச் சென்று அவற்றிற்கெதிராக அல்லது மாறாகச் செயற்படுகின்ற சி.வி.விக்னேஸ்வரன்+சுரேஷ் பிரேமச்சந்திரன்+ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம்+அனந்தி சசிதரன் அணியுடன் உறவாடி இரண்டு தோணியில் கால் வைத்துக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் இவர்களிருவரும் என்ன செய்வார்களோ தெரியாது. எது எப்படியிருப்பினும் இவர்கள் எல்லோருமே தங்களைப் புலிகளின் முகவர்களாகவே முத்திரையைக் குத்திக்கொண்டுள்ளனர். 

இவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ‘பிளவுபடாத- பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய தீர்வு’ என்றும், தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ‘வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டிக் கட்டமைப்புக்குள் அதி உச்சபட்ச அதிகாரப்பகிர்வு’ என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘இரு தேசங்கள்; ஒரு நாடு (தமிழீழத் தனிநாடு) என்றும் ஆளுக்கொரு வாய்ப்பாட்டை மனனம் பண்ணிக்கொண்டு திரிகிறார்கள். 

இப்படியாகத் தமிழ்த் தேசிய அரசியல் இடியப்பச் சிக்கலாகச் சிக்குண்டு குழம்பிப்போயுள்ளது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்துச் சிங்கள சமூகமும்- இந்தியாவும்- சர்வதேச சமூகமும் தெளிவில்லாமலேயே இருக்கின்றன. தமிழ் மக்கள் தனிநாட்டை எதிர்பார்த்தாலென்ன- ‘சமஸ்டி’யை எதிர்பார்த்தாலென்ன தமிழர்கள் எதிர்பார்ப்பதும் விரும்புவதும் வேறு. அரசியல் கள யதார்த்தம் வேறு. எனவே இன்றைய கால நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன வேண்டும் (அது நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும்) என்கின்ற தெளிவு தமிழர் தரப்பிலிருந்துதான் வரவேண்டும். 

மேற்கூறப்பெற்ற மூன்று ‘தமிழ்த்தேசிய'(?) அணிகளும் புலிகளின் முகவர்களாகவே தம்மை அடையாளம் காட்டியுள்ளதால், இவர்களைத் தேர்தலில் மக்களால் பெருவாரியாக வாக்களிக்கப்பட்டு ஆதரிக்கப்பெற்றவர்கள் என்ற கோதாவில் இலங்கை அரசாங்கமென்றாலும் சரி (அது எந்தக் கட்சி அரசாங்கமாயிருந்தாலும்)- இந்திய அரசாங்கமென்றாலும் சரி (அது எந்தக்கட்சி அரசாங்கமாயிருந்தாலும்)- சர்வதேச சமூகமென்றாலும் சரி- அல்லது வேறு சக்திகளானாலும் சரி இந்த அணியினருடன் ஒரு ஒப்புக்காகப் பேசுகின்றார்களேயொழிய இவ்வணிகளின் மீது நம்பிக்கை வைத்து அல்லது இவர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளென மனதார ஏற்றுக்கொண்டு பேசவில்லை. இது சரியா? பிழையா? என்பதல்ல வாதம். ஆனால் இதுதான் யதார்த்தமான நிலைமை. இவர்களைப் புலிகளின் முகவர்களாகவே இச்சக்திகள் பார்க்கும் வரைக்கும் நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி இவர்களைச் சிங்கள சமூகமோ- இலங்கை அரசாங்கமோ- இந்திய அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சர்வதேச சமூகம் என்று வருகையில் இந்தியாவை மீறி எதுவும் நடைபெறப் போவதில்லை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவை மீறி அல்லது ஓரங்கட்டி சர்வதேச சமூகம் என்றொன்று இல்லை. இலங்கை அரசாங்கம் தானாக எதனையும் தரப்போவதுமில்லை. இலங்கை அரசாங்கங்களின் மீது இலங்கைத் தமிழர்கள் சார்பாக அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரேயொரு சக்தி இந்தியா மட்டும்தான். 1987 ஜூலை 29இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் வாயிலாக அந்தக் கடப்பாடு இந்தியாவுக்குண்டு. 

இந்தியாவின் நிலைப்பாடு 1987 இலிருந்து கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இராஜதந்திர ரீதியாக “இலங்கை அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற  கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின்அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்” என்பதேயாகும். 

இந்த நிலைப்பாட்டையே இலங்கைத் தமிழர் தரப்பும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இராஜதந்திர ரீதியாக அதிகாரப்பகிர்வு நோக்கிய தம் அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிப்பதைத் தவிர நடைமுறைச் சாத்தியமான- அறிவுபூர்வமான மாற்று வழிகள் எதுவுமில்லை. பூசிமெழுகாமல் ‘பச்சை’யாகச் சொல்லப்போனால் விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் காலில் விழுவதொன்றுதான் இன்று இருக்கக்கூடிய மாற்றுவழி. 

தமிழர்களின் கைவசம் இருப்பது பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் மட்டுமே. 

எனவே, தனிநாட்டிற்கும்- ‘சமஸ்டி’க்கும்-புதிய அரசியலமைப்புக்கும் கனவு காண்பதை விடுத்து. இந்தப் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய இலங்கை அரசாங்கத்தையும் இந்திய அரசாங்கத்தையும் கோரும் ஒரு பலமான ‘மாற்று அரசியல் அணி’ இலங்கைத் தமிழர்களிடையே மேற்கிளம்புவது அவசியம். “கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்”. இந்தச் செயற்பாடுதான் இன்று தேவை. இந்தியாவும் தானாக முன்வந்து எதனையும் செய்யப் போவதில்லை. தேவை இலங்கைத் தமிழர்களுக்கே தவிர இந்தியாவுக்கல்ல. “அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்”. 

ஆனால், புலிகளின் முகவர்களாக உள்ள மேற்குறிப்பிட்ட ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ எதுவும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யக் கோரும் வெகுஜன இயக்கத்தை உளப்பூர்வமாக முன்னெடுக்கப்போவதில்லை. ஏனெனில் புலிகளால் நிராகரிக்கப்பட்ட இத்தீர்வை இப்புலிமுகவர்களும் முன்னெடுக்கப் போவதில்லை. அப்படித் ‘தேர்தல் அரசியல்’ காரணங்களுக்காக இவர்கள் முன்னெடுத்தாலும் (பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான பேரணி போன்று) அவை வெற்றியளிக்கபோவதுமில்லை. 

‘பொங்கு தமிழ்’- ‘எழுக தமிழ்’- பொத்துவிலிலிருந்து பொலிகண்டிக்குப் பேரணி- ஜெனீவாவுக்குக் கடிதம்-அமெரிக்கப் பயணம் இத்தியாதி இத்தியாதி எல்லாமே தேர்தல் மைய அரசியலுக்கான வெறும் ‘சிலுசிலுப்பு’க்களே. 

இந்தப் பின்புலத்தில், பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகவும் அரசியல் விருப்புடனும் அர்த்தமுள்ள விதத்திலும் அமுல் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும்- கடமையும்- தகுதியும்- தார்மீக பலமும்- தத்துவார்த்தத் தளமும்  பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கே தனித்தனியாகவும் கூட்டாகவும் உண்டு. 

இந்த விடயம் சம்பந்தமாகக் கடந்த 09.04.2021 அன்று கொழும்பில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில், கலாநிதி எந்திரி கா.விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கைதமிழர் மகாசபை, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான (தற்போதைய) தமிழர் விடுதலைக்கூட்டணி, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தி.சிறிதரன் (தோழர் சுகு) தலைமையிலான (வரதராஜப் பெருமாளின்) தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, மு.சந்திரகுமார் (கிளிநொச்சி) தலைமையிலான சமத்துவக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் கூடி ‘அதிகாரப்பகிர்வுக்கான இயக்கம்’ (MOVEMENT FOR DEVOLUTION OF POWER) என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இலங்கைத் தமிழ் மக்களுக்கு இது ஒரு நம்பிக்கை நட்சத்திரம். டக்ளஸ்தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் எதிர்காலத்தில் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளும் சாத்தியமுண்டு. 

அப்படியாயின் அதனையும் இணைத்துக்கொண்டு குறைந்தபட்சம் இந்த ஆறு கட்சிகளும் இணைந்து ஐக்கியப்பட்டு ஒரு ‘மாற்று அரசியல் அணியாகப் பலம்பெற வேண்டும். மக்களும் போலித் தமிழ்த்தேசியம் பேசும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பின்னால் பிரிந்து பிரிந்து சென்று பலவீனப்படுவதை விடுத்து மேற்குறிப்பிடப்பட்ட ஆறு தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டு அணியாக இணைந்த ‘மாற்று அரசியல் அணி’யின் (அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்) பின்னே அணிதிரள்வதன் மூலம் பலம் பெறவேண்டும். இந்தப் பொறிமுறையொன்றினால் மட்டுமே இப்பத்தித்தொடர் அதன் ஆரம்பத்திலிருந்தே துணிந்து சொல்லி வருகின்ற ‘மாற்று அரசியல் அணி’யை உருவாக்க முடியும். 

இந்த மாற்று அரசியல் அணி இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தீராத நோயொன்றைக் குணப்படுத்துவதற்கான வேறு மருந்துகளின்றி மேற்கொள்ளப்படும் ‘சத்திரசிகிச்சை’ போன்றதாகும். 

இத்தகைய ‘மாற்று அரசியல் அணி’யின் மீது மட்டுமே சிங்கள சமூகமோ- இலங்கை அரசாங்கமோ- இந்திய அரசாங்கமோ- சர்வதேச நாடுகளோ நம்பிக்கை வைக்கும். அந்த நம்பிக்கையினூடு மட்டுமே இனப்பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிய தமிழர்களின் நீண்ட பயணம் இனியாவது தடையின்றித் தொடர முடியும். 

மேற் குறிப்பிடப்பட்ட ஆறு கட்சிகளும் இதன் பாரதூரத்தை உணர்ந்து தத்தம் கட்சி-சின்னம்-கொடி- நலன்கள் என்ற தன் முனைப்பான குறுகிய செயற்பாட்டு வட்டத்திற்குளிருந்து வெளியேறி மக்களின் நலன் மட்டுமே இலக்கு எனக் காரியமாற்றத் துணிந்து ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கமாக’ ஐக்கியப்படுவார்களாயின், இதுவரை காலமும் செல்லும் வழி தெரியாது தமிழ்த் தேசியக் கட்சிகளின் குறுந் தமிழ்த் தேசியவாத மற்றும் புலிப் பாசிசப் போதையூட்டப்பெற்று அறிவுபூர்வமான சிந்தனைகள் காயடிக்கப்பட்ட மக்களும் போதை தெளிந்து, அவர்தம் உளவியலிலும் மாற்றம் ஏற்பட்டு இத்தகைய ஐக்கியப்பட்ட ‘மாற்று அரசியல் அணி’யின் பின் அணிதிரள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்போது தமிழ்த் தேசிய அரசியல் சரியான திசையை நோக்கிச் சரியான தடத்தில் கால்பதிக்கும். 

தனியொரு கட்சியினால் மாற்று அரசியலை வழங்க முடியாது. மக்கள் தனியொரு கட்சியின் பின்னால் தொடர்ந்து செல்லத் தயாரில்லை. தமக்குள்ளே உளப்பூர்வமாக மக்கள் நலன் சார்ந்த குறிக்கோளுடன் ஐக்கியப்படும் ஒரு கூட்டு அணியின் பின்னேதான் மக்கள் அணிதிரளக் காத்திருக்கிறார்கள். அத்தகைய அரசியல் கூட்டு அணியொன்றினை- ‘மாற்று அரசியல் அணி’யொன்றினை மேற்கூறப்பெற்ற ஆறு அரசியல் கட்சிகளும் ஏற்படுத்த இனியும் தாமதிக்கக் கூடாது. 

சொல்லத் துணிந்தேன் பத்தித் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.