— அழகு குணசீலன் —
யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் இன்பம் உட்பட இரு இளைஞர்களை கொலைசசெய்து புதைத்த பின்னர் அதைச்செய்த புளோட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அஞ்சலி செலுத்தி துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அப்போது மட்டக்களப்பில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூறிய வார்த்தைகளே “கொலைசெய்தவர்களே அஞ்சலி செலுத்துகிறார்கள்” .என்பது.
மட்டக்களப்பின் பிரபல சட்டத்தரணியும், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்பனவற்றின் முக்கிய அரசியல்வாதியுமான சாம். தம்பிமுத்து , மிகவும் இக்கட்டான காலத்தில் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் தலைவராகவும் இருந்தவர். 1989 நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்டு, ஜனநாயக ரீதியாக மட்டக்களப்பு மாவட்ட மக்களால் தங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர். இன்று மட்டக்களப்பில் தமிழ்த்தேசியம் பேசும் அனைத்து அரசியல்வாதிகளின் மூதாதையர்கள் சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணைந்து யாழ்ப்பாண அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராக குரல் கொடுத்து சிங்கள தேசியவாதத் தலைமைகளை தங்கள் தலைவர்களாக வரிந்து கட்டிக்கொண்டகாலம் அது. அப்போது கிழக்கு மாகாணத்தில் கலா தம்பிமுத்து தமிழ்த்தேசியத்திற்காக மேடையேறிப்பேசாத நிகழ்வுகள் மிகக்குறைவு.
மட்டக்களப்பின் முடிசூடாமன்னன், பெருந்தலைவர் செல்லையா இராசதுரையுடன் தோள் கொடுத்து நின்ற ஒரு குடும்பம் தம்பிமுத்து – மாணிக்கம் குடும்பம். இ.ஆர்.தம்பிமுத்து ஸ்டேற்கவுன்சில் எனப்பட்ட அரசசபையின் அங்கத்தவர். எம். மாணிக்கம் செனற்சபை உறுப்பினர். மாணிக்கம் அவர்களின் மகள் கலாமாணிக்கம் அவரையே சாம்.தம்பிமுத்து திருமணம் செய்திருந்தார். அவர்களின் ஒரே மகன் அருண் தம்பிமுத்து. மட்டக்களப்பின் இதயமான இவர்கள் வாழ்ந்த புளியந்தீவில்தான் தமிழ்த்தேசிய அரசியலுக்கு உதிரமும், உயிரும் ஊட்டப்பட்டது. 1932 இல் பிறந்த சாம்.தம்பிமுத்துவின் முழுப்பெயர் சாமுவேல் பென்னிங்ரன் தவராஜா தம்பிமுத்து. (1932- 1990).
1989 நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் சின்னத்திலும், பட்டியலிலும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் போட்டியிட்டவர்கள் சாம்.தம்பிமுத்துவும், பிரின்ஸ் காசிநாதரும். ரெலோ சார்பில் போட்டியிட்டவர் ஜனா. கோவிந்தன் கருணாகரன். இவர்கள் மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டபோது அப்பட்டியலில் வேட்பாளர்களாக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும்,யோசப் பரராஜசிங்கமும் தோற்றுப்போனார்கள். அப்போதிலிருந்தே புலிகளின் துப்பாக்கி இவர்களை நோக்கி குறிவைத்து இருந்தது.
1990 மே மாதம் 7ம்திகதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து, மற்றும் அவரது மனைவி கலா மாணிக்கம் மீது புலிகள் கொழும்பில் கனேடிய தூதரகத்திற்கு முன்னால் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியதில் சாம் தம்பிமுத்து மரணித்தார். ஒன்பது நாட்கள் கழித்து கலா கலாமாணிக்கம் 1990 மே மாதம் 16 ம் திகதி இறந்தார். தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கு மட்டக்களப்பில் வித்திட்ட இந்த குடும்பம் மீதான தாக்குதல்கள் குறித்தும் வாய்திறக்காது தமிழர் விடுதலைக்கூட்டணி யாழ்.தலைமைகள் தங்கள் விசுவாசத்தை புலிகளுக்கு காட்டினர். 34 ஆண்டுகளாக மறந்து போயிருந்த தம்பிமுத்து தம்பதிகள் நேற்று மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டிருக்கிறார்கள்.
யாரால் ? மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டு 34 ஆண்டுகால “துரோகிக்கு” அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை வேண்டியிருக்கிறார்கள். இந்த அஞ்சலி செய்தியை படித்தபோது அன்று அமிர்தலிங்கம் பேசிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.அதுதான் இந்த தலைப்பு. சாம்.தம்பிமுத்துவின் பெரும் முயற்சியினால் ஸ்ரெண்டிப் நிறுவனத்துடன் இணைந்து கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டது. படுவான்கரையைச் சேர்ந்த சுமார் 150 வறிய குடும்பங்களைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
வந்தது கஷ்டம். அப்போது புலிகளின் பொறுப்பாளராக இருந்த குமரப்பா மகிழடித்தீவு இரத்தினசிங்கம் அவர்களின் மகளை காதலித்தார். அன்று முதல் இறால் பண்ணையின் ஆயுள்கால நாட்கள் எண்ணப்பட்டன. புலிகள் இறால் பண்ணையில் புகலிடம் தேடினர். இந்த தகவல் இராணுவத்திற்கு தெரியவருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. குமரப்பாவும் அவரது பாதுகாப்பாளர்களும் சுற்றி இறால் பண்ணையையும், மகிழடித்தீவையும் வட்டமிட்டனர். இதனால் இறால் பண்ணைக்கும் வரக்கூடிய ஆபத்து குறித்து சாம்.தம்பிமுத்து அங்கு கடமையாற்றிய மட்டக்களப்பு சிங்களவாடியைச் சேர்ந்த “நாஷா” என்பவரிடம் பேசினார். அவர் புலிகளின் ஆதரவாளர். புலிகளுக்கு சாம்.தம்பிமுத்து தங்களை காட்டிக்கொடுப்பார் என்ற வழமையான புலிப்பாணி சந்தேகம் வலுத்தது. இராணுவம் படுவான்கரை ஒப்பரேசனை மேற்கொண்ட நகர்வை தடுக்க புலிகள் கண்ணிவெடித்தாக்குதலை மேற்கொண்டனர். இராணுவம் ஹெலிகொப்டர் மூலம் மகிழடித்தீவு சந்தியில் இறங்கியது. தரை மார்க்கமாகவும் கொக்கட்டிச்சோலையை அடைந்தது. புலிகள் தப்பி ஓடினர். மக்கள் சிக்கினர் இறால் பண்ணையில் வேலைசெய்தவர்கள், பொதுமக்கள் என சுமார் 90பேர் கொல்லப்பட்டனர். பழியை புலிகள் சாம்.தம்பிமுத்துவின் தலையில் கட்டி விட்டனர்.
அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் தமிழரசுக்கட்சி “தலைவர் தெரிவு ” பிரிவினை பிரதிபலித்துள்ளது. சிறிதரன் அணி தனியாகவும், சுமந்திரன் அணி இன்னொரு அணியாகவும் இடம்பிடித்துள்ளனர். இது எதிர்கால தேர்தல் கூட்டு ஒன்றுக்கான முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டக்களப்பில் ஏழாமல் இல்லை.
சாம்.தம்பிமுத்துவின் மகன் அருணின் அரசியல் வரலாறும், சாணக்கியன் எம்.பி.யின் அரசியல் வரலாற்றிற்கும் இடையே வேறுபாடுகள் இல்லை. சாணக்கியன் போன்றே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளராக அரசியலுக்கு வந்தவர் அருண். ஜானாதிபதியின் மட்டக்களப்பு இணைப்பாளராககவும் இருந்தவர். இப்போது எல்லாத் “துடக்கும்” கழுவப்பட்டு புனிதப் படுத்தப்பட்டுள்ளார். எந்த ஒரு நபரையும் துரோகி என்பதும், புனிதர் என்பதும் புலிப் புத்தரின் ஆசீர்வாதம். அப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்திற்கு வெளியிட்ட இலங்கையின் மனித உரிமைமீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள் குறித்த அறிக்கையை அரசாங்கத்தின் சார்பில் மறுத்து புலிகளின் அராஜகங்களை பட்டியல் இட்டவர். புலிகளின் அரசியலை கேள்விக்குட்படுத்தாது கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்கும் இரா.சம்பந்தனின் அரசியலை இந்த அறிக்கையில் கிழி கிழி என கிழித்துள்ளார்.
21.03. 2012 கொழும்பு டெலி லிகிராப் பத்திரிகையில் வெளிவந்த அந்த அறிக்கையில் இருந்து………..!
“………… நான் ஒரு சிறிலங்கா தமிழனாக, ஒரு பொதுமகனாக வன்முறைகளை அனுபவித்தவன், என்பதனால் இதை பதிவு செய்கிறேன். எனது 13 வயதில் உடல் ரீதியாக புலிகளின் சித்திரவதைக்கு உள்ளானேன். எனது எலும்புகள் உடைக்கப்பட்டன. கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டேன். இத்தனைக்கும் நான் செய்த குற்றம் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தமிழ்ப்பிரதிநிதி ஒருவரின் மகன் என்பது மட்டுமே. ஒருசில மாதங்களுக்கு பின்னர் எனது பெற்றோரை கொழும்பில் கனேடிய தூதரகத்திற்கு முன்னால் வைத்து புலிகள் கொலை செய்தார்கள். (சாம்.தம்பிமுத்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,கலா தம்பிமுத்து. )
அந்த அறிக்கையில் அருண் தம்பிமுத்து பட்டியலிட்டுள்ள மற்றும் சில விடயங்கள்.
(*). ரி.என்.ஏ . எல்.ரி.ரியை. ஏகபிரதிவிதிகளாக மட்டும் அங்கீகரிக்கவில்லை. புலிகளின் அனைத்து மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் ரி.என்.ஏ. அமைக்கப்பட்டது முதல் இறுதி யுத்த தோல்விவரையும் நியாயப்படுத்தியது. இன்றும் அதையே செய்கிறது.
(*) .ரி.என்.ஏ. புலிகளின் எண்ணற்ற அக்கிரமங்களை கண்டிக்கவில்லை. அச்சம் ஊட்டி புலிகள் தமிழ்மக்களின் குரலை நசுக்கிய போது, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்டபோது மௌனம்சாதித்தது.
(*). ரி.என்.ஏ. தலைவர் இரா. சம்பந்தன் 1977-1983 மற்றும் தொடர்ந்து இன்று வரையிலும் பாராளுமன்ற உறுப்பினர். இது வரை தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்கள், தமது கட்சி சகாக்கள் கொலை செய்யப்பட்டபோதும் கண்டிக்கவில்லை.
(*). யாழ்.குடா நாட்டில் புலிகள் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம், சிங்கள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டிக்கவில்லை. பத்து முஸ்லீம்களுக்கு ஒருவர் நாட்டில் அகதியானார்கள்.
(*) புலிகள் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடாத்தினர். அநுராதபுரம் போதிமர வணக்கஸ்த்தலம்,கண்டி தலதாமாளிகை போன்றவை.
(*) ஆயுதம் ஏந்தாத 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டனர்.
(*) 147 முஸ்லீம்கள் பள்ளி வாசல்களில் கொலை செய்யப்பட்டார்கள்.
(*) நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள பொதுமக்கள், குழந்தைகள், சிறுவர்கள் உட்பட மட்டக்களப்பு நகரில் கொலை செய்யப்பட்டார்கள். என்று புலிகளின் வன்முறைகளை அவ்வறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை சர்வதேச நிறுவனங்கள் பலவற்றையும் எட்டிய ஒன்று.
இந்த அறிக்கையின் உள்ளீட்டை உற்று நோக்கினால் ஒரு சிங்களவரால் தொகுக்கப்பட்ட புலிகள் மீதானதும் ,ரி.என்.ஏ .மீதானதுமான குற்றச்சாட்டு போன்று உள்ளது.
இந்த அறிக்கையையும், சாம்.தம்பிமுத்து,அருண்.தம்பிமுத்து ஆகியோரின் கடந்த கால அரசியலையும் அங்கீகரித்தா ? இந்த அஞ்சலியை மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்கள்? அப்படி என்றால் இது ஒரு முக்கியமான திருப்புமுனை. புலிகளின் கடந்த கால வன்முறை அரசியலை கேள்விக்கு உட்படுத்தியும் ,ரி.என்.ஏ. யை சுயவிமர்சனம் செய்வதாகவும் அமையும். அருண்.தம்பிமுத்துவின் குற்ப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தால் அது தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு வரலாற்று திருப்பம். அப்படி இல்லையேல் எதிர்கால தேர்தல் அரசியலுக்கு ஆட்சேர்க்கும் போலி அஞ்சலி. உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சக பாராளுமன்ற உறுப்பினராக சாம்.தம்பிமுத்துக்கு அருகில் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தவர் ஜனா. அவரை இந்த அஞ்சலி நிகழ்வில் காணவில்லை. இது இந்த அஞ்சலியின் பின்னால் உள்ள அரசியல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியதாக அமைகிறது.