சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் – 12

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் – 12

    — எழுவான் வேலன் —  

(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)’ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 12 இதுவாகும்.) 

யாழ் உயர் வர்க்கம் ஈழத்துச் சமூக அமைவில் மேலாண்மை பெற்ற சமூகக் குழுவாக உருவாவதற்கு அடிப்படைக் காரணியாக அமைந்தது, அவர்கள் பெற்றிருந்த கல்வியறிவேயாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று காலனித்துவ காலத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்ற பல பாடசாலைகள் பல்கலைக் கழக கல்விக்குச் சமனான தரமுடைய கல்வியினை வழங்கின. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற கல்விப்பாரம்பரியம்தான் அந்தச் சமூகத்தை எந்த இடர்பாடு வந்தபோதும் இன்றுவரை அசைக்கமுடியாத நிலையான ஓர்மம் மிகுந்த சமூகமாக பேணிவருகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. கல்வியின் மூலம் அந்தச் சமூகம் அடைந்த உயர் நிலையினை தமது சாதியினையும் பிரதேசத்தினையும் சேராத தமது இன மக்களுக்கு வழங்குவதற்கு அச்சமூகம் தயாராக இருக்கவில்லை என்பதை கடந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டது.  

‘1965ம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கென தனியான பல்கலைக் கழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை தமிழரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. அன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கென அமைக்கப்படும் பல்கலைக் கழகம்  வடகிழக்கு மாகாணத்தின் மையமான திருகோணமலையில் அமைக்கப்பட வேண்டும் என்னும் முடிவினை தந்தை செல்வா அவர்கள்  கட்சியின் கருத்தரங்குகளில் உறுதியாக முன்வைத்தார். அக்கோரிக்கையை அவர் முன்வைக்கும்போது அவர் கூறிய காரணங்கள் பின்வருவனவாக அமைந்தன. 

1.         அமைக்கப்படும் தமிழ் பல்கலைக்கழகம் வல்வெட்டித்துறை முதல் பாணமை வரை வாழ்கின்ற தமிழ் பேசும் இனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவகையில் அனைத்து மக்களுக்கும் பொதுவானதும் வசதியானதுமான இடமாக திருகோணமலை அமைந்துள்ளமையால். 

2.         சிங்களக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை பாதுகாப்பதற்கு பல்கலைக்கழகம் திருகோணமலையில் அமைக்கப்படுவது தமிழ் பேசும் மக்களின் வலுவை அதிகரிக்க வழியமைக்கும். 

3.         வட கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகவும் சரித்திரப் பிரசித்திபெற்ற நகரமாகவும் திருமலை நகரம் திகழ்வதால் அங்கு தமிழ் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பல்கலைக் கழகம் ஒரு காரணியாக அமையும்.   

மேற்படி செல்வநாயகம் அவர்களால் கூறப்பட்ட காரணங்களில் முதலாவதைத் தவிர மற்றவைகள் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததேயன்றி சமூக அறிவுத் தள விரிவாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அதாவது பல்கலைக் கழகத்தை சமூக, பொருளாதார, பண்பாட்டு விருத்தியின் ஓர் அங்கமாகப் பார்க்காமல் தமிழ் அரசியலின் ஓர் அங்கமாகப் பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது தமிழ் அரசியல் தலைவர்களிடம் இன்றுவரைக் காணப்படும் மூலோபாயத் தத்துவ வரட்சியாகும். இதற்குக் காரணம் அவர்களின் வர்க்க குணாம்சம் எனலாம்.  

மாக்ஸ்சிசச் சிந்தனையாளரான அந்தோனியோ கிராம்சி உழைக்கும் வர்க்கத்திலிருந்து அறிவு ஜீவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக இருந்தார். ஏனெனில் சமூக மற்றும் அரசியல் அதிகாரங்களில் மேலாதிக்கத்துக்கான ஆதிக்க குழுவின் பிரதிநிதிகளாக அறிவுஜீவிகள் இருக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பட்சத்தில் அரசியல் மற்றும் சமூக மேலாதிக்கம் உழைக்கும் வர்க்கம் சார்ந்ததாக இருக்க முடியும். எனவே கிழக்கில் அமைக்கப்படும் பல்கலைக் கழகம் உழைக்கும் வர்க்கத்திலிருந்து அறிவுஜீவிகளை உருவாக்குவதற்கான அடிப்படைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தங்கள் அரசியல் அதிகாரத்துக்கான கருவியாக பல்கலைக் கழகத்தை நோக்குவதைக் காணலாம். அதாவது கல்வியறிவு அற்ற ஒரு சமூகத்தில் பாடசாலையொன்றை அமைப்பது அந்தச் சமூகம் கல்வியறிவுள்ள சமூகமாக உருவாவதற்கேயன்றி அப்பாடசாலையினை மையமாகக் கொண்டு அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கல்ல. செல்வநாயகம் அவர்களுடைய கருத்துக்கள் பாடசாலையினை முன்வைத்து அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பல்கலைக் கழகத்தினை தங்கள் அரசியலுக்கான ஒரு கருவியாகப் பார்ப்பது மிக பிற்போக்குத்தனமானதாகும்.  

ஆனால் யாழ் அதிகாரவர்க்கம் பல்கலைக் கழகம் திருகோணமலையில் அமைக்கப்படுமாக இருந்தால், நீண்டகாலப் போக்கில் தமது சமூக அதிகாரம் கைமாறிப் போய்விடும் என்பதைத் தெளிவாகப்  புரிந்து கொண்டு பல்கலைக் கழகத்தை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. குறிப்பாக ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் பல்கலைக் கழகம் என்பதை இந்துப் பல்கலைக் கழகமாகவும் அது யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் சிரத்தையுடன் செயற்பட்டார். இங்கு இந்துப் பல்கலைக் கழகம் என்பதிலுள்ள கருத்தியல் ஏற்கனவே குறிப்பிட்ட சைவமும் தமிழும் கருத்தியலின் பொதுமைப்பட்ட வடிவம் என்பதையும் கவனத்தில் கொள்தல் வேண்டும்.    

திருகோணமலையில் பல்கலைக் கழகம் அமைக்கபடுவதின் பின்னாலுள்ள அரசியலை செல்வநாயகத்தினூடாகப் புரிந்து கொண்ட சிங்களத் தலைமை உப்பு வெளியில் பல்கலைக் கழகம் அமைக்கப்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 25 ஏக்கர் நிலத்தினையும் பொருட்படுத்தாது யாழ் அதிகார வர்க்கத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியினை பல்கலைக் கழகமாக பின்னாளில் மாற்றியமைத்தது. இதன் மூலம் தமிழர்களுக்குத் தனியான பல்கலைக் கழகம் ஒன்றினை வழங்கிய பெருமையினை சிங்கள அரசும் அதனைப் பெற்ற பெருமையினை தமிழர்களும் எடுத்துக் கொண்டனர். ஆனால் உழைக்கும் தமிழ் வர்க்கம் இருசாரராலும் நன்றாக ஏமாற்றப்பட்டது. இந்த உழைக்கும் தமிழ் மக்களுக்காக பல்கலைக் கழகத்தை திருகோணமலைக்கு கொண்டு வருவதற்கு தமிழரசுக் கட்சி எந்தப் பணிகளையும் ஆற்றவில்லை இதன் மூலம் தமிழரசுக் கட்சி திருகோணமலையில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதுடன் தமிழரசுக் கட்சியின் திருகோணமலைப் பல்கலைக் கழகக் கோரிக்கை தங்கள் அரசியல் இலாபத்துக்காக தமிழ் மக்களை இனரீதியாக ஒருங்கிணைக்கும் ஒரு கருவி என்பதும் புலனாயிற்று. 

அரசியல் கட்சியின் மக்களுக்கான பணி தொடர்பாக அந்தோனியோ கிராம்சி பின்வருமாறு குறிப்பிடுவார் ‘அரசியல் சமூகத்தில், மேலும் அதிக கூட்டுணர்வுடனும் பெரிய அளவிலும் அரசாங்கம் மேற்கொள்வது போலவே குடிமைச் சமூகத்தில் அதே பணியை துல்லியமாக செய்யும் கருவியாக எல்லா குழுக்களுக்கும் அரசியல் கட்சி இருக்கிறது. வேறு சொற்களில் கூறுவதானால், ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளாந்த அறிவுஜீவிகளையும் (ஆதிக்கக் குழு) மரபுவழியான அறிவு ஜீவிகளையும் பிணைக்கும் பொறுப்பு அரசியல் கட்சிக்கு இருக்கிறது. அதன் அடிப்படைச் செயற்பாட்டைச் சார்ந்து இந்தப் பணியை கட்சி செய்கிறது. தனது சொந்த உறுப்பு அங்கங்களை வளர்த்தெடுப்பதே அதன் அடிப்படைப் பணி, ஒரு பொருளாதாரக் குழுவாகப் பிறந்து வளர்ந்த சமூகக் குழுவே அதன் அம்சங்கள், அந்த உறுப்பு அங்கங்களை தகுதி படைத்த அரசியல் அறிவு ஜீவிகளாகவும் தலைவர்களாகவும் ஓர் ஒருங்கிணைந்த சமூகத்தின் குடிமைரீதியான மற்றும் அரசியல் ரீதியான உள்ளாந்த வளர்ச்சியில் அடங்கியிருக்கும் நடவடிக்கைகளையும், செயற்பாட்டுப் பணிகளையும் மாற்றுவதே அதன் அடிப்படைப்பணி. அதன் அதிக அளவிலான தளத்தில் அரசாங்கம் செய்வதை விட மேலும் முழுமையாகவும், ஆக்கபூர்வமாகவும் தனது தளத்தில் ஓர் அரசியல் கட்சி தனது பணிகளை நிறைவேற்றுகிறது என்று உண்மையில் சொல்ல முடியும்.’ என்பார்.  

மேற்படி பணிகளை 70 வருடத்துக்கும் மேலாக தமிழரசுக் கட்சியினால் ஆற்றமுடியாமல் இருப்பதற்கான காரணம். அக்கட்சி மக்கள் நலனை விட ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கக் குழுவின் நலனை மட்டும் சார்ந்து செயற்படுவதினாலாகும். 

இந்தக் குழுவும் அந்தக் குழுவின் நலனை முக்கியப்படுத்தி இயங்கிய தமிழரசுக் கட்சியியும் கிழக்கு மக்கள் தொடர்பாக சிந்திக்கவில்லை. கிழக்கு மக்களுக்கு ஒரு பல்கலைக் கழகம் தேவை எனச் சிந்தித்துச் செயற்பட்டவர் கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களேயாகும். இதனை அவர் தான் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினூடாகச் செய்து முடித்தார். இதிலுள்ள முரண்நகை என்னவென்றால் கிழக்கிற்கான பல்கலைக்கழகத்தினைக் கொண்டு வந்தவர் துரோகியாக்கப்பட்டார், ஆனால் அவரால் உருவாக்கிய பல்கலைக் கழகத்தை ஏற்கனவே குறிப்பிட்ட மேலாதிக்கக் குழுவே தமது சொந்த பந்தங்களின் வேலைவாய்ப்புகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தியது.  

கிழக்கில் 1980களில் பட்டப் பின் படிப்புக் கொண்டவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். இதனால் கல்வியலாளர்கள் சார்ந்து யாழ் கல்வியலாளர்களைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால் சாதாரண எழுதுவினைஞர்களுக்கும் காவலாளிகளுக்கும் கிழக்கு மக்கள் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு அவ்வாறான பதவிகளுக்குரியவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டார்கள். பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர்கள் பல்கலைக் கழகத்தை அபிவிருத்தி செய்வது என்று நோக்காது புலமைப் பரிசில்களைப் பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்வதற்கான ஒரு இடைத்தங்கல் முகாமாகவே கிழக்குப் பல்கலைக் கழகத்தை எடுத்துக் கொண்டனர். இந்த நிலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசார, வர்த்தக முகாமைத்துவ பீடங்கள் உருவாகும் வரை இருந்து வந்தது. 1994, 1995ம் ஆண்டுகளுக்குபின்தான் சிறிது மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. ஏனெனில் இப்பீடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் விரிவுரையாளர்களும் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் பல்கலைக் கழக அபிவிருத்தி தொடர்பாகச் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்தனர். உதாரணத்துக்கு 1991இல் ஆரம்பிக்கப்பட்ட கலை கலாசார பீடம்தான் கிழக்குப் பல்கலைக் கழகத்திலே 1996இல் முதன்முதலில் பட்டப் பின் படிப்பு கற்கை நெறிகளை ஆரம்பித்தது. அதன் பிறகுதான் 1982இல் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான, விவசாய பீடங்களில் பட்ட பின் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இதிலிருந்து இரண்டு சகாப்த காலத்தை தங்களின் தனிப்பட்ட சுயதேவைகளுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதேயாகும். 

1998ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கத்துக்கான தேர்தலில், செயலாளர் பதவிக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவர் தெரிவுசெய்யப்படக் கூடாது என திட்டமிட்டு தடுத்தனர். இதனால் கிழக்கைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து ‘கிழக்குப் பல்கலைக் கழக ஜனநாயக ஆசிரியர் சங்கம்’என ஒன்றை நிறுவினர் இதன் தலைவராக யுவி தங்கராஜா அவர்களையும் செயலாளராக பாலசுகுமார் அவர்களையும் தெரிவுசெய்தனர். (இருவரும் தற்போது லண்டனில் வசிக்கின்றார்கள்) இதன்மூலம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் யாழ் விரிவுரையாளர்களுக்கான ஓர் ஆசிரியர் சங்கமும் கிழக்கு விரிவுரையாளர்களுக்கான ஓர் ஆசிரியர் சங்கமும் என் இரு சங்கங்கள் 3, 4 வருடங்கள் செயற்பட்டன. கிழக்கு விரிவுரையாளர்களின் சங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தியுற்ற யாழ் விரிவுரையாளர் சங்க உறுப்பினர்கள் அப்போது புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக இருந்த துரை அவர்களை அணுகி கிழக்கு விரிவுரைளாளர்களின் சங்கத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக துரை அவர்கள் நேரடியாகத் தலையிட்டு ஒரே சங்கமாக தொழிற்படுமாறு கூறியதற்கிணங்க வேறுவழியின்றி கிழக்கு விரிவுரையாளர்கள் சங்கம் செயலற்றுப் போய்விட்டது.  

புலிகளில் கருணா பிரிவு ஆரம்பிப்பதற்கு முன்னமே கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இந்தப் பிரிவு இடம்பெற்றது என்பது பலருக்குத் தெரியாது. பின்னாளில் புலிகளில் இருந்து கருணா பிரிந்த பின்னர் கருணாவை ஆதரித்த கல்விமான்களாக இந்த கிழக்கு விரிவுரையாளர்களே இருந்தனர். இதன் காரணத்தினால் புலிகளால் கலாநிதி திருச்செல்வம் சுடப்பட்டு தப்பித்ததும், அதனைத் தொடர்ந்து யுவி தங்கராஜா, கோவிந்தன், பாலசுகுமார் போன்றவர்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்தனர். மறுபக்கம் கருணா அணியினரால் விரிவுரையாளர் தம்பையா சுட்டுக் கொல்லப்பட்டதும் உபவேந்தர் ரவிந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டதுமான துர்பாக்கிய சம்பவங்கள் நடந்தேறின. அதேவேளை கிழக்கு வடக்கு என்ற பிரிவினை கூடாது என பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களைச் சேர்த்து வைத்த துரையும் அதே வடக்கு கிழக்குப் பிரிவினையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இதிலுள்ள துயராகும்.        

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் யாழ் மேலாதிக்கத்தின் நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்ட பலர் யாழ் மேலாதிக்கத்தினால் மிக மோசமாகப் பழிவாங்கப்பட்டனர். அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றினை உதாரணமாகக் குறிப்பிட்டேயாக வேண்டும். மாணவனாக இருந்த காலம் தொடக்கம் கிழக்குப் பல்கலைக் கழகத்துக்காக யாழ் மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய ஒருவர். அவரின் பதவி உறுதிப்படுத்தலுக்காக அவரின் கல்வி நடவடிக்கைகள் சார்ந்த கோப்பு ஒன்றினை மதிப்பீடு செய்வதற்காக யாழ் பல்கலைக் கழகத்தின் ஒரு குறிப்பிட்ட விரிவுரையாளருக்கு அனுப்பிய போது அவர் அக் கோப்பை ஆறு மாதங்கள் வரை பார்க்காமல் வைத்திருந்து விட்டு பின்னர் தனக்கு நேரமில்லை எனத் திருப்பியனுப்பினாராம். பின்னர் அவரிடமிருந்து பெற்று யாழ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு அனுப்பிய போது அவர் ஒரு மாதம் வரை வைத்திருந்து விட்டு அவரும் நேரம் இல்லை என்று அனுப்பினாராம். இறுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பியே அதன் மதிப்பீடு பெற்பட்டதாம். ஏற்கனவே யாழ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்புவதற்கு முன்பு குறிப்பிட்ட விரிவுரையாளர்களின் சம்மதம் பெறப்பட்டே அனுப்பப்பட்டிருக்கின்றது. சம்மதம் தெரிவித்து விட்டு காலத்தைக் கழித்து குறித்த வேலையினையும் முடிக்காமல் திருப்பி அனுப்புவதிலுள்ள உளவியல் சிக்கலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட காலதாமதங்களினால் அக்குறிப்பிட்ட விரிவுரையாளர் பதவியிலிருந்து அதிகார வர்க்கத்தினரால் அகற்றப்பட்டார். இதனை எதிர்த்து அவர் நீதி மன்றம் சென்று வழக்காடிக் கொண்டிந்தபோது தற்போதைய உபவேந்தர், பேராசிரியர் கு.ஊ.றாகல் அவர்கள் குறிப்பிட்ட விரிவுரையாளரை கடமையில் சேர்த்துக் கொண்டதுடன் அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளையும் வேதனங்களையும் வழங்கியிருந்தார். 

கிழக்கில் மீன்கள்தான் பாடும் அங்குள்ள பெண்கள் பாடமாட்டார்கள் என்று சிரித்திரனில் வெளிவந்த நக்கலான கருத்துப்படத்தைப் பார்த்த செ.இராசதுரை அவர்கள் கிழக்குக்கு ஓர் இசை நடனக் கல்லூரியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து தான் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினூடாக சுவாமி விபுலாநந்தா இசைநடனக் கல்லூரியை நிறுவினார். இதனை நிறுவியவர் துரோகியாக்கப்பட்டார். ஆனால் அந்த நிறுவனத்தில் யாழ் மேலாதிக்கம்தான் அதிகாரம் செலுத்தியது. நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டு தற்காலிக விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த பல கிழக்கைச் சேர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட பணிப்பாளர் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி அவ்விடங்களுக்கு தனக்குத் தேவையானவர்களை நியமனம் செய்து கொண்டார். இவருடைய தன்னிச்சையான அதிகாரத்துக்கு எதிராக கிழக்கைச் சேர்ந்த சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அவருடைய 2ம் தவணைக்கான பணிப்பாளர் பதவி வழங்கப்படவில்லை.  

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இவ்வாறு அதிகாரம் இருப்பது போல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற கிழக்கைச் சேர்ந்த பல கல்விமான்கள் யாழ் பல்கலைக் கழகத்தில் தற்காலிக் விரிவுரையாளர் நியமனம் கூட வழங்கப்படாமல் அனுப்பப்பட்டார்கள். அவர்களை கிழக்குப் பல்கலைக் கழக கலைகலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடங்கள் உள்வாங்கிக் கொண்டன. இன்று இப்பீடங்களில் பேராசிரியர்களாகவும் கலாநிதிகளாகவும் இருப்பவர்கள் பலர் யாழப்பாணப் பல்கலைக் கழகத்தினால் ஓரங்கட்டப்பட்டவர்களோயாகும். இது போன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமது அதி உட்ச திறமைகளினால் விரிவுரையாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் தலைவராக இருந்த கா.சிவத்தம்பி அவர்கள் கடமையாற்றிக் கொண்டிருந்த காலங்களில் அவர் வெளியூர் செல்ல நேரிட்டால் அவருடன் இணைந்து பணியாற்றிய கிழக்கைச் சேர்ந்த ஒரு பேராசிரியரை பதில் கடமைக்குக் கூட நியமிக்க முடியாத நிலையில்தான் அவர் இருந்திருக்கின்றார் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி எனும் புனிதமான இடத்துக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவன் போய் தீட்டாக்கிவிடக் கூடாது என்ற மனோபாவமே இதுவாகும்.      

மேற்படி உதாரணங்கள் தனிப்பட்டவர்களின் நடத்தைகளை ஒரு சமூகத்துக்கான நடத்தையாக பொதுமைப்படுத்துவதாகவும் அப்பட்டமான பிரதேசவாதம் எனவும் விமர்சனம் முன்வைக்கப்படலாம். உதாரணத்துக்கு சிவலிங்கம் அவர்கள் மேற்படி தனது கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றார். ‘இப் பிரதேசவாத சிந்தனையை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சிந்தனையாக தொடர்ந்தும் இன்றுவரை முன்வைப்பது, அங்கு எழுந்து வரும் போராட்ட உணர்வுகளை இவ்வாறான சிறு வரையறைக்குள் அடக்க முயற்சிப்பது பரந்த அரசியல் விவாதத்திற்கு உதவாது.’ என்பார். 

இது போலவே அசோக் யோகன் கண்ணமுத்து போன்றவர்கள் இது ஒட்டுமொத்த வர்க்க குணாம்சம் என்று பொதுமைப்படுத்தவும் கூடும். அவர் தனது ‘களுதாவளையிலிருந்து பாரிஸ்வரை ஓர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்’ என்ற தொடரில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது ‘யாழ்ப்பாணத்தில் ஒரு தவறு நடந்தால் நாங்கள் கட்டுப்படுத்த முடியாது’ என்று கூறுகின்றார். இதனைத் தொடர்ந்து தேசம் நெற் ‘இதை யாழ்ப்பாணத்துக்கு உரிய குணாம்சமா?அல்லது வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இதைக் காணக்கூடியதாக இருந்ததா?’ என எழுப்பிய கேள்விக்குப் பின்வருமாறு அசோக் பதிலளிக்கின்றார் ‘நான் ஆரம்பத்திலேயே சொன்னதுதான். நில உடமைக் குணாம்சங்களோடு இணைந்த மத்திய தரவர்க்க மனோபாவம் என்பது, இலங்கையில் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சாதிய, மத மேலாதிக்க மனநிலையும் அதன் அடையாளங்களும் சேர்ந்து தொழிற்படும் போது இதன் வெளிப்பாடும் தாக்கமும் அதிகமாக இருக்கப் பார்க்கும். இது சமூகத்தில் இயல்பானது. இவற்றை மாற்றி அமைக்கத்தானே நாம் போராட வேண்டும்’ என்று யாழ் மேலாதிக்கத்தை வர்க்கப் பொதுமையாக்கலுக்குள் வேண்டுமென்று கொண்டு வருகின்றார். அதாவது ‘யாழ்ப்பாணத்தில் ஒரு தவறு நடந்தால் நாங்கள் கட்டுப்படுத்த முடியாது’ என்று தனித்து யாழ்ப்பாணத்தைச் சுட்டிக்காட்டியவர் அடுத்த கேள்விக்கு தான் அளித்த பதிலுக்கு முரணாக ‘இலங்கையின் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கும்’ எனக் கூறுவது இந்த முரண்பாட்டை தெளிவுபடுத்துகின்றது.   

ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பி இதனை வேறுவிதமாக நோக்குகின்றார் ‘கிழக்கு மாகாணத் தமிழர்கள் வடபகுதித் தமிழர்களுடன் அந்நியோந்நியப் பிணைப்புக் கொண்டவர்களல்லரென்பது ஊரறிந்த உண்மை. ‘யாழ்ப்பாணிகள்’ என்ற பதப் பிரயோகத்தின் உணர்ச்சிப் பகைப் புலத்தின் ஆழத்தை நாம் மறந்து விடக் கூடாது. இலங்கைத் தமிழர்கள் என்ற முறையில் தமக்குரிய சில உரிமைகள், சலுகைகளைத் தாம் அனுபவிக்க முடியாத அளவுக்குத் தம்மை யாழ்ப்பாணத்தவர் தள்ளி வைத்துள்ளனர் என்ற விரக்தியுணர்வு மட்டக்களப்புத் தமிழ் மக்கள் பலரிடையே காணப்படுவது உண்மை. 1956க்குப் பின் இலங்கையின் அரசியலரங்கின் ஏற்பட்ட மாற்றங்கள் யாழ்ப்பாணத்தவரையும் கிழக்கு மாகாணத்தவரையும் இணைக்க உதவியுள்ளதுஉண்மையெனினும் மேற்கூறிய கருத்துத் தொடர்ந்து நிலவுகின்றது. என்பது பலர் வெளியே எடுத்துச் சொல்ல விரும்பாத உண்மையாகும்’  

வடபகுதியிலுள்ள தமிழ் வன்னிப் பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தவருக்கெதிரான ஓர் உணர்வு உண்டு. வன்னிப் பகுதியின் வளத்தை யாழ்ப்பாணத்தவர் சூறையாடுகின்றனர் என்றொரு அபிப்பிராயம் அப்பகுதியில் நிலவுகின்றதென்பதும், அவ்வுணர்வைப் பயன்படுத்தி அங்கு வாழ்கின்ற யாழ்ப்பாண மக்களை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவென்பதும் இன்று எம்மிற் பலர் குறிப்பிட விரும்பா உண்மையாகும்.’  

என பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டபோதும் அவரும் அதைப் பேசவிரும்பவில்லை. இந்நிலையில் சிவலிங்கம், அசோக் போன்றவர்கள் வர்க்க அரசியலுக்குள் அதை மூடி மறைக்க முற்படுகின்றனர். வைத்தியர் ஒருவர் நோயாளியின் நோய் என்ன என்று சரியாகக் கண்டு கொண்டால்த்தான் அவரால் அந்நோய்க்குரிய சிகிச்சையைச் செய்து நோயைக் குணப்படுத்தி நோயாளியைக் காப்பாற்ற முடியும். தனக்கு ஒரு நோயைப் பார்க்க விருப்பமில்லை என்பதற்காக வேறு ஒரு நோய்க்குரிய சிகிச்சையை வழங்கி நோயைக் குணப்படுத்த இயலாது. இதே போலதான் எமது இடதுசாரிகள் எமது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் யாழ் மேலாதிக்கம் எனும் புற்று நோயை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுவதற்கு விருப்பமின்றி காச்சலுக்குரிய மருத்துவத்தைச் செய்கின்றார்கள்.  

இடதுசாரிகள் பல பேர் அவர்களை அறியாமலே அவர்களிடத்தில் காணப்பட்ட இந்த யாழ் மையவாத குணாம்சம் காரணமாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பிரச்சினைகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அணுகமுடியாதவர்களாக இருந்ததோடு அவர்கள் யாழ் மையவாத நிகழ்ச்சித்திட்டத்தின் அப்புக்காத்துக்களாகவும் செயற்பட்டனர்/ செயற்படுகின்றனர். இவ்வாறு இடதுசாரிகள் இருப்பதற்குக் காரணம் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களால் குறிப்பிடப்படும் நில உடமைக் குணாம்சங்களோடு இணைந்த மத்திய தரவர்க்க மனோபாவம் என்று எண்ணத் தோன்றுகிறது.  

யாழ் மேலாதிக்கத்தை கிழக்கிலிருந்து விமர்சனத்துக்குள்ளாக்கும் போது அதனை கிழக்கிற்கென புதிய அரசியல் வியூகமாக கட்டமைப்பதும் தனக்கு எதிராக பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கம் அல்லது விழிப்புணர்வு வளரவிடாது கிழக்குக்குள்ளேயே அதனை ஒரு பிரதேசவாதமாகச்  சுருக்கிவிடுகின்ற தந்திரோபாய நடவடிக்கையும் இதற்குள் இருப்பதையும் வாசகர்கள் அவதானிக்கத் தவறக்கூடாது. அடக்குமுறைக்குள்ளாகுபவன்தான் அந்த அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் செய்யவேண்டியவனாகின்றான். இவ்வாறு அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்றவன் மற்றுமொரு அடக்குமுறையாளனாக இருக்கமுடியாது. அதற்கு முதலில் தன்னை அவன் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அந்தச் சுயவிமர்சனத்துக்கான அடிப்படையே இந்தத் தொடர் என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதை நோக்கமாகக் கொண்டதல்ல என்பதும் முக்கியமானதாகும்.  

தொடரும்………