— சீவகன் பூபாலரட்ணம் —
மாசிலாமணி: அவரை நான் முதலில் சந்தித்தபோது அவரது இந்தப் பெயருக்கான அர்த்தம் எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்காக அவர் ஒரு மாசு மருவற்ற ஒரு மாமணி என்று நான் புகழவும் இந்த நினைவாஞ்சலியை எழுதவில்லை.
தன்னுடைய குறைநிறைகளுடன் எங்களைக் கரையேற்ற ஒரு வழிகாட்டியாக அவர் நின்றார். இதுதான் இன்று நான் கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது மாசிலாமணி சேர் குறித்து எனது மனதில் படியும் விம்பம்.
ஆனால், ஒருவரது நினைவுகள் வெறுமனே கூட்டிக் கழித்துப் பார்க்கும் விடயம் அல்ல. அவர் எமக்கு அறிமுகமானது ஒரு விஞ்ஞான ஆசிரியராக. ஆனால், விஞ்ஞானத்தை விட பல விடயங்களை அவர் எங்களுக்கு நிறையவே கற்றுத்தந்திருந்தார்.
அவர் முன்னே நடந்தால், நாம் அவரை வரிசையாகத் தொடரலாம் என்ற நம்பிக்கையை மனதில் விதைத்த மிகச் சில ஆசிரியர்களில் அவர் ஒருவர்.
எமக்கு நம்பிக்கை தரும் ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு கிடையாது. அவர் அழகர்தான், ஆனால் ஒல்லியான நடுத்தர உயரக்காரர் எங்கள் மாசிலாமணி சேர். ஆனால், அந்த ஒல்லியான உடலினுள் மறைந்திருக்கும் ஓர்மம் நிகரில்லாதது. எவரும் உரசிப்பார்க்க முயல இடம் தராதது. தீர்க்கமான பார்வையும், எவரையும் ஆழம் அறியாமல் காலை விடாதே என்று எச்சரிக்கும் கவர்ச்சியான கண்களும் அவருக்கு சொந்தம். கோபத்தை அது இலகுவில் வெளிக்காட்டியும் விடும்.
ஒரு முறை பொலன்நறுவைக்கு மாணவர்களாகிய எங்களை அழைத்துச் சென்றிருந்தார். எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வெளியே மிகவும் சுமூகமான மாசிலாமணி சேரை கண்டதால் (பள்ளிக்கூடத்தில் அவரை பார்த்தால் பயப்படுவோம்) போன இடத்தில் எங்கள் ஆட்டமும் அதிகமாகவே இருந்தது. பராக்கிரமபாகுவின் சிதிலமான மாளிகையில் எங்கோ நின்றிருந்த ஒரு மாடு திடீரென மிரண்டது. எங்களை நோக்கி ஓடி வந்தது. வந்த திசைக்கு மேடு, பள்ளம் பார்க்காமல் நாம் தலை தெறிக்க ஓடினோம். ஆனால், தன்னைப்போல ஒரு குச்சியை கையில் பிடித்துக்கொண்டு அதனை எதிர்கொண்டார் மாசிலாமணி சேர். ஓடிவந்த மாடு நின்று மிரண்டு திரும்பிப்போனது. உடலில் இல்லாத பலம் அவருக்கு மனதில் இருப்பதை எங்களுக்கு காட்டிய ஒரு நிகழ்வு அது. அன்று எங்கள் மனதில் ஒரு படி மேலே ஏறிவிட்டார் எங்கள் சேர். நாம் பார்க்கப்போன பராக்கிரமபாகு அன்று மாசிலாமணி சேர் முன் சிறுத்துவிட்டார்.
எங்களுக்கு அரசியல் உட்பட பல விடயங்களை பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்தவர் அவர். அளவுக்கதிகமான அரசியல்தான். ஆனால், அவர் அரசியல் சித்தாந்தவாதி அல்ல. கம்யூனிஸத்தையோ, கார்ல்மார்க்சையோ அவர் சொல்லித்தந்தவர் அல்ல. அதில் அவருக்கு நம்பிக்கை இருக்கா என்றும் எமக்குத் தெரியாது. ஆனால், அரசியலில் விழிப்புணர்வோடு இருக்கக் கற்றுத்தந்தவர். முக்கியமாக முதன்முதலாக தமிழர் அரசியலில் போலிகளை அடையாளம் காணக்கற்றுத்தந்தவர். தமிழ் தேசியத்தை பேசும் போலித் தேசியவாதிகளை அடையாளம் காணக் கற்றுத்தந்தவர். அவர் இந்த விடுதலைப்போராட்ட இயக்கங்களின் காலங்களில் எப்படி உயிரோடு தப்பினார் என்பது எனக்கு ஒரு அதிசயந்தான்.
நாம் பள்ளிக்கூடத்தையும், இந்த நாட்டையும் விட்டுச் சென்ற பின்னர் அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டுள்ளார். மாகாணசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆனால், அவரது அரசியல் எந்த அளவுக்கு சிறப்பானது என்பதை மதிப்பிடும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. சிலவேளை என்னோடு அதில் முரண்பட்டு நின்றாரா என்றும் தெரியவில்லை.
பிறப்பில் துறைநீலாவணை மாத்திரமல்லாமல், யாழ்.நவாலி தொடர்பும் அவருக்கு இருக்க வேண்டும். ஆனால், மட்டக்களப்புக்காக, அதன் தேவைகளுக்காக நிறையவே பேசுவார். விவாதிப்பார். அவர் ஒரு தீவிர மட்டக்களப்பு நேசன். எந்தக்கட்சியில் இருந்தபோதும், இந்த விடயத்தில் இருந்து விலகி அவர் இருந்ததில்லை.
ஒரு வகையான போராட்டக்குணம் அவருக்கு பிறப்பிலேயே இருந்திருக்க வேண்டும். என்றும் சர்ச்சைக்குரியவராகவே இருந்து வந்துள்ளார். ஒன்றில் அவர் போராட்டத்தை ஆரம்பிப்பார் அல்லது அவருக்கு எதிராக போராட்டம் நடக்கும். அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சை இருக்கும். ஆனால், அதற்காகவெல்லாம் என்றும் அவர் கலங்கியதையோ, பின்வாங்கியதையோ நாம் கண்டதில்லை. நாங்கள் அவரிடம் சிறுவனாக புனித மிக்கேல் கல்லூரியில் கற்றபோது, அவர் ஒரு இளைஞர். அதனால், அப்போதெல்லாம், அவர் தொடங்கும் போராட்டங்களும், அதனைத் தொடரும் சர்ச்சையும் அதிகம். உள்ளூரில் பிரபலமான ஒரு அரசியல்வாதியை அவருக்கு எதிராக சில மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கூட்டி வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
வகுப்பறைக்கு வந்தால், நடுவே இருக்கும் ஆசிரியருக்கான மேசையையும் கதிரையையும் அப்படியே ஒரு மூலைக்கு தள்ளிவிடுவார். தனது சட்டைக் கையை முழங்கை வரை மேலே தள்ளிவிட்டு, ஒரு கையால் மறு கையின் முழங்கைப் பகுதியை பிடித்துக்கொண்டு ஒரு வகையாக கூனி நிற்பார். இது அவரது பாணி. ஆனால், தனது ஆசிரியரான கொன்சேகா சேரிடம் இருந்து அவர் இதனை உள்வாங்கியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரும் அப்படித்தான். அதே பாணியையே மாசிலாமணி சேரும் பின்பற்றுவார். ஆனால், கற்பிக்கத் தொடங்கிவிட்டால் மாசிலாமணி சேர் எங்களுக்கு ஒரு நண்பந்தான். என்ன வேண்டுமானாலும் வெளிப்படையாக சந்தேகம் கேட்கலாம், எந்தவித தயக்கமும் இல்லாமல், ஒரு நகைச்சுவையுடன் அனைத்தையும் அவர் விபரிப்பார். இதனால், பாடம் விஞ்ஞானத்தில் இருந்து வேறு திசைக்கு மாறிச்சென்ற தருணங்கள் அதிகம். ஆனால், வகுப்பு களைகட்டிவிடும். என்ன பாடம் கற்கிறீர்கள் என்பதுதான் வேறுபடும். கற்பது நாட்டு அரசியலாகவும் இருக்கலாம்.
அடுத்த விடயம் கொஞ்சம் சங்கடமானது. ஆனால், அதனை கடந்துபோக முடியாது. ‘அடித்துத் திருத்துதல், அடியாத மாடு படியாது’ போன்ற விடயங்களில் தனது ஆசிரிய சேவைக் காலத்தில் நம்பிக்கை கொண்டவர் மாசிலாமணி சேர். அவர் அடிக்கும் போது அவரிடம் ஒரு கோபம் இருக்காது. நமக்குத்தான் பயம் இருக்கும். எவருக்கும் பாரபட்சம் கிடையாது. சரி சமனாக அடி கிடைக்கும். மாணவர்களை அடித்துத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பிற்காலத்தில் அவரும் தனது கருத்தை மாற்றியிருக்கலாம். ஆனால், மாசிலாமணி சேரிடம் அடிவாங்காத மாணவர்கள் புனித மிக்கேல் கல்லூரியில் அந்தக் காலத்தில் இருந்திருக்க முடியாது என்ற அளவுக்கு அவர் அடிப்பதில் பிரசித்தம். எமது கொள்கைக்கு பொருத்தமில்லாததாக இருந்தாலும் அவரிடம் அடிவாங்கிய நாட்களை மனது இனிமையாகவே பதிந்து வைத்திருக்கிறது. அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று மனது ஏங்குகின்றது. கடைசியாக அவரைப் பார்த்த போதுகூட அந்த வாஞ்சை நீங்கவில்லை. (ஒரு தடவை எமக்கு அடித்ததற்காக அவர் அழுத சம்பவமும் எமது வகுப்பில் நடந்திருக்கிறது.)
அரசியல், பொருளாதார கட்டுரைகளை எழுதும் அரங்கத்தில் மாசிலாமணி சேர் போன்ற ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப்பற்றி என்ன எழுதவிருக்கிறது என்று யாரும் நினைக்கலாம். ஆனால், எங்களோடு சாதாரணமாக வாழ்ந்து, தமது குறை நிறைகளோடு எங்களுக்கும் வழிகாட்டிச் சென்றவர்களின் நினைவுகள்தானே எம்மையும் எமது எதிர்காலச் சந்ததியையும் வாழ வைக்கும். அந்த வகையில் மாசிலாமணி சேர், எங்கோ ஒரு துருவ நட்சத்திரமாக இருந்து எமக்கு வழிகாட்டுவார்.
உங்களைப் பற்றி ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகள் இன்று நெஞ்சில் ஓடும் சேர். எனக்கும் இன்னும் நிறைய இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இனிமையானவை அதிகம். இப்போதைக்கு சென்று வாருங்கள் சேர். திரும்பவும் வந்து அந்த ஊரில் பிறவுங்கள். நாங்களும் உங்கள் வகுப்பில் வந்து அமர்ந்திருக்க இறந்து மீண்டு வருவோம். உங்கள் ஓர்மம் எமக்காகட்டும். தற்போதைக்கு Good bye sir.