எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 19)

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 19)

 — அ. வரதராஜா பெருமாள் —                            

பகுதி – 19 

இக்கட்டுரைத் தொடரின் கடந்த பகுதியில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சா அவர்கள் 2022ம் ஆண்டுக்கென பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதார எதிர்காலம் பற்றி அவர் நிர்ணயித்திருக்கும் இலட்சிய இலக்குகள் மற்றும் திட்டங்களை அவதானித்து, அவற்றின் சாத்தியங்கள் குறித்து சில தொடர் கேள்விகளையும் எழுப்பியிருந்தமை வாசகர்களுக்கு நினைவிலிருக்கும். இந்த வரவு செலவுத் திட்டம் பற்றி பேராசிரியர் அமீர் அலி அவர்கள் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில், பஸிலின் வரவு செலவுத் திட்டம் ஒரு ‘சித்தாந்த மையம் கொண்டதாயினும் அதில் கூறப்பட்டுள்ளவை அடைய முடியாதவைகள்’ என்கிறார். மேலும், கடந்த கால வரவு செலவுத் திட்டங்கள் போலவே இதுவும் நாட்டைப் பீடித்துள்ள பொருளாதார நோய்களிலிருந்து விடுவிக்கப்போவதில்லை என்றும், பஸில் அவர்களின் நிதித் திட்டம் ‘கனவுத் தனமான வாக்குறுதிகளை அள்ளிக் குவித்திருக்கிறதே தவிர அவற்றை எவற்றின் மூலமாக எவ்வகையாக நடைமுறைச் சாத்தியமாக்கப் போகிறது என்பதில் வறுமைத் தன்மை கொண்டதாகவே  உள்ளது’ என நச்சென தமது அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளார்.   அமீர் அலி அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பொருளியல் துறையில் இருந்த மிகச் சிறந்த பேராசிரியர்களில் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.  

அமைச்சர் பஸில் அவர்கள் தமது வரவு செலவுத் திட்ட உரையின் போது – ‘பொருளாதார ரீதியாக வலுவான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான நிதியியல் நடவடிக்கைகளை வெறுமனே வரிகளைச் சேகரித்தல், கட்டணங்களை திரட்டுதல்; மற்றும் மேலும் அறவீடுகளை மேற்கொள்ளுதல் என்பனவற்றின் மூலம் முன்னேற்றிவிட முடியாது. அதைவிடவும் மேலதிகமாக, நிலைபேறான நிதியியல் ஒழுக்கம் தொடர்பான கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன் செலவீனங்களை சிக்கனமாகவும், உற்பத்தித் திறன் மிக்க விதத்தில் கட்டுப்பாடாகவும் மேற் கொள்ள வேண்டும்’ என்கிறார். அவர் தமது உரையில் ‘இலக்கணமாகத்தான்’ கூறியிருக்கிறார். ஆனால் நடைமுறையில் அமைச்சர்கள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரையாக அவற்றைக் ‘கோட்டை’ விட்டு விடுகிறார்களே! அது பற்றி பேராசிரியர் அமீர் அலி அவர்கள் குறிப்பிடுகையில், ‘அரசின் வரி அறவிடும் நிர்வாக அமைப்பில் உள்ள ஊழல் மோசடிகள் முற்றாக துடைத்தெறியப்படாத வரை அரசாங்க வருமானம் உயர்வதற்கான எந்த நம்பிக்கையையும் கொள்ள முடியாது’ என்கிறார்.  

இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான கால கட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு செலவீனங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வீதிகள் அமைப்பதற்கும் கட்டிடங்கள் கட்டுவதற்குமே. அது பற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில் அந்த ஒதுக்கீடுகள் அந்த அளவுக்கு மேற்கொள்ளப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் முறையாக பெருந்தொகையில் லஞ்சமாக பணம் திரட்டிக் கொள்வதற்கே என்கிறார். இது அவரின் கருத்து மட்டுமல்ல நாடளாவியரீதியில் பொது மக்களிடமும் இந்த அபிப்பிராயமே உள்ளது. இப்படி இருக்கையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த அரச நிதியியல் கலாச்சாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பது நியாயமான கேள்வியே.  

இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 

இலங்கை அரசின் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டினை அவதானித்தால், ஏனைய அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை விட பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடே மிக அதிகமானதாகும். வரவு செலவுத் திட்ட அட்டவணைகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பார்த்தால் நிதி அமைச்சுக்குத் தானே அதிக பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது எனக் கருதக்கூடும். அது அப்படியல்ல, நிதி அமைச்சினால் அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டியையும் வாங்கிய கடன்களில் உரியகாலத்தில் திருப்ப வேண்டிய கடன்களின் தொகைகளையும் கழித்து விட்டுப் பார்த்தால் நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகை சிறியதாகவே அமையும். அது மட்டுமல்ல 2021ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டோடு ஒப்பிட்டால் இந்த நிதி அமைச்சர் தமது அமைச்சுக்குரிய மூலதன செலவீனங்களுக்கான ஒதுக்கினை குறைத்துத்தான் இருக்கிறார்.   

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையிலும் இவ்வளவுக்கு இராணுவ செலவு தேவைதானா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. இலங்கை அரசாங்கம் குறிப்பாக ராஜபக்சாக்கள் இராணுவ கட்டமைப்பை மேலும் தொடர்ந்தும் மிக பலமுடையதாகவும் அரச கட்டமைப்பில் அதுவே மிகுந்த செல்வாக்குடையதாகவும் இருக்க வேண்டும் என்பதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள் என்பதையே பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தெளிவுபடுத்துகின்றன. நாட்டின் பாதுகாப்பே தலையாயது என்பதே அரசாங்கத்தினது அபிப்பிராயமாக உள்ளது.  

கடந்த மைத்திரி – ரணில் ஆட்சியிலும் அதுவேதான் தொடர்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இலங்கையின் இராணுவ கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இலங்கை அரச கட்டமைப்பு ஆகியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இது பற்றி இங்கு அதிகம் விபரிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பத்திரிகைகளின் எழுத்தாளர்களும் இராணுவம், பாதுகாப்பு அமைச்சு, அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றித்தான் அதிகமாக எதிர்வரும் கால கட்டத்தில் பேசப் போகிறார்கள் – எழுதப் போகிறார்கள் என்பதனால் அதைப் பற்றிய விடயங்களை இத்துடன் நிறுத்தி விட்டு ஏனைய பிரதானமான விடயங்களை நோக்கலாம். 

அரச வரவுகள் – செலவுகளின் மொத்த கணக்கு 

வரவு – செலவு கணக்கின் எண்ணிக்கைக்குள் போவதற்கு முதலில், ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம், பத்து மில்லியன்கள் ஒரு கோடி, 1000 மில்லியன்கள் ஒரு பில்லியன், மேலும் ஒரு பில்லியன் என்பது 100 கோடி ரூபாக்கள். வாசகர்களுக்கு இவை தெரிந்திருக்கும், இருந்தாலும் இதனைச் சொல்லி வைப்பதில் தவறில்லையே! ஏனெனில் பெரும்பாலான தமிழ் வெளியீடுகளில் லட்சம் மற்றும் கோடி ஆகியவற்றிற்கும் மில்லியன்கள் மற்றும் பில்லியன்களுக்கும் இடையேயுள்ள எண் தொடர்களில் குழப்பங்கள் காணப்படுகின்றன. இதை வாசிக்கும் சில அன்பர்களுக்கும் அந்த குழப்பங்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பது மட்டுமே இதன் நோக்கம். எழுத்துக்கள் மட்டுமல்ல எண்களும் வாழ்க்கைக்கான கண்களே!.    

முதலில் மொத்தச் செலவுகளைப் பார்க்கலாம்: 

1.         அரசு வாங்கிய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூபாய் 1100 பில்லியன்கள் (அதாவது ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி) 

2.         2022ம் ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 1500 பில்லியன்; (அதாவது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி) ரூபாக்கள் 

3.         அரசு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மற்றும் 2022ம் ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை நீங்கலாக, அரசின் மூலதன மற்றும் மீண்டெழும் செலவுகள் கிட்டத்தட்ட 2900 பில்லியன் (அதாவது இரண்டு லட்சத்து தொண்ணூராயிரம் கோடி) ரூபாக்கள். 

ஆக மொத்தத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள செலவுத் தொகை சுமார் 5500 பில்லியன் (அதாவது ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் கோடி) ரூபாக்கள். 

அடுத்துஅரசுக்கு வரவாகக் கிடைக்கும் என நிதியமைச்சர் திட்டமிட்டுள்ள மொத்த தொகையை பார்க்கலாம் :- 

1.         அரசின் அதிகாரங்களுக்கு உரிய வகையாக திரட்டப்படும் வரிகள் மூலமாக கிடைக்கவுள்ள வருமானம் 2100 பில்லியன்கள் (அதாவது இரண்டு லட்சத்து பத்தாயிரம் கோடி) ரூபாக்கள். 

2.         வேறு கட்டணங்களை அறவிடுதல் மூலமாகவும் அரசின் நிறுவனங்களின் வழியாக கிடைக்கும் லாபங்கள், வாடகை, வட்டி என்பன வகையாகவும், மேலும் பலதும் பத்துமான சிறு சிறு மூலங்கள் வழியாகவும் கிடைக்கும் வருமானங்களின்; தொகை மொத்தத்தில் சுமார் 400 பில்லியன் (அதாவது நாற்பதினாயிரம் கோடி) ரூபாக்கள். 

ஆக அரசுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு திரட்டப்படும் மொத்த வருமானம் 2500 பில்லியன் (அதாவது இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் கோடி) ரூபாக்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. 

1.         அரசின் செலவீனங்களுக்கு மேலதிகமாக தேவையாகவுள்ள 3000 பில்லியன் (அதாவது மூன்று லட்சம் கோடி) ரூபாக்களை திரட்டுவதற்கான வழிகளை அரசாங்கம் பின்வருமாறு காட்டுகிறது. இதற்காகத் தான் அவசர அவசரமாக அரசாங்கம் 3000 பில்லியன்களுக்கு மேல் கடன்களை வாங்குவதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டமையை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.  

1)         மத்திய வங்கிஉள்நாட்டு வங்கிகள்ஏனைய நிதி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வெவ்வேறு வடிவங்களில் கடனாக கிட்டத்தட்ட 2700 பில்லியன் (அதாவது இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி) ரூபாக்களைத் திரட்டுதல்.

2)         வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக சுமார் 300 பில்லியன்களை அதாவது அமெரிக்க டொலர் கணக்கில் சுமார் 1.5 (ஒன்றரை) பில்லியன் – அதாவது முப்பதாயிரம் கோடி ரூபாக்களைத் திரட்டுதல். 

என அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக் குறையை – துண்டு விழும் தொகையை நிரப்புகின்ற வழியைக் கூறுகின்றது. ஆக இங்கு வரவு எட்டணா செலவு பத்தணா என்பதல்ல உண்மையில் இங்கு வரவு எட்டணா செலவு இரு பத்தணா என்றே பாட வேண்டியுள்ளது. இதனால் இலங்கையில் நிலை துந்தணாவா என்ற கேள்வியே எழுகிறது.  

நிதி அமைச்சரின் கணக்குகளுக்குள் ஒழிந்து கிடக்கும் உண்மைகள் 

முதலாவதாகஅமைச்சர் குறிப்பிடுகின்ற வரி வருமானங்களை திரட்டுவதென்பது கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. போனவருடம் 1725 பில்லியன் ரூபாக்களை வரிகள் வழியாக அறவிடப் போவதாகக் கூறியது. ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட மீள்மதிப்பீட்டின்படி 2021ம் ஆண்டுக்கான வரி வருமானம் வெறுமனே 1350பில்லியன்கள் மட்டுமே. எனவே 2022ம் ஆண்டில் 2200 பில்லியன் ரூபாக்களை வரிகள் வழியாக திரட்டப் போவதாக அறிவிப்பது அதீதமான ஒன்றாகவே உள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ம் திகதி முன்வைத்த நிதித்திட்ட அறிக்கையில் கிட்டத்தட்ட 1800 கோடி ரூபாக்களை வரிகளாக அறவிடப் போவதாக தெரிவித்திருந்தார். யதார்த்தத்தில் அது கூட சாத்தியமாகக் கூடியதை விட அதிகமானதாகவே தெரிகிறது.. 

இம்மாதம் 12ம் திகதிய அறிவிப்பில் அமைச்சர் மேலும் சுமார் 400 பில்லியன்களுக்கு புதிதாக வரிகளை தெரிவித்திருக்கிறார். இப்படித்தான் முன்னைய கூட்டாட்சியும் ஒவ்வொரு ஆண்டும் கற்பனைக் கணக்கில் வரிகள் திரட்டுவதற்கான கணக்குகளை முன் வைத்து கடைசியில் தாங்கள் குறிப்பிட்ட இலக்குகளுக்கு அண்மையாகக் கூட தங்களது வரி திரட்டல்களை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, அமைச்சர் திட்டமிட்டுள்ள அளவுக்கு வரி வருமாங்களை அடைய முடியாதென்பதனால் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை மேலும் அதிகரிப்பதே நடக்கும். 

இரண்டாவதாகஅமைச்சர் அறிவித்துள்ளபடி மூலதனச் செலவுகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 800 பில்லியன் ரூபாக்களை முழுமையாக செலவிடுவாரா அல்லது இப்போது அறிவிப்போம்! பின்னர் அதனை வெட்டி குறைத்துக் கொள்ளலாம்‘ என திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இப்படித்தான் கடந்த வருடம் மஹிந்த அவர்கள் நிதி அமைச்சராக இருந்த போது அவர் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1100 பில்லியன்களை மூலதனச் செலவாக மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் கடைசியில் அதில் அரைவாசி அளவுக்குத்தான் செலவுகள் மேற்கொள்ளப்பட்டன.  

அதேவேளைமீண்டெழும் செலவுகள் 2021ம் ஆண்டுக்காக திட்டமிடப்பட்டதை விட சுமார் 15000 கோடி ரூபாக்கள் அதிகமாகவே செலவழிக்கப்பட்டன. எனவே 2022லும் இப்போது அமைச்சர் திட்டமிட்டதை விட மீண்டெழும் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. எனவே நிதி அமைச்சர் திட்டமிட்டதற்கு அதிகமாக மீண்டெழும் செலவு செல்வதை சமாளிக்க மூலதனச் செலவிலேயே அவர் கை வைக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் நிதி அமைச்சர் முன்னைய ஆண்டுகளின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு 2022ம் ஆண்டுக்கான செலவு விடயத்தைக் கூட சரியாக கணக்கிடவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. 

மூன்றாவதாகநாட்டில் இப்போது உள்நாட்டு யுத்தமோ அல்லது அரசியல் வன்முறைகளோ இல்லை. அவ்வாறான ஒரு நிலைமை இன்னொரு முறை குறைந்த பட்சம் இரு தசாப்தங்களுக்குள் சிறிதளவில் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. ஆனால் அரசாங்கம் நாட்டினை எப்போதும் ஒரு யுத்தத்துக்குத் தயாரான நிலையில் வைத்திருப்பதனையே விரும்புகிறது என்பது தெளிவாக உள்ளது. 

நாட்டின் தேசிய பாதுகாப்புசட்டம் ஒழுங்கு மற்றும் அரச பாதுகாப்பு ஆகியன தொடர்பாக பிரதானமாக மூன்று அமைச்சுகள் உள்ளன. (1) பாதுகாப்பு அமைச்சு, (2) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் (3) உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு. இந்த மூன்றுக்கும் செலவுகள் வருடாவருடம் மிக வேகமாக அதிகரித்த வண்ணமே உள்ளன. 2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த மூன்று அமைச்சுகளுக்குமென 46000 கோடி ரூபாக்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கடைசியில் சுமார் 55000 கோடி ரூபாக்கள் செலவளிக்கப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டுக்கென நிதி அமைச்சர் 52000 கோடி ரூபாக்களை ஒதுக்குவதாக கணக்குக் காட்டியிருக்கிறார். ஆனாலும் 2022ம் ஆண்டில் இந்தச் செலவீனம் 60000 கோடிக்கும் அப்பாலேயே செல்லும் என்பதை கடந்தகால அனுபவங்களிலிருந்து இப்போதே கூறலாம். 

நான்காவதாகஅரசாங்க சேவைகளில் பணி புரியும் அதிகாரிகள்இடைநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அனைத்து வகை ஊழியர்களினதும் மொத்த எண்ணிக்கை சுமார் 15 லட்சம். நாட்டில் பொருளாதாரரீதியாக உழைப்பில் ஈடுபடுபவர்களின் மொத்தத் தொகையே சுமார் 85 லட்சம்தான். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் நிதி அமைச்சர் 1948ம் ஆண்டு இலங்கையின் அரச அமைப்புக்களில் இருந்த மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது 113 குடிமக்களுக்கு ஒருவர் என இருந்தது. இப்போதோ 13 பேருக்கு ஒருவர் என அரசாங்க உத்தியோகத்தில் உள்ள ஆளணி உயர்ந்துள்ளது என்கிறார். 

இலங்கையின் அரச கட்டமைப்பில் உள்ள ஊழியர்களின் தொகையானது இலங்கையின் பொருளாதார நிலைமைக்கு பொருத்தமானதல்ல என்பதனை ஏற்கனவே இக்கட்டுரைத் தொடரின் முன்னைய ஒரு பகுதியில் விரிவாக பார்த்துள்ளோம். அமைச்சரும் அதனை ஒரு பெரும் சுமை என்றே குறிப்பிடுகிறார். ஆனால் இங்குள்ள முக்கியமான பிரச்சினை என்னவென்றால் இவ்வாறாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதில் இராணுவம் மற்றும் பொலிஸ் கட்டமைப்பில் உள்ளவர்களின் தொகை மிக அதிகமாகும். அதே போல பொது நிர்வாக கட்டமைப்பிலும் மிக அதிகமானவர்கள் உள்ளனர். ஆனால் அதனைக் குறைப்பது பற்றி எந்த எண்ணமோ அல்லது திட்டமோ அரசாங்கத்திடம் இல்லை என்பது வெளிப்படையான ஒன்றாகும். இப்போது ஏன் அரசாங்கம் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக இவ்வளவு நிதியை ஒதுக்குகிறது எனக் கேட்கின்ற முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் அவர் பிரதமராக இருந்த காலத்திலும் அதனையேதான் செய்தார். எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வந்தாலும் அதில் எந்த மாற்றமும் செய்ய மாட்டார் என்பதே இங்குள்ள நிலைமை. எனவே அரச கட்டமைப்பில் மிக அதிகமாக ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி நிதி அமைச்சர் வெளியிட்ட கருத்தில் அவரின் நிஜமான கவலை தெரிகிறதா அல்லது தனது இயலாமையை வெளிப்படுத்துகிறாரா என்பதே கேள்வி. 

ஐந்தாவதாகஇது மேலே நான்காவதாக விபரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கையோடு தொடர்புடையது. அதாவதுஇந்த ஊழியர்களுக்கு சம்பளமாகவும் மற்றும் மேலதிகமான கொடுப்பனவுகளாகவும் வழங்கப்படுகின்ற தொகை மற்றும் முன்னாள் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிற தொகை ஆகியவற்றின் மொத்தமானது 2022ம் ஆண்டுக்கான அறிக்கையின் படி சுமார் 100000 (ஒரு லட்சம்) கோடி ரூபாக்களாகும். அது மட்டுமல்ல இவை வரவுசெலவுத் திட்டத்தில் வருடாவருடம் பெரும் பாய்ச்சலில் அதிகரித்துச் செல்வது இங்கு தவிர்க்க முடியாததாகி விட்டது. நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக அல்லது 3 சதவீதமாக இருக்க அரச ஊழியர்களுக்கான மொத்த  கொடுப்பனவுகள் வரவு செலவுத்திட்டத்தில் 10 சதவீதம் அல்லது 15 சதவீதமென உயர்ந்து செல்வதனை அவதானிக்க முடிகிறது.  

ராஜபக்சாக்கள் தேர்தலில் வெல்வதற்காகவோ என்னவோ 60000 பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாகப் படித்த 100000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வாக்குறுதிகளை வழங்கினார்கள். பத்தாம் வகுப்பும் சித்தியடையாத இளைஞர்கள் தமக்கும் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றே புரிந்து கொண்டார்கள். ராஜபக்சாக்களைச் சார்ந்த உள்ளுர் அரசியல்வாதிகளும் அவ்வாறேதான் இளைஞர்களுக்கு அபிப்பிராயத்தை ஏற்படுத்தினார்கள். ராஜபக்சாக்கள் தேர்தல்களை வென்றார்கள். இன்று ஏதோ! அரச கட்டமைப்பில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை இப்போது இந்த ஆண்டில்த்தான் அதிகரித்து விட்டது போல கவலையை வெளியிடுவது சரியானதல்ல.   

53000 பட்டதாரி இளைஞர்களை பயிற்சி அலுவலகர்களாக சேர்த்தார்கள். இப்போது அவர்களை நிரந்தர அரச ஊழியர்களாக ஆக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதால் மேலதிகமாக 2750 கோடி ரூபாவை அதற்கென ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஏற்கனவே நாட்டில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மொத்தம் 10500 கோடி ரூபாவை அரசு செலவு செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்தால் நெருக்கடிக்குள்ளான அரசாங்கம் அதற்காக மேலதிகமாக 3000 கோடி ரூபாவை ஒதுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.  

இப்போது இலங்கை அரச ஊழியர்கள் தொழிற் சங்க சம்மேளனம்‘ அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு கேட்டு அரசாங்கத்துக்கு 28 நாட்கள் தவணை கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் அரசாங்கம் தமக்கு சாதகமான முடிவை எடுக்கவில்லையென்றால் தமது அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஏழு லட்சம் (700000) அரச ஊழியர்களையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட வெற்றியானது அனைத்து அரச ஊழியர்களையும் சம்பள உயர்வு கேட்டு போராடுவதற்கான நியாயத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அப்படி ஒரு போராட்டம் தொடங்கப்பட்டால்அதற்காக மேலதிகமாக குறைந்தபட்சம் 10000 (பத்தாயிரம்) கோடி ரூபாக்களை ஒதுக்க நேரிடும். இல்லாவிடின் இந்த அரசாங்கத்தின் இருப்பே ஒரு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும்.  

அரசுக்கு வரிகளால் வரும் வருமானம் குறைவு 

மக்களுக்கோ வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது 

உண்மையில் அரச ஊழியர்கள் அனைவரும் சம்பள உயர்வு கேட்பதற்கு அடிநாதமாக இருப்பது அத்தியாவசியப் பண்டங்களுக்கான விலைகளெல்லாம் குதிரைப் பாய்ச்சலில் உயர்ந்து செல்கின்றமையே. அரச ஊழியர்களாக மிக அதிக அளவில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் வருமானமோ மிக மோசமான நிலையில் உள்ளது. அதையும் நிதி அமைச்சரே – உலகின் பெரும்பாலான நாடுகள் அவர்களது மொத்த தேசிய வருமானத்தில் 18 சதவீதம் தொடக்கம் 25 சதவீதமளவுக்கு வரிகள் மூலமாக தமது அரச வருமானத்தைத் திரட்டுகிறார்கள். ஆனால் இலங்கையிலோ 2021ல் அது 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது – என்கிறார்.  

இலங்கையிலும் 1995ம் ஆண்டு வரை அரச வருமானம் மொத்த தேசிய வருமானத்தில் 18 சதவீதத்துக்கும் அதிகமாகத் தான் இருந்தது. அப்படியென்றால் எப்படி – என்ன காரணங்களால் இப்போது 10 சதவீதத்துக்கும் குறைவான நிலைக்குச் சென்றது?. அது பற்றி எந்த விளக்கத்தையம் நிதி அமைச்சர் முன் வைக்கவில்லை.  

2027ம் ஆண்டில் 18 சதவீதத்துக்கும் அதிகமான நிலைக்கு இலங்கை அரச வருமானத்தை உயர்த்த முடியும் என நிதி அமைச்சர் ஒரு சோதிடனின் பாணியில் சொல்கிறாரே தவிர அதனை எப்படி சாதிக்க முடியும் என்பதற்கான விபரத்தையோ விளக்கத்தையோ அவர் முன்வைக்கவில்லை. அத்துடன் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளைக் குறைப்பதற்கான எந்த வழி முறையையும் நிதி அமைச்சர் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான எந்த வழி முறையும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் பற்றிய கண்ணோட்டத்தின் தொடர்ச்சியை இக்கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதியான 20ல் தொடரலாம்.