பஜ்ஜட் மறுவாசிப்பு…! (காலக்கண்ணாடி 63)

பஜ்ஜட் மறுவாசிப்பு…! (காலக்கண்ணாடி 63)

இலங்கையின் பாரம்பரிய பொருளாதாரப் பண்புகளும் ஜதார்த்தமும்…! 

தமிழ்த்தேசிய அரசியலின் தில்லும் முல்லும்….!! 

     — அழகு குணசீலன் — 

வெஸ்ற்மினிஸ்டர் பாராளுமன்ற அமைப்பு முறையோடு இணைந்த அதே பாணியிலான வரவு செலவுத்திட்டம் இலங்கையின் தனித்துவ சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு தரக்கூடிய தீர்வு என்ன? காலனித்துவ ஆட்சி முதல் தொடர்கின்ற இந்த பண்பியல் இலங்கை மக்களை மானிய, மற்றும் சமூக உதவித்திட்டங்களில் தங்கி இருக்கின்ற சமூகமாகவும், தேசமாகவும் மாற்றியுள்ளது. சுதந்திரம் பெற்று மூன்று கால் நூற்றாண்டுகளைத் தொடுகின்ற நிலையிலும் இந்த பொருளாதாரத்தில் இருந்து விடுபட முடியவில்லை. மக்கள் மனநிலையிலும் கூட பாரிய மாற்றங்கள் இன்றி அரச மானியங்களையும், உதவிகளையும், இலவசச் சேவைகளையும், அரசாங்க உத்தியோகத்தையும் எதிர்பார்க்கின்ற அன்றைய காலனித்துவ பொருளாதாரகால மனநிலையே புரையோடிப்போயிருக்கின்றது. 

இத்தனைக்கும் இலங்கை மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் ஜதார்த்த வாழ்வியலானது வெஸ்ற்மினிஸ்டரில் இருந்து வெகு தூரம் விலகி நிற்கின்றது. பொதுவாக ஒரு நாட்டில் மக்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை சேமிக்கின்றனர். இலங்கையில் இந்த சேமிப்பில் ஒரு பகுதி வங்கி நடைமுறைகளில் இருந்து விலகி பாரம்பரிய சேமிப்பு மூலங்களுக்கூடாக மேற்கொள்ளப்படுகிறது. அதாவது சேமிக்கப்பட்ட பணம் தங்கமாக மாற்றப்படுகிறது. சீட்டுப்போடுதல் சேமிப்பின் முக்கிய ஒரு வழிமூலமாக சட்டரீதியான வங்கி முறைக்கு சமாந்தரமாக மேற்கொள்ளப்படுகிறது. சேமிப்பு வீடுவளவு, காணி போன்ற அசையா ஆதனங்களிலும், அசையும் சொத்துக்களிலும் முதலிடப்படுகிறது. இந்த மூன்று முக்கிய சேமிப்பு மூலங்களினதும் இலக்காக இலங்கை மக்கள் மத்தியில் நிலவும் சீதனம் அமைகின்றது. மேலும் சேமிப்பானது அசையும் சொத்தான கால்நடைகளிலும், சாதாரண கிராமிய மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. 

தங்கம், அசையா சொத்துக்கள் மீதான முதலீடானது பொதுவாக உற்பத்தி ரீதியான வருமான அதிகரிப்பால் அன்றி சந்தைகளின் பெறுமதி அதிகரிப்பின் ஊடாக ஏற்படுகிறது. சேமிப்பினை வீடு ஒன்றை அமைப்பதற்கு பயன்படுத்தும்போது அது கட்டிடத்துறை சார்ந்த ஒரு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தமுடியும். விவசாயக்காணிகளாக, வர்த்த நடவடிக்கைகளுக்கான காணிகளாகவும், கட்டிடங்களாகவும் அமையும்போது அது முதலீட்டின் ஊடான உற்பத்தியை அதிகரித்து பொருளாதாரத்தின் பணச்சந்தையில் வருமானப்பாய்ச்சலை ஏற்படுத்துவதுடன், துறைசார்ந்த வேலை வாய்ப்புக்களையும், மீள்முதலீட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும். கிராமங்களில் இடம்பெறுகின்ற வட்டிக்கு கடன் கொடுக்கின்ற நடைமுறை கூட ஒரு வர்த்தக வங்கியின் நடைமுறைக்கு சமாந்தரமாக இடம்பெறுகிறது. கால்நடைகள் மீதான முதலீடும் ஒரு வருமான மூலமாக அமைகிறது. 

கிராமியத்துறையில் இடம்பெறுகின்ற சில சேவைகள் உற்பத்தித்துறையும், பண்டங்கள் உற்பத்தித்துறையும் ஒரு கணிசமான அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், மொத்த தேசிய வருமானத்திலும் கணக்குக்கு வராமல் இருக்கும் நிலை இன்னும் உள்ளது. மறுபக்கத்தில் திறந்த பொருளாதாரம் கலைகலாச்சாரம், பண்பாடு, சமயம் அனைத்தையும் பணக் கொடுக்கல்வாங்கல்கள் சார்ந்த சந்தைப்பொருளாதாரத்திற்குள் இழுத்துவிட்டிருக்கின்ற நிலையிலும், கிராமங்கள் மட்டத்தில் இன்னும் குறைந்தளவிலாவது சேவைகள், பண்டங்கள் பரிமாற்றம் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்கு அப்பாலும் இடம்பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

இலங்கை மக்களின் பாரம்பரிய பொருளாதாரப் பண்பியலானது நவீன பொருளாதார நடைமுறைகளுக்கு சமாந்தரமாக இயங்கிக் கொண்டிருப்பது சந்தைப் பொருளாதாரம் சார்ந்த அபிவிருத்திக்கும், வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது. பாரம்பரிய சேமிப்புக்களான தங்கம், சீட்டு, வங்கியில் வைப்பில் இடப்படாத ரொக்கப்பணம் போன்றவை ஒருவகையில் பணச்சந்தையில் ஒரு கள்ளப்பணச் சந்தையை ஏற்படுத்துகிறது. எந்த பொருளாதாரத்தில் மக்கள் அதிகம் சேமிக்கிறார்களோ அங்கு அவர்கள் செலவழிக்கவில்லை என்பது கருத்து. இதனால் அவர்கள் பெற்ற வருமானம் பணச்சுற்றோட்டத்தில் கலங்கவில்லை. இது பணச்சுழற்சியை பாதிக்கிறது. மக்கள் தாம்பெற்ற வருமானத்தை நுகர்வுக்கோ, முதலீட்டிற்கோ பயன்படுத்தும் போது இதற்கு எதிர்மாறான நிலை ஏற்படும். 

அதனால் நாட்டின் தேசிய வருமானத்தின் ஒரு பகுதி பணச்சந்தையில் புழக்கத்திற்கு விடப்படாமல் வெவ்வேறு வடிவங்களில் பதுக்கப்படுகிறது. இது பொருளாதாரத்தின் மீள்முதலீட்டிற்கு தடையாக அமைவதால் பொருளாதார வளர்ச்சியும், அபிவிருத்தியும் பின்னோக்கி தள்ளப்படுகின்றன. 

இந்த நிலையில் இலங்கையின் சமூக பொருளாதாரக் குறிகாட்டிகள், புள்ளிவிபர ஆய்வுகள் தொடர்பான நம்பிக்கைத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பவேண்டி உள்ளது. இதனால் வரவு செலவுத்திட்டங்கள் கூட ஒரு பகுதி பொருளாதார நடவடிக்கைகளைப் புறக்கணித்து நவீன சமூகம்சார்ந்த முதலாளித்துவ, நடுத்தர வர்க்கம் சார்ந்தே பேசுகின்றன என்று கொள்ளமுடியும்.  இதனால் முதலாளித்துவ அரசியலானது இத்தரப்பினரின் நலன்சார்ந்த வரவு செலவுத்திட்டத்தையே முன்மொழிவதாக அமைகிறது. 

இலங்கையின் சமகால சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு சுற்றி சுற்றி அதே வட்டத்தில் சுழல்கின்ற போக்கில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். அதுவே வேலையின்மை, அந்நியச் செலாவணிப் பிரச்சினை, முதலீட்டுப்பற்றாக்குறை, தேசிய வருமானவீழ்ச்சி, கடன் சுமை என்பனவற்றில் இருந்து மீண்டு நீண்டகால பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் அடைவதற்கான வழியாகும். இதற்கு சுய இலாப கட்சி அரசியலுக்கு அப்பால் ஆளும், எதிர்தரப்புக்கள் இணைந்து தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான தேசிய பொருளாதாரக் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கவேண்டும். சிறிமாவோவின் ஐந்து ஆண்டுத் திட்டம், ஜே.ஆரின் மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பாரிய திட்டங்கள் தேவை. அன்றைய திறந்த பொருளாதார காலத்திற்கு ஏற்ற சுந்திரவர்த்தக வலையம் போன்று இன்றைய உச்சக்கட்ட உலகமயமாக்கலுக்கு ஏற்றதே கொழும்பு போர்ட் சிற்றி திட்டம். 

இந்த பாரிய திட்டங்கள் கிராமிய வாழ்வியலை அழித்துவிடாமல் சம காலத்தில் சமாந்தரத்தில் கிராமிய சிறுதிட்ட அபிவிருத்திகளை சாமானிய மக்களின் நலன்சார்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கங்களுக்கு உண்டு. இன்றைய அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பல திட்டங்கள் இந்த அணுகுமுறையையே வெளிப்படுத்துகின்றன. சுதேசிய தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிய பாதைக்கு அருகாக இன்னொரு பாதை அமைக்கப்படுகிறது. அதுதான் விதேசிய முதலீட்டுப்பாய்ச்சலை அதிகரிப்பதற்கான பாதை. மிகையாக உள்ள தேசிய வளங்களான நிலம், தொழிலாளர் இவற்றைப் பயன்படுத்துவதற்கு பற்றாக்குறையாக உள்ள முதலீட்டையும் முதலீட்டாளர்களையும் வெளிநாடுகளில் இருந்து ஈர்க்க வேண்டிய தேவை அவசியமாகிறது. இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமான சூழலையும், சலுகைகளையும் மற்றைய நாடுகளுக்கு போட்டியாகவும், அதிகமாகவும் வழங்கவேண்டும். 

அதைவேளை தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் கட்டுப்பாடு நடைமுறைகளுக்கூடாக பாதுகாக்க வேண்டிய தேவை எந்த ஒரு அரசாங்கத்திற்கும் உண்டு. இந்த இருவேறுபட்ட வளர்ச்சி அளவுகளைக் கொண்ட நவீன, பாரம்பரிய பணச்சந்தை செயற்பாடுகளுக்கு இடையே ஒரு சமநிலையைப் பேணவேண்டிய தேவை அரசாங்கத்தின் வரிக்கொள்கை, நாணயக்கொள்கை என்பனவற்றை நடைமுறைப்படுத்துகின்ற திறைசேரிக்கும், மத்திய வங்கிக்கும் உண்டு.  

இதுவே வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை விளங்கிக் கொள்வதற்கான அடிப்படையாகும். பற்றாக்குறை வரவு செலவுக் திட்டம் அபிவிருத்திக்கு அவசியமானது. இங்கு கவனிக்கப்படவேண்டியது அங்கு அதிகரிக்கின்ற செலவு முதலீடு சார்ந்ததா? அல்லது நுகர்வு சார்ந்ததா? என்பதாகும். 

தமிழ்த்தேசியத்தின் சமூகபொருளாதாரக் கொள்கைதான் என்ன

தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசிய கட்சிகள் முதலாளித்துவ ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளையே ஆதரித்தும், அதன் பங்குதாரராகவும் இருந்துள்ளன. இதற்குக் காரணம் இடதுசாரி முன்னணிக் கட்சிகள் சமூகநீதியை வலியுறுத்தியமையும், சோஷலிசம் சார் பொருளாதாரக் கொள்கைகளை வர்க்க வேறுபாடுகளை கவனத்திற்கொண்டு நடைமுறைப்படுத்தியமையாகும். இதனால் தமிழ் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் இடதுசாரி அரசியலோடு இணைந்து இருந்தமையால் தமிழ் தரகு முதலாளிகள் அதற்கு எதிரான தரப்போடு சேர்ந்து கொண்டனர். 

அகிம்சைப் போராட்டக் காலத்திலும் சரி, ஆயுதப் போராட்டக் காலத்திலும் சரி, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும் சரி இந்த அடிப்படையில் பாரிய மாற்றங்கள் எதுவும் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் ஏற்படுத்தப்படவில்லை. புலிகளின் வரவு செலவுத்திட்டமும் சுதேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பி குறுகிய காலத்திற்கு தேசிய முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு பதிலாக அதனை அழித்தது. அதே நிலையே சமூகத்திலும் உள்ளது. ஆயுதம் ஓய்ந்தபின் வடக்கில் நடந்து கொண்டிருக்கின்ற சமூகச் சண்டைகளும் வாள்வெட்டுக்களும், கத்திக்குத்துக்களும் இடம்பெற வாய்ப்பிருந்திருக்காது. இன்னொரு வகையில் இது போதனைகள் அற்ற சாதனைகள் விட்டுச்சென்ற எச்சங்கள் என்று சொல்லலாம். அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி பாராளுமன்றத்தில் ஒரு தடவை இவ்வாறு சொன்னார். “நாங்கள் சிங்களவர்கள் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலேயே சாதிச்சமூகக் கட்டமைப்புக்கு சமாதி கட்டிவிட்டோம், நீங்கள் தமிழர்கள் அதனை இன்னும் கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.” இந்தக் கருத்து சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் லலித்துக்கு சமாதிகட்டி இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் அவர் சொன்னது உண்மை என்பதை நீரூபித்துக் கொண்டிருக்கிறோம். 

இதற்கு காரணம் சமூக நீதி, பொருளாதார நீதி என்பனவற்றை தவிர்த்த தமிழ்த்தேசியத்தின் வெற்று அரசியலே. இராசலிங்கத்தினை எம்.பி ஆக்குவதன் மூலமும், தமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பதவி வழங்குவதன் மூலமும் எங்களால் இதனைச் சாதிக்க முடியவில்லை. இது கூட தரகு முதலாளித்துவம் சார்ந்ததே என்பதை போதனையற்ற அரசியல் அறிந்திருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகவே  தமிழ்த்தேசிய பாராளுமன்ற இன்றைய அரசியலின் பொருளாதார, சமூக அணுகுமுறையை நோக்கவேண்டி உள்ளது. வரவு செலவுத்திட்டமும் அண்மைக்கால சில போராட்டஙகளும் இதை வெளிக்காட்டி நிற்கின்றன. 

சுமந்திரன் : 

மீனவர்களின் பிரச்சினைகளுக்கும், கடல் வளத்தை பாதுகாக்கவும் தனிநபர் சட்டமூலத்தைதான் சமர்ப்பித்தாக கூறும் அவர், இது விடயமாகவும், கடலில் நடாத்திய போராட்டம் தொடர்பாகவும் வெளியிட்ட கருத்துக்கள் அவரை ஒரு சுற்றாடல் பாதுகாவலராக வெளிக்காட்டியது. ஆனால் மீனவர்களோ அவரின் பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தினர். 

மேலும் அவர் ‘விவசாயி’ படம் ஒன்றின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இங்கு சேதனப்பசளை சுற்றாடலின் நிலவளப் பாதுகாப்புக்கு அவசியமானது என்று அவர் வலியுறுத்தியதாக பதிவுகள் இல்லை. மாறாக தென் இலங்கை அரசியல்வாதிகளுடன் இணைந்த திட்டமிடலில் தான் ஆரம்பித்து வைத்ததாகக் கூறினார். தென் இலங்கை அரசியல்வாதிகளுடன் இணையக்கூடாது என்பதல்ல, அதற்கு முன்னர் பங்காளிகள் கட்சிகளும் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை. கடலில் சுற்றாடல் பாதுகாப்பை வலியுறுத்தும் சுமந்திரன், நிலத்தில் சேதனப்பசளை அறிமுகமும் சுற்றாடல் பாதுகாப்பின் ஒரு அம்சம் என்பதை மக்களுக்கு சொல்ல மறுத்து மக்களை வீதிக்கு இறக்குகிறார். இது இவர்களின் சமூக, பொருளாதார கொள்கைசார் வங்குரோத்து. யாழ்.குடாநாட்டின் தோட்ட விவசாயிகளுக்கும், வன்னி பெருநிலப்பரப்பின் விவசாயத்திற்கும் இது மிக முக்கியம் என்பதை மறந்துவிடுகிறார். ஏனெனில் தமிழ்தேசியத்திற்கு சமூக, பொருளாதார கொள்கைத்திட்டங்கள் எதுவும் இல்லை. மண்காப்பு என்பது அதன் வளத்தையும் காப்பதை குறிக்கவில்லையா? 

சிறிதரன் : 

பாராளுமன்றத்தில் தமிழ் டயஸ்போரா பற்றி அதிகம் பேசுகின்ற ஒருவர் சிறிதரன். தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் மீதான தடை பற்றியும், தமிழ் டயஸ்போரா இலங்கையில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோருகின்றவர். ஜனாதிபதியின் டயஸ்போராவுக்கான அழைப்புக்கு தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் சந்தர்பத்தைப் பயன்படுத்தி சாதகமான சைகைகளை வழங்கியிருந்தால் இந்த விடயத்தை ஓரளவுக்கு நகர்த்தி இருக்கமுடியும். ஏனெனில் தமிழ் டயஸ்போராவின் ஒரு பகுதியினர் வெளிப்படையாகவே தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். அதற்கு சிறிதரன் போன்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. உண்மையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் தமிழ் டயஸ்போராவுக்கு அஞ்சுகின்றது. அவர்கள் இலங்கைக்குள் அரசியல், பொருளாதார ரீதியாக நுழைந்தால் தங்கள் அரசியல் காலாவதியாகிவிடும் என்று நினைக்கின்றனர். 

அரசியல் அமைப்பின் இருபதாவது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமையும், ஜனாதிபதி வேட்பாளரின் வயது நிர்ணயமும் தமிழ் டயஸ்போராவுக்கு சாதகமானவை. இரட்டைக்குடியுரிமை டயஸ்போராவின் முதலீட்டு முயற்சிகளுக்கும், அவர்களின் பொருளாதார அரசியல் பிரவேசத்திற்குமான கதவை திறந்துவிட்டது. ஆனால் அவை இராஜபக்சே குடும்பத்திற்கானவை என்று  இவர்கள் இருபதாவது திருத்தத்தை எதிர்த்தார்கள். இதனூடாக டயஸ்போராவுக்கு சாதகமான சில காய் நகர்வுகளையாவது செய்திருக்கமுடியும். எனவே தான் இந்த அரசியல்வாதிகள் யாரின் நலன் சார்ந்து செயற்படுகிறார்கள் என்று கேட்க வேண்டி உள்ளது. 

சாணக்கியன்: 

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் கிராமங்களுக்கு மூன்று இலட்சம் நிதி ஒதுக்கீடு எதற்கு? இது தேர்தலுக்காக செய்யப்படுகிறது என்கிறார். பிரதேச சுயாட்சிக்கோட்பாடு பற்றிய சாணக்கியனின் அறிவியல் என்ன என்று கேட்காமல் இருக்க முடியாது. வடக்கு கிழக்குக்கு சுயாட்சி அதிகாரத்தைக் கோரும் ஒரு கட்சியின் பிரதிநிதி மட்டுமல்ல அவர், உரிமைக்காக போராடும் ஒருவரும் கூட. இது கிராமங்களின் உரிமை என்பதை சாணக்கியன் தெரிந்திருந்தால் கிடைக்கின்ற நிதியை எதற்கு என்று கேட்டிருக்கமாட்டார். அதற்கு முழுமையாக அரசியல் சாயமும் பூசியிருக்கமாட்டார். வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்கள் எத்தனை? தலா ஒரு கிராமத்திற்கு மூன்று இலட்சம் எனில் வடக்கு கிழக்கு பெறக்கூடிய நிதித்தொகை எவ்வளவு? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை விடவும் அதிக நிதியை வடக்கு கிழக்கு மக்களுக்கு இத்திட்டம் வழங்குகிறது. கிராமிய நிதி ஒதுக்கீடு தேர்தலுக்கானது என்றால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு உங்களால் கட்சி அரசியல் இலாபம் சார்ந்து பயன்படுத்தப்படவில்லையா? 

மத்தியில் குவிந்திருந்த அதிகாரத்தை பரவலாக்கும் ஒரு திட்டமே உள்ளூராட்சி அமைப்புகள். அவற்றின் கூறுகளான மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை என்பன மாகாணசபை கட்டமைப்புக்குள் இயங்குகின்றன. தற்போது இதற்கப்பால் கிராமத்திற்கும் மத்தியில் இருந்து நிதிப்பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நீதி கிராம மக்களின் தீர்மானம் எடுக்கும் உரிமையோடு பயன்படுத்தப்படவுள்ளது. இது அதிகாரப்பகிர்வின் இறங்குநிலை படிக்கட்டு அரசியல் கோட்பாடு. இதைப்புரிந்து கொள்ளாது மக்களுக்கு கிடைக்கின்ற நிதியை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் கேள்வி எழுப்புவது மக்களின் உரிமையையும் இறைமையையும் மறுப்பதாக உள்ளது . 

இந்த முரண்பாடான செயற்பாடுகள் தமிழ்த்தேசிய அரசியலில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் கட்சிக்கு சமூக, பொருளாதாரக் கொள்கை எதுவும் இல்லாததால் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடுகின்றனர். கூட்டமைப்பில் கூட்டு முடிவும், கூட்டுச்செயற்பாடும் இல்லை. இந்த நிலை அரசியலின் மிகப் பலவீனமான பக்கம். இதனால் இவர்கள் கொள்கைகளும் கோட்பாடுகளும் அற்று முன்னுக்குப் பின் முரண்பாடுகளோடு கருத்துக்களை வெளியிடுகின்றனர். இது ஒரு ஆரோக்கிய அரசியலை நோயாளியாக்ககுவதைத் தவிர வேறொன்றையும் செய்யாது. போலி அரசியல் டாக்டர்களால் சமூகத்திற்கு சிகிச்சை அளிக்க முடியாது, இதைத்தான் செய்யமுடியும். 

முக்கிய முன்மொழிவுகளின் பின்னணியில்…..! 

இலங்கை அரசாங்கத்தின் 2022 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் அரங்கேறி விவாதங்கள் தொடர்கின்றன. இது ஒரு அலுப்பு, சலிப்பான வரவுசெலவுத்திட்டம். ஆகா… ஓகோ…. என்று பேசுவதற்கு அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. கலாநிதி என்.எம்.பெரேரா போன்ற துறைசார் நிபுணர்களின் வரவு செலவுத் திட்டம் இல்லை இது. இரவோடிரவாக பழைய நாணயத்தாள்களை செல்லுபடியற்றதாக்கி, தனியார் உடைமைகள் அரசு உடமை ஆக்கப்பட்டு, நிலச்சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டது போன்ற ஊகங்கள் நிறைந்த ஒன்றல்ல பஸீல் ராஜபக்வின் இந்த வரவு செலவுத் திட்டம். வழமைபோல் பத்தோடு பதினொன்று என்று சொல்லலாம். 

ஆனால் என்.எம்.பெரேராவின் வரவு செலவுத் திட்டத்தில் கூப்பன் அரிசி பேசுபொருளாக இருந்தது போல் இன்று சேதனப் பசளை பேசுபொருளாகி இருக்கிறது. அன்று மூடிய பொருளாதாரத்தை அறிவித்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து மரவள்ளிக்கிழங்கை மகுடம் ஏற்றியதற்குப் பதிலாக, இன்றைய உலகமயமாக்கலில் மூடியும், திறந்தும் ஒரு பொருளாதார சமநிலையை அடைய அரசாங்கம் முயற்சிப்பது தெரிகிறது. கிராமிய அபிவிருத்தியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும், சேதனப்பசளையும் முதலிடம் பெறுகின்றன. உலக நாடுகள் பலவும் இது விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் பொருள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டது, உற்பத்தி முறை எவ்வாறானது, சுற்றுச்சூழலுக்கு பாதகமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா, ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயன உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா?, இவ் உற்பத்தித்துறையில் மனித உரிமை எவ்வாறு பேணப்படுகிறது, சட்டத்திற்கு முரணாக சிறுவர் உழைப்பு பயன்படுத்தப்படுகிறதா போன்ற பல கேள்விகளை எழுப்பியே நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்கிறார்கள். இதனால் நாடுகள் சந்தையிலும் போட்டிகளை எதிர்நோக்குகின்றன. 

1970களில் இந்தியாவில் இந்திரா காந்தியின் கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுக்கொள்கை அவரின் ஆட்சியைக் கவிழ்த்தியது. அதேபோல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கட்டுப்பாடான மூடிய பொருளாதாரக் கொள்கை அவரின் ஆட்சியைக் கவிழ்த்தியது. இதன் அர்த்தம் இந்த இரண்டு கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை என்பதல்ல. மக்கள் நாட்டின் நீண்டகால சமூக, பொருதார, அரசியல் அபிவிருத்தி சார்ந்து அறிவூட்டப்படவில்லை. மாற்றங்களை ஏற்கத்தயாராக இருக்கவில்லை. குறுகிய கால நலன்களையே முதன்மைப்படுத்தினர். இந்திரா பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு மத விழுமியங்களுக்கு எதிராக மோதினார் என்றால், சிறிமாவோ காலனித்துவத்தால் கையளிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக மோதினார். இருவரும் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். இவ்வாறான சூழல் எதிர்தரப்பு அரசியல்வாதிகளுக்கு பெரும்பாலும் வாய்ப்பாக அமைகிறது. இன்றைய கொரோனா அசாதாரண சூழலில் இலங்கையின் நிலையும் அதுவாகத்தான் உள்ளது. அசேதனப் பசளை ஆட்சியைக் கவிழ்க்குமா? என்று கேட்கவேண்டி உள்ளது. 

இந்தியாவின் பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகள் போன்று இலங்கையின் கொள்கை நிலையானதாக அமைவதில்லை. அரசாங்கங்கள் மாறும்போது அவை மேற்கு சார்ந்தும், கிழக்கு சார்ந்தும் திறந்தும் மூடிக்கொண்டும் இருக்கும். இந்தியாவில் ஆட்சிகள் மாறியபோதும் அடிப்படைக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதில்லை என்பதால் கொள்கைகள் தொடர்கின்றன. நீண்டகால பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி நோக்கி தேசத்தை நகர்த்த முடிகிறது. அப்படி மாற்றங்கள் ஏற்பட்டால் பூகோள அரசியலின் இந்திய தேசிய நலன்சார்ந்ததாகவே அவை இருக்கும். இதில் கட்சி அரசியல் முதன்மைப்படுத்தப்படுவது குறைவு. இலங்கையில் கட்சி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு -செலவுத்திட்டம் புறக்கோட்டை மொத்த வியாபாரிகளையும், பேருவளை இரத்தினக்கல் முதலாளிகளையும் திருப்திப்படுத்துவதற்கானதல்ல. அதேவேளை சாதாரண மக்களின் அபிலாஷைகளும், எதிர்பார்ப்புக்களும் குறுங்கால இலக்கை கொண்டவையாக இருப்பதால் அவர்களுக்கும் திருப்தி ஏற்படவில்லை. அசாதாரண கொரோனா சூழலில், உலகநாடுகளில் மூன்றாவது கொரோனா அலை அடிக்கத் தொடங்கியிருக்கின்ற இன்றைய சூழலில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. 

(*) அரச, தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம் அல்லது புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் துறையில் ஆகக்குறைந்த ஓய்வூதிய வயது 60 ஆகவும், அரசதுறையில் இது 55 இல் இருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது எப்பவோ செய்திருக்க வேண்டிய ஒன்று. இலங்கையில் இலவச வைத்திய வசதியானது ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கிறது. அதிகமானோர் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு, இன்னொரு தொழிலையும் செய்யும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கின்றனர். இந்த முன்மொழிவு இந்த முரண்பாட்டை திருத்துகிறது. மறுபக்கத்தில் வயது அதிகரிக்கப்பட்டிருப்பதனால் வேலைக்கான வெற்றிடங்கள் குறைவாக இருக்கும். இது இளவயதினரின் வேலையின்மையை அதிகரிக்கும். இதற்கான சரியான மாற்றுத்திட்டம் என்ன என்பது இன்னும் தெளிவாக இல்லை. இளைஞர் யுவதிகளுக்கு அரச உத்தியோக கவர்ச்சியைக் குறைத்து, காணிகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் மட்டும் இதனை நிட்சயமாக சாதிக்கமுடியாது. அதேவேளை மிகையாகவும், சுமையாகவும் அரசதுறையில் குவிந்து கிடக்கின்ற ஊழியர்களை பரவல்படுத்துவதற்கான திட்டம் என்ன? 

(*) ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு 30,000 மில்லியன் ரூபாவால் அரச செலவை நடைமுறைச் செலவை அதிகரிக்கின்றது. 53,000 பயிலுனர் பட்தாரிகள் நிரந்தர நியமனத்தைப் பெறுகின்றனர். இது ஒருவகையில் மற்றைய துறைகள் சார்ந்த அரச ஊழியர்களைப் புறக்கணிப்பதாக இருந்தாலும் கடந்த கால்நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் தீர்வுகாணாத ஒரு விடயத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அன்றாட உழைப்பாளர்களான 7 இலட்சம் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு நிவாரணமாக 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது இன்றையகாலத்தில் முக்கியமான ஒன்று. மேலும் பாடசாலை போக்குவரத்து துறைக்கு 400 மில்லியன் ரூபாவும், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு உதவுதொகையாக 1500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாகாலத்தில் வருமான இழப்பை சந்தித்த துறையாக இது உள்ளது. 

(*)  உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சாரக்கட்டணம் 10 வீதம் குறைக்கப்பட்டிருப்தனால் சகல தரப்பினரும் நன்மை பெறமுடியும். புதிய வர்த்தக முயற்சிகளுக்கு பதிவுக்கட்டணங்கள் இருந்து விலக்கு. மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கு தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படுவது வெளிநாட்டு முதலீட்டைக் கவரும் முயற்சியாகும். உலகின் முக்கியமான நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்கு ஆர்வமாய் உள்ளன. மேற்குலகில் அதிகரிக்கும் உற்பத்திச்செலவு இதற்கு காரணம். இது இலங்கையில் விஞ்ஞானத்துறைசார்ந்த பட்டதாரிகள், டாக்டர்கள், இரசாயனவியலாளர்கள், ஆய்வாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். கொரோனா அனுபவத்தின் பின்னர் மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஈர்ப்பதில் பல்வேறு நாடுகளும் போட்டியில் இறங்கியுள்ளன. அரசியல் ஸ்த்திரத்தன்மை, மலிவான ஊழியம், வரிச்சலுகைகள், மூலப்பொருட்கள், மூலிகைகள், பாரம்பரிய வைத்திய அனுபவங்கள் என்பன இலங்கைக்கு சாதகமாக அமையக்கூடும். 

இந்த முயற்சிகளின் ஊடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணியைப் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(*) மேற்கு மாகாணத்தில் மட்டும் குவிகின்ற முதலீட்டாளர்களை பன்முகப்படுத்துவற்காக, வெளிமாகாணங்களில் முதலீடு செய்பவர்களுக்கான நிலம், மின்சாரம், நீர் வசதிகளுடன் அடிப்படைக்கட்டுமான வசதிளும் செய்து கொடுக்கப்படவுள்ளது. இது முலீட்டை பரவலாக்குவதன் மூலம் வளப்பயன்பாடு, வேலைவாய்ப்பு, மற்றும் அடிப்படை வசதிகளையும் பரவலாக்குவதற்கு வாய்ப்பளிக்கும். 

மறுபக்கத்தில் பசுமை விவசாய அபிவிருத்தி சட்டத்தின் மூலம் விவசாயிகளைப் பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்மொழிவு கூறுகின்றது. இதன் ஒரு பகுதியாக சேதனப்பசளை உபயோகிப்பவர்களுக்கு விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மேலும் பால் உற்பத்தி, பத்ரிக் கைத்தொழில் உற்பத்திகளும் ஊக்குவிக்கப்படும். 

சேதனப்பசளை பயன்பாடே இன்றைய அரசாங்கத்தை ஆட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு பிரச்சினையாகும். இது சரியான, சிறந்த, எதிர்காலத்திற்கு உரிய கொள்கையாக உள்ளபோதும் விவசாயிகளால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. இது விடயத்தில் அரசாங்கம் தவறு விட்டுள்ளது. விவசாயிகளுக்கு இது தொடர்பான அறிவூட்டல் போதுமான அளவுக்கு செய்யப்படவில்லை. இதனை படிப்படியாகவும், கட்டம் கட்டமாகவும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. எடுத்த எடுப்பில் இருந்த முறையைமாற்றாது குறிப்பிட்ட கால அவகாசத்தில் இருவகைப் பசளைப் பயன்பாட்டையும் சமாந்தரமாக நகர்த்தி இரசாயனப்  பசளையைக் குறைத்து சேதனப்பசளையை படிப்படியாக அறிமுகம் செய்திருக்கவேண்டும். ஆரம்பத்தில் விவசாயிகள் சுய தேர்வின் அடிப்படையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளித்திருக்கவும் முடியும். நெற்செய்கையில் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. 

விவசாயிகள் சேதனப்பசளை பயன்பாடு தொடர்பாக நிடசயமற்ற தன்மையும், உற்பத்தி வீழ்ச்சியடையும் என்ற அச்சமும் கொண்டவர்களாக உள்ளனர். இந்த நிச்சயமற்ற தன்மையும், அச்சமும் நியாயமானது. நீண்டகாலமாக இருந்த யூரியா பயன்பாட்டு வழக்கிற்கு, வயல் நிலங்களும், விவசாயிகளும் பழக்கப்பட்டு விட்டனர்.  

இது உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அதனை எதிர் கொள்வதற்கான தயார் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதையே இன்று காணக்கூடியதாக உள்ளது. மறுபக்கத்தில் எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்த்து பேசுவது, எதிர்த்து வாக்களிப்பது, முடியாவிட்டால் வாக்கெடுப்பு நேரத்திற்கு சபாநாயகர் மணியடிக்கையில் மெல்ல நழுவுவது போன்ற பொறுப்பற்ற அரசியலே தொடர்கிறது. 

இந்த வரவு செலவுத் திட்டம் யானைப்பசிக்கு சோளப்பொரி…..! 

ஆனால் சாமானிய மக்களின் பானைப்பசிக்கு……?