— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழரசுக் கட்சியின் ஏமாற்று அரசியல்
1949ஆம் ஆண்டிலிருந்து 1964 வரைசுமார் பதினைந்து ஆண்டுகள் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் நடத்திய தமிழரசுக்கட்சி உருப்படியாக எதனையும் சாதிக்கவில்லை. தனது தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலமும் மாநாட்டுத் தீர்மானங்கள் மூலமும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்- ஊட்டிய நம்பிக்கைகள் எதனையும் நிறைவேற்றி வைக்கவில்லை. மாறாக எதிர்மறையான விளைவுகளும் துன்பியல் நிகழ்வுகளும்தான் நடந்தேறின. பின் 1965-1969 வரை எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலுக்கு மாறியது. அதனாலும் எதனையும் சாதிக்கமுடியவில்லை. பின் 1970-1977 வரை மீண்டும் எதிர்ப்பு அரசியலுக்கு மாறியது.
1972-1977 காலப்பகுதியில்தான் தமிழர்களில் ‘அடிமைச் சாசனம்’ என வர்ணிக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்பு (1972)- தமிழர்களின் ஐக்கியப்பட்ட அரசியல் அணியாகத் தமிழர் கூட்டணியின் உருவாக்கம் (1972/74)- யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது நிகழ்ந்த வன்செயலால் ஒன்பது அப்பாவிகளின் உயிரிழப்பு (1974)- தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய வட்டுக்கோட்டை மாநாடு (1976)- தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர் மாற்றம் (1976) என முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.
புதிய குடியரசு அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரசியல் நிர்ணய சபைக்குத் தமிழரசுக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளும் திருத்தங்களும் முற்றாக நிராகரிக்கப்பட்டு முடிவில் தமிழரசுக்கட்சி அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளியேறியது. 1972 மே 22-இல் புதியகுடியரசு அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது. தமிழரசுக் கட்சியின் ‘சமஷ்டி’க்கோரிக்கை முழுத் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியைத் தன் மனச்சாட்சிப்படி ஒத்துக்கொண்ட தந்தை செல்வா ”தமிழர்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
தமிழ் மக்களைக் காப்பாற்றத்தான் ஒரு தலைவன் வேண்டுமேயொழிய “தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என்று சொல்வதற்கு ஒரு தலைவர் தேவையில்லையே. ஆனால் தனது அரசியல் தோல்வியை நேர்மையாகத் தந்தை செல்வா ஏற்றுக்கொண்டதை அவரது தனயன்மார் அதற்குத் தீர்க்கதரிசனமென்று விளக்கம் கொடுத்தார்கள்.
உண்மையில் தமிழரசுக் கட்சி அன்று என்ன செய்திருக்க வேண்டுமென்றால் இப்புதிய குடியரசு அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய நாளன்று தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டுப் பாராளுமன்றத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியிருக்க வேண்டும். இதைத்தான் தமிழ் இளைஞர்கள் தமிழரசுக் கட்சியிடம் வற்புறுத்தினார்கள். அப்படி நடந்திருந்தால் தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டிய திசையை வரலாறு அப்போதே தீர்மானித்திருக்கும்.
ஆனால், தமிழ் இளைஞர்களை ஆசுவாசப்படுத்துவதற்காகத் தந்தை செல்வா மட்டும் தனது காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற ஆசனத்தைத் துறந்து 06.02.1975 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுத் தனது தேர்தல் வெற்றியைத் ‘தமிழர்கள் புதிய குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்பதற்கான அடையாளமெனப் பிரகடனம் செய்தார். அதற்கு முன்னமே புதிய குடியரசு அரசியலமைப்பின் பிரதி ஒன்றினை யாழ்முற்றவெளியில் வைத்துப் பகிரங்கமாகக் குடியரசு தினத்தன்று (22.05.1972) தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதாக அறிவிப்புச் செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளைச் சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது.
‘அகிம்சை’ என்பது அகவயப்பட்ட ஒரு நெறியாகும். அது ‘சத்தியம்’ நிறைந்தது. அது புறச்செயற்பாடுகளால் தீர்மானிக்கப்படுவதல்ல. ‘அகிம்சை’ என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடு எதிரியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அதே எதிரியை ஆத்திரமூட்டுவதாயின் அது வன்முறை சார்ந்ததேயாகும். அடுத்தது இலங்கையின் குடியரசு அரசியலமைப்புப் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்துவது சிங்களச் சமூகத்தைத் தமிழர்கள் சார்ந்த மனமாற்றம் ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஆத்திரமூட்டுவதாகும். அதனால் இச்செயற்பாடு வன்முறை சார்ந்ததே. எனவே அகிம்சை என்று சொல்லிக்கொண்டு தமிழரசுக் கட்சி மேற்கொண்ட இச்செயற்பாடு வன்முறை சார்ந்ததேயாகும். தமிழரசுக்கட்சி ‘அகிம்சை’ பற்றிப் பேசினாலும் அதற்கு உண்மையாக அது நடந்து கொள்ளவில்லை. அகிம்சா தத்துவம் என்பது எதிரி மீது வன்மம் பாராட்டுவதல்ல. அன்பு செலுத்துவதாகும். அன்றியும் கூட்ட மேடைகளில் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இளைஞர்கள் தங்கள் விரல்களைக் கீறித் தலைவர்களின் நெற்றியில் இட்ட இரத்தத்திலகங்களை ஏற்றுப் புளகாங்கிதம் அடைந்தமையும் அகிம்சை சார்ந்த செயற்பாடல்ல. யாராயினும் இரத்தம் சிந்துதல் அகிம்சையின் நோக்கமாகாது.
அடுத்து அவதானிப்புக்குள்ளாக வேண்டிய விடயம் யாதெனில், காங்கேசன்துறைத் தொகுதி வாக்காளர்களின் தீர்ப்பு முழுவடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களினதும் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வது எந்த வகையில் ஜனநாயக ரீதியானது?
மேலும், காங்கேசன்துறைத் தொகுதி இடைத் தேர்தலில் வென்று மீண்டும் பாராளுமன்றம் சென்ற தந்தை செல்வா தமிழீழம் அமைப்பதற்கான தனிநபர் பிரேரணையொன்றினை 04.02.1976 அன்று பாராளுமன்றத்தில் கொணர்ந்தார்.
இங்கே இரண்டு கேள்விகள் இயல்பாக எழுகின்றன.
ஒன்று. 1949இல் இருந்து 1972 வரை அகிம்சா வழி முறைகள் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’யையே பெறுவதற்கு முடியாமலிருந்த சூழ்நிலையில் எதிர்காலத்தில் ‘சமஸ்டி’யை விடத் தீவிரமான தனிநாட்டை அதே அகிம்சை வழிமுறைகள் மூலம் அடைய முடியுமா? என்பது.
அடுத்தது. இலங்கைப் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றினைக் கொண்டுவந்து தனி நாட்டை உருவாக்க முடியுமா? இது உண்மையிலேயே தமிழரசுக்கட்சியின் மக்களை ஏமாற்றும் வழமையான ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியலாகும்.
தமிழர் அரசியலை நுணுகி ஆராய்ந்தால் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் இணைந்த தமிழர் கூட்டணி/ தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கமும் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பெற்ற தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானமும் தமிழ் இளைஞர்களை ஆசுவாசப்படுத்திச் சமாளிப்பதையும் 1977இல் நடைபெற எதிர்பார்த்திருந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்றுக்கொள்வதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதையுமே நோக்கமாகக் கொண்டவை என்பது புரியும்.
1972 குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாமல் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பாராளுமன்ற ஆசனங்களைத் துறந்து பாராளுமன்றத்திற்கு வெளியே மக்களை அணிதிரட்டிப் பல போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் போராட்டமாகும். அப்படிச் செய்திருந்தால் அத்தகைய மக்கள் போராட்டத்தின் விளைவுகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தி தமிழர் தம் விடுதலைப்போராட்ட அரசியலை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தியிருக்கும்.
மாறாக, 1977 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டதாகத் தந்தை செல்வா அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்ட அதே குடியரசு அரசியலமைப்புக்கு விசுவாசம் தெரிவித்துப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை முரணானது. அதற்கு முன்னமே பாராளுமன்றப் பதவியில் தொடர்ந்திருப்பதற்குக் குடியரசு அரசியலமைப்பின் கீழ் 1972இலும் பதவிப் பிரமாணம் எடுத்திருந்தனர். இதுவும் ஏற்கெனவே தமிழரசுக்கட்சி இழைத்த முரணான செயற்பாடாகவும் இருந்தது. தமிழரசுக் கட்சியினதும்- பின்னால் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் இத்தகைய செயற்பாடுகள் முரணானவை மட்டுமல்ல தமிழர் தரப்பு அரசியல் தலைமையின் பதவி மீது மோகம் கொண்ட பலவீனங்களைப் பகிரங்கப்படுத்தியமையுமாகும். தமிழர் தரப்பு அரசியல் தலைமையின் பலவீனங்களின் மீதுதான் பௌத்த சிங்களப் பேரினவாதம் தனது அடக்குமுறை அரசியலைக் கொண்டுசென்றது. குறைந்தபட்சம் 1977 தேர்தலின் பின்னராவது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்திருந்தபடி தெரிவுசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லாது அனைவரும் ‘தமிழீழத் தேசிய மன்றம்’ ஆக அமைந்து தமிழீழத்திற்கான அரசியல் அமைப்பை உருவாக்கிச் செயற்பட்டிருந்தால் அதன் விளைவுகள்கூடத் தமிழர் தம் விடுதலைப்போராட்ட அரசியலை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தியிருக்கக்கூடும்.
இவையெல்லாம் நடைபெறாததால் 1976இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தனிநாட்டுத் தீர்மானம் முறையான திட்டமிடல்கள் இல்லாமலும் தயார்படுத்தல்கள் இல்லாமலும் முன்னேற்பாடுகள் எதுவுமின்றியும் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் வெறுமனே ‘கடதாசி’யில் எழுதப்பட்ட ‘வெற்று’த் தீர்மானமாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதைத்தான் ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியல் என முன்னம் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியால் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானத்தின் ஒட்டுமொத்த விளைவுகள் என்னவெனில், 1977ஆம் ஆண்டின் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் தென்னிலங்கையில் வசித்த தமிழர்களுக்கு ஏற்பட்ட உயிர், உடைமை இழப்பு- தமிழர்களிடையே ஆயுதமேந்திய இளைஞர் குழுக்களின் தோற்றமும் வளர்ச்சியும்- 1979 ஆம் ஆண்டு நிறைவேறிய பயங்கரவாதத் தடைச் சட்டமும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்- போராளி இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள்- சகோதரப் படுகொலைகள்- தமிழ் மக்களிடையே இருந்த அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், சமூக சேவகர்கள், துறைசார் ஆளுமைகள் எனப் பலரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை- அப்பாவித் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் வீணான உயிரிழப்புகள் – ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களப்பலியாகியமை- உள்ளூர் இடம்பெயர்வுகளும் அவை ஏற்படுத்திய சமூக அவலங்களும் கலாசார சீரழிவுகளும் பொருளாதாரப் பின்னடைவுகளும் – யுத்தக் கொடுமைகளும் அவை ஏற்படுத்திய தாக்கங்களும்- சுமார் பதினைந்து இலட்சம் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தமை எனத் தொடர்ந்து இறுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் தமிழ் மக்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தியமையே. தமிழர் தம் விடுதலைப் போராட்ட அரசியல் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகி இருக்கிறது. பட்டு வேட்டிக்குக் கனவு கண்டு இப்போது கோவணத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். இருந்ததையும் இழந்து எஞ்சியவற்றையாவது எப்படிக் காப்பாற்றுவது என்று வழி தெரியாமல் தடுமாற்றத்தில் மூழ்கியிருக்கிறோம். ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ எனும் கையறுநிலை.
இப்போது தமிழர்கள் நின்று நிதானித்து அறிவுபூர்வமாகச் சிந்திக்கவேண்டியுள்ளது. 1976இல் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானத்தை எடுத்த தமிழ் தலைவர்களைத் தீர்க்கதரிசிகள் என இனியும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடப் போகிறோமா?
தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்ற 1949 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் எழுபத்தியிரண்டு ஆண்டுகள் வழி நடந்த அதே அரசியல் பாதையில்தான் பயணிக்கப் போகிறோமா? அல்லது நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப்போவதாவது நல்லவைகளாக இருக்கும் வண்ணம் ஒரு ‘மாற்று அரசியல்’ பாதையை அடையாளம் காணப் போகிறோமா?
இதைப் பற்றித் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் சிந்தித்துப் பயன் இல்லை. தற்போது களத்தில் ‘தமிழ்த் தேசியவாதிகள்’ எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு திரியும் கூட்டமும் இதனைச் செய்யப்போவதில்லை. அவர்களது ஒரே நோக்கம் மக்களின் அவலங்களையும் அறியாமைகளையும் முதலீடாகக் கொண்டு பதவி நாற்காலிகளைப் பற்றிப்பிடித்துக் கொள்வதேயாகும்.
எனவே, தமிழ் மக்களிடையே உள்ள கல்விமான்களையும்- புத்திஜீவிகளையும்- துறைசார் நிபுணர்களையும்- தனவந்தர்களையும்- தொழில் அதிபர்களையும்- சிறுவர்த்தகர்களையும்- விவசாய, மீன்பிடி மற்றும் ஏனைய தொழில்சார் சமூகங்களையும்- எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர்களையும்- மக்களுக்கான அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளையும் மாற்று அரசியலை நோக்கி அணி திரளுமாறு இப்பத்தி அறைகூவல் விடுக்கிறது.
அடிக்குறிப்பு:
உலகத் தமிழாராய்ச்சி மன்றம், தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டு தமிழியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு காலத்திற்குக்காலம் மாநாடுகளை ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயரில் நடத்தி வந்தது. அதன் நான்காவது மாநாடு 1974இல் இலங்கையில் நடைபெறத் தீர்மானிக்கப்பட்டது.
முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசிய நாட்டுத் தலைநகரான கோலாலம்பூரில் (ஏப்ரல் 1966) நடைபெற்றது. அதனை அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல்ரஹ்மான் தொடக்கி வைத்தார். இரண்டாவது மாநாடு சென்னையில் (ஜனவரி 1968) நடைபெற்றபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி இராஜேந்திரப் பிரசாத் தொடக்கிவைத்தார். மூன்றாவது மாநாடு பாரிஸில் (ஜனவரி 1970) நடைபெற்றபோது ‘யுனெஸ்கோ’ தலைவர் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா தொடக்கிவைத்தார்.
இந்தப் பின்னணியில் 1974 ஜனவரி இல் இலங்கையில் நடைபெறவிருந்த நான்காவது மாநாட்டைத் தலைநகர் கொழும்பில் நடத்தவும் அம்மாநாட்டை அப்போதைய இலங்கைப் பிரதமர் திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொடக்கிவைக்கவும் இலங்கை அரசாங்கத் தரப்பு விரும்பியது. ஆனால் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையினர் அதனை நிராகரித்து மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவெடுத்தனர். தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்களே விழாக்குழுவின் தலைவராக விளங்கினார்.
மாநாடு 1974 ஜனவரி 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தனிநாயகம் அடிகளாரினால் தொடக்கி வைக்கப்பட்டது. இறுதி நாள் நிகழ்வு ஜனவரி 10ஆம் திகதி யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அப்போது யாழ்ப்பாண ‘மேயர்’ ஆக அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த அல்பிரட் துரையப்பா பதவியிலிருந்தார்.
இறுதி நேரத்தில் இறுதி நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் திறந்த வெளி அரங்கில் நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்பாக மேடை அமைக்கப்பட்டு மண்டபத்தின் முன்பாகச் செல்லும் காங்கேசன்துறை வீதியின் மறுபக்கத்தில் மக்கள் கூடியிருக்கும் வண்ணம் நடைபெற்றது.
இம்மாநாடு அரசியல் கலப்பற்றது என்று கூறப்பட்டாலும் இதில் தமிழரசுக்கட்சியினரின் தலையீடு கூடுதலாக இருந்ததால் அரசாங்கத் தரப்பின் எதிர்ப்புக்கு மத்தியில்தான் மாநாட்டு ஒழுங்குகள் நடைபெற்றன.
இறுதி நாள் நிகழ்வு உரிய அனுமதியின்றி வீதியை மறித்துக் கூட்டம் நடத்தப்பெற்றதால் யாழ்ப்பாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகர என்பவரின் தலைமையில் வந்த கலகமடக்கும் பொலிசார் மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கிச் சுட்டதில் மின்கம்பி அறுந்து விழுந்து அதனால் ஒன்பது அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டன.
அப்போது தமிழ் இளைஞர் பேரவையின் உறுப்பினராகவிருந்த சிவகுமாரன் எனும் இளைஞன் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்திரசேகரவைப் பழி தீர்க்கும் நோக்கில் பின்னர் ஒரு நாள் அப்போலீஸ் அதிகாரி பயணித்த ‘ஜீப்’ வாகனத்தின் மீது கைக்குண்டு எறிந்து தாக்குதல் நடத்தினார். அதில் அப்போலீஸ் அதிகாரி தப்பிவிட்டார். அதன்பின் சிவகுமாரன் பொலிஸாரினால் தீவிரமாகத் தேடப்பட்டான். அப்படித் தேடப்படும் நிலையில் ஒருநாள் (05.06.1974) போலீசாரிடம் அகப்படப்போகும் தருணம் சிவகுமாரன் விசமருந்தித் தற்கொலை செய்து கொண்டான்.
1974ஆம் ஆண்டின் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளை விமர்சன நோக்கிலும் ஆராயவேண்டியுள்ளது.
(i) ‘சத்துருவையும் சார்ந்து வெல்லும்’ அணுகுமுறையினூடாக அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தின் அனுசரணையுடன் (செல்லையா குமாரசூரியர் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்) அரச தரப்புக் கேட்டுக்கொண்டவாறு தலைநகர் கொழும்பிலேயே இம்மாநாட்டை நடத்தியிருந்திருக்கலாம்.
(ii) இல்லை; அதனை யாழ்ப்பாணத்தில்தான் நடத்த வேண்டுமென்று முடிவெடுத்திருந்தால் அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவரும் அப்போது யாழ் மாநகர முதல்வராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவின் ஆதரவையும் பெற்று மாநாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டிருந்திருக்கலாம்.
இங்கு கட்சி அரசியல் (தமிழரசுக் கட்சி/ தமிழர் கூட்டணி) தலை காட்டி இருக்கவேண்டிய அவசியமில்லை. இப்படி நடந்திருந்தால் மேற்கூறப்பட்ட துன்பியல் நிகழ்வுகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கக்கூடும்.
(iii) உண்மையில் இம்மாநாடு 1974 ஜனவரி 03ஆம் திகதியிலிருந்து ஜனவரி 09ஆம் திகதிவரை நடைபெறவே அரசு அனுமதியளித்திருந்தது. ஆனால் அது 10ஆம் திகதிக்கு மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு அறிஞர்களையும் பேராளர்களையும் வழியனுப்பும் நிகழ்வாகவே யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே மேடையமைத்து இறுதி நாள் விழா நடந்தது.
இம் மாநாட்டில் பங்கு பற்றுவதற்கும் பேசுவதற்கும் ஏற்கெனவே அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்த ‘உலகத் தமிழ் இளைஞர் பேரவை’யின் தலைவரும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தவருமான ஜனார்த்தனனுக்கு இலங்கைக்கான விசா மறுக்கப்பட்டிருந்தது. இதனால் இவர் கடல் மார்க்கமாகக் களவாக யாழ்ப்பாணம் வந்திருந்தார். இதன் காரணமாக ஜனார்த்தனனைக் கைது செய்யப் பொலிசார் முயன்றதன் பின்னணியில்தான் மேற்படி ‘ரகளை’ நடந்தது.
மாநாட்டு இறுதி நாள் நிகழ்வில் போலீசாரின் தலையீடு ஏற்படவும் அதன் விளைவாக ஒன்பது அப்பாவி உயிர்கள் பலியாகவும் காரணம் ஜனார்த்தனனின் வருகையும் அதற்குக் காரணமாயிருந்த அமிர்தலிங்கம் அவர்களின் செயற்பாடுகளுமாகும். மேலும் போலீசார் ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்க்கவும் அதனால் துரதிஷ்டவசமாக மின்கம்பி அறுந்து விழவும் காரணமாயிருந்தது ஜனார்த்தனனைப் பொலிசார் கைது செய்வதைத் தடுப்பதற்காக மின்விளக்குகள் திட்டமிடப்பட்டு அணைக்கப்பட்டிருந்ததினாலுமாகும்.
அதிகுறைந்தபட்சம் ஜனார்த்தனின் வருகை இங்கு தவிர்க்கப்பட்டிருந்திருக்குமானால் மேற்கூறப்பெற்ற துன்பியல் நிகழ்வுகள் (1974 ஜனவரி 10ஆம் திகதி ஒன்பது அப்பாவி உயிர்களின் இறப்பும் பின்னர் இந்நிகழ்வை ஒட்டியதாக 05.06.1974 அன்று நடந்த சிவகுமாரனின் தற்கொலை உயிர் நீப்பும்) நடைபெற்றிருக்கமாட்டாது.