மாதன முத்தாக்களின் கும்மாளம்

மாதன முத்தாக்களின் கும்மாளம்

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

பெரும்பாலான சிங்கள வீடுகளில் இப்பொழுது “மாதன முத்தாக்களின்” கதையே பேசப்படுகிறது. மாதன முத்தாக்களை நம்பித் தங்களுடைய ஆட்டின் தலையைக் காப்பாற்றுவதற்குக் கொடுத்து விட்டோமோ என்று சிங்கள மக்கள் யோசிக்கிறார்கள். கடைசியில் பானையும் மிஞ்சாது. ஆடும் மிஞ்சாது என்ற நிலையென்றால் யாருக்குத்தான் யோசினை வராது? 

முட்டாள்களை நினைத்துச் சிரிப்பதற்கு இலங்கையில் மாதன முத்தாவின் கதை பிரபலம். அதிகாரத்தையும் அறிவீனத்தையும் பரிகாசம் செய்வதற்கு –பழிப்பதற்கு – இந்தக் கதையை விட வேறு எதுவும் சிறப்பில்லை. காலந்தோறும் இந்தக் கதையை நினைவூட்டும் ஆட்கள் இருப்பார்கள். வரலாற்று நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். 

இப்பொழுது இதற்கு மிகப் பொருத்தமானவர்கள் ராஜபக்ஸக்கள். அதிலும் குறிப்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மிக மிகப் பொருத்தமானவர். வரலாற்று நிகழ்வு என்றால் அது இன்றைய ராஜபக்ஸக்களின் ஆட்சியாகும். 

நாட்டுக்கும் தமக்கும் ஒரு நல்ல மீட்பர் என்று நம்பியே கோத்தபாய ராஜபக்ஸவைச் சிங்கள மக்கள் ஆட்சிபீடமேற்றினார்கள். பதவியேற்ற கையோடு அரிசிக் கடை, ஆஸ்பத்திரி, அரச அலுவலகங்கள், மரக்கறிச் சந்தை என்று எங்கெல்லாமோ அவரும் அதிரடியாக “கள விஜயம்” செய்தார். மக்கள் நலனே முக்கியம். அதற்காக தான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இறங்கி நிற்பேன் என்றார் ஜனாதிபதி. ஜனாதிபதியின் இந்த அதிரடிக் களவிஜயத்தைக் கண்டு அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் அரசிக் கடைக்காரர்கள் வரையில் எல்லோரும் கலங்கிப்போனார்கள். 

இப்படி ஒரு ஜனாதிபதியை, ஒரு தலைவரை வரலாற்றில் ஒரு போதுமே தாம் பார்த்ததில்லை என்று மக்கள் வியந்தனர். தாங்கள் சரியான ஒருவரைத்தான் தெரிவு செய்திருக்கிறோம் என்று இரவும் பகலுமாகப் பேசிக்கொண்டனர். மெய்யாகவே பெரும் புரட்சி நடக்கப்போவதாகச் சிங்கள மக்கள் நம்பினார்கள். இருக்காதா பின்னே, வரலாற்றின் அதிசயமாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஒரு ஜனாதிபதி இப்படிச் சாதாரணமாக இறங்கித் தெருவில் திரிகிறார் என்றால்… யார்தான் மயங்க மாட்டார்கள்? 

ஆனால், இந்த மீட்பரின் சாகஸ விளையாட்டுகள் நீடிக்கவில்லை. அதற்குள் நாசமாய்ப்போன கொரோனா வந்தது. கொரோனாவோடு சேர்ந்து இலங்கையை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடியும் வந்தது. கூடவே சீன, இந்திய, அமெரிக்க, ஐ.நா நெருக்கடிகளும் வந்தன. இதெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இப்பொழுது ஆட்சியை கொண்டு நடத்தவே முடியாத அளவுக்கு ஆளும் தரப்புக்குள்ளேயே ஆயிரத்தெட்டு நெருக்கடிகள் உருவாகியுள்ளன. 

ராஜபக்ஸக்களை ஆட்சியிலிருத்துவதற்கு ஆதரவளித்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்றவர்கள் இப்பொழுது அரசாங்கத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியாகவும் சவாலாகவும் மாறியிருக்கின்றனர். “அரசாங்கத்தை ஆதரிக்கும் அளவுக்கு அதைச் சரியாக வழிநடத்துவதற்கான பொறுப்பும் தமக்குண்டு. அரசாங்கம் தவறிழைத்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டும். சரியாக்க வேண்டும். முடியாதென்றால் அதை விமர்சிக்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். ஆட்சியை அமைப்பதற்கு ஆதரவளித்ததும் மக்களுக்காக. இப்பொழுது அரசாங்கத்தை விமர்சிப்பதும் மக்களுக்காகவே. அன்றும் மக்களுக்காகவே தெருவில் இறங்கினோம். இனியும் மக்களுக்காக அப்படி இறங்குவோம் என்று சொல்கிறார் விமல் வீரவன்ஸ. 

இது ஒரு வகையில் அரசுக்கு –பங்காளிகளுக்கான எச்சரிக்கை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையை எப்படியும் சமாளிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ஸ கடுமையாக முயற்சிக்கிறார். கெஞ்சாத – கொஞ்சாத குறையாக பங்காளிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் அவர் –பிரதமர். 

இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சியைத் தக்க வைப்பதற்குப் பெரும்பாடுபடுகின்றனர் ராஜபக்ஸக்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தம்மை யாராலும் எதனாலும் அசைக்க முடியாது. தனிப் பெரும்பான்மை தமக்குண்டு. இனி எண்ணியதெல்லாம் கைகூடும். நினைத்ததை எல்லாம் செய்து முடிப்போம். இதற்காகவே நாம் அண்ணன் தம்பிகளாகவும் சித்தப்பா பெரியப்பாவாகவும் ஆட்சியமைக்கிறோம் என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருந்த ராஜபக்ஸக்களின் காலை வாரிவிட்டன கடந்த இரண்டு ஆண்டுகள். 

இந்த இரண்டு ஆண்டுகள் ஏன் இப்படிக் காலை வாரும் அளவுக்கு மாறின? 

இதற்குக் காரணம் தலைக்கிறுக்குத்தான். 

இல்லையென்றால் மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்குப் பகிரங்கமாகவே முயற்சித்திருப்பாரா? சிவில் நிர்வாகத்தை இராணுவமயமாக்கும் வகையில் படைத்தளபதிகளின் பொறுப்பில் பொறுப்பான பதவிகளை ஒப்படைப்பாரா? மருத்துவத்துறையில் கூட தீர்மானிக்கும் பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பாரா? இப்படியே தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கிய ஜனாதிபதி கடைசியில் விவசாயிகளின் வாழ்க்கையிலும் கையை வைத்தார். 

விளைவு தொடர் போராட்டங்களை உருவாக்கியதாக முடிந்திருக்கிறது. 

ஆசிரியர் சங்கப் போராட்டத்திலிருந்து மருத்துவர் சங்கப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என முடிவற்ற பல போராட்டங்கள் இன்று உருவாகியுள்ளன. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி பொதுமக்கள் கூடுவதையும் மக்கள் போராட்டங்களையும் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும் அதனால் அவற்றைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியவில்லை. 

இதெல்லாவற்றுக்கும் மேலும் தூண்டலை ஏற்படுத்தும் விதமாக கட்டற்ற முறையில் எகிறிச் செல்கிறது விலைவாசி. அரசாங்கம் எதையும் தீர்மானிக்க முடியாது என்ற நிலையில் தினமும் ஏறிச் செல்கின்றன பொருட்களின் விலை. அதை விடப் பொருட்தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக்குப் பொருட்களின் பதுக்கல் நடக்கிறது. பொருட்கள் பதுக்கப்பட்டால் செயற்கைத்தட்டுப்பாடு ஏற்படும். செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டால் வி்லை கட்டுப்பாடற்று ஏறும். இதைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துப் பார்த்தது. விலைக்கட்டுப்பாட்டை விதித்து, பதுக்கிய களஞ்சியங்களை கைப்பற்றியது. ஆனால் இதொன்றும் தீர்வாகவில்லை. இப்பொழுது விலைக்கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டியாகி விட்டது. அதாவது அரசாங்கத்தின் பிடி தளர்ந்து விட்டது. 

இது மக்களுக்குப் பெரிய சுமை. பெரிய நெருக்கடி. பெரிய ஏமாற்றம். பெரிய தோல்வி. 

இதனால் கடுப்பேறிய நிலையில் சனங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். 

தொழில் வாய்ப்புகள் இல்லை. பொருட்கள் இல்லை. விவசாயத்துக்குத் தோதான உள்ளீடுகளில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்ற தெளிவு சனங்களுக்கும் இல்லை. அரசாங்கத்துக்கும் இல்லை. தலைவர்களுக்கும் இல்லை. ஜனாதிபதிக்கும் இல்லை. 

அரசாங்கத்துக்கு தெளிவும் உறுதிப்பாடும் இருந்தால்தானே மக்கள் நிதானமாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும்! 

இதெல்லாம் ஏன் வந்ததென்றால், மாதன முத்தாக்களாக ராஜபக்ஸவினர் சிந்திக்க முற்பட்டதால் ஏற்பட்டதே! 

இதை விடப் பரிதாபம் என்னவென்றால், இலங்கையை பௌத்த சிங்கள நாடாகக் கனவு கண்ட மாதன முத்தாக்களாக சிங்கள மக்கள் மாறியதே. 

இப்பொழுது முட்டாள்களின் ராஜ்ஜியத்தில் முட்டாள் மக்களுமாக இலங்கை உள்ளது. 

இதற்கு முடிவென்ன? அது எப்பொழுது? 

இதற்கு எந்தத் தீர்க்கதரிசியிடமும் பதில் இல்லை. 

ஆனால், இவ்வளவுக்கும் மத்தியில் அரசாங்கம் படைத்துறைக்கு –பாதுகாப்புக்குத்தான் அதிகமாக நிதி ஒதுக்கீட்டைச் செய்து வருகிறது. 

இது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆக மொத்தில் இலங்கை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. 

இதற்கான மெய்யான மீட்பர் யார்?