தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு!

தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு!

 — கருணாகரன் — 

தமிழர்களிடம் சில பழக்கங்களும் ஆழமான நம்பிக்கையும் உண்டு. 

1.      போட்டியில் பங்கெடுக்காமல், அதற்குத் துணியாமல், ஓடி முந்துவதற்கு முயற்சிக்காமல் மைதானத்துக்குக் குறுக்கே ஓடிக் கவனத்தை ஈர்த்து விடலாம் என்று கருதுவது. 

2.      முந்திச் செல்வோரைப் பற்றிக் குறை சொல்வது அல்லது குற்றம் சாட்டுவது. முந்திச் செல்வோரைப் பார்த்து வெப்பியாரப்படுவது. 

3.      முந்திச் செல்வோரை எப்படியாவது விழுத்தி விட வேண்டும் என்று யோசிப்பது. 

4.      அப்படிச் செய்து வெற்றி இலக்கை எட்டி விடலாம் என்று நம்புவது. 

5.       ஒன்றும் சாத்தியமில்லை என்றால் வெளியாரிடம் இதைப் பற்றி முறையீடு செய்து புலம்புவது. அவர்களின் கருணையையும் இரக்கத்தையும் கோருவது. 

இப்படிப் பலதுண்டு. ஆனால் இதெல்லாம் பொதுச் சூழலில் ஏற்புடையனவல்ல. இவை பெறுமதியைத் தரக் கூடியனவும் அல்ல. வெளியுலகில் இவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது. பதிலாக மேலும் மேலும் பின்னடைவைத் தரக் கூடியனவே இவை. 

இந்த மாதிரிக்குணங்களால்தான் அவர்களால் ஏனைய சமூகங்களை அங்கீகரிக்க முடியாமலிருக்கிறது. பிற சமூகத்தினரோடு இணங்கிப் போக முடியாமலுள்ளது. பிற சமூகத்தினரோடு இணைந்து வேலை செய்வதற்கு அஞ்ச வேண்டியுள்ளது. பிற சமூகங்களின் வளர்ச்சிக்கு நிகராக நிற்கவோ வளரவோ முடியாமலிருக்கிறது. 

இதனால் பிற சமூகங்களைப் பார்த்து எப்போதும் தங்களுக்குள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது ஒரு நோய்க்கூறாகும். ஆனால், இதை அவர்கள் ஒரு போதுமே ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 

இதற்குச் சிறந்த –வெளிப்படையான உதாரணம், தமிழ் ஊடகங்கள். அநேகமாக எல்லாத் தமிழ் ஊடகங்களும் (எங்கேனும் அபூர்வமான விலக்குகள் ஒன்றிரண்டிருக்கலாம்) இந்த நோய்க்கூறுக்குள்ளானவையே. வெளிப்படுத்தப்படும் செய்திகளிலிருந்து எழுதப்படும் ஆசிரியர் தலையங்கங்கள், கட்டுரைகள் என எல்லாவற்றிலும் இந்தக் குற்றப்படுத்தும் குணத்தைக் கவனிக்கலாம். செய்திகளிலும் ஆய்வுகளிலும் எப்படிப் பிறரை, பிற சமூகங்களை குற்றப்படுத்த முடியும்? அது ஊடகவியல் பண்புக்கே மாறானது என்றால், நாங்கள் அப்படித்தான். இது இனப்பற்றின்பாற்பட்ட சங்கதி என்று ஒரே ஆணியை அடித்து விடுவார்கள். 

இதனால் எப்பொழுதும் யாரையும் குறை சொல்லிக் கொண்டேயிருப்பது. அல்லது எல்லோரிடத்திலும் குற்றம் கண்டு பிடிப்பது என்ற வியாதி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. குற்றம் பார்க்கில் சுற்றமில்லை என்ற தமிழ்ப்பட்டறிவைக்கூட இந்தத் தமிழ்ப்பரப்பு கவனத்திற் கொள்வதில்லை. 

இது போட்டி உலகம். திறன்களுக்கே மதிப்பளிக்கும் யுகம். போட்டியில் ஈடுபடும் மனத்துணிவும் அதில் வெல்லும் திறனும் கிட்டாத வரையில், அதை நாம் உருவாக்கிக் கொள்ளாதவரையில் நமக்கு வெற்றியும் கிடையாது. மதிப்பும் கிடையாது என்பதை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. 

இது ஏன்? 

ஆனால், இங்கே ஒரு வேறுபாடும் சிறப்புக் குணமும் உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அரசியல், அறிவியற் செயற்பாடுகள், பொது விடயங்கள் போன்றவற்றில் இணங்கிப்போகவோ, உபாயங்களைக் கையாளவோ, நெருக்கடிகளை எதிர்கொள்ளவோ பின்னிற்காத தமிழ்ச்சமூகம் அரசியல் மற்றும் பொது விடயங்களில் எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் இணக்கத்திற்கும் இணைந்து செயற்படுவதற்கும் மறுத்து நிற்கும். 

அதாவது தனிப்பட்ட விடயங்கள், நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தக் கதவாலும் போய்க் காரியத்தைச் சாதிக்கும் மக்கள், அரசியல் மற்றும் பிற பொது விடயங்களில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. எந்தச் சமரசத்துக்கும் உடன்பாடில்லை. அடைந்தால் மகா தேவி. இல்லையென்றால் மரண தேவி என்று அடம்பிடிப்பது ஏன்? 

இது தமிழ்ச்சமூகத்தின் இரண்டக நிலையைத்தானே காட்டுகிறது. 

ஒரு போதும் தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளாத, தன்னைத் திருத்திக் கொள்ள விரும்பாத ஒரு மக்கள் திரளினராக இவர்கள் இருப்பது ஏன்? 

இதற்கு மேலும் ஒரு எளிய உதாரணமாக கடந்த தீம்புனல் (06 நவொம்பர் 2021) பத்திரிகையில் வெளிவந்த செல்வழகனின் கட்டுரையொன்றில் குறிப்பிடப்படும் விடயத்தைச் சொல்லலாம். 

அவர் எழுதுகிறார் “முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவு பெற்றது. மஹிந்த 13 + என்று அறிவித்தார். 13 ஆவது திருத்துக்கு அப்பால் சென்று தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப்போவதாகச் சொன்னார். அவரது இரண்டு பதவிக்காலத்திலும் அது நடைபெறவில்லை” என. 

மேலும் இன்னொன்றையும் செல்வழகன் சொல்கிறார் “நல்லாட்சி என்ற பெயரில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வர தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பலமான ஆதரவை வழங்கியது. அமைச்சரவையில் இணைந்து கொள்ளவில்லையே தவிர, அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளுக்கும் உதவியது. அந்த வேளையில் சமஷ்டி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், ஏக்க ராஜ்ஜிய என்ற சொல்லை கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் அழுத்திக் கூறி அது ஒருமித்த நாடு என்று வியாக்கியானப்படுத்தினார். அந்தக் காலத்திலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை” என்று. 

இந்த இரண்டிலும் வெளிப்படுத்தப்படுவதென்ன? பிறர் மீதான குற்றச்சாட்டுக்கள்தானே. அதாவது முதலாவது கூற்றில் ராஜபக்ஸக்களின் அரசாங்கமும் ஆட்சியும் குற்றப்படுத்தப்படுகிறது. இரண்டாவதில் ரணில் – மைத்திரி கூட்டாட்சியும் அதற்கு ஆதரவளித்த தமிழரசுக் கட்சியும் குற்றப்படுத்தப்படுகின்றன. 

உண்மையில் இது ஒரு விசயமே இல்லை. ஏனென்றால், அரசியல் செல்நெறியின் அடிப்படையில் நோக்குவதாக இருந்தால் இது இப்படித்தான் நடக்கும். இப்படித்தான் இருக்கும். ஏனென்றால் அரசியல் என்பது அப்படித்தான். அதாவது அது ஒரு தீராத புதிர் நிறைந்த விளையாட்டு. விவேகமும் திறனும் அர்ப்பணிப்பும் தந்திரோபயங்களும் சூதும் வாதும் குழிபறிப்பும் விட்டுக் கொடுப்பும் மேன்மையும் கீழ்மையும் மறுப்புகளும் ஏற்புகளும் திணிப்புகளும் நிறைந்த ஒரு ஆடு களம். ஆடுகளமாகவும் ஆடும் ஆட்டமாகவும் மாறி மாறித் தொழிற்படும் ஒன்று. உலகெங்கும் அரசியல் அப்படித்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஓயாத ஆடுகளங்களாகவும் ஓயாத ஆட்டங்களாகவும் அரசியல் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதனால்தான் “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை” என்று சொல்வதுண்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நட்பு நாடு ரஸ்யா. இப்பொழுது அது அமெரிக்கக் கூட்டணியில் உள்ளது. ஒரு காலம் அமெரிக்காவின் அணுக்குண்டு வீச்சுக்குள்ளான யப்பான் இன்று அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. 

இங்கே நிகழ்ந்து கொண்டிருப்பது அடிமைப்படுத்தல் –விட்டுக்கொடுத்தல் – சோரம்போதல் அல்ல. இது காலச் சூழலையும் யதார்த்தத்தையும் பொறுப்பையும் உணர்ந்ததன் அடிப்படையில் தந்திரோபயம், இராஜதந்திரம், சாணக்கியம், சூக்குமம் போன்ற பல அரசியல் பொறிமுறைகளின்பாற்பட்டு ஏற்பட்ட விளைவுகளாகும். உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சும்மா பொச்சரிப்பதாலும் சப்புக் கொட்டுவதாலும் திட்டித் தீர்ப்பதாலும் நமக்கு அற்புதக் கதவுகள் எதுவும் திறந்து விடாது. மோசஸ் நிகழ்த்திய அற்புத வழிதிறப்பைப்போல எந்த அதிசயமும் நிகழவும் மாட்டாது. 

இப்பொழுது மஹிந்த ராஜபக்ஸ சொன்ன விடயத்துக்கே வருவோம். அவர் 13 + பற்றிச் சொன்னார்தான். 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார் என்பதும் உண்மையே. விரும்பியோ விரும்பாமலோ இதற்கு அவர் தயாராகவும் இருந்தார். அன்றைய சூழலில் இதை எதிர்க்கும் நிலையில் எதிர்க்கட்சிகளும் இருக்கவில்லை. ஏன் சிங்கள மக்களும் இதற்கு மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தனர். யுத்தத்தில் பெற்ற வெற்றியானது மகிந்த ராஜபக்ஸவை மறுதலித்துப் பேசுமுடியாத ஒரு சூழலை அப்பொழுது உருவாக்கியிருந்தது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அக புற நெருக்கடிகள் அன்றிருந்தன. அந்த நம்பிக்கையில்தான் அவரும் வெளிப்படையாக இந்த அறிவிப்பைச் செய்தார். 

ஆனால், இதை ஒரு வாய்ப்பாகக் கொள்ளத் தவறியது யார்? அது ஏன்? 

அதாவது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தவறியது ஏன்? 

அப்பொழுது பிராந்திய சக்தியும் மேற்குலகும் மகிந்த தரப்புக்கு எதிராக சரத் பொன்சேகாவைக் களமிறக்க முற்பட்டது. அதாவது ராஜபக்ஸக்களின் யுத்த வெற்றிக்கு முன்னே நிற்கக் கூடிய அரசியல் தலைமை எதையும் தெரிவு செய்ய முடியாத நிலையில் பிராந்திய சக்தியும் மேற்குலகும் (அமெரிக்கா) சரத் பொன்சேகாவை ராஜபக்ஸக்களுக்கு எதிராக –தமிழர்களுக்கு முன்வைக்கவிருந்த தீர்வுக்கு எதிராகக் களமிறக்கியது. அதை ஆதரிக்குமாறு தமிழ்த்தரப்பை வற்புறுத்தியது. இதற்கான சந்திப்புகளை இந்தச் சக்திகள் தொடர்ந்து நடத்தின. இதற்குக் காரணம், இந்தச் சக்திகளின் அரசியல் தேவையாகும். மகிந்த ராஜபக்ஸ சீனாவுடன் அதிகமாகச் சாய்வு கொண்டிருப்பதை விரும்பாத, அது தமது நலனுக்குப் பாதிப்பு என்பதால் அவரை மாற்றி ஐ.தே.கவை அல்லது மாற்றுத் தலைமை ஒன்றை இலங்கையில் கொண்டுவருவதற்கு இவை முயற்சித்தன. இதற்கு வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் ஆடக்கூடிய சிங்களத்தரப்பையும் இந்தச் சக்திகள் பயன்படுத்தின. 

இது ஒன்று. 

இரண்டாவது, இந்தச் சக்திகள் புலம்பெயர் சக்திகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை தீவிர நிலைப்பாட்டை எடுக்க வைத்தன. அதன்படி “இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் 13 +தானா” என்று அவை குரல் எழுப்பின. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் மேலே சென்று ஏதேதோ பிரகடனங்களையெல்லாம் செய்தது. அதற்கான தூண்டலை வழங்கியவையும் இந்தச் சக்திகளே. 

மூன்றாவது, அப்பொழுது மாகாணசபைத் தேர்தல் முடிந்து, விக்கினேஸ்வரன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில். அந்த நிகழ்வில் விக்கினேஸ்வரனின் சம்மந்தி வாசுதேவவும் கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ஒன்பது மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்குமான ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்திருந்தார். அதில் தமிழர்களின் அரசியல் அபிலாஷையின்பொருட்டு 13 +பற்றிப் பேசப்படும் என்று சொல்லப்பட்டது. இந்தச் சந்திப்பில் விக்கினேஸ்வரன் சற்று அமைதியாக இருக்க வேண்டும். பதிலாக சிங்களத்தரப்பிலிருந்து (பிற மாகாணசபையொன்றிலிருந்து அல்லது பிறவற்றிலிருந்து) 13 +பற்றிப் பேச்சு எடுக்கப்படும். அப்படிச் சிங்களத்தரப்பிலிருந்து பேசப்பட்டால் அது அனைவருக்குமான தீர்வாகவும் பொதுவான ஒரு விசயமாகவும் நோக்கப்படும் என்று கூறப்பட்டது. 

ஏறக்குறைய இது இந்தியா 1987இல் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானது. 1987இல் இந்தியா என்ன செய்ததென்றால் வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாணசபை முறைமையை ஏற்படுத்தியபோது அதை முழு இலங்கைக்குமானதாக உருவாக்கியது. அப்படிச் செய்தால்தான் சிங்களத் தரப்பை சமாளித்துக் கொள்ள முடியும் என்பதால். மகிந்தவும் இதே வழிமுறையைத்தான் பின்பற்ற முயற்சித்தார். 

விக்கினேஸ்வரனும் அன்றைய சூழலில் இதற்கான இணக்க மனநிலையில்தான் இருந்தார். ஏறக்குறைய இதை ஏற்றுக் கொண்டவராகவே சம்மந்தனும் இருந்தார். ஆனால், வெளிச்சக்திகள் இதையிட்டுப் பதற்றமடையத் தொடங்கின. அவை விக்கினேஸ்வரன் இந்த முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவித்தன. அறிவித்தது மட்டுமல்ல,அழுத்தத்தையும் கொடுக்க முற்பட்டன. யுத்தக் குற்றவாளிகளுடன் உங்களுக்கு என்ன பேச்சு? என்ற கொந்தளிக்கும் கேள்வியை எழுப்பி விக்கினேஸ்வரனை நிலை குலைய வைத்தன. 

மகிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் குடும்பத்தோடு நின்று பதவிப் பிரமாணம் செய்த விக்கினேஸ்வன், “அடங்காத்தமிழன் 02” எனப் புது அவதாரம் எடுத்துப் பிரகடனங்களைச் செய்யத் தொடங்கினார். 

அதாவது வேதாளம் முருங்கையில் ஏற்றப்பட்டது. இப்பொழுது விக்கினேஸ்வரன் இந்தப் பாதையில்தான் தன்னுடைய குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். 

இது சிங்களத் தரப்புக்குப் பெரிய வாய்ப்பாக மாறியது. 13 + பற்றியே கதைக்கத் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கியது. அதாவது நாமே அவர்களுக்கு நமக்கான வாய்ப்பை மாற்றிக் கொடுத்தோம். இது நம்முடைய தலையைக் கொடுத்தற்குச் சமம். 

இதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் அடுத்து வந்த நல்லாட்சி அரசாங்கத்தையும் பாதித்தது. வாய்ப்புகள் முற்றாகவே அற்றுப்போயின. இப்பொழு நிலைமை படு மோசமாகி விட்டது. இனி 13 ஆவது பரவாயில்லை. அதையாவது அமுல்படுத்துங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலையில் தமிழர்கள் வந்து நிற்கிறார்கள். 

இப்பொழுது  நடப்பதெல்லாம் எல்லோரும் அறிந்ததே. வேறுவழியில்லாமல் “மாடு சாகவேண்டும் என்று காகங்கள் திட்டுகின்றன”. இலங்கை அரசாங்கத்தை வெளியுலகம் மடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டும். அல்லது இலங்கை – கொழும்பு நிலைதடுமாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். 

என்ன செய்வது, எந்த மாடும் எந்தக் காகத்தின் திட்டுதலுக்காகவும் செத்து மடிவதில்லையே. 

இன்னொரு பக்கத்தில் “உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு” என்பதைப்போல இந்தியா, அமெரிக்கா, ஐ.நா எல்லாம் வந்து தீர்வொன்றைப் பெற்றுத் தரும் என்று காத்திருக்கும் படலம் தொடர்கிறது. 

இதற்கு யாரை நோவதாம்? 

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டு…. 

தமிழர்களின் கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை. இலக்கை ஒரு போதும் அடைவதுமில்லை. 

முடிவாக ஒன்றைச் சொல்ல வேண்டும். உலகத்தில் எங்கும் மகான்களும் மகாத்மாக்களும் நீதிமான்களும் ஆட்சி நடத்தவில்லை. இலங்கையிலும் அப்படித்தான். 

இதைப் புரிந்து கொண்டே நாம் நம்முடைய அரசியலை மேற்கொள்ள வேண்டும். 

சுபம்.