சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் !

சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் !

—- வி. சிவலிங்கம் —- 

புதிய அரசியல் யாப்பு சாத்தியமா? 13வது திருத்தத்திற்கு ஆப்பா? அவ்வாறெனில் புதிய தீர்வு என்ன? 

இலங்கை அரசியலும், சமுகமும் மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. கொரொனா நோய்த் தாக்கங்களின் பின்னர் உலக நிலமைகளும் பாரிய அளவில் மாறி வருகின்றன. இந் நிலையில் பழைய அடிப்படைகள், கோட்பாடுகள், பொறிமுறைகள் என்பவற்றின் கீழ் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்பது பல விதங்களில் உணரப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்த பேராதிக்க சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டை எடுத்துச் செல்ல முயற்சிக்கின்ற போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும், அரச தரப்பில் அதிகரித்துச் செல்லும் ஊழல், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கட்சி மற்றும் தனிநபர் ஆதிக்கம் போன்றன அந்த நம்பிக்கைகளை மக்களிடம் ஏற்படுத்த தவறியுள்ளன. இந்த நிலையில் பாரிய ஏமாற்றங்களை இளைய தலைமுறையினரே அனுபவிக்கின்றனர்.

கடவுச் சீட்டுகளைப் பெறுவதற்காக குடி வரவு, குடி அகல்வு திணைக்களத்தில் குவிந்து வரும் இளைஞர் தொகை அந்த ஏமாற்றங்களை அடையாளப்படுத்துகிறது. அரச தரப்பினரின் அனுபவமற்ற முடிவுகள் பாரிய அளவில் மக்களின் வாழ்வினைப் பாதிப்பதை அவர்கள் உணரத் தவறுவதையும், அவற்றை ராணுவ ஒடுக்கு முறையின் மூலம் தடுக்கும் மனோபாவம் ஆட்சியாளர் மத்தியில் அதிகரித்து வருவதையும் மக்கள் தினமும் அனுபவிக்கின்றனர்.

மக்களின் அன்றாட வாழ்வில் ராணுவத் தலையீடுகள் கட்டுப்பாடு என்ற பெயரில் அதிகரித்து மக்களின் சுயாதீன செயற்பாடுகளைத் தடுத்து வருகிறது. இவ்வாறான பாரிய நெருக்கடியின் பின்னணியில் தேசத்தின் எதிர்காலம் குறித்துக் கவலையடையும் பிரிவினர் மாற்றங்களைத் துரிதப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவ்வாறான ஒரு பின்னணியில்தான் சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயத்தையும் நாம் அவதானிக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசியல் அமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டில் ராணுவ தலைமையில் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. ஆனாலும் அரச தரப்பினர் எதிர்பார்த்தவாறு மாற்றங்கள் நிகழவில்லை. பதிலாக அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் ஆளும் பொதுஜன பெரமுன தோல்வியடையும் என்பது பல தரப்பினராலும் உணரப்படுகிறது. அரச ஆளும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் உள் முரண்பாடுகள் பகிரங்கமாக வெளிப்படுகின்றன. எனவே கப்பல் தாழப் போவதை அக் கட்சிகள் உணர்ந்துள்ளதாகவே நாம் கருத வேண்டும்.

இச் சிக்கலான பின்னணியில் இலங்கையில் பல வெளி நாடுகள், உள்நாட்டு முதலாளிகள் முதலீடு செய்துள்ளனர். தமது முதலீட்டிற்கான பலன்கள் கிடைக்குமா? என்பது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. உள்நாட்டு நிலமைகள் கட்டுக்குள் இல்லையெனில் முதலீடுகள் வருவது குறைந்து விடுவதோடு ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் மிக விரைவாக கடைகளைப் பூட்ட ஆரம்பித்து விடுவர். அவர்கள் ஒருபோதும் அரசைக் காப்பாற்றுவதை விட தமது முதலீடுகளையே காப்பாற்ற முயற்சிப்பர். இங்கு அரச தரப்பிலுள்ள முதலீட்டாளர்களும் விதிவிலக்கல்ல. எனவே நாட்டு நிலமைகளை சீர் செய்ய அழுத்தங்களை மேற்கொள்கிறார்கள். இத்தகைய சிக்கலான பின்னணியிலிருந்தே புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக பேச வேண்டியுள்ளது.

தற்போது வரையப்படுவதாகக் கூறப்படும் யாப்பு யாரால் வரையப்படுகிறது? என்பது பலருக்கும் சந்தேகமாகவே உள்ளது. பல அமைச்சர்களும் தமது சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். இந் நிலையில்தான் சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபணர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் குறித்து எதுவும் தெரியாமல் இவர்கள் அமெரிக்கா செல்ல வாய்ப்பு இல்லை. அதுவும் நிபுணர்கள் செல்ல வாய்ப்பு இல்லை. எனவே வரையப்படும் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக ஏதோ தெரிந்த பின்னணியில்தான் அவர்கள் அங்கு செல்கிறார்கள். இவ்வாறான அனுமானம் எந்தப் பின்னணியில் எழுகிறது? என்பதனை ஆராய்வோம்.

சமீபத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பினர் 13வது திருத்தமே தற்போதைய நிலையில் சாத்தியமானது எனவும், சகல கட்சிகளும் 13வது திருத்தத்தினை முழுமையாக அமுலாக்கும்படி அரசைக் கோர வேண்டும் என்ற அடிப்படையில் சந்தித்தனர். ஆனால் அக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளவில்லை. தாம் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து அரசிடம் கையளித்துள்ளதாகவும். அவை 13வது திருத்தத்திற்கு மேல் சென்றுள்ளதாகவும் அதன் காரணமாகவே அதனை வற்புறுத்தும் தீர்மானத்தை ஆதரிக்க முடியவில்லை என்ற விளக்கமும் வழங்கப்பட்டது. அவ்வாறாயின் அரசின் புதிய அரசியல் யாப்பு வரைபு குறித்து தமிழரசுக் கட்சி அறிந்துள்ளது என்பதை நாம் காணலாம்.

இம் மாதிரியான அணுகுமுறைகள் 2015 – 2019 ஆண்டு காலத்தில் புதிய யாப்பு வரைய முற்பட்ட வேளையில் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, இலங்கை அரசிற்கு எதிராக ஜெனீவா தீர்மானங்கள் வரலாம் என்பதை எதிர்பார்த்து மைத்திரி – ரணில் அரசு கூட்டமைப்புடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அப்போது வெளிநாட்டமைச்சாராக இருந்த மங்கள சமரவீர கூட்டமைப்புடன் நெருங்கிச் செயற்பட்டார். இப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே அமெரிக்கா தலைமையிலான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேறியது. கடந்த 10 ஆண்டுகளில் இவ்வாறான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அவற்றில் மாவை, சுரேஷ், சுமந்திரன், சம்பந்தன், செல்வம் போன்றவர்கள் அமெரிக்கா சென்று பேசியுள்ளனர். இருப்பினும் தற்போது வேறு நிலமைகள் தோன்றியுள்ளன. சீனாவின் தொடர்புகள், முதலீடுகள், தலையீடுகள் முன்னெப்போதையம் விட இலங்கையில் அதிகரித்துள்ளது. இத் தலையீடுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பினும் இலங்கையைப் பயமுறுத்திப் பணிய வைக்க இந்தியா விரும்பவில்லை. ஏனெனில் இந்தியாவிற்கு அண்மித்த சிறிய நாடுகள் இவ்வாறான பயமுறுத்தல்களை ஏற்றுக் கொள்ளாது. அது இந்திய வெளிநாட்டுக் கொள்கைக்குப் பெரும் பாதகமாக அமையலாம். எனவே தற்போது இந்தியா ‘குவாட்’ எனப்படும் ராணுவக் கூட்டில் இருப்பதால் ஏனைய நாடுகள் அப் பிரச்சனையைக் கையாழுகின்றன.

தற்போதைய நிலையில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, யப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுவதால் இலங்கை தொடர்பான பிரச்சனைகளில் தற்போது அமெரிக்க தலையீடு அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் சரிந்து செல்வதால் இலங்கை ஒரு நாட்டின் உதவியில் மட்டும் தொடர்ந்து வாழ முடியாது. அது மட்டுமல்ல, இலங்கையில் சீன எதிர்ப்பும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவை தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் படிப்படியாக தனது பாதையை மாற்ற எத்தனிக்கிறது. அரசினால் தற்போது தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பின் உள்ளடக்கம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக தற்போதைய அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் எதிர்காலம் என்ன? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டு 40 ஆண்டுகளாகிய நிலையில் அதன் செயற்பாடு வடக்கு, கிழக்கில் மிக மோசமாகவே உள்ளது. 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது அதன் பிரதான நோக்கம் தேசிய இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கு 13வது திருத்தம் ஆரம்பமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பே காணப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அதனை அமுல்படுத்தாமல் இழுத்தடித்து மாகாணசபைகளை பலமிழந்த ஒன்றாக மாற்றிய நிலையில் 13வது திருத்தம் தேவையா? என்ற அளவிற்கு இன்று விவாதங்கள் எழுந்துள்ளன.

தமிழர் தரப்பிலும் 13வது திருத்தம் குறித்து காத்திரமான நிலைப்பாடுகள் இல்லை. குறிப்பாக தமிழர் கூட்டமைப்பினர் தாம் அதை விட அதிகளவு உயரத்திற்கு சென்றுள்ளதாக நம்பகின்றனர். அதாவது சிங்கள அரசியல் தலைமைகள் கொள்கை அளவில் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்றுள்ளதாக கருதுகின்றனர். இவை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற போராட்டமே எஞ்சியிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இங்கு 13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன? அதனை நீக்க இந்தியா அனுமதிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன. இங்கு 13வது திருத்தம் இந்தியாவினுடையது அல்ல. அது இலங்கையின் தயாரிப்பு. அது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையால் தயாரிக்கப்பட்டதாகும். அவ்வாறாயின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு ஏற்றவாறான புதிய திருத்தம் கொண்டுவரப்படுமானால் அதனை இந்தியாவும், தமிழ் தலைமைகளும் ஏற்றுக் கொள்ளுமானால் புதிய 13வது திருத்தத்திற்குப் பதிலான புதிய ஏற்பாடு வரலாம். இங்கு இப் பிரச்சனை குறித்து மேலும் ஓரு விபரத்தை தரலாம்.

தற்போது இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக மிலிந்த மொறகொட அமைச்சரவை அந்தஸ்து கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்புள்ளவர். இவர் 13வது திருத்தம் நீக்கப்பட வேண்டுமென்ற கருத்தினை உடையவர். அவரது தலைமையில் இயங்கும் ‘Path finder foundation’ என்ற நிறுவனம் இலங்கையின் எதிர்காலம் குறித்து புதிய சிந்தனை என்ன? என்பது குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தில் மிகவும் தொடர்புடைய அவர் இலங்கையின் இன்றைய நிலமை குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் பின்வருமாறு கூறுகிறார்.- இலங்கையிலுள்ள பல மட்டங்களிலும், சமூகத்திலும் உள்ள தலைவர்கள் காலாவதியாகிவிட்ட கொள்கைகளையும்,  வழிமுறைகளையும் கொண்டுள்ளனர்.- அவற்றில் தொழில்நுட்பத்துடன் இணைந்த பாரிய மாற்றம் 21ம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறான வகையில் தேவை.- நாட்டில் மிக மோசமான, நம்பிக்கையற்ற சூழல் காணப்படுவதால் ஏற்பட்டுள்ள வெறுப்புக் காரணமாக நாட்டை விட்டு பலர் வெளியேறுகின்றனர்.- அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் நிலமைகளை மாற்ற முடியாது.- நாட்டின் இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்தியில் அர்த்தமுள்ள விதத்தில் பங்கு கொள்வது தடுக்கப்பட்டிருக்கிறது.- நாம் வாழும் சமூகத்தையும், அரசாங்கத்தையும், அரசியலையும், பொருளாதாரத்ததையும் நவீன மயப்படுத்த வேண்டும்.- வெறுப்பு என்பது அரசியல் கலாச்சாரத்தினை பல தசாப்தங்களாக தீர்மானித்திருக்கிறது.- இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் வகையில் சகலரையும் உள்ளடக்கிய தேசிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்.- தற்போது செயற்படுத்தப்படும் நல்லிணக்கம் என்பது தவறாகப் புரியப்பட்டு சகலரையும் இணைக்கத் தவறியுள்ளது. இதன் காரணமாக அது தேசிய அளவில் சட்டபூர்வ நியாயாதிக்கத்தை இழந்துள்ளது.- நிலமைகள் தொடருமானால் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமலுள்ள பிரச்சனைகள் மேலும் அநியாயங்களை இனங்கள், வர்க்கங்கள், மதப் பிரிவுகளிடையே வளர்க்கவே உதவும்.- எமது சமூகம் இனக் குழுமங்களாக, வர்க்க அடிப்படைகளில், மத ரீதியாக, மொழி, பூகோள மற்றும் அரசியல் வழிகளில் பிளவுற்று இருக்கிறது. இவ்வாறு இலங்கையின் பிரச்சனைகளை அடையாளப்படுத்திய இச் சிந்தனை சகல பிரிவினரையும் உள்ளடக்கிய, அரசியல் சார்பற்ற, உள்நாட்டில் தயாரான நல்லிணக்க முயற்சியே பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறானால் 13வது திருத்தத்திற்கு மாற்றான ஒன்று உள்நாட்டில் தயாராக வேண்டும் என்பதையே வற்புறுத்துகிறது. மேற்குறிப்பிட்டவாறான கருத்துகளுக்கு மத்தியில் தற்போது இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராகவும், அமெரிக்க அரசில் காத்திரமான கவனிப்பையும் உடையவரான அவர் மாகாண சபைகள் தொடர்பாக முன்வைக்கும் கருத்துக்கள் தற்போது மிகவும் கவனத்திற்குரியன. ஏனெனில் புதிய அரசியல் யாப்பில் 13வது திருத்தம் நீக்கப்படுமானால் மாற்றுத் தீர்வு என்ன? என்பதை அவதானித்தால் அவரது கருத்துப்படி மாகாணசபைகள் அரசாங்கத்திற்கு வருடாவருடம் 250 பில்லியன் ரூபாய்கள் எவ்வித மாற்றத்தையும் தராத பொறிமுறைக்கு விரயமாக்கப்படுவதாக முறையிடுகிறார். இப் பொறிமுறை நீக்கப்பட்டு இந்த அதிகாரங்கள் மாநகர சபைகள், பிரதேச சபைகள் போன்றவற்றிற்கு வழங்கப்படுவதோடு நிதி விவகாரமும் பரவலாக்கப்பட வேண்டும் எனவும், சிவில் சமூக அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும், அவை ஓர் இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும் என்கிறார். இங்கிருந்தே நாம் சுமந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவின் அமெரிக்க விஜயத்தை அவதானிக்க வேண்டும். இலங்கை விவகாரத்தை ஆரம்பத்தில் அமெரிக்கா மட்டுமே கையாண்டு வந்தது. நோர்வே நாடு இந்தியாவிற்கு விபரித்து வந்தது. ஆனால் தற்போது நிலமைகள் மாறியுள்ளன. இந்தியா சார்பில் அமெரிக்கா பிரச்சனைகளைக் கையாளுகிறது.

நாம் இப் பிரச்சனைகளைத் தொடர்ந்தும் பழைய பாணியில் அணுக முடியாது. தற்போது உலக நாடுகள் புதிய ஒழுங்கை நோக்கிச் சென்று வருகின்றன. பூகோள அரசியலும் மாற்றமடைந்து வருகிறது.  இலங்கை ஆட்சியாளர்கள் தாம் எண்ணியவாறு பௌத்த சிங்கள ராஜ்யத்தை அரசியல் யாப்பு மாற்றங்களால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் உலக சமூகத்தோடு பல வகைகளில் இணைந்து செயற்படுவதானால் உள்நாட்டில் உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்களைத் தர வேண்டும்.

ஒரு வேளை இன்றைய ஆட்சியாளர்கள் இவற்றை உதாசீனம் செய்யலாம். தமது கட்சி அரசியலைத் தக்க வைக்க இவ்வாறான கொள்கைகளைத் தொடரலாம். ஆனால் ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் கட்சி என்பது சகல மக்களின் ஜனநாயக உரிமைகளையும் மறுதலித்து செல்ல முடியாது. கட்சிகளின் அல்லது தனி நபர்களின் விருப்பு, வெறுப்பிற்கேற்ப நாட்டை எடுத்துச் செல்ல முடியாது. இன்று சகல நாடுகளும் ஒன்றில் ஒன்று தங்கி வாழும் நிலையில் சமூக விழுமியங்களும் உலக அளவில் ஒரே அடிப்படையிலேயே நோக்கப்படுகின்றன.

சமீப காலமாக சுமந்திரன் தலைமையிலான அமெரிக்க விஜயம் குறித்து பல்வேறு வியாக்கியானங்கள் வெளியாகி வருகின்றன. இவை யாவும் உலகின் புதிய மாற்றங்களை கவனத்தில் எடுப்பதாகவோ அல்லது இலங்கை ஆட்சியாளர்கள் மாற மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அபிப்பிராயங்களை வெளியிடுவதாகவே தெரிகிறது.

அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவரப் போவதாகக் கருதப்படும் புதிய அரசியல் யாப்பு வெறுமனே இலங்கையின் தயாரிப்பாக இருக்கும் என கருத முடியவில்லை. சர்வதேச பங்களிப்பு நிறைய இருப்பதாகவே குறிப்பாக இந்திய அறிஞர்கள் இதில் பங்களித்திருப்பதாகவே கருதப்படுகிறது. தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் தமது கனவு ராஜ்யங்களை யாப்பின் மூலம் ஸ்தாபிக்க முடியாது. உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின் அடிப்படையிலேயே யாப்பினை வரைய முடியும். அரசியல் யாப்பு அந்த நாட்டிற்கு மட்டும் உரியது அல்ல. அந்த யாப்பு உலக நியதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்படாவிடில் எந்த நாடும் முதலீடுகளையோ அல்லது தொடர்புகளையோ மேற்கொள்ளாது.

எனவே புதிய அரசியல் யாப்பு என்பது எவ்வாறு அமைதல் அவசியம் என்பது குறித்து நாம் பரந்த விவாதங்களை நடத்த வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்த முடியாத, அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைப் பெற முடியாத 13வது திருத்தத்தினை விட புதிய மாற்றம் ஏற்படுமாயின் அதனை ஏற்க நாட்டு மக்களும், குறிப்பாக தமிழ் சமூகமும் தயாராக இருக்க வேண்டும்.