ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)

ஆசிரியர் போராட்டம் ..! தவறான காலத்தின் சம்பள அரசியலா …? அரசியல் சம்பளமா…?? (காலக்கண்ணாடி – 62)

— அழகு குணசீலன் — 

சர்வதேசம் ஒக்டோபர் ஐந்தாம் திகதி, ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இலங்கை ஆசிரியர் சமூகத்தைப் பொறுத்தவரை இந்த நாள் எப்போதும் போன்று விடியவில்லை. மாதக்கணக்கில் தொடர்கின்ற வேலைநிறுத்தத்துடன் விடிந்தது. மறுபக்கத்தில் ஆசிரியர்களை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் சமூகத்தின் முன்னணியில் வைத்து மதிப்பளித்த இலங்கைச்சமூகமும் ,மாணவர்களும், பெற்றோர்களும் வெறுப்புடன் விழித்துக் கொண்டார்கள். அன்றைய தினம் எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற வார்த்தைகளை விரும்பியோ, விரும்பாமலோ கேள்விக்கு உட்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்களைத்தள்ளியது. 

இதற்கு காரணம் என்ன? பல மாதங்களாக சம்பள உயர்வு கோரி தொடர்கின்ற ஆசிரியர் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம். மூடிக்கிடக்கின்ற பாடசாலைகள், மாணவர்களுக்கு செய்யப்படுகின்ற கல்விமறுப்பு, அரசாங்கத்தின் தவறான சம்பளக் கொள்கை, தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் மகுடிக்கு ஆடுதல். ஆக, போராட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியல் சம்பள அரசியலா? அரசியல் சம்பளமா? என்ற கேள்வி மட்டுமன்றி இன்றைய இலங்கையின் கொரோனா சூழலில் இப்போராட்டத்தின் தார்மீக நீதி, நேர்மை குறித்தும் கேள்வி எழுப்பப்பட வேண்டியதாக உள்ளது. 

இன்றைய உலகின் சமூக, பொருளாதார, அரசியலை நிர்ணயிப்பதில் கொரோனாவின் வகிபாகம்  எல்லை கடந்தது. ஆனானப்பட்ட அனைத்து வல்லரசுகளையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. மார்தட்டி நின்ற அனைத்து வல்லரசுகளும் யானையின் தும்பிக்கைக்குள் எறும்பு புகுந்த நிலையில் நிலைதடுமாறி நிற்கின்றன. இந்த நிலையில் இந்து சமுத்திரத்தின் மத்தியில் சிறிய  இலங்கைத்தீவு என்ன மட்டு? அதுவும் யுத்தம் தின்ற பூமியில் வறுமையும், கொரோனாவும் தொடர்கின்ற இந்த அசாதாரண சூழலை விளங்கிக்கொள்ள வேண்டிய தேவையும், பொறுப்பும் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. 

கொரோனா சூழலில் புள்ளிவிபரரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற விவாதங்கள் பெரும்பாலும் ஏற்புடையவை அல்ல. இவை தவறுகளைக் கொண்டவையும் மிகைப்படுத்தப்பட்டவையும்.  நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் நிலைமைகள் சமமாக இல்லாத நிலையில் இவற்றை பல்வேறு நாடுகளுடன் ஒப்பீட்டு நோக்குவது ஏற்புடையதல்ல. இலங்கை போன்ற நாடுகளில் சமூக, பொருளாதார, அரசியலில் நிலவும் “இரட்டைத் தன்மையில்” உள்நாட்டில்கூட இந்த புள்ளிவிபர ஒப்பீட்டைச் செய்ய முடியாது. இது இலங்கையின் கல்விசார் அபிவிருத்தியில் மட்டுமன்றி, விலைவாசி உயர்வு, பணவீக்கம், தொழில் நிலை, கொரோனாத்தாக்கம் அனைத்திற்கும் பொருந்திப்போகின்ற ஒன்று. 

இந்த அரசாங்கமானது அடக்குமுறைகளையும், இராணுவ அணுகுமுறைகளையும், சட்டமீறல்களையும் செய்கின்ற ஒரு ஜனநாயகப் போர்வையைப் போர்த்தியுள்ள இராணுவ ஆட்சியை நடாத்துகின்றது என்று எதிர்க்கட்சிகளும், பங்காளிக்கட்சிகள் சிலவும் கூறுகின்ற நிலையில் ஒரு துறைசார் தொழிற்சங்கத் கூட்டமைப்பினால் மாதக்கணக்காக ஒரு போராட்டத்தை எவ்வாறு நடாத்தமுடிகின்றது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது இயல்பானதே. அதேவேளை இன்றைய கொரோனா அசாதாரண சமூக, பொருளாதார, அரசியல் சூழல் பாதிப்புக்கள் ஆசிரியர் சமூகத்திற்கு மட்டும் உரியதல்லவே என்றும் மக்கள் கேட்பதையும் மறுப்பதற்கில்லை. 

கொரோனாக்காலத்திலும் கடந்த சுமார் இரண்டு வருடங்களாக குறைந்தளவு சேவையை வழங்கி அல்லது வழங்காது குறைவில்லாத சம்பளத்தை பெற்றுவருகின்றர்கள் ஆசிரியர்கள். மற்றைய அரசாங்க ஊழியர்கள், தோட்டத்தொழிலாளர்கள், நாளாந்த கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் பற்றி ஆசிரியர்களின் நிலைப்பாடு என்ன? 

இந்த போராட்டம் ஒட்டுமொத்த விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள மெய்வருமான மற்றும் கொள்வனவுச்சக்தி வீழ்ச்சியுடன் தொடர்பு பட்டதெனின் உண்மையான தொழிலாளர் வர்க்கம் உள்வாங்கப்படாமல் நடுத்தர வர்க்கம் சார்ந்த அரசாங்க ஆசிரியர்கள் தனித்து இப்போராட்டத்தை நடாத்துவது ஏன்?ஆசிரியர்களைவிடவும் இன்றையசூழலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்கள் என்பதுதானே உண்மை. 

கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப்பணயம் வைத்து இரவும் பகலும் இந்த நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற சுகாதாரத்துறை தொழிலாளர்களின் சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஏன் ஏற்படவில்லை. ஆகவே தான் உண்மையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து  சம்பள அரசியலா? அல்லது அரசியல் சம்பளமா? என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளது. சம்பள அரசியல் என்ற பதம் இங்கு அரசாங்கத்தின் சம்பளக் கொள்கையையும், அரசியல் சம்பளம் என்பது அரசியல் இலாபத்திற்காக – அரசியல் ரீதியாக வாக்கு வருமானத்தைப் பெறுவதற்கான அரசியல் கட்சிகளின் பின் கதவு அரசியலையும் குறித்து நிற்கின்றது. 

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இடம்பெறுகின்ற இந்த வேலைநிறுத்தத்தை நீதியானது என்று ஆதரவளிப்பதற்கு இலங்கைச்சமூகங்கள் தயங்குகின்றன. 2,50,000 ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையால் 4.3 மில்லியன் மாணவர்களின் கல்வி பாழடிக்கப்படுவாதாக அவர்கள் கருதுகின்றனர். இங்கு ஆசிரியர்களின் போராட்டத்தை மக்கள் தவறானது என்று கூறவில்லை. சம்பள உயர்வைக்கோருவதற்கும் அது கிடைக்காத பட்சத்தில் இறுதி ஆயுதமாக வேலைநிறுத்தம் செய்வதையும் மக்கள் குறைகூறவில்லை. ஆனால் சர்வதேசம் முழுவதுமே “கொரோனா பொருளாதார மந்தத்தில்” சிக்கித் தத்தளிக்கின்ற நிலையில் இந்த அசாதாரண சூழலில் இப் போராட்டம்  முடிவுற்று  தொடர்வதைத்தான் மக்களால் நியாயப்படுத்த முடியாமல் உள்ளது. 

அரசாங்கத்தின் இதுவரையான அணுகுமுறை என்ன ….

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் வன்முறைகளைத் பயன்படுதி அதைத் தடுக்க முற்பட்டது என்று குற்றம் சாட்டப்படுகிறது. 

இது தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிரானது என்பதைவிடவும் கொரோனா முற்காப்பு ஒழுங்குவிதிகளை மீறியதனால் ஏற்பட்ட குழப்பமேயன்றி வேறில்லை. அதே நேரம் அரசாங்கம் கொரோனா ஒழுங்கு விதிமுறைகளை சாட்டாக வைத்து மறைமுகமாக போராட்டத்தை தடுக்க முயற்சித்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இது இலங்கையில் மட்டுமல்ல பல நாடுகளிலும் அரசாங்கங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சட்டங்களையும், ஒழுங்கு விதிகளையும் மீறுவதே அரசியல் என்று வீரச்சாதனை புரியும் எமது அரசியல்வாதிகள் மத்தியில் சமூகத்தின் முன்மாதிரியாக செயற்படவேண்டிய ஆசிரியர்களே இதைச் செய்திருப்பது மக்களுக்கு கவலையளிக்கிறது. 

சம்பள உயர்வுக்கோரிக்கை எழுந்த போது அரசாங்கம்  நான்கு வருடங்களில் கட்டம் கட்டமாக சம்பள உயர்வை வழங்கும் யோசனையை முன் வைத்தது. ஆனால் அதனை ஆசிரியர் சங்கங்கள் ஏற்கவில்லை. பேச்சு வார்த்தை என்பது ஜனநாயகத்தில்  விட்டுக் கொடுத்து பேரம்பேசுவதன்மூலம் ஒரு சமநிலையை அல்லது இணக்க நிலையை அடைவது.  அந்த வகையில் ஆசிரியர் சங்கங்களின் மறுப்பை நிராகரிப்பதற்கில்லை.அடுத்த கட்டமாக அரசாங்கம் கீழ் இறங்கி இருதடவைகளில் 2022 ஜனவரியிலும், 2023 ஜனவரியிலும் வழங்குவதற்கு இணங்கியது. இதையும் நிராகரித்த சங்கங்கள் ஒரே தடவையில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரி நின்றன. 

இங்கு இன்றைய அசாதாரண சூழலை ஆசிரியர் சங்கங்கள் கணக்கில் எடுக்கவில்லை. 

இதுவே இன்றைய இக்கட்டான நிலைக்கு காரணமாகும். தொழில் வழங்குனர் என்ற வகையில் அரசாங்கம் இருமுறை மாற்று ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. இதைத்தான் பாடசாலைகளுக்கு செல்லும் பிள்ளைகளின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது. மறுபக்கத்தில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தினூடாகத்தான் இதற்கான நிதியை ஒதுக்க முடியும் என்று அரசாங்கம் கூறுவதையும் நினைவுபடுத்தவேண்டியுள்ளது. ஒரு தனியார் கம்பனி போல் எழுந்தமானமாக, “சிவப்பு நாடா” நிர்வாகக்கட்டமைப்பை கொண்ட ஒரு அரசாங்கத்தினால் செயற்பட முடியுமா? 

“WE HAVE MADE A FIRM DECISION. WE WILL CONTINUE THE STRIKE ON OCTOBER 21 AND 22 AND ON 25, IT IS WE, NOT THE GOVERMENT – WHO HAVE DECIDED TO GO TO SCHOOL ON OUR OWN….” இது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கூற்று. 

அரசாங்கத்தின் அறிவிப்பை ஸ்டாலின் ஒரு கௌரவப் பிரச்சினை யாகவே பார்க்கிறார். பிள்ளைகளின் நலனை அவர் முதன்மைப்படுத்தவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசாங்க ஊழியர் ஒருவர் அரசாங்கம் சொல்லும் நாளில் வேலைக்கு திரும்பமாட்டோம், அதை நாங்கள் சுயமாக தீர்மானிப்போம் என்று கூறுவது.   

ஆசிரியர் பணியில் இணைந்தது முதல் பாடசாலை ஆரம்பிக்கும் நேரம்முதல் பாடசாலை விடும் நேரம்வரையும் மற்றும் அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் அரசாங்கம் சொன்னபடியே செய்தவர் இங்கு வெறும் போலிக் கௌரவத்தை முன்நிறுத்துகிறார். உண்மையாகவே இந்த பதிலை மக்களும், மாணவர்களும் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அவர் அதற்கு இவ்வாறான வரட்டுக் கௌரவ வாதங்களை விட்டு வேறு பொருத்தமான காரணங்களைச் சொல்லி இருக்கமுடியும். இவ்வாறான நிலைப்பாடுகள்தான் இவர்களின் போராட்டத்தில் உள்ள அரசியல் சம்பளத்தை வெளிக்காட்டி நிற்கின்றன. 

இவர்களின் போராட்ட நியாயத்தை காலத்திற்கு ஒவ்வாததாக காட்சிப்படுத்துகின்றன. 

இது சமூகம் சார்ந்த கல்விச்சேவை. அரசாங்கம் சமூகநலன் கருதி வழங்குகின்ற இலவசக்கல்வி. தனியார் தொழிற்சாலை அல்ல. அங்கு தொழிலாளர்கள் இயந்திரங்களோடு பணியாற்றுகிறார்கள். வேலைநிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது சமூகம் அல்ல மாறாக அந்த தனியார் முதலாளி. இங்கு ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது அரசாங்கம் அல்ல மாணவர் சமூகம்.  

அங்கு முதலாளிக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம். இங்கு நீங்கள் நட்டத்தை ஏற்படுத்துவது மக்களுக்கு அவர்களின் வறிய பிள்ளைகளுக்கு. எந்த மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு வேலை நிறுத்தம் செய்கிறீர்களோ, அந்த மக்களின் பிள்ளைகளின் கல்வியைத்தான் பாழடிக்கிறீர்கள்.   மேற்கு நாடுகளில் சமூக அக்கறையுடன் தொழிற்சங்கங்கள் சொந்த விடுமுறை நாட்களில் போராட்டம் நடாத்துகின்றன. பாடசாலை  தவணை விடுமுறைக்காலத்தில் மாணவர் கல்வி பாதிக்கப்படாமல் போராட்டங்களைச் செய்கின்றன.  இது முதலாளித்துவ நாடுகளின் தொழிற்சங்கங்களின் முன்னுதாரணமான சமூக அக்கறை என்பதை இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.  

இன்றைய நிலையின் பின்னணியும், தவித்த முயல் அடிப்பும்! 

1995இல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட B.C.பெரேரா தலைமையிலான சம்பள ஆணைக்குழு ஆசிரியர்களின் சம்பள விவக்காரத்தை ஆராய்ந்து 1997இல் சிபார்சுகளுடன் கூடிய அறிக்கையை கையளித்திருந்தது. அந்த அறிக்கை 2,45,000 ஆசிரியர்களினதும், 17,000 அதிபர்களினதும் சம்பள அளவுத்திட்டம் மிக மோசமானதாக இருப்பதாகக் கூறுகிறது. இந்த சிபார்சுகள் உரிய வேளையில். சாதகமான பொருளாதார சூழலில் நடைமுறைப்படுத்தப்படாது 1997 முதல் 2019 வரையான அரசாங்கங்களால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டே வந்தது. இதற்காக பொறுப்பை  இக்கால அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

கடந்த 25 ஆண்டுகளாக அரசாங்கங்கள் இந்த சிபார்சுகளை கிடப்பில் போட்டுவிட்டன. மறுபக்கத்தில் இன்று களமிறங்கியிருக்கின்ற ஆசிரியர் சங்கங்களும் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருநாள், அரை நாள் போராட்டங்களை நடாத்திவிட்டு அரசாங்க மேலிடத்துடன் சுய இலாப சமரசங்களைச் செய்து தொழிற்சங்க  அங்கத்தவர்களான ஆசிரியர்களுக்கு போக்குக்காட்டி வந்ததுடன் கண்களை மூடிக்கொண்டு பாசாங்கு செய்பவையாகவே இருந்துள்ளன. 

தொழிற்சங்கங்களுடனான சம்பிரதாய சந்திப்புக்களின்போது அரசாங்கங்கள் வெறும் வாக்குறுதிகளை வழங்கினவேயன்றி அவற்றை செயற்படுத்தவில்லை. இதற்காக தொழிற்சங்கங்களும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. ஆசிரியர்கள் தங்கள் சங்கங்களில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காகவும், தொழிற்சங்க தலைமைகள் தங்கள் இருப்பைத் தக்கவைப்பதற்காகவும் ஆண்டில் ஒன்று ஆவணியில் ஒன்று என சாட்டுக்கு  ஏதாவது செய்து கொண்டன. உண்மையாக நோக்கினால் இந்த விவகாரம் யூலை 2020க்கு முன் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. 

நல்லாட்சிக்காலத்தில் (2015 – 2019 ) இந்த ஆசிரியர் சங்கங்கள் ஒன்றுக்கு பத்து தடவை பல்வேறு சந்தர்ப்பங்களில் அலரிமாளிகையில் சந்தித்து விருந்துண்டிருக்கிறார்கள். பல்வேறு ஆலோசனைக்குழுக்களிலும், செயற்திட்டங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் சம்பள உயர்வு குறித்தோ, பெரேரா ஆணைக்குழு சிபார்சுகள் குறித்தோ வாயே திறக்காது பேசாமடந்தையாக இருந்தார்கள். 

இப்போது கும்பகர்ணன் நித்திரையில் இருந்து விழித்துக்கொண்டது போல் மாணவர்களின் ஒன்லைன் வகுப்புக்களை புறக்கணித்து போர்க்களத்தில் நிற்கிறார்கள். உண்மையில் இன்றைய கொரோனா பொருளாதார மந்தத்தில் எந்த அரசாங்கமாய் இருந்தாலும் அதனைச் செய்யவது கஷ்டம். கொரோனா முற்காப்பு நடவடிக்கைகளுக்கும், சாதாரண நிரந்தர மாதாந்த வருமானமற்ற மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது வீட்டில் இருந்து கொண்டே மாதாமாதம் சம்பளத்தை இந்த இக்கட்டான நிலையிலும் பெற்றுக்கொண்டும், வேலைக்குச் செல்லாமலும் இருக்கின்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்குவதா? இங்கு நாம் எதையும் விவாதிக்கலாம் எப்படித்தான் நோக்கினாலும் ஒட்டுமொத்த சமூகத்தினதும், நாட்டினதும் நலனே முதன்மையானது. 

விவசாயிகள் இன்றைய சூழலில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் காரணமாக தொழில் செய்யமாட்டோம் என்று வேலைநிறுத்தம் செய்யமுடியுமா? அல்லது மீனவர்கள் தங்கள் எதிர்நோக்கும் உயிர் ஆபத்துக்களுக்கு மத்தியிலும் கடலுக்குப் போகிறார்களே, ஏன்? அன்றாடக் கூலிகள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்து தொழில் பகிஸ்கரிப்பை செய்யமுடியுமா? அப்படியானால் இவர்களின் வீட்டில் ஒரு வேளையாவது அடுப்பு எரிவதற்கான வழி என்ன? ஆனால் ஆசிரியர் வீடுகளில் மூன்று வேளையும் அடுப்பு எரிகிறதே. இந்த சமூக அநீதியை எவ்வாறு நியாயப்படுத்துவது. 

அது மட்டுமா? ஒன்லைன் வகுப்புக்களை பகிஸ்கரித்தவர்கள் தனியார் ஒன்லைன் வகுப்புக்களை ஆரம்பித்தார்கள். ஒன்லைன் வகுப்புக்கு போவதற்கு முன் மாணவர்கள் முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்குப்பின்னர்தான் “பாஸ் கோட்” மாணவர்களுக்கு கிடைக்கும். வசதிபடைத்த பெற்றோர்களுக்கு இது இயலுமானதாய் இருந்திருக்கலாம். அன்றாடம் காச்சிகளான வறிய பெற்றோர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் இதன் விளைவு என்ன?  

கல்வியில் தனியார் மயப்படுத்தலா? என்று அரசியல் நடாத்துகின்ற  தொழிற்சங்கம் தானாகவே  தனியார் வகுப்புக்களை நடாத்துவதன் அதர்மத்தை என்ன என்பது? ஆக, கொரோனா காலத்தில் அரசாங்க சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு வேலைக்கும் போகாமல் தனியார் ஒன்லைன் வகுப்புக்களையும், ரியூசன் வகுப்புக்களையும் நடாத்தி வருமானத்தை அதிகரித்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். நாட்டின் மற்றைய தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் குறித்து உங்கள் நிலைப்பாடுதான் என்ன?  இதனால்தான் உங்கள் போராட்டத்தின் பின்னணி சம்பள அரசியல் அல்ல அரசியல் சம்பளம்  என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த போராட்டத்தின் நியாயத்தன்மையை தொழிற்சங்கங்களே சாகடிக்கின்றன. 

இறுதியாக, ஆசிரியர்களின் சம்பளங்கள் மட்டுமல்ல  பல்வேறு துறைகளிலும் சாதாரண வேலையாட்களின் சம்பளங்களும் குறைவாகவே உள்ளன. இதை காலத்திற்கு காலம் கவனத்தில் எடுத்து செய்யவேண்டியது மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் பொறுப்பு. அதனை அரசாங்கங்கள் செய்யாததால் ஊழியர்கள் போராட்டம் நடாத்துவதை விட வேறுவழியில்லை. அது ஒன்றே தொழிற்சங்கங்களின் கைகளில் உள்ள இறுதி ஆயுதம்.  

ஆனால்……………….. 

இந்தப்போராட்டம்  தவறான காலத்தில் இடம்பெறுகின்ற சரியான போராட்டமாக இருந்தாலும் மக்களும், அரசாங்கமும்  இன்றைய காலச்சூழலுக்கே முக்கியம் கொடுப்பதனால் சமூகத்தின் அனுதாபத்தினை, ஆதரவினை பெறமுடியாத ஒரு நடவடிக்கையாக  இது அமைந்துள்ளது. கடந்த 25 வருடங்களாக இந்த விடயத்தை காத்திரமாக கவனத்தில் எடுக்காத சம்பந்தப்பட்ட இரு தரப்பும் கொரோனா அசாதாரண சூழ்நிலையையும் அது ஏற்படுத்தியுள்ள எதிர்பாராத சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு செயற்படுவதே நாட்டு மக்களுக்கும் மாணவர் சமூகத்திற்கும் சாதகமானதாக அமையும். போராட்டத்தின் வெற்றியாகவும் இருக்கும். 

எடுக்கப்படுகின்ற முடிவுகளின் வெற்றி தோல்வியை  அந்த முடிவுகள் எடுக்கப்படும் சந்தர்ப்பம் சூழ்நிலையே தீர்மானிக்கும்…! இல்லையேல் சரியான முடிவுகள் கூட  தவறான காலச்சூழலால் தோற்கடிக்கப் பட்டுவிடும்.