— அகரன் —
யானை நிதானமாக தன் கால்களை எடுத்துவைப்பதுபோல அசைந்து வந்து அந்த அம்மையார் அமர்ந்தார். அவரோடு பல விசயங்களும் அமர்ந்தன. கதிரை வழமைபோல அரை அடி தாழ்ந்து தன் மரியாதையை தெரிவித்தது.
அம்மணி, பல தலைமுறைகளாக பிரான்சில் வாழும் ஆபிரிக்க பெண்மணியாக இருக்கும் அங்கவஸ்திரங்களையும், செய்காரியங்களையும் வைத்திருந்தார். அவர் பிரஞ்சுமொழி ஆபிரிக்க வாடையே இல்லாமல் கனீரென்று தடித்த சிவப்பாக்கப்பட்ட உதடுகளால் வெளியேறியது.
நான் மூன்றாவது தடவையாக அகதி மேன்முறையீட்டுக்காக பாம்புபோல வளைந்து பயமுறுத்தும் அகதி வரிசையில் காத்திருந்தேன்.
இம்முறையும் வாய்ப்பு கிடைக்காது என்ற சேதியை மூளை அடிக்கடி எனக்கு அறிவித்தது. சென்றமுறை வந்தபோது இதே அம்மையாரே அந்தக் கதிரையை அலங்கரித்தார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அவரில் ஒரு மூக்குக்கண்ணாடி தொங்கிக்கொண்டிருந்தது. வேறு செயல் மாற்றங்கள் ஒரு சதத்துக்கும் இல்லை.
இம்முறை அந்த வரிசையில் தமிழர் யாரையும் காணவில்லை. அதைத்தவிர எனக்கு ஒரு மகிழ்ச்சியும் இல்லை.
சிரியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், சில ஆபிரிக்க நாட்டவர்களால் வரிசை பிள்ளைத்தாச்சிபோல் நிறைந்து வழிந்தது.
அதிகாலை மூன்று மணிக்கு நான் அங்கு சென்றபோது நான் ஐந்தாவது நபராக நின்றேன். காலை எட்டு மணிக்கு எனக்கு முன்னால் ஐம்பது அகதிகள் நின்றார்கள். எனக்கு எதிர்க்க தைரியம் இல்லை. எனது நீண்ட மூக்கு, வெள்ளைப் பல்லை நான் பாதுகாக்க வேண்டும்.
எனக்கு பின்னால் நின்ற நூறு பேருக்கும் என்னை முந்தவேண்டும் என்று தோன்றவில்லை. அதுபோதும் என்று நினைத்துக்கொண்டு அந்தக் குளிரை நன்றாக அனுபவித்துக்கொண்டு காலை ஒன்பது மணிக்காக காத்திருந்தேன்.
கால் நகங்களிலும், கைகளிலும் பிளேற்றால் வெட்டியதுபோல வலி எடுத்து நின்றது. அது குளிர் வழங்கிய கொடை. எனக்கு பின்னாலும் முன்னாலும் ஆப்கானிய மொழியும், சிரிய மொழியும், அராபிய மொழியும் என் அனுமதி இன்றி தம்பாட்டுக்கு கடந்துகொண்டிருந்தது.
ஒன்பது மணி ஆனபோது எனக்கு பின்னாலும் முன்னாலும் சண்டைகள் உருவானது. வரிசையில் மிக நூதனமாக பலரும் நுழைய முனைந்தார்கள். ஆட்டுப்பட்டியை ஓநாயிடம் இருந்து காப்பாற்றும் வீரர்கள்போல எல்லோரும் விழிப்போடு இருந்தார்கள்.
நான் பிரச்சினைகளை விரும்பாதவன் என்பதை அந்த ஆபிரிக்க புண்ணியவான் எப்படி அறிந்தானோ? தெரியவில்லை. எனது நிறமும் ஆதி தமிழன் நிறம்தான். எனக்குப் பின்னால் நீண்ட கைகளோடும், கால்களோடும் நான் அண்ணாந்து பார்க்கும் உயரத்தோடு அந்த கனவான் வந்து நின்றுவிட்டான்.
சண்டை ஆரம்பமானது.
அந்த கனவானை இழுத்து வெளியேற்ற ஆப்கானியர்களும், சிரியர்களும் மல்லுக்கட்டினார்கள். ஒருவருக்கும் ஒருவர் மொழியும் புரியவில்லை. கனவான் மட்டும் பிரஞ்சும் ஆபிரிக்க ஆதி மொழியையும் கலந்த புது மொழியில் சண்டையிட்டான்.
நான் ஒதுங்கி ஒதுங்கி என் உடலை பாதுகாப்பதில் கவனமாக இருந்தேன். அந்த இடைவெளியில் எனக்கு முன்னால் பத்துப்பேர் வந்திருந்தனர்.
சண்டை உக்கிரமான நிலையில் அந்த ஆபிரிக்க கனவான் என்னை தன் சண்டைக்குள் இழுத்துவிட்டார். அவர் அசைவுகள் மூலம்‘’ அதிகாலையில் இருந்தே எனக்குப் பின்னால் நிற்பதாகவும் விரும்பினால் என்னிடம் கேட்குமாறும்’’ கூறிவிட்டார்.
எல்லா ஆப்கானிய, சிரியக் கண்களும் என்னை எரித்துவிட திரும்பின.
எனக்கு இரண்டு அச்சம். ஓம் என்றால் ஆப்கானிய, சிரியர்கள் கும்முவார்கள். இல்லையென்றால் ஆபிரிக்க கனவான் காத்திருந்து என்னை தாக்கினால் என் எல்லா எலும்புகளும் ஓய்வுபெற்றுவிடும்.
என்னை நினைத்து நானே பெருமைப்படும் வண்ணம் ஒன்றை செய்தேன். வாய் பேச காது கேட்க எனக்கு வராது என்பதுபோல எல்லோரையும் பார்த்து வணங்கினேன். நான் எதிர்பார்க்கவில்லை. ‘’இன்சா அல்லா’’ என்றுகொண்டு எல்லோரும் பிரிந்துபோனார்கள்.
அந்த நேரம் பார்த்து எனக்கு சலம் முட்டிக்கொண்டு நின்றது.
சலம் அடக்குவது சாதாரண காரியமில்லை. அடி வயிற்றில் நெருப்பை கட்டுவதாக ஊரில் தாய்மார்கள் சொல்வார்கள். உண்மையில் சலமடக்குவதும் அதைப்போல ஒன்றுதான்.
என் நிலை மோசமாக இருந்த தருணம் பார்த்து பின்னால் நின்ற கனவான் எனக்கு நன்றி செலுத்தும் முகமாக எங்கிருந்தோ கபே (café) ஒன்றை பெற்று என்னிடம் நீட்டினார். நான் அதை கனிவோடு மறுத்தேன். அவர் அடம்பிடித்தார். நான் இருகைகளாலும் கும்பிடுபோட்டேன். அவர் என்னை விடுவதாக இல்லை. இறுதியில் அதை பெற்றுக்கொண்டு குடிக்காமல் வைத்திருந்தேன்.
எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு நின்றபோது, அந்த அம்மையாரின் சென்ற தடவை ஞாபகம் வந்து என்னை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது.
பிரான்ஸ் அரசாங்கம் நல்ல மனம் படைத்தது. அகதிக்கோரிக்கை எல்லாமும் நிராகரிக்கப்பட்டாலும் வருடத்துக்கு ஒரு தடவை மேன்முறையீடு செய்துவிட்டு யாரும் எங்கோ ஒரு மூலையில் இருந்துவிடலாம். போலீஸ் பிடித்தால் கௌரவமாக அதைக்காட்டலாம். அவர்கள் தங்கள் தொலைத்தொடர்பில் எங்கெங்கோ அழைத்து என் பெயரை கூறுவார்கள். பின்னர். ஓ (று)வுவா (AU REVOIR- மீண்டும் சந்திப்போம்) என்று வழி அனுப்புவார்கள். அவர்களை மீண்டும் சந்திப்பதில் எவ்வளவு விருப்பத்தோடு இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்வேன்.
இது எனது மூன்றாவது மேன்முறையீடு. இரண்டாவது மேன்முறையீட்ட்டின்போதும் இதே இடத்தில் இதே களேபரங்களோடு அந்த அம்மையாரை நெருங்கினேன். அவர் மனம் வைத்து பாரங்களை தந்தால் மட்டுமே எனக்கு மேன்முறையீட்டுக்கான வாய்ப்பே கிடைக்கும். இல்லாவிட்டால் இதேபோல் அதிகாலை மூன்று மணிக்கு வந்து காத்திருக்க வேண்டியதுதான்.
அந்த அம்மையார் தமிழ் அகதிகளை இதற்குமுன் சந்தித்து இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். அல்லது அவர் புதிதாக வேலைக்கு வந்திருக்கவேண்டும். என் முறை வந்ததும் என்னிடமிருந்த எல்லா மரியாதையையும் திரட்டி பிரஞ்சு வணக்கத்தை முறைப்படி தெரிவிக்க போராடினேன். B O N J O U R (நல்ல நாள்) என்பதை நான் ‘மூசு’ என்றுவிட்டேன்.
அந்த அம்மையார் வெடுத்தெழுந்துவிட்டார். ஏதேதோ சொன்னார். நான் பணிவுடன் நின்றேன். எனக்கு அவர் கோபம் புரிந்துவிட்டது. (நீ ஏழுவருடமாக இங்கே இருந்திருக்கிறாய்! உன்னால் பிரஞ்சு வணக்கத்தை ஒழுங்காக சொல்லமுடியவில்லை!) இது அவர் முகபாவத்தில் நான் புரிந்ததுதான்.
நான் என்ன செய்வேன்? எனக்கு தெரிந்த தமிழர்கள் எல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள். மூசு.. மூசு.. என்று மாடு மூசுவதுபோல சொல்வார்கள். இதற்காக நான் பலிக்கடாவாவதா? இதை அம்மையாரிடம் சொல்லவில்லை. சொல்லவும் தெரியாது!
என்ன கொடுமை?! அந்த அம்மையார், ‘வணக்கத்தை சரியாக சொல்லிவிட்டு என்னிடம் வா!’ என்றுவிட்டார். அவர் ஏதோ தவம் ரீச்சர் போலசெயற்பட்டார். ஊரில் தவம் ரீச்சர் வகுப்புக்கு வந்ததும் வாய்ப்பாடு சொல்லவேண்டும். தெரியாதவர்கள் வகுப்புக்கு வெளியில் முட்டுக்காலில் நின்று பாடமாக்கி சொன்ன பின்னர்தான் வகுப்பிற்குள் செல்லலாம். கடைசிவரை அந்த வகுப்புக்குள் இருக்கும் பேறு எனக்கு கிட்டவில்லை. வகுப்பைவிட்டு அவர் போகும்போது எனக்கு ‘மொக்கு.. மொக்கு..‘ என்ற பட்டத்தை தருவார்.
பிரான்ஸ் நாட்டுக்கு வந்து ஏழாவது ஆண்டுதான், அந்த அம்மணியின் நெருக்குதலால் பிரஞ்சு வணக்கத்தை சரியாக சொல்லி மீண்டும் அவரை நெருங்கினேன்.
‘ஷிபியாங்.. ஷிபியாங்’ என்றுவிட்டு எந்த நாடு?என்றார். நான் சிறீலங்கா என்றேன். ஏதோ மீண்டும் நான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல பார்த்தார். சில நொடிகள் என் முகத்தை ஆராய்ந்துவிட்டு நான் தன் கேள்வியை விளங்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, கினே, சூடான், கென்யா என்றுவிட்டு நீ எந்த நாடு? என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. ஆனாலும் பல்லை காட்டிக்கொண்டு மீண்டும் சிறீலங்கா என்றேன். அவர் o.. La.. La.. என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்த படிகாலால் தள்ளி தன் ஓடு கதிரையில் பின் சென்றுசென்ற வேகத்தில் ஒரு வெள்ளை பேப்பர், பேனையோடு முன்வந்தார். அவர் உடல் இவ்வளவு குளிர்மையாகவும், தடிப்பாகவும் இருப்பதற்கு இந்தக் கதிரைதான் காரணமென்று நினைத்துக்கொண்டேன்.
அதன் பிறகு அவர் சொன்னதுதான் என்னை பூச்சிபோன்ற நிலைக்கு கொண்டு சென்றது. உனது நாடு எங்கே இருக்கிறது என்று கீறிக்காட்டு. என்பதுதான் அது.
நான் முதலில் இந்தியாவை கீறினேன். கண் வெட்டாமல் கீறுவதைப் பார்த்தவர் அவசரப்பட்டு ‘’நீ இந்தியனா?‘’ என்றார். நான் பாக்கு நீரினையை கீறி. அதில் அலை கீறிவிட்டு இலங்கையை கீறிவிட்டு சிறீலங்கா என்றேன்.
அப்போதும் நான் தன்னை ஏமாற்ற புது நாட்டை கீறிவிட்டதுபோல பார்த்தார். பின்னர் அருகே இருந்த தொலைபேசியை எடுத்து யாரோடோ பேசினார். ‘போலீசை அழைத்துவிட்டாளோ சண்டாளத்தி’’ என்று என் மனம் கலவரமாகிக்கொண்டிருந்தது.
அப்போது குதிரைச் சத்தத்தை தன் காலில் பூட்டியவாறு எல்லோரும் பார்க்கவேண்டும் என்ற அலங்காரங்களை வைத்திருந்ததன் மூலம் எல்லோரின் கண்களுக்கும் வேலைதரக்கூடிய ஒரு பிரஞ்சுப்பெண் அங்கு நுழைந்தார். அவர் இந்த அம்மையாரின் மேல் அதிகாரியாக இருக்க வேண்டும்.
அவர் என்னைப் பார்த்து செயற்கையான புன்னகையை அவசரமாக பூட்டிக்கொண்டு (’bonjour‘) பொன்யூர் என்றுவிட்டு என் பதில் வணக்கத்தை கண்டுகொள்ளாமல் அந்த அம்மையாரிடம் பேசினார். அவர்கள் என் வரைபடத்தை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள். ‘’சிலோன் என்ற தீவை யாரோ இரவோடு இரவாக சிறீலங்கா என்று மாற்றிவிட்டார்கள்’’ என்பதுதான் அது.
பின்னர், தன் சொத்தை எடுத்து தருவதுபோல அகதி மேன்முறையீட்டுக்கான பாரங்களை எடுத்துத்தந்தார். இலங்கை என்ற நாட்டை தான் அறியவில்லை என்று கொஞ்ச வருத்தமும் அவரிடம் இருக்கவில்லை. நான் அவற்றை இருகைகளாலும் பெற்றுக்கொண்டேன். அப்போது ஒரு நீள வசனத்தை பிரஞ்சில் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் ‘மெர்சி…மெர்சி’ என்று சொல்லிவைத்தேன்.
பின்னர் மெட்ரோ வண்டியில் வரும்போதுதான் அவர் சொல்லும்போது ‘ஆபிரிக்’ என்ற சொல்லை சொன்னதில் இருந்து அவர் என்னை ‘ஓர் ஆபிரிக்க நாட்டுக்காரன்’ என்று நினைத்ததாக சொல்லி இருப்பார் என்று புரிந்துகொண்டேன். என் தலையில் ஒரு குல்லா தொப்பி இருந்தது. அப்போது நினைவுக்கு வந்தது. மெட்ரோ வண்டி நிலத்தின்கீழ் சென்றபோது ஜன்னல் ஓரம் திரும்பி கண்ணாடியை பார்த்தேன். அந்த அம்மையாரின் தீர்மானம் சரியாகவே பட்டது.
ஏழு வருடத்திற்கு முன்னர் முதல் அகதிக் கோரிக்கைக்காக சென்ற கதை பிரஞ்சு மொழிக்கு நடந்த அவமானம். ஆறு அகதிகள் ஒரு றெயின் பெட்டியில் மேலுங்கீழும் படுக்கை இருப்பதுபோல ஒர் அறையில் இருந்தோம். ஆறுபேரில் நான்தான் கடைசியாக அந்த மாளிகைக்கு 300€ வாடகைக்கு குடிபோனவன். அதை ஒர் தந்திரம்மிக்க மூத்த அகதி வைத்திருந்தார். அவர் அந்த அறைக்கு 600€ வாடகை செலுத்தினார். மீதி பணம் அவர் வருமானமாக இருந்தது. அவர் வேலைக்கு செல்வதில்லை. ஊரிலும், கொழும்பிலும் வீடு கட்டிவிட்டாரென அவரின் அடிப்பொடி சயந்தன் அடிக்கடி சொல்லிக்கொள்வான்.
முதல் அகதி பதிவிற்கு செல்வதற்கு எனக்கு துணைவர யாரும் இருக்கவில்லை. அந்த அறையில் இருந்த ஒவ்வொருவரும் அன்று இரவு பூராக எனக்கு எந்த மெட்ரோ எடுக்கணும்? வலப்பக்கம் திரும்பி எந்த பஸ் எடுக்கணும், பிறகு அங்கு கண்ணில்படும் யாராவது ஒருவரிடம் ’போலீஸ்‘ என்று கேட்டால் காட்டுவார்கள். என்றார்கள். அப்படியே நான் செய்தேன்.
நான் சென்றடைந்த கட்டடத்தில் போலீசை தவிர யாரையும் காணவில்லை. நான் கேட்பது அங்கிருந்த ஒரு பொலீசாருக்கும் விளங்கவில்லை. ஆங்கிலம் தெரிந்த போலிசார் காலை ஒன்பதுக்கு வந்தார். என்னை விசாரித்த பின்னர் போலீசில் அகதிக்கோரிக்கை ஏற்பதில்லை என்றார். அதற்கு பிறேபெக்சூர் (préfecture) செல்லவேண்டும் என்றார். என்னிடம் அப்போது கடவுச்சீட்டோ, விசாவோ இருக்கவில்லை. என்னை பிடித்து இலங்கைக்கு அனுப்ப எல்லா தகுதியும் இருந்தது.
பின்னர் என்னை பொலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். எனக்கு இலங்கை விமானநிலையம் கண்களில் வந்து பயமுறுத்தியது. //வீட்டில் உள்ளஅகதிகள் திட்டம்போட்டு என்னை மாட்டிவிட்டுட்டாங்கள். //என்று அழும் நிலையில் இருந்தேன்.
போலீஸ் வாகனம் பீம்.. போம்.. என்றவாறு சென்று வரிசையின் முடிவு காணமுடியாத வெளிநாட்டுக்காரர் நிற்கும் இடத்தில் நின்றது. அந்த போலீஸ்காரர் என் கண்களில் தெரிந்த கடல் காரணமாகவோ என்னவோ என்னை உள்ளே அழைத்துச்சென்று கௌரவமாக அகதிப்படிவங்களை பெற்றுத்தந்தார். முதல் முறை மனிதனை மதிக்கும் மனித போலீசை அப்போதுதான் பார்த்தேன். அந்த கூரிய மூக்கும் ஆறடி உயரமும் உள்ள போலீசை என்னால் மறக்க முடியாது.
அகதிகளின் அறைக்குச் சென்றதும் என்னை ஏன் ‘போலீஸ்’ என்று கேட்டு மாட்டிவிடப் பார்த்தீர்களா?என்று கண்ணியமாக ஆதங்கப்பட்டேன். அவர்கள், தாங்கள் எல்லோரும் அந்த இடத்தை போலீஸ் என்றே சொல்வோம் என்றார்கள். அப்போதுதான் ஒரு கண்டுபிடிப்பை நான் செய்தேன். பிரஞ்சு மொழியில் வாயில் நுழையாத சொற்களை தமக்கு ஏற்றவாறு தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்’ என்பது. அப்படித்தான் பிறேபெக்சூர்- போலீஸ் ஆனது.
*
கடந்த கதைகளை சிந்தித்ததால் காலம் வேகமாக போய்விட்டது. பிறேபெக்சூர் இன் வெட்டும் கதவுக்குள் சென்றுவிட்டேன். எனக்கு முன்னே பத்துபேர்தான் நிற்கிறார்கள்.
அந்த அம்மணி இத்தனை வருடங்களாக சற்றேனும் வேகத்தை கூட்டவில்லை. மிக ஆசுவாசமாக வேலை செய்கிறார். அகதிகளை வைத்திருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி இருக்கலாம். அவரின் மூக்கில் கண்ணாடி இருக்கிறது. ஆனால் கண்ணாடிக்கு மேலால் பார்க்கிறார். அவர் பார்வை அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது. அந்த கண்ணாடி அவருக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஆனால் அவர் அதை கழற்றி வைக்க நேரமின்றி வேலை செய்கிறார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கேள்வியை அகதிகளிடம் கேட்டுவிட்டு அவர் கண்களை பெரிசாக்கி யாரும் குளிக்கும்போது எட்டிப்பார்ப்பவர்போல கண்ணாடிக்குள்ளால் அவர் வெள்ளைக்கண்கள் எட்டிப்பார்க்கிறது.
அவர் சிறீலங்காவை நினைவில் வைத்திருப்பார். அதற்கு காரணமான என்னையும்தான். அவரிடம் வணக்கத்தை சரியாக சொல்லவேண்டும்! அதை நான் மனதுக்குள் முதலில் சொல்லிப்பார்க்கவேண்டும். என் கால்கள் நடுங்குகின்றன. அது குளிர் பிடித்துவிட்டதால் இருக்கலாம்.
நீ மூன்றாவது தடவையாய் மேன்முறையீடு செய்கிறாயா? நீ இன்னும் சிலோன் போகவில்லையா? என்று கேட்பாரோ தெரியவில்லை. கேட்டால், மொழி விளங்காததுபோல நடிக்க வேண்டியதுதான்.
இல்லை.. இல்லை.. இத்தனை வருடங்களாக உனக்கு இந்த அடிப்படை மொழியே தெரியவில்லையே? என்றால் என்ன செய்வது? மொழி பேசினால்த்தான் உனக்கு விண்ணப்பம் என்றுகூட சொல்லலாம்.
ஆண்டவா… எத்தனை இடர்கள். இல்லை.. இல்லை.. உன்னால்தானே எல்லாம். உன்னை ஏன் இப்போது நினைத்தேனோ தெரியவில்லை. இன்னும் பதட்டம் கூடுகிறது. ஓடிவிடு.. நினைப்பில் இருந்து ஓடிவிடு ஆண்டவா! இந்த அம்மணி உன்னைவிட சிக்கலானவர்.
இப்போது நான் மூன்றாவதாக நிற்கிறேன்.
முன்னால் நின்றவர்கள் ஆப்கானியர்கள் அல்ல. அவர்கள் பங்களாதேஷ் நாட்டவர். மனிதர்களை எந்த நாடென்றுகூட இனங்காண முடியவில்லை. ஓ..ஓ.. நாடுகள் கோடுபோடமுதல் மனிதர்கள் ஒன்றாகத்தானே இருந்தார்கள்?! இப்போது ஏன் இந்த மோசமான சிந்தனை வருகிறது?.
அம்மணி கடைக்கண்ணால் என்னையும் பார்க்கிறார். ஓ என் நினைவு அவருக்கு வந்திருக்கலாம். நான் சொல்லாமலே அவர் என்னை சிலோன் காரன் என்று அடையாளம் காணலாம். என் தலையில் குல்லாவோ, தொப்பியோ இல்லை.
இதோ… அடுத்தது.. நான்தான்! முன்னர் சென்றவர் என்னைப்போலவே தன் நாட்டை கூறுகிறார். அம்மணிக்கு விளங்கவில்லை. O.. La. La.. என்றுவிட்டு ஓடு கதிரையில் காலால் உதைந்து பின்செல்கிறார். வெள்ளைத் தாளையும் பேனையையும் அவனிடம் கொடுக்கிறார். அவன் தன் நாட்டை கீற ஆரம்பிக்கிறான்.
அம்மணி என்னை பார்க்கிறார். நான் திரும்பி வேகமாக நடக்கிறேன். அம்மணி முதல்முறையாக ஓடுகதிரையில் இருந்து எழுந்து…. ஏ.. மிஸ்யூர்…. மிஸ்யூர்.. (கனவானே.. கனவானே.. .) என்கிறார்.
வெட்டுக்கதவு நான் வெளியேறியதும் தானாக மூடிக்கொண்டது. அம்மணியின் மூன்றாவது வார்த்தை அவரிடமே சென்று சேர்ந்திருக்கும் !