— என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் —
இன்று 11.11.2021 அமரர் பீ.எம்.புன்னியாமீன் அவர்களின் (11.11.1960-10.3.2016) அறுபத்தொராவது பிறந்த தினமாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
அமரர் பீ.எம். புன்னியாமீனின் அறிமுகம் எனக்குக் கிடைக்க வழியமைத்துத் தந்தவர், மலையக இலக்கியவாதியும், ‘கொழுந்து’ சஞ்சிகையின் ஆசிரியருமான அந்தனி ஜீவா அவர்களேயாவார். நூல்தேட்டம் முதலாவது தொகுதியை 2002இல் லண்டனில் பெரும்பணச்செலவில் அச்சிட்டும் அதனை பரவலாக விநியோகிக்க முடியாது நொந்துபோயிருந்த வேளையில், அடுத்த தொகுதியை இலங்கையில் தான் செய்வதென்ற தீர்மானத்தை எடுத்திருந்தேன். அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்பிலிருந்த அந்தனி ஜீவாவுடன் தொலைபேசியில் உரையாடினேன். எமது உரையாடல்களுக்கிடையே அவர் மலையகத்தில் கட்டுகஸ்தொட்டை பகுதியில் திரு புன்னியாமின் என்றொருவர் சிந்தனை வட்டம் என்றதொரு நிறுவனத்தை நடத்துகிறார். அவர் பதிப்புத்துறையில் மிகுந்த ஈடுபாடும் அனுபவமும் கொண்டவர் என்றும், அவருடன் கதைத்தால் எனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
அந்தனி ஜீவா, ஈழத்துப் படைப்பாளிகளில் சற்று வித்தியாசமானவராக இருந்தார். தன்னை வலிந்து என் நூல்தேட்டத் தொகுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, தன்னாலியன்ற வரையில் மலையக நுல்களை நூல்தேட்டத் தொகுப்பில் ஆவணப்படுத்துவதற்கு தனிமனிதனாக நின்று உதவி வந்ததுடன், பிற மலையக இலக்கிய நண்பர்களிடமும் சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் என்னைப்பற்றிச் சொல்லி எனது தொடர்பினை ஏற்படுத்தி வந்தார்.
பீ.எம்.புன்னியாமீன் என்ற ஒருவரைப் பற்றிக் கூறி அவர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டும் வகையில் கேள்விக் கொத்துக்களை விநியோகித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு, அவருடன் தொடர்பகொண்டால் முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் பற்றிய விரிவான தகவலும் எனக்குக் கிடைக்கும் என்ற மேலதிகமான செய்தியொன்றையும் அந்தனி ஜீவா தெரிவித்தார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. புன்னியாமீனின் தொலைபேசி இலக்கத்தையும் எனக்கு வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையிலேயே திரு. பீ.எம்.புன்னியாமீன் அவர்களுடன் 2003ம் ஆண்டின் தொடக்கத்தில் தொலைபேசியின் ஊடாகத் தொடர்பாடலை எற்படுத்திக்கொண்டேன். இருவரும் ஆவணமாக்கல் என்ற ஒரே பாதையில் தனிமனித நிறுவனங்களாக எமது கன்னிப் பயணத்தை அப்போது தான் தொடங்கியிருந்தோம். நான் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களைத்தான் ஆவணமாக்கும் பணியைத் தொடங்கியிருந்தேன். அவரோ ஈழத்து எழுத்தாளர்களின்- குறிப்பாக முஸ்லிம் எழுத்தாளர்களின் வாழ்வும் பணியும் பற்றிய பாரிய தகவல் திரட்டொன்றை உருவாக்கும் நோக்கில் அடிப்படைக் கேள்விக் கொத்தொன்றை பத்துப் பக்கத்தில் தயாரித்து விநியோகித்துக் கொண்டிருந்தார்.
2003 ஆரம்பத்தில் முளைவிட்ட எனது தொடர்பினைத் தன் மரணம் வரை சளைக்காமல், பேணிவந்தவர் சகோதரர் புன்னியாமீன். முதல் தொடர்பாடலிலிருந்து இறுதிக்காலம் வரை என்னை ‘பிரதர்’ என்று தான் அவர் விழித்தழைப்பார். எனது பெயரை என்றுமே குறிப்பிட்டு என்னுடன் கதைத்தாக எனக்கு நினைவில்லை. எப்போதும் ‘பிரதர்’ தான்.
இந்நிலையில் நூல்தேட்டத்தின் பத்தாவது தொகுதியின் வெளியீடும், எனது மணிவிழாவையொட்டி குமரன் புத்தக இல்லத்தினர் அயோத்தி நூலக சேவையுடன் இணைந்து வெளியிட்டிருந்த ‘மௌனமாய்ப் பொழியும் மாமழை’ என்ற சேவை நயப்பு மலரின் வெளியீடும் ஏககாலத்தில் கொழும்பில் ஏற்பாடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதையொட்டிய எனது இலங்கைப் பயணம் ஜுன் 2015இல் இடம்பெற்றிருந்தது.
அன்றைய நிலையில், எண்ணிக்கையில் நாற்பதைத் தாண்டிவிட்டிருந்த எனது நூல்களுக்கு வெளியீட்டு விழா என்று ஒரு வைபவத்தை வைப்பதை நீண்டகாலமாகத் தவிர்த்து வந்திருந்த என்னால் நண்பர்களின் இந்த முயற்சிக்கு இணங்க முடியவில்லை. அதற்குப் பதிலாக ஈழத்துப் படைப்பிலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு கலந்தரையாடல் நிகழ்வாக அதனை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினேன். இறுதியில் அவ்வாறே நடத்துவதென்று நிகழ்ச்சி அமைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டது. முன்கூட்டியே கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சங்கரப்பிள்ளை மண்டபத்தை நிகழ்வுக்காக ஒழுங்கு செய்துவிட்டு, நண்பர் புன்னியாமீனுக்கு தொலைபேசிமூலம் அந்தச் செய்தியைத் தெரிவித்தேன்.
நூல்தேட்டம் பணியில் என்னுடன் நீண்ட காலமாகக் கைகோர்த்துப் பயணித்தவர் அவர் அத்துடன் முதல் ஐந்து நூல்தேட்டம் தொகுதிகளும் வெளிவந்திருந்த நிலையில் தானாகவே முன்வந்து அந்த ஐந்து தொகுதிகளையும் சேர்த்து ஒரு ஆய்வினை மேற்கொண்டதுடன் அதனை தனது செலவிலேயே ‘நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்கவேண்டியதொரு பெருநதி’ என்ற நீண்ட கட்டுரையை விரிவான தகவல்களுடன் எழுதி தனி நூலாக அதனை வெளியிட்டவர். இவருக்குப் பின்னரே நூல்தேட்டம் பற்றிய ஆய்வுகளை பிறர் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். அவ்வகையில் இவ்விடயத்தில் புன்னியாமீனே முன்னோடியாகச் செயற்பட்டவர்.
அத்தகைய ஒருவரை இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கவிடுவதென்று விரும்பியிருந்தேன். தான் தலைமை தாங்கும் விடயத்தில் ஆரம்பம் முதலே அவர் விரும்பியிருக்கவில்லை. அவரது நீண்டகாலச் சுகவீனம் காரணமாக அவரை நான் வற்புறுத்தவும் தயங்கியிருந்தேன். போதாக்குறைக்கு அது இஸ்லாமியரின் நோன்புக்காலம் வேறு.
இந்நிலையிலேயே ‘நூல்தேட்டத்தின் அறிமுக நிகழ்வும், கலந்துரையாடலும்’ என்ற தலைப்பில் அன்றைய நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஞானம்- ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவர்களின் தலைமையில் 28.6.2015 அன்று அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் புன்னியாமீன் தனது துணைவியார் சகிதம் அங்கு பிரசன்னமாகியிருந்தார். அவருடன் ‘ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா’ நாயகன் உளவளவியலாளர் யூ.எல்.எம்.நௌபரும் நிகழ்ச்சியில் பங்கேற்று என்னுடன் கலந்துரையாடவென வருகை தந்திருந்தார். அது எனக்கு இரட்டிப்பு மகிழ்வைத் தந்திருந்தது.
நவமணி வார இதழின் முன்னாள் பிரதம ஆசிரியரும் எமது நண்பருமான அமரர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களின் அன்புக்குரிய இளையோர்களான என்.நஜ்முல் ஹூசைன், தாஸிம் அஹ்மட், நியாஸ் ஏ.ஸமட் ஆகியோரும் என்னைக் காணவும் உரையாடவும் அங்கு வந்திருந்தது என்னை நெகிழவைத்திருந்தது. அதில் ஒரு இளைஞர், தனது கருத்துரையின்போது, தனது ஆசான் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் உயிரோடிருந்தபோது, என்னையும் திரு புன்னியாமீன் அவர்களையும் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வந்திருந்தததாகவும், வாழ்நாளில் தாங்கள் ஒருதடவையேனும் இவர்கள் இருவரையும் சந்தித்து உரையாடவேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டு வந்ததாகவும், அல்ஹாஜ் எம்.பீ.எம்.அஸ்ஹர் குறிப்பிட்ட இரண்டு பேரையும் ஒரே அரங்கில் காணக் கிடைத்தது இரட்டை மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டார். அந்த இளைஞனின் வார்த்தை என் இதயத்தைத் தொட்டது.
அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் ‘மௌனமாய்ப் பொழியும் மாமழை’ இதழின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டதும் கலந்துரையாடலை தலைவர் ஆரம்பித்துவைத்தார். நூல்தேட்டம் பற்றிய விழிப்புணர்வினை எற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பல ஈழத்துப் படைப்பாளிகள் வந்திருந்தார்கள். நான் நண்பர் புன்னியாமீனை மேடைக்கு விடாப்பிடியாக அழைத்து என்னருகில் இருத்திக்கொண்டேன். சுகவீனம் காரணமாக அவரால் நீண்டதூரம் நடக்க முடியாத நிலையும், நீண்டநேரம் ஒரே இடத்தில் நிற்கமுடியாத நிலையும் காணப்பட்டது. தன் துணைவியார் திருமதி மஸீதா புன்னியாமீனுடன் வருகைதந்திருந்த புன்னியாமீன், தனது உரையில் நூல்தேட்டத்தைப் பற்றி அதிகம் கதைக்காமல் ஆன்மீகம் தொடர்பாகவும் மரணம் தொடர்பாகவும், நிகழ்ச்சியுடன் தொடர்பற்ற வகையில் கதைத்துக்கொண்டிருந்தமை எனக்கு விந்தையாக இருந்தது. திருமதி மஸீதா புன்னியாமின் அவர்கள் தனது உரையில் தெளிவாக நூல்தேட்டத்தின் வெற்றிக்கு எனது துணைவியார் தான் காரணம் என்பதை அழகுற எடுத்துரைத்தார்.
எனது நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் வேறு இலக்கிய நிகழ்வுகள் எதிலும் கலந்துகொண்டிருக்கவில்லை என்ற அறிகின்றேன். அவரிடம் அதற்கான தேக ஆரோக்கியம் இல்லாதிருக்கலாம்.
2015இல் எனது இலங்கைப் பயணத்தின்போது புன்னியாமீனிடம் செல்வதற்கு வழமைபோல முன்கூட்டியே ஒருநாளைத் தீர்மானித்து வைத்திருந்தேன். லண்டனிலிருந்து புறப்படும் முன்னரே அதற்காக கண்டிக்கான கடுகதிப் புகையிரதத்துக்கான பயணச்சீட்டையும் பதிவுசெய்திருந்தேன்.
எனது அவதானக் குறைவால் அதே தினத்தில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருந்த, ஆசி கந்தராஜா அவர்களின் ‘கறுத்தக் கொழும்பான்’ நூல்வெளியீட்டு விழாவில் சிறப்புரையொன்றினை ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற தலைப்பில் ஆற்றுவதற்கும், புன்னியாமீனிடம் செல்லத் தீர்மானித்திருந்த திகதியைப் பரீசிலனை செய்யாமலே லண்டனில் இருந்தபடியே ஞானம் ஆசிரியர் திரு தி.ஞானசேகரனிடம் ஒப்புதல் வழங்கியிருந்தேன். இலங்கைக்குச் சென்ற பின்னர் தான் அழைப்பிதழில் என் பெயரும் குறிக்கப்பட்டு விழா ஒழுங்குகள் அனைத்தும் நிறைவாகியிருந்ததை காணமுடிந்தது.
இதனை புன்னியாமீனிடம் பவ்வியமாக எடுத்துச்சொல்லி, மற்றொரு வசதியான நாளைக்குச் சென்று பார்க்கலாம் என்ற முடிவில் அவரிடம் எனது சிக்கலான நிலைமையைக் கூறியிருந்தேன். அவரும் எனது நிலைமையை நன்குணர்ந்து கொண்டவராக அமைதியாகினார். நான் எதிர்பார்த்த அந்த ‘வசதியான நாள்’ நான் லண்டன் பயணமாகும் வரை வரவேயில்லை. இனிமேல் என்றுமே அவரைக்காணும் வாய்ப்பு வரப்போவதில்லை என்று எண்ணும்போது எனது மனது குற்றவுணர்வால் கனக்கின்றது. அவர் இல்லாத உடத்தலவின்னையையோ, அவரது அன்பு சூழ்ந்த இல்லத்தையோ மீண்டும் ஒரு தடவை பார்த்துவர எனது மனம் இன்றுவரை தயங்குகின்றது. சுமார் மூன்று வாரங்கள் அவரது இல்லத்தில் தங்கியிருந்து குடும்பத்தினரின் இதயபூர்வமான உபசரிப்பை ஏற்று மகிழ்ந்த இனிய நினைவுகள் இன்றும் இனிமையாகவே மனதில் நிலைத்துவருகின்றன. அந்த நண்பன் இல்லாத வெறுமையானதொரு இல்லத்தை மீண்டும் கண்ணீருடன் தரிசிக்க நேர்ந்தால், இன்றுவரை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் அந்த இனிய நினைவுகள் கலைக்கப்பட்டுவிடுமோ என்ற கவலை இன்றும் என்னைத் தடுத்து வருகின்றது என்ற உண்மையை நேர்மையுடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.