………தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
இணக்க அரசியலாலும் தமிழரசுக்கட்சி எதனையும் சாதிக்கவில்லை
‘அப்புக்காத்து‘ அரசியல் என வர்ணிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் மிதவாத அரசியல் தலைமைகளினால் அவை கடைப்பிடித்த எதிர்ப்பு அரசியலால் குறிப்பாகத் தமிழரசுக் கட்சியினால் அது தோற்றம் பெற்ற 1949 இலிருந்து 1964 வரை சுமார் பதினைந்து ஆண்டுகள் எதனையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல் போன நிலையில் 1965 இல் இணக்க அரசியலுக்கு மாறியது.
சோல்பரி அரசியலமைப்பின் கீழான பாராளுமன்றத்தின் ஆறாவது பொதுத் தேர்தல் 22.03.1965 இல் நடைபெற்றது. 151 உறுப்பினர்களை உள்ளடக்கிய அப்போதைய பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 66 ஆசனங்களே கிடைத்தன. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 14 ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழரசுக் கட்சியின்ஆதரவை நாடியது. மாவட்ட சபைகளை உருவாக்கும் அம்சத்தை உள்ளடக்கியதும் இலங்கை அரசியல் வரலாற்றில் ‘டட்லி-செல்வா’ ஒப்பந்தமென அழைக்கப்பட்டதுமான உடன்படிக்கை 24.03.1965இல் கைச்சாத்தாகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியும் (14 உறுப்பினர்கள்) தமிழ்க் காங்கிரஸும் (03 உறுப்பினர்கள்) இணைந்த தேசிய அரசாங்கம் 27.03.1965 இல் அமைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் சார்பில் செனட்டர் மு.திருச்செல்வம் அவர்கள் ஸ்தலஸ்தாபன (உள்ளூராட்சி) அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஐதேக- தமிழரசுக் கட்சி உறவு 1969 ஏப்ரல் மாதம் வரை சுமார் நான்கு ஆண்டுகள் நீடித்தது.
இந்த நான்கு ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களைப் பொறுத்தவரை குறிப்பிடும்படியாகத் தமிழரசுக்கட்சி எதனையும் சாதிக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளூராட்சி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மு.திருச்செல்வம் விளங்கிய போதிலும் அப்போது கல்முனைத் தமிழர்களின் வேண்டுகோளான அப்போதைய கல்முனை நகர சபையைக் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரு தனித்தனி உள்ளூராட்சி அலகுகளாக (தெற்கே முஸ்லிம் பெரும்பான்மை அலகும் வடக்கே தமிழ்ப் பெரும்பான்மை அலகும்) வகுக்கும் விடயத்தைத்தானும் நிறைவேற்றி வைக்கவில்லை. இது நடைபெற்றிருந்தால் இன்று எரியும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு தரம் உயர்த்தும் விடயம் ஏற்பட்டிருக்கவும்மாட்டாது. முஸ்லிம் அரசியல்வாதிகளால் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகக் கல்முனைத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்புக்கு இழைக்கப்பட்ட ஆபத்துக்களும் தவிர்க்கப்பட்டிருக்கும். ‘தீர்க்கதரிசி’ எனவர்ணிக்கப்பட்ட தந்தை செல்வாவுக்கு இது புரியாமல் போய்விட்டது விந்தையே.
பின்னாளில் 1970-1977 காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்சங்களுக்கு இந்த 1965-1969 கால ஐக்கிய தேசியக் கட்சி- தமிழரசுக் கட்சி உறவும் ஒரு காரணமாக இருந்தது என்பதை இலங்கை அரசியலின் செல்நெறியைத் தெரிந்த ஒருவர் விளங்கிக் கொள்வது எளிதானதொரு விடயமே.
1949 இல் இருந்து 1965 வரை எதிர்ப்பு அரசியலால் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியாமல் எதிர்மறையான விளைவுகளையே அறுவடையாகத்தந்த தமிழரசுக்கட்சியின் ‘அப்புக்காத்து’ அரசியல் 1965-1969 காலப்பகுதியில் அது மேற்கொண்ட இணக்க அரசியலிலும் உருப்படியாக எதனையும் சாதிக்காது தனது அரசியல் கையாலாகாத்தனத்தையே நிரூபித்தது.
இதனை ஒப்பீட்டு ரீதியாக விளக்குதல் தகும் என எண்ணுகின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம் எச் அஷ்ரப் தலைமையில் ஓர் அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டது 1988இல்தான் (11.02.1988)
விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் முதலாவதாக நடைபெற்ற 1989 (15.02.1989) பாராளுமன்றப் பொதுத்தேர்தலில்தான் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை) அஷ்ரப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிறார். அப்போது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அவர்கள் 19.12.1988 இல் நடைபெற்ற இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார். பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சி எதிர்க் கட்சியில்.
1978இல் ஜே ஆர் ஜெயவர்தனா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பில் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ்தேர்தல் மாவட்டமொன்றில் போட்டியிடும் அரசியல்கட்சி அல்லது சுயேச்சைக் குழுவொன்று ஆசனங்களைப் பெறும் தகுதியை அடைவதற்கான வெட்டுப்புள்ளி 12% ஆகவிருந்தது. அப்படியாயின் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை இனமொன்றைப் அபி ரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆசனமொன்றைப் பெற்றுக்கொள்வது மிகமிக அரிது. பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஜே ஆர் ஜெயவர்தன அவர்கள் கையாண்ட மறைமுக நடவடிக்கையே இது. அஷ்ரப் எதிர்க் கட்சியில் இருந்த போதிலும் ஜனாதிபதி பிரேமதாசா அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட நல்லுறவின் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் அரசியல் பேரம் பேசல் மூலம் காய்களை நகர்த்தி வெட்டுப் புள்ளியை 5% ஆக்குவதற்கான திருத்தத்தைத் தேர்தல்கள் சட்டத்திற்குக்கொணர்ந்து நிறைவேற்ற வைத்தார். இது இலங்கை முஸ்லிம்களுக்கு அவர் பெற்றுக் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதனைச் சாதிப்பதற்கு அவர் ‘போர்க்கோலம்’ பூணவில்லை. சத்தியாக்கிரகப் போராட்டங்களோ ஆர்பாட்டங்களோ நடத்தவில்லை. பெரிதாகப் பத்திரிகையில் அறிக்கை விடவில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானம் போல் மகாநாடு கூடித்தீர்மானம் எடுக்கவில்லை. எழுத்தில் ஒப்பந்தங்கள் எதுவும் செய்யவில்லை. யதார்த்த பூர்வமாக உகந்த அணுகுமுறையைக் கையாண்டு தண்ணீருக்குள்ளாலேயே நெருப்பைக் கொண்டுசெல்வது போல் ‘சிலுசிலுப்பின்றி’ப் பலகாரம் சுட்டுமுடித்த கணக்கில் காரியம் சாதித்தார்.
பின் 1994ஆம் ஆண்டு (16.08.1994) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்டி இரண்டாம் தடவையாகப் பாராளுமன்றம் செல்கின்றார். 16.08.1994 இல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா உருவாக்கியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதான கட்சியாகக்கொண்ட கூட்டான பொதுஜன ஐக்கிய முன்னணி 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில்105 ஆசனங்களையே வெற்றியீட்டியிருந்தது.
ஆனால் இந்த 105 உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 07 உறுப்பினர்களையும் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் தெரிவான பெ.சந்திரசேகரனையும் சேர்த்துக் கொண்டு யாழ் மாவட்டத்தில் தெரிவான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியின் 09 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று மொத்தம் 113 உறுப்பினர்களுடன் அதாவது ஒரேயொரு பெரும்பான்மையுடன் பிரதமர் சந்திரிகா தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்தது. அஷ்ரப் அமைச்சராகவும் ஆனார். பின்னர் 09.11.1994 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வெற்றியீட்டி ஜனாதிபதியாகிறார்.
அஷ்ரப் அமைச்சராகப் பதவி வகித்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் (1994-2000) தென்கிழக்குப் பல்கலைக்கழகம்- ஒலுவில் துறைமுகம்- மற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பு- பெருந்தொகையான புனர்நிர்மாண புனர்வாழ்வுக் கொடுப்பனவுகள்- நட்ட ஈடுகள்- முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகுகளின் உருவாக்கம்- முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுகளைத் தரம் உயர்த்தல்- முஸ்லிம் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கான பௌதீக வளங்கள் உட்படப் பல உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றைத் தான் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுத்து அவர்களைச் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக வலுப்படுத்தினார். அதேவேளை ‘தென்கிழக்கு அலகு’ எனும் முஸ்லிம் பெரும்பான்மைத் தனி மாகாணசபைக் கோரிக்கையையும் அரசியல் அரங்கிலே முன்வைக்க அவர் தவறவில்லை. அபிவிருத்தி அரசியலையும் உரிமை அரசியலையும் சமாந்தரமாக அவர் கொண்டுசென்றார். அதற்கான மூலோபாயங்களை வகுத்து அவர் செயற்பட்டார். அதில் தவறில்ல. தனது சமூகம் சார்ந்த நலன்களுக்காகவே அவர் அரசியல் செய்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளிடம் மூலோபாயங்களை வகுத்துச் செயற்படும் அறிவுபூர்வமான அரசியல் செல்நெறி இன்றும் கூட இல்லை.
ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் உண்மையிலேயே பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அர்த்தமுள்ள விதத்தில் அரசியல் விருப்புடன் அமுல் செய்யவும்- இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வரவும் உளமார விரும்பிய இந்நாட்டின் ஒரேயொரு சிங்கள அரசியல் தலைவர்.
ஆனால், புலிகளின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த முன்னாள் தமிழர்விடுதலைக் கூட்டணியும் பின்பு புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சந்திரிகா அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தவறியது.
சந்திரிகா அவர்கள் இரண்டாவது தடவையாகவும் 1999இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வென்று மொத்தம் பத்து வருடங்கள் (1994-2004) ஜனாதிபதியாகப் பதவிவகித்தார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவரது ஜனாதிபதிப் பதவிக்காலமே தமிழர்களுக்குச் சாதகமானதென்பது இலங்கை அரசியலை நுணுகி ஆராய்பவர்கள் அறிவர். ஆனால் இதை இரா.சம்பந்தனைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட முன்னாள் தமிழர்விடுதலைக் கூட்டணியும் பின் புலிகள் உருவாக்கிய அவரைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களின் நலன்களை முதன்மைப்படுத்தாது தன்னலம் நிறைந்த சுயலாபப் பாராளுமன்ற அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டதன் மூலம் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தன.
உண்மையில் அரசியல் ரீதியாக முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி 1994இல் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் ஒரே ஒரு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து (அமைச்சர் பதவிகளையும் பெற்றிருந்தால் ஆகவும் நல்லது) சந்திரிகா கொணர்ந்த அரசியல் தீர்வுப் பொதியைப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கவும் அல்லது ஆகக் குறைந்த பட்சம் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தையாவது முழுமையாக அமுல் செய்யவும் உதவியிருக்க வேண்டும்.
1994இல் ஜனாதிபதியாகிய திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா விஜய குமாரணதுங்கவின் அரசியல் பிரவேசம் 1993இல் மேல் மாகாண சபை முதலமைச்சராகவே நிகழ்ந்தது. இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் செய்வதிலும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக வழங்கி மாகாண அரசை வலுப்படுத்துவதிலும் திருமதி சந்திரிகா ஆர்வம் கொண்டிருந்தார். சந்திரிகா அவர்களுடன் சம்பந்தன் நெருக்கமானவராக இருந்தார். குண்டுதுளைக்காத வாகனமும் பத்திற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட பாதுகாப்பு அணியும் சம்பந்தரின் பாதுகாப்புக்கென சந்திரிகா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுமிருந்தது.
இக்காலத்திலாவது 1990இல் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவினால் கலைக்கப்பட்டு ஆளுநரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்த தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி சந்திரிகாவிடம் கோரிக்கை எதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்படவுமில்லை.
1990இலிருந்து ஆளுனரின் நேரடி நிர்வாகத்தின் கீழிருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு ஓர் இடைக்கால நிர்வாக சபையினை அரசியல் ரீதியாக ஏற்படுத்துவதற்கு சந்திரிகா தாமாகவே முன்வந்தபோதும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவு வழங்கவில்லை. காரணம், அப்போது பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைவிட (05) டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அதிக எண்ணிக்கையிலான (09) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த காரணத்தால் உத்தேச இடைக்கால நிர்வாக சபையில் ஈபிடிபி பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டிருப்பார்கள் என்பதும் மேற்குறிப்பிட்ட இடைக்கால நிர்வாக சபையின் தலைவராகத் தமிழர் விடுதலைக் கூட்டணி அல்லாத கலாநிதி கா.விக்னேஸ்வரனை நியமிக்க சந்திரிகா விரும்பியிருந்தார் என்பதுமாகும். தாங்கள் அதாவது தமது கட்சி அதிகாரத்தில் இல்லாத எதுவும் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடாது; கிடைக்க விடவும் கூடாது என்கின்ற மிகக் குறுகிய கட்சி அரசியல் மனப்பாங்கு தமிழர் விடுதலைக் கூட்டணியிடமும் தமிழரசுக் கட்சியிடமும் குடிகொண்டிருந்தது.
இந்த உத்தேச இடைக்கால நிர்வாக சபை அப்போது ஏற்படுத்தப்பட்டிருந்தால்- ஏற்படுவதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒத்துழைத்திருந்தால் பின்னாளில் 2007இல் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணசபை நிர்வாகங்களாக பிரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்திருக்கவும்கூடும்.
அதேபோன்று சந்திரிக்கா கொணர்ந்த “இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியம்” என அமைந்த அரசியல் தீர்வுப் பொதி பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்கு முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியும் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதியான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால் இன்று ‘சமஸ்டி’ அடிப்படையில் அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒற்றை மொழிவாரி மாகாண அலகும் உருவாகியிருக்கும். இதனைக் கெடுத்தது முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவர்களை இயக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமே. தானாக வந்த சீதேவியை (சந்திரிக்கா கொணர்ந்த அரசியல் தீர்வுப் பொதியை) தனது ஏகாதிபத்திய சார்புக் குணாம்சம் காரணமாகப் புலிகளின் கைப்பொம்மையாக இருந்துகொண்டு முன்னாள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமும் இன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து காலால் உதைத்துத் தள்ளினார்.