–— கருணாகரன் —
(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. – ஆசிரியர்)
யாருக்கும் பகிரத் தயாரில்லாத நீதி குப்பையில் வீசப்பட்டுள்ளது
12
ஒரு சமூகமாகத் திரள்வதற்கான பிரக்ஞை உருவாகுவதற்கு அடிப்படையானது நிரந்தரத்தன்மையும் பொருளாதார நிலையுமாகும். அது இல்லையென்றால் அந்தப் பிரக்ஞை எழாது. எழுந்தாலும் அது சமூகப் பிரக்ஞையாக உருவாகாது. வடக்கு நோக்கி வந்த மலையக மக்களிடத்திலும் இந்தியாவிலிருந்து வெவ்வேறு நிலைகளில் வந்து வன்னியிலிருந்தோரிடத்திலும் (இவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையானோர் உதிரிகளாக யாழ்ப்பாணத்திலும் இருந்தனர். குறிப்பாக கேரளத் தொடர்புடையோர். இதைப்பற்றி இன்னொரு பகுதியில் தனியாகப் பார்க்க வேண்டும்) சமூகமாகத் திரள்வதற்கான அடிப்படைகள் நீண்டகாலமாக உருவாகவில்லை. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அப்படியானதொரு சிந்தனையோ எண்ணமோ உருவாகவில்லை.
இதனால் இவர்கள் பெருவாரியாக வாழ்ந்தாலும் உதிரிகளைப்போலவே இருந்தனர். உதிரிகளை அல்லது உதிரி நிலையை எவரும் இலகுவாகக் கையாள முடியும். எத்தகைய பாதிப்புகளோ அநீதியோ இழப்புகளோ நேர்ந்தாலும் அதை எதிர்க்கவும் அதற்காகக் குரல் கொடுக்கவும் உதிரித்தன்மை இடமளிக்காது.
இந்தத்தன்மை இவர்களை மிகப் பாதிப்புக்குள்ளாக்கியது. பொருளாதாரச் சுரண்டல் தொடக்கம் பாலியற் சுரண்டல் வரையில் இந்தப் பாதிப்பு நீண்டது. இது இவ்வாறான நிலைமையில் உள்ள அத்தனை சமூகத்தினருக்கும் நேரும் பொது விதியாகும்.
சமூகமாகத் திரளக் கூடிய நிலையோ அதற்கான கூட்டுணர்வோ இருந்தால்தான் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் கிடைக்கும். மட்டுமல்ல அந்தக் கூட்டுணர்வு தமது அடையாளத்தைக் குறித்துச் சிந்திக்கவும் வைக்கும். இதற்கு இரண்டு அடிப்படைகள் அவசியமானவை. ஒன்று நிரந்தரக் குடியிருப்பும் அதனூடான பொருளாதார வளர்ச்சியும் வேண்டும். மேலும் இது உண்டாக்கும் சமூக வளர்ச்சியாகும். அதாவது ஒரு மத்தியதர வர்க்க வளர்ச்சி இதற்குத் தேவை. ஆனால் இதை அடிநிலையில் உள்ள மக்கள் எட்டுவது எளிதானதல்ல. இரண்டாவது, இவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய அரசியற் சக்திகள் அல்லது தொழிற்சங்கங்கள். இது இவர்களுக்குக் கிட்டவில்லை.
ஆக இந்த இரண்டு அடிப்படை வலுக்களும் இல்லாத நிலையில் உதிரி மக்களாகவே இவர்கள் வாழ வேண்டியதாயிற்று. ஆனால் இவர்களை ஒரு சமூகமாகவே அடையாளம் கண்டு பிற சமூகத்தினர் நடத்தினர். இது ஒரு சுவாரசியமான – ஆனால் துயரமான முரணாகும்.
தம்மிலிருந்து வேறுபடுத்திக் கொள்வதற்கு இவர்களை ஒரு தனிச் சமூகத்தினராக நோக்கியவர்கள் மறுபக்கத்தில் இவர்களை ஒரு சமூகத்தினர் என்ற வகையில் அவர்களுக்குரிய அடிப்படைத் தகுதிகளான அரசியல் பெறுமானத்தையும் சமூகப் பண்பாட்டு வலுக்களையும் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. அதாவது இவர்களைத் தமக்குப் பயன்படுத்துவதற்கும் தமக்குக் கீழே வைத்துக் கொள்வதற்கும் விரும்பினார்களே தவிர, சக மனிதர்களாக அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை.
இதனால்தான் சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக – இரண்டு மூன்று தலைமுறைகளாக – இவர்கள் எந்த அடையாளத்தையும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்க வேண்டியிருந்தது.
கூலிகளாக இருந்த மக்களை கிறிஸ்தவ அமைப்புகளும் இயக்கங்களுமே மெல்ல மெல்ல அடுத்த கட்ட நிலைக்கு உயர்த்தின எனலாம். ஆனால் இதில் கிறிஸ்தவ அமைப்புகள் இந்த மக்களை மதம் மாற்றிய சம்பங்களும் நிறைய நடந்துள்ளது. வன்னியில் உள்ள கிறிஸ்தவக் குடியிருப்புகளை நோக்கினால் இந்த உண்மை புரியும். குறிப்பாக புதிய கிறிஸ்தவக் கிராமங்கள் இந்த வகையானவை. ஆரோக்கிய புரம்,சமாதான புரம், அமெதி நகர் என்ற பெயர்களே இதற்கு அடையாளம். ஆனாலும் இதைத் தவிர்க்கவும் முடியாத நிலை இருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இது ஒரு அடையாள அழிப்பு. இது ஒரு வன்முறை. இது ஒரு தந்திரோபாயச் செயல் என இன்று யாரும் இதைப்பற்றிக் கூற முற்படலாம். ஆனால் இந்த மக்களுக்கு ஒரு சிறிய வீட்டையும் (உண்மையிலேயே இந்த வீடுகள் மிகச் சிறியவையே) ஒரு சிறு துண்டு நிலத்தையும் (இந்த நிலமும் மிகமிகச் சிறியதே. ஆகக் கூடியது கால் ஏக்கர் நிலம் மட்டுமே) இந்த அமைப்புகள் வழங்கின. இதில் கூடுதலான ஆர்வம் காட்டியவை தென்னிந்திய திருச்சபை தொடக்கம் றோமன் கத்தோலிக்கம் அல்லாத பிற கிறிஸ்தவப் பிரிவுகளேயாகும்.
இவை இந்த மக்களின் கல்வியில் கூடுதலான அக்கறையைக் காட்டின. இன்று இந்தச் சபைகளின் போதகர்களாக இந்தப் பிரதேசங்களில் இருப்பவர்களில் அநேகர் இந்த மக்களில் இருந்து உருவாகியவர்களே. அதைப்போல ஏனையவர்கள் படித்து பிற துறைகளில் மிளிரத் தொடங்கினர். இது 1990க்குப் பின்னரே ஓரளவுக்கு நிகழத் தொடங்கியது.
1958 இல் வன்னியை நோக்கி வந்த இந்த மக்களிலிருந்து 1990களில்தான் அங்குமிங்குமாக அடையாளம் தெரியக் கூடிய ஆளுமைகள் மேற்கிளம்பத் தொடங்கினர். இவர்கள் வளர்ச்சியடைய மேலும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் தேவைப்பட்டது. அதற்குள் இவர்கள் பட்ட சிரமங்களும் சந்தித்த அவமானங்களும் சாதாரணமானதல்ல. இன்றும் இவர்களுக்குப் பெரும் சவால் உண்டு. இதைக் கடக்க முடியாமலே உள்ளனர். இதுதான் பேரவலம்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத் துயரத்துக்குப் பிறகு கடுமையான சிரமத்தின் மத்தியில் படித்து முன்னேறினாலும் பிற தொழில்களாலும் உழைப்பினாலும் வளர்ச்சியடைந்தாலும் அதை அங்கீகரிப்பதற்கு தமிழ்ச்சமூகத்தின் மனதில் இடமில்லை. இன்னும் இந்த நீதி மறுப்புத் தொடர்கிறது. இதனால்தான் நீதியைக் குப்பையிலே போட்டு விட்டு வேறு எதையோவெல்லாம் எடுத்து வைத்திருக்கிறோம் என்கிறேன். நீதியைக் குப்பையில் போட்டு விட்டால் மிஞ்சுவது என்ன? அதற்குப் பிறகு எப்படிச் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியும்?சமூக நீதியையும் ஜனநாயகத்தையும் எவ்வாறு எதிர்பார்ப்பது?
இந்தச் சந்தர்ப்பத்திலும் தவிர்க்க முடியாமல் நாம் இயக்கங்களையே இங்கும் குறிப்பிட வேண்டியிருந்தது. இந்த மக்களை அனைத்துச் சுரண்டல்களில் இருந்தும் மீட்டது இயக்கங்கள்தான். அது முற்று முழுதான மீட்பு நடவடிக்கை என்று சொல்லமுடியாது விட்டாலும் சிறுவர் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதையும் பாலியல் ரீதியான சுரண்டல்களையும் இயக்கங்களின் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தினரால் மேற்கொள்ள முடியவில்லை. இவை இரண்டுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானோருக்கு நிரந்தரக் குடியிருப்புக்கான நிலம் கிடைத்த பின்பு விரைவான சமூக முன்னேற்றம் ஏற்பட்டது. விரைவான சமூக முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்போது தாம் ஒரு தனிச்சமூகத்தினர் என்ற உணர்வுந்தலுக்குள்ளாகினர். ஆனால் இந்த வளர்ச்சியில் ஏற்படக் கூடிய சிக்கல்களும் உருவாகின. பலவகையான சிந்தனைப் போக்குகளும் நிலைப்பாடுகளும் உருவாகின. தாம் ஒரு சமூகத்தினர் என்றாலும் அதற்குள் எழுந்த அரசியல் உணர்வுகளும் சமூக நிலைப்பாடுகளும் பலவாகின. மத்தியதர வர்க்கத்தை நோக்கி வளர்ச்சியடையும் எந்தச் சமூகத்திலும் நிகழும் தளம்பலும் தடுமாற்றமும் இந்த மக்களிடமிருந்து வளர்ச்சியடைந்தோரிடத்தில் காணப்பட்டது. தம்மைத்தனித்து அடையாளம் காண்பதற்கும் அதை முன்னிறுத்துவதற்கும் பதிலாக வடக்கில் உள்ள பெருந்திரள் அரசியலுக்குள்ளும் அந்தச் சிந்தனைப் போக்கிற்குள்ளும் இவர்கள் சங்கமிக்கத் தொடங்கினர். சரியாகச் சொன்னால் கரையத் தொடங்கினர், ஆனால் எப்படித்தான் சங்கமித்தாலும் கரைந்தாலும் இவர்களைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டு வெளியே நிறுத்தி வைத்தது வடக்குச் சமூகம்.
(தொடரும்)