— படுவான் பாலகன் —
இயற்கையோடு இணைந்து, இயற்கையில் கிடைத்தவற்றை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த மனிதர். செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட அசேதன பசளைகளையும், நஞ்சு நாசினிகளையும் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். விரைவான வளர்ச்சி, குறைவான காலப்பகுதி என்ற எண்ணத்தை மனதிலே கொண்டு செயற்பட்டனர். தமது ஆரோக்கியத்தின் வயதெல்லையையும் இன்று குறைத்துக் கொண்டிருக்கின்றனர். 80 வயது தொடக்கம் 90 வயதில் மரணித்தகாலம் கடந்து 50 வயதினை கடப்பதே சந்தேகமாவிட்டது.
இவ்வாறானதொரு காலச்சூழலில், இலங்கை நாட்டினை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தற்போதைய அரசாங்கம், இயற்கை உரத்தினையே முன்னுரிமைப்படுத்தி வருகின்றது. இதற்கெதிராக தீவெங்கும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் அரசாங்கத்தின் திட்டம் சரியானதா? விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா? என்கின்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்திருக்கின்றன.
இயற்கையை நேசிக்கின்ற, இயற்கையோடு வாழ நினைகின்றவர்கள் இயற்கை விவசாயத்தினையும் நேசிப்பர் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.
அசேதன உரம் இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்பு, இயற்கை முறையிலான விவசாயத்தினையே விவசாயிகள் இலங்கைத் தீவிலே மேற்கொண்டனர். இதன் மூலமாக நஞ்சற்ற உணவினை மக்கள் உட்கொண்டனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள, ஆரோக்கியமான சமூகம் உருவாகியது. துரதிஸ்டம், அசேதன உரத்தினை இறக்குமதி செய்ததன் விளைவாக பயிர்கள் குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சியைப் பெற்றதுடன், பயிர்களும் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகின. இதனால் இதனை கட்டுப்படுத்த கிருமிநாசினிகளை விசுறும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். அறுவடைக்கு ஒருசில நாட்களுக்கு முன்பும் இவ்வாறான நஞ்சு நாசினிகளை விசுறும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால் நஞ்சுகலந்த உணவுகளை மக்கள் உண்ணவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காட்டுப்பசளைகளையும், சேதன பசளைகளையும் பயன்படுத்தாமல் விட்டதினாலும், மண்புழுபோன்ற நன்மை தரு விவசாய புழுக்களை அழித்தமையினாலும், இன்று விவசாய நிலங்கள் பசளைகள் அற்ற, செயற்கை உரங்களுக்கு பழக்கமடைந்தவையாக மாறியிருக்கின்றன. இலங்கை நாட்டிற்கே உரிய நெல்லினங்கள் இல்லாமல் போயிருக்கின்றன.
குறிப்பாக நாட்டுக்கோழிகள் மிகமிக குறைவடைந்து ப்றைலர் கோழிகள் அதிகம் சந்தைக்கு வந்த நிலைபோல நாட்டினங்கள் மிகமிக குறைந்து, குறைந்த காலப்பகுதிகளைக் கொண்ட நெல்லினங்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால் புதிய இனங்கள் நோய்த்தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவதுடன், வரட்சிக்கு ஈடுகொடுக்காத நிலைமையும் உள்ளது. ஆனால் நாட்டினங்கள் எதற்கும் தாக்குபிடிக்கும் சக்தியும், மருத்துவக்குணங்கள் நிறைந்தவையாகும்.
விவசாய நிலங்கள் அசேதன உரத்திற்கு பழக்கமடைந்து இருப்பதினாலும், நாட்டினங்கள் இல்லாமல் போயிருப்பதினாலும் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் சேதனப்பசளைகளை பயன்படுத்தி ஈடுபடுவதற்கு அச்சப்படுகின்றனர். நோய் தாக்கத்தினால் வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுவிடுமோ? என்றும் சிந்திக்கின்றனர். விவசாயத்தினையே வாழ்வாதாரமாக கொண்டு, அதற்காக கடன்பெற்று விவசாயத்தில் ஈடுபடுவதனால், உரிய விளைச்சல் இல்லாத போது தமக்கேற்படும் சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வதென தெரியாது புலம்புகின்றனர்.
இயற்கை விவசாயம் எதிர்காலத்திற்கு தேவை என்பதனை உணர்ந்து கொண்டாலும், நீண்ட காலமாக அசேதன பசளைப்பயன்பாட்டில் மேற்கொண்ட “விவசாயத்தை ஒரே நாளில் எவ்வாறு சேதனப்பயன்பாட்டில் மேற்கொள்வது?” என்ற விவசாயிகளின் கருத்தை வெறுமனே விட்டுச் சென்றுவிட முடியாது. ஏனெனில் பொருளாதார ரீதியான பாதிப்பினை எதிர்கொள்கின்றவர்கள் அவர்களே. இயற்கை விவசாயத்தினை ஏற்படுத்துவதற்கு முன்பு, விவசாய நிலங்களை சேதனைப்பசளைகள் கொண்ட நிலமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கலாம், முழுமையாக சேதன பசளை பயன்பாட்டை அமுல்படுத்தாமல், குறிப்பிட்ட வீதங்களாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துச் சென்றிருக்கலாம். தற்போதைய சேதனைப்பசளை பயன்பாட்டில் மேற்கொள்ளும் விவசாய செய்கையில் நஸ்டம் ஏற்படுகின்ற போது, விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான திட்டத்தினை வகுக்க வேண்டும். அதேபோன்று எமது நாட்டிற்கே உரித்தான நெல்லினங்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமாக நாட்டில் எதிர்காலத்தில் முழுமையான இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த ஆரோக்கிய சமூகத்தினையும் உருவாக்க முடியும்.
விவசாயிகள் அசேதனப்பசளை இறக்குமதி செய்யவில்லை. இறக்குமதி செய்தவர்கள் ஆட்சியில் இருந்தவர்களே. ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களும் குறுகிய நோக்கத்துடன் திட்டங்களை வகுக்காது நீண்ட காலத்திட்டங்களையும், இயற்கையை பாதிக்காத வகையிலான திட்டங்களையும் அமுல்படுத்த வேண்டும்.