‘அப்புக்காத்து’ அரசியல் (சொல்லத்துணிந்தேன் – 96)

‘அப்புக்காத்து’ அரசியல் (சொல்லத்துணிந்தேன் – 96)

 தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றில் அதனது சாதனையாகப் பேசப்படுவது அக்கட்சி 1961இல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டமாகும். 

அப்போது பிரதமர் திருமதி.சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தது. 1960 நவம்பர் மாத இறுதியில் நீதியமைச்சர் சாம்.பி.சி.பெர்னான்டோ நீதிமன்ற மொழிச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இலங்கை முழுவதும் நீதிமன்ற மொழியாகச் சிங்களமே இருக்கும் என இச்சட்டமூலம் இயம்பியது. இச்சட்டமூலம் 1960 டிசம்பர் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் நீதிமன்ற மொழியாக இருக்கவேண்டுமென்று முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு டிசம்பர் 31ஆம் திகதி இச்சட்டமூலம் நிறைவேறியது. 

அதற்கு முன்பு இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பகிஷ்கரித்திருந்தனர். அதற்கு முன்னர் தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தமிழ் மொழி உரிமைகள் சம்பந்தமாகவும் 1956-ல் நிறைவேற்றப்பட்ட அரசகரும மொழிச்சட்டத்தினால் பாதிப்புற்ற தமிழ் அரசாங்க ஊழியர்களின் பிரச்சனை சம்பந்தமாகவும் 1960 நவம்பர் முற்பகுதியில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் அரசாங்கத்துடன் இனிப் பேசப்போவதில்லையென்ற முடிவை 1960 டிசம்பர் 04ஆம் திகதி மட்டக்களப்பில் கூடிய தமிழரசுக்கட்சியின் செயற்குழு எடுத்துமிருந்தது. இந்தப் பின்னணியில்தான் இந்நீதிமன்ற மொழிச் சட்டமூலம் 1960 டிசம்பர் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

1961 ஜனவரி 22இல் யாழ்ப்பாணத்தில் எஸ்.எம்.இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் ஏழாவது மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு அலுவல்களை ஸ்தம்பிக்கச் செய்வதன் மூலம் சிங்களம் மட்டும் மொழி உபயோகத்திற்கு ஒத்துழைக்காது எதிர்ப்புக் காட்டுவதற்காகக் கச்சேரி வாயில்களை மறித்துச் சத்தியாக்கிரகம் பண்ண முடிவாயிற்று. 

இதன்படி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுத் தொண்டர்கள் யாழ்ப்பாணக் கச்சேரி வாயில்களை மறித்து 1961 பிப்ரவரி 20ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துவைத்தனர். தொடர்ந்து மட்டக்களப்பு (27.02.1961), திருகோணமலை (04.03.1961), மன்னார், வவுனியா மாவட்டக் கச்சேரிகளுக்கும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்கப்பட்டது. அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், சமசமாஜக் கட்சிகள் இப்போராட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றின. சுமார் இரண்டு மாதங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு அலுவல்கள் ஸ்தம்பிதம் அடைந்தன. 

இலங்கையில் தமிழரசுக் கட்சியினதும் தமிழர்களினதும் அரசியல் வரலாற்றில் மேற்கொள்ளப பெற்ற பாரிய வெகுஜனப் போராட்டம் இதுவெனப் பதிவாகியுள்ளது. இப்போராட்டத்தின் முக்கியத்துவம் உண்மையில் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டிய விடயமே. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய வெகுஜனப் போராட்டம் இது என்ற வகையில், தமிழரசுக்கட்சியின் வர்க்கக் குணாம்சம்களுக்கும் அப்பால், தமிழரசுக் கட்சியின் சாதனையென்று கூறப்படுவதில் நியாயமுண்டு. 

போராட்டத்தை திசைமாற்றிய தவறுகள் 

ஆனாலும், இப்போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட சில தவறான நடவடிக்கைகள் போராட்டத்தைத் திசை மாற்றின. 1961 ஏப்ரல் 14 ஆம் திகதி தமிழரசுக் கட்சி வெளியிட்ட ‘தமிழரசு’ முத்திரையும் தொடர்ந்து யாழ்.குடா நாட்டின் வெவ்வேறு இடங்களில் தன்னிச்சையாக நடத்திய காணிக் கச்சேரிகளும் அரசாங்கத்திற்கும் சிங்கள சமூகத்திற்கும் தமிழரசுக்கட்சி தனி நாட்டை (தமிழரசு) அமைக்கப் போகின்றது என்ற அபிப்பிராயத்தை- சமிக்ஞையை வழங்கிற்று. உண்மையில் இந்த நடவடிக்கைகள் தமிழரசுக்கட்சியின் அதிகப் பிரசங்கித்தனமானது. 

ஏற்கெனவே, தமிழரசுக்கட்சியின் ‘சமஸ்டி’க் கோரிக்கையை நாட்டுப் பிரிவினைக்கான அடித்தளமாக அபிப்பிராயம் கொண்டிருந்த தென்னிலங்கைச் சிங்கள சமூகம் அதை உண்மையென எண்ணும் வகையில் இந்நடவடிக்கைகள் அமைந்தன. தமிழரசுக்கட்சி நாட்டுப் பிரிவினைக்கு எதிரானதென்றும் ‘சமஷ்டி’க் கோரிக்கை பிரிவினைக் கோரிக்கையல்ல என்றும் கூறிவந்த கூற்று கேள்விக்குள்ளானது. உண்மையில் சமஸ்டிக் கட்டமைப்பொன்றின் கீழ் முத்திரை வெளியிடல் மத்திய அரசுக்கென ஒதுக்கப்பட்ட விடயமாகும். தமிழரசுக் கட்சியின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக அறிவுப்பூர்வமானதல்ல. தமிழரசுக்கட்சி தமிழர்களை அரசியல் மயப்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி மயப்படுத்தியதே உண்மை. தமிழரசுக் கட்சியின் அன்றைய ‘அப்புக்காத்து’ மூளையின் அறுவடைதான் இந்த ‘தமிழரசு’ முத்திரை வெளியீடு. 

இந்த வெகுஜனப் போராட்டத்தின் விளைவு அரசாங்கம் 1961 ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தை இராணுவம் பொறுப்பேற்பதில் போய்முடிந்தது. 

உருப்படியான இந்த வெகுஜனப் போராட்டம் தமிழரசுக்கட்சியின் தவறான செயற்பாடுகளால் உருப்படியான எந்த நன்மைகளையும் பெற்றுத் தராது கைவிடப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டுப் பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். 1962 அக்டோபர் 04ஆம் திகதி தமிழரசுத் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசின் காலத்தில் நீதிமன்ற மொழி விவகாரம் சம்பந்தமாக ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக 1961இல் தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் இரு மாதங்கள் அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் தமிழ் மக்களை அணிதிரட்டி கச்சேரிகளின் வாயில்களை மறித்து நடத்திய இச்சத்தியாக்கிரகப் போராட்டம் அன்றிருந்த சூழ்நிலையில் மக்களை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்தி அரசாங்கத்தின் தமிழர்களுக்குப் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவசியமானதாக இருந்திருக்கலாம். எனவே இப்போராட்டம் முழுக்க முழுக்கத் தவறானது என்று சொல்வது இப்பத்தியின் நோக்கமல்ல. ஆனால் போராட்ட காலத்தில் வடக்கில் தன்னிச்சையான தபால் சேவையினையும் காணிக் கச்சேரிகளையும் தமிழரசுக் கட்சி நடத்திய செயற்பாடுகள் தமிழர்கள் இலங்கையைப் பிரித்து ‘தமிழரசு’ (தனிநாடு) அமைக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தைச் சிங்களவர்கள் மனதிலே ஏற்படுத்திற்று. ‘சமஸ்டி’ என்றால்’ தனிநாடு’ என்கின்ற தவறான கருத்தியல் சிங்களவர்களின் மனதில் எழுவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் ஊக்கிகளாக அமைந்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி- FEDERAL PARTY- என்றும் தமிழில் தமிழரசுக் கட்சியென்றும் அழைக்கப்பட்டமைகூட எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்திற்று. ‘தமிழரசு’ என்ற வார்த்தைப் பிரயோகம் சிங்கள மக்களுக்குத் தவறான சமிக்ஞையையே காட்டிற்று. தமிழ் அரசியல் தலைமைகள் தாய் நாடான இலங்கை நாட்டின் மீதான நேசிப்பையும் விசுவாசத்தையும் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. 

தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்திய சார்புக் குணாம்சத்திற்கும் அதன் பிற்போக்கு வாத அரசியலுக்கும் உதாரணம் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அரசு பிரித்தானியாவின் பொறுப்பிலிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இலங்கைக்குச் சொந்தமாக்கித் தேசிய மயப்படுத்தியதை தமிழரசுக் கட்சி எதிர்த்தது. 

இன்னுமொரு உதாரணம் 1960களிலே பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசின் காலத்தில் மத நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்த பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுத் தேசிய மயமாக்கியதைத் தமிழரசுக் கட்சி எதிர்த்தது. 

அன்றியும் தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளின்படி இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகத் – துக்க தினமாகத் தமிழர்கள் அனுஷ்டித்தமை தமிழ்-சிங்கள உறவை வளர்க்கவோ அவர்களிடையே நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பவோ உதவவில்லை. 

2012 ஜனவரியில் யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் காலஞ்சென்ற அப்துல்கலாம் அவர்கள் அங்கு அவர் தமிழ் மக்களுக்குச் சொல்லி மீண்டும் அதனைத் திருப்பிச் சொல்லச் சொன்ன வாக்கியம் என்னவெனில் “என்னுடைய இதயத்தில் எனது தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது.- MY NATIONAL FLAG FLIES IN MY HEART” என்பதாகும். தமிழர் அரசியல் தலைமை இது போன்ற கருத்தியலை ஒருபோதும் விசுவாசமாக வெளிப்படுத்தியதில்லை. 

இதனால் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தாய் நாடான இலங்கைக்கு எதிரானவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் வளர்வதற்குத் தமிழர்களின் அரசியல் தலைமை வழிவகுத்தது. இனப்பிரச்சினை கூர்மையடைவதற்கு பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களின் தமிழர் விரோத நடவடிக்கைகள் மட்டுமல்ல தமிழர் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களும் காரணமே. பௌத்த சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொள்வதற்குப் பழிக்குப் பழி என்ற மனோபாவத்துடன் தமிழர்களின் ஏகாதிபத்திய சார்பு அரசியல் தலைமை குறுந் தமிழ்த் தேசியவாதத்தைக் கையிலெடுத்தது. ஒரு ‘பிழை’க்குச் ‘சரி’தான் மருந்தாகுமே தவிர ‘பிழை’க்குப் ”பிழை’ மருந்தாகாது.  

மேற்கூறப்பட்ட 1961இல் தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக ஏற்பட்ட எதிர்மறையான விளைவொன்று குறித்தும் இங்கு சுட்டுதல் பொருத்தம். தற்போதுள்ள அம்பாறை மாவட்டம் அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழேயே இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியிலே 1959இல் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறைத் தேர்தல் தொகுதியாயும் உருவாக்கப்பட்டது. ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையின் கீழான கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் இலங்கையின் வேறு மாவட்டங்களிலிருந்து குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்காகவே இத்தொகுதி உருவாக்கப்பட்டிருந்தது. இத்தொகுதி மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழேயே இருந்தது. 1961 சத்தியாகிரகப் போராட்டத்தினால் மட்டக்களப்புக் கச்சேரி நிர்வாகம் முடக்கப்பட்ட காரணத்தால் அம்பாறைத் தொகுதியின் சிங்களவர்களுக்கு உகனை என்னுமிடத்தில் ‘மினி’ கச்சேரி ஒன்று உருவாக்கப்பட்டு பின் அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் மற்றும் கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியைத் துண்டாடி புதிய ‘அம்பாறை’ மாவட்டத்தையும் அம்பாறையில் கச்சேரி ஒன்றையும் நிறுவ அரசாங்கத்தைத் தூண்டிற்று. 1962இல் அம்பாறை மாவட்டம் உருவானது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக 1961ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகம் 1962இல் அம்பாறை மாவட்டம் உருவாக வழிவகுத்தது. அது அன்று உருவாகும் போது முஸ்லிம் பெரும்பான்மையாக இருந்தது. இன்று சிங்களப் பெரும்பான்மையாகிவிட்டது.  

1956இல் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அறிமுகம் செய்த ‘அரச கரும மொழி’ விடயம் ஒரு சிறு தொகையினரான தமிழ் அரசாங்க ஊழியர்களையும், 1962இல் பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க அறிமுகம் செய்த ‘நீதிமன்ற மொழி’ விடயம் அதனைவிடச் சிறுதொகையினரான தமிழ்ச் சட்டத்தரணிகளையுமே நேரடியாகப் பாதித்தது. எனவே ஒட்டுமொத்தத் தமிழ்மக்களின் பெயரில் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட 1956 காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும், 1961 வடக்கு கிழக்குச் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ‘பூர்ஸுவா’ அரசியல் – மேட்டுக்குடி அரசியல் ஒளிந்திருந்தது என்பதையும் ஊகித்து உணரலாம். இன்றுபோல் அன்றும் தமிழர் அரசியலைச் சட்டத்தரணிகளே ஆக்கிரமித்திருந்தார்கள். அதனால்தான் தமிழர் அரசியல் ‘அப்புக்காத்து’ அரசியல் என்று வர்ணிக்கப்பட்டது. 

அடிக்குறிப்பு: 

1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டுப் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அல்லாத சில பிரமுகர்களும் அடங்கியிருந்தனர். இவ்வாறு தடுப்புக்காவலில் இருந்தவர்கள் உடனடியாக விடுதலையாவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் இரு நிபந்தனைகளை விதித்தது. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகவும் வேண்டும். மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் என்பதே அந்நிபந்தனைகள். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் சேர்.கந்தையா வைத்தியநாதனும் ஒருவர். அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரல்ல. ஆனால் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். அதனால் அவர் விடுவிக்கப்படவில்லை. 

விடுவிக்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் அப்போது கல்முனைத் தொகுதியின் தமிழரசுக் கட்சிப்பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.சி.அஹமட். அவர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி அரசாங்கக் கட்சிக்குத் தாவியதால் விடுவிக்கப்பட்டார். மற்றையவர் இரா.சம்பந்தன். அவர் அப்போது தமிழரசுக்கட்சி உறுப்பினராக இல்லை. அப்படியானால் மன்னிப்புக் கேட்டதன் பேரில்தான் அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 

(II) திருகோணமலைத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த என்.ஆர்.ராஜவரோதயம் அவர்கள் 27.08.1963 அன்று காலமானார். அவரது மரணத்தால் பாராளுமன்ற ஆசனம் காலியான திருகோணமலைத் தொகுதிக்கு அப்போது அமுலிலிருந்த தேர்தல் சட்ட விதிகளின்படி இடைத்தேர்தல் நடைபெறவிருந்தது. 

இந்த இடைத்தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள் திருகோணமலைத் தொகுதிக்கு விஜயம் செய்தார். அவர் திருகோணமலைத் தொகுதிக்கு விஜயம் செய்தால் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் மூதூரில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியவருமான ஒருவரின் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இதனைத் தெரிந்து கொண்ட இரா.சம்பந்தன் இந்தச் சுகாதார வைத்திய அதிகாரியை அணுகித்தான் தந்தை செல்வாவைச் சந்திப்பதற்கு உதவும்படி கேட்டார். அந்தச் சுகாதார வைத்திய அதிகாரி இரா.சம்பந்தன் வந்து தந்தை செல்வாவை மூதூரில் தன் வாசஸ்தலத்தில் வைத்துச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து உதவினார். இரா.சம்பந்தன் தந்தை செல்வாவைச் சந்தித்ததன் நோக்கம் வரவிருந்த திருகோணமலைத் தொகுதியின் இடைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளராகத் தான் போட்டியிட விண்ணப்பம் செய்வதற்காகவே. ஆனால் தந்தை செல்வா இரா.சம்பந்தனின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டார். வந்த காரியம் தோல்வியில் முடிந்ததால் முகத்தில் சோகத்துடன் வெளியேறிய இரா.சம்பந்தனைச் சுட்டிக்காட்டித் தந்தை செல்வா இந்தச் சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகள் என்னவெனில் “I WILL NEVER EVER TRUST THAT MAN”. (அந்த நபரை நான் ஒருபோதும் எப்போதும் நம்ப மாட்டேன்) என்பதாகும். (தகவல்: கலாநிதி கா.விக்னேஸ்வரன்) 

இப்படிப்பட்ட சம்பந்தன்தான் பின்னாளில் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் விளங்க நேர்ந்தது தமிழர்களுடைய துரதிஸ்டத் ‘தலைவிதி’யாகும். 

(23.11.1963 அன்று நடைபெற்ற மேற்படி இடைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக எஸ்.எம்.மாணிக்கராஜா போட்டியிட்டு வெற்றியீட்டினார்) 

மேலும், இன்னுமொரு விடயத்தையும் இப்பத்தியில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அன்றிருந்த அரசியல் சூழ்நிலையில் தமிழரசுக்கட்சியின் ஐக்கியப்பட்ட அணியாகத் ‘தமிழர் கூட்டணி’ உருவாகுவதற்கான பிள்ளையார்சுழி 1971 பெப்ரவரி 07 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ஞானமூர்த்தி வீட்டில் நடந்த நான்கு தமிழ்க் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் வைத்து இடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதனைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துவதற்கான விசேட மாநாடொன்று 1972 மே 14ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்றது. திருகோணமலை நகரில் காளி கோயிலுக்கு முன்பாக உள்ள முற்றவெளியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பிலிருந்து சாம் தம்பிமுத்து மற்றும் அவரது மனைவி கலாமாணிக்கம், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் அவரது மனைவி சுகுணம் ஜோசப் ஆகியோருடன் இப்பத்தி எழுத்தாளராகிய நானும் சென்றிருந்தேன். அப்போது திருகோணமலைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகப் பா.நேமிநாதன் அவர்களும் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக அ.தங்கத்துரை அவர்களும் விளங்கினர். மாநாட்டு மேடையில் இரா.சம்பந்தன் காணப்படவேயில்லை. காரணம் அவர் அப்போது தமிழரசுக் கட்சியில் இல்லை. 

1977 தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் 1975ல் இருந்துதான் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியுடனும் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியுடனும் ஊடாடத் தொடங்கினார். ஆனாலும் தந்தை செல்வா உயிரோடு இருந்திருந்தால் (1977 தேர்தல் ஜூலை 21இல் நடைபெற்றது. தந்தை செல்வா 1977 ஏப்ரல் 26 ஆம் தேதி காலமாகிவிட்டார்). 1977 தேர்தலில் போட்டியிடுவதற்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் நியமனத்தைச் இரா.சம்பந்தனுக்கு வழங்கியிருக்கவே மாட்டார். ஆனால் தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னர் தமிழர்விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்களின் விருப்பப்படி இதை இரா.சம்பந்தனுக்குத் திருகோணமலைத் தொகுதி வேட்பாளர் நியமனத்தை  திருகோணமலை மாவட்டத் தமிழ் இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வழங்கினார். 

இதற்குக் காரணமாக அன்று பேசப்பட்ட விடயமென்னவெனில் தங்கத்துரையை அரசியலில் ஓரம் கட்டுவதற்கான அமிர்தலிங்கத்தின் தந்திரோபாயம் என்பதே. எனினும் தங்கத்துரை அவர்களை சம்பந்தன் அவர்களால் வெற்றி கொள்ளமுடியவில்லை. அவரின் கொலை மரணத்தின் பின்னரே இவரால் தலையெடுக்க முடிந்தது. 

1976இல் நடைபெற்ற தேர்தல்த் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒற்றை அங்கத்தவர் தொகுதியாகவும், புதிய ‘சேருவில’த் தொகுதி சிங்கள பெரும்பான்மைத் தொகுதியாகவும், திருகோணமலை தமிழ்ப் பெரும்பான்மைத் தொகுதியாகவும் உருவாக்கப்பட்டன. நியாயப்படி1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலைத் தொகுதிக்கான தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் நியமனம் 1970 இலிருந்து 1977 வரை பழைய மூதூர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய தங்கத்துரைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.