“ஜியாங் ரோங்” இன்  ‘’ஓநாய் குலச்சின்னம்’’

“ஜியாங் ரோங்” இன் ‘’ஓநாய் குலச்சின்னம்’’

  — அகரன் — 

அண்மையில்  பிரஞ்சு தொலைக்காட்சி கலிபோர்னிய வறட்சி பற்றிய விபரணத்தை வெளியிட்டது. அங்கு ஒர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல்போய்விட்டது. அப்பகுதி மக்கள் பெற்றோல் பங்கில் 15 டொலர் கட்டி வாரத்தில்  குளிக்கிறார்கள். ஒரு வயதான பெண்மணி கடந்த மாதம் 1000 டாலருக்கு தண்ணீர் வேண்டினேன் என்று கலங்கினார். அங்கு 2018இல் நீர் நிறைந்திருந்த ஏரியில் சிறுகோடுபோல தண்ணீர் இருக்கிறது. உலகின் வல்லரசு ஒன்றின் நிலத்தில் நடக்கும் கோரமான நிலை இது.  

அண்மையில் உலக நாடுகளின் சூழல் விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ‘’மனித நடவடிக்கைகள் ஆபத்தான நோயை பூமிக்கு வழங்கிவிட்டன. காலம் பிந்திவிட்டது. கடந்த பத்தாண்டுகளின் புவி வெப்பநிலை ஏற்றம் ஆபத்தின் கூக்குரல்’’ என்றது.  

கரியமில வாயுவை கட்டுப்படுத்த  நாடுகள் கூட்டம்விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்சீனா ஹைதரசன் குண்டை பரிசோதித்திருக்கிறது. மோசமான அதிகார வெறி இந்த பூமியை அழிப்பதை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆபத்தானவன்தான்.  

இப்படியான ஒரு நாளில்தான் ‘’ஓநாய் குலச்சின்னம்’’ என்ற நாவலை படித்தேன்.  

இந்த நாவல் ஜியாங் ரோங் என்பவரால் சீனமொழியில் 2004இல் வெளியிடப்பட்டது.  

இதை ஆங்கிலத்தில் படித்த திரு வெற்றிமாறன் இதை வெளியிடவே அதிர்வு என்ற பதிப்பகத்தை ஏற்படுத்தி சி.மோகன் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு 2012இல் தமிழில் வெளியாகியது.  

இச்சேதியே இந்த நாவலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். இதை படித்ததும் வளர்ச்சி என்ற சொல்லே வெறுப்பை தந்தது. இயற்கையை சிதைத்துவிட்டு எதை நாம் வளர்க்கப்போகிறோம்?அழிவையும், மரணங்களையும்தானே?  

** 

நாவல் மையங்கொள்வது மொங்கோலிய புல்வெளிகள் பற்றியது. சீன மறுமலர்ச்சியில் மாவோ கிராமங்களை வளர்க்க மாணவர்களை எங்கும் அனுப்புகிறார். அப்படித்தான் மொங்கோலிய புல்வெளி ஓலான் புலாக்கிற்கும் சீன மாணவர்கள் வருகிறார்கள். அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள். அதில் ஒரு மாணவன் ஜென்சின்.  

அவனுக்கு அந்த மக்கள் வாழ்வு பிடித்துப்போகிறது. மொங்கோலிய புல்வெளிகளின் உண்மையான ராஜா ஓநாய்கள்தான். ஓநாய்கள் தங்கள் மந்தைகளை கொன்றாலும், புல்வெளி நிலைத்திருக்க ஓநாய்கள் அவசியம் என்று அந்த மக்கள் விரும்புகிறார்கள். ஓநாய்களுக்கும்  கடவுளுக்கும் தொடர்பிருப்பதாகஅவர்கள் கருதுகிறார்கள். ஓநாய்கள் ஊளைஇடும்போது அவை வானத்தைப்பார்த்து கடவுளிடம் முறையிடுகின்றன. அதைப்பார்த்தே மனிதனும் வானத்தைப் பார்த்து வணங்க கற்றுக்கொண்டான் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  

ஒரு காலத்தில் பத்தாயிரம் மான்கள் கூட்டமாக அந்தப் புல்வெளியில் புல்மேயும். மான்களின் உயிர்ப்பெருக்கத்தை சமநிலையில் வைத்திருப்பவை ஓநாய்கள். அதைவிட எலிகள், ஒரான்குட்டான்கள், முயல்கள் என்று எல்லாவற்றையும் இயற்கை சமநிலை பேணி நிலைக்க வைத்திருப்பவை ஓநாய்கள். இறந்த விலங்குகளில் இருந்து கிருமிகள் வெளியேறாமல் எலும்புகளைத்தவிர எல்லாவற்றையும் உண்பதால் புல்வெளி சுத்தமாக இருக்கும். ஓநாய்கள் தங்கள் உடமையை தாக்கினாலும் அவற்றை மொங்கோலிய புல்வெளி மக்கள் குலதெய்வமாகவே பார்த்தார்கள்.  

இதைவிட ஓநாய்களின் சிறப்பியல்புகள் ஜென்னை வியப்பில் நிறுத்துகின்றன. தம் உணவுத்தேவைக்கு அதிகமாக அவை உயிர்களை கொல்லாதவை. யுத்ததந்திரங்களில் அவற்றை அடிக்க யாருமில்லை. தமக்கு சாதகமான நிலை வருமட்டும் பதுங்கி இருப்பவை. இரவில் பெரும் தாக்குதலை நடத்ததலைமை ஓநாயின் கட்டளைப்படி நகர்வதோடு தாக்குதலுக்கான புலனாய்வு நடவடிக்கையைக்கூட இரகசியமாக பல நாட்களின் முன்னே செய்பவை. மொங்கோலிய குதிரைகளின் வேகம் அதிகரித்ததற்கு ஓணாய்களே காரணம். இந்த நிலத்திலிருந்து செங்கிஸ்கான் என்ற மாபெரும் மனிதபோர் அலையை இந்த ஓநாய்களே ஏற்படுத்தி இருக்கும் என்பது இதில் இருந்து தெரிகிறது.  

இந்த நிலையில் ஓநாய் குகையில் ஓர் ஓநாய் குட்டியை எடுத்து ஜென் வளர்க்கிறான். ஒரு குழந்தையை தாய் வளர்ப்பதுபோல அவன் அக்கறை காட்டுகிறான். ஓநாய் வளர்க்க பல இடையூறுகள் வருகின்றன. நாய்களோடு சேர்த்து வளர்த்தாலும் அது ஓநாயாகவே வளர்கிறது. அதன் தனித்தன்மையை எந்த நிலையிலும் அது இழக்கவில்லை.  

இப்படியான நிலையில் /ஓநாய்கள் மந்தைகளை கொல்கின்றன. உற்பத்தியை பெருக்க விவசாய நிலமாக அவற்றை மாற்ற அரசு முயற்சிக்கிறது. /எல்லாவற்றுக்கும் ஓநாய்களை அழிக்க வேண்டும் என்று அதிகாரவர்க்கம் முடிவெடுக்கிறது. புல்வெளி முதியவர்களின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறது. ஓநாய்களை இராணுவம் சுட்டுக்கொல்கிறது. சீனர்கள் வருகிறார்கள். விவசாயம் வருகிறது.  

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு நடந்த வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. ஓநாய்கள் இல்லாததால் எலிகள் பெருகி நிலமெங்கும் ஓட்டை போட்டு வளைகள் வருகிறது. குதிரைகள் அந்த ஓட்டைகளில் கால்விட்டு கால் முறிகிறது. ஓநாய்களை அடுத்து மான்கள் வேட்டை நடக்கிறது. வெறும் 20 ஆண்டுகளில் புல்வெளி பாலை நிலம்போல் மாறுகிறது. அங்கு விவசாயம்கூடசெய்ய நீரற்றுப்போகிறது. ஆற்றில் மணல் மட்டும் அடையாளமாக கிடக்கிறது.  

இப்போது அந்த மண்வெளியில் இருந்து மணல்புயல் சீனாவின் பீஜிங் ஐ அடிக்கடி தாக்குகிறது.  

நாவலின் இறுதியில் வளர்த்த ஓநாயை தன்கையாலே கொல்லவேண்டி ஏற்படுகிறது. தன் குழந்தையை கொன்றதுபோல ஜென் துடிக்கின்றான்.  

இந்த நாவலில் புல்வெளியின் ஆன்மா போன்ற ஓர் முதியவர் வருகிறார் அவர் பில்ஜி. ஜென்னை தன் மகன்போல கருதி அந்த வாழ்வைகற்றுக் கொடுக்கிறார். அவர் புல் வெளிபற்றி கூறும் வார்த்தைகள் அதிர்வை தருபவை.  

« இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றயவை சிறிய உயிர். புல்லை தின்னும் ஜீவன்கள் இறைச்சி தின்னும் உயிர்களைவிட மோசமானவை. மான்களைவிட புல் இரக்கத்துக்குரியவை. மான்களுக்கு தாகம் எடுத்தால் அவை நதியை தேட முடியும். குளிர் எடுத்தால் மலையில் இதமான இடத்துக்கு நகரமுடியும். புல்? அது பெரிய உயிர். அதன் வேர்கள் அழமற்றவை. அதனால் ஓட முடியாது. எவரும் அவற்றின்மீது ஏறி மிதிக்கலாம், உண்ணலாம். அவை பூப்பதில்லை. தம் விதைகளை அவற்றால் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புற்களைவிட வேறேதும் இரக்கத்திற்குரியதல்ல » 

புல்வெளியை அழித்த சீனா இன்று அதன் பெறுபேற்றை அனுபவிக்கிறது.  

ஏரல் என்ற கடலை சோவியத் தின்றதையும், பாலைவனத்தை இன்று மெல்வதையும் பார்க்கிறோம்.  

அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல்! அந்த அரசாங்கமே காட்டை எரித்து விவசாய நிலத்தை ஏற்படுத்துகிறது. எல்லாம் வளர்ச்சிக்காக!!!  

இன்று வல்லமை நாடுகளிடம் 17000 அணுகுண்டுகள் சட்டப்படி இருக்கின்றன. அதைவிட வலிமைகூடிய நைடரஜன் குண்டுகள் வலம்வருகின்றன. இவை எல்லாம் எங்கு பயன்படுத்த காத்திருக்கின்றன ?   

அதற்கு முதல் ஒரு கேள்வி. பூமியில் நீரும், பிராணவாயுவும் இல்லாதபோது எந்த நாடு இருக்கும்?! யார் யாரை எதிர்ப்பார்கள்?  

« ஓநாய்கள் தம் பசியை மீறி உயிரை கொல்லாது, பிள்ளைத்தாச்சி விலங்கை கொல்லாது பிறந்த குட்டிகளை உண்ணாது» மனிதனைவிட எவ்வளவு மேலானவை?!!  

‘’ஓணாய் குலச்சின்னம்’’ இந்த நூற்றாண்டின் அவசிய நாவல்!!