போட்டிப் போராட்டங்களால் அன்றே சந்தி சிரிக்கச் செய்த தமிழ் தேசியக் கட்சிகள் (சொல்லத் துணிந்தேன்-95)

போட்டிப் போராட்டங்களால் அன்றே சந்தி சிரிக்கச் செய்த தமிழ் தேசியக் கட்சிகள் (சொல்லத் துணிந்தேன்-95)

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —  

எதிர்ப்பு அரசியல் எதனைச் சாதித்தது?:- 

தமிழரசுக் கட்சியின் கடந்தகால வரலாற்றினைப் புரட்டினால் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் என்ற பெயரில் அக்கட்சி மேற்கொண்ட வெகுஜன நடவடிக்கைகள் எல்லாமே ஆட்சியில் இருந்த சிங்கள அரசாங்கங்களையும் சிங்கள அரசியல் தலைவர்களையும் சிங்கள சமூகத்தையும் ஆத்திரம் ஊட்டுவதாகவும் தமிழ்மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவனவாகவுமே இருந்து வந்துள்ளமையைக் காணலாம். 

ஃ சோல்பரி ஆணைக்குழுவின் தலைவரும் சோல்பரி அரசியல் அமைப்பின் கீழான இலங்கையின் முதலாவது மகா தேசாதிபதியுமாகிய (GOVERNOR GENERAL) சோல்பரிப் பிரபுவின் யாழ்ப்பாண விஜயத்தைத் (1950 ஜனவரி) தமிழரசுக் கட்சி பகிஸ்கரித்தமை. ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டுப் பிரசுர வெளியீடு. 

ஃ பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது (1951 அக்டோபர்) அவரது விஜயத்தைப் பகிஷ்கரிக்கக் கோரித் தமிழரசுக் கட்சி கூட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தியமை. கறுப்புக் கொடி கட்டுதல் மட்டும் சுலோக அட்டைகளைக் காட்சிப்படுத்தல். 

ஃ பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவலையின் யாழ்ப்பாண விஜயத்தின் போது (1954) அவரது விஜயத்தைப் பகிஸ்கரித்துத் தமிழரசு வாலிப முன்னணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். 

ஃ யாழ்ப்பாணம் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் அழைப்பையேற்று யாழ்ப்பாணம் சென்ற பிரதியமைச்சர் எம்.பி. டி.சொய்சா (1957) யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிக் காருக்குள் ஏறியதும் அவரைச் செல்லவிடாது காரின் முன்னே தமிழரசுக்கட்சியினர் படுத்துத் தடுத்து அவரை மீண்டும் கொழும்புக்கு அடுத்த புகையிரதத்திலேயே திருப்பியமை. 

ஃ நிதியமைச்சர் ஸ்டான்லி டி.சொய்சாவின் தலைமையில் ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழு மன்னாருக்குச் சென்றிருந்தபோது (1957) கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தமை. 

இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. சிங்கள அரசியல் தலைவர்களினதும் சிங்கள மக்களினதும் தமிழ் மக்கள் மீதான வன்மம் அதிகரிக்க மட்டும்தான் இவை பங்களிப்புச் செய்தன. தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை அறிவுபூர்வமாக அரசியல் மயப்படுத்துவதற்குப் பதிலாகத் தமது கட்சியை வளர்ப்பதற்காக அவர்களை வெறுமனே அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி உணர்ச்சி மயப்படுத்தியது.  

அடுத்தது சிங்கள ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டம். இலங்கையில் பாவனையிலிருந்த எல்லா மோட்டார் வாகனங்களினதும் இலக்கத்தகடுகளில் அதுவரையிலிருந்த ‘சிலோன்’ (CEYLON) என்ற பெயரிலிருந்த ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்துகளாகப் பொறிக்கும் நடைமுறையை மாற்றி அவற்றிற்குப் பதிலாக சிங்கள ‘சிறீ’ எழுத்தைப் பாவிப்பதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பெற்று அதற்கான உத்தரவைப் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க 1956 டிசம்பரில் பிறப்பித்தார். இதனைத் தமிழரசுக் கட்சி எதிர்த்தது. 

அறிவு பூர்வமாகச் சிந்தித்தால் இது பாரியதமிழர் விரோத நடவடிக்கையல்ல. இதனை நிதானமாகக் கையாளுவதிலோ- சிங்கள முற்போக்குச் சக்திகளின் ஊடாக மாற்று யோசனையை அரசாங்கத்திடம் முன்வைப்பதிலோ தமிழரசுக் கட்சிக்கு அக்கறை இருக்கவில்லை. சிங்கள ‘சிறீ’ எழுத்துப் பொறித்த வாகன இலக்கத் தகடுகளைத் தமிழ் மொழிக்கு வந்த பெரும் ஆபத்தாக ஊதிப் பெருப்பித்துக் காட்டியது தமிழரசுக் கட்சி. இது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பது இன்று எண்ணிப்பார்க்கத் தெரிகிறது. இன்று சிங்கள ‘சிறீ’ உம் இல்லை; தமிழ்(?) ‘ஸ்ரீ’ உம் இல்லை. 

1957 ஜனவரி 01ஆம் திகதி சிங்கள ‘சிறீ’ எழுத்துப் பொறிக்கப்பட்ட இலக்கத்தகடுகளுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட பஸ்களில் சிங்கள ‘சிறீ’ எழுத்தை அமிர்தலிங்கம் தலைமையிலான இளைஞர் கோஷ்டி தார்பூசி அழித்தது. இச்செய்கை தென் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான ‘தீ’ யை மூட்டியது. 

இந்தச் சிங்கள ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டம் பயனற்ற-அர்த்தமற்ற- தவறான போராட்டம் என்பதை இன்று வரலாறு மெய்ப்பித்துள்ளது. இப்போராட்டம் தமிழரசுக்கட்சியின் எந்தக் குழு மட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டதொன்றல்ல. அமிர்தலிங்கம் தன்னிச்சையாக மேற்கொண்ட முடிவு. ‘தீர்க்கதரிசி’ எனக் கொண்டாடப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள் இதன் பின் விளைவுகளைப் பற்றி யோசியாது இப்போராட்டத்தைப் பின்னர் எவ்வாறு அங்கீகரித்தார் என்பது புரியாததொன்றே. தமிழர்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாகத் தென்னிலங்கையில் தமிழ் எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கிளம்பின. 

இதைப் பற்றியெல்லாம் கவனத்தில் எடுக்காத தமிழரசுக்கட்சி 1957 ஜனவரி 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூட்டிய பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனவரி 19இல் இருந்து சிங்கள ‘சிறீ’ எதிர்ப்பு போராட்டத்தை ஓர் இயக்கமாக ஆரம்பித்து நடத்தத் தீர்மானித்தது. அதற்கமைய 1957 ஜனவரி 19இல் சிங்கள ‘சிறீ’ எழுத்தை அழிக்கும் இயக்கத்தை தமிழரசுக்கட்சி யாழ்ப்பாணம், மன்னார். வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு என வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்ட தலைநகர்களிலும் ஆரம்பித்தது. முதல்நாள் போராட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் கலந்து கொண்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஊர்வலத்தில் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் உட்பட ஏனைய தமிழ்க் காங்கிரஸின் பிரதான உறுப்பினர்களும் கலந்து கொண்டு அனைவரும் தமிழ் ‘ஸ்ரீ’ (வட எழுத்து) பொறித்த கார்களில் ஊர்வலம் சென்றனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக வீதியால் வரும் மோட்டார் வாகனங்களை வழி மறித்து ஆங்கில எழுத்துக்களுக்குப் பதில் தமிழ் எழுத்துக்களைப் (சி.ஈ.) பொறித்தனர். இது என்ன போராட்டமோ தெரியவில்லை. ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக அதே ஒலியைத் தரும் வண்ணம் தமிழ் வரிவடிவத்தில் எழுதுதல். ஆங்கிலத்தை மோகித்துச் சிங்களத்தை எதிர்த்தல். 

மட்டக்களப்பில் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் மட்டக்களப்புத்தொகுதி பா.உ. செ.இராசதுரையும் கலந்து கொண்டு கைதாகி மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சிலநாட்கள் விளக்கமறியல் கைதிகளாகவும் இருந்து இறுதியில் சிறிய தொகை தண்டப் பணம் செலுத்தி நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டத்தின் சீத்துவம் இதுதான். ‘சிறீ’யை எதிர்ப்போம்! சிறையை நிறைப்போம்! என்ற தமிழரசுக் கட்சியின் கோஷம் தமிழர்களின் உணர்வைத் தூண்டிற்று. 

சிங்கள ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவதை உணர்ந்த தமிழரசுக்கட்சி அதற்கு இன்னும் எண்ணெய் வார்ப்பது போல 1957 பெப்ரவரி 04 இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழ் மக்கள் கரிநாளாக- துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுத்தது. கடைகளை மூடிக் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு தமிழரசுக் கட்சி வேண்டுகோள் விடுக்க, தமிழ்க் காங்கிரஸ் கட்சியானது பெப்ரவரி 04 அரசாங்க வர்த்தக விடுமுறை தினமாகும்; விடுமுறை தினத்தில் கடைகளை மூடுவது சட்டப்படியானது; விடுமுறை தினத்தில் கடைகளைத் திறந்து வைப்பதுதான் சட்டமறுப்பானது என்று கூறிச் சுதந்திர தினத்தன்று சட்டமறுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் யாழ்ப்பாணம் பெரிய கடைக்கு அன்றைய தினம் அதிகாலையிலேயே ஆதரவாளர்களுடன் சென்று கடைகளைத் திறக்கச் செய்து சட்டமறுப்பில் ஈடுபட்டார். அதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர்.நாகநாதன் அவர்கள் தமிழரசுக் கட்சித்தொண்டர்களுடன் சென்று கடைகளைத் திறக்க வேண்டுமென்றார். சில கடைகள் திறக்கப்பட்டன. சில கடைகள் பூட்டப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்களின் ஐக்கியம் இன்றுபோல் அன்றும் இப்படித்தான் சந்தி சிரிக்க வைத்தது. இன்று ஜெனிவாவுக்குக் கடிதம் எழுதிய விடயத்தைப் போல. 

1957 பெப்ரவரி 04 இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தினத்தன்று திருகோணமலையில் நடந்த சம்பவம் ஒன்றை இங்கு பதிவிடுதல் பொருத்தம். சுதந்திர தினத்தைத் துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு கோரும் தமிழரசுக்கட்சியின் வேண்டுகோளால் தூண்டப்பெற்ற மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடராஜன் என்ற இருபத்தியிரண்டு வயது இளைஞன் திருகோணமலை நகரில் சிங்கள வியாபாரிகளின் ஆதிக்கத்தில் இருந்த மரக்கறிச் சந்தைக்கு அருகே அமைந்திருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் மேலே ஏறிக் கருப்புக்கொடியொன்றக் கட்டியபோது மரக்கறிச் சந்தையில் வியாபாரம் பண்ணும் சிங்கள இனவாதியொருவனால் சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொல்லப்பட்டான். தமிழரசுக்கட்சியின் இலங்கையின் சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டிக்கும் எதிர்ப்பு நடவடிக்கை அப்பாவி இளைஞன் ஒருவனின் உயிரைக் காவு கொண்டதுதான் மிச்சம். 

சிங்கள ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டத்தினால் விளைந்த துன்பியல் நிகழ்வொன்றும் இங்கு பதிவு செய்யப்படுகிறது. 

உணர்ச்சி மேலிட்ட மலையகத் தமிழ்த் தொழிலாள இளைஞர் இருவர் பொகவந்தலாவை என்னுமிடத்தில் மோட்டார் வாகனம் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த சிங்கள ‘சிறீ’ எழுத்தை அழித்துவிட்டனர். இவ்விரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து கொண்டு போய் போலீஸ் நிலையத்தில் அடைத்து விட்டனர். இதனால் ஏனைய தொழிலாளர்கள் பெருந்திரளாகப் போலீஸ் நிலையத்தின் முன்னே சென்று கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டத்தைக் கலைப்பதற்குப் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஐயாவு பிரான்சிஸ் என்ற மலையகத் தொழிலாளி கொல்லப்பட்டார். 

இலங்கையின் சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டிக்கும் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டினால் திருகோணமலையில் மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட நடராஜன் என்ற 22 வயது இளைஞனின் உயிர் காவுகொள்ளப்பட்டது. அதுபோல் சிங்கள ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டம் காரணமாக அப்பாவி மலையகத் தொழிலாளி ஐயாவு பிரான்சிசின் உயிர் காவு கொள்ளப்பட்டது. 

தமிழரசுக்கட்சியின் போராட்ட வியூகங்கள் எல்லாமே எப்போதுமே எதிர்மறை விளைவுகளையும் துன்பியல் நிகழ்வுகளையுமே தந்துவந்துள்ளன. 

எந்தத் திருகோணமலை மண்ணில் இலங்கையின் சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டிக்கக் கறுப்புக் கொடி ஏற்றி ஒரு அப்பாவி இளைஞன் தனது உயிரைப் பலி கொடுத்தானோ அதே திருகோணமலை மண்ணைப் பாராளுமன்ற உறுப்பினராகப் பிரதிநிதித்துவம் செய்தவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் பின்னாளில் (2014 ஆண்டு) யாழ்ப்பாணத்தில் அப்போதைய பிரதமர் யூ.என்.பி.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே மேடையில் இணைந்து நின்று இலங்கையின் தேசியக் கொடியை (மே தினத்தன்று) ஏற்றிய சம்பவம் நினைக்கற்பாலது. தேர்தல் அரசியல் தேவைகளுக்காகத் தமிழரசுக்கட்சி எவ்வாறெல்லாம் தமிழர்களைத் தவறாக வழிநடத்தி வந்திருக்கிறது என்பதைத் திரும்பிப்பார்க்க வைக்கிறது. 

தமிழரசுக் கட்சியினால் கட்டமைக்கப்பட்ட சிங்கள ‘சிறீ’ எதிர்ப்பு இயக்கம் மற்றும் இலங்கையின் சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுஷ்டித்தல் போன்ற நடவடிக்கைகள் தென்னிலங்கையில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள் காரணமாக வடக்குக்கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழர்கள் சிதறி வாழ்ந்த கொழும்பு, பதுளை, குருநாகல், பாணந்துறை, காலி, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் 1957 மே மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1956 யூன் மாதம் 05ஆம் திகதி ‘சிங்களம் மட்டும் மசோதா’வை எதிர்த்துத் தமிழரசுக்கட்சி கொழும்பு ‘கோல்பேஸ்’ திடலில் மேற்கொண்ட சத்தியாகிரகத்தின் போது சத்தியாக்கிரகிகள் மீதும் ஏனைய அகப்பட்ட தமிழர்கள் மீதும் கொழும்பிலும் பின்னர் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்த கல்லோயா நீர்ப்பாசனக் குடியேற்றத்தில் குடியேறிய தமிழர்கள் மீது அங்கும் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்களை விட 1957 தாக்குதல்கள் அளவில் பல மடங்காக அதிகரித்து இருந்தது. சிங்கள மக்களின் தமிழ் மக்கள் மீதான வன்மம் அதிகரித்திருப்பதையே இது சுட்டுகிறது. 

இப்படியானதொரு குழப்பமான சூழ்நிலையில்தான் தமிழரசுக் கட்சிக்கும்- பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு ஓரளவு உரிமைகளும் சலுகைகளும் வழங்கக்கூடிய ‘பண்டா-செல்வா’ உடன்படிக்கை 27.07.1957இல் கைச்சாத்தானது. 

ஆனால், அதற்கு முன்பே 1956 ஜூன் மாதத்திற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பண்டாரநாயக்கா- செல்வநாயகம் பேச்சுவார்த்தையின் ஊடாக உடன்பாடு ஒன்று ஏற்படுவதை அப்போதிருந்தே முறியடிக்கக் காத்திருந்த சிங்கள இனவாதச் சக்திகளை 1950ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்துத் தமிழரசுக் கட்சி மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் படிப்படியாக ஊக்கமும் ஊட்டமும் கொடுத்து வளர்த்துவிட்டிருந்தன. 

‘பாஷா பெரமுன’வின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் எவ்.ஆர்.ஜெயசூரிய, தம்பதெனியத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஜி.சேனாநாயக்க (ஐ.தே.க.) மற்றும் வெலிமடத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.எம்.பி.ராஜரத்தினா (ஸ்ரீ.ல.சு.க) போன்ற பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் தமிழர்களுக்கெதிரான குரல்கள் மேலோங்கின. 

27.07.1957இல் பண்டா-செல்வா உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் களனியில் 1958 மார்ச் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தே உரையாற்றியிருந்தார். 

ஆனால், 1956 பொதுத்தேர்தலில் தோல்வி கண்டிருந்த யூ.என்.பி. க்குளிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா குழு மீண்டும் யூ.என். பி. அதிகாரத்திற்கு வருவதற்குப் ‘பண்டா- செல்வா’ உடன்படிக்கையைக் கையிலெடுத்தது. 

முன்பு 1951இல் யூ.என்.பி. இலிருந்தும் மந்திரிசபையிலிருந்தும் பண்டாரநாயக்கா வெளியேறுவதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் ஒரு காரணம். ஏற்கெனவே தமிழரசுக்கட்சியின் ‘சமஸ்டி’க் (தமிழரசு) கோரிக்கையைச் சிங்கள மக்களுக்குப் பிரிவினைக் கோரிக்கையாக வெளிக்காட்டுவதில் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயற்பட்டதில் டட்லி சேனநாயக்காவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் முக்கியமானவர்கள். 

பண்டாரநாயக்காவின் அரசியல் எதிரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ‘பண்டா-செல்வா’ உடன்படிக்கையை எதிர்த்து இவ்வொப்பந்தம் தனிநாட்டிக்கான முதற்படி என்னும் அர்த்தப்பட ‘முதற்படி’ (FIRST STEP) என்னும் துண்டுப் பிரசுரத்தை சிங்களவர்களிடையே விநியோகித்ததுடன் கொழும்பிலிருந்து- கண்டி தலதா மாளிகைக்கு ஒரு நடைப் பயணத்தை மேற்கொண்டார். கொழும்பிலிருந்து ஆரம்பித்த இந்த நடைப்பயணம் வழியில் கம்பஹாத் தொகுதியிலுள்ள இம்புல்கொடச் சந்தியை அடைந்தபோது கம்பஹாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இலங்கையின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவருமான எஸ்.டி.பண்டாரநாயக்கா அவர்களின் ஏற்பாட்டில் தடுத்து நிறுத்தப்பட்டது. சிங்களவர்களால் நடாத்தப்பெற்ற இவ்வெதிர்ப்பு ஊர்வலத்தைச் சிங்களவர்களே தடுத்து நிறுத்தினரென்பது தமிழ் மக்களின் கவனத்திற்குரியதாகும். 

கண்டி யாத்திரை தோல்வியுற்றதும் யூ.என்.பி.யினரும் சிங்கள தீவிரவாதிகளும் புத்த பிக்குகளை இவ்ஒப்பந்தத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். புத்த பிக்குகள் காட்டிய எதிர்ப்புக் காரணமாகப் பிரதமர் பண்டாரநாயக்கா அப் புத்த பிக்குகளின் முன்னிலையிலேயே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். இதன் தொடர்ச்சி 1958இல் தமிழர்களுக்கெதிராக நாடளாவிய ரீதியில் பாரிய இனக்கலவரமாகவும் வடிவெடுத்தது. ஈற்றில் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்கள் தனது கொழும்பு வாசஸ்தலமான ‘றோஸ்மீட் பிளேஸ்’ சில் வைத்து சோம ராம தேரோ என அழைக்கப்பெற்ற புத்த பிக்கு ஒருவரினால் 1959 செப்டம்பர் 25 ஆம் திகதி சுடப்பட்டு மறுநாள் 26ம் தேதி மரணமானார். 

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கடந்த எழுபத்தி மூன்று வருடங்களாக ஆட்சிக்கட்டிலில் வீற்றிருந்த அரசாங்கங்கள் அனைத்தினதும் (அது எந்தக் கட்சி அரசாங்கமாக இருந்தாலும்) தமிழர் விரோத நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அனைத்து அரசாங்கங்களினதும் கொள்கைகளும் செயற்பாடுகளும் இன்றுவரை பௌத்த சிங்களப் பேரினவாதக் கருத்தியலின் அடிப்படையிலானவைதான். 

ஆனால், இந்தப் பௌத்த சிங்களப் பேரினவாத அலையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு 1949 இல் உருவான தமிழரசுக்கட்சி கடந்த எழுபத்தியிரண்டு வருடங்களாகச் சாதித்தது என்ன? 

எழுந்தமானமாகப் பார்க்கும்போது அதாவது தமிழர் என்கின்ற இன உணர்வுத் தளத்தில் நின்று நோக்கும்போது தமிழரசுக் கட்சி மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள்- எதிர்ப்பு நடவடிக்கைகள்- போராட்டங்கள் யாவும் ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்தின் நலன்கள் சார்ந்தவையாகத்தான் தோற்றமளிக்கும். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல் அல்லது தமிழினத்தின் விடுதலைப் போராட்ட அரசியல் என்ற பதாகையின் கீழ் தமிழரசுக்கட்சி முன்னெடுத்த ‘குறும் தமிழ் தேசியவாதப் பிற்போக்கு ‘நுண்ணரசியலை’ விளங்கிக் கொண்டால் மட்டுமே தமிழரசுக்கட்சி தமிழர்களைக் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக ஏமாற்றி வந்திருப்பது அல்லது தவறான அரசியல் நடவடிக்கைகளினால் தமிழ் மக்களைத் தவறாக வழி நடத்தி வந்துள்ளது தெரியவரும். 

1944இல் தோற்றம் பெற்ற ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்து வந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1949இல் ஸ்தாபித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தமிழ்க் காங்கிரஸ்கட்சிக்கு எதிராகத் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற வைத்துப் பாராளுமன்ற அரசியலுக்குத் தேவையான அதிகபட்ச எண்ணிக்கையான பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதே எல்லாக் காலத்திலும் தமிழரசுக் கட்சியின் பிரதான நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான் பின்விளைவுகள் எதனைப் பற்றியும் கவலை கொள்ளாது- கவனத்தில் எடுக்காது தமிழர்களை உணர்ச்சி ஊட்டி உசுப்பேற்றிக் கொதிநிலையில் வைத்துக்கொண்டு தேர்தல் காலங்களில் பெருவாரியாக வாக்குகளை வேட்டையாடும் விளையாட்டைத்தான் தமிழரசுக் கட்சியும் 1976இல் அதன் மறுவடிவமாக எழுந்த தமிழர் விடுதலைக்கூட்டணியும் பின்பு 2001இல் தமிழீழவிடுதலைப் புலிகளின் முகவராக வேறொரு வடிவெடுத்த இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புரிந்துவந்தன. 

தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றினைப் பகுப்பாய்வு செய்தால் பாராளுமன்ற அரசியலுக்குத் தேவைப்படும் கட்சி அரசியலை மிக வெற்றிகரமாகப் பூர்ஸுவாப் பாணியில் நிறைவேற்றி வந்துள்ளதே தவிர அது பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்ச் சமூகத்தின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டுக்கான  செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கவில்லையென்பது தெரியவரும். 

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தன்னளவில் நேர்மையானவராக- ஒழுக்க சீலராக- ஊழல் அற்றவராக- கண்ணியவானாக- ஒரு உண்மையான கிறிஸ்தவனாக வாழ்ந்திருக்கலாம். அது பற்றி இப்பத்தி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி அவருடைய தனயன்கள் கட்டமைத்த ‘தந்தை செல்வா’- ‘ஈழத்துக் காந்தி’- ‘தீர்க்கதரிசி’- ‘அகிம்சாவாதி’ என்ற பிம்பங்கள் தவறானவை மட்டுமல்ல தவறான நோக்கங்களையும் கொண்டிருந்தன. செல்வநாயகம் அவர்களுக்கு யாழ் குடாநாட்டு சைவ வேளாள மேட்டுக்குடிச் சமூக கட்டமைப்புக்குள்ளேயே தனது அரசியல் இருப்பையும் தலைமைத்துவத்தையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத தேவை இருந்தபடியால் யாழ் மையவாத மேட்டுக்குடிச் சிந்தனைகளோடு சமரசம் செய்துகொண்டதாகவே அவரது அரசியல் செல்நெறி அமைந்திருந்தது. அவருடைய அமைதியான சுபாவமும்- வெளிப்படையான நேர்மையான போக்கும்- மூப்பும்- ‘பார்க்கின்ஸன்’ நோயால் நோய்வாய்ப்பட்ட நிலையும்- செவிப்புலக் குறைபாடும் அவரின் பெயரை வைத்துத் தன்னல அரசியல் நடத்த அவரது தனயன்மாருக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. 

தேசிய இனம்- தமிழர் தாயகம்- சுயாட்சி- சுயநிர்ணய உரிமையெனத் தமிழரசுக் கட்சி முன்வைத்த கோட்பாட்டுக் கோசங்களை மீறி அது கடைப்பிடித்த ‘குறுந் தமிழ்த் தேசியவாத’ நுண்ணரசியல் வெளித் தெரியாமல் போனமைதான் தமிழ்ச் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் விழிப்புணர்வு அடைவதைத் தடுத்தது அல்லது தாமதப்படுத்தியுள்ளது.