— அழகு குணசீலன் —
புதிய தேர்தல் சட்டத்தின் கீழ்தான் மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடியும் என்பது சட்டமாஅதிபர் கருத்து. தனது சட்டவரைபின் கீழ் நடாத்தமுடியும் என்று கூறுகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன். அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும அரசியல் அமைப்புத்திருத்தத்தின் பின்னர்தான் மாகாணசபைத்தேர்தல் என்கிறார். இந்திய டாக்டர்களோ மாகாணசபைதான் “சர்வரோகநிவாரணி” என்றும் அதைப் பயன்படுத்துங்கள் என்றும் ஒவ்வொருமுறையும் “குளிசைத்துண்டு” எழுதிக் கொடுக்கிறார்கள். ஆக, மாகாணசபை தேர்தல் வருகிறதோ இல்லையோ “சங்கீதக்கதிரை” ஆட்டம் ஆரம்பித்து விட்டது.
கடந்த கால் நூற்றாண்டுகளாக மாகாணசபை முறை குழப்பம் நிறைந்ததாகவே உள்ளது. 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடான அதிகாரப்பரவலாக்கல் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. உண்மையில் இது ஒன்பது மாகாணங்களுக்குமான பொதுவான பிரச்சினையாக உள்ளபோதும், அதிகாரப்பரவாக்கல் தமிழ், முஸ்லீம் மக்களுக்குரியது அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் உரியது என்ற அடிப்படையிலேயே சிங்கள பேரினவாத அரசியல் சக்திகள் நோக்குகின்றன.
சிங்கள மக்களின் மனதை “வெல்ல” அவர்களின் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கிறோம் என்று கூறும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைக்கான அதிகாரங்களை வழங்குமாறு சிங்கள எதிர்க்கட்சிகளைக் கொண்டு அழுத்தம் கொடுப்பதைத்தவிர்த்து அவர்களுக்கு பின்னால் போகிறார்கள். குடியேற்றங்கள், தொல்பொருள் ஆய்வுகள், இராணுவத்திடம் உள்ள நிலங்களை மீட்டல், வடக்கு கிழக்கில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலங்கள் கையளிக்கப்படல் இவற்றைத்தடுப்பதற்கான நிரந்தர தீர்வு என்ன? மாகாணசபைகளுக்கான காணி உரிமையைப் பெறல் அன்றி அடுக்கடுக்காக ஊடகச் சந்திப்பு படம் காட்டல் அல்ல.
இந்த நிலையில் தேர்தல் சட்ட திருத்தம் என்ற இன்னொருபூதம் உள்ளே புகுந்து, எந்த முறையில் தேர்தலை நடாத்துவது என்று இழுத்தடிப்பு வாதப், பிரதிவாதங்கள் வேறு. தமிழர் அரசியல் தரப்பிலும் கூட 13 இன் ஊடான அதிகாரப்பகிர்வில் இன்னும் கருத்து ஒற்றுமை இல்லை. முஸ்லீம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் அடக்கியே வாசிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது தங்களின் சமூக நலன்(?) சார்ந்து அவர்களின் அரசியல் வெளிவரும்.
சிங்களவர்களை பொறுத்தமட்டில் அவர்களின் ஏழு மாகாணசபைகளும் அதிகாரங்களுக்காக எந்த அழுத்தங்களையும் கொடுப்பதாக இல்லை. அதிகாரங்கள் மத்தியில் குவிந்திருப்பதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளை சிங்கள தேசத்தின் பிரச்சினைகளுக்கு குரல்கொடுக்க வைத்து விட்டும், இந்தியாவுடன் கொழுவிவிட்டும் சஜித்பிரேமதாசா போன்றவர்கள் மாகாணசபை விடயத்தில் தானும் தான் சார்ந்த இனமுமாகத்தான் இருக்கிறார்கள். சம்பந்தர் ஐயா குறிப்பிட்டது போன்று “நல்லாட்சி” அன்று ஏமாற்றிவிட்டு, இன்றும் எதிரணியில் இருந்து கொண்டும் ஏமாற்றுகிறது.
ஆனால் அதிகாரங்கள் அற்ற மாகாணசபை எமக்கு வேண்டாம் என்று இணைந்திருந்த மாகாணசபையை பகிஷ்கரித்தவர்கள், பின்னர் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டபோது இணைந்த மாகாணசபையில் தான் பங்கேற்போம் என்றவர்களும் அதிகாரம் இல்லாதபோதும், இணைப்பு இல்லாதபோதும் இப்போது பதவிக்கு முண்டியடிக்கிறார்கள்.
புலிகளின் காலத்தில் இவர்கள் பேசிய அரசியல் வெறும் சந்தர்ப்பவாதம்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை அடையாளப்படுத்தி நின்ற இணைந்த மாகாணசபைபை இதனால் மக்கள் இழந்தார்கள். இணைவோ, பிரிவோ அவர்களின் கதிரைக்கு எந்தப் பங்கமும் இல்லை.
இப்போது மட்டும் என்ன அதிகாரங்கள் குவிந்து விட்டனவா? வடக்கும் கிழக்கும் இணைந்து விட்டதா? ஆக. முண்டியடிப்பு வெறும் பதவிக்கும் கதிரைக்கும் அன்றி வேறு எதற்கு? தீர்க்க தரிசனமும், சாணக்கியமும் அற்ற அரசியல். உறுதியான கொள்கை நிலைப்பாடுகள் எதுவும் இன்றி சந்தர்பத்தை பொறுத்து செயற்படும் சந்தர்ப்பவாத அரசியல். இதற்கு இராஜதந்திரம் என்ற பெயர் வேறு. குறைபாடுகள் உள்ளபோதும் ஆகக் குறைந்தது முஸ்லீம் காங்கிரஸ் இராஜதந்திரம் கூட இல்லாத வெறும் படம்காட்டல்.
இது மயிலும் மாம்பழமும் கதை !
தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பொதுத்தேர்தல் முடிந்த கையோடும், “பி ரு பி” காலத்திலும் மாகாணசபை சபை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக பேச ஆரம்பித்துவிட்டது. தேர்தல் தோல்விக்கு ஆறுதலாக மாவையார் வேட்பாளர் என்றார்கள். பின்னர் பி ரு பி வெற்றிக்களிப்பில் வேலன்சாமி என்றார்கள். பின்னர் திடீரென்று (சுப்பிர)மணி வண்ணன் என்றார்கள். இடையில் மன்னாரைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் அடிபட்டது. அண்மைய தொலைக்காட்சி பேட்டியொன்றில் முதலமைச்சர் வேட்பாளர் மாவைதான் என்று சொல்வதற்கு சுமந்திரனால் முடியவில்லை. இருக்கின்ற குழப்பங்களுக்குள் இன்னொன்றைக் கூட்ட அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவருக்குள் ஒரு “பிளான் B” உள்ளது என்பது மட்டும் உண்மை.
இந்த நிலையில் சுயநிர்ணயம், சர்வஜன வாக்கெடுப்பு பற்றி எல்லாம் பாராளுமன்றத்தில் முழங்கிய விக்கினேஸ்வரர் முதலமைச்சர் வேட்பாளருக்கான தனது விருப்பத்தை அவிழ்த்துவிட்டுள்ளார்.
“எங்கள் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவேண்டும் எனக்கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்றுக்கொள்வேன்” என்று அறிவித்துள்ளார். இதன் அர்த்தம் என்ன? மாவைக்கு குழி வெட்டப்படுகிறதா?
கடந்த பொதுத்தேர்தலில் “வீட்டுக்கு வெளியே வந்து வாக்களியுங்கள்” என்றவர் இப்போது வீட்டுக்குள் போகப் போகிறேன், நீங்களும் வாருங்கள் என்கிறாரா? இவரின் இந்த விருப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா? விக்கினேஸ்வரனிடம் இருந்து வடக்கு மக்கள் எதிர்பார்த்த ஆகக்குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்கள் எதையும் ஒரு முதலமைச்சராகவோ, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அவரால் செய்ய முடியவில்லை.
செய்ததெல்லாம் பேராசிரியர் பத்மநாதனின் வரலாற்று நூலைக்கொண்டுபோய் பாரரளுமன்றத்தை “வாசிப்பு பாட வகுப்பறையாக” மாற்றியதும், பரீட்சைக்கு “வினாவிடை” புத்தகம் தயாரிப்பது போன்று கேள்வியும் நானே, பதிலும் நானே என்று தன்னைத்தானே கேள்விகேட்டு, தானே பதிலும் எழுதி ஊடகங்களிடம் வினாவிடைப்பாணியில் ஒரு அறிக்கையையை கொடுத்து விட்டதும் தான்.
விக்கினேஸ்வரன் விரும்புவது போல் அப்படி ஏதாவது தப்பித்தவறி நடந்தால் மாம்பழக்கதையில் முருகன் மயில் வாகனத்தில் ஏறி உலகம் சுற்ற, விக்கினேஸ்வரர் கூட்டமைப்பு தலைமையை மும்முறை வலம் வந்து அவர் தம் தாழ்பணிந்து மாம்பழம் பெற்றகதையாகத்தான் இருக்கும். அப்படியானால் மயில்வாகன மாவை, வேலன், மணி ஆகியோரின் கதி அதோகதியாகிவிடும்.
இதற்கு மாறாக முருகப்பெருமானினின் பெயரைக்கொண்டவர்களில் ஒருவர் களமிறங்கினால் நடக்கப்போகும் சூரன்போரில், சூரன் யார் என்பதும் ஒரு முக்கிய கேள்வியாகிறது. அப்படியானால் விக்கினேஸ்வரரே சூரனாக எதிரணித் தமிழ்த்தேசிய வேட்பாளராக வேடம்தரிப்பாரா?
தமிழ்த்தேசிய தரப்பு ஒன்றுபட்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி சூரன் இல்லாமல் சூரன்போர் இல்லை. தேசியக் கட்சிகளுடன் கூட்டாட்சியில் உள்ள அங்கயன், டக்ளஸ், ராகவன் அணி ஒரு சூரனை நிறுத்துவார்கள். ஆக, ஒன்றுக்கு மேற்பட்ட சூரர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட முருகர்களும் களத்தில் குதித்தால் பல சூரன்போர்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. “மூன்று இடங்களில் பிருபி யில் கல் நாட்டிய எங்களுக்கு இது ஒன்றும் புதிய விவகாரம் இல்லவே. இருக்கவே இருக்கிறது மாவிட்டபுரம், நல்லூர், செல்வச்சந்நிதி. இது ஒரு நவீன சூரன் போரில் போய் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வடக்கு மாகாண அரசியலில் சுட்ட மண்ணும், பச்சை மண்ணும்…!
மாகாணசபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் வடக்கில் ஏற்படக்கூடிய கட்சிக்கூட்டுக்கள் எப்படி அமையும்? இது எப்படியும் அமையலாம். ஏனெனில் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.
சுட்டமண்ணையும், பச்சைமண்ணையும்கூட ஒட்டவைக்கின்ற சக்தி கதிரைகளுக்கு உண்டு. எனவே எதிர்வுகூறக்கூடிய சாத்தியங்கள் எவை?
1. தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து, விக்கினேஸ்வரன் அணியும், கஜேந்திரகுமார் அணியும் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டால், இணக்கப்பாட்டிற்கு கஜேந்திரகுமார் நிபந்தனைகளை விதித்தாலும் விக்கினேஸ்வரன் நிபந்தனையற்று இணைவார். தமிழரசுக் கட்சிக்குள்ளும், கூட்டமைப்புக்குள்ளும் நிலவுகின்ற ஒற்றுமையின்மையும், சுமந்திரனின் தன் கூடைக்கு வீசும்போக்கும் ரெலோ, புளட் அகியவற்றின் பேரம்பேசும் சக்தியை சற்று அதிகரிக்கும்.
2. ஐக்கியம் ஏற்படாத பட்சத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தவிர்த்து மற்றைய இரு தமிழ்த்தேசிய கட்சிகளும் கூட்டாகவோ, தனித்தோ போட்டியிடலாம். மணிவண்ணன் ஈ.பி.டி.பியுடன் இணைந்து யாழ்.முதல்வராகியிருப்பதால் அவரை இவர்கள் எவரும் உள்வாங்க சாத்தியமுமில்லை. கஜேந்திரகுமார் மணிக்கு எதிராக “வீட்டோவை” பயன்படுத்துவார்.
3. மாவையரைத் தவிர்த்து பொதுவேட்பாளர் ஒருவரையோ அல்லது தமிழரசு வேட்பாளரையோ நிறுத்துவது என்பது சுமந்திரன் அணிக்கு அவ்வளவு இலகுவானதாக அமையாது. தமிழரசு இதற்கு இணங்கப்போவதில்லை. அதைவேளை மாகாணசபை அமைச்சர் பதவிகளைப் பங்கிடுவதில் கூட்டமைப்புக்குள்ளும், மற்றைய கட்சிகள் இணைந்தாலும், அவற்றிற்கிடையேயும் இது சர்ச்சைக்குரிய விடயமாக மாறும்..
4 . முன்னாள் போராளிகள், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், சுயேட்சை குழுக்களை உள்வாங்குதல் மூலம் வாக்குசிதறலைத் தவிர்க்க முயற்சிகள் செய்யப்படாவிட்டால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதிக்கும். இது தமிழ்த்தேசிய எதிர் சூரன் தரப்புக்கு சாதகமாக அமையலாம்.
5. தேசியக் கட்சிகள் என்ற வகையில் ஆளும்கட்சி அங்கயன், டக்ளஸ், ராகவன் கூட்டு பலமான எதிரணியாக இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய பலவீனமான நிலையில், சஜீத்தின் கட்சியே இரண்டாவது பலம் கொண்டதாக அமையும். இதை வன்னியே தீர்மானிக்கும்.
6. வடக்கு மாகாண சபையை தனித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுவது என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்க வாய்ப்பில்லை. மிகவும் இக்கட்டான நிலையில் சஜீத், ரிஷாட் அணியின் உதவியுடன் கூட்டமைப்பு ஆட்சியமைக்க வாய்ப்புண்டு. அது மத்திய அரசுக்கு எதிரணி ஆட்சியாக அமையும்.
7. வன்னியில் இருந்து கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் களமிறக்கப்பட்டால், வன்னி வாக்குகளை கூட்டமைப்பு கவரமுடியும். மறுபக்கத்தில் அது யாழ்.குடாவில் அங்கயன், டக்ளஸ், ராகவன் அரசாங்க அணிக்கு சாதகமாக அமையலாம் ஏனெனில் யாழ்.மையவாதம் இதனை இலகுவாக ஜீரணிப்பது கஷ்டம்.
8. கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், முன்னாள் போராளிகள் அணிகள் வெளியில் விடப்பட்டால், அரசாங்க ஆதரவு அணியுடன் சேர்த்துப் பார்க்கையில் பலமான எதிர்க்கட்சி வடக்கு மாகாண சபையில் அமையும். தமிழ்த்தேசிய முதலமைச்சர் ஒருவருக்காக இவர்கள் மாகாண அரசாங்கத்தில் பங்கேற்காமல் வெளியில் இருந்து முட்டுக் கொடுக்கவும் வாய்ப்புண்டு.
இது வடக்கு வாக்கு கணக்கு வழக்கு!
கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் கணக்குவழக்குகளின் அடிப்படையில் வடக்கு மாகாணசபை கணக்குவழக்கை ஓரளவுக்கு பார்க்கமுடியும். யாழ், வன்னிதேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணசபையானது தற்போதைய மாகாணசபை தேர்தல் சட்டத்தின்படி 38 உறுப்பினர்களைக் கொண்டது. இணைந்த மாகாணசபையில் வடக்குக்கு 36 உறுப்பினர்கள். இந்த 36 இல் 24 இடங்களை ஈ.பி.ஆர்.எல்.எவ்.உம், மிகுதி 12 இடங்களை ஈ.என்.டி.எல்.எப்.உம் பங்கிட்டுக்கொண்டன. இந்த நிலை இனியொருபோதும் ஏற்படப்போவதில்லை. அது ஒரு அசாதாரண அரசியல் சூழல்.
2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் : யாழ்.தேர்தல் மாவட்டம்.
1. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு : 1,12,967 : 31.46 வீதம் : ஆசனங்கள் : 03
2. தமிழ் காங்கிரஸ் கட்சி : 55,383 : 15.48 வீதம் : ஆசனம் : 01
3. தமிழ்மக்கள் தேசிய கூட்டணி : 35,927 : 10:00 வீதம் : ஆசனம் : 01
4. சிறிலங்கா சுதந்திரக் கட்சி : 49,379 : 13.75 வீதம் : ஆசனம் : 01
5. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி : 45,797 : 12.75 வீதம் : ஆசனம் : 01
தமிழ்த்தேசிய முக்கட்சிகள்: 57 வீதம். முக்கட்சிகள் தனித்து நின்றால் மிகவும் பலவீனமான நிலை தவிர்க்க முடியாதது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஈ.பி.டி.பி .யும்: 26.5 வீதம்.
இத்துடன் தமிழ்த்தேசிய எதிரணியான ஜாதிக மக்கள்சக்தி 13,564,
ஐக்கிய தேசியக்கட்சி 6,522, சேர்த்தால், நான்கு தரப்பும் பெற்றவாக்கு: 32 வீதம்.
இவற்றை விடவும் இரு சுயேட்சைகுழுக்கள் (5+2) பெற்றது: 06 வீதம்
இது 22, 742 வாக்குகள்.
2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் : வன்னி தேர்தல் மாவட்டம் .
1.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு : 69,916 : 33.64 வீதம் : ஆசனங்கள்: 03
2. பொதுஜனபெரமுன : 42,524 : 20.46 வீதம். : ஆசனம்: 01
3.ஜாதிகமக்கள் சக்தி : 37,883 : 18.23 வீதம் : ஆசனம்: 01
4. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி : 11,319 : 5.44 வீதம் : ஆசனம்: 01
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 8,789, தமிழ் காங்கிரஸ் 8,232 வாக்குகளைப் பெற்றன. இது 08.19 வீதம்.
ஆக, முக்கட்சிகளை சேர்த்து கணக்கிட்டால் 41.83 வீதம். பொதுஜன பெரமுனமற்றும் ஈ.பி.டி.பி. 25.90 வீதம். தமிழ்த்தேசிய எதிரணியாக ஜாதிகமக்கள் சக்தியையும் சேர்த்துக் கணிப்பிட்டால் 44.13 வீதம். இது வன்னியில் தனித்து அல்லது தமிழ்த்தேசிய பாராளுமன்ற கட்சிகளுடன் இணைந்தும் கூட்டமைப்பு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவது கேள்விக்குரியதாக உள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளையும், மாகாணசபைத் தேர்தல் முடிவுகளையும் முற்று முழுதாக ஒப்பிடமுடியாது. இரண்டும் பல சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களில் வேறுபட்டு நிற்பவை. எனினும் 2013 மாகாணசபை தேர்தலுக்கும், 2020 பாராளுமன்ற தேர்தலுக்கும் இடையிலான ஏழு ஆண்டுகளில் தமிழ்த்தேசிய அரசியல் வாக்கு வங்கியில் பெரும் வீழ்ச்சியும், பிரிவும் ஏற்பட்டிருப்பதை நிராகரிக்க முடியாது.
2013 வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் களமிறக்கப்பட்டபோது யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளே கடந்து இருந்தது. விக்கினேஸ்வரனை கட்சி எல்லைக்கப்பால் ஒரு பொது வேட்பாளராகவே மக்கள் பார்த்தனர். ஒரு அரசியல்வாதி என்பதை விடவும் நீதியாளர், சட்டவாளர், கல்வியாளர், நேர்மையான நிர்வாகி போன்ற மாயைகள் மக்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் விக்கினேஸ்வரனை மிகைமதிப்பீடு செய்துவிட்டோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள நீண்ட காலம் எடுக்கவில்லை.
இந்த மாயையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு 78.48 வீதமான 3,53,595 வாக்குகளையும், 30 ஆசனங்களையும் பெற்றுக்கொடுத்தது.
யுத்தத்தை நடாத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 82,838 வாக்குகளை பெற்றது. இது 18.3 வீதமும் அதற்கான 7 ஆசனங்களும்.
முஸ்லீம் காங்கிரஸ் 6,761 வாக்குகளைப் பெற்று, தனது 1.5 வீதத்திற்கு ஒரு ஆசனத்தைப் பெற்றது.
இதன்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுமார் 1,50,000 வாக்குகளை பாராளுமன்றத் தேர்தலில் இழந்திருக்கிறது. கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் அணிகள் 1,05,000 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அரசாங்க தரப்பும், கூட்டாளிகள் கட்சிகளும் சுமார் 1,50,000 வாக்குகளை பெற்றுளனர். ஆளும் தரப்பின் வாக்குகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. மாகாணசபை சபையில் வெறுமனே 10,000 வாக்குகளைப் பெற்ற அங்கயனுக்கு, பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு யாழில் சுமார் 50,000 வாக்குகளைப் பெறமுடிந்துள்ளது. இந்தப் போக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நிட்சயமாக வயிற்றுவலியைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையை மாற்றப்போவது தமிழரசின் பிளான் Aயா…? அல்லது சுமந்திரனின் பிளான் Bயா…?
ஒட்டு மொத்தமாக வடக்கில் தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளையும் விடவும் குறைவாகவே பெறும் நிலை காணப்படுகிறது. கூட்டமைப்பு உட்கட்சி பூசல்கள், தமிழ்த்தேசிய கட்சிகளிடையான ஒற்றுமையீனம், காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, ஜெனிவா அணுகுமுறை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் அன்றாட வாழ்வியல் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறிப்பாக வேலையின்மை இவற்றிற்கு எல்லாம் எந்த தீர்வையும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் காணவில்லை. பட்டதாரிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் அரசாங்கத்தரப்பை நாடுகின்றனர்.
மறுபக்கத்தில் உரிமைப் போராட்டப்பக்கமும் எதையும் குறிப்பிட்டு சாதிக்கவில்லை. இதனால் இந்த அரசியலில் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதில் ஆளும் அரசாங்கத்திற்கும் ஒரு பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கு கேள்விக்கு உட்படுத்தப்படுவது தமிழ்த்தேசிய தரப்பின் இராஜதந்திரீதியான முன்னெடுப்புக்களும், அணுகுமுறைகளும் ஆகும்.
இந்த விமர்சனம் தேசியக் கட்சிகள், அவர்களின் கூட்டாளிகள் கட்சிகள் குறித்தும் மக்களிடம் நிறையவே உண்டு.
சுமந்திரனின் அரசியல் அணுகுமுறையானது சிங்கள அரசைத் திருப்திப்படுத்துவதுடன், இந்திய, தமிழக அரசுகளைப் பகைத்துக் கொள்கின்ற ஒரு கட்டத்திற்கு நகர்த்திவிட்டுள்ளது. வடக்கில் இந்திய சார்பு சக்திகள் வளர்ந்து வருகின்ற இன்றைய நிலையில் இது மற்றொரு பிரச்சினையாக உருவாகிவருகிறது. மறவன் புலவு சச்சிதானந்தனின் அறிக்கையின் வெளிப்பாடு இதுவே. இந்த அறிக்கைகளின் மறைகரம் எது?
பிருபி க்குப் பின் அது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரானதல்ல என்று வலிந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியவர்கள், இன்று மீனவர் போராட்டத்தின் பின் இந்திய அரசுக்கு எதிரானதல்ல என்று அறிக்கைவிடவேண்டி உள்ளது. இதற்கு காரணம் என்ன? போராட்டம் தொடர்பாக சுமந்திரன், சாணக்கியனால் எடுக்கப்பட்ட முடிவுகள் ஜனநாயக ரீதியில் சகல தரப்பையும் உள்ளடக்கி, நன்மைதீமைகளை கவனத்தில் எடுத்து மக்கள் அரசியல் சார்ந்து எடுக்கப்பாடாமல், எழுந்தமானமாக, தன்னிச்சையாக எடுக்கப்பட்டமையாகும்.
சுமந்திரனின் சூரன் போர்த்திட்டம்…. பிளான் B.!
சம்பந்தர் ஐயாவின் தலைமைத்துவக்குறைபாட்டை சுமந்திரனின் அண்மைய தொலைக்காட்சி பேட்டி முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளது. இது சம்பந்தர் அமைத்த மூன்று பங்காளிக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவில் சுமந்திரனுக்கு உடன்பாடு இல்லை என்பதை காட்டுகிறது. கூட்டுத் தலைமை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இப்போதும் கூட்டுத் தலைமை தான் என்று சொல்லும் அவர், திடீரென்று பாராளுமன்ற குழுத்தலைமை கூட்டுத்தலைமையாக இருக்கமுடியாது என்கிறார். இவை இரண்டும் இரு வேறு தலைமைத்துவங்கள் பற்றியது என்பதை அவர் புரியாமல் இதைக்கூறவில்லை.
இதன் பிரதிபலிப்பு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் எதிரொலிக்கும். மாவையை அரசியல் தலைமைத்துவத்தில் இருந்து அகற்றுவது சுமந்திரனின் திட்டம். இது அவருக்கு சம்பந்தருக்குப் பின்னர் தமிழரசு, கூட்டமைப்பு தலைமையை ஏற்பதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளரில் இருந்து மாவையைத்தவிர்த்தால் இன்னும் இலகுவாக இருக்கும். மாவைக்கே இந்தளவு குத்து வெட்டு என்றால் வேலன் சாமி நினைத்துப்பார்க்கவே முடியாது. அப்படியானால் சுமந்திரனின் பிளான் B என்ன?
பொதுவாக பிளான் A தவறும்பட்சத்தில், அடுத்த நகர்வுக்காக கையிருப்பில் இருப்பதே பிளான் B. இங்கு சுமந்திரனோ பிளான் Aயை தானே சாத்தியமற்றதாக்கி தனது வசதிக்காக பிளான் Bயை முதன்மைப்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளார்.
மணிவண்ணன் தமிழ்க்காங்கிரஸில் இருந்து பிரிந்து யாழ்.முதலமைச்சரானது சுமந்திரனுக்கு விருப்பமான ஒன்று. அன்றே சுமந்திரன் மணிவண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக்குவது பற்றி தனக்கு நம்பிக்கையானவர்களுடன் கதைத்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. நெருப்பில்லாமல் புகையாது. மணிவண்ணனை நிறுத்துவதன் மூலம் சுமந்திரன் ஒரு கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை வீழ்த்த முடியும்.
1. மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் அஸ்த்தமனம்.
2. பொதுவேட்பாளர் என்ற கோசத்தின் கீழ் கட்சியற்ற மணியை இறக்குவதால் தனது நேர் அரசியல் எதிரியான கஜேந்திரகுமாரை ஓரங்கட்டுவது.
3. ஈ.பி.டி.பி.க்கும் மணிக்கும் யாழ். மாநகர ஆட்சியில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைப் பயன்படுத்தி மாகாணசபை ஆட்சியமைக்க மணியூடாக ஈ.பி.டி.பி. ஆதரவைப்பெறுவது.
4. அரசியலும், சட்டமும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்ற மணியின் தகுதியை முதன்மைப்படுத்தி புளட், ரெலோ தரப்பின் அரசியல் பலவீனத்தை அம்பலப்படுத்தல். கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து வரைபுகளையும் சுமந்திரனே மேற்கொண்டது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
5. மாகாண ஆட்சியில் தனக்கு சாதகமானதும், கூட்டமைப்பு பங்காளிகளை ஒருவரையறைக்குள் வைத்துக்கொள்வதற்குமான முதலமைச்சரை பதவியில் ஒருவரை அமர்த்துதல்.
6. ஈ.பி.டி.பி. ஆதரவு ஆட்சி ஏற்பட்டால் அதை கொழும்பில் சாதகமாக தனது அரசியலுக்கு பயன்படுத்தலாம். அல்லது சஜீத், ரிஷாத் அணியுடன் இணைந்தும் எதிர்தரப்பு கொழும்பை திருப்திப்படுத்தலாம்.
மணிவண்ணன் சாத்தியப்படாத நிலையில் சுமந்திரன் மணிவண்ணனுக்கு பதிலாக மாங்காயை வீழ்த்த மற்றொரு கல்லைத்தேடுவார். அது எப்போதும் “பொதுக்கல்” ஆக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படும். அப்போது சுமந்திரனின் எதிரிகளும் அவரை எதிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
ஆக, இம்முறை சூரன்போர் சினிமாவுக்கான கதைவசனம், இயக்கம் சுமந்திரனே! இசை, பக்கவாத்தியம்தான் மற்றவர்கள். கதாநாயகனைத் தேர்வு செய்வதையும், வில்லனைத்தேர்வு செய்வதையும் சுமந்திரனின் காய்நகர்வே தீர்மானிக்கும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு …..!