— செங்கதிரோன் —
இலங்கையில் 1983 ஜூலை இனக்கலவரக் காலம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் தண்டனை விதிக்கப்பட்டுமிருந்த எழுபத்தியிரண்டு தமிழ்க் கைதிகளில் முப்பத்தைந்து பேர் ஜூலை 25ஆம் திகதி சக சிங்களக் கைதிகளால் சிறைக் காவலர்களின் உதவியுடன் நடாத்தப்பட்ட படுகொலைத் தாக்குதல் சம்பவத்தில் பலியாகியிருந்தனர்.
நாட்டில் பதற்றமான சூழ்நிலை. நாடளாவிய ரீதியில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள் கொதித்துப் போயிருந்த நேரம் அது.
அப்போது நான் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியல் உதவியாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அலுவலகத்திற்குப் பக்கத்தில் அரசாங்க விடுதியில்தான் வாசம்.
செங்கலடி பிரதான வீதியிலிருந்து உள்ளே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் வயலும் வயல் சார்ந்த ‘முந்தன்குமாரவெளி’ என்னும் இடத்தில் அமைந்த நீர்ப்பாசன வேலைத்தலமொன்றில் பல கனரக வாகனங்கள் வேலைக்கமர்த்தப்பட்டிருந்தன. இவ்வாகனங்களின் ‘ஆப்பரேட்டர்’களாகவும் ‘கிளீனர்’களாகவும் வெளி மாகாணங்களில் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த சிங்களவர்களே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த வேலைத்தலம் எனது பொறுப்பிலேயே இருந்தது.
1983 ஜூலை 25ஆம் திகதி இரவு எனக்கு நித்திரையே வரவில்லை. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைச் சம்பவத்தினால் மனம் துயரத்தில் தோய்ந்திருந்ததொருபுறம். மறுபுறம் எனது பொறுப்பிலுள்ள வேலைத்தலத்தில் வேலை செய்யும் சிங்கள ஊழியர்களை அவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் தமிழர்களால் ஏற்படாது அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் எனது எண்ணங்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன.
அடுத்த நாள் காலை அலுவலகம் சென்றேன். பெண் பொறியியலாளர் ஒருவர் தான் மேலதிகாரி. நிலைமையைப் பதற்றத்துடன் எடுத்துச் சொன்னேன். நான் கூறியவற்றையெல்லாம் கூர்மையாகச் செவிமடுத்த அவர்,
“என்ன செய்யவேணும்” என்றார்.
“ஜீப் வாகனமொண்டு உடன வேணும் ‘மேடம்'” என்றேன்.
“சுணங்காம எடுத்துத்துப் போங்க” என்று அனுமதித்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பச்சை நிற அந்த ‘ஜீப்’ வண்டி புழுதியைக் கிளப்பிக்கொண்டு முந்தன்குமாரவெளி வேலைத்தளத்தைச் சென்றடைந்தது.
என்னைக் கண்டதும் அங்கிருந்த சிங்கள ஊழியர்கள் அனைவரும் ஓடி வந்து ‘ஜீப்’பைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் வரும் முன்னர் அவர்களின் முகங்களில் அப்பியிருந்த பயமும் பீதியும் என்னைக் கண்டதும் மெல்ல மெல்ல நீங்கி முகங்களில் நம்பிக்கைச் சிரிப்பு துளிர்க்கத் தொடங்கியது.
“உங்கட உங்கட முக்கியமான சாமான்கள எடுத்துத்துக் கெதியா ‘ஜீப்’புக்குள்ள ஏறுங்க” என்று கட்டளையிட்டேன்.
மிக வேகமாக இயங்கினார்கள்.
அவர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் புழுதியைக் கிளப்பிய வண்ணம் திரும்பி வந்து கொண்டிருந்த ‘ஜீப்’ செங்கலடிக்குப் பக்கத்திலுள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை நோக்கிப் பறந்தது.
இவர்கள் எல்லோரையும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாகப் பாரம் கொடுப்பதுதான் எனது நோக்கமாக இருந்தது.
ஆனால், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை அடையும் முன்னமே இடைவழியில் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மட்டக்களப்பிலிருந்து ‘கேகாலை’ பெயர்ப் பலகையுடன் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ‘பஸ்’ஸொன்று வந்து கொண்டிருந்தது. அன்றைய அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பிலிருந்து வெளி மாகாணத்திற்குச் செல்லும் கடைசி பஸ் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
‘பஸ்’ஸை மறித்து நிற்பாட்டி எல்லோரையும் அந்தப் ‘பஸ்’ஸில் ஏற்றி விட்டேன். கைச் செலவுக்காகப் பணம் ஒவ்வொருவருக்கும் வரும் வழியில் ‘ஜீப்’பிற்குள் வைத்து நான் ஏற்கெனவே கொடுத்திருந்தேன்.
எனது கடமையைச் சரிவரச் செய்த நிம்மதியுடன் அன்று இரவு நன்றாகத் தூங்கினேன். விடிந்ததும் தெரியவில்லை. கண் விழித்தபோது என்னைக் காணவென்று காலை ஆறு மணிக்கே வந்து காத்திருந்தான் ‘முந்தன்குமாரவெளி’ வேலைத்தலக் காவலாளி கணபதிப்பிள்ளை. அன்றிரவு பத்துப்பதினைந்து தமிழ்ப் பொடியன்கள் கத்தி, கோடரி, இரும்பு கம்பிகள், பொல்லுகளுடன் அங்கு வேலை செய்த சிங்கள ஆட்களைத் தேடி வந்ததாகச் செய்தி சொன்னான்.
அலுவலகம் சென்றபோது என்னை வாசலுக்கு வந்து எதிர்கொண்டார் எங்கள் அலுவலகக் கணக்காளர் சிற்றம்பலம்.
“குட் மார்னிங் மிஸ்டர் சிற்றம்பலம்’ என்றேன்.
“குட்மார்னிங் கிடக்கட்டும்! நீர் பாத்த வேல சரிதானோ காணும்” என்றார் ஒருவித எரிச்சலுடன்.
“ஏன் என்ன நடந்தது” என்றேன்.
“எங்கடையாக்கள வெலிக்கடையில ‘சி’னாக்கள் சாக்கொண்டு போட்டினம். நீர் என்னெண்டாக் காணும் அவயளக் காப்பாத்தி நேற்று அவயள்ற ஊருக்கு அனுப்பிப் போட்டெல்லே வாறீர். நீரெல்லாம் தமிழினத் துரோகி ஐசே” என்றார்.
அவர் எதைக் குறித்து இப்படி எரிச்சல் அடைகிறார் என்பது எனக்கு விளங்கிவிட்டது.
பதில் சொல்ல விரும்பாமல் அவரை அலட்சியம் செய்துவிட்டு அவரைக் கடந்து சென்று விட்டேன்.
1983 யூலை 27 ஆம் திகதி மீண்டும் வெலிக்கடையில் இரண்டாவது தடவையாகவும் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல். பதினெட்டுப் பேர் பலி.
நாட்டு நிலைமை மோசமடைந்தது.
இரண்டு மூன்று நாட்களின் பின் ஊவா மாகாணம் பசறை, லுணுகல போன்ற மலைநாட்டு ஊர்களிலிருந்து பாதிப்படைந்த தமிழ்க் குடும்பங்கள் பதியத்தலாவ, மகாஓயா வழியாகச் செங்கலடிக்கு அகதிகளாக வந்தடைந்தன. எப்படியோ உயிர் தப்பி வெறுங்கையுடன் வந்து சேர்ந்திருந்தார்கள்.
நான் முன்னின்று ஊரிலுள்ள பிரமுகர்களைக் கூட்டி அகதிகளாக வந்த குடும்பங்களுக்கு உதவவும் அவர்களைச் செங்கலடிப் பிரதேசத்திலேயே குடியமர்த்தவும் வேண்டிய பணிகளை ஆரம்பித்தேன்.
சிற்றம்பலம் என்னை நெருங்கி வந்தார்.
“உம்மோடு கொஞ்சம் கதைக்கலாமோ”? என்றார்.
“சொல்லுங்க” என்றேன்.
“சொல்லிறனெண்டு குறை நினையாதையுங்கோ. வடக்கத்தியானுக்கு உதவுறீங்க. உவங்கள் நன்றியில்லாதவங்கள் பாருங்கோ” என்றார்.
எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
“இஞ்ச பாருங்க மிஸ்டர் சிற்றம்பலம். அண்டைக்கு நான் ஏதோ சிங்கள ஆக்களப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வச்சதுக்கு வந்து உங்கட தமிழ் உணர்ச்சியக் காட்டினீங்க. இப்ப சிங்கள ஆக்களிட்ட அடிபட்டு ஓடிவந்த தமிழ் அகதிகளிட்ட உங்கட அந்தத் தமிழுணர்ச்சியக் காட்டாம அவங்களுக்கு உதவி செய்யாதீங்க என்றீங்க. உங்கட கொள்கதான் என்னெண்டெனக்கு விளங்கல்ல. ஆர் துன்பத்தில இரிக்கிறாங்களோ அவங்களுக்கு உதவோணும். இதில தமிழ் சிங்களம் எண்டில்ல. எல்லாரும் மனிஷன்தான். உங்களப்போல ஆக்களாலதான் நாட்டில இப்பிடிப்பட்ட பிரச்சனயளெல்லாம் வருது” என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரிக் கூறிவிட்டு அவரை விட்டு அப்பால் நகர்ந்தேன்.
சந்தர்ப்பத்தைப் பார்த்துச் சரியாக அவருக்குக் கொடுத்ததில் எனக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.
(யாவும் கற்பனையல்ல)