விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை

விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை

  — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

பயிர்ச்செய்கைக்கு உரம் வேண்டும். உடனடியாக உரத்தடையை நீக்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் கூட முடியாது என்ற அரசு விதித்திருக்கும் அறிவிப்பையும் மீறி, பொலிசாரின் தடைகளையும் கடந்து, விவசாயிகளின் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் ஜே.வி.பியினரே உள்ளனர் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி பின்னணியில் இருந்து தூண்டுகிறதோ இல்லையோ விவசாயிகளின் உரப் பிரச்சினை நியாயமானது என்று அரசாங்கத் தரப்பினரே கூறுகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடக் கூறியுள்ளார்.  

இரசாயன உரத்துக்குப் பதிலாக இயற்கை உரத்தைப் பயன்படுத்துங்கள் என்று விவசாயிகளை அரசாங்கம் கோருகிறது. இந்தக் கோரிக்கை நியாயமானதே. இதை விவசாயிகளும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதற்கொரு கால அவகாசம் தேவை என்பதே விவசாயிகளின் நிலைப்பாடு. இயற்கை உரத்தை உடனடியாக உற்பத்தி செய்து விட முடியாது. அதைப் படிப்படியாகவே உருவாக்க முடியும். அதுவரையிலும் வரையறுக்கப்பட்ட அளவிலேனும் இரசாயன உரப் பாவனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். 

உண்மையில் அசேதன உரப்பாவனையைத் தவிர்த்து சேதனப் பசளையைப் பயன்படுத்த வேண்டும் என்று  அரசாங்கம் எடுத்த திடீர் முடிவு விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது. இது உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் நம்பிக்கையைத் தளர்வடையச் செய்ததுடன் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் ஆர்வத்தையும் குறைத்துள்ளது. 

இதனால் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் பொருளாதாரம் நிலைகுலைவதோடு சமூகப் பொருளாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் கீழிறங்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தியிலும் பெரும் பின்னடைவுண்டாகும் அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

அசேதனப் பசளைக்குப் பதிலாகச் சேதனைப் பசளைப் பாவனையை (Natural fertilizer) யாரும் மறுப்பதற்கில்லை. இன்று உலகம் முழுவதும் இயற்கைப் பசளைப் பாவனையும் இயற்கை உணவு உற்பத்தியும் தீவிரமாக வலியுறுத்தப்படுகிறது. அது அவசியமானதும் கூட. இயற்கை உணவுக்கு (organic food) திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை பலமாகியுள்ளது. நோயற்ற வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பது உலகளாவிய அறைகூவலாகும். உலகளாகிய ஆய்வுகளின்படி அநேகமான நோய்களுக்கும் ஆயுள்குறைவுக்கும் காரணம் உணவு முறையில் உள்ள குறைபாடு என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் ஒவ்வொரு நாடும் தமது மக்களைப் பாதுகாப்பதற்கு இயற்கை உணவு உற்பத்தியை வலியுறுத்துகின்றன. இதனால்தான் இயற்கைப் பசளைப் பாவனை வலியுறுத்தப்படுகிறது. இந்த வகையில் இலங்கையும் தன்னுடைய குடிமக்களைப் பாதுகாக்கும் கரிசனையைக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் அதைச் செய்வதற்கான நடைமுறைகள் கவனிக்கப்பட வேண்டியவை. நீண்டகாலமாக இரசாயன உரப்பாவனையில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கையை அதிரடியாக ஒரே போகத்தில் மாற்றி விட முடியாது. அது எதிர்விளைவுகளையே உண்டாக்கும். இதுதான் இப்பொழுது பெரிய பிரச்சினையாக உள்ளது.   

இயற்கைப் பசளையை உருவாக்குவதற்கான கால அவகாசம் வேண்டும். அந்தக் கால அவகாசத்தை வழங்கி, இயற்கைப் பசளையைத் தயாரிக்கும் முறைகளை விரிவான முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டு படிப்படியாக இரசாயன உரப்பாவனையைத் தடுக்க வேண்டும். ஏனெனில் இயற்கைப் பசளைப் பாவனையிலிருந்து மக்களை விலக வைத்ததே முந்திய அரசாங்கங்களின் தவறான நடவடிக்கைகளாகும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயற்கை உரப்பாவனைக்கு தாராள இடமளித்து, விவசாயிகளையும் விவசாயத்துறையையும் பழக்கி விட்டு இப்பொழுது அதிரடியாக திடீரென மாற்று முடிவை அறிவித்தால் விவசாயிகளால் இதற்கான பொறுப்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனாலும் அவர்கள் இயற்கை உரத்துக்குத் திரும்புவதை மறுக்கவில்லை. இயற்கைப் பசளையை உற்பத்தி செய்யவும் அதைப் பயன்படுத்துவதற்கும் குறைந்தது ஒரு ஆண்டாவது தமக்கு வேண்டும் என்று கூறுகின்றனர். அதுவரையில் வரையறுக்கப்பட்ட அளவிலான உரப்பாவனைக்கான சூழலைப் பேண வேண்டும். அது அவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கானதாகும். 

அரசாங்கமும் இதை ஓரளவுக்குப் புரிந்து கொண்டுள்ளது போலவே தெரிகிறது. என்பதால்தான் இந்தியாவிலிருந்து அது திரவ உரத்தை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் இந்தத் திரவ உரமானது விவசாயிகளுக்கோ விவசாயச் செய்கைக்கோ போதிய வெற்றியைத் தராது என்று விவசாயத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது இன்னொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. விவசாயமானது மண்ணையும் மழையையும் நம்பிச் செய்யப்படும் தொழிலாகும். மண்ணை வளப்படுத்துவது இதில் முக்கியமானது. மண்ணைச் சரியான முறையில் வளப்படுத்தினால் மட்டுமே உரிய பயனைப் பெற முடியும். இந்த வளமாக்கலில் ஏற்பட்டுள்ள இழுபறி தனியே விவசாயிகளை மட்டும் பாதிக்காது. அது ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும். நாட்டிலுள்ள அனைவருக்கும் உணவூட்டுவது விவசாயிகளும் மீனவர்களுமே. 

ஆகவேதான் நடைமுறைச் சாத்தியமான வகையில் படிப்படியாக சேதனப்பசளைப் பாவனையை ஊக்கப்படுத்தும் பொறிமுறையை உருவாக்க வேண்டும். அதுவே பொருத்தமானது என்று வலியுறுத்தப்படுகிறது. அதுவே நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகும். இல்லையெனில் நிச்சயமாக உணவுற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும். பின்னர் அதை ஈடுசெய்வதற்குவெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையே ஏற்படும். இது அரசாங்கத்தின் திட்டத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் எதிர்மறையான விளைவையே உண்டாக்கும். மக்களுக்கும் நாட்டுக்கும் பாரிய பின்னடைவை உருவாக்கும். நாடும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிச் சூழலில் இது இரட்டை நெருக்கடியை உண்டாக்கும். 

இது மானாவாரி உள்ளிட்ட பெரும்போகச் செய்கைக் காலமாகும். இதன்போதே அதிகளவானோர் விவசாயச் செய்கையில் ஈடுபடுகின்றனர். இந்தச் செய்கையில் பாதிப்பும் வீழ்ச்சியும் ஏற்படுமானால் அவர்களால் மீள முடியாத நிலை ஏற்படும். பிறகு அவர்களை நிவாரணமளித்துக் காப்பாற்றும் நிலையே உருவாகும். 

எமது நாட்டில் இன்று விவசாயச் செய்கையிலேயே அதிகமானோர் ஈடுபடுகின்றனர். வேறு தொழிற்துறைகளும் பெரிய அளவில் விருத்தியடையவில்லை. நீண்டகாலமாக இலங்கை ஒரு விவசாயப் பொருளாதார நாடாகவே உள்ளது. இன்னும் விவசாயக் கைத்தொழில் நாடாகக் கூட வளர்ச்சியடையவில்லை. மட்டுமல்ல விவசாயத்துறைக்குப் பதிலாக சுற்றுலாத்துறை போன்றவற்றை விரிவாக்குவதற்கான கரிசனைகளே கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

இதனால் மலையகத்தில் தேயிலை உற்பத்தி கூடப் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. மட்டுமல்ல பதிலாக வேறு பெரிய தொழிற்துறைகளும் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அதிலும் வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட போரினால் பிற தொழில்துறைகளும் உற்பத்திக் கட்டமைப்புகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதை மீளமைக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் நூறு வரையான உற்பத்தி நிறுவனங்கள் இயங்கின. மில்க்வைற், அமுதன், லாலா போன்ற சவர்க்கார உற்பத்தி, ஆணித் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, கைத்தறி மற்றும் மின்தறி ஆலைகள், அலுமினியத் தொழிற்சாலைகள், வாளி உற்பத்தி எனப் பல உற்பத்தி மையங்கள் இயங்கின. இவற்றில் பல நூற்றுக்கணக்கானோர் வேலை செய்தனர். இதை விட காங்கேசன் சீமெந்துக் கூட்டுத்தாபனம், ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் போன்றவற்றில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்தனர். இன்று இவற்றில் ஒன்று கூட இல்லை. 

இதைப்போலவே கிழக்கில் வாழைச்சேனை காகித ஆலை தொடக்கம் கைத்தறிகள், மெஸின்தறிகள் என்று புடவை உற்பத்தி பெரிய அளவில் நடந்தது. இப்போது இதொன்றுமில்லை. அல்லது வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளன. அப்படியென்றால் தொழிலுக்கு, வருவாய்க்கு, வாழ்வாதாரத்துக்கு மக்கள் எங்கே போவது? என்ன செய்வது? 

இதனால் தவிர்க்கவே முடியாமல் விவசாயத்தையே பெரும்பாலோனோர் தமது ஒரே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் சட்ட விரோதமாகவும் அத்துமீறலாகவும் மக்கள் காடுகளை அழித்து விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கான காரணங்களில் ஒன்று பிற தொழிற்துறைகள் இல்லாமையே. 

எனவே பெரும்பாலானோர் நீர்ப்பாசன வாய்ப்பில்லாத நிலங்களில் கூட மழையை நம்பி மானாவாரிச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய தொழிலும் வருவாயும் வாழ்வும் இந்தப் பெரும்போகச் செய்கையிலேயே தங்கியிருப்பதால் அரசாங்கமானது நடைமுறை யதார்த்தை உணர்ந்து வரையறுக்கப்பட்ட அளவிலேனும் அசேதனப்பசளைக்கு இடமளித்து கட்டம் கட்டமாக சேதனப் பசளைப் பாவனைக்குச் செல்லும் வகையைச் செய்ய வேண்டும். அதுவே விவசாயிகளையும் உற்பத்தியையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும். ஆகவே அரசாங்கம் தன்னுடைய தீர்மானத்தைப் பரிசீலனை செய்து விவசாயிகளையும் விவசாயத்துறையையும் வளப்படுத்த வேண்டும். 

மாற்றம் என்பது படிப்படியாக நிகழ்வதும் நிகழ்த்தப்படுவதுமாகும். திடீரெனத் திருப்பினால் அல்லது வளைத்தால் அது முறிவிலும் சிதைவிலுமே போய் முடியும்.