யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்

   — கருணாகரன் — 

யாழ்ப்பாணத்தின் மருத்துவச் சரித்திரத்தில் இரண்டு பெயர்கள் முக்கியமானவை. ஒன்று Dr.சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr.Samuel Fisk Green); இரண்டாவது Dr.சத்தியமூர்த்தி.  

1800இன் பிற்பகுதியில் Dr.கிறீன் யாழ்ப்பாணத்தின் மருத்துவத்துறையில் ஒரு புதிய பாதையைத் திறந்தார்.  

அதுவரையும் தமிழ் வைத்தியம் அல்லது கை வைத்தியம் என்று சொல்லப்படும் மரபுவழியான சித்த மருத்துவமே நடைமுறையிலிருந்தது.  

Dr.கிறீனுடைய காலகட்டத்திலேயே ஆங்கில மருத்துவத்துறை யாழ்ப்பாணத்தில் பரவலாக்கமடைந்தது. 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மருத்துவத்துறையில் பயின்ற Dr.கிறீன் இலங்கைக்கு வந்து பருத்தித்துறை, வட்டுக்கோட்டை, மானிப்பாய் ஆகிய இடங்களில் அமெரிக்க மிஷனில் பணியாற்றினார். அப்பொழுதுதான் மானிப்பாயில் ஒரு மருத்துவமனையை Dr.கிறீன் ஆரம்பித்தார். இன்றும் அது Dr.கிறீனின் ஞாபகார்த்த மருத்துவமனையாக இருப்பதைக் காணலாம். அந்த மருத்துவமனையை ஆரம்பித்ததோடு Dr.கிறீன் நிற்கவில்லை. யாழ்ப்பாணத்தில் முறைப்படுத்தப்பட்ட மருத்துவக் கற்கையை அவர் ஆரம்பித்தார். அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 115 பேர் பட்டம்பெற்று வெளியேறிச் சேவையாற்றினார்கள். இதைத் தவிர Dr.கிறீனின் பணிகள் வேறு துறைகளிலும் இருந்தன.  

அவைபற்றி இன்னொரு போது பார்க்கலாம். ஆனால் Dr.கிறீனின் மருத்துவப் பங்களிப்பே யாழ்ப்பாணத்தின் பெருந்திரள் சமூகத்தின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் முறைமையைத் திறந்தது. இதுவே இன்றுவரை தொடர்கிறது. 

Dr.கிறீனைப் போன்ற இன்னொரு ஆளுமையாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி இன்று விளங்குகிறார். Dr.சத்தியமூர்த்திக்கு முன்னரும் சமகாலத்திலும் மிகச் சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க பலர் யாழ்ப்பாணத்தில் மருத்துவப் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். நெருக்கடி காலத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றியிருக்கின்றனர். ஆனால் அவர்களைக் கடந்த ஒரு ஆளுமையாக Dr.சத்தியமூர்த்தி விளங்குகிறார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

சத்தியமூர்த்தியாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைப் பொறுப்பேற்ற 2015 ஒக்ரோபருக்குப் பின்னரான ஆறு ஆண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  

மாற்றங்களை யார் உருவாக்குகிறார்களோ, அவர்களே புதிய வாசல்களைத் திறக்கின்றனர். இந்தப் புதிய வழிகளில்தான் மக்கள் உச்சமான பயனைப் பெறமுடிகிறது. இந்த மாற்றங்களை இரண்டு பிரதான வகையாக  நோக்க முடியும். 

1. மருத்துவச் சேவையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும். 

2. மருத்துவமனையின் நிர்மாணம் மற்றும்  கட்டமைப்பு விரிவாக்க வளர்ச்சியும் மருத்துவச் சேவையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும். 

நோயாளர்களை முதன்மையாகக் கொண்ட, மக்கள் நலனை  மையப்படுத்திய மருத்துவச் சேவையும் நிர்வாகமும் என்ற எண்ணக் கருவில் போதனா மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சேவை முறைமையும் Dr.சத்தியமூர்த்தி உருவாக்கினார். இதனால் தேவையற்ற விதமாக இறுக்கமாக்கப்பட்டிருந்த மருத்துவப் பணிகளும் மருத்துவமனை நிர்வாகமும் நெகிழ்ச்சியடைந்து அனைவருக்கும் சுமையற்ற விதமாகின. 

இதனால் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களான பொதுமக்களும் நிறைவடைந்தனர். இந்த நிறைவு  பலரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடவே எவரும் பணிப்பாளரையும் பொறுப்பான உத்தியோகத்தர்களையும் சந்தித்துத் தேவையான விடயங்களைப் பற்றி நட்புணர்வுடன் பேசவும் ஆலோசனைகளைப் பெறவும் முடியும் என்ற நிலையையும் உருவாக்கினார் சத்தியமூர்த்தி. குறைபாடுகளைக் களையவும் மருத்துவப் பணிக்குழுவினர் புத்தூக்கம் பெறவும் இந்த நடைமுறை உதவியது. இது மேலும் உற்சாகத்தை மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கியது. இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனை பலருடைய பாராட்டுக்கும் உரியதாக மாறியதற்கு இது அடிப்படைக் காரணமாகும். 

எனினும் போதனா மருத்துவமனையில் போதிய ஆளணி இல்லை. வளப்பற்றாக்குறையும் உண்டு. முக்கியமாக தாதியர் பற்றாக்குறை உண்டு. இருந்தாலும் இதைக் கடந்து தாதியர்கள் மிகுந்த வேலைச்சுமையோடு பணியாற்றி வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் நிறைவோடு, மகிழ்ச்சியோடுதான் செய்து கொண்டிருக்கின்றனர். 

முன்பு மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக கண்டி, கொழும்பு நோக்கிச் செல்லவேண்டியிருந்தது. அந்த நிலையை மாற்றியதில் Dr.சத்தியமூர்த்தியின் பங்களிப்புப் பெரிது. இப்பொழுது திறந்த இருதய அறுவைச் சிகிச்சையைக் கூட யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஏறக்குறைய ஒரு தேசிய மருத்துவமனையின் சேவைகளையும் வளங்களையும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இன்று கொண்டுள்ளது. 

மருத்துவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அதற்கான மனநிலையும் சூழற் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பது இதற்கான அடிப்படையாகும். மக்கள் இன்று இந்த மருத்துவர்களை மிக அந்நியோன்னியமாக நேசிக்கின்றனர். குறிப்பாக கொரோனா நெருக்கடி நிலையில் தளர்வின்றி பணிசெய்யும் மருத்துவர்களும் பணியாளர்களும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். இதில் பணிப்பாளர் கொண்டிருக்கும் சிரத்தையும் களத்தில் அவர் முன்மாதிரியாக நடந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. 

மருத்துவமனையின் நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு விரிவாக்க வளர்ச்சியும் 

2015க்குப் பின்னர் துரிதகதியில் போதனா மருத்துவமனையில் பல்வேறு நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனை பெற்றிருக்கும் மிகப் பிரமாண்டமான வளர்ச்சியானது  மக்களுடைய நம்பிக்கையின் குறியீடேயாகும்.  

மருத்துவமனை வரலாற்றில் இது ஒரு பொற்காலமே. நவீன மருத்துவமனைக்கான உள்ளடக்கத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட – சிறந்த நிர்மாணிப்பணிகளை தான் நிர்வாகப் பொறுப்பை ஏற்றகையோடு சத்தியமூர்த்தி ஆரம்பித்தார். இதற்காக அவர் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றினார். ஒன்று, அரச உதவிகளைப் பெற்றுக் கொண்டமை. இரண்டாவது, வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வது. மூன்றாவது புலம்பெயர் சமூகத்தினரின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து உதவிகளைப்  பெறுவது. இந்த மூன்று வகையான உதவிகள் மற்றும் நிதிப்பங்களிப்புகளின் மூலமாக துரிதகதியில் மருத்துவமனையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக சுகாதார அமைச்சினால் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட இலகு கடன் மூலம் ஆறு தளங்களைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் இரண்டு தளங்களும் 2019இல் திறந்து வைக்கப்பட்டன. இதன் பெறுமதி 590 பில்லியனாகும். மீதி நான்கு தளங்களுக்குமான ஒதுக்கீடு 1300 பில்லியன். 

இன்னொன்று குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் நிதிப்பங்களிப்பினால் 530 பில்லியன் ரூபாய் பெறுமதியான மீள்வாழ்வுச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சேவைகள் இன்றைய நிலையில் முக்கியத்துவமாக உள்ளன. கூடவே ஆஸ்பத்தியோடு ஆஸ்பத்திரி வீதியோரத்தில் அரச ஒசுசல என்ற அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தியின் விற்பனையகத்தையும் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளார் Dr.சத்தியமூர்த்தி. இதன் மூலம் குறைந்த விலையில் மருந்துப் பொருட்களையும் மருத்துவப் பொருட்களையும் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். 

இதைவிட சுகாதார அமைச்சின் நிதியில் சுமார் 100க்கு மேற்பட்ட தாதியர்கள் தங்கக் கூடிய தாதியர் உள்ளக விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

புலம்பெயர்ந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தின் நிதிப்பங்களிப்பைப் பெற்று 112.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 160 ஸ்லைஸ் சி.ரி ஸ்கானர் வாங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச உதவியின் மூலம் ரூபா 350 மில்லியன் பெறுமதி வாய்ந்த எம். ஆர். ஐ ஸ்கான் இயந்திரம் பொருத்தப்பட்டு 2020 சனவரி முதல் யாழ் போதனா மருத்துவமனையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எம்.ஆர். ஸ்கான் செய்வதற்காக நோயாளர்கள் கொழும்புக்கு அல்லது கண்டிக்கே எடுத்துச் செல்லப்பட்டனர். இன்று அந்தச் சிரமம் இல்லை. 

மேலும் புதிய துறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அதற்கான ஆளணி ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்பது உண்மை. இதைப் புரிந்து கொண்டு பலரும் புரியாமற் சிலரும் நடந்து கொள்கின்றனர். ஆனால், சிலர் இதை  தமக்குச் சுமையெனக் கருதி ஒரு விவகாரமாக்க முயற்சிக்கின்றனர்.  

மக்களின் (நோயாளரின்) நிலைமையை மனதிற் கொண்டு சிந்தித்தால் இவ்வாறு இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்காது. 

இன்று யாழ்.போதனா மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். மொத்தமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றும் மிகப் பெரிய நிறுவனம் இந்தப் போதனா மருத்துவமனையாகும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த மருத்துவனையில் தினமும் சராசரியாக 5000க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. சில சிகிச்சைகளுக்காக திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். 

யாழ்.போதனாவில் தொலை மருத்துவம் (TH Jaffna hosts Telemedicine) 

உலகில் இணைய வழியாகப் பொருட்கள்– சேவைகள் பரிமாற்றங்கள்கல்விச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.  

யாழ்.போதனா வைத்தியசாலையானது நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவர்கள், தாதியர்கள் முதலானோருக்கான கற்றல் செயற்பாடுகளையும் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான தொலை மருத்துவ (Telemedicine) சேவை 2019இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது தொலை மருத்துவ சேவைகள் 3 நிலைகளில் நடைபெறுகின்றன. 

 உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள்வைத்திய நிபுணர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் தன்னார்வமாக,நிபுணத்தவ ஆலோசனைகளை எமக்கு வழங்கிவருவது மகிழ்ச்சிக்குரியது. இவர்கள் அனைவருக்கும் யாழ்போதனா வைத்தியசாலை சார்பில் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். 

 2019 செப்ரெம்பர்- 2021 செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் வடபகுதி மருத்துவர்களுடன் பன்னாட்டு விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட 200 இற்கும் அதிமான தொலைமருத்துவக் கருத்தரங்குகள் யாழ். போதனா வைத்தியசாலையால் ஒழுங்குபடுத்தப்பட்டு நிறைவேறியுள்ளன. வடபகுதியின் பல்வேறு வதை்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் 1500இற்கும் அதிகமானவர்களது  (CT and MRI)  வரைவுகளுக்கு பன்னாட்டு பல்துறைசார்  விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட multidisciplinary team (MDT) கலந்துரையாடல்களில் தீர்வுகள் காணப்பட்டமை மிகவும் தனித்துவம் வாய்ந்துதும் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமுமாகும். இவ்வாறான உலகின் முன்னணி துறைசார் மருத்துவப் பேராசிரியர்களது கருத்தமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவது இலங்கையில் யாழ். போதனாவில் மட்டுமே என்பது சிறப்புடன் குறிப்பிடத்தக்கது. இதற்கான தொழிநுட்ப வசதியையும் நிபுணர்களது தொடர்பையும் ஏற்படுத்திக்கொடுத்தவர் வைத்தியநலாநிதி சத்தியமூர்த்தி என்பதை வைத்திய நிபுணர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் நன்றியுடன் தெரிவிக்கின்றனர்.  

சத்தியமூர்த்திக்கு முன்னர் போதனா மருத்துவமனையின் இயங்கு நிலை குறித்த அனுபவத்தை இரண்டு வகையாக நோக்க முடியும். 

1.நோயாளர்களின் அனுபவத்தின் வழியாக 

2.மருத்துவ ஊழியர்களின் அனுபவம் மூலமாக. 

நோயாளர்களின் அனுபவத்தின் வழியாக 

போதனா மருத்துவனையை பொலிஸ் நிலையத்தைப்போல அச்சத்துடன் பார்த்த காலமொன்று இருந்துள்ளதையும் பலரும் அறிவர். அந்தளவுக்குக் கெடுபிடிகள் கோலோச்சியிருந்தன. அல்லது திருப்தியற்ற மனதுடன் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலை இன்று  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பொறுத்தவரையில் இது முக்கியமான ஒன்று. பொது மருத்துவமனையில் உரிய மருத்துவசேவையை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது எவ்வளவு பெரிய சங்கதி. இதனால்தான் வெளிமாவட்ட மக்களும் நம்பிக்கையோடு இந்தப் போதனா மருத்துவமனைக்கு வருகின்றனர். மட்டுமல்ல கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட, ஆதார, பிரதேச மருத்துவமனைகளுக்கான தாய் மருத்துவமனையாகவும் யாழ் போதனா மருத்துவமனையே விளங்குகிறது. இங்கிருந்து வருகின்ற மக்களின் மனதிலும் இன்று யாழ் போதனா மருத்துவமனை திருப்திகரமான நிலையைப்பெற்றுள்ளது. 

மருத்துவ ஊழியர்களின் அனுபவம் மூலமாக 

முப்பத்தெட்டு ஆண்டுகளாக இந்தப் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த பணியாளர் ஒருவர் சொன்னார், தன்னுடைய சேவைக்காலத்தில் ஏழுக்கும் அதிகமான பணிப்பாளர்களின் கீழ் பணியாற்றியபோதும் இப்போதுள்ளதைப்போன்ற ஒரு முன்னேற்றமான நிலையை தான் காணவில்லை என்றார். முக்கியமாக ஊழலற்ற நிர்வாகத்தை சிரமங்களின் மத்தியில் Dr.சத்தியமூர்த்தி உருவாக்கியுள்ளார். மேலும் புரிந்துணர்வுடன் மதித்து பணியாளர்களையும் மருத்துவக்குழுவினரையும் நடத்துகின்ற நிர்வாகத்தையிட்டு தான் ஓய்வு பெறுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ முடிகிறது என்று. அவர் குறிப்பிட்டுள்ள முக்கியமான விசயம், ஊழல் முறைகேடுகள் தொடர்பானது. நீண்டகாலமாகவே கண்டு பிடிக்கவும் கட்டுப்படுத்துவும் கடினமான முறையிலான ஊழல் இந்த மருத்துவமனையில் நிலவியதைப் பலரும் அறிவர். 

ஊழலுக்கு எதிரானவர் Dr.சத்தியமூர்த்தி என்பதால்தான் அவருக்கு ட்ரான்பரன்ஸி இன்ரநாஷனல் அமைப்பினால் இன்டக்கிறிட்டி ஐக்கன் 2019 விருது வழங்கப்பட்டது. இதைப்போல சத்தியமூர்த்தியின் தன்னலமற்ற மனிதாபிமான சேவைக்கு மதிப்பளித்து அமெக்காவின் இன்ரர் அக்ஸன் போரம் A united voice for Global Change விருதினை வழங்கியது. 

மாற்றம், வளர்ச்சி, புதுமை, அர்ப்பணிப்பான சேவை என்றெல்லாம் ஒரு செயற்பாட்டு அடையாளத்தை உருவாக்கினாலும் நெருக்கடிகளை ஏற்படுத்த முனையும் சக்திகளின் சதி வலை இன்று போதனா மருத்துவமனையை அபாயத்திற் தள்ளியுள்ளது. இதற்குச் சில ஊடகங்களும் பொறுப்பற்ற முறையில் துணைபோகின்றன. இது மக்கள் விரோதச் செயற்பாடாகும். தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு சவாலாக போதனா மருத்துவமனையை இவர்கள் கருதுகிறார்கள். இதன் வெளிப்பாடே இதுவாகும்.  

இந்தத் தவறான – அபாயமான போக்குக்கு யாழ்ப்பாணச் சமூகம் இடமளிக்குமானால் அது மிகப்பெரிய வீழ்ச்சியிற்தான் கொண்டுபோய் விடும். இதனால் முதலில் நேரடியாகப் பாதிப்படைவது ஏழை மக்களும் இடைநிலையாளர்களுமேயாகும். இதைக்குறித்துச் சிந்திக்க வேண்டிய – செயற்பட வேண்டிய அவசியத்தில் வடக்கின் புலமையாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.