‘கவிதை கேளுங்கள்’

‘கவிதை கேளுங்கள்’

(முகநூல் குழுமக் கவிதைகளுக்கான ‘வட்ஸப்’ களத்தினால் கவிஞர் பாத்திமாமைந்தன் (மொகமட் அன்ஸார்) அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுவரும் ‘கவிதைகள் ஏன்? எதற்கு?எப்படி?’ எனும் தலைப்பிலான இணையவழி இலக்கியச் சந்திப்புத் தொடரின் முதலாவது சந்திப்பில் 30.07.2021 அன்று ‘கவிதை இலக்கியம்: ஒரு காலக்கண்ணோட்டம்’ எனும் தலைப்பில் கொழும்பு, வலம்புரி கவிதாவட்டத்தின் ஸ்தாபகத் தலைவர் கவிஞர் வைத்தியகலாநிதி தாஸிம்அகமது அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இச்சந்திப்புத் தொடரின் 04.09.2021 அன்று நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ‘கவிதையின் வடிவம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது. இளங்கவிஞர்களுக்கு இது உதவும். — ஆசிரியர்) 

கவிதையின் வடிவம்‘ 

‘கவிதையின் வடிவம்’ எனும்போது யாப்பருங்கலக்காரிகை கூறும் கவிதையின் இலக்கணவிதிகளைக் கூறும் வகுப்பெடுக்க நான் வரவில்லை. ஆசிரியப்பா- வஞ்சிப்பா- வெண்பா – கலிப்பா போன்ற பா வடிவங்களை விளங்கப்படுத்தவோ அல்லது பள்ளு- பிரபந்தம் – அந்தாதி போன்ற பாவினங்களைப்பற்றி விளக்கமளித்தலோ எனது நோக்கமும் அல்ல. ஆனால் உணவு உண்ணும்போது ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல எனது உரையின் போது தேவைகருதி இவற்றினைத் தொட்டுச்செல்வனே தவிர அவை பற்றிய விளக்கங்கள் இடம்பெறாது. 

‘கவிதையின் வடிவம்’ என்ற பதத்தால் நான் குறிப்பிடுவது என்னவெனில் ஒரு கவிதையின் புறத்தோற்றம் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை மட்டும்தான். 

உதாரணத்திற்கு ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால் அவனுக்குள்ளே இருதயம், இரப்பை, நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் உள்ளன. ஆனால் அம்மனிதனின் புறத்தோற்றம் எனப்படுவது தலை, கண், காது, மூக்கு, வாய், கழுத்து, கை, கால், இடுப்பு, தோள், மார்பு, விரல்கள் என வெளித்தெரியும் உறுப்புகள் ஒன்றோடொன்று பொருந்தியிருப்பதுதான். எனவே, ஒரு மனிதனின் புறத்தோற்றத்தைக் காட்டுவது போலவே, ‘கவிதையின் வடிவம்’ என்ற தலைப்பிலான எனது உரை கவிதையின் புறத்தோற்றம் பற்றியே இடம்பெறும் என்பதை இக்கலந்துரையாடலில் பங்குகொள்ளும் அன்பர்கள் மனங்கொள்ளவேண்டுமென்று முதலில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்;. 

கவிதைக்கு உருவம்- உள்ளடக்கம்- உணர்ச்சி வெளிப்பாடு என்பன அதன் கூறுகளாக உள்ளன. அவை அவசியம்தான். இலக்கியம் என்பது கற்பனையும் அழகியலும் சேர்ந்த கலவைதான். ஆனால், அவை பொங்கலுக்குள் பயறு இருப்பது போல அளவோடு இருக்கவேண்டும். அதீத கற்பனைகளும் இலக்கியக் கனதியைக் குறைத்துவிடும். அதேபோலதான் அழகியலும். அழகியல் அம்சங்களாக உவமை- உருவகம்- உயர்வுநவிற்சி- தற்குறிப்பேற்றம் போன்ற அணிகள் விளங்குகின்றன. புதுக்கவிதையாளர்கள் இவற்றைப் படிமம்- குறியீடு எனக் குறிப்பிகிறார்கள். கற்பனை போல் அழகியல் அம்சங்களும் அளவோடுதான் இருக்கவேண்டும். புதுக்கவிதையாளர்கள் யதார்த்தம் என்கிறார்கள். ஒரு இலக்கியம் யதார்த்தப்பண்புகளோடு அமையலாம். அதில் தவறில்லை. ஆனால் அது வெறுமனே யதார்த்தம் மட்டும்தான் எனில் அது இலக்கியம் ஆகாது. 

உதாரணத்திற்கு ஒரு தென்னைமரத்தைப்பார்த்து அது முப்பது அடி உயரம் வளர்ந்திருந்தது என்றால் அது யதார்த்தம். அதனை அறிவியல் என்றும் சொல்லலாம். ஆனால் அதனை அத்தென்னைமரம் வானைமுட்ட உயர்ந்திருந்தது என்றால் அதுதான் கலை. அதுதான் இலக்கியம். அறிவியலுக்கும் அதாவது யதார்த்தத்துக்கும்- கலைக்குமுள்ள வேறுபாடு இதுதான்.  

மாமரத்தில் ஒரு மாங்குலையை நாம் நேரில் பார்க்கிறோம். அது யதார்த்தம். அது எந்தக் கிளர்ச்சியையும் எம்முள் ஏற்படுத்துவதில்லை. அதனை ஆய்ந்து உண்ணவேண்டும் என்ற விருப்பத்தைத்தவிர. அதுவும் சிலவேளைகளில்தான். ஆனால் அதே மாங்குலை ஒரு ஓவியனால் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்போது அல்லது அம்மாங்குலை சிற்பி ஒருவனால் தத்ரூபமாகச் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும்போது அந்த ஓவியத்தையோ அல்லது சிற்பத்தையோ நாம் காணும்போது அக்காட்சி நம்முள் ஒரு வித்தியாசமான உணர்வுக் கிளர்ச்சியை உருவாக்கும். அதேபோல்தான் கவிதையும். அதைப் படிப்போனுக்கு அதாவது நுகர்வோனுக்கு ஒரு கிளர்ச்சியை அது உருவாக்கவேண்டும். 

இந்தப் பின்புலத்தில் கவிதையின் வடிவத்தை நோக்குவோம். கவிதைக்கு ஆரம்பத்தில் நான் கூறியதுபோல உருவம்- உள்ளடக்கம்- உணர்ச்சிவெளிப்பாடு மற்றும் உவமை- உருவகம் – உயர்வுநவிற்சி- தற்குறிப்பேற்றம்- படிமம்- குறியீடு என்பன பெறுமதி சேர்ப்பனவென்றாலும்கூட கவிதையின் உயிர்நாடி ஓசைதான். ஓசையில்லாதது கவிதையல்ல. ஓசையற்ற எதனையும் கவிதை இலக்கியத்துக்குள் அதாவது ‘பா’ இலக்கியத்துக்குள் வைத்துப் பார்க்கமுடியாது. புதுக்கவிதை வடிவத்திற்கு ஓசை ஒரு பொருட்டல்ல என்பது பொதுவிதி. புதுக்கவிதையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் புதுக்கவிதைப்போக்கு உரைநடையின் ஓர் உன்னதமான வளர்ச்சியேதவிர அதனைக் கவிதை இலக்கியத்திற்குள் அதாவது ‘பா’ இலக்கியத்துக்குள் வகைப்படுத்த முடியாது. கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் தனது ஆய்வு முடிவுகளின்படி புதுக்கவிதை வடிவத்தைப் ‘பொழிச்சல்’ எனும் புதுவகை உரைநடை இலக்கியத்துக்குள் வகைப்படுத்தியிருக்கின்றார். 

எனவே, கவிதைக்கு உயிர்நாடியாக இருக்கின்ற ஓசையே இன்றைய எனது உரையின் குவிமையமாகும். கவிதையொன்றிற்குக் ‘கவிதை’யென்று அது அழைக்கப்படுவற்கான வடிவத்தைக் கொடுப்பது அக்கவிதை தரும் ஓசைதான். புதுக்கவிதையாளர்களைப்போல் வாக்கியத்தை முறிந்து அவற்றை வரிசையிலே வைத்து எழுவது கவிதையின் வடிவம் அல்ல. கவிதை என இனங்காட்டுவது அது எழுப்புகிற ஓசை இன்பம்தான். 

கவிதைக்கு ஓசையை வழங்குகின்ற சில பிரதான கூறுகளைப் பார்ப்போம். 

‘மோனை’ என்பது முதலெழுத்து ஒன்றிவருவது. 

(உ+ம்) 

 கற்க கசடற கற்பவை கற்றபின் 

 நிற்க அதற்குத் தக. 

இங்கே கற்க – கசடற – கற்பவை – கற்றபின் என நான்கு ‘சீர்’களைக் கொண்ட முதல்வரியில் ‘க’ எனும் எழுத்து ஒன்றிவருகிறது. 

இன்னோர் (உ+ம்) 

புகழேந்திப்புலவர் ‘வெண்பா’வில் பாடிய ‘நளவெண்பா’வில், ‘கானகத்தில் காரிகையைக் காரிருளில் கைவிட்டு எனும் வரியினைக் காட்டலாம். 

‘எதுகை’ என்பது அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது  

(உ+ம்)

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக. 

எனும் ‘குறட்பா’வில் முதலடியில் வரும் ‘கற்க’ என்பதும் இரண்டாமடியில்வரும் ‘நிற்க’ என்பதும் எதுகைகள் ஆகும். 

கம்பராமாயணத்திலே ஒரு பாடலைப்பார்க்கலாம். 

‘வாரணம் பொருத மார்பும் வரையினையெடுத்த தோளும்  

நாரத முனிவர்க்கேற்ப நயம்படவுரைத்த நாவும் 

தாரணி மௌலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும் 

வீரமும் களத்தேபோக்கி வெறுங்கையோ டிலங்கை புக்கான்’ 

இங்கே, முதலடியில் வரும் ‘வார’ – இரண்டாமடியில் வரும் ‘நார’ – மூன்றாமடியில் வரும் ‘தார’ – நான்காமடியில் வரும் ‘வீர’என்பவை எதுகைகள் ஆகும். 

முதலாமடியில் வரும் ‘வா’ரணம் – ‘வ’ரையினை என்பவற்றில் ‘வா’ மற்றும் ‘வ’ என்பன ஒன்றிவருதலால் இவை மோனைகள் ஆகும். 

இரண்டாமடியில் வரும் ‘நா’ரதர் – ‘ந’யம்பட என்பவற்றில் ‘நா’ மற்றும் ‘ந’ ஒன்றிவருதலால் இவையும் மோனைகள் ஆகும்.  

மூன்றாமடியில் மோனை வரவில்லை. ஆனால் நான்காமடியில் அதாவது இறுதியடியில் வரும்’வீ’ரமும் – ‘வெ’றுங் என்பவற்றில் ‘வீ’ மற்றும் ‘வெ’ என்பன ஒன்றிவருவதால் இவை மோனைகள் ஆகும். 

கவிதைக்கு ‘மோனை’யும் ‘எதுகை’யும் ஓசையை – சந்தத்தை வழங்குகின்றன. மேற்கூறப்பெற்ற குறட்பாவிலும் கம்பராமாயணப் பாடலிலும் இவற்றை நாம் கண்டோம். 

மேலும், அடிப்படை இலக்கணத்திலிருந்து பார்க்கும் போது முதலில் வருவது ‘எழுத்து’ அது நீங்கள் எல்லோரும் அறிந்ததொன்றுதான். எழுத்துக்கு அடுத்தது ‘அசை’. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக எழுத்தின் ஒலி வடிவத்தை ‘அசை’ எனலாம். எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து (அசையும் போது அதாவது ஒலிக்கும்போது) ‘சீர்’ வருகிறது. ‘சீர்’ என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்வதற்காக அதனை சொல் – வார்த்தை –பதம் என எடுத்துக்கொள்ளலாம்.  

சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டம் ‘தளை’ எனப்படும்.  

‘கற்க/கசடற/கற்பவை/கற்றபின் 

 நிற்க/அதற்குத்/தக.’ 

என்ற குறட்பாவின் முதலடியில கற்க- கசடற-கற்பவை- கற்றபின் எனும் நான்கு சீர்களும் இரண்டாமடியில் நிற்க- அதற்குத்- தக எனும் மூன்று சீர்களும் வருகின்றன. இது தான் குறட்பாவின் வடிவம். எழுத்து -அசை -சீர் -தளை எனும் ஒழுங்கை உணர்த்துவதற்காகத்தான் இது பற்றிச் சொன்னேனே தவிர இவை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் கவிதையை எழுதத்தொடங்கும் போது (அதாவது முதலாம் அடியிலேயே) இவை தானாக வந்துவிடும். தளை தானாகவே வந்துவிடும். கவனம் எடுக்கவேண்டியதும் முயற்சியெடுக்கவேண்டியதும் கவிதையின் அடிகளில் மோனை மற்றும் எதுகையைக் கொண்டுவருவதில்தான். ஏனெனில் இவைதான் கவிதைக்கு ஓசையை உண்டாக்குபவை.   

அடுத்து ‘தொடை’. கவிதையின் அடிகளை ஒன்ரோடொன்று தொடுப்பது ‘தொடை’ஆகும். கவிதையின் ஓசைக்கும் – இனிமைக்கும்- சிறப்புக்கும் தொடை அவசியம். இதனை ‘இயைபு’ எனவும் இயம்பலாம். 

(உ+ம்)  

‘குற்றாலக்குறவஞ்சி’ எனும் சிற்றிலக்கியத்தில் வரும் வரிகள்  

‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்!  

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்!’  

இங்கே கொஞ்சும்! கெஞ்சும்! என்பன இயைபுத் தொடைகள் ஆகும். 

பாரதியின் பாடலொன்றினைப் பார்ப்போம். 

‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே! – இன்பத்  

தேன்வந்து பாயுது காதினிலே!’ 

இங்கே போதினிலே! – காதினிலே! என்பன இயைபுத் தொடைகளாகும். 

எனவே கவிதையொன்றிற்குச் சந்தத்தை –ஓசையை வழங்குகின்ற மோனை – எதுகை – இயைபுத்தொடை என்பன பிரதான கூறுகளாகும். ஆசிரியப்பா – கலிப்பா- வெண்பா – அகவல்பா – விருத்தப்பா போன்ற ‘பா’ வடிவங்கள் உண்டு. மட்டுமல்ல பாவினங்கள் கலம்பகம் – கட்டளைக்கலித்துறை – கும்மி – சிந்து எனத் தொடரும். ‘குறும்பா’ வடிவத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். 

ஆனால் ‘பா’ வடிவங்களைப் பற்றிப் படித்துவைத்துக்கொண்டு அல்லது பாவினங்களைத் தெரிந்துவைத்துக்கொண்டுதான் கவிதையொன்றைப் படைக்க வேண்டும் அல்லது படைக்க முடியும் என்பதல்ல. அப்படியாயின் சமையற்கலைப் புத்தகத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதனைப் பார்த்துப் பார்த்துச் சமைப்பது போலாகிவிடும். அதில் உருசி இருக்காது. சமையலும் ஒரு கைவண்ணம். அதுபோல் கவிதையும் ஒரு கலைவண்ணம். 

நான் யாப்பருங்கலக்காரிகையைக் கரைத்துக்குடித்துக் கொண்டு அல்லது பண்டைத்தமிழ் இலக்கியங்களையெல்லாம் பாடம் பண்ணிவிட்டுக் கவிதையெழுதவரவில்லை. 

பால்ய வயதிலிருந்தே என்னிடம் தீவிரமான வாசிப்புப் பழக்கம் இருந்தது. எனது பதின்ம வயதிலே அப்போது 1950/60களில் எஸ்.எஸ்.சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எனது மூத்த சகோதரிகளுக்குப் பாடப் புத்தகமாகவிருந்த கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்களின் ‘மலரும் மாலையும்’ எனும் கவிதைத் தொகுப்புநூலைப் பலமுறை படித்தேன். கவிதையில் ஈர்ப்பும் ஈடுபாடும் வந்தது. கூடவே கவிதை எழுதவும் எனக்கு வந்தது. 

அதன்பின்புதான் பாரதியையும் – பாரதிதாசனையும் – கண்ணதாசனையும் (அவரது கவிதைகளைக் குறிப்பிடுகிறேன். திரைப்படப் பாடல்களை நான் குறிப்பிடவில்லை) –  

காசிஆனந்தனையும் பின்னாளில் பண்டைத்தமிழ் இலக்கியங்களையும் படிக்கக்கிடைத்தது. இப்போதுகூட யாப்பிலக்கணம் பற்றி முழுமையாக எனக்குத் தெரியாது. அவற்றை ஓரளவுதான் கற்றுக்கொண்டுள்ளேன்.  

கவிதையில் ஈர்ப்பும் – கவிதைபற்றிய புரிதலும் – மொழிப்புலமையும் – சொல்லாட்சியும்- கற்பனைத்திறனும் – உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டுமென்ற உந்துதலும் ஒருவருக்கு வாய்த்துவிட்டால் கவிதை தானாகவே ஊற்றெடுக்கும். கவிதை தானாகவே தாளில் இறங்கும். 

பண்டைத்தமிழ் இலக்கியங்களையெல்லாம் படிப்பதற்குச் சமகாலச் சூழலில் நேரம் கிடைப்பது அரிது. குறைந்தபட்சம் பாரதியையும் – பாரதிதாசனையும் – கண்ணதாசனையும் – காசிஆனந்தனையும் படியுங்கள். காலம் கிடைத்தால் கம்பனையும் (கம்பராமாயணம் விருத்தப்பாக்களால் ஆனது) இளங்கோவையும் (சிலப்பதிகாரம் அகவற்பாக்களால் ஆனது) படியுங்கள். 

வெறுமனே சேரனையும் ஜெயபாலனையும் சோலைக்கிளியையும் படித்துவிட்டுப் பேனாவைத் தூக்காதீர்கள். 

மேத்தாவையும் அப்துல்ரகுமானையும் வைரமுத்துவையும் மட்டும் படிக்காதீர்கள்! 

மஹாகவியையும் – நீலாவணனையும் – முருகையனையும் தேடிப்படியுங்கள். கவிதையின் வடிவம் ‘வாலாயம்’ ஆகிவிடும். மஹாகவி கூறியிருப்பதைப்போல, 

இன்னவைதான் கவி எழுத 

ஏற்றபொருள் என்று பிறர் 

சொன்னவற்றை நீர் திருப்பிச் 

சொல்லாதீர்! சோலை, கடல், 

 மின்னல்முகில்தென்றலினை 

 மறவுங்கள்! மீந்திருக்கும் 

 இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு 

 என்பவற்றைப் பாடுங்கள்!’ 

கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் தனது’தமிழன் கனவு’ குறுங்காவிய நூலில் தமிழர் தாயகத்தின் வளம் குறித்து வடித்த கவிதை வரிகள் இவை. 

வேரோடு பலாக்கனி தொங்கும் – ஆங்கே 

  வெள்ளாடு பழத்தின் மேல் முதுகுதேய்க்கும் 

  நீரோடை வெள்ளத்தில் மீனையுண்டு 

  நெஞ்சத்தால் வெறிகொண்ட கொக்கினங்கள்  

  கூரான வாய் கொண்டு மரத்தின் கொம்பில்  

  கூட்டுத்தேன் உடைத்தலும் தேனின் ஆறு 

  பாரெல்லாம் பெருக்கெடுத்தோடும் – ஆங்கோர் 

  படை மட்டும் தள்ளாடிப் பயணம் போகும்.’ 

நாட்டுவளப்பம் கூறும் சங்க இலக்கியப்பாடலுக்குச் சமதையான பாடல் இது. 

இங்கே ஆறாம் அடியில் வரும் கடைசிச் சீர் கவிதையின் (எண்சீர் விருத்தம்) சந்தம் உடையாமல் இருப்பதற்காகத் ‘தேனாறு’ என்பதற்குப் பதிலாக ‘தேனின் ஆறு’ என்று வந்திருப்பதை அவதானிக்கலாம். 

யாப்பை முற்றாகவே ஒதுக்கிவிட்டுக் கவிதையின் வடிவம் பற்றியும் கவிதையின் உயிர்நாடியான ஓசைபற்றியும் கவலைப்படாமல் வாக்கியத்தை முறித்துப்பின் வரிசையிலே வைத்தெழுதும் ‘சோடிப்புகள்’ கவிதையாகிவிடாது. 

அதுபோலவே, யாப்பமைதியோடு மட்டும் யாக்கப்படும் படைப்புகளும் கவிதையாகிவிடாது. 

(உ+ம்)  

பச்சைக்கிளி பாகற்கொடி பன்னாடையின் கூந்தல் 

கைச்சற்கொடி காவற்படை கண்ணாடியின் லாம்பு 

மிச்சப்பழி மேனிக்கொதி விண்ணோர்களின் வீம்பு 

எச்சில்கறி ஈரப்பசை எல்லாம் ஒரு கூம்பு 

இதிலே மோனை – எதுகை –இயைபுத்தொடை எல்லாமே உண்டு. ஓசையும் எழுகிறது. ஆனால் இதன்வடிவம் ஒரு உயிரற்ற உடல் போன்றது. இங்கே உணர்ச்சி வெளிப்பாடு இல்லை. கவித்துவம் இல்லை.  

கவிதையை ஒரு கனிக்கு ஒப்பிடலாம். முற்றிப்பழுத்த கனியொன்றைப் பிழிகிறபோது சாறு கொட்டும். சாறுவரவில்லையென்றால் அது கனியல்ல. கனியின் சாறு போன்றதுதான் கவித்துவம். கவிதைவேறு, கவித்துவம் வேறு. கவிதையின் வடிவம் பற்றிக் கவனமெடுக்கும் போது இந்தக் கவித்துவ நுட்பத்தையும் கவனத்திலெடுக்க வேண்டும்.  

யாப்பு ஒரு வழிகாட்டியே தவிர, யாப்பை இறுக்கக்கட்டிப்பிடித்து அழவேண்டுமென்பதல்ல. யாப்பு மீறப்படலாம். ஆனால் அது இயல்பாக மீறப்படல் வேண்டும். கவிதையின் சந்தம் -ஓசை உடையாமலிருப்பதற்கும் சொல்லவந்த பொருளை அழுத்தமாகவும் காத்திரமாகவும் வெளிப்படுத்துவதற்குத் தேவையேற்படும்போதும் யாப்பு இயல்பாக மீறப்படலாம். பாரதிகூட யாப்பை மீறிக் கவிதைகள் யாத்துள்ளான். ஆனால் அது அறிந்து – அறிந்தவனால் மீறப்பட வேண்டும். அறிந்தவனே உடைத்தால்தான் அது ஆரோக்கியமாகும் . 

எனவே, ‘கவிதையின் வடிவம்’ என்பது கூடியவரை யாப்பமைதியுடன் கூடிய –ஓசையை உள்ளடக்கியதாய் – கவித்துவமும் செறிந்ததொன்றாகும்.