— அழகு குணசீலன் —
“கிழக்கு மாகாணம் பொருளாதார அபிவிருத்திக்கான பெரும்
சாத்தியக் கூறுகளைக் கொண்ட மாகாணங்களுள் ஒன்றாகும். சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் சமூகவலுவூட்டல் ஆகிய துறைகளில் முக்கியமாக கவனம் செலுத்தி, உட்கட்டமைப்பு வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய பல்துறை மானிய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் விரிவான அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்……..”
கிழக்குமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியின் 50 பக்க வரவுசெலவுத்திட்ட உரையில் 35 வது பக்கத்தில் உள்ள நீண்ட வாசகம் இது. ஒட்டுமொத்தமாக கிழக்குமாகாண அபிவிருத்தியை இந்திய அரசிடம் கையளிக்கின்ற முன்மொழிவை செய்திருக்கிறார் ஜனாதிபதி.
வடக்கு மாகாணத்திற்கு எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு, இன்னும் சொன்னால் அதற்கும் கூடுதலாக இருதரப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் கிழக்கு. இதில் இருக்கின்ற இன்னொரு முக்கியத்துவம் கிழக்கின் பன்மைத்துவ சமூக கட்டமைப்பு. இங்கு பொருளாதார வாழ்வியலை மட்டும் யுத்தம் பாதிக்கவில்லை அதற்கும் மேலாக பன்மைத்துவ சமூக வாழ்வியலையும் பாதித்துள்ளது. சர்வதேச ஆய்வுகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் தென்னிலங்கையை விடவும், வடக்கை விடவும், கிழக்கு மாகாணத்தையே அதிகாரப்பகிர்வு விடயத்தில் அவசியத்தையும், அதில் உள்ள வில்லங்கங்களையும் பேசுகின்றன. ஆனால் அநுர அரசாங்கம் அரசியல் தீர்வை சும்மா காலம் கடத்தி கடந்து செல்லப்பார்க்கிறது.
ஆக, கிழக்கு அபிவிருத்தி என்பது பொருளாதாரம் சார்ந்து மட்டும் அல்ல இன உறவுகளில் விரிவை ஏற்படுத்தியுள்ள அரசியல் தீர்வின் சமூக அபிவிருத்தியையும் சார்ந்துள்ளது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இராணுவத்தீர்வாக முடிவுசெய்து யுத்தகளத்தில் பின்னணியில் நின்ற ஜே.வி.பி.யின் தலைமை இன்னும் கிழக்கின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக தாங்களும் பங்காளிகளாக இருந்த யுத்தத்தை தவிர்த்து வேறு திசையை காட்ட முயற்சிக்கிறது. சில வேளை இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை மூலம் யுத்தம் தொடர்ந்ததற்கும் , இன உறவுகள் பாதிக்கப்பட்டதற்கும் ஜே.வி.பி.போன்று இந்தியாவுக்கும் பங்குண்டு என்று அநுரகுமார சொல்லாமல் சொல்கிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம். அதனால் கிழக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கிறாரா? அன்று ஆக்கிரமிப்பாளராக இருந்த இந்தியா இன்று பொருளாதார மீட்பராக மாறியிருப்பது ஜே.வி.பி/ என்.பி.பி. ஆட்சி ஏற்படுத்தியுள்ள முக்கியமான ” மாற்றம்” தான்.
இந்த நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியல் அதிகார உரிமை பிரச்சினையை பொருளாதார மேம்பாட்டின் ஊடாக மட்டும் தீர்க்கலாம் என்று ஜே.வி.பி. கருதினால் அது இன்னும் தோல்வியுற்றும், காலாவதியுமான பாரம்பரிய இடதுசாரி அரசியலையே செய்கிறது என்று கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வகையில் இடதுசாரி போர்வையில் பாரம்பரிய இடதுசாரி தலைமைகள் செய்த பௌத்த, சிங்கள பேரினவாத அரசியலையே செய்ய விளைகிறது. இதற்கு ஜே.வி.பி. இந்த வரவுசெலவுத்திட்டத்தில் புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள பெருந்தொகை நிதி ஒரு சான்று. மற்றைய மதங்களையும் சமத்துவமாக பார்த்துக்கொள்வோம் என்பது இரண்டாம், மூன்றாம் தரத்திலான வெறும் ‘போடுகாய்’ அரசியல். என்.பி.பி. ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் அதற்கு தேவையான அடிப்படை ஐ.எம்.எப்.போடு ஒத்தோடும் பொருளாதார நகர்வுகளுடன் சமாந்தரமாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டும். இல்லையெனில் புள்ளிவிபர ரீதியான பொருளாதார வளர்ச்சியை அட்டவணைப்படுத்தினாலும் பொருளாதார அபிவிருத்தி என்ற இலக்கு இலகுவானதல்ல.
என்.பி.பி. தனது தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட “மாற்றம்” இந்த சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு மாற்றத்தை குறிக்கிறதே அன்றி வெளிநாட்டு உதவிகளுடனும், சர்வதேச நிதிநிறுவனங்களின் உதவிகளுடனும் தேர்தல்களை இலக்கு வைத்து செய்யப்படும் நிவாரணங்களை அல்ல. பொருளாதார வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி என்பவை இரு வேறுபட்ட விடயங்கள். வளர்ச்சி வெறும் புள்ளிவிபரங்கள் சார்ந்தது. அந்த புள்ளிவிபர முன்னேற்றங்கள் மக்களுக்கு எவ்வாறு பங்கிடப்பட்டுள்ளது என்பது – மக்களின் அடிப்படை வாழ்வியல் கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாற்றத்தை குறித்து நிற்கின்றது.
ஒரு பெரும் பொருளாதார புள்ளிவிபர ரீதியான வளர்ச்சி இன்றைய உலகமயமாக்கல் தாராள பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திடம் குவிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதை கடந்த கால அபிவிருத்தியின் ஊழல் மோசடிகளில் இருந்தாவது அநுர அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இலங்கைபோன்ற பின்தங்கிய, பொருளாதார மந்த நிலையுள்ள நாடுகளில் இந்த ஆபத்து ஒப்பீட்டளவில் அதிகமானதாக அமையும். அரசாங்கத்தினால் தனியார் சந்தை பொருளாதாரத்தை தான் நினைப்பது போல் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு அண்மைக்கால அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட உயர்வு ஒரு சான்று. சந்தை பொருளாதாரத்தில் அரசாங்கத்தை விடவும் முதலாளிகள் தீர்மானம் எடுக்கும் சக்தியாக உள்ளனர். இதுவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சந்தையில் நடந்தது. அது மேலும் நடக்காது என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது.
கிழக்கு மாகாணத்திற்கு கடந்த மூன்று வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது(?) என்பது புள்ளிவிபரம்.
2023 – 2, 947 மில்லியன் ரூபாய்.
2024 – 4,854 மில்லியன் ரூபாய்.
2025- 8, 667 மில்லியன் ரூபாய்.
ஆனால் இந்த ஒதுக்கீடு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் உள்ள வெறும் தரவு மட்டுமே. இந்த நிதி ஒதுக்கீட்டை செய்யவேண்டியது இந்திய அரசு. அதை எத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்பதையும் தீர்மானிப்பதில் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கப்போகிறது. இந்த வகையில் இதன் நலன்கள் கிழக்குமாகாண மக்களின் அபிவிருத்தி அபிலாஷைகளை எந்தளவுக்கு பிரதிபலிக்கப்போகின்றன. ? அவ்வாறு இல்லையெனில் அந்த இந்திய நிதிப்பாய்ச்சலை சரியாக நெறிப்படுத்துகின்ற வல்லமை இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறதா? என்று கேள்வியையும் இங்கு கேட்க வேண்டியுள்ளது. இது குறித்து வழமைபோல் தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர். அவர்களின் உரைகள் துறைசார்ந்தவையாகவோ, தரவுகளையும், சரியான தகவல்களையும் கொண்டவையாக அன்றி வெறும் குத்து மதிப்பு கத்தலாகவே உள்ளது.
அண்மையில் பட்டலந்த விவகாரத்தில் மட்டக்களப்பு எம்.பி. ஒருவர் வடக்கு கிழக்கு வதை முகாம்கள் குறித்தும் விசாரணை கோரியிருந்தார். அதற்கு ஈழநாடு பத்திரிகையில் வெளியான கருத்து சித்திரம் நல்ல பதில். அதில் அப்புக்குட்டி அண்ணே இப்படிக் கேட்கிறார்……
எம்.பி.: ” பட்டலந்த சித்திரைவதைமுகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு – கிழக்கில் இயங்கிய பலமுகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர்”.
அப்புக்குட்டி அண்ணே: ” பொல்லுக் குடுத்து அடிவாங்கக்கூடாது தம்பி. எந்த முகாம்களைச் சொல்லுறியள்?. முகாம்களை பற்றிய விபரங்களோட….முடிஞ்சால் சாட்சியளோட சொல்லவேணும். அரசாங்கம் பட்டலந்தவை வெளியே எடுக்கேக்கதான் உங்களுக்கு இதுகள் பற்றி நினைவுக்கு வரும் எண்டுறியளோ?”.
நம்மவர்களின் உப்புச் சப்பற்ற பாராளுமன்ற உரைகளுக்கு அப்புக்குட்டி அண்ணேயின் பதில் ஒரு உரைகல். ” பொல்லுக் குடுத்து அடி வாங்கக்கூடாது தம்பி எந்த முகாம்களை சொல்லுறியள்?”. என்ற கேள்விக்கு துணுக்காய் முதல் குடும்பிமலை வரை பல முகாம்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பது அந்த எம்.பிக்கு தெரியுமோ இல்லையோ அப்புக்குட்டி அண்ணேக்கு தெரிகிறது. இது ஒரு பக்கக் கண்ணை தங்களாகவே குருடாக்கிகொள்கின்ற பேரின, குறும் தேசியவாத அரசியல் வியாபாரிகளுக்கு.
வரவு – செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழு இலங்கையிலும் பிற பிராந்திய நூல் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாய்களில் 50 வீதம். அல்லது பிராந்திய நூல்நிலையங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டில் 33.3 வீதம்.(1/3). இதற்கு அநுரகுமாரவை தோளில் தடவ நமது தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளும் தவறவில்லை. இதன் மூலம் அவர் வடக்கில் உள்ளூராட்சி அரசியலுக்கு முதலிட்டாலும் ,ஒரு வகையில் தோழருக்கு தோளில் காட்டவேண்டிய விடயம் தான்.
ஆனால் மட்டக்களப்பில் ஒரு நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்னும் நிறைவு பெறாத நிலையில் கிடக்கிறது. அது இந்த ஆசான்களுக்கு தெரியவில்லை. இந்த நூல் நிலையம் மட்டக்களப்பு தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் எம்.பி.க்கள்- மாநகர முதல்வர், உதவி முதல்வர் போன்றவர்களின் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான் இந்தளவுக்கு இழுபடுகிறது. இன்னும் இவர்களுக்கு மட்டக்களப்பு அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி பற்றி பேசுவதற்கும், எழுதுவதற்கும் தகுதி இருக்கிறதா? மட்டக்களப்பு மக்கள் மீதான உங்கள் சமூக அக்கறை என்ன?
இந்த நூலகம் தமிழ்த்தேசிய அரசியலின் சகல சுத்துமாத்துக்களையும் கடந்துதான் கட்டுமானங்களை செய்ய வேண்டியிருந்தது. இது வரலாறு. கிழக்கு பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம், விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஹிஸ்புல்லாவின் புனானை பல்கலைக்கழகம், கல்விக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பெரும் சேவை ஆற்றக்கூடிய ஒன்று இந்த நூலகம். ஆயிரக்கணக்கான வெளிவாரிப்பட்டப்படிப்பு மாணவர்கள், கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி நிர்வாக சேவை,பொது நிர்வாக சேவை, கடல்கடந்த நிர்வாகசேவை போன்ற மேற்படிப்பாளர்களுக்கும் இந்த நூலகம் மட்டக்களப்பின் சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்தியின் அடிப்படையாக பெரும் பங்களிப்பை செய்யமுடியும்.
இதை “பிள்ளையானின் நூலகம்” என்று புறக்கணிக்கின்ற தமிழ்த்தேசிய அரசியல் மட்டக்களப்பு மக்களுக்கு எதிரான சமூகவிரோத அரசியல். மாடு களவு போகும் என்று வலையிறவுக்கும், மண்முனைக்கும் பாலம்வேண்டாம் என்ற மூதாதையரின் இன்றைய பரம்பரையின் அரசியல் வங்குரோத்து. இப்போது ராஜன்பாலம், கருணாபாலம் என்று வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு அதில் பயணம் செய்யாது வாவிக்கால் பாய்ந்தா செல்கிறீர்கள்? தமிழ்த்தேசியத்தின் ஜனாதிபதி பொதுவேட்பாளருக்கும் சேர்த்துத்தான் இந்த கேள்வி.
மட்டக்களப்பு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட என்.பி.பி. எம்.பி க.பிரபு உட்பட, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர், பிரதி அமைச்சர் ஹே. அருண் உட்பட எவரும் இந்த நூலகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வாய் திறக்கவில்லை. எடுத்ததெற்கெல்லாம் சத்தவெடிச்சுடும் தமிழ்த்தேசிய எம்.பி.க்களும் கண்டு கொள்ளவில்லை. பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவக்காரணமாக இருந்த ஹிஸ்புல்லா எம்.பி. கூட தமிழ்த்தேசிய அரசியலோடு முரண்படாமல் உள்ளூராட்சி தேர்தல் அரசியலை நகர்த்துதற்காக வசதியாக மறந்து விட்டார் போலும்.
சர்வதேச உதவியுடன் திருகோணமலையில் 70 எண்ணெய்க்கிணறுகள், வடக்கில் தென்னை முக்கோண திட்டத்தின் கீழ் 500 மில்லியன் ரூபாய் செலவில் 16, 000 ஏக்கர்களில், 25 இலட்சம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளது. வடக்கில் பாலங்களை புனரமைப்புக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் கிழக்கிற்கான ஒதுக்கீடுகள் குறைவானவை. அரசியல் பழிவாங்கல் இல்லை, கட்சி அரசியல் பாகுபாடு இல்லை என்று கூறுகின்ற என்.பி.பி. யும் அதையே செய்கிறது. ஒரு பக்கத்தில் தமிழ்த்தேசியத்தை பாராளுமன்ற தேர்தலில் ஆதரித்த மட்டக்களப்பு மக்களை பழிவாங்கி கட்சி அரசியல் செய்கிறதா?
‘பிள்ளையானின் நூலகத்தை தான் விடுங்கள் “. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்தங்களாலும்,யுத்தத்தினாலும் அழிக்கப்பட்ட தென்னைப்பயிர்செய்கை அபிவிருத்தி குறித்தோ, மீன்பிடி, உல்லாசப் பிரயாண அபிவிருத்தி குறித்தோ மற்றும் சமூக, பொருளாதார அபிவிருத்தி குறித்தோ நீங்கள் பேசவில்லை. சில வேளைகளில் ஊடக விளம்பரத்திற்காக குத்துமதிப்பாக கூட்டத்தில் கோவிந்தா போட்டிருக்கலாம். வெளிச்சம் பத்தியை பொறுத்தவரை இவை எல்லாம் வரவு செலவுத்திட்ட உரையல்ல ‘ அச்சாறு கத்தாவ ‘.
ஏன்? அரசியல் அமைப்பு திருத்தத்தை மூன்று ஆண்டுகளுக்கு கிடப்பில் போடவேண்டாம் என்று எத்தனை தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் அரசாங்கத்தை கோரியிருக்கிறீர்கள். நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஏனெனில் ‘தமிழரசு சர்வரோக நிவாரணி ‘ அதை அரசியல் அமைப்பு திருத்தம் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று அநுரகுமார அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது. ஆனால் முன்னுக்கு பின் முரணாக உள்ளூராட்சி தேர்தலில் மீண்டும் சமஷ்டி பேசுபொருளாகிறது. ஏன் ? அதையும் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப்போட்டு வரும் போது பார்த்துக்கொண்டால் என்ன? குறைஞ்சா போகும்…? அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் அரசியல் அமைப்பு திருத்தம் வராது விட்டாலும் ‘வாய்ச்சுப்போய்ச்சி’ . தேர்தல் பிரச்சாரத்திற்கு அநுரகுமார தீனி போட்டதற்காக தோழில் தட்டவேண்டியதுதான். வேறென்ன….?
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.களுக்கு ஒதுக்கப்படும் தலா 10 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலாவது ஒரு குறிப்பிட்ட தொகையை ஐந்து எம்.பி.க்களும் ஒதுக்கி மட்டக்களப்பு நூல்நிலையம் விரைவில் பூர்த்தியடைய நடவடிக்கை எடுக்கவேண்டியது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சமூக அரசியல் கடமையாகும். கல்விச்சமூகம் என்று கூறிக்கொள்பவர்கள் , சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக சமூகம், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு போன்றவை இது விடயத்தில் காழ்ப்புணர்ச்சி , கட்சி அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். மட்டக்களப்பின் அபிவிருத்தியை கட்சி அரசியலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அபிவிருத்தியும், அதிகாரப்பகிர்வும் கட்சிக்கல்ல மக்களுக்கானது.
நீங்கள் அனைத்து அரசியல் தரப்பும் மட்டக்களப்பு மக்கள் அபிவிருத்திக்கு வழங்கிய ஆணையை மதித்து நூல்நிலைய அபிவிருத்திக்கும் உங்கள் நிதி ஒதுக்கீட்டு பங்களிப்பை செய்யாத வரை, பிள்ளையான் அரசியலில் நிலைக்கலாம் அல்லது நிலைக்காமல் போகலாம். ஆனால் மட்டக்களப்பு நூல் நிலையம் ‘பிள்ளையானின் நூல் நிலையம்’ என்று மக்கள் பேச்சு வாக்கில் வைத்த பெயரே நிலைத்திருக்கப்போகிறது.