பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)

  — அழகு குணசீலன் —

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது பாதுகாப்பு படையினர் தரப்பிலும், படையினருக்கு உதவியாக செயற்பட்ட  அரச ஆதரவு குழுவினர் தரப்பிலும் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்காக நான்கு பேருக்கு பிரித்தானியா பயணத் தடையையும், சொத்துமுடக்கத்தையும் அறிவித்திருக்கிறது.  பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னா கொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்து 2004 இல் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கும் இந்த தடைவிதிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை இலங்கை படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரில் இடம்பெற்ற யுத்த மீறல்களை அடிப்படையாகக்கொண்டது. இலங்கை இராணுவத்தின்  யுத்தமீறல்கள் போன்றே, விடுதலைப்புலிகளாலும் யுத்தமீறல்கள் செய்யப்பட்டுள்ளன என்பது சர்வதேசத்தின் பொதுவான பார்வை. தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் இந்த கருத்திற்கு ஆதரவாகவே இருதரப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று  கோரியிருக்கின்றனர் அல்லது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உண்மையில் இந்த  நீதிக்கான அணுகுமுறை முழுமையானதும் சரியானதுமாக இருக்கவேண்டுமானால் 1970 களின் ஆரம்பத்தில் இருந்து 2009 வரையான காலப்பகுதிக்குள் சகல படைத்தரப்பும், சகல தமிழ் ஆயுதப்போராட்ட அமைப்புக்களும், இந்திய படைத்தரப்பும் , அவர்களுக்கு பின்னால் இருந்த  குழுக்களும் இந்த யுத்த மீறல்களுக்கு தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பானவர்கள்.” என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு  தண்டிக்கப்பட வேண்டும்.

30 ஆண்டு காலத்திற்கும் மேலான உள்நாட்டு யுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிற்பகுதியை மட்டும் – இறுதியுத்த பகுதியை மட்டும் கருத்தில் கொண்டு யுத்த மீறல்களை கருத்தில் கொள்வது பொருத்தமற்றது. இதனால்தான் தமிழ்த்தேசிய தரப்பு இன அழிப்பு என்று வருகின்றபோது 1956 ம் ஆண்டில் இருந்து கணக்கு காட்டுகிறது. இவை அனைத்துமே ஏதோ ஒருவகையில் படையினருடன் தொடர்பு பட்ட  உரிமை மீறல்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளும், மற்றைய ஆயுதப்போராட்ட குழுக்களும், இந்திய ஆதரவு குழுக்களும்  இந்த குற்றச்சாட்டுக்களில்  இருந்து தப்பிக்கொள்ள  அரச படையினரும், கருணா அணியினரும் குறிவைக்கப்பட்டிருப்பது ஒரு பக்கச்சார்பான செயற்பாடு.

தப்ப வைக்கப்பட்டுள்ள  விடுதலைப்புலிகளாலும், அவர்களால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாலும்  மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள், பாலியல் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தற்போது தப்பிப்பிழைத்தோம் என்று மூச்சு விடுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கும் சேர்த்து மாற்று தரப்பினருக்கு தண்டனை கோரும் அளவுக்கு புனிதர்களாக நிலத்திலும், புலத்திலும் தமிழ்த்தேசிய அரசியல் செய்கிறார்கள்.   சகல தரப்பிலும் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. 

ஆனால் அதுவல்ல இந்த பதிவின் பேசுபொருள். மாறாக  நான்கு தனிநபர்கள் மீதான பிரித்தானியாவின்  இந்த தடைகள் குறித்து துள்ளிக்குதித்து கொண்டாடவும், ஒப்பாரி வைக்கவும் என்ன இருக்கிறது? என்ற கேள்வியும், இன்றைய பூகோள அரசியல் இந்த தடையை  இப்போது ஏன் ? செய்திருக்கிறது என்பதுமே  பேசப்படவேண்டியவை. இலங்கையை பொறுத்த மட்டில் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை வெறும் பூகோள அரசியல் “சமிக்ஞை விளைவு” (SIGNAL EFFECT) மட்டுமே என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.

அமெரிக்க வாஷிங்டன் டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகத்தின் புதிய பாதுகாப்பு, பொருளாதார கொள்கை சர்வதேசத்தில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்திகொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் அல்ல இலங்கை போன்ற சிறிய வறியநாடுகள் கூட இந்த கொள்கைகளுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒதுங்கி  இருக்கின்ற  பிரித்தானியாவுக்கு ஐரோப்பாவோடு  இணைந்து போவதா? அமெரிக்காவை திருப்திப்படுத்துவதா? என்ற நிலைமை  காணப்படுகிறது. பிரித்தானிய பொருளாதாரம் அகலபாதாளத்தில் வீழ்ந்து விட்டது. வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள்  வெட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அமெரிக்க புதிய பொருளாதார வரிக்கொள்கை பற்றி  அலட்டிக்கொள்ளாமல்  பிரித்தானியா இருப்பது, அது அமெரிக்காவுடன் முரண்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 

உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கியை வெள்ளைமாளிகைக்கு அழைத்து காதைப்பிடித்து “திருகி” இருக்கிறார் ட்ரம்ப். மறுபக்கத்தில் ரஷ்ய, இஸ்ரேல் தலைவர்களுடன் தோளில் கை போடுகிறார். வரலாற்றில் பாலஸ்தீனத்தில் ஹாமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக சொந்த மக்கள் திரண்டெழுகிறார்கள். இது இதுவரை மேற்குலகில் ஹாமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற கருத்துக்கு  வலுச்சேர்க்கிறது .

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலும் இந்த நிலை ஏற்பட்டபோது புலிகள் மக்களுக்கு எதிராக ஆயதங்களை திருப்பினர். அதற்குள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இடத்தில் வெள்ளைக்கொடி கொலைகள் பற்றி ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதற்கு பிரித்தானிய தடைவிதித்த நான்கு நபர்கள் காரணம் என்றும் கதை சொல்கிறார்கள். வெள்ளைக்கொடியோடு சரணடையுங்கள் என்று புலிகளுக்கு சொன்னவர்கள் யார்? அதற்கான அனைத்து தொடர்பாடல்களையும் , பாதுகாப்பு உத்தரவாதங்களையும், செய்தவர்கள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்து, தடைசெய்த மேற்குநாடுகள். பூகோள அரசியலில் புலிகளை சரணடையச்செய்து கூண்டோடு அழிப்பதே இந்த மேற்குலக அணியின் முக்கிய இலக்காக இருந்தது என்பதை அவர்களிடம் நீதி, நியாயம் கோருவோர்  இன்னும் அறியவில்லையா? ஆக, வெள்ளைக்கொடி கொலைகளுக்கு யார் பொறுப்பு…..?  

இனி……, 

இலங்கையின் இன்றைய அரசாங்கத்தின் போக்கு மேற்குலகை விட்டு விலகி நகர்வதாக உள்ளது. பாரம்பரிய மேற்கு உறவையும், காலனித்துவம் கட்டிப்போட்ட உறவையும் தவிர்த்து மாற்று பிராந்திய உறவை என்.பி.பி. அரசாங்கம் நாடுகிறது. இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, வியட்நாம் என்று இலங்கையின் பிராந்திய உறவு வலுவடைகிறது. இதனை அமெரிக்காவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் பிரித்தானியா அமெரிக்க கையாளாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் வாஷிங்டன் செல்வதற்கு முன்னர் தூரவைத்தே  அநுரவின் காதை திருகியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதற்காக வெளியிடப்பட்ட பூகோள அரசியல் அறிவிப்பே இந்த நான்கு தனிநபர்கள் மீதான தடை. இதன் மூலம் இலங்கை தங்கள் கைகளில் இருந்து விலகிப்போவதை தடுத்து மூக்கணாங்கயிறுபோடும் முயற்சி இந்த தடைக்கு பின்னால் இருக்கிறது.

கனடா நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும், பிரித்தானிய லேபர் எம்.பி. உமாகுமாரனும் இந்த பயண, சொத்து தடைகளை வரவேற்று இருக்கிறார்கள். வரவேற்பதை விடவும் இவர்களால் வேறு என்னத்தை செய்ய முடியும். நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலின் தொடர் அரசியலையே டயஸ்போராவை வைத்து இவர்கள்  புலம்பெயர்ந்த நாடுகளில் செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குளுக்காக ஏங்குகின்ற கட்சிகள்  தங்கள் சொந்த அரசியலுக்காக இவர்களை பயன்படுத்துகிறார்கள். கனடிய, பிரித்தானிய அரசியல் வாதி ஒருவரை “யாழ்ப்பாணத்தமிழர்” என்று  பெருமையுடன் அழைப்பதன் மூலம் அடையாள அரசியல் அற்ற மேற்குலக கொள்கை அரசியலில் நம்மவர்கள் சாயம் பூசியே அரசியல் செய்ய முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது. சாயம் வெளிறினால் அரசியல் முடிந்து விடும். இது இதுவரை பல நாடுகளில் நடந்திருக்கிறது.

பிரித்தானியாவின் தடையை கண்டித்து விமல்வீரவன்ச, உதய கம்மன்வல, நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச போன்றோர் இராணுவத்தரப்புக்கு ஆதரவாக கருத்துவெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த “ஒப்பாரி ராகமும்”, தமிழ் அரசியல்வாதிகளின் “துள்ளிக்குதித்தல் நடன தாளமும்” வெறும் அரசியல் பூச்சாண்டி . இதனை பயன்படுத்தி  பாதிக்கப்பட்ட தரப்பும், பாதிப்பை செய்த தரப்பும் தங்கள் தங்கள் கட்சி அரசியலை செய்யப்பார்க்கிறார்கள். தடைவிதிக்கப்பட்டுள்ள நான்கு தனிநபர்களும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யமுடியா விட்டால் அதனால் அவர்கள் எவற்றை இழந்தார்கள்? பிரித்தானியாவில் சொத்து முடக்கம் என்றால் இருந்தால்தானே முடக்கலாம் (?).  பிரித்தானியாவை விடவும் பயணம் செய்வதற்கும், சொத்து சேர்ப்பதற்கும் உலகில் வேறு நாடுகள் இல்லையா?  இவர்கள் இலங்கையில் சொத்துக்கள் சேர்க்க தடையிருக்கிறதா?  கனடா, அமெரிக்கா ராஜபக்சாக்களுக்கு விதித்த தடையின் செயற்றிறன் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன?

ஆக, மொத்தத்தில் அமெரிக்க சார்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பட்டலந்த அறிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அநுரகுமார அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் எதிர்தரப்பை பிரித்தானியாவின் பெயரில் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது அமெரிக்கா.  போரின் பிராந்திய பங்காளர்களான  இந்தியாவும், சீனாவும் இந்த சிமிக்ஞை விளைவு  பழக்கப்பட்டு புளித்துப்போன ஒன்று என்று கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

சர்வதேச  மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்..  இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை  சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.

 இந்த சிக்னல் தடையால் இராணுவத்தை காட்டிக்கொடுக்கமாட்டோம், உள்நாட்டு பொறிமுறையைத்தவிர வேறு எந்த பொறிமுறையும் நிராகரிக்கிறோம்  என்று இந்த போரின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஜே.வி.பி/என்.பி.பி. யை, எந்த குற்றங்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருக்கிறதோ அந்த குற்றங்களை செய்திருக்கின்ற, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கின்றன ஜே.வி.பி.யை இவ்வாறான அழுத்தங்கள் மூலம் திருத்தலாம் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும் நினைத்தால் அது போன்ற சிறுபிள்ளை அரசியல் உலகில் எங்கும் இல்லை.

 அநுரவுக்கு தலைவலியை  கொடுக்கலாம், ஆனால் அதைக் குணப்படுத்துவதற்கான மாத்திரயை இந்தியாவும், சீனாவும் ஏற்கனவே கொழும்புக்கு அனுப்பிவிட்டன. அதில் ஒரு பகுதியை தன்னோடு  எடுத்துக் கொண்டுதான் ஹேரத் அமெரிக்கா போகிறார். பட்டலந்தையை திசை திருப்ப விதிக்கப்பட்டுள்ள இந்த தடையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் என்.பி.பி.க்கு தலையில் குட்டுவதும் , சேதாரத்தை ஏற்படுத்துவதும் திரைமறைவில் இடம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *