வரி -வலி: பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்…..!(வெளிச்சம்: 049)

வரி -வலி: பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்…..!(வெளிச்சம்: 049)

— அழகு குணசீலன் —

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதை நாம் எல்லோரும் அறிந்ததும், தெரிந்ததும் தான். ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதியின் புதிய சுங்கவரிக்கொள்(கை) ளையானது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இன்றைய சூழலில் அது நினைவுக்கு வருகிறது. சிவபெருமானுக்கு விழுந்த பிரம்படி அவரைத் தவிர்த்து எல்லாமக்களுக்கும்  விழுந்ததாம். அதுவும் தாயின் கருவறையில் இருந்த குழந்தைகளுக்கும் அதன் தழும்பு இருந்ததாம் என்று அந்த கதை பேசுகிறது. அதுபோல்தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் அரசியல், பொருளாதார கொள்கைகளின் தவறான  அணுகுமுறைகள் அமெரிக்காவின் இன்றைய நிலைக்கு காரணமாகிறது. அதற்கான தண்டனையை  ட்ரம்ப்  உலக நாடுகளுக்கும், மக்களுக்கும், அவர்களின் அடுத்த சந்ததிக்கும் வழங்கியிருக்கிறார்.

உலகமயமாக்கல் சர்வதேச வர்தகத்தின் அடிப்படை தாற்பரியமே ஒவ்வொரு நாடுகளும் தனக்கு வாய்ப்பான பொருட்களை மிகையாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும், வாய்ப்பு குறைவான பொருட்களை மற்றைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதுமாகும். இங்கு ஏற்றுமதி வருமானத்திற்கும், இறக்குமதி செலவுகளுக்கும் இடையில் ஒரு சமநிலையை (ஏற்றுமதிவருமானம் – இறக்குமதி செலவு= பூச்சியம்) எதிர்பார்க்கமுடியாது. எல்லா நாடுகளிலுமே இது ஒரு பற்றாக்குறை வெளிநாட்டு வர்த்தக மீதியை ஏற்படுத்துகிறது. சிலவேளைகளில்  இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மீதி மிகையாக இருந்தாலும் ஒட்டு மொத்த சர்வதேச வர்த்தக மீதி மிகையாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவானவை.

சர்வதேச வர்த்தக மீதி  அமெரிக்காவுக்கு சாதகமாக அமையவேண்டும் என்று, ஜனாதிபதி ட்ரம்ப் அரசாங்கம் எதிர்பார்த்தால் அமெரிக்கா கட்டற்ற வர்த்தக, தாராள  திறந்த பொருளாதார, உலகமயமாக்கல் வெளிநாட்டு வர்த்தக முதலாளித்துவ கொள்கையில் இருந்து விலகி சமவுடமை கொள்கை பேசுகின்ற கட்டுப்பாடான, மூடப்பட்ட பொருளாதார வர்த்தக கொள்கை பற்றி சிந்திக்க வேண்டும். அதை விடுத்து ஒரு பக்க நியாயத்துடனும், தன்நிலை சார்ந்தும் சர்வதேச நாடுகளின் மீது தனது சுமையை சுமத்த முயல்வது பரஸ்பர இருதரப்பு வர்த்தக நன்மைகளை ஒரு தலைப்பட்சமாக நிராகரிக்கும் இராணுவ, பொருளாதார  அதிகார மேலாதிக்கத்தின் வெளிப்பாடாகும்.

 உண்மையில் அமெரிக்காவின் உலகமயமாக்கல் அரசியல், பொருளாதார இராஜதந்திரத்தின் சர்வதேச தோல்வியாகவே இதனைக்கொள்ள முடியும். முதலாளித்துவ உலகிற்கு தலைமை தாங்குகின்ற அமெரிக்க பொருளதாதாரத்திற்கு உலகமயமாக்கம் பெற்றுக்கொடுத்துள்ள தோல்வி. இது முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பின் தோல்வி. இது ஒன்றும் புதியதல்ல. மார்க்சிய சிந்தனையாளர்களின் கருத்துக்கள், கோட்பாடுகளின் படி  முதலாளித்துவத்தில் காலத்திற்கு காலம் இந்த  பொருளாதார ஸ்த்திரமின்மை தவிர்க்க முடியாதது. அப்படி விழும்போது முதலாளித்துவம் மீண்டெழுவதற்கான வழிகளை சோஷலிச கோட்பாடுகளுக்குள் தேடுகிறது. இதையே ட்ரம்ப் இப்போது செய்துள்ளார்.

இந்த தோல்வி சர்வதேச பொலிஸ்காரனாக  அமெரிக்கா உலகம் முழுவதும் அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இறைமை கொண்ட அரசியல் தேசங்கள் மீது பல்வேறு சாட்டுக்களை கூறி மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களின் விளைவாகும். சுய பொருளாதார நலன்கள் சார்ந்தும், அரசியல் எதிர் நிலை சார்ந்தும் அமெரிக்கா கடந்த காலங்களில் யுத்தத்திற்கு விரயமாக்கிய தேசிய வளங்களின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு இது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அதுபற்றி பேசாது மற்றைய நாடுகள் மீது பழியையும், சுமையையும் சுமத்தி அமெரிக்க திறைசேரியை நிரப்பப்பார்க்கிறார். அமெரிக்காவின் இந்த புதிய சுங்கவரிக் கொள்கையினால் கைத்தொழில், தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட திகைத்து நிற்கின்ற நிலையில் இலங்கை போன்ற சிறிய, பொருளாதார பலம் அற்ற, பொருளாதார மந்த நிலையில் உள்ள நாடுகள் இந்த வரியை செலுத்தி சர்வதேச வர்த்தக நிலுவையை ஆகக்குறைந்த பட்சம் சமநிலையிலாவது வைத்துக்கொள்வது ஒன்றும் இலகுவானதல்ல.

இதில் கவனிக்கத்தக்க முக்கிய பொருளாதார- அரசியல் செய்தி என்ன வெனில்  அமெரிக்கா கடந்த காலங்களில் யாரை எல்லாம் “பரம எதிரிகளாக” பிரகடனம் செய்து செயற்பட்டதோ அவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, வடகொரியா, பெலாருஷ்,கியூபா என்பன இதில் அடங்குகின்றன. மாறாக உக்ரைன் உள்ளிட்ட, அமெரிக்காவினாலும், பின்னால் போன நேசசக்திகளாலும் அழிக்கப்பட்ட அரசியல், பொருளாதார சமூக அழிவுகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. வரிவிலக்கு  அளிக்கப்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவேயுள்ள பொருளாதாரத்தடைகளை காரணம் காட்டுகிறது வெள்ளைமாளிகை. ஆனால் இந்தத் தடைகள் இதுவரை சாதித்தது என்ன? ஒரு வகையில் மற்றைய அப்பாவி நாடுகளுக்கான இந்த வரிவிதிப்பை மறைமுகமான ஏற்றுமதி வர்த்தக பொருளாதார தடையாகவே பார்க்கவேண்டியும் உள்ளது. இதில் அமெரிக்கா வெல்லுமா? உலகம்வெல்லுமா என்பதற்கு பதில்காண குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சர்வதேச பொருளியலாளர்கள். ஆனால் வரிவிதிப்பை மீளாய்வு செய்ய தயார் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

 அமெரிக்காவின் புதிய சுங்க வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை சில தெரிவு செய்யப்பட்ட நாடுகளை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்கமுடியும்.

நாடுகள் –      சுட்டெண் –                          வரிவீதம்

சீனா                67              –                  34  வீதம்               –                     

ஐரோப்பிய ஒன்றியம் 20               –                 39 வீதம் 

வியட்நாம்.                90                  –               46 வீதம்           –                  

இந்தியா.                    52              –                  26 வீதம்.                   .     ‌‌  

வங்காளதேசம்.          74                                 37 வீதம்.         

 சிறிலங்கா.                88                                 44    வீதம்            –     ‌‌               

America First, America Great என்ற சுலோகங்களுடன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்த டொனால்ட் ட்ரம்ப்  சுங்கவரிக்கொள்கையில் பாரிய மாற்றம் ஒன்றை செய்ய இருப்பதாக வாக்காளர்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 5, 2025 இல் அறிவிக்கப்பட்ட வரிமாற்றங்கள் ஏப்ரல் 9, 2025 இல் அமுலுக்கு வருகிறது. அப்போது இருந்தே பொருளாதார தந்திரோபாயங்களை ஆராய்ந்த சீனா, இந்தியா, போன்ற பிராந்திய நாடுகள் இருக்கின்றன. ஆனால் இது பற்றி அலட்டிக்கொள்ளாது கொழும்பில் அமெரிக்க தூதுவருக்கு கட்சி காரியாலய கதவுகளைத் திறந்து விட்டு ஜே.வி.பி.  உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அமெரிக்காவுக்கு முதுகு சொறிந்தார்கள்.  கொழும்பு முதுகு சொறிந்த வேளை வாஷிங்டன் வரிக்கணக்கை கச்சிதமாக பார்த்து முடித்திருந்தது.

” இது அமெரிக்காவின் பொருளாதார சுதந்திர பிரகடனம். அமெரிக்க சர்வதேச கைத்தொழில் வர்த்தகத்தின் மறுபிறப்பு.  அமெரிக்காவின் தேறிய வர்த்தக சமநிலையைப்பேணவும், அமெரிக்க வேலைவாய்ப்புக்களையும், உற்பத்திகளையும் பாதுகாக்கவும் இது அவசியம். இறக்குமதி வரியில் இருந்து. தப்ப வேண்டுமானால் உங்கள் முதலீடுகளை அமெரிக்காவுக்கு நகர்த்தி உற்பத்தி செய்யுங்கள். நாளை நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், மன்னர்கள்… எனக்கு ரெலிபோன் பண்ணி வரியை குறைக்க கோருவார்கள். அவர்களுக்கு முதலில் உங்கள் வரிகளை குறையுங்கள் என்று  கூறுவது தான் எனது பதிலாக இருக்கும்” 

என்று  கூடியிருந்தவர்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் தனது வழக்கமான பாணியில் கூறினார் ஜனாதிபதி ட்ரம்ப். அவர் சுயமாக  என்ன கற்பிதத்தைக் கொண்டிருந்தாலும் முதலாளித்துவ உலகமயமாக்கம் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தங்கியிருத்தலையும், அதை மீட்டெடுப்பதையுமே பொருளாதார விடுதலை,  பொருளாதார மீளுருவாக்கம் பற்றி பேசுகிறார் என்பது வெளிப்படை. ஒரு வகையில் இந்த வரிக்கொள்கையை நவகாலனித்துவத்தின்  சட்டரீதியான  ஒரு  “சுரண்டல், பொருளாதார வன்முறை” என்று கூறமுடியும்.

எமக்கு இருக்கின்ற இன்றைய கேள்வி, இலங்கையின் இன்றைய பொருளாதார சூழலில்  இடதுசாரி சிவப்பு போர்வையை போர்த்தி உள்ள  என்.பி.பி/ ஜே.வி.பி. அரசாங்கம் அமெரிக்காவுக்கு வழங்கப்போகின்ற பதில் என்ன என்பதுதான்.  அதிகமான உலக நாடுகளின் ரியக்ஷன் காலில் விழுவதாகவே இருக்கப்போகிறது. ஆனால் இது  “சாமிக்கு சாமரை வீசி” கோபத்தை குறைக்க உதவுமா? அப்படி நடந்தால் அது அவருக்கு அமெரிக்க அரசியலில் ஒரு பெரும் பின்னடைவாக அமையும். மறுபக்கத்தில் உள்ள மாற்றுவழி “திருப்பியடித்தல்” இதை இலங்கை போன்ற சிறிய நாடுகளால் தனித்து நின்று செய்யமுடியாது. ஐரோப்பிய ஒன்றியம், சீனா, இந்தியா, மெக்சிகோ, ஜப்பான் போன்றவை முதலில் இராஜதந்திர பேச்சுக்கள்,  இல்லையேல் எதிர் நடவடிக்கை என்று திரைமறைவில் திட்டமிடுகின்றன. ஆனால் எதிர் நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு முன்னர் இணைந்த செயற்பாட்டிற்கான ஒரு கூட்டும், இணக்கப்பாடும் தேவையாகிறது. இந்த மாற்று வழிக்கு “அமைப்பு மாற்றம்” பேசி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் காய்நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன.?

இலங்கை அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான மாற்றுச்சந்தைகளை  தேடவேண்டும். அதேவேளை சமாந்தரமாக அமெரிக்க இறக்குமதிகளுக்கான மாற்றையும் கண்டறிய வேண்டும். இதை தனித்து ஓடாது இந்தியா, சீனா, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம் போன்ற பிராந்தியநாடுகளிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும், மத்திய கிழக்கிலும் தேடவேண்டும். இங்கு முக்கியமானது அமெரிக்காவுக்கான பிரதான ஏற்றுமதியாக இருக்கின்ற ஆடைகள் ஏற்றுமதி. ஆடைகளை வங்காளதேசம், இந்தியா, வியட்நாம் என்பனவும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதன்படி அமெரிக்க – இலங்கை வர்த்தக நிலுவைத் சுட்டெண் 88. அதாவது வரி வீதம் 44. வங்காளதேசம் (37வீதம்) இந்தியாவுக்கு  (26 வீதம்) விதிக்கப்பட்டிருப்பதை விடவும் அதிகமானது.  

இது இலங்கையின் ஆடைகளின் விலையை அமெரிக்க சந்தையில் உயர்த்தும். சந்தைவிலை  அதிகரிக்கும். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்கு இந்திய ஆடைகள் மலிவாக அமைவதால் அதற்கான சந்தை வாய்ப்பு அதிகமாக அமையப் போகிறது. இந்த சவாலை வங்காளதேசமும்,  இலங்கையும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன?  இலங்கை -இந்திய கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு மூலம் இலங்கை பொருட்களை “இந்திய லேபலில்” ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஆராயப்படவேண்டும். அமெரிக்காவுக்கான இலங்கை ஆடைகளின் ஏற்றுமதி 23 வீதமாக இருக்கிறது. இலங்கை 2022 இல் அமெரிக்காவுக்கு 3.4 பில்லின் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ள போது அமெரிக்காவில் இருந்து 337 மில்லியன் பெறுமதியான பொருட்களையே இறக்குமதி செய்துள்ளது. இதுவே ட்ரம்ப்பின் தலையில் பித்தத்தை ஏற்றிய விடயம். இதையே சுட்டெண் 88 பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவில் இருந்து இலங்கை அதிகமாக சோயாமாவு, மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 7.5 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை இவற்றை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றால் இவற்றை இந்தியா, சீனா, மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்து இறக்குமதி செய்யமுடியும்.  உள்நாட்டிலும் சோயா பயிர்ச்செய்கை  ஊக்குவிக்கப்படவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை இலங்கை ஏற்றுமதிகளை இந்த நாடுகளுக்கு பன்முகப்படுத்தவும் இலங்கை முயற்சிக்க முடியும். அமெரிக்கா வரி அதிகரிப்பை தனக்கு தேவையான முக்கிய பொருட்களின் இறக்குமதிக்கு தவிர்த்திருக்கிறது. முக்கியமாக மருந்து பொருட்கள் இதனால் அதிகமான நன்மையை இந்தியா, சுவிட்சர்லாந்து என்பன அடைகின்றன. 

மற்றைய நாடுகளைப்போன்று அமெரிக்காவுக்கு எதிர் நடவடிக்கை எடுக்க கூடிய வாய்ப்புக்கள் இலங்கைக்கு இல்லை. இதனால்தான் அமெரிக்கா வரிவிதித்துள்ள 185 நாடுகளில் மிகச்சில நாடுகளுக்கே இந்த வெட்டியோடும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக அமெரிக்க கார் உற்பத்திக்கு (FORD,GENERALMOTRS ) கம்பனிகளுக்கான உதிரிப் பாகங்கள் 60 வீதம் ஐரோப்பாவில் இருந்து இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றிற்கான விலைகளை இந்த நாடுகள் அதிகரிக்க முடியும். மேலும்  அமெரிக்க டிஜிட்டல் நிறுவனங்களான மேட்டா, அமேசான், பேஸ்புக், இன்டர் கிராம் போன்றவற்றிற்கான கட்டணங்களை அதிகரிக்கவும்  ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசிக்கின்றது.

அதேபோன்று ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய உற்பத்திகள் உலகச்சந்தையில் தரமானவை. அமெரிக்காவில்  தரமான பொருட்களை விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட வருமான பிரிவினர் வாங்குவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளின் உற்பத்தியை தரத்திற்காக அன்றி அமெரிக்க மத்தியதர, அதிலும் குறைவான வருமான மட்டத்தினர்  மலிவான விலைகாரணமாகவே கொள்வனவு செய்தனர். வரிவிதிப்பு இப்பொருட்களின் விலையை உயர்த்துவதால்  இலங்கை ஏற்றுமதிகளுக்கான கேள்வி அமெரிக்க சந்தையில் அதிகரிக்கும் போது சந்தை வாய்ப்பு குறைவடையும்.

இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளின் ஆடை உற்பத்தி தொழில் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடும் விமர்சனம் இருக்கிறது. வங்காளதேசத்தில் பல ஆடைத்தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீவிபத்தும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதும் இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். இலங்கை உள்ளிட்ட இந்த நாடுகளில் நிலவும் குறைந்த சம்பளம், தொழிலாளர்களுக்கான சமூக காப்புறுதிவசதிகளின் குறைபாடுகள், பாதுகாப்பு குறைபாடுகள், தொழிற்சாலைகளில் பெண்கள் மீது இடம் பெறும் பாலியல் வன்முறைகள், மற்றும் சுகாதார நலன்சார்ந்த உள்கட்டமைப்பு ஏற்பாடுகளில் நிலவும் குறைபாடுகள், அதிக வேலைநேரம், இரவுநேர வேலை, மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விமானங்கள் குறித்து அமெரிக்கா அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனுடைய இலக்கு மலிவான விலையில் ஆடைகளை இறக்குமதி செய்வதாகவே இருந்தது. இலங்கை, இந்தியா, வங்காளதேசம், வியட்நாம் , சீனா போன்ற இந்த நாடுகளின் /கம்பெனிகளின் “தவித்தமுயல்” அடிக்கும்  டொலர் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு அமெரிக்க வரிக்கொள்கை மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையப்போகிறது. மறுபக்கத்தில் மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களை புறக்கணித்து செயற்படும் இந்த ஆடையுற்பத்தி -ஏற்றுமதி நாடுகளுக்கு  எதிராக -குறிப்பிட்ட குறைபாடுகளில்  சீர்திருத்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் வேண்டும் போது அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் ஐரோப்பாவில் இலங்கை மாற்றுச்சந்தை வாய்ப்புக்களை தேடுவதும் அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை. 

ஏற்கனவே விதிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், கருத்துச்சுதந்திரம், ஊடக சுதந்திரம் , ஐனநாயக அரசியல் செயற்பாடுகள், மனித உரிமைகளை பாதுகாத்தல் குறித்த நிபந்தனைகளை இலங்கை இன்னும் பூர்த்தி செய்யாத நிலையில் ஐரோப்பாவிலும் “தவித்த முயல் அடிப்பது” இலங்கை முதலாளிகளுக்கு அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை. இந்த விடயங்களில் தாங்களும் பங்காளிகளாக இருக்கும் சீனா, இந்தியாவைத்தவிர வேறு நாடுகளில் தொடர்ந்தும் “அரசியல் பொருளாதார வியாபாரத்தை” செய்வதாயின் ஜனாதிபதி அநுரகுமார அரசாங்கம் உண்மையான அடிப்படை கட்டமைப்பு மாற்றம் ஒன்றிற்காக பயணிக்கவேண்டும். 

கூட்டாளிகள் பொதுவாக ஒரே பண்பை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்போதுதான் ஒத்தோடமுடியும்.  அந்த கூட்டாளி அரசியலையே அநுரகுமார அரசாங்கமும் செய்கிறது. இது மாற்றத்திற்கான வழியல்ல. அமெரிக்க வரிவிதிப்பில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும் இது அவசியம். இல்லையேல் நாடு மற்றொரு பொருளாதார மந்தத்தை சந்திப்பதது தவிர்க்க முடியாதது மட்டும் அன்றி , 2028 இல் கடன்களை மீளச்செலுத்தல் என்பதும் வெறும் கனவாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *