— கலாநிதி சு.சிவரெத்தினம் —
சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கூட்டணியினை 15.03.2025 அன்று உருவாக்கியுள்ளனர்.
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்பது சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருடைய சிந்தனையில் முகிழ்ந்த முத்தல்ல. 2018ம் ஆண்டு கிழக்குத் தமிழர்களின் அரசியல் சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு கண்டு அவற்றை நிவர்த்திக்கும் முகமாக த.கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவநாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும்.
கிழக்குத் தமிழர் ஒன்றியமானது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தில் எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் கிழக்கில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, அனைத்துத் தமிழ் கட்சிகளையும் அழைத்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒரு கூட்டத்தினையும் நடாத்தியிருந்தது. அங்கு நடந்த பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்குப் பின் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பது என்றும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடான கட்சிகள் அதில் கையொப்பம் இட்டு கூட்டமைப்பை உருவாக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டதுக்கு இணங்க கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உருவாக்கம் பெற்றது. இந்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டபோது அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் விடுதலைக் கூட்டணி,(TULF) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP), வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் தங்களுடைய உடன்பாட்டைத் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் பின்பு வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய இரு கட்சிகளும் விலகிக் கொண்டன. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் கைச்சாத்திடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்துக் கொண்டது. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாபையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் அங்கீகாரத்துக்காக 2019ம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தது.
எனவே ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்துவதற்கான தார்மீக உரிமை இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மேற்படி இரு கட்சிகளுக்கும் உரியதே தவிர இதனை புறக்கணித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இன்று கிழக்குத் தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டுத் தேர்தலில் தங்களது கட்சி நலன் சார்ந்தே சிந்தித்தார்கள். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதை அவர்கள் விரும்பவேயில்லை. தங்களுடைய கட்சியின் பெயரும் படகுச் சின்னத்தையும் கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக மட்டக்களப்பில் தன்னை தியாகம் செய்யத் தீர்மானித்தது. அந்தவகையில் மட்டக்களப்பில் தனித்து தேர்தலில் போட்டியிடாது படகுச் சின்னத்தை ஆதரிப்பது என்றும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் தங்களுடைய இரு வேட்பாளர்களை நியமிப்பது என்றும் இது போன்று அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது சின்னமான கப்பல் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரித்து தனது வேட்பாளர்களை கப்பல் சின்னத்தில் நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது வேட்பாளர்களை படகுச் சின்னத்தில் நிறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குச் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் வேட்பாளர் பட்டியலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை நியமிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அத்தோடு வி.முரளிதரன் (கருணா) அகில இலங்கை தமிழர் மகாசபையில் இணைந்து அம்பாறையில் போட்டியிட்டதையும் ஆட்சேபித்தார்கள். இவர்களுடைய இவ்வாறான சுயநலமான நடத்தையினால் அம்பாறையில் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரேயொரு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இத்தேர்தலில் இழக்கப்பட்டது. அதற்கான பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் கிழக்கில் போட்டியிட்டிருந்தால் 2020ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இரு பிரதிநிதித்துவமும் அம்பாறையில் ஒரு பிரதிநிதித்துவமும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புப் பெற்று அத்துடன் மேலதிகமாக தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கப் பெற்று கிழக்கில் தனித்துவம் பேணும் ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவாகியிருக்க வேண்டிய கூட்டமைப்பை அப்போது இல்லாமலாக்கியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும்.
தேர்தலில் வெற்றியீட்டிய பின் மாற்று அரசியல் கலாசாரத்தினையும் கிழக்கிற்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்ற தூர சிந்தனை கொண்டு உழைத்த த.கோபாலகிருஸ்ணன் அவர்களை தேர்தலில் வென்றியீட்டிய சிவநேசதுரை சந்திரகாந்தன் எள்ளவும் பொருட்படுத்தாது தன்னுடைய நலனுக்காக எல்லாரும் சேர்ந்து உழைத்த வெற்றியினைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான பலனை 2024ம் ஆண்டு மக்கள் அவருக்கு வழங்கினர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டில் அவர்களுக்கிருந்த அனுதாப அலையினையும் அபிவிருத்தி நோக்கையும் வைத்து தாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையில் கிழக்கின் அரசியல் ஒற்றுமையினைச் சீர்குலைத்தார்கள். ஆனால் இன்று 2024ம் ஆண்டுத் தேர்தலில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது கிழக்குத் தமிழர்களின் அரசியல் ஒற்றுமை, எதிர்கால நலன் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் பேசுகின்ற இந்த ஒற்றுமை, நலன் என்பவை தாம் இழந்த அரசியல் நலன்களையும் சுகபோகங்களையும் மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக போடப்படும் அரசியல் கபட நாடகமேயாகும்.
எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்தக் கபட நாடகத்துக்குப் பின்னால் உள்ள சுயநல நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமக்கான அரசியல் திசையை எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டும்.