— அழகு குணசீலன்—
இலங்கையின் வடக்கு, கிழக்கில் பொதுநிர்வாக கட்டமைப்பை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஆரம்பமும் ஆயுதபோராட்டமும் சமாந்தரமானவை. பொதுநிர்வாகத்தில் பாதுகாப்பு படையினரின் தலையீடு, மாகாணசபை முறைமையின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரப்பரவலாக்க நிர்வாக கட்டமைப்பை இராணுவமயமாக்கல் மூலம் பறிப்பதாக இருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இது வடக்கு கிழக்கு சிவில் நிர்வாகத்தில் படையினரின் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை அதிகரித்ததுடன் பொதுநிர்வாக சிவில் அதிகாரிகள் பார்வையாளர்களாக செயற்படவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியது. யுத்தம் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளை தொடுகின்ற போதும் இன்றும் இந்த நிலையில் மாற்றங்கள் இல்லை.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி கூட்டங்கள் முதல் அனர்த்த முகாமைத்துவம் வரை படையினர் நிர்வாகத்தில் முக்கிய பங்காளிகளாக உள்ளனர். கிராமிய மட்டத்திலான ஒன்று கூடல்கள், கலை கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் என்பனவற்றிலும் படையினரின் பிரசன்னம் பாதுகாப்பு காரணங்களுக்காக அல்லாமல், அவர்களை அதிதிகளாக அழைக்க வேண்டிய கட்டாயப்படுத்தல் காணப்படுகிறது. இந்த கலாச்சாரம் என்.பி.பி.அரசாங்கத்திலும் ‘மாற்றம் ‘ அடையவில்லை..
பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார். வன்னியில் பாலர் பாடசாலைகளை இராணுவம் நடாத்துகிறது என்பதுதான் அது. கல்வி நிர்வாகத்திலும் இராணுவத்தின் தலையீட்டை இது நிரூபிக்கிறது. கல்வித்திணைக்கள பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து அல்லது ஆறாயிரம் ரூபாய் சம்பளமே வழங்கப்படுகிறது என்றும் இராணுவம் நடாத்தும் பாலர் பாடசாலை ஆசிரியைக்கு நாற்பதாயிரத்திற்கும் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளிக்க கல்வி அமைச்சர் வாய் திறக்கவில்லை..
இலங்கையின் மரபு ரீதியான, மரபுரீதியற்ற ஏற்றுமதி சந்தை சர்வதேசத்தில் பெரும் போட்டியை எதிர்நோக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் புதிய இறக்குமதி வரிக்கொள்கை குறித்து முன்னணி கைத்தொழில் நாடுகள் தள்ளாடுகின்றன. இலங்கைபோன்ற ஒரு நாட்டிற்கு இது மிகவும் பாதகமான சர்வதேச சந்தைச் சூழலாக அமையப் போகிறது. தேயிலை, ஆடை, துணி ஏற்றுமதியில் தென்கிழக்காசிய நாடுகளுடன் போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும், வரவு செலவுத் திட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள வருமான மதிப்பீட்டு இலக்கை அடைவதும் சாத்தியமானதாக அமைய வாய்ப்பில்லை.
இன்றைய நிலையில் இலங்கை அந்நியச் செலாவணிக்காக மூன்று மூலங்களிலேயே அதிகம் தங்கியிருக்கிறது.
1. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானம்.
2. உல்லாசப் பிரயாண வருமானம்.
3. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தங்கள் உறவுகளுக்கு, சமூகநல உதவித்திட்டங்களுக்கு அனுப்புகின்ற பணம்.
1977 இல் தாராள பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இன்று 48 ஆண்டுகள் ஆகின்றன. அன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்கள் மிகப்பெரிய அளவில் நாட்டிற்கு திரும்பி விட்டனர். மறு பக்கத்தில் இந்த ஐந்து சகாப்தங்களில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் மத்திய கிழக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் இலங்கை கிராமிய தொழிலாளர்கள் இல்லை. ஆரம்பத்தில் வீட்டுப்பணிப்பெண்களாக சென்ற பலர் திரும்பி விட்டனர். இப்போது மத்திய கிழக்கு வேலைவாய்ப்புக்கான கேள்வி தொழில்நுட்ப அறிவுசார்ந்த தொழில்தேர்ச்சி பெற்ற ஆண் தொழிலாளர்களுக்கானதாக உள்ளது. அதற்கும் ஆசிய தொழிற்சந்தையுடன் போட்டி போடவேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
வீட்டுப்பணிப்பெண்களுக்கான மத்திய கிழக்கு தேவையை பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் பெண்கள் அதிகம் நிறைவுசெய்கின்றனர். இவர்களின் ஆங்கில அறிவு, வாழ்வியல் கலாச்சார நெகிழ்ச்சித்தன்மை என்பன இவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அரபுலக கலாச்சாரத்துடன் இணைந்து பயணிக்கக்கூடிய வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளின் பெண்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் இலங்கை இந்த நாடுகளுடன் போட்டி போடக்கூடியநிலையில் இல்லை. இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமானத்தை ஒரு வரையறுக்கப்பட்ட வகையிலேயே எதிர்பார்க்க முடிகிறது.
அடுத்து, உல்லாசப்பிரயாண வருமானம் தற்போது ஒரு சாதகமான போக்கை காட்டுகிறது. ஆனால் அது நீடிக்குமா என்பது இலங்கையின் அரசியல், பொருளாதார ஸ்த்திரத்தன்மையினாலேயே நிர்ணயிக்கப்படும். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை மீதான மிகக்கடுமையான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் காரணமாக மேற்குலக உல்லாசப்பயணிகள் கணிசமான அளவு இலங்கையை தவிர்த்துக்கொண்டனர். இன்று பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள காற்று வளம் இலங்கைக்கு சற்று சாதகமாக உள்ளது. குறிப்பாக ரஷ்ய – உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யர்களுக்கு மேற்குநாடுகள் விதித்துள்ள பயணத்தடை இலங்கைக்கு சாதகமாக அமைகிறது. இந்த இருநாடுகளிலும் இராணுவத்தில் இருந்து தப்பி வருபவர்களும் இலங்கைக்குள் இலகுவாக நுழைந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு அதிகமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உல்லாசப்பிரயாணிகள் மேற்குலகுடன் ஒப்பிடும்போது அதிகம் செலவிடுவதில்லை. மேலும் அவர்கள் அதிகமாக தங்கள் நாட்டு விடுதிகள், உணவுப்பழக்கங்களை முதன்மைப்படுத்துவதுடன், கடற்குளிப்புக்களையும் தவிர்ப்பவர்கள். இன்றைய நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி வெளிநாட்டவர்களுக்கு கவர்ச்சிகரமான ஒன்றாக உள்ளது. இந்த உல்லாசப்பயணிகள் பௌத்த, இந்து மதம் சார்ந்த ஸ்தலங்களை தரிசிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் விடுமுறைக்காக இலங்கை வருவது குறைவடைந்துள்ளது. புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறைக்கு இருந்த தாயக உறவு இரண்டாம், மூன்றாம் தலைமுறைக்கு இல்லை. இவர்கள் மேற்குலக தனிக்குடும்ப வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள்.
அதேவேளை முதலாவது தலைமுறை வேறுவழியின்றி மீண்டும், மீண்டும் இலங்கையைத்தவிர வேற்று நாடுகளுக்கு உல்லாசப்பயணிகளாக செல்லும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இன்றைய தலைமுறை உலகம் சுற்றும் உல்லாசப்பிரயாணிகளாக மாறிவிட்டது. இவர்களால் உறவினர்களுக்கு, உள்ளூர் உதவித்திட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பணம் போர்க்காலத்தைவிடவும் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் மாதாமாதம் வெளியிடும் உல்லாசப்பிரயாணிகள் தொகையில் புலம்பெயர்ந்த இலங்கையர், இந்தியர், சீனர்களே அதிகமானவர்களாக உள்ளனர். இது உல்லாசப்பிரயாணம் குறித்த வரவு செலவுத் திட்ட வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற வன்முறைகள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், உல்லாசப் பிரயாணிகளுக்கு எதிரான வன்முறைகள் போன்றவை இலங்கையின் இமேஜை பாதிக்கக்கூடியவை என்பதையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையின் பாதுகாப்பு, அபிவிருத்தி சார்ந்து வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் பூகோள அரசியல் தாக்கம் தவிர்க்க முடியாததாகிறது. இலங்கை பாகிஸ்தானிடம் இருந்து விமானம் வாங்கினால் இந்தியா ஆட்சேபிக்கிறது. சீன ஆராய்ச்சிக்கப்பல்கள் நங்கூரமிட்டால் அமெரிக்காவும், இந்தியாவும் முகத்தை சுழிக்கின்றன. இந்த நிலையில் பாதுகாப்பு தேவைக்காக மட்டும் அன்றி அபிவிருத்தி திட்டங்களுக்கும் இந்த நாடுகளிடம் இலங்கை கைநீட்டவேண்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க, சீன, இந்திய உறவில் அரசு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்ற நெருக்கடியில் தண்ணீருக்கால் நெருப்பை கொண்டுபோகவேண்டியதாக அநுர ஆட்சியின் நிலை உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 159 பேரைக்கொண்டிருந்தாலும் இந்த சவால்களை சமாளிக்க கூடிய பலமான ஒரு அரசாங்கமாக அது இல்லை.
தொடரும்…….!