மாவையும் மட்டக்களப்பும்…..(வெளிச்சம்: 040)

மாவையும் மட்டக்களப்பும்…..(வெளிச்சம்: 040)

— அழகு குணசீலன் —

தமிழ்த்தேசிய சாத்வீக போராட்ட வரலாறு,  ஆயுதபோராட்டமாக பரிணமித்த  அரசியல் நிலைமாறு காலத்தை பதிவு செய்பவர்கள் எவரும் அன்றைய மூன்று இளம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை மறந்தும் கடந்து செல்ல முடியாது.  அவர்கள் வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா.

இவர்களில்  காசி ஆனந்தனும், மாவை சேனாதிராஜாவும்  தமிழ்த்தேசிய அரசியல் களத்தில்  நிலைத்து நின்றனர். அவர்களில் ஒருவரான மாவையின் மூச்சு 29.01.2025 அன்று நின்று போனதால் அவரும் ஈழப்போராட்ட வரலாற்றில் இறந்த காலமாகிவிட்டார்.

வடக்கின் எந்த தலைவருக்கும் இல்லாத  தமிழ்த்தேசிய அரசியல் உறவு கிழக்கில் -மட்டக்களப்பில் மாவை சேனாதிராஜாவுக்கு உண்டு. 1970 களில் இருந்து இந்த போராட்டம் தமிழ் இளைஞர்களால் ஆயதப்போராட்ட சிந்தனையுடன் சமாந்தரமாக எடுத்துச்செல்லப்பட்டதிலும், அகிம்சை போராட்டங்களுக்கு பாராளுமன்ற அரசியலுக்குள்ளும், வெளியிலும் வலுச்சேர்ப்பதிலும் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற வாய்ப்பு உண்மையான விடுதலை நோக்கில் நேர்மையான அரசியலை கொண்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது.

தமிழர்விடுதலைக்கூட்டணியின் தமிழ்த்தேசிய அரசியலோடு சேர்ந்து பயணித்த தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டு அரசியல்  மட்டக்களப்பு இளைஞர்களுடான தொடர்பையும், மட்டக்களப்பு கிராமங்களின் தொடர்பையும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாவைக்கு அதிகரித்தது. அந்த இளைஞர்களில்- மூத்தவர்களில் பலர் இன்று  எம்மத்தியில் இல்லை. சிலர் இன்னும் இருக்கிறார்கள். இன்றைய தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல்வாதிகள் பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கின் இன்றைய பாராளுமன்ற, அல்லது முன்னாள் பாராளுமன்ற அரசியல்வாதிகளில் – இன்றிருப்பவர்களில்  பெருந்தலைவர் செ.இராசதுரையும்,  கி.துரைராசசிங்கமும்  மட்டுமே இதை நினைவுகூரக்கூடும்.

மாவையின் அரசியல் தொடர்பு அம்பாறை மாவட்டத்தில் அறப்போராட்ட குழு தலைவர் அரியநாயகம்  முதல், பாண்டிருப்பு வேல்முருகு மாஸ்டர் வரை ஆழமான தளத்தை கொண்டது.  தமிழர் கூட்டணி என்ற பெயரைச் சூட்டியவரே அரியநாயகம்தான். தமிழர் மகாசபை ஊடாகவும், பாண்டியூரான், செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் ஊடாகவும், பொன்.வேணுதாஸ், பன்னீர்ச்செல்வம்…..போன்ற இளைஞர்களின் ஊடாகவும் நிலைத்த  அரசியல் உறவு.  இந்த பிரதேசத்தில் மாவையுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும், தமிழ்தேசிய வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுமாக திரு.சிந்தாத்துரை, திரு.அரசரெத்தினம், வண.சிவநேசக்குருக்கள்  போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மட்டக்களப்பு -பட்டிருப்பில் , சி.மூ. இராசமாணிக்கத்தின்  1970 தேர்தல் தோல்விக்கு பின்னரும், மரணத்தின் பின்னரும் மண்டூர் வேலாயுதபிள்ளை மாஸ்டர், பழுகாமம் முத்துப்பிள்ளை மாஸ்டர், செட்டிபாளையம் லிங்கநாதன் மாஸ்டர், களுவாஞ்சிக்குடி பாக்கியராசா போன்றவர்கள்  ஊடாகவும் மாவை சேனாதிராஜாவின் செயற்பாட்டு அரசியல் வலுப்பட்டது. 1970 களில் தமிழ் இளைஞர் பேரவையூடாக மண்டூர் மகேந்திரன், கல்லாறு நடேசானந்தம், கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்பராசா, தம்பிராசா, அரசரெத்தினம் (கப்டன் டேவிட்) போன்றவர்களால் தமிழ்த்தேசிய மக்கள் மயயப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது. இதனால் மட்டக்களப்பு மண்ணில் கிராமங்களையும், அதன் வாழ்வியலையும், அவற்றின் அரசியல் தேவைகளையும் அறிந்திருந்த ஒரு வடக்கு தமிழ்தேசிய தலைமையை மாவைக்கு நிகராக அடையாளம் காண்பது கஷ்டம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அன்றைய மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில்  ஆரம்பக்கல்வியை பெற்றதும், அவருக்கு  ஆசிரியையாக பட்டிருப்பு முன்னாள் எம்.பி. யின் பாரியார் முத்துலட்சுமி கணேசலிங்கம் பாடம் எடுத்ததும், தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தலைவர் உமாமகேஸ்வரன் நில அளவையாளராக பழுகாமத்தில்  தங்கியிருந்து கடமையாற்றியதும் ஆயுதப்போராட்ட வீறுக்கு முந்திய காலங்கள்.

தமிழ்த்தேசிய பாராளுமன்ற மூத்த தலைமைகளுள் ஒருவரான மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, இளைஞர் பேரவையின் அன்றைய தலைவர் அன்ரன் மற்றும் வாசுதேவா, நிமலன் சௌவுந்தரநாயகம், வாகரை பிரான்ஸ்சிஸ் உள்ளிட்ட  இளைஞர்கள் பலரும் மாவைக்கு அறிமுகமாகி இருந்தார்கள். இதில் கவிஞர் காசி ஆனந்தனுக்கும் பெரும் பங்குண்டு.  இந்த வழமைக்கு மாறான ஒரு நெருக்கமான உறவு தமிழ்த்தேசிய அரசியலோடு பிற்காலத்தில் முரண்பட்டு நின்றவர்களையும் கூட மாவையின் தொடர்பில் இருந்து பிரித்து வைக்கவில்லை. அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் இருதரப்பும் இந்த உறவை இறப்புவரை பேணினார் என்பது தமிழ்த்தேசிய அரசியலில் வழமைக்கு மாறான பாணி.

இவற்றிற்கும் அப்பால் மாவையை மட்டக்களப்போடு கட்டிப்போட்ட சில விடயங்களை குறிப்பிட்டேயாகவேண்டும்.

(*).மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதி நீக்கப்பட்டு பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

(*).இராசதுரை -காசி ஆனந்தன் அரசியல் மோதலில் மாவை சேனாதிராஜாவின் நிலைப்பாடு.

(*). அ.அமிர்தலிஙகம், நீலன் திருச்செல்வம் படுகொலைக்கு பின்னரான அரசியல் விபத்தில் மாவையின் பாராளுமன்ற பிரவேசம். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் செயற்பட்ட விதம்.

(*). 1989, 1994 இல் வடக்கிலும், கிழக்கிலும் மாவை சந்தித்த பாராளுமன்ற தேர்தல் தோல்விகள்.

(*).  கடந்த கால ஆயுத அரசியல் கலாச்சாரத்தில் மாவை கொண்டிருந்த வெறுப்பும்,  காலப்போக்கில் புலிகளின் தலைமையுடனான உறவில் அதிகரித்த இடைவெளியும். 

(*).  பாராளுமன்ற அரசியல் வாதியாக மாவையின் அரசியல் அணுகுமுறையும், செயற்பாடுகளும் .

பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதி உருவாக்கப்பட்டபோது ஏற்கெனவே அம்பாறை தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்த மாவை சேனாதிராஜா 1977  தேர்தலில்  அங்கு போட்டியிடவிரும்பினார்.(?). அல்லது தமிழர்விடுதலைக்கூட்டணியின் அன்றைய செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கத்தின் விருப்பமாகவும் அது  இருந்து இருக்கமுடியும்.(?). இந்த நிலைப்பாடு மாவையின் நெருக்கத்தை இங்கு அதிகரித்தது. ஆனால் இராசதுரை -காசி ஆனந்தன் முரண்பாடு  அதிகரித்த நிலையில் அது மாவைக்கும் , அமிர்தலிங்கத்திற்கும் குறுக்கே வந்து நின்றது. 

இந்த நிலையில் , இராசதுரை -காசி ஆனந்தன் மோதலை விரும்பாதவர்கள் காசி ஆனந்தனை ஏன்? பொத்துவில்லில் நிறுத்தக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர். இந்த நியாயமான கேள்விக்கு பதிலளிப்பது அமிர்தலிங்கம் தலைமையிலான வேட்பாளர் நியமனக்குழுவுக்கு சிக்கலானது.  புதிய தொகுதியில் மாவையை இலகுவாக வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு பதிலாக நிலைமை எதிர்மாறாக மோசமானது. வடக்கில் இருந்து ஒருவர் இறக்குமதி செய்யப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

பல அங்கத்தவர் தொகுதிகளில் வெற்றி பெறுவது ஒப்பீட்டளவில் இலகுவானது. கொழும்பு மத்தி, நுவரெலியா -மஸ்கெலிய மூன்று அங்கத்தவர் தொகுதிகளில் இது வெளிப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கா   மகன் அநுராவை வெற்றி பெறவைப்பதற்காகவே  நுவரெலியா -மஸ்கெலிய தொகுதியை மூன்று அங்கத்தவர் தொகுதியாக்கினார். சௌ.தொண்டமான், காமினி திசாநாயக்க, அநுரா பண்டாரநாயக்கா ஆகியோர் வெற்றி பெற்றனர். கொழும்பு மத்தியிலும் இதே நிலைதான். பிரேமதாச, செல்லச்சாமியோடு முஸ்லிம் பிரதிநிதி ஒன்று வெற்றிபெறுவது வழமை. சி.டபிள்யூ.சி,  யு.என்பி, எஸ்.எல்.எப்.பி மூன்று கட்சிகளும், மூவினமக்களும் பிரதிநிதித்துவம் பெற்றனர்.

இந்த இலக்கிலேயே மாவைக்கு பொத்துவில் குறிவைக்கப்பட்டது. இதை மட்டக்களப்பில் “சாணைக்குறி”  என்பது  மட்டக்களப்பு தமிழின் அழகு. பிறந்த பச்சைக்குழந்த ஒன்றை  போர்த்திக்கொள்ளும்  துணியை “சாணைச்சீலை” என்பது வழக்கம். இந்த குறியீட்டின் அர்த்தம் உறவுமுறைக்குள் பிறந்த குழந்தைகளை  இன்னார்க்கு இன்னார் என்று ஊர்,  உறவுகள் பேசுவது. இதே போன்று தான் பொத்துவில் தொகுதியின் பிறப்பு  மாவைக்கு சாணைக்குறி போட்டு கட்டிவைக்கப்பட்டது எனலாம்.

அதேவேளை இதையும் மீறி மாவையை பொத்துவில்லில் இறக்கினால் அதன் தாக்கம்   மட்டக்களப்பில் காசி ஆனந்தனின் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மாவையை பொத்துவில்லில் நிறுத்தும் முடிவு கைவிடப்பட்டு, அவசர அவசரமாக எம்.சி. கனகரெத்தினம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.சூழ்நிலையை விளங்கிக்கொண்ட மாவை அமிர்தலிங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டார். மாவையை பொத்துவில்லில் வெற்றி பெற வைப்பதை விடவும் இராசதுரையை தோற்கடிப்பது அமிர்தலிங்கத்தின் பிரதான நோக்காக இருந்தது. அன்று மாவை, காசி ஆகியோர் அமிர்தலிங்கத்தின் தடத்திலேயே சற்றும் விலகாது பயணித்தனர். அவர் கீறிய கோட்டை தாண்டமாட்டார்கள்.

மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் செ.இராசதுரைக்கும், காசி ஆனந்தனுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் உதயசூரியன், வீட்டு சின்னங்களில் இவர்கள் போட்டியிட்டனர். அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரில் எவருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த முடிவை மீறி கோவை மகேசன், ஈழ வேந்தன், சிவபாலன் போன்றோர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து காசி ஆனந்தனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை இதைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தில் நடுநிலைமை வகித்தார். இதுவும் மட்டக்களப்பு மக்கள்  மாவையை மானசீகமாக  நேசிக்க காரணமாக அமைந்தது.

1989 விகிதாசார ரீதியான முதல் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் அ.அமிர்தலிங்கம்  போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் வடக்கு கிழக்கில் கிடைத்த மொத்தவாக்குகளால் அவர் தேசிய பட்டியல் எம்.பி.யாக பாராளுமன்றம் செல்ல முடிந்தது. 1989 யூலை 13 இல் புலிகள் அமிர்தலிங்கத்தை படுகொலை செய்ததை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு மாவை நியமிக்கப்பட்டார். அதே தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட மாவை வெறும் 2,820 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்று ஈரோஸிடம்  படு தோல்வியடைந்தார். இதுவே அரசியல் விபத்து ஒன்றின் மூலமான மாவையின் பாராளுமன்ற அரசியலின் ஆரம்பம். தமிழர்விடுதலைக்கூட்டணியின் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் கிடைத்த வாக்குகள் பெரும்பங்களிப்பு செய்தன. 

மேலும் மாவையின் பொத்துவில் தொகுதிக்கு எம்.பி.யாவது என்ற எண்ணம் தொடர்ந்தும் வலுப்பெற்று வந்தது. இதற்கு வடக்கில் வாய்ப்பு இல்லை என்று அவர் நினைத்திருக்கவும், பொத்துவில்லில் இலகுவாக வெற்றி பெற முடியும் என்று நினைத்திருக்கவும் கூடும். இதனால் 1994 இல் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு தனது நீண்ட நாள்  அரசியல் ஆசையை நிறைவேற்றினார். ஆனாலும் அவர் தோல்வியடைந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் அவரின் நண்பர்களாக இருந்த போதும் மாவை அங்கு போட்டியிடுவதை  விரும்பவில்லை. அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபையும், அதன் முக்கியஸ்தர்களும் சுயேட்சை குழு ஒன்றை களமிறக்கியதன் மூலம் மாவை தோற்கடிக்கப்பட்டார். இது அவரின் எதிர்கால பாராளுமன்ற அரசியலுக்கு சில படிப்பினைகளை வழங்கயிருக்க வாய்ப்புண்டு.

 பின்னர் புலிகளின் மற்றொரு படுகொலை அவருக்கு மீண்டும் ஒரு விபத்து வாய்ப்பை வழங்கியது. நீலன் திருச்செல்வத்தின் கொலைக்கு பின்னர் ஏற்பட்ட தேசிய பட்டியல் வெற்றிடத்திற்கு மீண்டும் மாவை நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் அவருக்கு அம்பாறை தமிழர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனால் மட்டக்களப்பு மண்ணுடனான தொடர்பு மேலும் அதிகரிக்க மாவைக்கு வாய்ப்புகிடைக்கிறது. தற்போது தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு -செலவுத்திட்ட நிதியையும் அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளும், வேலைவாய்ப்புக்களையும் வழங்கினார். தேசிய பட்டியல் எம்.பி.யான மாவை  அம்பாறை மாவட்ட எம்.பி. போன்றே செயற்பட்டார். குறிப்பாக பெரிய நீலாவணை வைத்தியசாலை இவரின் முயற்சியாலும், நிதி ஒதுக்கிட்டாலும் அமைக்கப்பட்டது. 1989, 1994 இல் இவர் சந்தித்த தேர்தல் தோல்விகளும், தேசியப்பட்டியல் எம்.பி.பதவியும் மட்டக்களப்போடு அவரின் தொடர்பை அதிகரிக்க உதவின.

மாவை சேனாதிராஜா பொதுவாக முஸ்லீம் சமூகத்துடன் ஒரு நல்லிணக்க நிலைப்பாட்டை எப்போதும் கொண்டிருந்தார். இந்த உறவு அஷ்ரப் காலத்திற்கு முந்திய மன்சூர் மௌலானா  காலத்து உறவு. இதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியிலும் மாவைக்கு நற்பெயர் இருந்தது. என்றாலும் கல்முனை தமிழ் பிரதேச விவகாரத்திற்கு அவராலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீர்வு காண முடியவில்லை. ஆனால் மாவை தமிழ் – முஸ்லிம் இனவாத அரசியல் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்கள் மீதான படுகொலைகளுடன் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. 

இதற்கு பின்னரான 2000 ,2001,2004,2010,2015 ஆகிய ஐந்து தேர்தல்களிலும் அவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றார். 2020 இலும், 2024 இலும் தேசிய பட்டியலுக்கு முயற்சி செய்தார் முதலாவதில் செயலாளர் கி.துரைராசசிங்கம் விரைந்து செயற்பட்டதில் கலையரசன் எம்.பி.ஆனார். 2024 இல் அவரது முதுமை முக்கிய  தடையாக -காரணமாக குறிப்பிடப்பட்டது. 2020 இல்  கலையரசனுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அம்பாறை தமிழர்களுக்கு எம்.பி.இல்லாத நிலையில் தனது சேவையை அம்பாறை தமிழர்களுக்கே வழங்கியிருப்பார் என்று நம்பலாம்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றுக்கு மாவையூடாக தீர்வு காணமுற்பட்ட சம்பவம் ஒன்றை  மூத்த தமிழ்த்தேசிய நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருந்தேன். மட்டக்களப்பு – புளியந்தீவில் உள்ள முன்னணிப்பாடசாலைகள் அனைத்தும் கிறிஸ்தவ பாரம்பரியத்தைக்கொண்டவை. ஒரு பாடசாலை மட்டுமே இந்துமத பாரம்பரியம் கொண்டது. அன்று இதன் அபிவிருத்தியில்  பாரபட்சம் காட்டப்படுவதாக ஒரு கருத்து இருந்தது. இது மதரீதியான முரண்பாட்டு பிரச்சினையா? தனி நபர்களுக்கு இடையிலானதா? அல்லது கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பதில் தெளிவில்லை. ஆனால் புறக்கணிப்பு என்று அபிவிருத்தி அக்கறை கொண்ட ஒரு பகுதியினர் கருதினர் .

மட்டக்களப்பில் தமிழ்த்தேசிய அரசியலில் பிரபலமான அந்த எம்.பி.  குறிப்பிட்ட பாடசாலை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் பாடசாலை அபிவிருத்தி அக்கறையாளர்கள் ஒரு திட்டம் போட்டனர். மட்டக்களப்பின் மூத்த தமிழ்த்தேசிய அரசியல் வாதியூடாக மாவை சேனாதிராஜாவையுடன், குறிப்பிட்ட எம்.பி.யையும்    பாடசாலை நிகழ்வொன்றுக்கு அதிதியாக அழைக்க முடிவுசெய்தனர். இதற்கு  முன்னர் பல தடவைகள் அழைத்தும்   எம்.பி. அதை தட்டிக்கழித்து வந்ததால் இந்த முடிவு. இந்த முறை மாவையும் வருவதால் அழைப்பை  ஏற்கவேண்டிய  கட்டாயம்  ஒத்துக்கொண்டார். ஆனால் மாவை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் இருந்து வந்திறங்கிய போது,  இறுதி நேரத்தில் தனக்கு கொழும்பு அமெரிக்க தூதரகத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று இருப்பதாக கூறி  எம்.பி. கொழும்பு சென்றுவிட்டார் என்று சொன்னார் அவர். மட்டக்களப்பு பிரச்சினை ஒன்றுக்கு மாவையூடாக தீர்வைத்தேடும் அளவுக்கு அவருக்கு மட்டக்களப்பில்  அரசியல் உறவும், அவர் மீதான  நம்பிக்கையும் இருந்தது என்பதுதான் இங்கு முக்கியமானது.

இயக்க மோதல்கள், தனிநபர்கள் மீதான அரசியல் படுகொவைகளை மாவை விரும்பவில்லை. மு.ஆலாலசுந்தரம், வி.தர்மலிங்கம் ஆகியோரை ரெலோ படுகொலை செய்ததில் இருந்து இது வெளியிடப்பட்டது. காலப்போக்கில் அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைத்து கொலைகளையும் சிலர் தமிழ்த்தேசியத்தின்  பெயரில் நியாயப்படுத்தியிருந்தபோதும்,  மாவை நியாயப்படுத்தவில்லை. அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது  அந்த சந்தர்ப்பத்தில் மாவையும் அமிரோடு இருந்திருந்தால்  இன்றைய இறுதிச்சடங்கு   35 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கும் என்பதை மறுதலிப்பது கஷ்டம்.  மாவையோடு மிகவும் நெருக்கமாக அரசியல் செயற்பாட்டாளர்களாக இயங்கிய பலரதும் கொலைகள் அவரைபாதித்து இருந்தது. இதனால் புலிகளின் தலைமைக்கும் மாவைக்கும் இடையிலான உறவில் இடைவெளி அதிகரித்தது. சகோதர இயக்கங்களின் கொலைகளை அவர் “துரோகிகள்” என்ற பையில் போட்டு கட்டவில்லை.

கிழக்கில் -மட்டக்களப்பில் மாவை சேனாதிராஜாவுடன் மிக நெருங்கிய அரசியல் உறவைக்கொண்ட வேல்முருகுமாஸ்டர், நிமலன் சவுந்தரநாயகம், கிங்ஸ்லி இராசநாயகம், அ.தங்கத்துரை, சி.சம்பந்தமூர்த்தி, சாம் . தம்பிமுத்து, கலாமாணிக்கம் கொலைககளும் அவரை பாதித்திருந்தன. அ.அமிர்தலிங்கம், வி.யோகேஸ்வரன்,  உள்ளிட்ட மற்றைய, சகலதரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கொவைகளாலும் மாவை பாதிக்கப்பட்டிருந்தார். மற்றும் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களும் ஒரு காலத்தில் அவரோடு செயற்பாட்டில் இருந்தவர்கள். இயற்கை மரணம் எய்திய மண்டூர் மகேந்திரனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது  ஆரோக்கியமற்ற உடல்நிலையிலும் அவர் மட்டக்களப்பு வந்திருந்தார். அப்போது மாவை பல விடயங்களை நம்பிக்கைக்குரியவர்களுடன் மனம்விட்டு பேசியிருக்கிறார்.

மாவையின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் அவரை விடுதலைப் போராளி என்ற நிலையில் இருந்து ஒரு வழக்கமான பாராளுமன்ற அரசியல்வாதியாக மாற்றிவிட்டது. காலப்போக்கில் அவர் அதிலே மூழ்கிவிட்டார். தேர்தல் அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் மாவை ஒப்பீட்டளவில் ஒரு நாகரிகமான பாராளுமன்ற அரசியல்வாதியாக இருந்தார்.  “மோட்டு சிங்களவன்,….. போன்ற காழ்ப்புணர்ச்சி இனவாத வார்த்தைகளை அவர் எப்போதும் தவிர்த்து வந்தார். உட்கட்சி பிரச்சினைகளை பேசித்தீர்க்க விரும்பினார் எனினும் அது அவரின் கைகளில் மட்டும் சார்ந்து இருக்கவில்லை.

மாவை அவரின் உருவத்திற்கும், உயரத்திற்கும் ஏற்ற உறுதியான ஆளுமையோ, தலைமைத்துவப் பண்புகளையோ கொண்ட கட்சியின் கட்டளைத்தளபதி  அல்ல. அதனால் சுமார் இரு சகாப்தங்களாக தமிழ்த்தேசிய அரசியலுக்கு செயலாளராகவும், தலைவராகவும் அவரால் சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியவில்லை. இந்த பலவீனம் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் காய் நகர்வுகளும், இராஜதந்திர செயற்பாடுகளும்   தோல்வியடைய காரணமாக அமைந்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய தலைமைத்துவ மெத்தன போக்கு தமிழரசுக்கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. மாவையின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான தமிழ்த்தேசிய அரசியல் அனுபவம்  இறுதியில் திக்கு தெரியாத ஒரு காட்டில்  தமிழ் மக்களையும், கட்சியையும் கொண்டு போய் விட்டுள்ளது என்பது துரதிஷ்டம். என்றாலும் இந்த நிலைக்கான ஒட்டு மொத்த பொறுப்பையும் யாரும் மாவையின்  தலையில் மட்டும் கட்டிவிடமுடியாது.

சமகால அரசியலில் அவரின் தலைமைத்துவ பலவீனம் பல குத்துவெட்டுகளுக்கும், குழிபறிப்புக்களுக்கும் காரணமான ஒரு பதவி வெறியாக எல்லாத்தரப்பிலும் மாறிவிட்டது. வெளுத்ததெல்லாம் வெள்ளை என்று நம்பிய மாவையின் இந்த நிலைக்கு அவரது பலவீனத்திற்கும் பாதிப்பங்குண்டு.

தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் மாவை எப்போதும் பதிவு செய்யப்படவேண்டிய ஒருவர். ஆகக்குறைந்தது இந்த கொடூரமான தமிழ்த்தேசிய அரசியல் சூழலிலும்   ஒப்பீட்டளவில் மாவையை ஒரு மானிட நேயம் கொண்டவராக அனைத்து விமர்சனங்களுக்கும் அப்பால் மட்டக்களப்பு அடையாளம் காணமுடியும்.

அஞ்சலிகள் …!