அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்!

அதிகாரிகளும் தமிழ் தலைவர்களும் மடங்கினர்!

— கருணாகரன் —

தென்னிலங்கை அரசியற் களத்தைக் கலக்கும் NPP யும் அநுர குமார திசநாயக்கவும் வடக்கில் தமிழ்த்தரப்பையும் தடுமாற வைக்கும் உபாயத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்ற வெற்றி  NPP க்கும் அநுர குமாரவுக்கும் வடக்கில் தமக்கான அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கான தந்திரோபாய நடவடிக்கையில் அநுர ஈடுபடுகிறார். அதனுடைய வெளிப்பாடுகளே, அவருடைய அண்மைய யாழ்ப்பாண விஜயமாகும்.

யாழ்ப்பாண விஜயத்தில் அநுர சில வெற்றிகளை உடனடியாகவே பெற்றுள்ளார். 

1.      யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் அநுரவைச் சுற்றித் திரண்ட மக்கள். இதன் மூலம் தமிழ் மக்களின் பேராதரவு தனக்கும் NPP க்கும் உண்டென்று காட்டியுள்ளார். குறிப்பாக தனக்குள்ள ஜனவசியத்தை உலகுக்கும் தமிழ்த் தரப்புகளுக்கும் தன்னுடைய கட்சிக்கும் காட்டியிருக்கிறார். அதிலும் தமிழ் மக்களின் பேரதரவைப் பெற்ற ஒரே சிங்களத் தலைவர் – ஜனாதிபதி தானே என்பதைக் காட்டுவதற்கு அநுரவுக்கு இது வாய்த்துள்ளது. இன்னும் இதை ஆழமாகச் சொன்னால், இன்றுள்ள தமிழ்த் தலைவர்களை விடவும் அநுரவுக்கு தமிழ் மக்களிடம் பேராதரவுண்டு என்பதை நிரூபித்திருக்கிறார்.

2.      “வடக்கின் அபிவிருத்திக்காக அனுப்பப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுவது ஏன்?” என்று யாழ்ப்பாணத்தில் வைத்துப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி, பலரையும் மடக்கி விட்டார் அநுர குமார. “இந்தக் கேள்விக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் அதிகாரிகள் தடுமாறினார்கள்” என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகாரிகள் மட்டுமல்ல, அங்கே பிரசன்னமாகியிருந்த தமிழ்த்தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைதி காத்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிவஞானம் சிறிதரனும் இதற்குப் பதிலளிக்காமல் மௌனமாகவே  இருந்துள்ளனர். ஆகவே இங்கும் அநுரவுக்கும் NPP க்கும் வெற்றி கிட்டியுள்ளது.

3.      தமிழ் அரசியற் தரப்பினர் உங்களை(மக்களை) ஏமாற்றுகின்றனர். உங்களுக்குரிய தேவைகளைப் பற்றியோ, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ இவர்கள் சரியாக – சீரியஸாகச் சிந்திப்பதேயில்லை. சும்மா படங்காட்டுவதற்காக  வாயடிப்பதுதான் இவர்களுடைய வேலை. இல்லையென்றால், அரசாங்கம் ஒதுக்கும் நிதியைக் கூட ஒழுங்காகச் செலவழிக்க முடியாமலிருப்பதைப் பற்றி இவர்கள் அக்கறையில்லாமல் இருந்திருப்பார்களா? பாருங்கள், அதைக் கூட அங்கிருந்து (தெற்கிலேயிருந்து) நாம் வந்துதான் பேசவேண்டியுள்ளது. இந்தளவுக்குத்தான் உங்களுடைய தலைவர்களாக இருந்தவர்களும் இருக்க நினைப்போரும் உள்ளனர் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அநுர. அதாவது, தெற்கிலே பொறுப்பில்லாமல் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி, மக்கள் ஒதுக்கித் தள்ளுவதற்குப் பயன்படுத்திய உத்தியை, இங்கும் தமிழ் அரசியல்வாதிகளை ஒதுக்குவதற்குப் பயன்படுத்துகிறார். இதிலும் அநுரவுக்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. 

4.      யாழ்ப்பாணத்தில் அநுரவுக்குக் கிடைத்த வரவேற்பு எதிர்காலத்தில் கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் ஒரு தூண்டுதலாக அமையும். இதையும் விடத் தாம் இன்னும் பெரிய வரவேற்பைக் கொடுக்க வேண்டும் என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டும். அதுதான் நடக்கவும் போகிறது. அப்படியே, கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அது வளர்ச்சியடையும். அங்கே (திருகோணமலை, அம்பாறையில்) சிங்கள மக்களும் வாழ்வதால், இது இன்னும் உச்சமடையும். இதனால், அரசியற் தீர்வைப் பற்றிய உரையாடல்களில் தேசிய மக்கள் சக்தியின் பக்கமே மக்கள் நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் தமிழரின் அரசியலிலும் NPP யின் அரசியலிலும் முக்கியமானவை. ஏனென்றால், அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களிலும் NPP வடக்குக் கிழக்கில் செல்வாக்கைப் பெறுவதற்கான சாத்தியங்களை இது உண்டாக்குகிறது. அதேவேளை தமிழ்த் தேசியத் தரப்புகளுக்கு ஆணி அடிக்கும் காரியமாகவும் இது அமையக் கூடும். 

முக்கியமாக வடக்கிற்கு அனுப்பப்படும் நிதியைப் பயன்படுத்தாமல் ஏன் திருப்பி அனுப்புகிறீர்கள் என்று யாழ்ப்பாணச் செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி பகிரங்கமாவே கேட்டதும் அதற்கான பதிலை அதிகாரிகளும் தமிழ் அரசியற் தரப்பினரும் சொல்ல முடியாமல் தடுமாறியதும் தன்னை, தம்மை, வலுப்படுத்திக் கொள்வதற்கான உபாயமாகும். இதை அநுர திட்டமிட்டே செய்திருக்கிறார். இதற்கு யாராவது மறுப்புச் சொல்லியிருந்தால் அதற்கான பதிலை அவர் நிச்சயமாக அளித்திருப்பார். அதற்கான தயாரிப்புடன்தான் – தகவல் திரட்டுடன்தான் – அவர் இதைச் சொன்னார். என்றபடியால்தான் சிறிதரனும் கஜேந்திரகுமாரும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தனர். ஆகவே, பகிரங்க வெளியில் தமிழ்த்தேசியத்  தரப்பைத் தோற்கடித்துத் தன்னை – NPP யை நிறுவியிருக்கிறார். 

 ஜனாதிபதி இந்தச் சேதியைச் சொல்வதற்கு – இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு – முன்பே, வடக்குக்கு அனுப்பப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்று பல தடவை, பல தரப்பினராலும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடக்கு மாகாணசபையை தமித்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்த – விக்னேஸ்வரன், முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பெருமளவு நிதி செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகக்  குற்றம் சாட்டப்பட்டது. 

இப்படிக் குற்றஞ் சாட்டப்பட்ட விடயத்தைக் குறித்து இதுவரையிலும் கஜேந்திரகுமார், சிறிதரன் தரப்புகள் உள்பட எவரும் விசாரித்ததும் இல்லை. உண்மையைக் கண்டறிந்ததும் இல்லை. பதிலாக அரசாங்கம் வடக்கைப் புறக்கணிக்கிறது. பாரபட்சம் காட்டுகிறது என்றே புறணி சொல்லி, பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தே வந்திருக்கிறார்கள்.

கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளிலும் உள நிலையிலும் பாரபட்சங்களும் புறக்கணிப்புகளும் இருந்தது உண்மைதான். அதேவேளை அரசாங்கத்தினால் வடக்குக்கு அனுப்பப்பட்ட நிதி முறையாகச் செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதும் உண்டு. என்பதால்தான் இதைப் பகிரங்கமாக – முகத்துக்கு முன்பாக – ஜனாதிபதி போட்டுடைக்க வேண்டி வந்தது. 

இதற்குப் பிறகு கூட இந்த விடயத்தைக் குறித்து உண்மையைக் கண்டறிவதற்கு சிறிதரனோ, கஜேந்திரகுமாரோ அல்லது ஏனைய தமிழ்த்தரப்பினரோ முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம் இது தொடர்பாக நாம் உண்மையைக் கண்டறிந்து உங்களுக்கும் (அரசாங்கத்துக்கும்)மக்களுக்கும் விளக்குவோம் என்று கூட இதுவரை (இந்தக் கட்டுரையை எழுதும்வரை) இவர்களிடமிருந்து எந்தவிதமான பதில்களும் வரவில்லை. 

ஆனால், வடக்கிலுள்ள அதிகாரிகளும் வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்த, செய்யும் அரசியற் தரப்பினரும் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். குறிப்பாக முன்பு ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களாக இருந்த விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் என்ற சந்திரகாந்தன், சிவமோகன், கலையரசன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அனைவரும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள். 

கூடவே முன்பு அதிகாரிகளாக இருந்தோரும் முன்னர் அரசியல் அதிகாரத்திலிருந்தோரும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புடையோராவர். 

ஏனென்றால், போரினால் மிக மோசமான அழிவைச் சந்தித்த பிரதேசம் வடக்காகும். உளரீதியான பாதிப்பு. உடல் ரீதியான பாதிப்பு. வளரீதியான பாதிப்பு. தொழில் ரீதியான பாதிப்பு. புவியியல் மற்றும் சூழலியல் சார்ந்த பாதிப்பு. பொருளாதார ரீதியான பாதிப்பு, பண்பாட்டு ரீதியான பாதிப்பு எனப் பல வகையான பாதிப்பைச் சந்தித்தது வடக்கு.

அவ்வாறு பல முகப் பாதிப்புகளைச் சந்தித்த பிரதேசத்தை மீள்நிலைப்படுத்துவதற்கு பல வழிகளில் பல விதமான உதவிகளும் நிவாரணங்களும் ஆதரவும் நிதியும் தேவையாக இருந்தது. அதில் ஒன்றே அரச உதவியும் நிதி ஒதுக்கீடுமாகும். அதையே முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதும் அந்த நிதியைத் திருப்பி அனுப்புவது என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வடக்குப் பிரதேசத்துக்கும்  இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். இதனை யாரும் மறுக்க முடியாது.

இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும். வடக்கிலே உள்ள அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி, அனைவரும் தமிழர்கள் அல்லது தமிழ்பேசும் சமூகத்தினரேயாகும். சில காலங்களில் மட்டும் ஆளுநராகப் பதவி வகித்தோர், சிங்களவர்களாக இருந்துள்ளனர். மற்றும்படி அநேகமாக அனைவரும் தமிழ்த்தரப்பினராக இருந்தபடியால், இனரீதியாகப் பாரபட்சம் காட்டி நிதியைச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியதாக யாரும் கதை (விட) சொல்ல முடியாது. 

இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், ஒவ்வோராண்டும் திருப்பி அனுப்பப்பட்ட நிதியின் விவரமும் அந்த நிதி எந்த  ஒதுக்கீட்டிற்கானது, எந்தத் திணைக்களத்திற்கானது என்ற விவரமும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதைப் புதிய அரசாங்கம் வெளிப்படுத்துமா?  என்பதேயாகும். அதைப் புதிய அரசாங்கம் வெளிப்படுத்துமாக இருந்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டேயாக வேண்டும். 

இந்த இடத்திலே இன்னொரு விடயத்தையும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது. அண்மைக்காலத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் , “அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அப்படி மக்களுக்குப் பொறுப்பாக வேலை செய்ய முடியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது அவர்கள் தமது கதிரையை விட்டு வெளியேற வேண்டும்…” என்ற குற்றச்சாட்டைப் பகிரங்கமாகவும் சற்றுக் காட்டமாகவும் முன்வைத்து  வருகிறார். 

ஆளுநரின் கூற்றும் ஜனாதிபதியின் கூற்றும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. அதாவது அதிகாரிகளின் அசிரத்தையே பெரும்பாலான தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் காரணம் என்பதை இவை  நிரூபிக்கின்றன. 

இதேவேளை இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. திட்டமிடலிலும் அதற்கான தரவுகளைச் சேகரிப்பதிலும் கூட வடக்கு மிகப் பின்தங்கியதாகவும் பலவீனமுடையதாகவுமே உள்ளது. வடக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் குறைபாடுகளை நாம் தெளிவாகவே காண முடியும். 


குறிப்பாக வடக்கு மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைத்திட்டங்களும் அபிவிருத்திகளும் தோல்வியையே கண்டுள்ளன. பல கட்டிடங்கள் செயற்பட முடியாத நிலையில் பாழடைந்து கொண்டிருக்கின்றன. வாழ்வாதார உதவிகளுக்கென மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும் நிவாரணங்களும் எந்த வகையிலும் குறித்த தரப்பினரின் வாழ்வை மேம்படுத்தவேயில்லை. அவ்வாறே சிறுதொழில் வளர்ச்சி, கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கான உதவிகள் போன்றவையும் வெற்றியைப் பெறாமல் படுத்து விட்டன. 

இவையெல்லாம் சரியாகத் திட்டமிடப்படாமையின் வெளிப்பாடுகளே – விளைவுகளேயாகும். அல்லது இவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தி, வெற்றியடையச் செய்திருக்க வேண்டும். அதுவும் திட்டமிடலில் ஒரு பகுதியேயாகும். அது செய்யப்படவேயில்லை. 

ஆகவே பொறுப்பான அதிகாரிகள் (திட்டமிடற் பிரிவினர் உள்பட அதற்கு மேலுள்ள நிறைவேற்று அதிகாரிகள் வரையில்) இதற்குப் பொறுப்புடையோகின்றனர். இந்தப் பொறுப்பு வடக்கைப் பிரதிநிதித்துவம் செய்த – செய்கின்ற அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு. 

அப்படியென்றால், இந்தக் கூட்டுத் தவறு ஏன் நிகழ்ந்திருக்கிறது? மக்கள் மீது இவர்களுக்கெல்லாம் அக்கறையே இல்லையா? என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். 

இதற்குப் பிரதான காரணம், பொறுப்பின்மையாகும். இரண்டாவது ஆற்றலின்மை. மூன்றாவது, அச்சம். நான்காவது, அரசியல்.

பொறுப்பின்மை என்பது அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, சாதாரண ஊழியர்கள் மட்டுத்திலும் அரசியல்வாதிகளிடத்திலும்  வளர்ச்சியடைந்துள்ள ஒரு தீவிர நோயாகும். தட்டிக்கழித்தலும் சாட்டுச் சொல்லுதலும் தமிழ்ச்சமூகத்தில் வலுத்து விட்டது. இதைத் தட்டிக் கேட்போரும் சுட்டிக் காட்டுவோரும் எதிராளிகளாக நோக்கப்படும் அளவுக்கு இந்த  நோய் வலுத்துள்ளது.

இந்தப் பொறுப்பின்மை போருடன் சேர்ந்து வளர்ந்ததாகும். ஒரு காலகட்டத்தில் மிக அர்ப்பணிப்போடு பணியாற்றிய அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பின்னர் ஏனோ தானோ என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இதற்குக் காரணம், போர்க்காலத்தில் பொறுப்புச் சொல்வது சுலபம். போர்ச்சூழலில் நாம் இப்படித்தான்தான் செயற்படக் கூடியதாக இருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். அங்கே முழுமையான நிர்வாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. சூழலும் இல்லை. அப்படியாக இருந்தாலும் அதற்கான பொறுப்பை ஏதோ ஒரு தரப்பின் தலையில் விட்டு விடலாம். 

இப்போது (போருக்குப் பிந்திய சூழலில்) அப்படிச் செய்ய முடியாது.  இப்பொழுது நிர்வாக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்ய வேண்டும். பொறுப்புச் சொல்ல வேண்டும். அதற்குப் பழக்கப்படாத அதிகாரிகளே பலரும். இதை மூத்த அதிகாரிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பெரும்பாலான அதிகாரிகள் நீண்டகாலமாக அல்லது தமது பணிக்காலம் முழுவதுமே வடக்கிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாளர்கள். பிற இடங்களில் வேலை செய்யும்போது கிடைக்கின்ற அனுபவத்தைப் பெறாதவர்கள். 

ஆகவே ஒரு மந்த நிலை, ஆற்றலின்மை இவர்களிடத்திலே உருவாகியிருக்கிறது. இது பொறுப்பின்மையை வளர்த்திருக்கிறது. 

அடுத்தது, அச்சமாகும். இது கூட வடக்கிற்குள் முடங்கியிருந்ததால் ஏற்பட்டது எனலாம். தாம் சுயாதீனமாகவும் தற்துணிவோடும் சில வேலைத் திட்டங்களை, தீர்மானங்களை முன்னெடுத்தால், அதற்காகப் பழிவாங்கப்படுவோமோ?அரசாங்கத்தின் ஆட்களாகக் கருதப்பட்டு விடுவோமோ? என்ற அச்சம். 

கூடவே அரசாங்கத்தரப்பு – எதிர்த்தரப்பு என்ற பிரிகோட்டுக்குள் சிக்க வேண்டியிருக்கும் என்ற காரணத்தினால், தட்டாமல், முட்டாமல் ஏதோ இருக்கும் காலம் வரையிலும் கதிரையைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று நடந்து கொள்வது. 

இதனால், தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கும் செயற்படுத்துவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக, யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த்திட்டம் இரணைமடு – மருதங்கேணி – பாலியாறு என மூன்று திசைகளில் இழுபடுகிறது. இதை துணிச்சலோடு அதிகாரிகள் அதற்கான அடிப்படையில் வாதிட்டு முன்னெடுத்திருக்க முடியும். அப்படிச் செய்யவில்லை. நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வடிகாலமைப்புச் சபை ஆகிய இரண்டு தரப்பு அதிகாரிகளின் தயக்கங்களே இந்தத் திட்டம் இன்னும் இழுபறியில் இருப்பதற்கும் சர்ச்சையோடு நீடிப்பதற்கும் காரணமாகும். அதிகாரிகளிடத்தில் நீடிக்கின்ற தயக்கமே அரசியற் தரப்பினரிடத்திலும் உள்ளது. 

ஆக கூட்டு மந்தத் தனமே இங்கே நிலவுகிறது. இறுதியான காரணம், அரசியலாகும். ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல அரசியல் சிக்கல்களுக்குள் தாம் உள்ளாக வேண்டி வந்து விடும் என்ற முன்னெச்சரிக்கையோடு தணிந்து – பணிந்து – மந்தமாகிப் போவதோடு, அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று காட்டுவதற்கான – பழியை அரசின் தலையில் கட்டி விடும் விதமாகவும் இந்தக் குறைபாடு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் புறக்கணிக்கிறது. எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று சுலபமாகப் பழியைச் சுமத்தி விடுவதற்கு இதை ஒரு கருவியாகவும் வாய்ப்பாகவும் பயன்படுத்தியுள்ளனர். இதை தமிழ் அரசியல்வாதிகள் தாராளமாக ஆதரித்துள்ளனர். அவர்களுடைய அரசியலுக்கு இது தேவையான கருப்புப்பொருள் அல்லவா!

இதனால்தான் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதைப்பற்றி இவர்கள் கேள்வி எழுப்பவேயில்லை. இனியும் கேட்கப்போவதில்லை. இப்படியான ஒரு நெருக்கடிச் சூழல் ஏற்படும்போது, அது அதிகாரிகளின் குறைபாடு, தவறு, குற்றம் என அவர்களுடைய தலையிற் கட்டிவிடவே முயற்சிக்கின்றனர். அப்படியானால், எதற்காக இவர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குச் செல்கின்றனர்?ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்போய்க் குந்தியிருக்கின்றனர்?

இப்போது NPP யும் அநுரவும் எல்லோருக்கும் சோதனையை – சவாலை உருவாக்கியுள்ளனர். யதார்த்தத்துக்கு – உண்மைக்கு – நெருக்கமாக வர முடியாத – வர விரும்பாத தரப்புகளுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை NPP யும் அநுரவும் சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. அதற்கான NPP யோ அநுரவோ ஒன்றும் தேவதூதர்களோ, தேவ கட்டமைப்போ இல்லை. ஆனால், முடிந்தளவுக்கு எளிமையாகவும் இயல்பாகவும் சனங்களின் மீதான கரிசனையோடும் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. 

புதிய அரசாங்கம், புதிய ஆட்சி,புதிய தலைமை பல  மாற்றத்தை உண்டாக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. அதனுடைய அடையாளமே இந்த மணியடிப்பாகும். பார்ப்போம், இனியாவது மாற்றங்கள், முன்னேற்றங்கள் நிகழ்கிறதா? என்று.