(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
கோகுலன் கல்முனை நீர்ப்பாசன அலுவலகத்திலிருந்து திருக்கோவில் வந்து சேர்ந்தவேளை கோகுலனுடைய வீட்டடியில் ஜெயதேவாவும் சந்திரநேருவும் கோகுலனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிருவருமே கோகுலனிடம் ஏக காலத்தில் கேட்டார்கள், ‘கோகுலன்’! உங்களுக்கு இடமாற்றம் வந்துள்ளதா?,”
கோகுலன் ஆச்சரியத்துடன் அவர்களைக் கேட்டான்,
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“துரைராசரட்ணம் கோமாரிப் போஸ்ற்’ மாஸ்ரர் ராஜூவுக்குச் சொல்லியிருக்கார். நாங்க இண்டைக்குக் காலம கோமாரிக்குப் போயிரிந்தம். அப்ப ராஜூவக் கண்ட நாங்க. ராஜூதான் இந்தச் செய்திய எங்களிட்டச் சொன்னார்” என்றார் சந்திரநேரு.
ஜெயதேவா கேட்டார், “கோகுலன் என்ன செய்யப் போறீங்க?”
கோகுலன் அதற்கு ”இடமாற்றம் வந்தால் போகத்தானே வேணும்” என்று பதில் கூறவும்,
“மாற்றம் எந்த இடத்திக்கு வந்திரிக்கு?” என்றார் சந்திரநேரு.
“அம்பாந்தோட்ட மாவட்டத்தில இரிக்கிற கிரிந்திஓயா நீர்ப்பாசன அலுவலகத்திற்கு” என்று பதிலிறுத்தான் கோகுலன்.
“கோகுலன்! நாங்க ஊராக்கள் சேர்ந்து ரங்கநாயகி எம்.பிட்டப் போய் உங்கட இடமாற்றத்த ரத்துச் செய்யச் சொல்லி கேட்கப்போறம்” என்றார் ஜெயதேவா.
“நாங்க கோமாரியில வைச்சி ராஜூ வீட்டிலிருந்து இந்தச் செய்தியக் கேட்டொன்ன இதப்பத்தி எங்களுக்குள்ள கதச்சி இந்தத் தீர்மானத்தோடதான் உங்களச் சந்திக்க வந்தநாங்க” என்றார் சந்திரநேரு.
“அது உங்கட விருப்பம். ஆனா நான் எந்த அரசியல்வாதியிடமும் போய்க் கேட்கமாட்டன். இடமாற்றத்த ரத்துச் செய்ய அல்லது ஒரு வருசத்திக்காவது ஓத்திப்போடக் கேட்டு கொழும்பு நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளருக்குக் கடிதம் எழுதியிரிக்கன். சரிவந்தா பாக்கிற. இல்லாட்டிப் போகத்தானே வேணும்” என்று தன் முடிவைச் சொன்னான் கோகுலன். பதில் ஏதும் சொல்லாமல் இருவரும் ஒருவரையொருவர் உற்றுப்பார்த்துவிட்டு விடை பெற்றுச் சென்றார்கள்.
ஒருவாரம் கழிந்தது.
மீண்டும் ஜெயதேவாவும் சந்திரநேருவும் வந்து “ரங்கநாயகி எம்.பியச் சந்திச்சி நாங்க அவரிட்ட உங்கட விசயத்தக் கதச்சித்தம். அவவும் உங்கட இடமாற்றத்த விரும்பல்ல. உங்களக் கொழும்புக்குக் கூட்டி வரட்டாம் எண்டு எங்களிட்டச் சொன்னா. வருகிற ஞாயிற்றுக்கிழம பின்னேரம் கொழும்புக்குப் புறப்பட ஆயத்தமாயிரிங்க. வாகனத்தோட வாறம். திங்கட்கிழம காலம உங்கட நீர்ப்பாசனத் திணைக்களத் தலைமைக் காரியாலயத்துக்கு எம்.பியோட போய் நீர்ப்பாசனப் பணிப்பாளர நேரில சந்திச்சி உங்கட விசயத்த வெற்றியா முடிப்பம்” என்றார்கள்.
கோகுலனும் அதற்குச் சம்மதித்தான்.
கனகரட்ணத்தின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜக்கிய தேசியக் கட்சியால் கனகரட்ணத்தின் தங்கையான ரங்கநாயகியை நியமனம் செய்வதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் நீதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களினூடாக அதனைச் சாத்தியப்படுத்த ஓடித்திரிந்தவர்களில் ஜெயதேவாவும் சந்திரநேருவும் அடங்குவர். அது கோகுலன் அறிந்ததே. அதனால் ஜெயதேவா மற்றும் சந்திநேருவின் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதற்குத் திருமதி.ரங்கநாயகி கடமைப்பட்டிருந்தார். மட்டுமல்லாமல் அமரர் கனகரட்ணத்துடன் கோகுலன் அவரது வலதுகரமாக இருந்து செயற்பட்டதும் அவருக்குத் தெரியும். இக்காரணங்களால் தனக்கு வந்திருக்கும் இடமாற்றத்தை திருமதி.ரங்கநாயகி இரத்துச் செய்து தருவா எனக் கோகுலன் நம்பியாதாலேயே அதற்குச் சம்மதித்ததான்.
கோகுலன், ஜெயதேவா, சந்திரநேரு மூவரும் கொழும்பை அடைந்து திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் எம்.பியைக் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தார்கள். கொழும்பில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவராக விளங்கிய பாலசுப்பிரமணியத்தின் கொழும்பு யோர்க் வீதியில் அமைந்த “கோபாமில்ஸ் லிமிட்டெட்”, எனும் அவரது நிறுவனத்தின் அலுவலகம் சென்று அவரையும் கூட்டிக்கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்குத் தான் செல்வதாகவும் இவர்கள் மூவரையும் அங்குவரும்படி சொல்லிட்டு ரங்கநாயகி தனது காரில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் கொழும்பு-07 பௌத்தலோக மாவத்தையில். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் நான்கு மாடி கட்டிடத்தில் அமைந்திருந்தது. நீர்ப்பாசனப் பணிப்பாளர் பெர்ணான்டோ என்பவர் பாலசுப்பிரமணியத்துக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால்தான் அவரையும் கூட்டிவருவதாக ரங்கநாயகி சொல்லியிருந்தார்.
எல்லோரும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நீர்ப்பாசனப் பணிப்பாளரிருந்த மாடியில் சந்தித்துக் கொண்டனர். கோகுலனும் ஜெயதேவாவும் சந்திரநேருவும் அறைக்கு வெளியே காத்திருக்க திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் எம்.பியும் பாலசுப்பிரமணியமும் நீர்ப்பாசனப் பணிப்பாளரின் அறைக்குள் நுழைந்தார்கள்.
அரைமணி நேரத்தின் பின் இருவரும் வெளியே வந்து பாலசுப்பிரமணியம் நேரே அமைதியாக வெளியேசெல்ல ரங்கநாயகி பத்மநாதன் இவர்கள் மூவரிடமும் வந்து உரையாடத் தொடங்கினார்.
“ஜ, ஏம் சொறி கோகுலன். துரைராசரட்ணம் உங்களப்பற்றி நல்லா அண்டி வைத்திருக்கிறார். நீர் தமிழர்விடுதலைக் கூட்டணிக்கு அரசியல் செய்வதாகவும் தீவிரவாத இயக்கங்களுடன் உமக்குத் தொடர்பு இருப்பதாகவும் முறைப்பாடு உள்ளதால் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரின் வேண்டுகோள மீறித் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று உமது பணிப்பாளர் கூறிவிட்டார். எனக்கும் உமக்கு உதவ முடியாமல் உள்ளது கவலதான். என்ன செய்வது. ஜ.ஏம்.சொறி” என்றார்.
“நான் தமிழர்விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவன் என்பது எல்லாரும் அறிஞ்ச விசயம்தானே. அது புதிய விசயமில்ல. அது உங்களுக்கும் தெரிஞ்சதுதானே. உங்கட சின்னண்னன் கனகரட்ணம் தமிழர்விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டுத்தானே வெண்டவர். அப்போதே நான் கூட்டணிதான் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. பரவாயில்ல. நான் மாற்றத்த ஏற்றுக் கொண்டு கிரிந்திஓயாவுக்குப் போறன்” என்றான் கோகுலன். கோகுலனின் வார்த்தைகள் சற்று உறைப்பாகத்தான் வந்து விழுந்தன.
எல்லோரும் அமைதியாக ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஊன்றிப் பார்த்தபடி நீர்ப்பாசனத் திணைக்களத்திலிருந்து வெளியேறும் நோக்கத்துடன் ‘லிப்ற்’ றுள் நுழைந்து நில மாடிக்கு வந்தார்கள்.
நிலமாடி வாசலில், பொறியிலாளர் செந்திநாதன் நுழைந்து கொண்டிருந்தார். திருமதி.ரங்கநாயகி மட்டும் வெளியே செல்ல கோகுலனும் ஜெயதேவாவும் சந்திரநேருவும் செந்திநாதனைக் கண்டதும் தங்கி விட்டனர்.
பொறியிலாளர் செந்திநாதன் ஒரு இடைப்பட்ட காலத்தில் மேர்சாவுக்கு முன்னர் கல்முனை நிறைவேற்றுப் பொறியிலாளராகக் கடமை புரிந்தவர். கோகுலனின் மேலதிகாரியாக இருந்தவர். மேர்சாவுக்கு முன்னர் சண்முகராசாவும், அதற்கு முன்னர் செந்திநாதனும் நீர்ப்பாசனப் பொறியியலாளராகக் கல்முனையில் கடமையாற்றியிருந்தார்கள். பின்னர் துரைராசரட்ணம் அம்பாறையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக இருந்தபோது செந்திநாதன் அம்பாறை நீர்ப்பாசனப் பொறியியலாளராகப் பணியாற்றியிருந்தார். அவருக்கு அனைத்துப் பிரச்சனைகளும் ஆதியோடந்தமாகத் தெரிந்திருந்தது.
செந்திநாதன் கோகுலனைக் கண்டதும்” என்ன கோகுலன் கிரிந்தி ஓயாவுக்கு மாற்றம் என்று கேள்விப்பட்டன்” என்றார்.
“ஓம் சேர்! அந்த விசயமாகத்தான் கொழும்புக்கு வந்த நாங்க” என்று ஜெயதேவாவையும் சந்திரநேருவையும் தன்னுடன் சேர்த்து பன்மையாகக் கூறினான் கோகுலன்.ஜெயதேவாவும் சந்திநேருவும் செந்திநாதனுக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான்.
செந்திநாதன் ஒரு கண்ணியமான-நேர்மையான-வினைத்திறன்மிக்க அதிகாரியாகத் தன்னை நிரூபித்திருந்தார். மற்றவர்களுக்குத் தானாக முன்வந்து உதவும் மனப்பான்மை கொண்டவர். அத்துடன் கோகுலன்மீது நல்ல அபிப்பிராயமும் கொண்டவர். கல்முனையில் அவர் நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் பின் கல்முனையிலிருந்து மாற்றலாகிச் சென்று அம்பாறை நீர்ப்பாசனப் பொறியியலாளராகக் கடமையாற்றிய காலத்திலும் கோகுலன் அவருடன் நெருங்கிய உறவும் ஊடாட்டமும் வைத்திருந்தான்.
அவர் இப்போது அனுராதபுரம் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் புனர்நிர்மாண வேலைகளுக்குப் பொறுப்பான திட்டப் பணிப்பாளராகவும் அவர் மேலதிக கடமையை ஏற்றிருந்தார். அவரை நீண்ட நாட்களுக்குப் பின்னர் எதிர்பாராதவிதத்தில் சந்தித்துக் கொண்டது கோகுலனுக்கு வாடியிருந்த பயிர் மழையைக் கண்டது போல அப்போது மகிழ்ச்சியாகவிருந்தது.
கோகுலன் தனது இடமாற்றம் விடயமாக எல்லாவற்றையும் அவரிடம் சொன்னான். அருகில் நின்ற ஜெயதேவாவும் சந்திரநேருவும் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களும் கோகுலனுடன் இணைந்து திருமதி. ரங்கநாயகி எம்.பி. யைச் சந்திக்க வந்த விடயம் தோல்வியில் முடிந்ததைக் கவலையோடு செந்திநாதனிடம் கூறி வைத்தனர்.
எல்லாவற்றையும் கேட்ட செந்திநாதன் சிறிது நேரம் யோசித்து விட்டுக் கோகுலனிடம் “உனக்குப் பாவற்குளத்திற்கு மாற்றலாகி வர விருப்பமா?” என்றார்.
கோகுலனும் தான் இப்போது இருக்கும் இக்கட்டான நிலையை எண்ணிப் பார்த்தான்.
தனது மேலதிகாரிகளான கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் மேர்சாவும் அம்பாறைப் பிரதி நீரப்பாசனப் பணிப்பாளர் துரைராசரட்ணமும் தன்னுடன் நல்ல உறவில் இல்லை. எப்போது தன்னைப் பிடித்து விழுங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று வந்த திருமதி.ரங்கநாயகி பத்மநாதனும் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவன் என்பதால் கைவிட்டுவிட்டார். கனகரட்ணம் உயிரோடு இருந்திருந்தால் இது நடந்திருக்காது. அவர் எப்போதுமே கோகுலனுக்குக் கவசமாக இருந்தார். அவரது மரணத்தின் பின்பு நிலைமை மாறிவிட்டிருந்ததை உணர்ந்தான்.
தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் படிப்பித்துக் கொண்டிருக்கும் தனது மனைவிக்கு மட்டக்களப்புக்கு மாற்றம் எடுத்து மனைவியையும் ஆறுமாதக் குழந்தையாயிருக்கும் தனது மகனையும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மனைவியின் பெற்றோருடன் விட்டுவிட்டுப் பாவற்குளம் போகலாம் என எண்ணித் துணிந்த கோகுலன் பாவற்குளம் போவதற்கான தனது சம்மதத்தைச் செந்திநாதன் அறிவுறுத்தியபடி எழுத்துமூலம் ஒப்புவித்தான். “சரி கோகுலன்! மிச்சத்த நான் பார்க்கிறன் யோசியாமப் போ.” என்று கூறிச் செந்திநாதன் விடை பெற்றார். அவர் விடைபெற்றுச் சென்றதும் கோகுலன், ஜெயதேவா, சந்திநேரு மூவரும் உடனடியாகவே ஊர் திரும்பும் பயணத்தை ஆரம்பித்தனர்.
காலச் சக்கரம் தனது கடமையைச் செய்தது.
கோகுலன் கல்முனை நீர்ப்பாசன அலுவலகத்திலிருந்து மாற்றலாகி வவுனியா மாவட்டத்திலுள்ள பாவற்குளம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு மாற்றலாகிச் சென்று கடமையையேற்றான். நீர்ப்பாசன அலுவலகம் பாவற்குளத்திலேயே அமைந்திருந்தது.
வவுனியாவிலிருந்து மன்னார் பாதையில் சில கிலோமீற்றர் தூரம் சென்றதும் நெலுக்குளம் எனும் சந்தியில் செட்டிக்குளம் செல்லும் பாதையில் திரும்பி அதன்வழியே சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் சென்றால் பாவற்குளம் கிராமம் வரும்.
பாவற்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இந்திரசேனனும் வவுனியாப் பிராந்தியப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக இரகுநாதனும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். பாவற்குளம் நீர்ப்பாசனத் திட்டமானது உலக வங்கி வழங்கிய நிதியுதவியுடன் “குளத்து நீர்ப்பாசன நவீனமயப்படுத்தல் திட்டம்” எனும் திட்டத்தின் கீழ் முழுமையாகப் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் திட்டப்பணிப்பாளராகச் செந்திநாதன் விளங்கினார்.
கோகுலனின் பிரச்சனைகள் ஆதியோடந்தமாய் செந்திநாதனுக்குத் தெரிந்திருந்ததால் அதுபற்றி ஏற்கெனவே இந்திரசேனனுக்கும் ரகுநாதனுக்கும் அவர் சொல்லி வைத்திருந்தார் போலும். கோகுலனை அவர்கள் இருவரும் அனுதாபத்துடன் அணுகினார்கள். அப்படியான இடத்திலும் அப்படியான மேலதிகாரிகளின் கீழும் கடமையாற்றுவது கோகுலனுக்கு மனத் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மட்டுமல்லாமல் கோகுலன் பாவற்குளம் நீர்ப்பாசன அலுவலகத்தில் கடமையேற்றுச் சில நாட்களின் பின்னர் வவுனியாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம் அவர்களும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்ட விவசாயிகளுடனான சந்திப்பொன்று பாவற்குளம் கிராமத்தில் நடைபெற்றது. அதில் கோகுலனும் கலந்து கொண்டிருந்தான்.
பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம் தமிழர்விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர். கோகுலனை அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த காரணத்தால் அக் கூட்டத்தில் வைத்து விவசாயிகளுக்குக் கோகுலனை அறிமுகம் செய்து அம்பாறை மாவட்டத்திலிருந்து தனது வவுனியா மாவட்டத்திற்குக் கடமையாற்ற வந்திருக்கும் கோகுலனைத் தான் அன்புடன் வரவேற்பதாகவும் ஊர் விவசாயிகள் கோகுலனுக்குச் சகல ஒத்தாசைகளும் வழங்க வேண்டுமென்றும் கூறி வைத்தார். கோகுலன் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம். ஆனாலும் வேலைக்கு வந்த புதிய இடத்தில் அப்பகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினரே கோகுலனைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்து வைத்தது கோகுலனுக்கு இரட்டிப்புத் தைரியத்தைக் கொடுத்திருந்தது.
ஒவ்வொரு வார இறுதியிலும் பாவற்குளத்திலிருந்து புறப்பட்டு வவுனியாவுக்கு வந்து யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு ஓடிக்கொண்டிருந்த ‘காங்கேசன் ரவல்ஸ்’ தனியார் ‘பஸ்’ சில் வெள்ளிக்கிழமை இரவு பயணித்துச் சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பையடைந்து மனைவி மகனுடன் வார விடுமுறையைக் கழித்துவிட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு அதே ‘பஸ்’ சில் பயணித்து அதிகாலை வவுனியாவை அடைந்து திங்கட்கிழமை காலை பாவற்குளத்தை மீளவும் அடைவது கோகுலனுக்கு வாடிக்கையாகவே மாறிவிட்டிருந்தது.
பாவற்குளத்தில் கடமையாற்றுவது அவனுக்குக் கல்முனையைப்போல் மன நிறைவையே தந்தது. கஞ்சிகுடிச்ச ஆற்றுக்குளம் போல் ஒரு நீர்த்தேக்கம்தான் பாவற்குளம். ஆனால், பாவற்குளம் கொள்ளளவில் கஞ்சி குடிச்ச ஆற்றுக் குளத்தைவிடப் பெரியது.
கஞ்சிகுடிச்ச ஆற்றுக் குளத்தின் கொள்ளவு அது ஆரம்பத்திலிருந்ததைவிடவும் ஆறடி உயர்த்தப்பட்ட பின்பு ஐயாயிரத்து நூறு ஏக்கர்அடி நீராகும். அதன் கீழ் ஆயிரத்து எழுநூறு ஏக்கர் நெற்காணிகள் பாசனத்தைப் பெற்றன. பாவற்குளம் இருபத்தேழாயிரம் ஏக்கர்அடி நீரைக் கொள்ளளவாகக் கொண்டது. நாலாயிரம் ஏக்கர் வயல்களுக்கு வருடத்தில் இருபோகமும் நீர்ப்பாசன வசதி அளித்தது.
வடமாகாணத்தில் அருவியாற்றுப் படுக்கையிலமைந்த மிகப் புராதன குளமான பாவற்குளம் நீர்த்தேக்கம் 1958 இல் நிர்மாணிக்கப் பெற்றதாகும். தமிழர் அரசியலில் ‘அடங்காத் தமிழன்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்பெற்ற சி.சுந்தரலிங்கம்’ அவர்கள் வவுனியாத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த காலம் இதுவாகும்.
இப் பாவற்குளம் நீர்பாசனத் திட்டம் இப்போது உலகவங்கியின் நிதி உதவியுடன் ‘குளத்து நீர்ப்பாசன நவீனமயப்படுத்தல்’ திட்டத்தின் கீழ் மீளப் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இத் திட்டத்திலேயே கோகுலன் இப்போது கடமையாற்றிக் கொண்டிருந்தான்.
(தொடரும் அங்கம் – 62)
(அடுத்த இதழில் முற்றும்)