‘இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு பதிலாக நட்பறவு ஒப்பந்தம்’ – பிரேமதாஸ முயற்சி
==============
— வி.சிவலிங்கம் —
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை இந்திய முன்னாள் வெளிநாட்டுச் செயலர் ஜே என் தீக்ஷித் செயலாற்றினார். இவரே இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவராக இருந்தார். இவர் தனது அனுபவங்களை ‘கொழும்பில் பணி’ (Assignment Colombo) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரது நூலின் அட்டைப் படத்தில் ‘ஈழம் அல்லது மடிவோம்’ எனக் கூறியபடி புலியும், ‘சிங்களம் மட்டும்’ எனக் கூறியபடி சிங்கமும் முட்டி மோதுவதாக வரையப்பட்டிருந்தது. இந் நூலில் ‘இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை பக்கமாக ஒதுக்கி வைத்து’ (The Setting Aside of the Indo-Sri Lanka Agreement) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் தரப்பட்ட தகவல்கள் இன்று மிகவும் பொருத்தமானவை எனக் கருத முடிகிறது. ஏனெனில் அன்று இலங்கை அரசு அமெரிக்க சார்பு நிலைப்பாட்டினை எடுத்து இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயற்பாட்டில் இயங்கியது. அதனால் இலங்கை உள் விவகாரங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி இந்தியா உள்ளே நுழைந்தது. உள் நாட்டில் ஜே வி பி இனரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் போன்றன பல்முனை அழுத்தங்களாக அமைந்திருந்தன. ஆனால் தற்போது இலங்கை- இந்திய உறவுகள் மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளன. கடந்த காலத்தில் இவற்றை எதிர்த்தவர்கள் அதிகாரத்தில் மட்டுமல்ல, இலங்கை – இந்திய உறவுகளுக்கான புதிய அத்தியாயத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் பிரேமதாஸ இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை நட்புறவு ஒப்பந்தமாக மாற்ற எண்ணியது போல இன்றைய அரசும் அவ்வாறான புதிய யோசனைகளோடு பிரேமதாஸ அரசின் அன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான புதிய பாதையை இன்று ஏன் வகுக்க முடியாது?
இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் காலம் சென்ற ஜே என் தீக்ஷித் தந்த விபரங்களைப் பார்க்கலாம்.
ஜனாதிபதி பிரேமதாஸ ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படைகளை படிப்படியாக அகற்றுவதற்கான தளம் இந்திய சமாதானப் படையினரை அகற்றவும், மீண்டும் தமிழர்களுக்கெதிரான பூனை-எலி ஆட்டத்தைத் தொடரவும் உருவாக்கப்பட்டது. அப்போதைய வேளையில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வவுனியா காட்டிற்குள் சுருங்கிய நிலையிலும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை காத்திரமான விதத்தில் ஒடுக்கிய இறுதி கட்டத்தை அடைந்திருந்தது.
இத்தகைய பின் புலத்தில் பிரேமதாஸவிற்கு மூன்று பிரதான இலக்குகள் இருந்தன. அதாவது
1. ஏதாவது ஒரு வகையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை முறியடிப்பது.
2. இந்திய சமாதானப் படையினரின் செயற்பாடுகளுக்கு முடிந்தவரை தடைகளை ஏற்படுத்துவதுடன் விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆயுதங்களை வழங்குவது.
3. வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் வடக்கு- கிழக்கில் அமைந்த தமிழ் மாகாண சபை அரசை அகற்றுவது.
என்பதே நோக்கமாக அமைந்தது.
இவ்வாறு பிரேமதாஸ அரசின் உள் நோக்கங்களை அடையாளப்படுத்திய அவர் தனது இலக்குகளை அடைய மேற்கொண்ட உத்திகளைக் கூறுகையில்
– 1989ம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தனது அரசு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதன் மூலம் இந்தியப் படைகளுடனான முரண்பாடுகளை அகற்ற விரும்புவதாகவும் செய்தி அனுப்பினார்.
– இவற்றைத் தொடரும் வகையில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நிலைமைகளிலிருந்து பின்வாங்கத் தயார் எனவும், அரசியல் தீர்வு குறித்து அவர்களுடன் பேசவும் விருப்பம் தெரிவித்தார்.
இந்த இரகசியச் செய்தியின்படி 1989ம் ஆண்டு மார்ச் முதல் 1989ம் ஆண்டு யூலை மாத இடைக் காலத்தில் இந்தியப் படைகள் வெளியேறுவதற்கு ஏதுவாகவே திட்டங்கள் வரையப்பட்டன. இந்த இடைக் காலத்தில் இந்தியப் படைகளின் தாக்குதல்களை முறியடிக்க போதுமான ஆயுதங்களையும். உளவுத் தகவல்களையும் பரிமாறவும் செய்தி வழங்கப்பட்டது. அத்துடன் அப்போதிருந்த ஈ பி ஆர் எல் எவ் தலைமையிலான வடக்கு- கிழக்கு இணைந்த வரதராஜப் பெருமாள் தலைமையிலான அரசைக் கலைத்து விடுதலைப் புலிகள் தலைமையிலான நிர்வாகத்தை உருவாக்குவதும் பேசப்பட்டிருந்தது.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தோற்றுவிக்கப்பட்ட மாகாண அரசைக் கலைப்பது தொடர்பான விவாதங்கள் இன்று ஆரம்பித்துள்ளதைப் போலவே அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் இவ்வாறாக இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பிரேமதாஸ அரசு, இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பதிலாக இலங்கை – இந்திய நட்புறவு ஒப்பந்தம் ஒன்றை புதிய நிலமைகளின் பின்னணியில் உருவாக்கத் தாம் தயாராக இருப்பதாகச் செய்தி அனுப்பினார். இப் புதிய நிலமை என்பது இந்திய ஆதரவில்லாத இலங்கை அரசின் ஆதரவுடன் செயற்படும் ஓர் நிர்வாக அலகை வழங்குவதாகவே நாம் கொள்ளலாம். அதாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வு எனலாம்.
இவ் வரலாற்றினைப் படிக்கும் ஒவ்வொருவரும் இலங்கையின் இனவாத அரசியலோடு, தமிழ் பிரிவினைவாத அரசியல் இணையும் பின்புலங்களையும், இவ் இணைவின் பின்னால் உள்ள அரசியல் தீர்வு ஏற்பாடுகளையும் இன்றுள்ள நிலமைகளோடு பொருத்தி நோக்குதல் பயனளிக்கும். தேசிய இனப் பிரச்சனைக்;கான தீர்வுகளில் இடையூறினை சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் அவ்வாறான விரோத சக்திகள் தொடர்ந்து செயற்படுகின்றன. இவை வரலாறு என்பதை விட பாடங்கள் என்பது பொருத்தமாக அமையும்.
பிரேமதாஸ அரசு விடுதலைப்புலிகளுடன் ஏற்படுத்திய உறவுகள் வரதராஜப் பெருமாள் அரசுக்கு மிகவும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அரசு வரதராஜப் பெருமாள் அரசுடன் படிப்படியாக உறவுகளைத் துண்டித்தது. மாகாண ஆளுனர் தனது அதிகாரத் தலையீட்டினைப் படிப்படியாக அதிகரித்தார்.
ஒரு புறத்தில் இந்த மாகாண அரசைப் புறக்கணித்த பிரேமதாஸ மறு பறத்தில் இந்த மாகாண அரசில் செயற்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம் உறுப்பினர்களுக்கு இன்னொரு செய்தியை வழங்கினார். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணசபை இணைப்பு இனிமேல் தொடராது எனவும், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நலன்கள் தமிழர்களால் தலையீடு ஏற்படாத வகையில் புதிய அதிகார பரவலாக்கத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற செய்தியையும் பகிர்ந்தார். இச் செய்தியின் மூலம் மாகாணசபையின் செயற்பாடு மிகவும் திட்டமிட்ட வகையில் முடக்கப்பட்டது. இவ்வாறான ஒரு மாற்று ஏற்பாடு இனியும் சாத்தியப்படுவதற்கான பின்புலங்கள் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.
இதன் விளைவாக இந்திய சமாதானப்படையின் செயற்பாடுகளும் நெருக்கடியான கட்டத்தை அடைந்தன. இருப்பினும் இலங்கை – இந்திய உறவுகள் குறித்து இரண்டு அரசுகளும் பேசி முடிவுகளை எட்டும் வரை இந்தியப் படைகள் வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயற்படுவது என இந்தியா தீர்மானித்தது. இந்த இடைக் காலத்தில் அதாவது 1989ம் ஆண்டு யூலை 2 முதல் 11ம் திகதி வரையான காலப் பகுதியில் 7 கடிதங்கள் பரிமாறப்பட்டன. இக் கடிதங்களின் சாராம்சம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவுகளிலுள்ள விரிசல்களை உணர்த்தியது.
பிரேமதாஸ இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளைப் பற்றிய கரிசனையை விட குறிப்பாக, இலங்கை இனப்பிரச்சனைகளுக்கான தீர்வை விட இந்திய ஆதிக்கத்தை முறியடித்துள்ளதாக செய்தியை வெளிவிடுவதில் கவனம் செலுத்தினார்.
இந்த முறுகல் நிலையை விடுதலைப்புலிகள் நன்கு பயன்படுத்தினர். முடிந்தவரை வன்முறைகளை ஆழப்படுத்தினர். வரதராஜப் பெருமாள் மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட நிலையில் ‘தமிழர் தொண்டர் படை அல்லது தமிழ் தேசிய இராணுவம்’ ஒன்றினைத் தோற்றுவித்து மக்களையும், மாகாண அரசையும் பாதுகாக்கப் போவதாக அறிவித்தார். அத்துடன் இலங்கை அரசு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுமாயின் மாற்று ஏற்பாடாக அந்த ஒப்பநதத்தின் பிரகாரம் வடக்கு – கிழக்கு மாகாணம் சுயாதீன நாடாக ‘ஈழம்’ எனப் பிரகடனம் செய்யும் வழிமுறையைத் தவிர மாற்று வழியில்லை என அறிவித்தார். இவை விடுதலைப்புலிகள் – இலங்கை அரசின் புதிய உறவின் பின்னணியை உணர்த்தின.
இவை யாவும் 1989 ம் ஆண்டு யூலை முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் நடந்தேறின. இந்தியப் படைகள் யூலை 31ம் திகதிக்கு முன்னர் திரும்பாவிடில் இந்தியப் படைகளுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்யப் போவதாக பிரேமதாஸ தெரிவித்தார். அத்துடன் இந்தியப் படைகள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் படைகளை விலக்கிக் கொள்ளாவிடில் தாமே இந்திய சமாதானப் படையின் தளபதியாகவும் அறிவிக்கப் போவதாகப் பயமுறுத்தினார். இந்தியப் படைகள் விலகுவதற்கு ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட நிலையில் அப் படைகளின் தளபதியாக அறிவிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும், விடுதலைப்புலிகளுடன் பகிரங்கமாக பேச்சவார்த்தைகளை நடத்திய நிலையில், அதற்குப் போதுமான ஆதரவு வழங்கிய நிலையில் இந்திய சமாதானப் படையின் தளபதி என அறிவிப்பதில் எவ்வித நியாயப்பாடும் இல்லை என இந்தியா தெரிவித்தது.
ஜனாதிபதி பிரேமதாஸ இவ்வாறு செயற்படுகையில் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன் பின்னணியை நாம் தற்போது புரிந்து கொண்டால் இன்றைய அரசியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உய்த்துணர முடியும். ஏனெனில் இரு நாடுகளிலும் ஏற்படும் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜிவ் காந்தி தேர்தலை எதிர் நோக்கினார். இருந்த போதிலும் இலங்கைக்கும், இலங்கைத் தமிழருக்கும் முடிந்த வரையில் எதுவித திணிப்பும் இல்லாத தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ராஜிவ் காந்தி இருந்ததாக குறிப்பிடும் தூதுவர், பதிலாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் வழங்கிய வாய்ப்புகளைக் கைவிட்டு, இந்திய சமாதானப் படையின் உதவிகளை உதறித் தள்ளி இவர்கள் தொடர்ந்தும் இக் குழப்பத்தில் தொடர்ந்தும் வாழவேண்டும் என எண்ணுவார்களாயின் இன்னும் பல குழப்பங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் கருதினார்.
பிரேமதாஸ- விடுதலைப்புலிகளின் தற்காலிக உறவு ஜே வி பி இன் அச்சுறுத்தலை ஒழிக்கவும் பின்னர் விடுதலைப்புலிகளைக் கையாளலாம் என்ற அடிப்படையிலேயே ஆரம்பித்தது. ஜே வி பி இன் அச்சுறுத்தலை ரஞ்சன் விஜேரத்ன திறமையாகக் கையாண்டு சிங்களப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்திய போதிலும் பௌத்த பிக்குகள் பிரேமதாஸ அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை மிகவும் சந்தேகக் கண்கொண்டே நோக்கினர். அதே போலவே தமிழர்களும் பிரேமதாஸவின் அணுகு முறைகளில் சந்தேகம் கொண்டிருந்தனர்.
தாம் பாகிஸ்தானில் தூதுவராக செயற்பட்டபோதும் ஜே ஆர் அரசின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தன்னுடன் தொடர்பு கொண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் முற்றாக அமுல்படுத்தப்படும் வரை படைகளை விலக்க வேண்டாமென தன்னிடம் கூறியதாக தூதுவர் தெரிவிக்கிறார். இவை பற்றி ராஜிவ் காந்தியுடன் உரையாடிய வேளையில் பிரேமதாஸ ஓர் குழப்பமான நிலையில் உள்ளதாகவும் இருப்பினும் இந்தியப் படைகள் 1990 இன் இறுதியில் முழுமையாக விலகுவார்கள் எனவும், இந்தியப் படைகள் முழுமையாக தடைகள் எதுவும் இல்லாமல் செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், பிரேமதாஸ அரசு மாகாண அரசின் சுமுகமான செயற்பாட்டை உறுதி செய்திருந்தால் நிலமைகள் மாறியிருக்கலாம் எனவும் தெரிவித்து தாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முடிந்தவரை அமுல்படுத்த எண்ணியிருப்பதாகவும், பிரேமதாஸ அரசு தொடர்ந்து தடைகளைப் போடுமாயின் பிரேமதாஸவும், இலங்கைத் தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளட்டும் எனக் கூறியதாக தீக்ஷித் கூறுகிறார்.
நாம் இவ்வாறான ஒரு கட்டத்தை தற்போது நெருங்கியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. பிரச்சனைகளின் பின்புலங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் நிலமைகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் முடிவு என்பது இந்தியா இப் பிரச்சனையைக் கைவிடவும் தயாராக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளலாம். இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவதற்கு அதன் பூகோள அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்தலாம். ஆனால் இத் தேவைகள் என்பது இலங்கையில் நிலையான இந்திய நலன்களுக்கு விரோதமில்லாத அரசு ஒன்று இலங்கையில் அமைவதையும் அது உறுதி செய்தல் வேண்டும். அது இலங்கைத் தமிழர்களின் நல்லெண்ணத்துடன் தோற்றம் பெறுவதும் விரும்பத்தக்கது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பது தெளிவற்றதாகத் தொடருமானால் அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் பார்வை இனவாத அரசியலிற்கு அப்பால், இந்திய நலன்களை அனுசரித்துச் செல்லுமானால், இந்திய முதலீடுகள் இலங்கையில் அதிகரித்து பொருளாதார தங்குநிலை மேலும் அதிகரிக்குமானால் தமிழர் பிரச்சனையை மட்டும் வைத்து இந்திய பூகோள அரசியல் நலன்கள் செல்லும் எனக் கருத முடியாது.
தமிழர் தரப்பின் அரசியல் கருத்தோட்டம் என்பது வெறும் உணர்வுகளால் கட்டமைக்கப்படுகின்றன. உள் நாட்டில் தமிழர் பிரதேசங்களில் நிலவும் அரசியல் என்பது மாறிவரும் உலக அரசியல் பார்வைகளின் பெறுபேறுகளிலிருந்து உருவானதாக இல்லை. குறிப்பாக, தமிழ் அரசியல் என்பது சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதத்தின் எதிர்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றே. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஜனாதிபதி அநுரவின் கருத்துப்படி இனவாதமே தமிழ் அரசியலின் போக்கையும் கட்டமைக்கிறது. இனவாதம் என்பது தேர்தல் அரசியலின் ஒரு குணாம்சமாக மாறிய நிலையில் அதுவே தமிழ் அரசியலின் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. இங்கு தேர்தல் அரசியலின் அடிப்படைகளில் மாற்றங்கள் தேவையாகிறது.
இங்கு பிரேமதாஸ அரசின் இன்னொரு வரலாற்று அம்சத்தை நோக்கலாம். இதுவும் 13வது திருத்தம், மாகாணசபை நிர்வாகம் என்பனவற்றின் எதிர்காலம் குறித்த இன்றைய விவாதங்களுக்குப் பொருத்தமாக அமையலாம். ஏனெனில் தமிழர் தரப்பில் காணப்பட்ட இந்திய சமாதானப் படைகளுக்கெதிரான கருத்துக்கள் என்பது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கண்ணோட்டத்தில் அணுகப்படவில்லை என்பதை தீக்ஷித் இன் பின்வரும் கருத்துக்கள் உணர்த்துகின்றன. அவை அப்போதைய சூழலில் வெளிவராமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று வரை இந்திய சமாதானப் படைகளின் வருகை, அதன் சாதக, பாதகம் குறித்த தெளிவான கருத்துகள் இன்னமும் தமிழ் அரசியலில் இல்லை.
1989ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தியத் தேர்தலில் ராஜிவ் அரசு தோல்வி அடைந்தது. ஆட்சிக்கு வந்த வி பி சிங் தலைமையிலான அரசு தமது முதலாவது வெளி விவகார கொள்கைப் பிரகடனத்தில் சமாதானப்படையினரை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதாகவும், அதுவும் 1990 ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி விலகல் முடிவடையும் எனவும் அறிவித்தது. இந்த அறிவித்தலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாஸ அரசுக்குமிடையேயான உறவு உச்ச நிலையை எட்டியது.
1990ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கிடையில் அவை மிகவும் துரிதமடைந்தன. பிரபாகரனின் மனைவி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வர இலங்கை அரசு சகல உதவிகளையும் வழங்கியது. அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான அரசியல் பேச்சுவார்த்தைகள் துரிதமடைந்தன. முன்னாள் அமைச்சர் ஏ சி எஸ் ஹமீட் விடுதலைப்புலிகளுடன் பேசும் முக்கியஸ்தராக நியமிக்கப்பட்டார். புலிகள் தரப்பில் யோகியை உதவியாளராகக் கொண்ட மாத்தையா தலைமையில் குழு தயாராகியது.
இப் பேச்சுவார்த்தைகளில் இந்திய சமாதானப் படைகளின் விலகலின் பின்னர் வடக்கு- கிழக்கில் புதிய தேர்தல் முடிவடையும் வரை சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக கிழக்கில் குறிப்பாக திருகோணமலைப் பகுதியில் இந்திய ராணுவம் அங்கு வெளியேறுவதற்குத் தயாராக இருந்த போதிலும் அங்கு தீவிர பாதுகாப்பில் புலிகள் ஈடுபட்டனர்.
இம் மாற்றங்கள் யாவும் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் நிர்வாகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருந்தன. அவர் பிரதமர் வி பி சிங் அவர்களை நேரில் சந்தித்து நிலமைகளை விளக்கிய போதிலும் அவரின் எதிர்காலத்திற்கு அல்லது இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் குறுகிய ஆயுளே இருந்தது. ஏனெனில் புதிய இந்திய அரசு இப் பிரச்சனை என்பது முற்றிலும் தவறான வகையில் ராஜிவ் அரசு கையாண்டிருந்தது என்பதற்கு அப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை. இதன் விளைவாக வராதராஜப் பெருமாளின் அரசு 1989 ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முற்றாக முடங்கியது. இந்திய தூதரகம்கூட கையை விரித்தது.
குறிப்பிட்ட திகதியில் இந்தியப் படைகள் தமிழ் நாட்டைச் சென்றடைந்த போது அங்கிருந்த தமிழ்நாடு அரசு அப் படையினரை நடத்திய விதம் குறித்து தெரிவிக்கையில் இந்திய அரசின் பாரிய பூகோள அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசின் உத்தரவின் பேரில் சென்ற சமாதானப்படையினரை அதுவும் பல நூறு வீரர்கள் மரணத்தைத் தழுவியும், பாரிய காயங்களோடும் சென்றடைந்த நிலையில் அங்கிருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ‘தமிழரைக் கொல்லும் இந்தியப் படை’ (Indian Tamil Killing Force) என வர்ணித்ததாக தெரிவிக்கிறார். இந்திய அரசாங்கத்தின் உத்தரவை நிறைவேற்றச் சென்ற அதே நாட்டின் படைகளை மிகவும் கீழ்த் தரமாக நடத்தியதாக வருந்துகிறார். இங்கு இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுகிறார் அதாவது தமிழ் நாடு அரசின் செயற்பாடு. அடுத்ததாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் செயற்பாடு என்பனவாகும்.
தமிழ்நாடு அரசின் இன்றைய நிலை என்ன? மத்திய அரசின் பிரதான பங்காளிக் கட்சியாக, இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிகவும் கணிசமான பாத்திரத்தைத் தற்போது வகிக்கிறது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாடு எதிர் காலத்தில் எவ்வாறான பாத்திரத்தை வகிக்கும்? போன்ற பல கேள்விகள் இன்று எழுகின்றன. அத்துடன் தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்நாடு அரசுடன் அல்லது மத்திய அரசுடன் முன்னரைப் போல் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதா?
இந்திய சமாதானப் படையினரின் விலகலின் பின்னர் ஏற்கெனவே உறுதியளித்தவாறு பிரேமதாஸ அரசு பேச்சுவார்த்தைகளை அர்த்தமுள்ள விதத்தில் தொடரவில்லை. இதன் விளைவாக முறுகல் நிலை மீண்டும் ஆரம்பமானது. பிரேமதாஸ அரசிற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையேயான உறவு நிலை குறித்து சிங்கள அரசியலில் மிகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் பிரேமதாஸ பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்கினார். மாகாண நிர்வாகத்தை அரசு பொறுப்பேற்றது. இதன் மூலம் அவரது பிரதான இலக்குகளில் ஒன்று நிறைவேறியது. இருப்பினும் ஐ தே கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டன. இதனால் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கான வாய்ப்புகள் இல்லாதொழிந்தன.
மேற்குறித்த வரலாறு இந்திய, இலங்கை ஆட்சிக் கட்டுமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவேயாகும். குறிப்பாக, வி பி சிங் தலைமையிலான அரசு பின்வரும் முடிவுகளை எடுத்திருந்தது.
– இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டது தவறானது.
– ராஜிவ் காந்தி – ஜே ஆர் தலைமையிலான இலங்கை- இந்திய ஒப்பந்தம் உரிய விதத்தில் தயாரிக்கப்படவில்லை எனவும், அதன் விளைவாகவே இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டன.
– இந்திய சமாதானப் படையினரை இலங்கைக்கு அனுப்பியது அந் நாட்டின் உள் நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாகும்.
– மேற்கூறிய நிலமைகளை அவதானிக்கும் போது இலங்கை விவகாரங்களிலிருந்து வெளியேறுவது, சமாதானப் படையினரை அழைப்பது என்பதே தீர்வாக அமையும்.
இம் முடிவுகளை அன்றைய வி பி சிங் அரசு எடுத்திருந்ததாக தீக்ஷித் தெரிவித்த வரலாற்றினை இன்றைய நிகழ்வுகளோடு பொருத்திப் பார்ப்பது மிக அவசியம். குறிப்பாக அரசு மாற்றங்கள் ஏற்படினும் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு அவதானிக்கையில் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற முடிவு இன்றுள்ள அரசியல் புறச் சூழலில் மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாகிய காலத்தில் காணப்பட்ட பூகோள அரசியல் நிலமைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. இந்திய- அமெரிக்க உறவுகள் மிகவும் பலமாக உள்ளன. தனது அயல் நாடுகளுடன் உறுதியான நட்புறவைப் பேணுதல் மற்றும் உதவி வழங்குவதில் முதலிடம் என இந்தியா கூறுகிறது. தமிழ்நாட்டில் ‘தொப்புள் கொடி உறவு’ என்ற பெயரில் நடத்திய அரசியல் இன்று இல்லை. தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மிக முக்கியமான அங்கமாக பல வகைகளில் செயற்படுகிறது. இலங்கையும் சர்வதேச பூகோள அரசியல் போட்டிச் சூழலில் பக்கச்சார்பு இல்லாமல் செயற்படுவது என எண்ணுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்திய – இலங்கை பொருளாதார உறவுகள் மிகவும் பலமடைந்து கப்பல் போக்குவரத்து, பாலம் கட்டுவது, விமானப் போக்குவரத்து, மின்சார பரிமாற்றம், நவீன தொழில்நுட்ப அறிவியல் பங்களிப்பு என வளர்ந்து செல்கையில் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் மாற்றமடைய வாய்ப்பு உண்டு.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்;றம் என்பது மிகவும் ஆரம்ப நிலையில் காணப்படினும், அரசின் கொள்கைப் பிரகடனங்கள், அக் கட்சியின் செயற்பாடுகள் போன்றனவற்றை ஆராயும்போது அடிப்படை மாற்றங்களின் தேவை புரியப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆட்சியாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியிலும் அடிப்படை மாற்றத்திற்கான அவா வெளிப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆட்சியாளர் எதிர்பாராத அளவிற்கு மக்கள் தமது நம்பிக்கையை 2024ம் ஆண்டு தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமிழ் மக்களும் கணிசமான பிரிவினர் ஆகும்.
தமிழ் அரசியலில் பாரிய அடிப்படை மாற்றங்களுக்கான ஆர்வம் வெளிப்படா விடினும் கடந்த தேர்தலில் தமிழ் சமூகத்திலுள்ள பின் தங்கிய பிரிவினர் மிகவும் தெளிவாகவே தமது தெரிவுகளை வெளியிட்டுள்ளனர். இம் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதற்கான சமூக கட்டுமானங்களையும், குறிப்பாக சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையும் விதத்திலான பொருளாதார சமூகக் கட்டுமானங்களைப் பலப்படுத்தும் விதத்தில் செயற்படுதல் அவசியம். ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு இனவாதம், ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள் போன்றன சமூகப் பிளவுகளைத் தோற்றுவிக்க இடமளிக்காமல் விழிப்போடு செயற்பட வேண்டும்.
எனவே இலங்கை அரசியலில் தோற்றம் பெறும் அடிப்படை மாற்றங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் புதிய அணுகுமுறைகளை வேண்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான வழிமுறைகளை புதிய வழிகளில் படிப்படியான மிகவும் விட்டுக் கொடுக்காத, சாத்தியமான கொள்கைகளை நோக்கிச் செயற்பட வேண்டும். அதேவேளை ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் தேசிய பொருளாதார வளர்ச்சிக் கட்டுமானத் திட்டமிடுதலில் தமக்கான பங்கைச் செலுத்தும் புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை யாவற்றிற்கும் சமாதான சகவாழ்வே அடிநாதமாக அமைதல் அவசியம்.