களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 13)

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 13)

 — தேசம் நெற் ஆசிரியர் த.ஜெயபாலன்— 

(அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 13. இந்த உரையாடல் அசோக் யோகன் கண்ணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.) 

பாகம் 13 

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறம். நீங்கள் ஆயுதங்கள் எல்லாம் எடுத்து சேகரித்திருந்தாலும் கூட, ஆயுதங்கள் எதுவும் பெரிசா பயன்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். சிறைக்குள் என்ன நடந்தது? 

அசோக்: ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளுக்குள்ள ரிவால்வர் தான் அனுப்பப்பட்டது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் தங்களுக்கு தேவையானதை அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். புளொட்டில் இரண்டு ரிவால்வர் அனுப்பப்பட்டது. வெளியில கூடுதலா சொட் கண்கள்தான். அடுத்தது பால் ரின்னில் கிரானைட் மாதிரி ஜலற்றின் வைத்து செய்யப்பட்ட திரிவைத்த எறி குண்டு. திரியில் நெருப்பு பற்றவைத்து எறியவேண்டும். ஆனால் இவை எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை. 

சிறைக்குள் இருந்த எல்லோரும் கூட்டாக இணைந்துதான் முயற்சி எடுத்தாங்க ராஜன், டக்ளஸ்தேவானந்தா, பனாகொடை மகேஸ்வரன் போன்றவங்க முக்கியமானவங்க. பலருக்கும் பொறுப்புக்கள் பிரித்துப்பிரித்து கொடுக்கப்பட்டன. உதாரணமாக டேவிட் ஐயாவிடமும், டொக்டர்.ஜெயகுலராஜாவிடம்மும் கட்டிப்போடப்படும் ஜெலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஒட்டும் வேலை பொறுப்பு கொடுகப்பட்டது. இப்படித்தான்  எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தது. 

தேசம்: ராணுவ பாதுகாவலர்கள் மாறுகிற நேரத்தில்தான் சிறை உடைப்பு நடந்தது.. 

அசோக்: ஓம், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவைதான் சிறையை சுற்றியுள்ள வீதிகளில் பொலிஸ் அல்லது இராணுவம் ரோந்து வரும். அந்த இடைவெளிக்குள் சிறை உடைப்பு செய்யவேண்டும். 

அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ள நடந்ததால எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்ல. சிறைக்குள்ள பிரச்சனையில்லை. தெரிந்த ஜெயிலர்ஸ் தானே அதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை.  

தேசம்: அப்போ சிறைப் பாதுகாவலர்கள் சிறைக் கதவுகளின் சாவிகளை உங்களுக்குத்தந்து….. 

அசோக்: இல்லை இல்லை உள்ளுக்க ரெண்டு மூன்று ஜெயிலர்ஸ் தான் சப்போர்ட் பண்ணினார்கள். மற்ற ஜெயிலலர்களை பிடித்து கட்டிப்போட்டு அவர்களிடமிருந்த சாவிகளை பறித்து ஒவ்வோரு செல்களும் திறக்கப்பட்டன. அதனோட நாங்க செய்த சாவிகளும் பயன்படுத்தப்பட்டன. முழு ஜெயிலர்சையும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்க இயலாதுதானே. 

தேசம்: எல்லாருமே தமிழ் காவலர்களா? 

அசோக்: சிங்கள காவலர்களும் இருந்தவங்க. சிறை உடைக்கப்பட்டு எல்லாரும் வெளியேறியவுடன், அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த சாதாரண கைதிகள் அவங்களும் வெளியேறி தப்பிட்டார்கள். அரசியல் கைதி அல்லாத, வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட கைதிகள் அது முழுப்பேரும் வெளியேறி போய்விட்டார்கள். தமிழ்க் கைதிகளுக்கு சிறை இருந்த இடம் பற்றி, அந்த சுற்றாடல் பற்றி ஓரளவு தெரியும். அவங்க தப்பி போயிற்றாங்க. சிங்களக் கைதிகளுக்கு இடம் தெரியாது. மட்டக்களப்பு நகர் ஒரு தீவு. மேலிருந்து பார்த்தீர்களென்றால் மட்டக்களப்பு என்பது வாவிகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். மட்டக்களப்பை புளியந்தீவு என்றும் சொல்வதுண்டு. மட்டக்களப்பை ஏனைய பிரதேசங்களோடு இணைப்பது பாலங்கள்தான்.       

தேசம்: தமிழ் கைதிகள் எல்லோரும்… 

அசோக்: தமிழ் கைதிகள் பாலம் எல்லாம் தாண்டி தப்பி போயிட்டாங்க. தோணிகள் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தும் தப்பிவிட்டாங்க. சிங்கள சிறைக் கைதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. போலீஸ் அவங்க முழுப் பேரையும் அரெஸ்ட் பண்ணிவிட்டது. 

தேசம்: வெளியேறின அரசியல் கைதிகளை எப்படி வெளில கொண்டு போறீங்க 

அசோக்: அரசியல் கைதிகளை வெளியில கொண்டு போறதுக்கு ஈபிஆர்எல்எஃப் தோழர் குன்சி தங்களுக்குரிய ஏற்பாட்டை செய்திருந்தார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தங்களுக்குரிய ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார். புளொட்டுக்கான ஏற்பாட்டை பார்த்தன் செய்தது. பனிச்சம்கேணியிலிருந்து, இந்தியா கொண்டு போற வரைக்கும் எல்லா பாதுகாப்பையும் தோழர் பார்த்தன்தான் செய்தார்.   

தேசம்: அதாவது சிறை உடைத்த பிறகு வெளியில வந்தவர்களைக் கொண்டு போற வேலைகளைப் பார்த்தன் செய்தது. 

அசோக்: பனிச்சம்கேனியிலிருந்து இருந்து திருகோணமலைக்கு கொண்டுபோய், அங்க இருந்து இந்தியாவுக்கு அனுப்புற வேலைகளை பார்த்தன், ராதாகிருஷ்ணன், ஜெயகாந்தன், செல்வன்   இவங்கதான் செய்தாங்க. நேரடியாக இந்தியா போகவில்லை. பல இடங்களில் தங்க வைக்கப்பட்டு, கொஞ்ச கொஞ்ச பேராக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டாங்க. மாதகல் ஊடாகத்தான் அனுப்பப்பட்டாங்க. இதற்கான போக்குவரத்து பொறுப்புக்களை தோழர் குமரன் செய்தார். குமாரதுரை என்று ஒருத்தர் இருந்தவர். கிளிவெட்டியை சேர்ந்தவர். அவருடைய உதவியும்   இருந்தது. 

டேவிட் ஐயா சிறைக்குள்ளிருந்து எல்லாரும் போகேக்க அவரால வெளியேற முடியவில்லை.  சிறையில் இருந்து வாகனத்தில் இவங்க எல்லாரும் ஏறும்போது, அவரைக் கவனிக்கவில்லை. இவர் ரோட்டில நின்றுட்டார். இவங்க எல்லாரும் போனதற்குப் பிறகு தனிமைப்பட்டுட்டார். பிறகு ஜெயிலில் இருந்து தப்பிய சாதாரண கைதிகள் இரண்டு பேர், டேவிட் ஐயாவை     தற்செயலாகண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் டேவிட் ஐயாவை கொண்டு பாதுகாப்பா வச்சு, ஒரு பாதரிட்ட ஒப்படைத்து பாதர் தான் அனுப்பிவைத்தவர். 

தேசம்: இந்தியாவுக்கு அனுப்பிவைத்தவரோ? 

அசோக்: இல்ல எங்கட தோழர்களிடம் ஒப்படைத்து நாங்க பொறுப்பெடுத்தம். 

தேசம்: இந்த சிறை உடைப்புக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்த தமிழ் சிறைக்காவலர்கள் இருக்கினம்தானே அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா? 

அசோக்: ஒரே ஒருத்தருக்கு பிரச்சனை வந்தது, கிருஷ்ணமூர்த்தியை ஐடிடென்டி பண்ணிட்டாங்க. அவர் பிறகு புளொட்டுக்கு வந்துட்டார். பிறகு வெளியிலிருந்து உதவி செய்த மாசிலாமணி   அவருக்கும் பிரச்சினை வந்து, அவரும் திரும்ப புளொட்டுக்கு வந்துட்டார். இவர்கள் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன்.     

அதுல என்னை விசாரித்த டிஎஸ்பி மகேந்திரன் அவரோட உதவியும் கொஞ்சம் இருந்தது. இல்லாட்டி காந்திய வாகனம் எல்லாம் உடனே பிடிபட்டிருக்கும்.    பிறகு சிங்கள பொலிசாருக்கு தெரிய வந்து, காந்தீயமும் தடை செய்யப்பட்டு, வாகனங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. 

தேசம்: சிறை உடைப்பில் காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது 

அசோக்: காந்திய வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டது. வாகனங்களை பயன்படுத்திட்டு, அந்தந்த இடத்தில் விட்டுட்டு போயிட்டாங்க. அவற்ற திருப்பி கொண்டு வரவில்லை. அடுத்த நாள் போலீஸ் போகும்போது, டிஎஸ்பி மகேந்திரனுக்கு தெரியும் இது காந்திய வாகனங்கள் என்று. அவர் காந்தியதுக்கு அறிவித்து உடனடியாக வாகனங்களை எடுக்க சொல்லி, பிறகு வாகனங்களை அந்த இடத்திலிருந்து  எடுத்தார்கள். 

தேசம்: வேற அமைப்புகளில் இருந்த முக்கியமான ஆட்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? குறிப்பாக விடுதலை புலிகள் இருந்த முக்கியமான ஆட்கள் 

அசோக்: சென்ற அத்தியாயத்தில இதுபற்றி கதைத்திருக்கிறம். விடுதலைப்புலிகள் என்று அதன் ஆதரவாளர்கள் என்று நித்தியானந்தன், நிர்மலா, டாக்டர் ஜெயகுலராஜா, பாதர் சிங்கராயர், பாதர் சின்னராஜா, பாதர் ஜெயதிலகராஜா இவங்க இருந்தாங்க. வேறு ஆட்கள் என்று கோவை மகேசன்,   டாக்டர்.தர்மலிங்கம் பெயர்கள் ஞாபகம் இல்லை இருந்தாங்க. இவங்க முன்று பேரும் சிறை உடைப்புக்கு முன்னரே பிணையில் வெளியில் வந்துட்டாங்க. நான் நினைக்கிறேன் பாதர் சிங்கராஜரும் பிணையில் வெளியில் வந்துவிட்டார் என. 

விடுதலைப் புலிகளுக்கு தாங்கள் தனித்துவமாக சிறை உடைக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். சிறை உடைப்பில் அவங்கள் சப்போர்ட் பண்ணல. 

தேசம்: இவர்களெல்லாம் எப்படி புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள்? இவர்கள் சிறை உடைப்பில் வெளியில் வரவில்லையா? 

அசோக்: போராட்ட வரலாற்றை நீங்கள் அவதானித்தால் புலிகள் மோசமான கருத்தியல் கொண்டவர்கள். வலதுசாரிய நிலவுடமைச் சிந்தனைகளின் எல்லா எச்சங்களையும் கொண்டவர்கள். முற்போக்கான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் இருந்ததில்ல. ஆனா இந்த பாதர்களும், நிர்மலா, நித்தியானந்தன் சேர் போன்றவர்கள் புலிகளைத்தான் ஆதரிச்சாங்க. எல்லாம் வர்க்கக் கூட்டு. இதைப்பற்றி முன்னர் சொல்லியிருக்கிறன். 

நிர்மலா தவிர்ந்த மற்ற இவங்க எல்லோரும் சிறை உடைப்பில் வெளியில் வந்துட்டாங்க. நிர்மலா  வரவில்லை. புலிகள் சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு செல்லும் பொறுப்பை பரமதேவா, (புளோட் வாசுதேவாவின்ற தம்பி), இவர் புலிகளில் இருந்தார், மட்டக்களப்பு சிறையில் இருந்தவர். இவர்தான் பொறுப்பெடுத்தவர். இவர்களை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பியதில் தம்பிராஜா அண்ணரும் முக்கியம் என நினைக்கிறன். இப்போது லண்டனில் இருக்கிறார். சிறைக்குள் நிர்மலாவை காப்பாற்றி வெளியில் கொண்டு வரும் பொறுப்பை எடுத்தவர் புளொட் வாமதேவன். அவர் விட்ட தவறினால், அவங்க வெளியேற முடியல்ல. 

பிறகுதான் புலிகள் தனியாக அவரை மீட்டாங்க.